“உன் முகமே சரியில்லையே. ஆஃபீஸ்ல ரொம்ப வேலையா பாரும்மா?” ரங்கராஜன் பாசத்துடன் கேட்க, சோஃபாவில் இருந்து கீழிறங்கி அப்பாவின் காலடியில் அமர்ந்தாள் பார்கவி. மகளின் தலையை வாஞ்சையாய் வருடிக் கொடுத்தார் பெற்றவர்.
“என்னடா? என்கிட்ட ஏதாவது சொல்லணுமா உனக்கு?” அவள் மனத்தைப் படித்தது போலக் கேட்ட அப்பாவை புன்னகையுடன் ஏறிட்டு, “ம்ம்” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன யோசனையும் பலமா இருந்தது. ம்ம்மும் பலமா வருது. என்னான்னு சொல்லுடா” என்று மகளைக் கூர்ந்தார்.
“அதுப்பா..” என்று அவள் தயங்க, அப்போது, “நீயும் கொஞ்சம் சீரகத் தண்ணி குடிக்கறியா பாரு?” என்று கேட்டபடியே அவர்களிடம் வந்தார் காவேரி.
அவர் கையில் இருந்த பெரிய குவளையில் ஆவி பறக்கும் பானம் இருந்தது. அவர்கள் முன் கால் நீட்டி அமர்ந்தவர், சீரகம், ஓமம் போட்டு கொதிக்க வைத்திருந்த நீரை நன்றாக ஆற்றினார்.
“அப்பாவுக்கா ம்மா?”
“ஆமா, உங்கப்பா மூனு இட்லிதானே சாப்பிட்டாரு? அதுவும் ஒரைப்பே இல்லாத பாசிப்பருப்பு சாம்பார் தொட்டு சாப்பிட்டுட்டு இப்போ நெஞ்சு மேலேயே இருக்க மாதிரி இருக்குனு சொல்றார். இதைக் குடிச்சுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தா சரியா போகுங்கறார். அதான் போட்டுக் கொண்டாந்தேன்” என்றார் காவேரி. கணவரின் உடல் நலம் குறித்த கவலை அவரின் குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
அப்பாவிற்கு இதயக் கோளாறு இருப்பது அவளைப் பயமுறுத்தியது.
“என்னப்பா பண்ணுது? இவ்ளோ நேரமா என்கிட்ட ஒன்னும் சொல்லல நீங்க? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று படபடத்து, அப்பாவின் கையை இறுகப் பற்றினாள்.
“அப்பாக்கு ஒன்னும் இல்லடா. இந்தச் சீரகத் தண்ணிய குடிச்சுட்டு மாத்திரை போட்டா சரியா போகும்டா பாரும்மா. உங்கம்மா சும்மாவே அவளும் பயந்து, உன்னையும் பயமுறுத்தி விடுவா. நீ கண்டுக்காத” என்றார் புன்னகையுடன். பதிலுக்கு அவளால் புன்னகைக்க முடியவில்லை.
இதே போன்றதொரு இரவில் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து அவர் துடித்ததும், அவர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடியதும் நினைவுக்கு வந்தது. அதே நிலை மீண்டும், அதுவும் இப்போது வந்தால் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
“அப்பா, பிளீஸ் வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்” என்று அவரின் முன் மண்டியிட்டு, அவரின் கைப் பிடித்துக் கெஞ்சினாள்.
“அப்பாக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னா நம்பணும், பாரும்மா. என் உடம்பு மேல எனக்கும் அக்கறை இருக்குடா. அதுவும் இப்போ உன் கல்யாணத்தைப் பக்கத்துல வச்சுட்டு அப்பா கேர்லெஸ்ஸா இருப்பேனா சொல்லு?” என்று கேட்டார்.
“ம்க்கும், மகளுக்குக் கல்யாணம்னு நீங்க எடுத்துக்கற டென்ஷன்தான் உங்க உடம்பை கெடுத்து விடப் போகுது பாருங்க” என்று அங்கலாய்த்தார் காவேரி.
“என்ன பேசுற காவேரி நீ..” என்று மனைவியை அதட்டினார் ரங்கராஜன்.
“நமக்குக் கல்யாண வேலையை எடுத்துச் செய்ய ஆள் இல்லையா? இல்ல அவங்களுக்குக் கொடுக்க வசதி இல்லையா? நிறையா ஆளை போட்டு வேலை வாங்குறத விட்டுட்டு எல்லாத்தையும் நீங்களே இழுத்துப் போட்டு செஞ்சா எப்படிங்க? அவங்க மாப்ள வீடு அது வேணும், இது வேணும்னு மாத்தி மாத்தி சொல்றாங்கன்னா நீங்க எல்லாத்துக்கும் மண்டையாட்டுறதுனாலதானே?”
“என் பொண்ணு கல்யாணத்துல எல்லாம் நானே பார்த்து பார்த்துச் செஞ்சாதான் எனக்குத் திருப்தி காவேரி. நீயும் சும்மா இருக்கியா என்ன?” என்று பந்தை மனைவியின் புறம் தள்ளி விட்டார்.
பெற்றோரின் தற்போதைய கவலையெல்லாம் அவளது திருமணம் குறித்ததாக இருக்க, அவளுக்குத் தொண்டையடைத்தது. குற்ற உணர்ச்சி மெதுவாகத் தன் கிளைகளை அவளுள் பரப்பியது.
“அம்மா சொல்றதை கேளுங்கப்பா, பிளீஸ்” என்று கெஞ்சினாள்.
“அப்பாக்கு ஒன்னும் இல்லடா. என் செல்லப் பொண்ணு கல்யாணத்தைச் சிறப்பா செய்யணும்ங்கற ஆசையைத் தவிர வேறே என்ன ஆசை எனக்கு இருக்கப் போகுது சொல்லு” என்று அவர் நெஞ்சை நீவ, பதறி எழுந்து போய் அவர் பக்கத்தில் அமர்ந்தாள். அவரின் நெஞ்சை மென்மையான அழுத்தத்துடன் நீவி விட்டு, “நான் போய்க் காரை எடுக்கவாப்பா?” என்று கேட்டாள்.
அவர் மறுப்பாகத் தலையசைக்க, “இத குடிங்க மொத” என்று அவரிடம் சீரகத் தண்ணீரை காவேரி நீட்ட, அதை வாங்கி அப்பாவை குடிக்கச் செய்தாள் பார்கவி.
“அப்பா பிளீஸ்ப்பா. எனக்காக.. வாங்க, ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்” என்று அவரின் கைப் பிடித்து எழுந்து நின்றாள். அவரும் எழுந்து நின்றார். நெஞ்சை அழுத்தி விட்டு, மகளோடு நடந்தார்.
“கொஞ்ச நேரம் நடந்தா சரியா போகும் பாரும்மா” என்று மகளோடு வாசலில் நடந்தார்.
மூன்றாம் நிமிடம் பெரியதாக ஏப்பம் விட்டார். அதற்குப் பிறகு அவர் இயல்பாக, “பார்த்தியா பாரும்மா. அப்பா ஒன்னும் இல்லைன்னு சொன்னேன் இல்ல?” என்று கேட்டு சிரித்தார்.
ஆனால் அப்பாவின் உடல்நிலை குறித்த கவலை அவளுள் ஏற்படுத்தியிருந்த தாக்கம் குறையவில்லை.
அப்பாவுடன் மௌனமாக நடந்தாள்.
“அப்பாகிட்ட என்னமோ சொல்லணும்னு சொன்னியே பாரும்மா?”
“ஹான் என்னப்பா?”
அவர் நடையை நிறுத்தி, “என்னமோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே?” என்று கேட்டார்.
பெற்றோரின் கனவெல்லாம் அவளின் கல்யாணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதாக இருக்க, இப்போது திருமணம் வேண்டாம் என்று அவள் எப்படிச் சொல்வது? அவளால் நிச்சயமாக முடியாது என்று தோன்றியது. மனம் முரண்டி, கலங்கிட கண்களும் தளும்பின. அப்பாவின் முன் அப்படி அழுது விட முடியாது.
அவரின் உடல்நிலையைப் பற்றி மட்டுமே அந்த நிமிடம் தீவிரமாகச் சிந்தித்தாள். அந்தச் சிந்தனையின் முடிவு அவளின் முடிவை முழுமையாக மாற்றியிருந்தது.
“எங்க பிரண்ட்ஸ்க்கு குடுக்க இன்விடேஷன் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்தாங்கப்பா. அத உங்ககிட்ட காட்டலாம்னு..”
என்று சொல்லி சமாளித்தாள். அவர் போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்து, போட செய்தாள். அம்மாவிற்கும் வேலைகளில் உதவி செய்து, அவர்கள் உறங்கச் சென்ற பிறகே அவள் உறங்கச் சென்றாள். ஆனால் அவளுக்கு உறக்கம்தான் வரவில்லை.
மனம் சிந்தனை சுழலில் சிக்கிக் கொண்டு தவித்தது.
நள்ளிரவில் உறங்கி, அதிகாலையில் எழுந்து அப்பாவை தேடிச் சென்றாள்.
“அப்பா நல்லா இருக்கேன் பாரும்மா” என்று மகளின் தலைக் கோதி சிரித்தார் ரங்கராஜன்.
“உங்களுக்கு இன்னைக்கு என்ன வேலைப்பா? ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?”
“ஏன் நீ வந்து ஹெல்ப் பண்ண போறியா உங்கப்பாக்கு?” என்று இடக்காகக் கேட்டபடி வந்தார் காவேரி.
“என்னம்மா ஹெல்ப் பண்ணணும்? சொல்லுங்க. நான் செய்யறேன்”
“மொத கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்டு வீட்ல இரு போதும். இன்னும் உனக்கு ஜவுளி எடுக்கணும், நகைங்க கொஞ்சம் எடுக்கணும். சீர் பொருளுங்க ஆர்டர் கொடுத்தது உனக்கு ஓகேவா, இல்ல வேற வேணுமான்னு பார்த்துச் சொல்லணும்” என்று அடுக்கிக் கொண்டே போனார் காவேரி.
“சொல்லு. நீ எப்போ லீவ் போடுற?” என்று அவர் தொடர்ந்து கேட்க, “ஒரு வாரத்துக்கு முன்னாடிம்மா” என்றாள்.
“அப்பாதான் சொன்னாங்க” என்று அப்பாவை கோர்த்து விட்டாள்.
“உங்கள..” காவேரி வேகமாகக் கணவரின் மேல் பாயத் தயாராக, “பத்து நாளைக்கு முன்னாடியே வீட்ல இருந்து என்ன பண்ணா போறா? அவளை ஃப்ரீயா விடு காவேரி” என்று மனைவியின் கன்னத்தைத் தட்டினார்.
பொண்ணு முன்னாடி எனக் கண்ணால் எச்சரித்துக் கண்ணை உருட்டினார் காவேரி.
இருவரையும் புன்னகையுடன் பார்த்து நின்றாள் பார்கவி.
இப்படியான அன்புதான் அவளுக்கு வேண்டும். அந்த எதிர்பார்ப்பு இயல்புதானே!
ரங்கராஜன் வேலை இருக்கிறது என்று வெளியே கிளம்பி விட்டார். அவளும் அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள்.
“நீங்க உட்காருங்கம்மா, நான் தோசை ஊத்தறேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
“நீ சாப்பிட்டுட்டுக் கிளம்பு. நான் சரளா வந்ததும் சாப்பிட்டுக்கறேன்” என்று வீட்டு உதவிக்கு இருக்கும் பெண்மணியைக் குறிப்பிட்டு சொன்னார்.
“ஓகேம்மா. எனக்குத் தோசை நானே ஊத்திக்கறேன். நீங்க உக்காருங்க” என்று அவரின் தோளில் கைப் போட்டாள்.
“உனக்குச் சூடா இட்லி இருக்கு பாரு. அப்பாக்கு ஊத்தும் போது உனக்கும் சேர்த்து அவிச்சுட்டேன். எனக்கு மட்டும் கம்பு தோசைக்குக் கரைச்சேன். உனக்குத்தான் பிடிக்காதே” என்றார். ஒரு சிறிய தட்டில் இட்லி, கொஞ்சம் கேசரி வைத்து அவளிடம் நீட்டினார்.
இட்லிக்கு தொடு உணவுகள் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன.
அவள் மாடிக்குச் செல்லும் போதே, “கா, கா” என்று அப்படியொரு கரைச்சல். அங்கே மாடி விளிம்பில் அமர்ந்திருந்த காகம், அவளையே பார்த்து பார்த்துக் கரைந்தது.
அவள் உணவை வைத்து விட்டு தள்ளி நின்றதும், அவளைப் பார்ப்பதும், உணவை கொத்தி உண்பதுமாக இருந்தது. அது முன்னர் அமர்ந்திருந்த இடத்தில் ஏதோ பளபளக்க, அதன் அருகில் சென்று என்னவென்று பார்த்தாள்.
செம்பவள நிற கூழாங்கல் அங்கே மினுமினுத்துக் கிடந்தது. அதைக் காகம் கொண்டு வந்து அங்கே வைத்திருந்தது. அதுதான் அதனது வாடிக்கை. அவளுக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் பறவையின் செயல்.
அது மட்டுமல்ல, எப்போதும் அங்கே அதனது உணவையும் கொண்டு வந்து வைத்திருக்கும்.
சிறிய மீன் துண்டு, கோழிக்கறி துண்டு, தோசை, பிஸ்கட் சில நேரம் பூச்சிகள் என அதன் பரிசு பட்டியல் நீளும். ஆரம்பத்தில் அதைக் கண்டு அருவருப்படைந்திருக்கிறாள். போகப்போக அதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் பழகி விட்டது.
இப்போதும் அந்தக் கூழாங்கல்லை கையில் எடுத்துக் கொண்டாள். அதன் பக்கத்தில் இருந்த நெத்திலி போன்ற சிறிய மீனை தொடவில்லை அவள்.
அந்தப் பறவையைப் பார்க்க பார்க்க அவளுக்கு அப்படியொரு ஆச்சர்யம்.
மாடிப் படிகளில் இறங்கி நின்று அதனையே பார்த்திருந்தாள். அது கரைந்து தன் கூட்டாளிகளைக் கூட்டி அவள் வைத்த உணவை பகிர்ந்தது.
அந்தப் பறவை அவளுக்கு வாழ்க்கை பாடத்தைப் போதித்தது.
அம்மாவிடம் சென்று, “இங்க பாருங்கம்மா, அந்தக் காக்கா இன்னைக்கு எனக்குக் கூழாங்கல் கொண்டு வந்து வச்சிருக்கு” என்று புன்னகையுடன் சொல்லி, அந்தக் கல்லை கழுவி அவரிடம் நீட்டினாள்.
“அந்தக் காக்கா உங்க தாத்தாவா இருப்பார் பாரும்மா. பேத்தி கல்யாணத்துக்குச் சீர் கொண்டு வந்திருக்கார்” என்று அவர் கேலி பேச, “இல்லம்மா சீரியஸா எனக்கு இந்தக் காக்கா பண்றது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு” என்றாள், எப்போதும் போல.
“அதுக்கு நீ டெய்லி சோறு வைக்கற, பதிலுக்கு அதால முடிஞ்சத உனக்குக் கொண்டாந்து குடுக்குது. எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான். அதுக்குத் தெரிஞ்ச அளவுல உன்கிட்ட அன்ப காட்டுது” என்றார். அதைத்தான் சற்று முன் அவளும் யோசித்திருந்தாள்.
பாரியிடம், அவள் அன்பை எதிர்பார்த்தாள் மட்டும் போதுமா? அவளும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்தானே? திருமணம் என்பது இருவர் இணையும் உறவல்லவா?
பாரிவேந்தனுக்குப் பிரியத்தைப் பகிராமல் அவன், அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுவதும் தவறுதானே என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
“உனக்குப் பாம்பு, பல்லின்னு கொண்டு வந்து நம்ம மாடியில வைக்காத வரைக்கும் சரிதான்” என்று காவேரி சொல்ல, “ம்மா” என்று அவரை விளையாட்டாக முறைத்தாள்.
“தவளை, ஓணான்லாம் ஏற்கெனவே வந்திருச்சும்மா. நான் அதெல்லாம் சாப்பிட மாட்டேன்னு அதுக்கிட்ட எப்படிச் சொல்ல?”
“ம்ம், போய்ப் பக்கத்துல உட்கார்ந்து சொல்லிட்டு வா என்ன? அதுக்கு என்னா வேணும்னு கேட்டுட்டு, உனக்கு என்ன கொண்டு வந்து வைக்கணும்னு லிஸ்ட் போட்டு சொல்லிட்டு வா. அது கேட்டுக்கும்” என்று அவர் தீவிரமாகச் சொல்ல, சிரித்து விட்டாள் அவள்.
“நான் நெட்ல படிச்சேன்ம்மா. காக்காக்கு நம்ம முகங்கள் ஞாபகம் இருக்குமாம். அதுக்குச் சோறு வச்சா அவங்களுக்குப் பரிசு கொடுக்கணும்னுதான் இப்படி எதாவது கொண்டு வந்து வைக்குமாம். அது ரொம்ப அறிவாளியான பறவையாம் ம்மா. பஸில் சால்வ் பண்ணும்னா பார்த்துக்கோ. அந்தக் காக்கா கல்லு போட்டு தண்ணி குடிக்கற கதையெல்லாம் நிஜமாம்மா.”
“காலையிலயே காக்கா கதை சொல்லாம சாப்பிட்டு எந்திரி கழுத” என்று செல்லமாக அதட்டினார்.
“இப்படி எல்லாம் பேசாதம்மா. காக்கா பழி வாங்குமாம் தெரியுமா? உன்னைப் பிடிக்கலன்னா, உன் பக்கமே வரக் கூடாதுன்னு அதோட ஃபேமிலி கிட்ட சொல்லுமாம். உன்னை அதுகிட்ட சொல்லி கொடுத்துடுவேன் பார்த்துக்கோ. அதுக்கு வேற என்னை ரொம்பப் பிடிக்கும்” என்று அவள் செல்லமாக மிரட்ட, “உங்கப்பா போதாதுன்னு, உன்கூடக் காக்கா கூட்டணி வேறயா?” என்று அவர் அங்கலாய்க்க சத்தமாகச் சிரித்து விட்டாள் பார்கவி.
அதே மனநிலையுடன் அலுவலகம் கிளம்பினாள். அவளை நிறுத்தி, “மாப்ள கூட ஏதாவது சண்டையா பாப்பா?” என்று கேட்டார் காவேரி.
“நீங்க அன்னைக்குப் படத்துக்குப் போய்ட்டு வந்த அன்னைக்கே கேட்டேன். நீ ஒன்னும் இல்லன்னு சொல்லிட்ட. நேத்தும் அவரு வந்துட்டு போன பின்னாடி உன் முகமே சரியில்லாத போல இருந்துச்சு. உங்கப்பா முன்னாடி கேட்டா வருத்தப்படுவார்னு இப்போ கேட்கறேன். அம்மாகிட்ட சொல்லு. நா சரி பண்ண முடியுமா பாக்கறேன்” என்று அக்கறையுடன் அழுத்தி கேட்டார்.
“ஒன்றுமில்லை” என்று சொல்லவே விரும்பினாள் அவள். ஆனால் அம்மாவின் பார்வை கூர்மையாக அவள் மேல் பதிந்திருக்க, அவளால் பொய் சொல்ல முடியவில்லை.
“நான் சொன்னா நீ திட்ட கூடாதும்மா” என்று அம்மாவை நெருங்கி நின்றாள்.
“திட்ட மாட்டேன், சொல்லு”
“அது வந்தும்மா..” என்று தடுமாறினாள்.
“சொல்லு பாரும்மா. அம்மாவுக்குப் பயந்து வருது”
“அச்சோ. அவரு என்னை அடிக்கடி தொட்டு தொட்டு பேசுறார். க்ளோஸாக டிரை பண்றார். அது எனக்கு என்னவோ போல இருக்கு” என்று உண்மையைச் சொல்லியே விட்டாள்.
“அம்புட்டுதானா. நான் என்னவோன்னு பயந்துட்டேன்” என்று ஆசுவாச பெருமூச்சு விட்டார்.
அம்மாவின் எதிர்வினை அவளுக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.
“ம்மா..”
“அட போ பாப்பா. நேத்து கூட உன் பெரியம்மா ஒரு கதை சொல்லிட்டு இருந்தா கல்யாணமாகி ஏழாம் மாசமே புள்ளை பெத்த கதையை..”
“ப்ரீமெச்சூர் பேபியாம்மா?” என்று சந்தேகம் கேட்டவளுக்கு அம்மா சொல்ல வந்தது புரியவே சில நொடிகள் பிடித்தது.
“போங்கம்மா. எனக்கு ஆஃபீஸ் டைமாச்சு. நான் வர்றேன்” என்று வாசலை நோக்கி விரைந்து விட்டாள். மகள் வேகமாக நழுவுவது கண்டு சிரித்தார் காவேரி.
அவளைப் பின் தொடர்ந்து சென்று, “எங்க புள்ளை பத்தி எங்களுக்குத் தெரியும்டா. மாப்ளகிட்ட ரொம்பவும் ஒதுக்கம் காட்டாத. ம்ம், உனக்கு நான் சொல்லணும்னு இல்ல, கவனமா இருந்துக்கோ” என்றார். அவர் உடைத்து பேசாததை அந்தக் குறிப்பு அவளுக்கு விளக்கமாக விளங்க வைத்தது.
அன்று மாலை வீடு வந்ததும் பாரிவேந்தனை அவளே அழைத்துப் பேசினாள்.
முன்தினம் அவள் பேச்சினால் விளைந்த கோபம் அவனுக்கு இன்னமும் இருக்கும் என அவளுக்குத் தெரியும். ஆக முதல் அடியை அவளே எடுத்து வைத்தாள்.
“நாம நாளைக்கு எங்கயாவது போகலாமா?”
“வாட் அ சர்ப்ரைஸ் பார்கவி”
“இப்படிக் கிண்டல் பண்ணீங்கன்னா நான் வரல.”
“ஹே ஈஸி கவி. எங்க போகலாம். நீ சொல்லு? மூவி ஓகே?”
மீண்டும் திரையரங்கமா? ஐயோ என்று மனத்தினுள் அலறினாள்.
“தியேட்டர் போய்ப் படம் பார்க்கறதுல எனக்குப் பெருசா இன்ட்ரெஸ்ட் கிடையாது. என் ஃப்ரெண்ட் பிரியாக்கு பிடிக்கும்னுதான் அவளோட போவேன்”
“எனக்குப் படம் பார்க்க பிடிக்குமே. அப்போ என்னோட, எனக்காக வரலாம் இல்ல கவி?”
“வரலாம்தான்” என்று ராகம் இழுத்தாள். அவனும் சிரிப்புடன், “அதிசயமா நீயே கால் பண்ணி வெளியில போகலாம்னு சொல்ற, சோ உன்னோட சாய்ஸா இருக்கட்டும். எங்க போகலாம்னு நீயே சொல்லு” என்று அவளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான்.
“ம்ம்” என்று அவள் யோசிக்க, “நீ பொறுமையா யோசி. நாளைக்குக் காலையில வரை உனக்கு டைம் இருக்கு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.