என் ஜீவனில் உறைந்திடு – 7 (2)

அடுத்த நிமிடமே மீண்டும் அடித்தது அலைபேசி. அவன் அதையும் எடுக்காமல் துண்டிக்க, அடுத்த அழைப்பு அதே ஒலியில் வந்தது. இம்முறை, “அப்பா” என்று காட்டிய திரையைப் பார்த்து விட்டு அழைப்பை ஏற்றான் அவன்.

“ஹாய் ப்பா. ஆமா. வேலையில் இருக்கேன். ம்ம், நைட் பேசறேன். இல்ல, வீட்டுக்கு வர முடியாதுப்பா. ம்ம், வர டிரை பண்றேன். பை” அவன் பேசுவதைக் கேட்டபடியே அமர்ந்திருந்தாள் ரோஜா.

அவன் நடுரோட்டில் வைத்து அழைப்பை ஏற்றதன் காரணம் இப்போது அவளுக்குப் புரிந்தது. வெளி அழைப்புகளுக்கு ஒரு ஒலியும், வீட்டினருக்கு என்று வித்தியாசமாக ஒரு அலைப்பொலியும் வைத்திருக்கான் அவன். அம்மாவோ, அப்பாவோ இருவரில் யாரோ ஒருவர் அழைத்திருக்க, சாலையைக் கிட்டத்தட்ட கடந்து விட்ட எண்ணத்தில் அலைபேசியை எடுத்திருக்கிறான் என்பது விளங்கியது. ஆனாலும், அதைச் சரியென்று அவள் மனம் ஏற்க மறுக்க, “உங்கம்மா போன் பண்ணாங்கன்னு அவசரமா எடுத்திருக்கீங்க. ஆனா, அதுனால உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா, உங்கம்மாவால அதைத் தாங்கியிருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க செஃப். அவங்க எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாங்க?” அவள் பேசிக் கொண்டே போக, இளமாறன் கைக் கட்டி நிமிர்ந்து அமர்ந்து அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் எந்த உணர்ச்சிகளும் இல்லை.

‘அவங்களுக்கு நான் எந்த உறவும் இல்லை.’ வெறுப்பாக நினைத்துக் கொண்டான். அது அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிய, ரோஜா அவனைப் புதிராகப் பார்த்தாள். அவளுக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது.

“சாப்பிடலாம் ரோஜா. சாப்பாடை காக்க வைக்கக் கூடாது”

அவன் நீட்டிய தட்டை கையில் வாங்கிக் கொண்டாள்.

“ஆந்திர போஜனம், வாவ்” என்றாள் மெய்யான வியப்புடன்.

தட்டில் இருந்த சிறிய கரண்டியை கண் காட்டி, “நமக்கு ஸ்பூன் எல்லாம் செட்டாகாது. கையில சாப்பிடுறேன்” என்றாள்.

“ம்ம். பருப்பு பொடி?” அவன் கேள்வியை முடிக்கும் முன்னரே தட்டை அவனை நோக்கி நீட்டினாள்.

சூடான சோறுடன் ஆந்திராவின் ஸ்பெஷலான பருப்பு பொடியும், நெய்யும் சேர, சோறை பிசையும் போதே அவளுக்கு எச்சில் ஊறியது.

“யம்ம்ம்” உணவை ரசித்து ருசித்துச் சொன்னாள் ரோஜா.

அடுத்ததாகக் கோங்குரா பச்சடி (புளிச்ச கீரை துவையல்) போட்டுச் சோறை பிசைந்தாள், நெய்யை எடுத்து நீட்டினான் மாறன்.

“என்ன செஃப் நீங்க? ப்ச், கோங்குராவை அதோட புளிப்பு, காரத்தோட அப்படியே சாப்பிடணும். நெய் போட்டு அதோட டேஸ்ட்டை கெடுக்கக் கூடாது” புன்னகையுடன் நெய்யை கீழே வைத்து விட்டு உண்ண ஆரம்பித்தான்.

அவனுக்கு உணவு தயாரிப்பது வேலை. அவன் சமைத்த உணவை ஒருவர் ரசித்து உண்ணும் போது கிடைக்கும் மனநிறைவு அவனுக்கு வேறெதிலும் கிடைப்பதில்லை.

ரோஜா ஒவ்வொரு கவள உணவையும் அதன் சுவையைச் சிலாகித்து உண்பதை பார்த்தவன் உதடுகள் புன்னகையை மறைத்து, உணவை விழுங்கியது.

இருவரும் பேசி, சிரிப்பதைக் காட்டிலும் இப்படி எதிரெதிரே அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வது, ஏதோ ஒரு வகையில் அவனை மிக நெருக்கமாக உணர வைத்தது. அவளைக் காணும் போதெல்லாம் தடுமாறும் மனதிற்கு அவளைக் காண்பித்தே இயல்பாக இயங்க வைத்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

ரோஜா அடுத்து டோமட்டோ பப்புவை (தக்காளி சேர்த்துச் சமைக்கப்பட்ட பருப்பு) பரிமாறிக் கொண்டாள். இப்போது தயக்கத்துடன் நெய்யை அவள் புறமாக நகர்த்தினான்.

“ஹா.. ஒரே ஒரு ஸ்பூன் போதும்” சோறின் மீது தூவலாக நெய் ஊற்றி பிசைந்தாள்.

“நான் இன்னையில் இருந்து தெலுங்கு தேசமா மாறிடலாம்னு இருக்கேன் செஃப். இந்தப் பருப்பு இவ்வளவு க்ரீமியா, டேஸ்ட்டா இருந்தா வேறென்ன பண்றது?” கண்ணைச் சிமிட்டி அவள் கேட்க, அவனோ பதிலே சொல்லவில்லை.

அவனது அனுபவத்தில் எவ்வளவு கேட்டிருப்பான் அவன். நாளையே வெறும் தக்காளி ரசம் கொடுத்தால் கூடத் தேவாமிர்தம் என்று சொன்னாலும் சொல்வாள் என்று நினைக்கையிலே அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“குட்டி வெங்காயக் கூரா” எனப்படும் கத்திரிக்காய் குழம்பை கையில் எடுத்தவள், திரும்பவும் அதை மேஜையில் வைக்க, “ம்ம்?” என்றான் கேள்வியாக இளமாறன்.

குட்டி குட்டி கத்திரிக்காய்களைக் கீறி அதன் உள்ளே வறுத்து அரைத்த மசாலா கலவையை வைத்து, எண்ணெயில் வதக்கி செய்யப்பட்டிருந்த கத்திரிக்காய் குழம்பை பார்க்கையிலேயே அவளுக்கு வாயில் எச்சில் ஊறச் செய்தது.

“எனக்குக் கத்திரிக்காய் அவ்வளவா பிடிக்காது. நான் சாப்பிட்டேன் சொன்னா கூட எங்கம்மா நம்ப மாட்டாங்க” என்றவளின் தட்டில், அந்தக் குழம்பை பரிமாறினான்.

“ஐயோ செஃப், வேணாம்” என்றவள், தட்டில் வைத்ததை வீணாக்க மனமில்லாமல், வேறு வழியின்றி உண்ண ஆரம்பித்தாள்.

வெண்டைக்காய் வறுவல், கோவைக்காய் பொரியல், சுரைக்காய் கூட்டு என வரிசையாக எடுத்துக் கொஞ்சமாக அவள் தட்டில் அவன் பரிமாற, “செஃப், ஒரு வார சாப்பாட்டை ஒரே நாள்ல சாப்பிட வைக்காதீங்க” என்று சலுகையாக அலுத்துக் கொண்டாள் ரோஜா.

அவன் வெறும் சாம்பார், ஆவக்காய் ஊறுகாய் உண்டுக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தாள் ரோஜா.

“பொடி, பொரியல், கூட்டு எதுவும் போட்டுக்கல செஃப்? வெறும் சாம்பார் சாதம் சாப்பிடுறீங்க?”

“எனக்கு இது போதும் ரோஜா. நீங்க சாப்பிடுங்க” என்றவன் அவள் பக்கமாகத் தக்காளி ரசத்தையும், தயிரையும் நகர்த்தி வைக்க, தனக்குத் தயிர் ஊற்றிக் கொண்டவள், அவனுக்கும் பரிமாறப் போக, “நோ, எனக்கு வேணாம். தயிர் சாப்பிட மாட்டேன்” என்று மறுத்தான் அவன்.

“ஓகே”

மூன்றாவது முறையாகக் கொஞ்சம் சோறும், தயிரும் போட்டுக் கொண்டு, ஆவக்காய் ஊறுகாய் தொட்டுக் கொண்டாள்.

“ஏன் செஃப், உங்க கைக்குத் தங்கத்தில” என்று ஆரம்பித்து நாக்கை கடித்து, “காப்பு, காப்பு யாரும் வாங்கித் தரல?” என்று கேள்வியைத் திருத்திக் கேட்டாள். அவன் மறுப்பாகத் தலையை அசைத்தான்.

“சோறையே பார்க்காத மாதிரி சாப்பிடுறேன் இல்ல செஃப்? எங்க கேன்டீன்ல உப்பு, காரம், எண்ணெய் எல்லாம் கம்மியாதான் சேர்ப்பாங்க. அங்க இந்த டேஸ்ட் வராது. அது ஹெல்தி புஃட்னு வச்சுக்கோங்களேன்” என்று அவள் சொல்ல,

“அப்போ இது ஹெல்தி புஃட் இல்லையா?” என்று தீவிரமாக அவன் கேட்க, “ஐயோ நான் அப்படிச் சொல்ல வரல செஃப்” என்று தடுமாறினாள் ரோஜா.

அவன் முகத்தில் இளநகை முகிழவும் தளர்ந்து சிரித்தாள்.

“வீட்ல அம்மாவும் முன்ன மாதிரி சமைக்கிறது இல்ல. ஆனா, அம்மா கையால என்ன செஞ்சாலும் அந்த டேஸ்ட் அடிச்சுக்க முடியாதுதான்” அவள் சொன்னதில் இருந்த முரணில் அவளுக்கே சிரிப்பு வந்து விட, சத்தமாகச் சிரித்தாள்.

“நான் என்ன சொல்ல வந்தேன்னா, ஆந்திரா மீல்ஸ் அமோகமா இருந்தது. நிறையச் சாப்பிட்டுட்டேன்” என்றவளின் முன் காக்கிநாடா காஜா, போப்பட்லு (போளி), ஷாஹி துக்டா எனப் பலவித இனிப்புகள் இருந்த தட்டை அவன் நீட்ட, “அம்மாடி செஃப்” என்று அலறி விட்டாள் ரோஜா.

“என்னால இதுக்கு மேல ஒன்னுமே சாப்பிட முடியாது. தொண்டை வரைக்கும் சாப்பிட்டு இருக்கேன். இதுல ஸ்வீட் கொடுக்கறீங்க” அவள் மறுத்தாலும் அவன் அசையவில்லை.

“ஓகே. கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக்கறேன். அதுக்கு மேல முடியாது”

“ம்ம்”

சிறிய கிண்ணத்தில் பொன்னிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்த சக்கரைப் பொங்கலை அவன் தட்டில் பரிமாறி, அவனது முறைப்பை பொருட்படுத்தாமல் தானும் சிறிய கரண்டியில் ஒரு வாய் எடுத்து உண்டு விட்டு, தாமதிக்காமல் எழுந்து கை கழுவச் சென்றாள் ரோஜா.

அவனும் உணவை முடித்து வர, அமைதியாய் அவன் முன் அமர்ந்தாள்.

“நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் இல்ல செஃப்? எனக்கு ரத்தம் பார்த்தா கொஞ்சம் பயம். அது எல்லோருக்கும் இருக்கும் தானே? எனக்குக் கொஞ்சம் அதிகம்னு சொல்லலாம்.”

“சாரி.” மனத்தில் இருந்து சொன்னான்.

“எங்கப்பா கேன்டீனுக்கு எனக்கு ஞாபகம் தெரிஞ்ச நாள்ல இருந்து போறேன். அங்க எவ்வளவோ பார்த்துட்டேன். ஆக்சிடென்ட், ஆம்புலன்ஸ், இறப்பு, பிறப்பு எல்லாமே. ஆனாலும், ஒரு நாள் எங்கம்மாவை பேச்சு மூச்சில்லாம பார்த்தப்போ உயிரே போய்டுச்சு. அந்த நாளை என்னால என்னைக்கும் மறக்க முடியாது. உங்களை முதல் தடவை பார்த்தப்பவும், என் கண் முன்னால அந்தக் கார் உங்களை இடிச்சுட்டு போனது.” குரல் நடுங்க, மேலே பேச முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள் ரோஜா.

“ரோஜா, சாரி. பிளீஸ்”

“இன்னைக்கும் உங்க மேல பஸ்..” உடல் சிலிர்த்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்காமல் வாய் மூடிக் கொண்டாள்.

ஒருவித தயக்கத்துடன் அவள் கைப் பற்றினான் இளமாறன்.

அவளிடம் தன் மனநிலையை, தன் வாழ்க்கையின் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்ளப் போனவன், அதைச் சொல்லாமலே தவிர்த்து விட்டான்.

“நான் அப்ப சொன்னதுதான் ரோஜா. இனிமே கவனமா இருப்பேன்.” என்று அவன் உறுதியளிக்க, அவனிடம் தேவைக்கும் அதிகமாகப் பேசி விட்டதை உணர்ந்து, சட்டென எழுந்துக் கொண்டாள் ரோஜா.

அவனிடம் உணவுக்கு நன்றி சொல்லி வெளியில் வந்தாள். அவனது உதவியை மறுத்து விட்டு, தானே ஆட்டோ பிடித்து வீடு செல்வதாகச் சொல்லி விட்டாள். ஆனாலும், அவளோடு சென்று அவளை ஆட்டோவில் ஏற்றி வழியனுப்பி வைத்து விட்டே வேலைக்குத் திரும்பினான் இளமாறன்.

கடந்த சில மாதங்களாக அவன் வாழ்க்கையில் எதிர்பாராத பல நிகழ்வுகள். வேலையில் பதவி உயர்வு கிடைத்தாலும், சுய தொழில் அவனைச் சோதித்தது. அதைக் காட்டிலும் அதிகமாக அவனைச் சோதித்த சில உறவுகளை அவன் அடியோடு மறக்கவே விரும்பினான்.

அம்மம்மா, தாத்தாவினால் சென்னையை விரும்பினான் என்றால், சென்னை வாசத்தை வெறுக்க அவனுக்குப் பல காரணங்கள். இன்று அவனுக்கு விபத்து நேர்ந்திருந்தால் அதற்கும் அவர்களே காரணமாகி போய் இருப்பார்கள் என்பதை நினைக்க நினைக்க மனதில் வெறுப்பும், வெறுமையும் பரவ, தன் அறைக்குள் நுழைந்தான் அவன்.

ஒரு நிலையின்றித் தவித்த மனதை எப்போதும் சமப்படுத்துவது அவனது கலைதான். உணவு தயாரிப்பது அவனைப் பொறுத்தவரை ஒருவித தியானம்.

அடுத்த நிமிடமே அலுவலக உடை மாற்றி, கீழிறங்கிச் சென்றான் அவன்.

ஹோட்டலின் பிரம்மாண்ட சமையல் அறை, அவனின் ராஜாங்கம் அது. அவரவர் வேலையில் அனைவரும் மூழ்கியிருக்க, தானும் அவர்களோடு இணைந்து கொண்டான்.

அங்கே, “மிஸ் என் பிளேஸ் (Mise en place)” எனப்படும்,

உணவு தயாரிப்பின் ஆரம்பக் கட்டமான, பயிற்சி செஃப்களால் செய்யப்படும் வேலையில் தன்னையும் நுழைத்துக் கொண்டவனைச் சில தலைகள் ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்து, மாலை வணக்கம் தெரிவித்து விட்டுத் தங்கள் வேலையில் மூழ்கியது.

இரவு உணவிற்கான வெங்காயம், தக்காளி, காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் கழுவி, ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு வகையாக வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

மிகக் கூரான கத்தி ஒரே சீராக நகர்ந்து ஒரே அளவில், காய்களை வெட்டித் தள்ள, அதைப் பிடித்திருந்த இளமாறனின் மனம் மெல்ல மெல்ல தன் சிந்தனைகள் அனைத்தையும் துறந்து ஆழ்ந்த அமைதிக்கு வந்தது.

இங்கே வீட்டில் ரோஜா அம்மாவிடம் அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தாள். மகளுக்கு வேலை கிடைக்காதது சித்ராவிற்குப் பெரிய வருத்தத்தை அளிக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமாக இரண்டு கேன்டீன் இருக்கையில் மகள் வெளியே வேலைக்குச் செல்வதில் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. மகளின் ஆசைக்காகத்தான் சரியென்று சொல்லியிருந்தார்.

“நம்ம நித்தி மாப்பிள்ளை சொந்தத்துல ஒரு பையன் இருக்காராம். இங்க சென்னையில்தான் வேலையாம். ஃபோட்டோ இருக்கு பார்க்கறியா ரோஜா? அப்பாகிட்ட பேச சொல்லுவோமா?” பொதுவான பேச்சு திடீரென்று திசை மாறியதில் பே என்று முழித்தாள் ரோஜா.

“ம்மா, என்னம்மா நீங்க? இப்ப தானே ரகுவை வேணாம்னு சொல்லி சமாளிச்சேன். அதுக்குள்ள அடுத்ததைக் கொண்டு வர்றீங்க?” திகைப்புடன் கேட்டாள்.

“இங்க பாரு ரோஜா. ரகு பிசினஸ் மேன். ஆனா இப்போ நித்தி வீட்ல சொன்ன பையன் வேலைக்குப் போறவன். அவன் போட்டோவை நீ முதல்ல பார்த்துட்டு, பிடிச்சிருக்கான்னு சொல்லு. அப்பாவை விசாரிக்கச் சொல்வோம். எல்லாம் சரியா வந்தாதான் கல்யாணம். ஆனா, உனக்குக் கல்யாணம் பண்ணாம இப்படியே விட்டுடுவோம்னு மட்டும் நினைக்காத. நித்தி படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். நீ கொஞ்ச நாள் வீட்ல இருக்க ஆசைப்பட்டன்னு விட்டா, கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்க. அப்படியெல்லாம் விட மாட்டார் உங்கப்பா. ஞாபகத்தில் வச்சுக்கோ” சித்ரா சொல்ல சொல்ல ரோஜாவின் முகம் வாடியது.

“எனக்கு டையர்டா இருக்கும்மா. நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்.” அம்மாவின் பதிலுக்காகக் காத்திருக்காமல் அறைக்கு வந்தவள், அக்கா நித்யாவை அழைத்தாள்.

“என்ன ரோஸ், உனக்கெல்லாம் வேலை தர முடியாது போன்னு சொல்லிட்டானாம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” கேலி சிரிப்புடன் பேச்சை ஆரம்பித்தாள் நித்யா.

ரோஜா அன்றைக்கு நடந்த அத்தனையையும் அக்காவிடம் கடகடவென்று சொல்லி முடித்தாள். அதில் இளமாறனை சந்தித்தது, அவனோடு மதிய உணவு உண்டது என ஒன்றையும் விடவில்லை அவள்.

“இந்தச் செஃப் உன் வழியில அடிக்கடி வர்றாரே, ம்ம். என்னவா இருக்கும்?” மொத்த கதைகளையும் பேசி விட்டு, நித்யா சத்தமாக யோசிப்பது போலப் பாவனைச் செய்ய, “நித்திக்கா” செல்லமாகக் கோபித்தாள் தங்கை.

“ஐ லைக் ஹிம்” என்றாள் ரோஜா முடிவாக.

“ஓ, லைக் தானே? இருந்துட்டு போகட்டும்” என்று நித்யா சொல்ல, ரோஜா அமைதியாக இருந்தாள்.

“ரோஜா, லைக்னா என்ன மாதிரி லைக்? என்னை, என் பையனை, நம்ம அப்பாவை, அந்த மாதிரி லைக் தானே?”

“ம்ஹூம் நித்திக்கா, நான் உங்க மேல வச்சிருக்கறதுக்குப் பேர் லைக் இல்ல. அதுக்குப் பேர் பாசம், நேசம், அன்பு. ஆனா, செஃப் மேல லைக்கையும் தாண்டின ஒரு ஃபீல்.”

“ஆத்தாடி, ரோஜா. இதைக் கேட்டா அப்பா உன்னை இதழ் இதழா பிச்சு போட்டுடுவார் செல்லம். நீ தெளிவா சொல்லு, இப்போ ட்ரெண்ட்ல சொல்றது போலச் செஃப் மேல உனக்கு க்ரஷ் தானே?”

“இல்லக்கா. அதுக்கும் மேல..”

“ஐயோ, குண்டு போடாத ரோஜா. லவ், லவ்வா சொல்ற?”

“அது வந்து நித்திக்கா.”

“லூசு ரோசு. அவரைக் கீழ விழாம காப்பாத்திட்டு, நீ காதல்ல விழுந்துட்டேன்னு சொல்லி ஷாக் கொடுக்கிற தெரியுமா?”

“….”

“நான் சொல்றேன் கேளு. சரியான காரணம் இல்லாம நமக்கு யாரையும் பிடிக்காது. அதுதான் மனுஷ மனசோட டிசைன். உனக்கு அவர் மேல் வந்திருக்கிறதுக்குப் பேர் காதல் இல்ல. சேவியர் காம்ப்ளக்ஸ் (Savior Complex). இந்தச் சினிமா, கதையில எல்லாம் வரும் தெரியுமா? ஹீரோ ரோடை க்ராஸ் பண்ண ஹீரோயின் ஹெல்ப் பண்ணுவா, உடனே லவ் வந்திடும். வில்லன்கிட்ட இருந்து ஹீரோயினைக் காப்பாத்துவான் ஹீரோ. உடனே பத்திக்கும் காதல் தீ. ஹீரோயினுக்கு ஆபத்துன்னா ஆயிரம் மைல் தாண்டி இருந்தாலும், ஹீரோ பறந்து வருவாரே. அது போல உனக்கு…”

“நித்திக்கா…” ரோஜா கத்தவும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு சிரித்தாள் நித்யா.

“சரி, சீரியஸா சொல்றேன் ரோஜா. அப்பா இதுக்குக் கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். சுகந்தி டாக்டரும் சம்மதிக்க மாட்டாங்க. அதுனால இந்த லைக்கை, லைக்கத் தாண்டி போற இதயத்தை இப்பவே நிறுத்தி வை. அவ்ளோதான் சொல்லிட்டேன். ஓகே?”

“ம்ம்” என்று அக்காவின் பேச்சை கேட்டுக் கொண்டாள் ரோஜா.

அவள் மனதில் மென்மையாக மொட்டு விட்ட உணர்வுகள் அவளைக் குழப்பி அலைக்கழித்தது. அன்றைய தினம் நடந்ததை மனதில் திரையிட்டு பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.

“ஹாய் ரோஜா. செஃப் இளமாறன் நம்ம ரெண்டு பேரையும் அவங்க ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிட கூப்பிட்டார், உனக்கு ஞாபகம் இருக்கா? நான் அவர்கிட்ட நாம் நாளைக்கு வர்றோம்னு சொல்லிட்டேன். அவர்கிட்ட உன் நம்பர் இல்லையாம். அதான் உனக்காக நானே பதில் சொல்லிட்டேன். நாளைக்குக் காலையில பார்க்கலாம். குட் நைட்.” என்று அந்நேரம் அவளுக்கு ரகுவரன் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top