காதல் சுகமானது. சேர்ந்திருக்கும் வரை, சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, காதல் சுகமானது தான்.
ஒருவன் கண்மூடி ‘விழி’ என்று மூடிய இமைக்குள் தன் பாதியைக் கண்டு கொண்டே நேரில் காணப் போகும் தவிப்போடே காத்திருக்க, அவன் பாதியின் இதயமும் ‘மனோ’ என்று தான் அடித்துக் கொண்டிருந்தது அந்த நிமிடம்.
இதோ… இன்னும் ஒரே ஒரு நபர் தான் அவள் முன்னால்… அதன் பின் அவளின் H1விசா ஸ்டாம்ப் ஆகிவிடும். பார்த்து விடுவாள் அவள் மனோவை. கைப்பேசியில் இல்லை, நேரில்.
விமானம் பாஸ்டன் வந்திறங்கி நாற்பது நிமிடங்கள் ஓடிவிட்டிருந்தது. மனம் வீட்டாட்களுக்கும், மனோவுக்கும் இடையே லோலகம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது. செய்வது சரியா தவறா என்ற விவாதம் பெண்ணை ஆட்கொண்டிருந்தது.
சிறிது கூட விருப்பமே இல்லா விட்டாலும், அவளின் ஆசைக்காக வழியனுப்பி நின்ற அம்மாவின் வதங்கிய முகம் கண் முன் வந்து போனது. “உன்ன அனுப்ப அம்மாக்கு துளி இஷ்டமில்ல பாப்பா… கூடவே வச்சுக்கதான் மனசு ஆசப்படுது. பொண்ண பெத்த அம்மாக்கு வரக் கூடாத ஆச. உனக்காக உன் விருப்பத்துக்காக மட்டும் தான் இப்போ வெளிநாடு அனுப்பறேன். பார்த்து இருந்துக்கோ. இடம் பிடிக்கல… வேல பிடிக்கலன்னா யோசிக்காத பாப்பா. அம்மாட்ட வந்திடு.” அத்தனை பரிதவிப்போடே வழி அனுப்பின அம்மாவிற்கு அவள் செல்ல வேண்டிய இடம் பாஸ்டன் அல்ல நியூ ஜெர்சி என்று தெரிந்தால்? இது நம்பிக்கை துரோகம் என்றது அம்மாவை மட்டுமே நினைத்த மனம்!
உயிரைக் கண்களில் தேக்கி நின்ற அப்பாவிற்கு வார்த்தை தட்டுப்பாடாய் போனதே! “பார்த்து பத்திரமாப் போயிடுவ இல்ல பாப்பா?” எத்தனை பாசமாய் தலை வருடி நின்றார். முடிந்தால் கொண்டு வந்து விட்டிருப்பாரே. போக வேண்டிய இடம் போகாமல் காதலனைக் காண வந்திருப்பது தெரிந்தால்? இதயம் தடுமாறியது.
நேற்று தான் விடுதியில் கண்கள் பனிக்க, “பத்திரமா இரு”, என்று தலை தடவி உச்சி முகர்ந்து அப்பா சென்றது போல் இருந்தது. பெற்றவர்களை ஏமாற்றும் உணர்வு ஏதோ செய்தது. பிடிக்காத கசப்பான உணர்வு. முதன் முதல் விடுதியில் அப்பா விட்டுச் சென்ற அன்று போல் இன்றும் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“அலர்…” பேசத் திராணியில்லாமல் கட்டிக் கொண்டு அழுத நகு! அடுத்து திருமணத்திற்கு தானே பார்த்துக் கொள்வர்! இனி இவர்கள் நெருக்கம்? எல்லாம் ஒரு அளவோடு தான் என்று தோன்றவும் இவளும் அழுதாளே!
வருடங்கள் தான் எத்தனை வேகமாக இறக்கையில்லாமல் பறக்கிறது. மூன்று வருடங்களும் முடிந்து, வேலையில் அமர்ந்து, வாழ்வை புதுவிதமாக அனுபவிக்க ஆரம்பித்து ஒரு வருடம் முழுதாக முடியவில்லை. யார் செய்த புண்ணியமோ வருடங்கள் காத்திருக்காமல், இதோ வந்து விட்டாள் அவள் கனவுலகத்திற்கு. அவள் மனோ இருக்கும் உலகிற்கு!
“நெக்ஸ்ட்” சத்தம் கேட்டு நினைவுலகத்திற்கு வந்தாள். பாஸ்போர்ட், விசா எல்லாம் சரி பார்க்கப்பட்டது. அடுத்த இரண்டு வருடத்திற்கு அங்கு தங்கி வேலை பார்க்கும் அனுமதியோடு அமெரிக்காவிற்குள் அலர்விழி நுழைந்தாள்.
ட்ராலியை தள்ளிக் கொண்டே வெளி வந்தவள் உடலில் சில்லென்ற குளிர் காற்று மோத, போட்டிருந்த ஜாக்கெட்டை இழுத்து மூடினாள். கண்கள் நாலா பக்கமும் துழாவ, “விழி” என்றான், அவள் தேடிப்பிடிக்கும் வரை கூட காத்திருக்கப் பிடிக்காமல். சுற்றி இருப்பவர்களை பொருட்படுத்தாத தேசம்… அவனும் தேசத்திற்கு ஏற்றார் போல் மாறி விட்டானோ?
சத்தம் வந்த திசை நோக்க, அவன் நின்றிருந்தான். அவளின் மனோவே தான். பார்த்தவளுக்கு நொடி நேரம் எடுத்தது கால் நகர. ஹப்பா… என்ன ஒரு உணர்வு இது! குப்பென்று இரத்தம் தலைக்குப் பாய்ந்தது. இதயம் தாறுமாறாய் துடித்தது.
இருபதடி தூரம் இருநூறடியாய் தோன்றியது. அவன் உயரமும், கட்டுமஸ்தான உடலும்… அமெரிக்க வாசம் கொடுத்த மெருகேறிய பளபளத்த முகமும்… புன்னகை தங்கிய இதழும்… மனதை நிறைத்தான். நாட்கள் மட்டும் தான் பறக்குமா என்ன? அவள் இதயம் கூட லேசாகிப் பறந்தது, இறக்கையில்லாமல். அவனை நோக்கி ஊசலாடிய இதய லோலகம், உலகம் மறந்து சுற்றம் மறந்து, இவன் மட்டுமே பூவுலகில் என்பது போல் மனோ என்பவன் முன் நின்றது.
ட்ராலியை மறந்து, அவசர அவசரமாக நடையின் வேகத்தைக் கூட்டி, ஓட்டமும் இல்லாமல் நடையும் இல்லாமல் அவள் ஓட…
அவளை நோக்கி வந்தவன் கையில் மலர்க்கொத்தும், இரண்டு பலூன்களும். ஒற்றை கண்ணாடி பலூனுள் ஊதா, பிங்க் நிறங்களில் பல குட்டி இதய வடிவ பலூன்கள். காற்று போகாமல் இருக்கக் கட்டியிருந்த வண்ண நிற நைலான் ரிப்பன்கள் சுருள் சுருளாய்… அலர்விழி கூந்தல் போலவே, காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.
அவன் வந்த வேகத்தில் ஒற்றைக் கை கொண்டு இடையோடு விழியைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி, பச் என்ற அழுத்தமான இதழ் ஒற்றலோடு இறக்கி விட்டான். கண்கள் மோதி நின்றன. ஈரமில்லா அந்த ஒற்றை முத்தம் இனித்தது. இதழ் தாண்டி தொண்டை தாண்டி அடி வயிறு வரை இனித்தது.
“வேற நாடு… வேற கலாச்சாரம். அதுல முழுகிடாத பாப்பா,” பாட்டி கூறி அனுப்பினாரே… நினைவில் வரவில்லை. அவள் அகம் புறம் இருந்த அனைத்து அணுக்களும் அணைத்திருந்த மனோவால் நிறைந்து வழிந்தது.
“விழி…” இறக்கிய பின்னும் தள்ளிச் செல்லாமல் நெற்றி முட்டி நின்றவன், கண்கள் மூடி நிமிடத்தை உள்வாங்கிக் கொண்டான்.
ஆனந்தத்தில் இதழ் விரிய, “மனோ…” என்றவள் கண்களிலிருந்து ஒரு சொட்டு உருளவா என்று கேட்டுத் தேங்கி நின்றது.
“ஏய்… ச்சு, வந்துட்டியே…” மெல்ல நெற்றியில் இடித்து, பட்டும் படாமலும் அணைத்து விட்டான்.
“வெல்கம் டு அ ஹோல் நியூ பிகினிங்,” பூ கொத்தும், பலூனைக் கட்டியிருந்த நைலான் ரிப்பனும் கை மாறியது.
கையில் வாங்கிய பூங்கொத்தில் ஆறு வெள்ளை டஃப்படில் மற்றும் பச்சை இலைகளோடு மூன்று பர்புள் டுலிப்பும் கண்களைப் பறித்தன. பள்ளிப் பருவத்தில் படித்தது, ‘டாஃப்படில்ஸ்’ என்ற வில்லியம் வோட்ஸ்வொர்த் எழுதிய பாடலை(Daffodils By William Wordsworth). இன்று தான் நேரில் பார்க்கிறாள் ஆறு இதழ் கொண்ட அகலமான வெள்ளை சார்சர் நடுவே வீற்றிருக்கும் மஞ்சள் கிரீடம் அணிந்த கோப்பை போன்ற மலரை. பூக்களின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். முகத்தில் புதிதாக ஒரு மலர்ச்சி தோன்றியது.
மரத்தடியில் பத்தாயிரம் மலர்களைப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஏரிக்கரை முழுவதையும் ஆக்கிரமித்த தங்க மலர்கள், தாலாட்டும் தென்றலுக்கு தலையசைப்பதை ஒற்றைப் பார்வையில் பார்க்க நேர்ந்தால், பார்ப்பவரின் மனநிலை எப்படி இருக்கும்? இதுதான் அந்தப் பாடலில் வரும் காட்சி. பத்து வருடங்கள் முன் படித்த பாடலை சிறிய மலர் கொத்து நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. அன்று உணராமல் போனதை இன்று உணர்ந்தாள்.
“வோர்ட்ஸ்வொர்த் சொன்ன மாதிரி ஒரு இடம் இருக்கும்ன்னா நாமளும் போகணும் மனோ…” அவள் ஆசைக்கு அவனிடம் மரியாதை இருக்கும் என்பதால் தன் ஆசையை அவனிடம் பகிர்ந்தாள். “கண்டிப்பா போகலாம் விழி. அங்க மட்டும் போனாப் போதுமா?”
“போதாது. ஒரு செக்கண்டுக்கு 3,160 டன் தண்ணி கொட்டுற நயாகரா ஃபால்ஸ உங்க கைபிடிச்சு ரசிக்கணும். டைட்டானிக் கப்பல் மாதிரி பெரிய கப்பல்ல, பனிமலைக்கு நடுவில, பெரிய பெரிய திமிங்கிலம் எம்பிக் குதிக்கிறத பார்த்துட்டே ஒரு அலாஸ்கா க்ரூஸ் போகணும். பனிக்கு நடுவில குட்டி கண்ணாடி டென்ட், அதுல நீங்களும் நானும் படுத்து கிட்டே அலாஸ்கா நார்தன் லைட்ஸ் பாக்கணும்…”
சிரித்தான். ஆசைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளின் வார்த்தை தடைப்பட்டுப் போனது. “என்ன சிரிப்பு?”
மீண்டும் சிரித்தான். “போடி டியூப் லைட்,” என்றான் செல்லமாய் தலையில் தட்டி.
அவன் ட்ராலியை தள்ளிக் கொண்டே நடக்க, பூ கொத்தையும் பலூனையும் ஆசை தீர ஆராய்ந்தவள், கண்களை விலக்காமலே, “யெல்லோ அண்ட் பர்புள், காம்ப்ளிமென்டரி கலர்ஸ்! உங்களுக்கு நல்ல டேஸ்ட் மனோ.” என்று அவன் ரசனையை, ரசனையோடு பாராட்டினாள்.
நின்றவன், அவளை மேலிருந்து கீழ்வரை நிறுத்தி நிதானமாய் பார்த்தான். நடந்து கொண்டிருந்தவள் தேங்கினாள். “ம்ம்ம்?” புருவம் உயர, “என் டேஸ்ட் நல்லா தான் இருக்கு இல்ல…” புன்முறுவலோடு பாராட்டை ஏற்றுக் கொண்டான்.
இம்முறை பல்ப் சட்டென்று எரிந்துவிட, அலர்விழி முகம் புன்னகையை பூசிக் கொண்டது. “வாய் கொஞ்சமும் சரி இல்ல, கெட்ட பையன் நீங்க.” மெல்ல அடித்த புஜத்திற்குள் கையை நுழைத்து கூடவே நடந்தாள். அவன் ஸ்பரிசம் இதமான உணர்வைக் கொடுத்தது. மென்மையாக புஜத்தில் இதழ் பதித்து எடுத்தாள்.
தினம் மணிக்கணக்காக பேசி ஆசை தீராத இருவரும், அடுத்த சில நிமிடங்கள் பேசாமலே நடந்தனர். மனம் எல்லையில்லா நிம்மதியில் திளைத்தது. இது நிலைக்க வேண்டும். எண்ணம் எழவுமே கையில் இறுக்கம் கூடியது.
தொலைவில் இருந்தவர்களுடன் கைப்பேசியில் பேசி முடியவும், அருகிலிருந்தவனிடம் பயணம் பற்றிய பேச்சுகளோடு, பயணப்படும் முன் வீட்டில் நடந்த பேச்சுக்கள் என்று இரண்டு நாள் விட்டுப் போனதை பேசிக் கொண்டே போக… கார் எபி வீட்டை நோக்கி ஊர்ந்தது.
வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டதை வெளியே பூத்து நின்ற வண்ண மலர்கள் காட்டிக் கொடுத்தது. “ஊர் ரொம்ப அழகா இருக்கு மனோ. அது என்ன பூ மனோ? க்ரேப்ஸ் மொத்தமும் ஒரே தண்டுல ஒட்டி வச்ச மாதிரி?”
“க்ரேப் ஹயாசிந். இன்னும் நிறைய வெரைடீஸ் இருக்கு. நாளைக்கு கூட்டிட்டு போறேன்.”
கடலூரையும் சென்னையும் மட்டுமே பார்த்தவளுக்கு அனைத்துமே புதுமையாகத் தோன்றியது. பார்க்க இருவிழி போதவில்லை.
பிரமாண்டமான வீடுகளும், அதன் சுவர்கள் ஏந்தியிருந்த வண்ண மலர்களும் பெண்ணை வசீகரித்தன. பெண்ணொருத்தி ஓட்டிச் சென்ற மசராட்டி ஈர்த்தது. “அந்தக் கார் நல்லா இருக்கில்ல…” பேசிக்கொண்டே இமை மூடாமல் சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டே வர… இதமான பயணம் சட்டென்று முடிவுக்கு வந்தது.
“இங்க தான் தங்கியிருக்கேன் விழி” காரை விட்டு இறங்க குளிர் காற்று முகத்தைப் பதம் பார்த்தது. உள்ளங்கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொண்டவள், “ரொம்பக் குளிருது மனோ… கண்ணு வரைக்கும் குளிருது மனோ” எனவும், அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியை அவளுக்கு மாட்டி விட்டான்.
காரின் பின்புற ட்ரங்கை திறந்துக் கொண்டே, “ஹ ஹா… இது குளிரா? போன மாசம் வந்திருக்கணும். குளிர்னா என்னன்னு தெரிஞ்சுருக்கும். இதுல மேடம்க்கு அலாஸ்கா போகணுமாமே…”
“இழுத்து போர்த்திக்கிட்டாது போவேன். இப்போ என்ன உங்களுக்கு?”
“எனக்கு ஒண்ணும் இல்ல, வேணுங்கற திங்க்ஸ் இருக்க பெட்டி எது? அதச் சொல்லு! மத்தது உள்ளேயே இருக்கட்டும். நாளைக்கு ஈவ்னிங் ஜெர்ஸிக்கு கிளம்பிலாம். இங்க இருந்து அட்லீஸ்ட் நாலு மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன்.”
“வேணுங்கிறத வாங்கி செட் பண்ண சண்டே ஒரு நாள் போதுமா மனோ…?”
“ஒரு மாசம் முழுசும் கம்பனி கெஸ்ட் ஹௌஸ் தான… அதுலயே எல்லாம் இருக்கும். அடுத்து மாறப் போற வீட்டுக்குத்தான் என்ன வேணும்ன்னு பாத்து வாங்க வேண்டி இருக்கும். அத பொறுமையா பாத்தா போதும்.”
ஒற்றைப் பெட்டியோடு இரண்டு படுக்கையறை கொண்ட இருப்பிடத்திற்குள் நுழைந்தாள். வாழ்ப் போகும் வீடில்லை தான். இருந்தும் அவள் மனோ வாழும் இருப்பிடம், அதனால் மனம் குதூகலித்தது.
கண்கள் வீட்டைச் சுற்றின. நல்ல முறையில் பராமரிக்கப் பட்டிருந்தது. வெள்ளை சுவர், 70” தொலைக்காட்சி பெட்டி, அதைப் பார்க்க அதன் முன் மிக நீளமான… அமர்ந்தாலே அதில் புதைந்து போய்விடலாம் என்ற சொகுசு இருக்கை.
அவள் கண்கள் விரிவதைப் பார்த்தவன், “ஃபுட் பால் பாக்க வாங்கினோம்” என்று சிரித்தான்.
“இது தான் நம்ம ரூம் விழி. அந்த ரூம்ல மார்க் தங்கி இருக்கான். வீக் எண்ட்ஸ் அவன் கேர்ள் ஃப்ரெண்ட், ஆட்ரே வந்திடுவா. இன்னைக்கு நைட் வருவா. பேசிப் பாரு உனக்கும் பிடிக்கும். நல்ல பொண்ணு.”
மார்க்கை பற்றித் தெரியும். பார்த்துப் பேசியும் இருக்கிறாள் கைப்பேசியின் உதவியோடே. ஆனால் இப்பொழுது தான் ஆட்ரே பற்றிக் கூறுகிறான். அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைப்பது பிடிக்காதென்பதால் கூறாமல் விட்டிருக்கலாம்.
எது எப்படியோ போகட்டும். நமக்கு வயிறுதான் முக்கியம் என்பது போல், “பசிக்குது மனோ,” என்றாள்.
குளியலறையில் இருந்த குழாய்கள் பற்றிக் கூறினான். இருபத்தி நான்கு மணி நேரமும் சிகப்பு சாயம் இருந்த குழாயில் வெந்நீரும், நீல சாயக் குழாயில் குளிர்ந்த நீரும் வரும் என்றான். அந்த தேசத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இருப்பதில்லை போலும். நீர்வீழ்ச்சி போல் கொட்டிய ஷவருக்கடியில் உடல் அலுப்பு தீர நின்றாள். நன்றாகத்தான் இருந்தது மாலை நேரக் குளியல்.
நல்ல பசி, மெக்ஸிகன் சிக்கன் பரிட்டோ நன்றாகவே இருக்க உண்டு முடித்தாள். வயிறு நிரம்பவும், “நம்ம ஊரு டேஸ்ட் எதிர்பார்க்கல மனோ, காரமா நல்லாயிருந்துது.” என்றாள்.
அவனுக்காகக் கொண்டு வந்த பொருட்களைக் கடை பரப்பினாள். “உனக்கு டைரக்ட் ஃப்ளைட் கிடைக்கலியா டா” என்று கேட்ட எஸ்தர், தன் மகனுக்காகச் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருக்க, அதையும் கொடுத்தாள். அவரிடமாவது உண்மையை உரைக்க வேண்டும் போல் இருந்தாலும், முடியாதே!
மணி ஐந்தைக் கடக்கவும் அவளால் உட்கார முடியவில்லை. கண்கள் சொருகிக் கொண்டு வர ஆரம்பித்தன. “இப்போ தூங்காத விழி. அப்புறம் மூணு மணிக்கு பூதம் மாதிரி விழிப்பு தட்டும், ஒம்பதுக்கா தூங்கு. கிளம்பிட்டு டி.வி. பார்த்துட்டு இரு. பத்தே நிமிஷம் ஒரு கால் பேசிட்டு வரேன், வெளியில போலாம்”, கூறியவன் கூறியது போலவே பத்தாவது நிமிடம் வர, கை கால் மடக்கி சோஃப்பாவில் உறங்கியிருந்தாள். கண்டம் விட்டு கண்டம் வருபவர்களுக்கு, முதல் இரு வாரங்கள் இது ஒரு கஷ்டம்!
“விழி… வா எழுந்திரு,” உலுக்கி எழுப்பி வெளியே அழைத்துச் சென்றான். இரண்டு மணி நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை அவளால்.
ஏழு மணிக்கு மெத்தையில் விழுந்தவள், மனோ கூறியது போலவே மூன்று மணியளவில் எழுந்தாள். சுற்றம் உணர சில நிமிடங்கள் எடுத்தது. இருட்டில் துழாவி கைப்பேசியை எடுத்தாள்.
ஒளியை உயிர்ப்பித்து கண்களை சுழல விட்டாள். உள்ளே மனோ இல்லை. அறைக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அரவமின்றி எழுந்து வெளியே செல்ல, ஹாலிலிருந்த சோஃபாவில் படுத்திருந்தான். பக்கத்து அறையில் இருவர் இருக்க இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்ற நினைத்தவள் அவனையே சற்று நேரம் பார்த்து நின்றாள். மனோவின் கைப்பேசியோடு வந்த வழியே உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தாள். அடுத்த ஒரு மணி நேரம் வீட்டில் இருப்பவர்களுக்கு அழைத்துப் பேசினாள்… எஸ்தரிடம் பேசினாள். அறைக்குள் நடை பயின்றாள்… இனி இப்படி ஏழு மணிக்கு குறட்டை விடுவதில்லை என்ற கடைபிடிக்க முடியாத முடிவையும் எடுத்தாள்.
ஒரு காபியேனும் குடித்தால் தேவலாம் போல் தோன்றியது. அடுக்களைக்கும் ஹாலுக்கும் இடையே மார்பளவு சுவர் தான். மனோ விழித்து விடுவான் என்று தோன்றவுமே அமைதியாக கண் மூடி படுத்தாள். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், கதவு திறக்கும் சத்தத்திற்கு கண் திறக்க, மனோ வந்தான் இரண்டு கோப்பைக் காபியோடு. ‘இவனால் எப்படி என் தேவைகளை உணர முடிகிறது?’ முகம் முழுவதும் புன்னகையைப் பூசிக் கொண்டது.
அவளை இடித்துக் கொண்டே அமர்ந்தான். தோளில் சாய்ந்து கொண்டாள். அமைதியாக ஒரு கோப்பை காபி காலியானது. மனம் நிறைந்தது. மெல்ல தலை உயர்த்தி பார்த்தாள். நெற்றியில் இதழ் பதித்தான். பேசாத நிமடங்கள்… பேசிய நிறைவு.
“நம்ம லைப் பத்தி என்ன முடிவெடுத்திருக்க?”
அவளுக்கு யோசிக்க ஒன்றும் இல்லை போலும். பட்டென்று பதில் வந்தது.
“உங்க படிப்பு முடியட்டும் மனோ. ஒரு வேலைல நீங்க உக்காந்ததும், வீட்டுல விஷயத்தை சொல்லி கல்யாணம் பண்ணுவோம். பிள்ளைக்கு மூணு வயசாகும் போது, கிளம்பிடுவோம். இங்க நல்லா இருந்தாலும் வேண்டாம் மனோ. நம்ம குடும்பம் அங்க தான இருக்கு… நாமளும் அங்கேயே இருப்போம்”
“பாப்பா வரைக்கும் யோசிச்சாச்சா? என்ன பாப்பா?”
“என்னை மாதிரி பொண்ணு தான்”
“போதுமா?”
“ம்ம்கூம். அப்புறம்… என்னை மாதிரி ஒரு பையன்!”
“அடிப்பாவி… அப்போ என்னை மாதிரி வேண்டாமா?”
“ம்கூம்…”
“ஏன் டி? அவ்வளவு தான் என்னைப் பிடிக்குமா?”
“ரொம்பப் பிடிக்கும் மனோ. உங்கள மட்டும் தான் அவ்வளவு பிடிக்கும். உங்கள மாதிரி வேணாம். நீங்க மட்டும் தான் வேணும் மனோ.”
ஒரு கனவு நிறைவேறியிருக்க, அவள் புது கனவைக் கூறிக் கொண்டிருந்தாள். அதில், அவனோடான வாழ்க்கை, அவனோடான பயணம், அவன் பிள்ளைகள் என்று மனோ மட்டுமே இருந்தான். அவள் இரவாய், அவள் விடியலாய், அவள் முதலாய், அவள் முடிவாய், எங்கும் எதிலும் மனோ மட்டுமே நிரம்பி வழிந்தான்.
வலது கை விரல்கள் பின்னிக் கொள்ள, இடது கை தோளைச் சுற்ற, தன்னோடு, தன் மார்போடு பெண்ணை அணைத்துக் கொண்டான். சேர்த்தணைத்திருந்தவளின் உச்சி முகர்ந்தான். இதழ் தலை உச்சியில் பதிந்து நின்றது. அவள் கனவுக்குள் விரும்பி நுழைந்து அதை தன் கனவாகக் காண ஆரம்பித்தான். சுகமான ஒரு பயணமாய் இருக்கும் அவர்கள் வாழ்க்கை என்று தோன்றியது.