“சரி, என்ன பண்ணலாம்னு சொல்லு” என்றான் தமிழ் நேராக அமர்ந்து.
பிரச்சனை இதுதான், இன்று கதாநாயகனுக்குத் தோழனாக அந்த கிராமத்துக் காட்சியில் நடிக்க இருந்த ஒரு புகழ்பெற்ற நடிகர் வரவில்லை. அழைப்புகள் மாறி மாறிப் பறந்துகொண்டிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. முழுக்க முழுக்கத் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த விஷயம் இது என்பதால், தமிழ் எந்த அலட்டலும் இன்றி அமர்ந்திருந்தான்.
“என்ன பண்ணலாம்னா… நீதானே டைரக்டர்? புரொடியூசர்கிட்ட சண்டை போட்டு அவர்தான் நடிக்கணும்னு சொன்ன, இப்போ அந்த ஆள் ஓடிட்டான். எல்லாம் உன் கதையைக் கேட்டுத்தான்!”
தமிழ் ஆச்சரியமாக, “எது? என் கதையைக் கேட்டா?” என்றான்.
சுசிகரன் விடாமல், “இல்லையா பின்ன? அதை விடு, எடுத்தாச்சு. இப்போ ஹீரோவுக்கு ரெண்டு வாரம்தான் கால்ஷீட் இருக்கு. இதுல மொத்தமும் ஹீரோ கூட வரப்போறது இந்த ஒரு ஆளுதான். திடீர்னு அந்த ஆளுக்கு நாம எங்கே போறது?”
“அந்த ஆள் காசு வாங்காதபோதே எனக்குச் சந்தேகம் வந்துச்சு” எங்கிருந்தோ வந்த பேரழகன் தன் கருத்தைக் கூற, இருவர் பார்வையும் அங்கே சென்றது.
“யோவ்! காசு கொடுத்துட்டதாத்தானே சொன்னீங்க?” என்றான் தமிழ் சற்று அதிர்ந்து.
“இல்ல தமிழு, மேனேஜர் எவ்வளவு சொல்லியும் அந்த ஆள் வாங்கல. எல்லாப் படத்துக்கும் இப்படித்தான் பண்ணுவாருன்னு சொன்னான். விசாரிச்சும் பார்த்தோம், அதான் எதுவும் சொல்லல.”
“பாவா… எப்ப சொல்ல வேண்டிய விஷயத்தை எப்போ சொல்ற நீ? அந்த ஆள் காதுக்கு இது போச்சுன்னா அறுத்துப்புடுவான்” என்றான் சுசிகரன். “சுசி விடு, ஆகுற வேலையைப் பார்க்கலாம்” என்ற தமிழ், தாடையைத் தடவியபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.
“இந்த யோசனையைப் பார்த்தா இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையே முடிவுக்கு வந்துடும் போல இருக்கே!” சத்தம் வந்த திசையில் தமிழ் பார்க்க, கையில் குச்சி ஐஸ் ஒன்றைச் சப்பிய வண்ணம் நின்றான் நிமலன்.
“ஐஸ் எங்கே வாங்குன?” இந்த நேரத்தில் இந்தக் கேள்வி அவசியமா என்கிற கோபத்தில் பேரழகன் இவனைப் பார்க்க, “அந்தத் தள்ளுவண்டியில தல. இந்தா நீ இதை வச்சுக்கோ, நான் வேற வாங்கிக்கிறேன்” எனத் தன்னுடையதை நிமலன் நீட்ட, “சீ! தள்ளுடா நாயே” என அவனைத் தள்ளிவிட்டுச் சென்ற தமிழ், வரும்போது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் மின்னிய சேமியா ஐஸ் ஒன்றை ருசித்த வண்ணம் வந்தான்.
“தமிழு…” – சற்று கோபத்தைத் தேக்கி அழைத்த பேரழகனிடம், “இரு பெருசு, யோசிக்கலாம்” என்றான் சாவகாசமாக.
“அதில்லடா… எனக்கும் ஒரு ஐஸ் வாங்கி வந்திருக்கலாம்ல!” எனப் பேரழகன் கேட்க, நிமலன் வாய்விட்டுச் சிரிக்க, சுசிகரன் தலையில் அடித்துக்கொண்டான்.
“யோவ் பாவா… இன்னும் ஒரு மாசத்துல உனக்கு அறுபது வயசாகிடும். கொஞ்சமாவது வயசுக்குத் தகுந்த மாதிரி இருயா” என்றான் சுசி.
“கவலையை மனசுல ஏத்திக்கக் கூடாது சுசி. எந்த வயசா இருந்தாலும் ஆசை ஆசைதானே? இன்னுமா தமிழு இந்தச் சேமியா ஐஸ் வருது? சின்ன வயசுல சாப்பிட்டது” என்றார் பேரழகன், பார்வை மொத்தமும் தமிழின் கையில் இருந்த பனிக்கூழின் மேல் வைத்து.
அவர் பார்வை புரிந்து திரும்பி நின்ற தமிழ்செல்வன், ஒரே நிமிடத்தில் அதை முடித்துக் குச்சியை அவர் கையில் வைத்து, “குப்பையில போட்டுரு” என்றான்.
பின், “சுசி, எல்லா ஏ.டி-க்களையும் வரச் சொல்லு. அப்படியே அந்த மேக்கப் ஆர்டிஸ்ட்டையும் கூப்பிடு” என்றான். சுறுசுறுப்பாக நடந்த தமிழைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது, இவன் ஒரு தீர்வைக்கண்டு பிடித்துவிட்டான் என்று.
“கஞ்சம்டா நீ!” எனப் பேரழகன் திட்டியது காதில் விழ, திரும்பிப் பார்த்தவன் மங்காத சிரிப்போடு முன்னேறினான். உதவி இயக்குநர்கள் அனைவரும் தமிழ்செல்வன் அருகே நிற்க, அவனோ விளக்கை பிடித்து நின்ற ஒருவன் முன்பு நின்றான்.
“தல…” என நிமலன் தமிழின் எண்ணப்போக்கைப் புரிந்து அதிர்ந்து நிற்க, தமிழோ சற்றும் அசரவில்லை. “இதுவே என் முடிவு” எனத் திட்டமாக நின்றான்.
“சார்” என்றான் அந்த இளைஞன், தமிழ் தன்னிடம் ஏதோ வேலை ஏவப்போவதாய் நினைத்து. “ஒரு ரோல் இருக்குடா, நீ நடிக்கணும்” என்றான் தமிழ் அந்தப் புதியவனிடம்.
அவனுக்கோ பெரும் தயக்கம். இந்தத் துறைக்குள் வர வேண்டும் என்பது அவனது பெரிய கனவு, அது கண் முன் நிற்கிறது. சிறிய வேடமாக இருக்கும் என்கிற எண்ணம். ஆனால் எதுவுமே இல்லாமல் விளக்கைப் பிடித்து நிற்பதற்கு, இது ஒரு சிறு முயற்சி என நினைத்தவன், “கண்டிப்பா பண்ணிடலாம் சார்” என்றான் சற்றே கண் கலங்கி.
அழகு வல்லுநர்களிடம், “லுக் பசங்க சொல்லுவாங்க. இவன் கலர் வெளியே வரவே கூடாது. நல்லா டல் அடிச்சிடுங்க. காஸ்ட்யூம் பின்னாடியே வரும்” எனத் தமிழ் கட்டளையிட்டான்.
“ஆமா, உன் பேர் என்ன சொன்ன? கோபாலா?”
“சார், கோகுல்” எனத் திருத்தினான் அவன்.
“சரிடா… தீபக்!” தமிழின் குரலில் ஒருவன் வேகமாக வர, “இவனைக் கூட்டிட்டுப் போய் அளவு எடுத்து அந்த நடிகரோட டிரஸ்ஸை ஆல்டர் பண்ணிடு” என்றான்.
“சார்…” என தீபக் அதிர்ச்சியாவதைச் சற்றுச் சலிப்போடு பார்த்த தமிழ்செல்வன், “என்னங்கடா உங்களுக்குப் பிரச்சனை? ஆளாளுக்கு ஷாக் ஆகிட்டே இருக்கீங்க!” என்றான்.
“சார், ரோல் பெருசுன்னு கேள்விப்பட்டேன்.”
“சொன்னதைச் செய்றா. டேய் கோபாலு, போ நேரமாச்சு. ஒரு மணி நேரத்துல ஷாட்டுக்கு ரெடி ஆகிடு. நிமலன் வந்து உனக்கு சீன் சொல்லுவான். ஓடுங்க எல்லாரும்!” என அனைவரையும் ஒவ்வொரு பக்கம் அடித்து விரட்டினான். அவர்களை விரட்டினால் தானே தயாரிப்பாளரைச் சரி செய்ய முடியும்? அனைத்தையும் விடப் பெரிய மலைப்பான காரியம் அதுதான்.
இன்னும் அரை மணி நேரத்தில் தயாரிப்பாளர் வந்துவிடுவார் என்னும் தகவல் வர, அதுவரை கோகுலின் தோற்றத்தில் அவனுக்கு ஏற்றவாறு சில மாறுதல்களைக் கூறச் சென்றான் தமிழ்.
சரியாக இருபது நிமிடத்தில் தயாரிப்பாளர் வந்திருப்பதை அறிந்தவன் அவரை நோக்கி நகர, “தல, செலவை மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கல்ல… ஒரு கேரவன் கேட்டு வாங்கிட்டு வா” என்றான் நிமலன்.
“ஒண்ணு பண்றேன், கதையை உன் கையில கொடுத்துடுறேன், நீயே படத்தை எடுத்துடு. அப்புறம் நீ கேட்குறதெல்லாம் புரொடியூசர் செய்வார்” என்றான் தமிழ். நிமலன் விடாமல், “தல, புரொடியூசர் உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றாராம்” என்றான். “இல்லடா நிமலா, ஏதோ கேட்கச் சொன்னியே?”
“டீயா, காபியான்னு கேட்கச் சொன்னேன்.”
தமிழ், “டேய் டப்பா வாயா! வாயை மூடிட்டு வேலையைப் பாரு. வந்துட்டான் நிலா வேணும், சூரியன் வேணும்னு!”
தயாரிப்பாளர் இருந்த இடத்திற்கு வந்தவன், அவர் பார்வை தன் மேல் விழுந்ததும் பளிச்செனப் புன்னகை ஒன்றைச் சிந்தி, உடனே அவர் பாதங்களைத் தொட்டுவிட்டான். அதுவரை தன்னிடம் அனுமதி கேட்காமல் அவனே துணை நடிகரை ஏற்பாடு செய்துவிட்டதை கேள்விப்பட்டு கோபத்தில் இருந்தவர், தமிழின் செய்கையில் உடனே இணங்கிவிட்டார். இருந்தாலும் மிடுக்கை விட்டுவிட முடியுமா? வயது மூத்த, பெயர்பெற்ற தயாரிப்பாளர் அவர்.
ஒரு மிரட்டலோடுதான், “கால்ல விழுந்தா எல்லாம் சரியாகிடுமா? எந்திரிடா!” என்றார். அவரது அதட்டல் தொனி தமிழைச் சிறிதும் பாதிக்கவில்லை, அவன் சாதாரணமாகவே நிமிர்ந்து நின்றான்.
“பேசு, அமைதியா நின்னா என்ன அர்த்தம்? அந்தத் திப்பு தான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்ன… அவன் பேசுனா ரொம்பத் துள்ளுறான். சரி, நீ கேட்டியேன்னு பேமெண்ட் அதிகமா வச்சு முடிச்சா, இப்போ அவன் கல்கத்தால இருக்கேன்னு ஈஸியா பதில் சொல்றான். இங்க நீ வேற ஒருத்தனை அந்த ரோல்ல நடிக்க வைக்கிறேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல, அதுக்குள்ள ஆளையே தயார் பண்ண ஆரம்பிச்சிட்ட… அவன் ஏதோ லைட் பிடிச்சுட்டு இருந்தவனாமே?” நிற்காமல் பொரிந்து தள்ளினார் சரத்.
சரத் சந்திரன், தமிழ்செல்வன் படத்தின் தயாரிப்பாளர்.
“ஏன்? லைட் பிடிச்சவன் நடிக்கக் கூடாதா?”
“ஒரு சின்ன ரோல் கூடப் பண்ணாதவன் எப்படிடா நடிப்பான்?”
“நம்பிக்கை வைங்களேன்… எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா, அப்புறம் திறமை இருக்கிறவங்க எல்லாம் எங்கே போவாங்க?”
சரத் ஆத்திரமாக, “ஓ! ஐயா டெஸ்ட் பண்ண என்னோட படம் தான் கிடைச்சதா?”
தமிழ் நிதானமாக, “இது என்னோட படமும் தான். உங்களுக்கு நூத்துல ஒரு படம், எனக்கு அப்படி இல்லை.”
“கேட்க கேட்கக் காசை மட்டும் கொடுயா, கேள்வி கேட்காதேன்னு சொல்ற… ரைட்?” அவரை அமைதியாகப் பார்த்த தமிழ்செல்வன், அவர் கேள்வியை மொத்தமாய்ப் புறக்கணித்து, “ஜூஸ் சொல்லவா?” என்றான்.
“சொல்லு…” கண்ணாடியைக் கழற்றி நெற்றியை நீவியவருக்காக இவனே சென்று பழச்சாற்றை வாங்கி வந்தான்.
தயாரிப்பாளரின் தாளாளர் உடன் இருக்க, “நீ போயா… அவன் கூட நான் பேசிக்கிறேன்” என்றார் சரத்.
அவர் வார்த்தையை ஏற்றுத் தாளாளர் வெளியேறியதும், “ரொம்ப ஏத்திவிட்டானோ?” எனத் தமிழ் கேட்க, கதவின் பக்கம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, “ஆமாடா! ஆனா எனக்கும் கோபம்தான். ஒரு வார்த்தை போன் பண்ணிச் சொல்றதுக்கு என்ன?” என்றார் சரத். அவனே அவர் அருகே வந்து அமர்ந்தான்.
“எங்கே… நானே இப்போதான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி முடிவு பண்ணேன். நீங்க இங்கதானே வர்றீங்க, அதான் சொல்லல.”
சரத், “என்ன கேட்டாலும் ஒரு பதில் சொல்லு. இந்த ரோல் ரொம்ப இம்பார்ட்டண்ட்னு சொன்னியே… அவன் சரியா வருவானா?”
தமிழ்ச்செல்வன், “நம்புவோம்.”
“எங்கே இருந்து பிடிச்ச?”
“உங்க படம் போன வருஷம் ஒண்ணு ஷூட்டிங் நடந்தப்போ உங்களைப் பார்க்க வந்தேன்ல… அப்போ ஒரு ரோல் பண்ணியிருந்தான். ஆனா படத்துல அது வரலைன்னு நினைக்கிறேன். அப்புறம் இங்க பார்த்தேன், நல்ல திறமை இருக்கு.”
“யூஸ் பண்ணிக்கோடா. உன் மேல இருக்கிற நம்பிக்கையில விடுறேன். அப்புறம் என் பேத்தி உன்கிட்ட ஏ.டி -யா வரணும்னு சொல்றா.”
“ஷாட்க்கு டைம் ஆச்சு… அவன் ஆக்டிங் பார்க்க வர்றீங்களா?”
“பதில் பேச மாட்டாயே… போ வர்றேன்.”
தமிழ்ச்செல்வன் கூறியது போலவே அதிதிறமையானவன் தான் கோகுல் என்பதை அவனே நிரூபித்தான். முதலில் கூட்டம், தயக்கம் எனச் சற்றுத் தடுமாறியவன், பிறகு யதார்த்தமான நடைபோடும் அந்தப் பாத்திரத்திற்கேற்ற மிடுக்கோடும் கம்பீரமாகவும் நடித்து அசத்திவிட்டான்.
தமிழ்ச்செல்வனின் தேர்வைச் சந்தேகித்தவர்களின் வாயும் வார்த்தையும் மொத்தமாய் அடைபட்டுப் போனது.
“ம்ம்… நல்ல ஆளைத்தான் எடுத்திருக்க!” கண்கள் மகிழ்ச்சியில் மின்ன, இதழ்கள் கொஞ்சமும் விரியாமல் மொத்த கூட்டத்தின் முன்னிலையிலும் சரத் சந்திரன் தமிழ்ச்செல்வனைப் பாராட்ட, கைதட்டல் அவ்விடத்தை நிறைத்தது.
அது தமிழ்செல்வனுக்கா அல்லது கோகுலுக்கா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தே மாறியது. ஆனால், தமிழ்ச்செல்வனைப் பொறுத்தமட்டில் இது கோகுலுக்கான கைதட்டல் மட்டுமே.
“சூப்பர்டா கோபாலு!”
“சார்… கோகுல்!”
“ஏதோ ஒண்ணுடா…” – அவன் தோளில் கை போட்டவன், “சம்பளம் எவ்வளவுடா எதிர்பார்க்குற?” என்றான்.
“நீங்க எவ்வளவு கொடுத்தாலும்…”
“அப்போ ஓசியில நடிச்சிடுவியா?”
கோகுல் சற்றுத் தயக்கத்துடன், “எவ்வளவு கொடுத்தாலும் (ஏத்துக்குவேன்) தானே சார் சொன்னேன்… கொடுக்கலைன்னா சொல்லலையே…” – அவனது பேச்சில் சத்தமாய்ச் சிரித்தான் தமிழ்.
“பிழைச்சுக்குவடா! பணிவு இருக்கலாம், அதுக்காகப் பயம் இருக்கக் கூடாது. நல்லா நடிக்கிறதா சொல்லிட்டாங்கன்னு ஓவர் ஆக்டிங் பண்ணிடாதே… ம்ம் போ. உனக்கு சான்ஸ் கொடுத்ததுக்கு ரிட்டர்ன் கிப்ட், நாளைக்கு வரும்போது இந்த ஊர்ல ஒரு கிழவி இனிப்பு வடை போடுமாம், அதை வாங்கிட்டு வா.”
அவன் தோளில் தட்டிவிட்டுச் சென்ற தமிழ்ச்செல்வனைக் கோகுல் விசித்திரமாகப் பார்த்தான். ஏனோ இவன் குணம் கோகுலுக்குப் பிடித்திருந்தது. கர்வம் இல்லை; அளந்து பேசும் மனப்பான்மை இல்லை. உள்ளதை உள்ளபடி, எவர் என்றும் பாராமல் நிதானமாகப் பேசுகிறான். முக்கியமாகக் கலகலப்பாக இருக்கிறான். அதிசயம் தானே!
பணம் வந்தால் பேச்சைக் குறைத்துப் பெருமை காட்டுபவர்களில் இவன் மாறுபட்டவன். கடினமான சூழ்நிலை இருந்தாலும் தமிழின் அல்லது அவனது உதவி இயக்குநர்களின் வார்த்தை ஜாலத்தில் ஒரு சிரிப்புச் சத்தம் அவ்விடத்தில் வெடித்துவிடும். அவனைச் சுற்றி இருப்பதே ஒருவிதத் தெம்பை மனதிற்குத் தருகிறது.
அடுத்த காட்சிக்கான நேரம் தாராளமாக மீதம் இருந்த காரணத்தால், கால்வாசி மூட்டை கட்டப்பட்ட உபகரணங்களைக் கெஞ்சிக் கூத்தாடி மீண்டும் தயார்படுத்தச் சொல்லிக் கொண்டிருந்தான் தமிழ்செல்வன்.
“நாளைக்கே பண்ணலாமே தமிழ்? பாருங்க எல்லாரும் டயர்ட் ஆகிட்டாங்க” கதையின் நாயகன் தமிழிடம் பேசிக்கொண்டிருக்க, “இல்லை, கொஞ்சம் பிரிஸ்க்கா இருக்காங்க. வேகமா முடிச்சுட்டா எல்லாரும் வீடு போய் சேரலாமே… ஏன், உங்களுக்குப் போன் கால்ஸ் வர நேரமாகிடுச்சா?” என்றான் தமிழ்.
“அதுவும் உண்மைதான்…” என அசடு வழிய இழுத்தவன், “உங்களுக்கு ஆள் இல்லைன்னு எங்களையும் ராப்பகலா சிரிச்சுக்கிட்டே வேலை வாங்குறீங்க” என்றான்.
“அதைத்தான் சொல்றேன் ஹீரோ சார்! எல்லாரும் கிளம்பிட்டா நான் தனியா இருப்பேனே… வாங்க கம்பெனி கொடுங்க” பேசிப் பேசியே அனைவரையும் இழுத்து வைத்து அடுத்த காட்சியையும் கச்சிதமாகப் படம் பிடித்துவிட்டான்.
“இன்னும் டைம் இருக்கு” தயாரிப்பாளரின் ஆள் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே கூற, அனைவர் பார்வையும் தமிழ்செல்வன் பக்கம் சென்றது.
இவனுக்கும் யோசனை வர, “செல்வா…” என்கிற மெல்லிய அழைப்பில் தமிழ்செல்வன் தலை தன்னாலேயே சத்தம் வந்த திசைப் பக்கம் திரும்பியது. ஆனால், எவரையும் காணவில்லை. ஆள் இல்லை என்றால் என்ன, குரல் நிஜம்.
தன்னுடைய பதிலுக்காகக் காத்திருந்த மக்களிடம் திரும்பியவன், “பேக் அப்! வெல் டன் டீம், நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு பார்க்கலாம்” என்கிற முடிவோடு தன்னுடைய மடிக்கணினியை வேகமாக அதன் பையில் திணித்தான்.
“தலை… எங்கேயோ ஓடுற மாதிரி இருக்கே?” நிமலன் வந்து காலை ஆட்டியவாறே தமிழைப் பார்க்க, “ஒலிம்பிக்ல பேர் கொடுத்திருக்கேன், செத்த போயிட்டு வர்றேன்” எனத் தீவிரமாகக் கூறியவன், இரண்டே நிமிடத்தில் அவ்விடத்திலிருந்து அகன்றிருந்தான்.
