அந்த நேர்பார்வையில் தடுமாறினான் வெற்றி வேந்தன்.
“சாரி சார். எனக்கு ஒரு மாதிரி தப்பு பண்ண ஃபீல். கில்ட்டியா ஃபீல் ஆகுது. இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கறேன் சார். இந்த ஒரு முறை..”
“வங்கி வேலையில் எப்பவும் நெக்ஸ்ட் டைம் கிடையாது வேதவர்ஷினி. நீங்களே நல்லா யோசிச்சுப் பதில் சொல்லுங்க. ஒரே ஒரு பேங்க் ட்ரான்ஷாக்ஷன்ல நாம தப்பு பண்ணா என்ன ஆகும்? திருத்த முடியுமா?”
“நீங்க நினைச்சா முடியுமே சார். ரிவர்ஸ் பண்ண முடியும் தானே?” அவனது முறைப்பில், அவள் பேச்சு அப்படியே நின்று போனது.
வண்டியை உருட்டிக் கொண்டே அவளோடு நடந்தவன், நடையின் வேகத்தைக் குறைத்தான்.
மீண்டும் மீண்டும் மன்னிப்பை கேட்க அவளுக்குச் சங்கடமாக இருக்க, தன் பேச்சை நினைத்து தலை குனிந்தாள்.
“இன்னைக்கு நடந்ததை நீங்க ரொம்ப லேசா எடுத்துக்கறீங்கன்னு நினைக்கிறேன். நான் சென்னையில், அதுவும் இங்கேயே பேங்க் பக்கத்தில் இருக்கவும் உடனே வர முடிஞ்சுது. இல்லனா என்னாகி இருக்கும்னு யோசிச்சு பார்த்தீங்களா?” என்று அவன் கேட்க, பதிலின்றி எச்சில் கூட்டி விழுங்கினாள்.
“உங்களுக்கு இந்த வேலையின் சீரியஸ்னஸ் புரியல இல்ல? படிப்பு முடிஞ்சது, பேங்க் எக்ஸாம் எழுதினேன், போஸ்டிங் கிடைச்சது அப்படினு கிளம்பி வந்துட்டீங்க. அப்படித் தானே?” இப்படியெல்லாம் பேசுபவன் அல்ல அவன்.
அவளின் அலட்சியம் அவனைப் பேச வைத்தது. அதுவரை இருந்த விளையாட்டுதனம் மறைந்து அவனைப் பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் வேதா.
“இல்ல சார்.”
“பிளீஸ் வேதவர்ஷினி. உங்க விளக்கம் எல்லாம் எனக்கு வேணாம். இன்னைக்கு நானோ, நீங்களோ சரியான நேரத்துக்கு வராம போயிருந்தா என்னவாகி இருக்கும்னு ஒரே ஒரு செகண்ட் யோசிச்சு பார்த்தீங்களா நீங்க? அலாரம் அது பாட்டுக்கு அடிச்சுட்டு இருந்திருக்கும். போலீஸ், நமக்கு மேல இருக்க ஆபீஸர்ஸ்னு எத்தனை பேருக்கு விஷயம் போய் இருக்கும்? நம்மை நிக்க வச்சுக் கேள்வி கேட்க மட்டும் செய்ய மாட்டாங்க. நம்ம மேல ஆக்சன் எடுப்பானுங்க. சும்மா வெளில போனேன் பதில் எல்லாம் அவங்ககிட்ட நாம் சொல்ல முடியுமா சொல்லுங்க? அதுவும் இல்லாம இதுவொரு பெரிய பிளாக் மார்க்கா நம்ம கேரியரில் ரெஜிஸ்டர் ஆகியிருக்கும்.” அவன் சொல்ல சொல்ல நிலைமையின் தீவிரம் அவளுக்குத் தெளிவாக விளங்கியது. இதையெல்லாம் அவளும் சிந்தித்தப்படிதான் அவனோடு நடந்தாள் வேதா. ஆனால், அவன் சொல்லிக் கேட்கையில் அவள் தவறு பூதாகாரமாகத் தெரிந்தது.
“நீங்க வெளில போறேன்னு சொல்லியிருந்தா சாவியை நான் ஶ்ரீனிவாஸ்கிட்ட கொடுத்துட்டுப் போய்ருப்பேன். அதுக்கும் ஃபார்மாலிட்டி இருக்கு..”
“தெரியும் சார்” அவளுக்குக் குரலே வரவில்லை.
“என்ன தெரியும்? தெரிஞ்சுமா கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம, என்கிட்ட இன்பார்ம் பண்ணாம, நான் காலையில் கேட்ட போதும் சொல்லாம வெளியில் போனீங்க?” கடுகாய்ப் பொரிந்தான்.
“என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு அவசியமில்லதான். ஆனா, நான் உங்ககிட்ட சொல்லிட்டு போகும் போது, பதிலுக்கு சார் நானும் வெளில போறேன்னு நீங்க சொல்லி இருக்கணுமா? இல்லையா? அது தானே உங்க பதவிக்கு, வேலைக்கு நீங்க கொடுக்கிற மரியாதை. சாரி, பக்கத்திலனா பரவாயில்ல. கொஞ்சம் தூரமா சிட்டிக்குள்ள போகறீங்கன்னும் போது சொல்லணும் இல்ல?” கடுகு வெடித்து, கடகடவென்று மொத்தமாகத் தாளித்து முடித்தான் வெற்றி வேந்தன்.
உச்சி வெயில் மொத்தமும் அவள் மண்டைக்குள் இறங்கியது போல உணர்ந்தாள் வேதா.
யாரிடமும் இத்தனை பேச்சுக்கள் வாங்கியது இல்லை அவள். அதுவும் அவன் குரலில் இருந்த கடினத்தன்மை, வார்த்தைகளில் இருந்த காரம் அவளை அதிகம் பாதித்தது.
மிகச் சிரமப்பட்டு இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாள். அவன் கண்களுக்கு அது அலட்சியம் போலத் தெரிய, மொட்டை வெயிலில் நடக்க வைத்தே அவளுக்குப் பாடம் நடத்தினான் அவன்.
“உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் வேதவர்ஷினி. நான் சொன்னது ஏதாவது உங்க..”
“கேட்டுச்சு சார். புரிஞ்சுது.” அவனை முடிக்க விடாமல் பதில் கொடுத்தாள்.
“என்ன நீங்க…” அவன் கடுப்புடன் ஆரம்பிக்க, “பிளீஸ் சார். ஐ காட் இட். ஒரே தப்பை நான் திரும்பவும் பண்றது இல்லை சார். அதுனால..” அவளின் விளக்கத்தில் வண்டியையும், நடையையும் நிறுத்தி விட்டான் வெற்றி.
“ஐயோ.. ” என்று புலம்பி, “சார் பிளீஸ். தெரியாம பண்ணிட்டேன். முதல் தடவை மன்னிச்சு விடக் கூடாதா?” என்று கேட்டவள், அவனின் கோபப் பார்வை மாறாததைப் பார்த்து, “ஆனாலும், நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்” என்று சொல்ல, ஒரு கையால் தலைக் கோதி அவளை முறைத்தான்.
“கம்பீர் மாதிரி கோபப்படாதீங்க சார். நான்தான் நாப்பது தடவை சாரி சொல்லிட்டேன் இல்ல?” அவள் சொல்லி முடிக்கும் முன்பே சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தான் வெற்றி.
“கம்பீர் போலவா?” என்று கேட்டவனுக்குச் சிரிப்புப் பொங்கியது. அந்தச் சிரிப்பில் அவனது நடையும், கையில் இருந்த வண்டியும் தடுமாற, அவளைப் பார்த்து நின்று விட்டான் வெற்றி வேந்தன்.
அவன் நிற்கவும் அவளது நடையும் நின்று விட்டிருந்தது. இருவரும் பேசிக் கொண்டே பாதித் தூரத்தை நடந்தே கடந்திருந்தார்கள்.
“ஐ ஆம் சாரி. ரொம்ப ஹார்ஷா பேசிட்டேனா?” அவன் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் வேதா.
“என் மேல தப்பிருக்கும் போது..” கை நீட்டி அவளின் பேச்சை தடுத்தான் வெற்றி.
“காஃபி?” அவன் கேட்க, அவளுக்குப் பசித்தது. அதனால் மறுக்காமல் ஒப்புதலாகத் தலையசைத்தாள்.
அருகில் இருந்த சிறிய தேநீர் கடையின் முன் சென்று நின்றார்கள். இருவருக்கும் காஃபி சொன்னான் வெற்றி.
வேதா தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள். அவள் முகமே ஒரு நொடி கோபத்தில் ஜொலிக்க, அலைபேசியை மூடி கைப்பையில் எரிந்து விட்டு நிமிர்ந்தாள்.
“ரொம்ப முக்கியமான வேலையா எதுவும் வெளில போய் இருந்தீங்களா?” அவன் கேட்க,
“ஆங்.. இல்ல. ஆமா சார்” என்று உளறினாள். எங்கே காரணத்தைக் கேட்டால் குரல் வளையைக் குதறி விடுவானோ என்ற பயத்தில் வாயை மூடி நின்றாள்.
“ஆமாவா? இல்லையா? அப்படி எங்க போனீங்க?”
“பொய் சொல்லவா? உண்மை சொல்லவா சார்?” அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வர, மீசைக்கடியில் மறைத்தான் அதை.
அவனது பதவி அவளுக்குப் பயம் கொடுத்தாலும், அவனது லகுவான பேச்சு, அவளிடம் மட்டுமல்ல அனைவரிடமும் தன் பதவியைக் காட்டி முகம் காட்டாமல் இயல்பாகப் பேசிய விதம், வங்கியில் எளிமையாக நடந்து கொள்வது, அவனது வயது எனப் பல காரணங்களினால் வேதாவால் அவனோடு சாதாரணமாகப் பேச முடிந்தது. அவள் வேலையில் சேர்ந்திருந்த புதிது என்பதும் கூட அவளுக்குச் சாதகமாக இருந்தது.
“உண்மையே சொல்றேன்” என்றவள், “கல்யாண பிரியாணி சாப்பிட போனேன் சார். புது ஹோட்டல் திறந்திருக்காங்க. கல்யாண பந்தி போலப் பிரியாணி பரிமாறுவாங்க”
“ம்ம்” என்றான் கதை கேட்கும் தொனியில்.
“உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் நமுட்டு சிரிப்புடன் காஃபியை வாங்கி நீட்டினான். மதிய உணவு வேளையில் இருவரும் காஃபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவளை மதிய உணவுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அவன் உரிமை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
இருவருக்கும் காஃபி மிடறு மிடறாக உள்ளிறங்கியது.
“தேவதர்ஷினி..” என்று அவன் அழைக்க, அந்த அழைப்பில் அவளையும் அறியாமல் சிரித்து விட்டாள் வேதா.
“என்ன? எதுக்குச் சிரிக்கறீங்க?”
“என்னைத் திட்டும் போது மட்டும் சரியா பேர் சொல்லி திட்டினீங்க சார். இப்போ நார்மலா பேசும் போது திரும்பவும் தேவதர்ஷினி சொல்றீங்க” அவளின் அந்தக் குற்றச் சாட்டில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“அப்படியா சொல்றேன்?” என்று சந்தேகம் கேட்டான். அவள் பதில் சொல்லாமல் நிற்க, “வேணும்னு சொல்லல. நம்புங்க” என்று சமாதானம் சொன்னவன், தொண்டையைச் செருமி சரி செய்ய, அடுத்தச் சொற்பொழிவு கேட்கத் தயாரானாள் வேதா.
அவளின் உடல்மொழி அவனுக்கும் புரியவே செய்தது. ஆனாலும், பேசினான்.
“நீங்க இந்த நாலு மாசத்தில் பார்த்திருப்பீங்க வேதா, நம்ம பிராஞ்ச் பயங்கரப் பிஸியான பிராஞ்ச். அதுக்கு ஏன் நம்மளை.. அதாவது வயசில் மூத்த, எக்ஸ்பீரியன்ஸ்டு மேனஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் போடாம, என்னையும், உங்களையும் போட்டிருக்காங்கன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?”
“நமக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு..” அவள் அப்படித்தான் யோசித்து இருந்தாள். அவனோ இல்லை என்றான்.
“நம்ம பிராஞ்ச்சில் இருந்து மேலிடத்துக்கு நிறையக் கம்ப்ளைன்ட் போய் இருக்கு. ட்ரான்ஷாக்ஷன், லோன், இப்படிப் பேங்கிங் சம்மந்தப்பட்டது கொஞ்சம்னா.. ஸ்டாப் கஸ்டமர்ஸை சரியா நடத்தல. டைமுக்கு வேலை முடிக்கல. ஒழுங்கா பதில் சொல்லல. கோபமா பேசினாங்க. இப்படி மாசம் பத்துக் கம்ப்ளைன்ட் ஸ்டாப் மேல போய் இருக்கு.”
“ஓ..”
“அதான் ஒவ்வொருத்தருக்கா டிரான்ஸ்ஃபர் கொடுத்து வேற ஊர்களுக்கு மாற்றி, நம்மைக் கொண்டு வந்திருக்காங்க. நான் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இங்க மேனஜரா வந்தப்போ இருந்ததுக்கு நிலைமை இப்போ எவ்வளவோ பரவாயில்ல. நம்ம வேலையின் கஷ்ட நஷ்டங்கள் நமக்கு மட்டும்தான் புரியும். கவர்மெண்ட் பேங்க் ஜாப், சின்னத் தப்பு நடந்தாலும், நடவடிக்கை ரொம்பப் பெருசா இருக்கும். அதையெல்லாம் விட நம்ம பேர் கெட்டு போகும். டிரான்ஸ்ஃபர் போட்டு அலைய விடுவாங்க. தேவையில்லாத வார்னிங், அது, இதுன்னு மன உளைச்சல்தான் நமக்கு…” அவள் முகம் போன போக்கை பார்த்துப் பேச்சை நிறுத்தினான் வெற்றி.
“நீங்க எதுவும் சொல்ல வேணாம். நான் சொன்னதை மனசில் வச்சுக்கோங்க. அது போதும். இப்போ வாங்க, போகலாம்” வேதா அவன் சொன்னதை அசைப் போட்டபடி நிற்க, இருவரின் காலி கோப்பையைக் கடையில் கொடுத்து, அதற்கான தொகையையும் கொடுத்து விட்டு அவளிடம் வந்தான்.
“பேங்க் வேலைன்னதும் இதில் இருக்கும் பிளஸ், மைனஸ் எல்லாமே படிச்சு தெரிஞ்சிட்டுதான் வந்தேன் சார். ஆனா, ரியாலிட்டி ரொம்பவே டஃப்பா இருக்கு. அதான் கொஞ்சம் சறுக்கிட்டேன்”
“தட்ஸ் ஓகே” என்று புன்னகைத்தான்.
மெல்ல அவள் இதழ்களிலும் அது பிரதிபலிக்க, மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்.
“ஆட்டோ ஏத்தி விடுறேன். வீட்டுக்கு கிளம்புங்க”
“ம்ம். ஓகே சார்”
பத்து அடி நடந்திருப்பார்கள். வெற்றி அவளைத் திரும்பிப் பார்த்தான். காற்றில் அவளின் விரிந்த கூந்தல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவன் மனதில் அவளைச் சந்தித்த நாளில் இருந்து அலைபாய்ந்த கேள்வியை அப்போது கேட்டான் வெற்றி.
“எப்படி உங்களுக்குப் பேங்க் எக்ஸாம் எழுதணும், பேங்க் வேலைக்கு வரணும்னு தோணுச்சு?” அந்தத் திடீர் கேள்வியில் திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“பெரியவங்க நீங்க முதல்ல சொல்லுங்க. நீங்க ஏன் பேங்க் வேலை சூஸ் பண்ணீங்க?” என்று அவள் கேட்க,
“ஹேய், என்னைப் பார்த்தா பெரியவங்க போலவா இருக்கு உனக்கு?” அவன் போலி கோபத்துடன் கேட்டான். சிரித்தாள் வேதா. “ஓகே, சீனியர்” என்றாள். அதற்கும் முகம் சுளித்தான்.
“ஓகே, மேனஜர்” என்று இம்முறை ராகம் இழுத்தாள்.
“லேடீஸ் ஃபர்ஸ்ட். நீங்க முதல்ல சொல்லுங்க” என்றான்.
“இல்ல, இல்ல. நீங்க பெரியவங்க…”
“நானே சொல்றேன் மா தேவதர்ஷினி” என்றவன், அவளின் முறைப்பை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான்.
“எங்கப்பா பேங்க்ல வொர்க் பண்ணாங்க. சோ, எனக்கும் அந்த ஆசை தானாவே வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்”
“ஓ சூப்பர். அப்பா பார்த்து அந்த வேலை மேல ஆசை வர்றது எல்லாம் ரொம்ப டச்சிங், போங்க”
“ஓகே. இப்போ நீங்க சொல்லுங்க” என்றான் புருவங்களை உயர்த்தி.
“உண்மையா? பொய்யா.?” குறும்பு சிரிப்புடன் அவள் கேட்க, “உண்மை” என்றான் அழுத்தமாக.
“ஓகே. எங்க காலேஜ் ப்ரோபஸர் அடிக்கடி சொல்வார், நான் எல்லாம் பேங்க் மேனேஜராகி ஊருக்கே பணம் கொடுக்க வேண்டிய ஆள். உங்ககிட்ட வந்து சிக்கி, தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்னு..”
“ஓகே. அதுக்கும் நீங்க பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்கு வந்ததுக்கும் என்ன சம்மந்தம்?” வெற்றி குழப்பத்துடன் கேட்க, “அவரை எனக்குப் பிடிக்கும். உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, என் க்ரஷ்னு சொல்லலாம்” என்றாள் வேதா. அதைச் சொல்லிய பின்பே அவள் நாக்கை கடிக்க,
“என்னது? என்ன சொன்னீங்க?” அதிர்ச்சியுடன் கேட்டவன், அவர்கள் இருக்கும், இல்லை நிற்கும் இடம் மறந்து சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான் வெற்றி வேந்தன்.