மலர் பாதம் பணிந்து..45

மலர் பாதம் பணிந்து – 45

அன்னை வீட்டிலிருந்து அப்போது தான் தங்கள் இல்லத்திற்கு வந்திருந்தாள் தேன்மலர்.  

அவள் முகத்தில் குழப்பமும் யோசனையும் பயமும் சரி விகிதமாகத் தென்பட்டது.

ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவள், யாரையும் காணாமல் “அத்த..” என்று குரல் கொடுத்தாள். 

அடுக்களைக்குள் இருந்து வெளிவந்த பணியாள், “அம்மா கோவில் போயிருக்காங்க தேனும்மா” என்றார். 

“சரி.. கிருஷ்ணா எங்க?” 

“வந்ததும் பாப்பா ரூமுக்குள்ள போயிடுச்சுமா. எதுவும் சாப்பிடவும் இல்லை” என்ற போதே அவள் இதயம் வேகமெடுத்து துடிக்கத் துவங்கி இருந்தது. 

பணியாள் சற்று தயங்கி “என்னமோ தெரியலமா.. பாப்பா முகமே சரியில்ல.. உங்கள பாக்க கிளம்பறதா தான் பெரிய அம்மாகிட்ட சொல்லிட்டு போச்சு. ஆனா திரும்பி வரும்போது மொகமெல்லாம் கலங்கி சிவந்து கிடந்துச்சு. விறுவிறுன்னு ரூம்குள்ள போய் கதவையும் சாத்திக்கிச்சு” என்று தான் கண்டவற்றை கூற, தேன்மலர் இதயம் தாளம் தப்பித் துடிக்கத் துவங்கியது. 

“சரி நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க..” என்றவள், மூடி இருந்த கிருஷ்ணாவின் அறை கதவை பார்த்தாள். 

நெஞ்சை என்னவோ பிசைந்தது! ஒரு வகையான சஞ்சலமும், பயமும் அவளை ஆட்டிப் படைக்க, கிருஷ்ணாவின் அறையை நோக்கி அவளால் ஒரு எட்டு கூட வைக்க முடியவில்லை.  

அன்னை வீட்டில் கவிரத்னாவுடன் மேலும் ஒரு மணி நேரம் பல விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு, இருவரும் கீழே இறங்க, அப்போதுதான் படிகளில் உருகிக் கிடந்த பனிக்கூழ்களை கண்டனர். 

“என்ன இது? யார் இங்க கொண்டு வந்து ஐஸ்கிரீமை வச்சா..” என்று கேட்டபடி கவி அதனை சுத்தம் செய்ய, தானும் அவளுக்கு உதவினாள் தேன்மலர். 

இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வீட்டிற்குள் வர, அப்போதுதான் வேலை முடிந்து எழுந்த திவாகரன், அவர்கள் மட்டும் வந்திருப்பதை கண்டு, 

“என்ன நீங்க ரெண்டு பேரு மட்டும் இறங்கி வர்றீங்க? ரூபி எங்க?” என்று இயல்பாகக் கேட்க, பெண்கள் இருவரின் முகத்திலும் குழப்பம். 

“கிருஷ்ணா வந்தாளா? எப்பண்ணா” என்று தேன்மலர் கேட்க, 

“சரியா போச்சு போ.. ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துட்டா.. அவகிட்ட தானே உங்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்து விட்டிருந்தேன்.. சாப்பிடலையா நீங்க யாரும்..?” என்று வேறு கேட்க, கவி மற்றும் தேன்மலர் இருவரின் முகத்திலும் மெல்லிய திகைப்போடியது. 

“என்னங்க சொல்றீங்க? நாங்க அவளைப் பாக்கல. மேல வந்தாளா?” என்று கவி அலைப்புற்ற கண்களுடன் தேன்மலரை பார்த்தாள். 

“மேல தான் வந்தா கவி. இன்னைக்கு அவ காலேஜ்ல ‘White Coat Ceremony’ யாம். அந்தக் கோட்டை நம்ம தேனு கிட்ட காட்டி அவளுக்கு போட்டு விடனும்னு ஆசையோட வந்தா” என்றவன் அவள் வந்ததிலிருந்து நடந்ததை கூறி, 

“உங்கள பாக்க மொட்ட மாடிக்கு வரலைன்னா அப்போ ரூபி எங்க?” என யோசனையாக கேட்டவன், “சேது அண்ணா தான் அவளை கார்ல கூட்டிட்டு வந்தாங்க” என்றபடி வாசல் பக்கம் சென்று பார்க்க, கார் அங்கே இல்லை. 

“கிளம்பிட்டாளா? சொல்லாம கொள்ளாம ஏன் கிளம்பனும்? நானும் வேலையில் உட்கார்ந்து இருந்ததால எனக்கு தெரியல கவி! மீட்டிங் வேற போயிட்டு இருந்தது. சோ நான் ரூம்குள்ள போயிட்டேன்” என்று திவா ஒன்றும் புரியாமல் பேச, பெண்களுக்கு நிலைமை சற்று புரிவது போல் இருந்தது. 

வேக வேகமாக தன் ஹேண்ட் பேக்கினை எடுத்துக் கொண்ட தேன்மலர், “அண்ணி நான் கிளம்புறேன். அண்ணா நான் வரேன். அம்மா எழுந்ததும் சொல்லிடுங்க” என்றவள் விறுவிறுவென வெளியே வந்து ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள். 

அவளின் பின்னாலேயே வந்த கவி, அவளின் கையைப் பற்றி, “நிச்சயம் ரூபி எதுவும் கேட்டிருக்க மாட்டா தேனு” என்று சிறு துளி நம்பிக்கையுடன் கூறியவளிடம், 

கலங்கிய குரலில் “கேட்டிருக்கவும் கூடாது அண்ணி..” என்று விட்டு வந்திருந்தாள் தேன்மலர்.

இங்கே பணியாள் சொல்வதை எல்லாம் கேட்டு, நிச்சயம் கிருஷ்ணா எதையோ கேட்டிருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டவள், சோபாவில் தொய்ந்து அமர்ந்து விட்டாள். 

மனமெல்லாம் அச்சம் பரவ, “என் கிருஷ்ணா எதையும் கேட்டிருக்க கூடாது. என் கிருஷ்ணா எதையும் கேட்டிருக்கக் கூடாது..” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டிருந்தவளின் கவனம் பணியாள் வந்து காஃபியை தந்ததும் கலைந்தது. 

“தேனும்மா.. சொல்ல மறந்துட்டேன். அப்பதே அமுதன் தம்பி கூப்பிட்டு இருந்தாரு. நீங்க வீட்டுக்கு வந்ததும் உடனே அவருக்கு கூப்பிட சொன்னாருமா” என்று சொல்லி விட்டு செல்ல, வேகவேகமாக தன் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள் தேன்மலர்.

போதிய அளவிலான மின்னேற்றம் இல்லாமல் அலைபேசி அதன் உயிரை தொலைத்திருந்தது. 

தன் நெற்றியில் பலமாக அறைந்து கொண்டவள், 

டீப்பா மீதிருந்த தொலைபேசி மூலம் கணவனுக்கு அழைக்க எத்தனிக்கும் முன்பே தொலைபேசி 

சத்தம் எழுப்பவும், பரபரப்புடன் உடனே அதனை எடுத்தாள். 

அவள் “கீதன்..” என்ற அடுத்த நொடி அமுதன் வெள்ளமாக வெடித்திருந்தான். 

“எத்தனை தடவ உனக்கு கால் பண்ணேன் தெரியுமா மலர்.. உன் போன் சுவிட்ச் ஆஃப்” அவன் பேசிய வேகத்திலும் அழுத்தத்திலும் அவனது கோபம் புரிய, 

“சாரி கீதன். சார்ஜ் இல்லாததை நான் கவனிக்கல” என்றாள் உள்ளே சென்ற குரலில். 

“உன் போன்ல சார்ஜ் இல்லாததையும் நீ கவனிக்கல. கவி அக்கா கிட்ட நீ பேசும் போது நம்ம கிருஷ்ணா அங்க வந்து நின்னதையும் நீ கவனிக்கல” என்றவன் குரலில் அளவு கடந்த கோபம்! இதுவரையில் அவன் அவளிடம் காட்டியிராத சீற்றம்! 

கணவன் சொன்ன வார்த்தைகளில் மலரின் தலையில் யாரோ பாறாங்கற்களை வைத்தது போலானது. 

“கீதன்.. கிருஷ்.. கிருஷ்ணா கேட்டாளா? நீ..ங்க எப்படி..” என்றவள் மேலும் பேச முடியாமல் கண்ணீருடன் திணறினாள். 

“அவ கேட்டுட்டா மலர். நீங்க பேசுனது எல்லாத்தையும் நம்ம கிருஷ்ணா கேட்டுட்டா” என்று கோபமாகத் தொடங்கியவன், 

“அவ கேட்டத நானும் கேட்டுட்டு தான் இருந்தேன் மலர். அவ மாடிக்கு வரும்போது நான் அவளுக்கு கால் பண்ணி இருந்தேன். லைன்ல தான் நானும் இருந்தேன்” என்றதும், மலர் வாயடைத்துப் போனாள். 

கண்ணில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 

“கீதன்.. நான்.. எனக்கு..” என்றவள் பேச முடியாமல் திணற, 

“நான் வீட்டுக்கு தான் மலர் வந்துட்டு இருக்கேன். இன்னும் பத்து நிமிஷம். நான் வந்ததும் பேசிக்கலாம். நீ தயவு செஞ்சு அழாத” என்றவன் கூற, மலரின் அழுகை நிற்க வேண்டுமே?? 

தொலைபேசியின் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டு விசும்பலுடன் அவள் அழத் துவங்க, “மலர்…” என்றவனின் குரலும் கலங்கிக் கிடந்தது. 

“நான் வரேன். நீ அழாத. நாம இதை சால்வ் பண்ணிடலாம். ஓகே. நீ அழ வேண்டாம்” என்றவனின் சமாதானங்கள் எல்லாம் மலரின் மனதை எட்டவில்லை. 

“கீதன்.. எனக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கிருஷ்ணா ரூம் கிட்ட கூட நான் போகல. கேட்டதும் என்ன நினைச்சாளோ.. அவளுக்குள்ள என்ன நினைப்பு இப்ப ஓடிட்டு இருக்கும்னு நினைச்சா கூட எனக்கு பதறுது” என்று கரகரத்த குரலில் அழுகையுடன் பேசியவள், 

“ஒன்னும் புரியாத குழந்தை இல்லையே அவ.. நான் பேசினத வச்சு என்ன எல்லாம் யோசிச்சு இருப்பாளோ?” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“நீங்க உடனே வாங்க கீதன். ப்ளீஸ்..” என்று அரற்றினாள். 

“மலர் நீ அழாத. ஜஸ்ட் டென் மினிட்ஸ். தாரமங்கலம் ரீச்சாயிடுவேன்” என்றவன் மேலும் மேலும் அவளை கலங்க வேண்டாம் என்று வலியுறுத்திவிட்டே அழைப்பை துண்டித்தான். 

மூடியிருந்த கிருஷ்ணாவின் அறைக் கதவை கண்டு மேலும் தேன்மலருக்கு துக்கம் பொங்கியது. 

மீண்டும் நெற்றியில் பலமாக அறைந்து கொண்டவள் “அண்ணி கேட்டதும் நான் உண்மையை சொல்லி இருந்திருக்க கூடாது. சொல்லி இருக்கக் கூடாது… கூடவே கூடாது..” என்று வாய் விட்டு சத்தமாக சொல்லியபடி அவள் நெற்றியில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பலமாக அறைந்து கொண்டாள். 

தொடர்ந்து அறைந்ததில் அவளது நெற்றி சிவந்துவிட, அதை எல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் மலர் இல்லை! 

நெற்றி தீயாய் எரிந்ததையும் மீறி தொடர்ந்து பலமாக அறைந்து கொண்டே இருந்தவள், பணியாள் தன்னை பதட்டத்துடன் அழைத்ததையோ, அறைக்கதவினை பட்டென்று திறந்து கொண்டு வேகமாக வெளியே வந்த கிருஷ்ணாவையோ அவள் கவனிக்கவில்லை. 

“அண்ணி…” என்று பலமான சப்தத்துடன் அறைந்து கொண்டிருந்த தன் கையை கிருஷ்ணா பற்றியதும் தான் சுயநினைவிற்கே வந்தாள் தேன்மலர். 

அமர்ந்திருந்த நிலையில் தலையை உயர்த்தி கிருஷ்ணாவை காண நினைக்க, முடியாமல் விழிகளுக்கு திரையிட்டது அவளது கண்ணீர். 

கிருஷ்ணாவின் கண்களும் கலங்கிப் போனது. 

மலரின் நெற்றி சிவந்து சற்றே வீங்கி இருந்தது. 

பாரத்துடன் அதனைப் பார்த்த இளையவள் “ஏன் அண்ணி இப்படி பண்றீங்க?” என்று வேதனையுடன் கேட்டு விட்டு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி எடுத்து வந்தவள், சிவந்து கிடந்த மலரின் நெற்றியில் வைத்து அழுத்தி ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினாள். 

“நல்லா சிவந்து போச்சு அண்ணி. இப்படியா அடிச்சுப்பீங்க?” என்று அழுகையுடன் அதட்டிய இளையவள், தற்காலிகமாக மூத்தவளாகிப் போனாள்.

நெற்றியில் பதிந்த குளிர்ந்த கட்டிகள் துணியை மீறி நீராக உருக, மலரின் கண்ணீரும் உருகி வழிந்தது. 

அதற்கு மேல் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் தன் அண்ணியை தாவி அணைத்துக் கொண்டு வெடித்து அழுதாள் கிருஷ்ணரூபி. 

பணியாள் என்னவோ ஏதோ என்று கைகளை பிசைந்து கொண்டு அவர்களையே கலக்கத்துடன் பார்த்தபடி நிற்க, அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான் அமுதன். 

தாரத்தையும் தங்கையையும், அவர்களின் நிலையையும் உணர்ந்து, வீட்டினுள் இருந்த பணியாட்களை வெளியேற்றினான். 

வேக வேகமாக அவர்களை நெருங்கியவன், “மலர்.. கிருஷ்ணா..” என்றழைக்க, அவனது அழைப்பில் தான் பெண்கள் தன்னிலை அடைந்தனர். 

மலர் நெற்றியை கண்டு அமுதன் பதற, “நெத்தில பலமா அறைஞ்சுக்கிட்டாங்க ண்ணா..” என சிறு குழந்தை போல் கண்ணீர் சிந்திய தங்கையை ஒற்றைக் கை நீட்டி தன்னோடு அரவணைத்துக் கொண்டவன், மற்றொரு கையால் மனைவியின் நெற்றியை மெல்ல வருடிக் கொடுத்தான். 

வலியில் மலர் முனங்க, “ஏன் மலர் இப்படி?” என்று துயரத்துடன் அமுதன் கலங்க, அண்ணனின் தோளில் முகம் புதைத்த கிருஷ்ணா, கேவிக் கேவி அழுதாள். 

இருவரில் யாரை தேற்றுவது என்றே அவனுக்கு விளங்கவில்லை. 

“அண்ணி தான் எனக்காக குழந்தை வேண்டாம்னு முடிவை எடுத்தாங்கண்ணா நீயும் அதுக்கு ஓகே சொல்லிட்டியா ண்ணா..” எல்லையற்ற வேதனையை சுமந்து வந்தது கிருஷ்ணாவின் கேள்வி.

கணவன் மனைவி இருவராலும் அவளது கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. நெஞ்சம் கனத்துப் போனது. 

அவன் கைவளைவில் இருந்து பிரிந்தவள், அவனை தேன்மலரின் அருகில் அமர வைத்து, அவர்கள் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். 

“இந்த விஷயம்… உங்க தனிப்பட்ட முடிவு. உங்களோட பிரைவசி சம்பந்தப்பட்டது. ஆனா அதுல நானும் சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னால இதைப்பற்றி பேசாம இருக்க முடியாதுண்ணா. அதுவும் இந்த முடிவு.. எனக்காகன்ன போது நான் வெளிப்படையா பேசித் தான் ஆகணும்” என்று உறுதியாகக் கூறியவள், தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

இருவரின் கையையும் தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு “ஏன் இந்த முடிவை எடுத்தீங்க? எனக்காகவா? அப்படி என்ன நான் பண்ணேன்னு எனக்காக உங்க குழந்தைய இப்போதைக்கு வேண்டாம்னு தள்ளிப் போட்டீங்க?” கரகரத்த குரலில் வினவினாள். 

முகம் கசங்க மலரின் முகத்தை ஏறிட்டு “நீங்க என் மேல இவ்வளவு அன்பு வைக்கிறதுக்கு என்ன அண்ணி காரணம்.. எனக்காக.. இப்படி ஒரு முடிவு.. அதுவும் இரண்டரை வருஷமா.. இனியும் ரெண்டு வருஷம்… என்னால ஏத்துக்கவே முடியல அண்ணி..” என்றவள் கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்று.

“இத்தனை நாளும் உங்க அன்பு என்னை முழுமை ஆக்கியிருக்கு. அதை மனப்பூர்வமா உணர்ந்திருக்கேன். ஆனா.. இன்னைக்கு.. இந்த நிமிஷம்.. உங்க அன்பு என்னை மொத்தமா உடைச்சுப் போட்டிடுச்சு அண்ணி” என்று கதறியவள், “இந்த அன்புக்கு நான் தகுதியான ஆளான்னு கூடத் தெரியல” என்று சொல்லி அழ, அவளின் கண்ணீரை இருவராலும் ஜீரணிக்க இயலவில்லை. 

“எல்லாமே என்னால தான்ல. ஊர்க்காரங்க நம்ம சொந்தக்காரங்க எல்லாருமே உங்கள பாத்து ஏன் இன்னும் மாசமா இல்லைன்னு கேட்டு கஷ்டப் படுத்தினது என்னால தான். மங்கை அத்த வேண்டுதல் நிறைவேறாம இருக்கதுக்கும் நான் தான் காரணம். எல்லாத்துக்கும் மேல நம்ம வீட்டுல குழந்தை அழுகிற சத்தமும் சிரிக்கிற சத்தமும் கேட்காததுக்கு நான் தான் காரணம்…!” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து தோய்ந்து ஒலித்தது. 

அவளின் வார்த்தைகளில் கணவன் மனைவி இருவருமே நிலைகுலைந்து போயினர். 

“கிருஷ்ணா..” என்று இருவருமே அவளின் கைகளை இறுக பற்றிக் கொள்ள, “பேசாதீங்க! நீங்க ரெண்டு பேரும் எதுவுமே பேசாதீங்க. நான் பேசிடுறேன்” என்று ஒருவித பிடிவாதத்துடன் கூறியவளை அவர்களும் தடுக்கவில்லை. 

“என்னோட சின்ன வயசுல அம்மா என்னை ஒதுக்கி வச்சு கோபம் காட்டுனப்ப எல்லாம் நான் யோசிச்சிருக்கேன். 

நாம ஏன் அவங்களுக்கு பிறந்தோம்? பிறந்து ஏன் அவங்களோட இந்த வெறுப்ப சம்பாதிச்சோம்? அவங்களோட இந்த ஒதுக்கத்த அனுபவிக்கிறதுக்கு 

இந்த வீட்ல நாம பிறந்திருக்கவே வேண்டாமே. அவங்களும் நமக்கு பிறப்பு கொடுத்திருக்க வேண்டாமே.. அவங்க நினைச்ச மாதிரி கருலையே என்னை கொன்றுக்கலாமே..” என்றவளை முடிக்க விடாமல், 

“கிருஷ்ணா..” என்று அதட்டி இருந்தனர் மூத்தவர்கள் இருவரும். 

“நான் பேசிடுறேனே.. ப்ளீஸ்..” என்று கண்கள் சுருக்கிக் கெஞ்சியவள், மீண்டும் பேசத் துவங்கினாள். 

“அவுங்கள பொருத்தவரை அவுங்களுக்கு நாலு பிள்ளைங்க தான். நான் வேண்டாதவ. அவுங்க வேண்டாம கிடைச்சவ. வேண்டவே வேண்டாம்னு நினைச்சு அப்புறம் என்னை அழிக்க முடியாம, அன்பு, விருப்பம், பாசம், அட்லீஸ்ட்.. கடமை! இது எதுவுமே இல்லாம தான் என்னை சுமந்தாக. எதிர்பாராம உருவான குழந்தைன்றதாலையோ என்னவோ.. என் மேல அவுங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்புமே இல்ல. 

என்னால அந்த ஏஜ்ல அவுங்களுக்கும் சி செக்ஷன் பெயின்! கஷ்டம்! ஒரு கட்டத்துல எல்லாமே எனக்குப் பழகிடுச்சு. அண்ணா, அப்பா இல்லேன்னா என்னைக்கோ நான் இல்லாம போயிருப்பேன்” என்ற போது மலர் அவளை அணைத்துக் கொண்டாள். 

“எல்லாம் பழகினாலும், அண்ணா அன்பா இருந்தாலும், அப்பா பாசமா நடந்தாலும் அம்மா என்னை ஒதுக்கும் போது அந்த வலி.. அதோட காயம் என்னை ஒரு கூட்டுக்குள்ள சுருங்க வச்சது. அதனாலயே அளவா தான் பேசுவேன். ரொம்ப வாயாட மாட்டேன். அண்ணா கிட்ட மட்டும் தான் கொஞ்சம் உரிமை எடுத்து வேணும்கிறதை கேட்பேன். மத்தபடி யாரு கூடவும் அட்டாச் ஆனதே இல்ல. அதுக்கான சூழ்நிலைகளும் எனக்குக் கொடுக்கப் பட்டதில்ல. ஆனா.. ஆனா…” என்றவள், 

மலரின் அணைப்பில் இருந்து விலகி “நீங்க எனக்கு அண்ணியா வந்ததும் எல்லாமே மாற ஆரம்பிச்சது. நானே மாறி தான் இருக்கேன். அன்பு எதுவும் செய்யும்னு கேள்வி பட்டிருக்கேன். உங்க அன்பும் எனக்கு எல்லாமே செஞ்சிருக்கு அண்ணி. ஆனா இன்னைக்கு உங்க அன்ப எப்படி எந்த வகைல ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியல. எனக்காக ஏன் குழந்தை வேண்டாம்னு இருக்கீங்கன்னு கத்தி உங்க கிட்ட சண்டை போடணும் போல இருக்கு”

“அம்மா எனக்கு மட்டும் அம்மாவா இருக்க பிரியப்படாதப்ப நிறைய தடவை என் மேல நானே இரக்கப்பட்டிருக்கேன், நாம ரொம்ப துரதிஷ்டசாலின்னு. ஆனா, நீங்க அண்ணியா கிடைச்சதும் என்னை விட பாக்கியசாலி யாரும் இல்லேன்னு உணர்ந்திருக்கேன்” என்றவள் குரலில் மலரின் உன்னத அன்பை பரிபூரணமாக உணர்ந்ததன் நெகிழ்வு!! 

அதே சமயம் அந்த உன்னத அன்பினால் அவர்களின் குழந்தை வரத்தை தள்ளிப் போட்டதை எண்ணி வருத்தம், வேதனை, துன்பம்,கோபம், குற்ற உணர்வு, என பல கலவையான உணர்வலைகள் அவளுள். 

மலரின் இத்தகைய அன்பை இத்தனை நாட்களும் பரிபூரணமாக ஏற்க முடிந்தவளால், இந்த நொடி அவ்வன்பினை கையாளத் தெரியவில்லை!   

இக்கணம் அவளுக்கான அன்பின் கனம் அவளுக்குள் பெரும் உணர்வுப் போர்க்களத்தை ஏற்படுத்தி இருந்தது! 

என் மேல் கொண்ட அன்பால், எல்லோரும் அன்பு செலுத்த காத்திருக்கும் சின்னஞ்சிறு மழலையின் வரவு தாமதமாகி உள்ளதை எண்ணி கிருஷ்ணாவின் உள்ளம் உடைந்திருந்தது. 

“ஒரு காலத்துல நான் பிறந்திருக்கவே வேண்டாம்னு வேதனைப் பட்டிருக்கிறேன். ஆனா இப்ப என்னால உங்க குழந்தை இன்னும் பிறக்கலயேன்னு வேதனை படுறேன்” என்று கனத்த குரலில் கூறியவள், 

கண்ணீர் மல்க இருவரையும் நிமிர்ந்து பார்த்து “உங்க ரெண்டு பேரு ஜாடைலயும் ஒரு குழந்தை என் மனசுக்குள்ள இப்பவும் பதிஞ்சு இருக்கு. அண்ணா அண்ணியோட குழந்தை பிறந்தா அவுங்களை எப்படி தூக்கி பாத்துக்கணும்றதுல இருந்து, கொஞ்சனும்ற வரைக்கும் எனக்குள்ள அவ்ளோ ஆசை, ஆவல். ஆனா, இப்ப.. கற்பனையா எனக்குள்ள உருவான உங்க குழந்தை, உன்னால தான் அத்த நான் இன்னும் பிறக்கலன்னு அழற மாதிரி இருக்கு. என்னால தாங்க முடியலண்ணா” என்று தன் மடி சாய்ந்தவளின் வார்த்தைகள் கணவன் மனைவி இருவரின் இதயத்தை முற்றிலும் சிதைத்து போட்டது. 

அதுவும் அவள் சொன்ன இறுதி வரியில் இருவரின் கண்ணிலும் கண்ணீர் பெருகியது. 

மௌனமான கணங்கள் கனத்துடன் நகர, “எனக்காக எடுத்த இந்த முடிவை, எனக்காகவே இப்ப மாத்திக்கங்க அண்ணி. உங்க குழந்தையை தள்ளிப் போட்டு உங்க கிருஷ்ணா மேல நீங்க அன்பு காட்ட வேண்டாம். அந்த அன்பை என்னால முழுசா அனுபவிக்க முடியாது” என்றவள் கலங்கி இருந்த அவர்களின் முகத்தை கண்டு, 

“எனக்கு கொடுக்கிற அபரிமிதமான இதே அன்பை என்னோட அண்ணியும் அண்ணாவும் அவுங்க குழந்தைக்கும் கொடுப்பாங்க. அப்போ உங்க குழந்தையோட குழந்தையா நானும் உங்க அன்பை முழுசா அனுபவிப்பேன். அதனால இந்த முடிவு இனி வேண்டாம் ப்ளீஸ்” பேரன்பின் வேண்டுகோள் அவளிடம்! 

பகிர்தலே அன்பின் அழகியல்!!

பெறுதலே அன்பின் வளர்தல்!! 

மலர் கிருஷ்ணாவிடம் பகிர்ந்த அன்பு, பேரன்பாகப் பெருகி வளர்ந்தோங்கி இருக்க, 

அந்த நிலை என்றும் மாறாது எனும் உள்ளார்ந்த அன்புடன் தங்களின் கிருஷ்ணாவை இறுக அணைத்துக் கொண்டவர்கள் ஒற்றை தலை அசைப்பில் தங்களின் குழந்தை வரவிற்கு இனி தடை இல்லை என்பதை உணர்த்தினர். 

அன்பின் வசம் அனைத்தும் சாத்தியமே!  

 

error: Content is protected !!
Scroll to Top