மலர் பாதம் பணிந்து – 40(4)
அமுதன் அதை கவனித்தாலும் அவன் மனம் மாறும் சமயத்திற்காக காத்திருந்தான்.
அதற்கு முன்னரே இரண்டு வாரங்கள் வீடு வராமல் இருக்கும் கணவனின் செயலில் தேன்மலர் ஏகத்திற்கும் கோபமாகி அமுதனிடம் பேசுவதையே நிறுத்தி இருக்க, அதற்கு மேல் அமுதனால் அங்கு இருக்க முடியவில்லை.
மனைவியை பார்த்தே ஆக வேண்டும் என்றவன் திவாகரனை நந்தன் வசம் ஒப்படைத்து விட்டு
மறு நாள் கிளம்பி இருந்தான்.
திவாகரனிடமும் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.
“மலர் என்னை ரொம்ப தேடுறா. நான் போய் ஆகணும். ரெண்டு நாள்ல திரும்ப வந்துடுவேன்னு தான் நினைக்கிறேன்” என்றவன்,
“உங்களுக்கு வழக்கம் போல சாப்பாடு, தண்ணி, நீங்க குடிக்கிற தண்ணி எல்லாமே வந்து சேரும். நல்லா குடிங்க. ஒரு வேளை அபூர்வ விதமா உங்க மனசு மாறுச்சுன்னா எனக்கு கால் பண்ணுங்க. உங்க ட்ரீட்மென்ட்க்கு எல்லாம் ரெடியா தான் இருக்கு. உடனே போய் அட்மிட் ஆயிடுவீங்களாம்” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அமுதன் சென்றதும் திவாகரனுக்கு என்னவோ போல் இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் காலையும் இரவும் மட்டுமே குடித்தான். அதுவும் இரண்டு அல்லது மூன்று கோப்பை!
மூன்றாம் நாள் அமுதனை அவன் எதிர்பார்க்க, ஆனால் வந்ததோ நந்தன்.
அமுதன் எங்கே என்று கேட்டதற்கு அவன் விபத்திற்கு உள்ளாகியதைப் பற்றி நந்தன் கூறியதும் திவாகரன் முற்றிலும் சிதைந்து போனான்.
என்னவோ மனம் உடைந்து விட்ட நிலை!
தன்னை மாற்ற வேண்டும் என்பதற்காக திருமணம் ஆன சிறிது நாட்களிலேயே தங்கையை பிரிந்து முழுதாக இரண்டு வாரங்கள் ஏற்காட்டிலேயே தங்கி இருந்தவனை நினைத்து மனம் வருந்தியது.
தன்னால் தான் அவனுக்கு இப்படி ஆகி விட்டது என குற்ற உணர்வு வேறு அவனை ஆட்டிப் படைக்க, அதனுடன் சேர்த்து இத்தனை நாட்கள் மனைவி, குழந்தை, பெற்ற தாய், உடன் பிறந்த தங்கை என யாரின் வார்த்தைகளையும் மதிக்காமல் அவர்களின் கண்ணீரை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் தன் போக்கிற்கு குடித்துவிட்டு திரிந்ததை எண்ணி மேலும் குற்ற உணர்வு பெறுகியது அவனுக்கு.
அன்று இரவு மூன்று கோப்பை மதுவை அருந்தியவன் அதன் பின்னர் அமுதனைப் போலவே தானே அந்த மது பாட்டில்களை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு அதனை சுத்தம் செய்தும் விட்டான்.
திவாகரனின் செய்கையை நந்தன் அமுதனிடம் தெரியப்படுத்த, அவன் மனம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எண்ணிக் கொண்டான் அமுதன்.
அமுதன் திரும்பி வரும் வரை மது பாட்டில்களை அடித்து நொறுக்கி சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தான் திவாகரன்.
ஏனோ அந்த செயல் அவனை கட்டுக்குள் வைத்திருப்பது போல் ஒரு நம்பிக்கை! எனவே, அதைச் செய்தான்.
கிருஷ்ணா மற்றும் மலரை ஏற்காடு அழைத்துக் கொண்டு வந்த அமுதன், மற்றொரு ரிசார்ட்டில் அவர்களுக்கான அறையில் அவர்களை இருக்கச் செய்து விட்டு திவாகரனை வந்து பார்த்தான்.
அவன் வரும்பொழுது திவாகரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, நந்தன் அமுதனிடம் “இந்த ரெண்டு நாளா ஆள் ஒரே ஒரு பாட்டில் மட்டும் போதும்னு சொல்லிட்டாரு. அதுவும் நைட் மட்டும்தான் மச்சான் குடிக்கிறாரு. அதுவும் குடிச்சுட்டு நீ பண்ற மாதிரியே பாட்டிலை உடைச்சு அது அவரே க்ளீன் பண்ணிடுவாரு” என்று கூற,
“சீக்கிரம் ட்ரீட்மென்ட்கு அவரை அட்மிட் பண்றது நல்லது நந்தா..” என்ற அமுதனை கண் விழித்துப் பார்த்த திவாகரன் வேகமாக அவனை மேலிருந்து கீழ் வரை பார்வையால் ஆராய்ந்து “ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு நந்தன் சொன்னாரு. எப்படி மாப்பிள்ளை இருக்கீங்க..?” என்று பதற்றமான குரலில் வினவினான்.
உளறல் தன்மை இல்லாது தெளிவாகப் பேசியவனை அமுதன் விழி விரித்துப் பார்த்தது நிஜம்!
அதை உணர்ந்த திவாகரன் “நைட் மட்டும் ரெண்டு பெக் எடுத்துக்கிறேன் அமுதன். அதுக்கு மேல குடிக்க மனசு வரல” என்றான் மெல்லிய குரலில்.
அவன் தெளிவாகப் பேசினாலும் அவன் கைகள் மெல்லிய நடுக்கத்துடன் தென்பட்டது. தூக்கமின்மையின் காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையும் உண்டாகி இருந்தது. விழிகளும் சிவந்து கிடக்க, தலைவலி, காய்ச்சல் என்று கிடந்தான் திவாகரன்.
“ஃபீவர் வேற வந்திருக்கு. ஏன் சொல்லல..?” என்று அமுதன் கடிந்து கேட்க,
“என்னால மேனேஜ் பண்ண முடிஞ்சது. அதான்.” என்றான் தலை கவிழ்ந்தபடி. அவனை முறைத்து விட்டு மருத்துவரை தொடர்பு கொண்டு அவனது உடல் நிலை பற்றி தெளிவாகக் கூறினான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட மருத்துவர் “அவர் குடியை கண்ட்ரோல் பண்ணதால தான் அமுதன் இதெல்லாம். அண்ட் இட்ஸ் காமன். ஆனா, சிவியர் சிம்ப்டம்ஸ் வரதுக்கு முன்னாடி அவரை நீங்க அட்மிட் பண்றது நல்லது” என்று கூறி இருந்தார்.
அவரிடம் பேசி விட்டு யோசனையுடன் வந்த நண்பனிடம், “டாக்டர் என்ன சொல்றாங்க அமுதா?” என்று நந்தன் கேட்க,
“உடனே அட்மிட் பண்றது நல்லதுன்னு சொல்றாங்க” என்றான் திவாகரனை பார்த்தபடி.
“போகலாம் மாப்பிள்ளை. ட்ரீட்மென்ட் எடுத்துக்க எனக்கு சம்மதம்” என்ற திவாகரனின் வார்த்தைகளில் அமுதனுக்கு நம்ப முடியாத திகைப்பும், மகிழ்வும் ஒருங்கே பிறந்தது.
“நிஜமாவா சொல்றீங்க?” என்றவன் வியப்போடு கேட்க,
“நிஜமாதான் சொல்றேன். என்னை அட்மிட் பண்ணிடுங்க” என்றான்.
அதற்கு மேல் அமுதன் தாமதிக்கவில்லை. சேலத்தில் இருக்கும் மறுவாழ்வு மையத்தை அணுகி திவாகரனை அனுமதிக்க எல்லாம் ஏற்பாடுகளையும் செய்தான்.
“நானே இப்ப கொண்டு வந்து உங்களை சேலத்துல விடுறேன்” என்றவனிடம்,
“இல்ல வேண்டாம். நீங்க தேனு கூட வந்திருக்கிறதா நந்தன் சொன்னாரு. நீங்க சந்தோஷமா இருங்க. வேற யாரையாவது கொண்டு போய் விட சொல்லுங்க” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாலும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டான் அமுதன்.
அவனை நந்தனுடனே சேலத்திற்கு அனுப்பியவன், தந்தைக்கு அழைத்து மகிழ்வுடன் விஷயத்தைப் பகிர்ந்தான்.
“அப்பா நந்தன் கூட போனாலும் ரிலேடிவ் யாராவது இருக்கணும்னு சொல்லி இருக்காங்கப்பா நீங்க போறீங்களா..?” என்று அமுதன் கேட்க, இன்பசேகரனும்
மறுப்பின்றி ஒப்புக்கொண்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக அவனது சிகிச்சையும் நல்ல முறையில் நடந்து வருகிறது.
இப்போது வரை திவாகரனின் ஒத்துழைப்பு முழு வீச்சில் இருப்பதனால் அறுபது சதவீதம் நன்றாகவே மீண்டிருந்தான்!!
இன்னும் ஒரு மாதம் முழுவதும் சிகிச்சை இருக்கும் நிலையில், திவாகரன் எந்த வித உடல் நல பாதிப்பும் இல்லாமல் தேறி வந்து விட்டான் என்றால் அடுத்த மாதம் மட்டும் சிகிச்சை போதும்.
ஆனால், குடியை நிறுத்தியதன் விளைவாக உண்டாகும் உடல் நலக் குறைபாடுகள் தொடர்ந்தால் மேலும் மூன்று மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி இருந்தார்!
எல்லாவற்றையும் அமுதகீதன் கூறி முடித்ததும் வசுந்தலா, கிருஷ்ணரூபி, மங்கை உட்பட வார்த்தைகளற்று மௌனமாக அவனையே பார்த்திருந்தனர்.
ஆனால், அமுதனின் பார்வை அவனது மலரிடம்!
மலரோ கண்ணீரை மறைத்த கண்களுடன் திக் பிரம்மை பிடித்தவள் போல் கணவனைப் பார்த்திருந்தாள்.
சொல்ல முடியாத, சொல்ல தெரியாத, சொல்ல விடாத உணர்வொன்று உள்ளத்தை பெருங்காதலுடன் மூழ்கடித்து மூர்ச்சையாக்கியது!
‘இடம் பொருள் ஏவல்’ இவை மூன்றும் அவ்வுணர்வை அவளுக்குள் இருந்து வெளி வர விடாமல் அணை போட,
கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அதன் பின்னர் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
பேரமைதியின் மௌனக்குரல் மட்டுமே மனதை வியாபித்திருக்க,
கண்களை மூடி அண்ணியும் குழந்தையும் நல்லபடியாக உயிர் பிழைத்து வர வேண்டும் என்று வேண்டத் துவங்கினாள்.
அனைத்தையும் அறிந்து கொண்ட பின் மனைவியின் மௌனம் அமுதனை கலங்க வைத்தாலும், கவியின் நிலைமை சீராகும் வரை மனைவியிடம் எந்த எதிரொலியையும் எதிர் பார்க்க வேண்டாம் என்று தானும் இருவரின் நலத்திற்காக வேண்டிக் கொண்டான்!