33.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 33 

 

மூணே வாரம் தானே…”  பெண்ணவளின் தலைமுடியைக் கோதிக் கொண்டே எபி கேட்க, “ம்ம்ம்” என்றாள் அலர்விழி, சிவந்த மூக்கை உறிஞ்சிக் கொண்டே. 

“கிளம்பற நேரம் என்னது இது, குட்டிக் குழந்த மாதிரி கண்ண கசக்கிட்டு?” கேட்டுக் கொண்டே பனித்த இமைகள் இரண்டிற்கும் இடம் பெயர்ந்தது பெருவிரல்களின் வருடல். 

மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “மிஸ் பண்ணுவேன் மனோ” என்றாள் பெண். 

அடுத்த நான்கு மணி நேரத்தில் அவனுக்கான விமானம் புறப்படவிருக்க, அலர்விழியிடம் விடைபெற்றுச் செல்வது அவ்வளவு எளிதாயிருக்கவில்லை மனோவிற்கு. 

“டெய்லி காலைலயும் நைட்டும் கண்டிப்பா பேசறேன். நடுவுல உனக்கு எப்போ பார்க்கணும்ன்னு தோணினாலும் நேரம் பாக்காம விடியோ கால் போடு. பத்திரமா இருந்துக்கோ,” தலை வருடி நெற்றி முத்தம் வைத்துக் கிளம்பியவனை அணைத்து, “லவ் யூ மனோ,” என்று அனுப்ப மனமில்லாமல் அணைத்த வாக்கிலேயே நின்றவள் முதுகு வருடப்பட்டது. 

வருடல் இதம் தர வேண்டாமா? இல்லை, தரவில்லை! நாளைய தனிமையைக் கிளறி அவள் வேதனையை அதிகரித்தது. தலையில் கன்னம் பதித்து நின்றிருந்தவனுக்கு மட்டும் விட்டுச் செல்ல ஆசையா என்ன? 

நேரமாவது அவளுக்கே தெரிந்தது. “கிளம்பலாம் மனோ” என்றாள் அவனிடமிருந்து விலகிக் கொண்டே, 

“ம்ம். ஊர்ல இருந்து இதையும் அதையும் வாங்கிட்டு வாங்கன்னு லிஸ்ட் குடுப்பன்னு பார்த்தா… வாய திறக்க காணம்?” 

“வாட்ஸ் ஆப்ல அனுப்பறேன்” மெல்லச் சிரித்தாள். 

“தாட்ஸ் மை கேர்ள்!” கன்னம் தட்டி, “நான் கிளம்பறேன்… நீ பத்திரமா இரு. சட்டுன்னு வந்திடுவேன்” தலை வருடி, உச்சி முகர்ந்து கிளம்பினவனோடு, விமான நிலையம் வரை கூடவே சென்று, விமானம் புறப்பட இரண்டே மணி நேரம் இருக்கவும் விடை கொடுத்தாள். 

கடந்து சென்ற நான்கு நாட்கள், மனோவோடான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அலர்விழிக்கு தெள்ளத் தெளிவாய் காட்டியது. பாஸ்டனில் ஒரே வீட்டிலிருந்தாலும், வீட்டில் தங்குவதில்லை. எப்பொழுதும் எங்கேனும் கூட்டிச் சென்று விடுவான். விருந்திற்கு சென்று வந்த உவகை மட்டுமே நிலைக்கும். 

ஆனால் கடந்த தினங்களில், அவள் உடல்நிலையை மனதில் கொண்டு எங்கும் அழைத்துச் செல்லவில்லை. சண்டை, சமாதானம், சமையல், வீட்டு வேலை, அடுத்த வாரத்திற்கான காய் கறி ஷாப்பிங் என்று கணவன் மனைவி போன்ற வாழ்க்கை. இரு அறைகளில் தேகங்கள் விலகி இருந்தாலும் மனம் ஒன்றியிருந்தது. 

மனோ சென்ற விமானம் சென்னையில் தரையிறங்கிய நேரம், நியூயார்க்கில் தளமிறங்கியது சென்னையிலிருந்து வந்த மற்றொரு விமானம். 

‘வெல்கம் டாக்டர். பிரவீன் குமார்’ என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி நின்றவனை நோக்கி வந்தான் திறம்படைத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணன். 

நியூயார்க் மாநிலத்தில் உள்ள மேன்ஹட்ன்(Manhattan) நகரில் அமைந்திருந்த புகழ் பெற்ற மருத்துவமனையில், நடக்கவிருக்கும் மிகவும் சவாலான அறுவை சிகிச்சையில் பங்கெடுக்கும் மருத்துவ நிபுணர்களில் இவனும் ஒருவன்.  

இந்த அறுவை சிகிச்சைக்கு அவன் ஒத்துக் கொண்டதிற்கு இரண்டு காரணங்களில் ஒன்று அலர்விழி. மற்றொன்று நோயாளியின் தாத்தா! 

நேர்கோடு போல் உச்சந்தலைகள் இரண்டும் ஒட்டிப் பிறந்த(craniopagus, conjoined twins), ஆரோக்கியமான 20 மாத பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருக்க யாருக்கு வலிக்காது? பணம் கொட்டிக் கிடந்தும் ஒன்றும் செய்ய முடியாதவராய் இருந்த மத்திய மந்திரிக்கு, இப்படிப்பட்ட சிகிச்சை முன்னமே மேன்ஹட்ன் மருத்துவமனையில் செய்து வெற்றி கண்டுள்ளனர் என்று, அவரின் மரணத் தருவாயிலிருந்த மனைவியை அறுவை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மருத்துவன் கூற, அவனும் இதோ இங்கே சிகிச்சை செய்யும் குழுவோடு. 

மூன்று கட்டமாக நடக்கவிருக்கும் இந்த அறுவை சிகிச்சை, ஐம்பது மணி நேரத்தை கடக்கக் கூடும். சிகிச்சை முடியக் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் ஆகும். குழந்தைகள் இரண்டு வயதைத் தொடவிருப்பதால் சிக்கல்கள் அதிகம். மொத்தம் நூறு பேர் கொண்ட குழுவில் இவனும் ஒருவன். 

ஆறு மாத அவகாசத்தில் அலர்விழியோடு நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது மருத்துவனின் எண்ணம். அதன் முதல் கட்டமாக, வார இறுதியில் அலர்விழி வீட்டு வாயிலில் மலர்க் கொத்தோடு நின்றிருந்தான். 

அழைப்பு மணி அடிக்கவும், ‘யாரு டா நம்ம வீட்டுக்கு?’ என்று நினைத்துக் கொண்டே கதவின் துவாரம் வழி பார்க்க, பார்சல் வந்திருந்தது. முழ நீள குட்டி டெரெரியம்(terrarium) ஒன்று வந்திறங்கியது. கண்ணாடி கூண்டிற்குள், கூழாங்கல் மலை மேல் குட்டி வீடும் அதை சுற்றி உயிருள்ள பாசியும், சிறியவகை ஊதா நிற ஆர்கிட் செடியுமாக அழகான உயிருள்ள குட்டி தோட்டம் மனதைக் கவர்ந்தது. 

மனோ அனுப்பி இருப்பான் என்று அனுப்புநர் விபரம் தேட, அதில் ஒன்றும் இல்லை. அடுத்த அரை மணி நேரத்தில், ஒரு பெரிய டப்பா வந்திறங்கியது. உள்ளே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது ஃபெரேரோ ரோஷே(Ferrero rocher), லின்ட்(Lindt), கொடைவா(Godiva) என்று பலவகை சாக்கலேட் வகைகள். இதிலும் அனுப்புநர் விபரம் இல்லை. 

மனோவிற்கு நடுசாமம் என்பதால் அழைக்கவில்லை. ஆகஸ்ட் 15! அன்று தானே முதன் முதலாய் காதலை உரைத்தான்? அதற்காக இருக்குமோ?  

கண்மூடி மிட்டாயை ரசித்து நக்கிக் கொண்டிருக்க, மீண்டும் அழைப்பு மணி. அடுத்து என்னவோ? பெண் துள்ளிக் குதித்து ஓடி கதவின் துவாரம் வழி பார்க்க, பெரிய மலர்க் கொத்து தான் தெரிந்தது. 

மலரின் வண்ணம் கண்டதுமே அவளின் ஆசைக் காதலன் அனுப்பியதாகவே நம்பினாள். கதவைத் திறக்க, நின்றிருந்தவனைக் கண்டவளுக்கு இன்ப அதிர்ச்சியே… “டாக்டர்?” கண்கள் முட்டை அளவிற்கு விரிந்தன. 

“அத்தான்! அலர்விழி” என்று புன்கைத்தான். 

“வாவ்… சத்தியமா எதிர்பார்க்கல…” முகம் மலர்ந்து நின்று விட, “உள்ள கூப்பிட மாட்டியா?” என்றவனை, “அச்சோ… என்ன கேள்வி இது? வாங்க வாங்க…” என்று மலர்ந்த முகமாய் அழைக்க, அவன் முகமும் அகமும் மலர்ந்தது. 

மலர்க் கொத்தை அவன் நீட்ட, வாங்கியவள் கண்கள் அந்த மென்-ஊதா நிற பியனியில்(Peony)  பதிந்தே நின்றன. மலர்க் கொத்தின் இடையிடையே மணம் பரப்பும் லாவெண்டர்(Lavender), லைலக்(Lilac) கொத்துகள். அனைத்துமே விதவிதமான பர்புள் நிறம் கொண்டவை.

“என்ன அலர்விழி?” அசைவின்றி நின்றவள் அவனுக்குள் மின்னலை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். கவிதை பேசிய அவள் விழிகளும், பூரித்த அவள் முக பாவமும், ஆசை கொண்ட ஆண்மகனை அசைத்துப் பார்த்தது. 

“அப்போ டெரெரியம், சாக்கலேட்ஸ் எல்லாமே நீங்க தானா?” 

அவள் முகம் காட்டிய இன்ப சாயல் அவனை வசீகரிக்க, “ம்ம்…” என்றவன் முகமும் அதே வசீகரத்தைப் பூசிக் கொண்டது.

“ரொம்ப ரொம்ப அழகா இருக்கு டாக்டர். அதுவும் பர்புள்? வாவ்… ஐ லவ் பர்புள்! இத்தன ஷேட்ஸ் ஆப் பர்புள் ஒரே கொத்துல… ஜஸ்ட் வாவ்!” மலர்களைப் பார்த்து, நுகர்ந்து நின்றவளின் முகம் காட்டிய உணர்வுகளின் பிரதிபலிப்பு, அவனை முற்றிலும் ஈர்த்தது. 

பெரிய பெரிய மலர்கள்… இரண்டு கைகளால் அடக்க முடியா மலர்க் கொத்து. மலர்க் கொத்தை கட்டிக் கொண்டவள் முகம் அதில் புதைந்து போனது. மலர்க் கொத்தோடு மனதைக் கொடுத்தவனுக்கு வேறு என்ன வேண்டும்? அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டான். 

சில நிமிடங்களில் இயல்புக்கு வந்தவள், “காபி.. டீ? என்ன குடிக்கறீங்க?” என்று அவன் முன் வந்து நின்றாள். 

“உனக்கு என்ன குடிக்கப் பிடிக்குமோ, அதையே குடேன்” என்றான் ஆசையாய்.

“எனக்கு மசாலா டீ தான்! உங்களுக்கு ஓகேவா?”

“ம்ம்ம்… போடேன் ட்ரை பண்றேன்”

“ட்ரையா? ஓ… ஆமால்ல, நீங்க மில்க் சேர்த்துக்க மாட்டீங்களே!”

“எப்பவும் இப்படியே இருக்க முடியாதில்லையா. சோ மாத்திக்கிட்டேன்”

“என்னது மாத்திக்கிட்டீங்களா? யாருக்காக?” 

அவள் குறுகுறு பார்வையில் அவன் முகம் வெட்கப் புன்னகை சிந்த, “வாவ். சொல்லுங்க சொல்லுங்க யாரு அந்த லக்கி கேர்ள்?” என்றாள் குதூகலத்தோடு.

சிரித்தான். “போ… போய் டீ எடுத்துட்டு வா. அடுத்த ஆறு மாசம் இங்க தான். சொல்லாம எங்க போகப் போறேன்?” 

அவள் தேநீர் தயாரிக்க, அடுக்களை வாயிலில் நின்று பேச்சு கொடுத்தான். அவன் விருப்பம் அவன் மனதளவில் மட்டுமே இருக்க, பெண்ணிடம் அசட்டு பேச்சோ, அத்து மீறும் பார்வையோ வீசவில்லை.

“இஞ்சி டீ நல்லா இருக்கு அலர்விழி, நீ பால் ஊத்தி இருந்தா கூட குடிச்சிருப்பேன்.” மெல்ல ரசித்து உறிஞ்சினான்.  

“தேங்க்ஸ் டாக். உங்கள உங்களுக்காக தான் அவங்க விரும்பறாங்க. எதுக்கு மாறணும்ன்னு நினைக்கிறீங்க?” அவள் புன்னகைக்க, 

“அவளுக்காக இல்ல, எங்களுக்காக. அத விடு! இன்னும் டாக்டர் தானா?” பாவம் போல் பார்த்தான். 

“சாரி சாரி! அத்தான்!” 

அவன் ஆகாயத்தில் பறந்தான். பெண்ணிடம்… அவள் பேச்சில், சிரிப்பில் ஒட்டுமொத்தமாய் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.  

அவள் மலர்களோடு தன்னை இணைத்து கைப்பேசியில் பதித்துக் கொள்ள, அவளை அவன் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“இங்க வாங்க அத்தான். பூவோட செல்ஃபி எடுத்துப்போம்.” 

இருவருக்கும் இடையே இருந்த மலர்க்கொத்து, இரண்டு படங்கள் முடியும் வேளை இருவருக்கும் முன்னே வந்தது. மலர்களின் மணம் அவள் நாசியை நிரப்ப, அவள் மணம் அவன் நாசியை நிரப்பியது. அவர்களை புகைப்படங்களாய் கைப்பேசி நிரப்பிக் கொள்ள, அலர்விழி அவன் சிந்தையை முழுவதுமாக நிரப்பியிருந்தாள். 

error: Content is protected !!
Scroll to Top