மலர் பாதம் பணிந்து – 41
கவியின் அறுவை சிகிச்சை முடிந்து முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் கடந்திருக்க, மருத்துவர் கூறும் அந்த ஒரு நேர்மறையான, நல்ல செய்தியை தாங்கிய வரிகளுக்காக ஒட்டு மொத்த குடும்பமும் தவமிருந்தனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
கோகுலன் உயிருக்கு ஆபத்தல்ல என்று நேற்றே கூறி விட்டிருந்தனர். கவியின் நிலைக்கு தான் இன்னமும் மருத்துவர் குழுவிடமிருந்து பதில் வந்திருக்கவில்லை.
நேற்று கவியின் பெற்றோருக்கு அழைத்து தகவல் கூறப்பட்டிருக்க, அவர்களும் கண்ணீரும் பதட்டமுமாக வந்து சேர்ந்திருந்தனர்.
அங்கே திவாகரனை கண்டதும் கட்டுக்கடங்காத கோபத்தில் கவியின் தந்தை அவனின் சட்டையை கொத்தாக பிடித்து விட, அவரைத் தடுத்து அவனின் மாற்றத்தை கூறி, அவர்களை சமாதானப் படுத்துவதற்குள் ஒரு வழி ஆகி இருந்தனர் அமுதனும் இன்பசேகரனும்.
ஐ.சி.யூ.வின் வாசலில் எல்லோரும் கலங்கிப் போன தோற்றத்துடன் அமர்ந்திருக்க, உள்ளே சென்ற மருத்துவர் கவியை முழுதாக பரிசோதித்து விட்டு வெளியே வந்தார்.
பரபரப்புடன் எல்லோரும் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்க, அனைவரையும் புன்னகையுடன் பார்த்த மருத்துவர்,
“பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டாங்க. ஷீ இஸ் ஃபைன்!” என்று சொல்லியதும், “கடவுளே…” என மங்கை கை கூப்பி கண்ணீரால் தெய்வத்திற்கு நன்றியுரைக்க, உணர்சி வசத்தில் உதடுகள் நடுங்க, உடல் உதற “அண்ணிக்கு இனி எதுவும் இல்ல தானே..” என்று மருத்துவரிடமே சிறுமி போல் கேட்டாள் தேன்மலர்.
புன்னகையுடன் தலை அசைத்த மருத்துவர், “மூணு மாசம் அவுங்க கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். அப்ப தான் சீக்கிரம் ரெக்கவர் ஆவங்க!” என்று கூறியதுடன்,
“அவுங்க கண் முழிச்சதும் ஒவ்வொருத்தரா போய் பாருங்க” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
எல்லோரும் ஆசுவாச மூச்சுடன் கை கூப்பியபடி இருக்கையில் அமர, திவாகரன் மட்டும் ஐ.சி.யூ வாயிலில் நின்று கதவின் வட்ட இடைவெளி வழியே மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு தலையில் கட்டுடன் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனைவியை பார்த்தான்.
கண்ணில் நீர் தேங்கி நிற்க, “கவி..” என்றவனின் உடைந்த குரல் அங்கிருந்த எல்லோரையும் கலங்க வைப்பதாக இருந்தது.
அவனின் தோள் தொட்ட அமுதன் “வீட்டுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க மாமா. ரெண்டு நாளா இங்கேயே இருக்கீங்க” என்றபோது,
“இல்ல. கவி கண் முழிச்சதும் அவளை பாத்திட்டு அப்புறமே நான் வரேன்” என்று உறுதியாக மறுத்து விட்டான்.
அவனது மன நிலை புரிய, தந்தை, தாய் மற்றும் தங்கையை இல்லத்திற்கு அனுப்பி வைத்தவன், மற்ற அனைவருக்கும் உணவினை வாங்கி வந்தான்.
இரண்டு நாட்களாக அவனது வற்புறுத்தலில் பழச்சாறும் காபியும் இரண்டு வாய் உணவையும் மட்டுமே உட்கொண்டிருந்த மனைவியின் அருகே வந்தவன்,
“சாப்பிடு மலர்..” என்ற போது மறுக்காமல் உண்டவளின் தொடர் அமைதி மனதை என்னவோ செய்தாலும் அமுதன் எதையும் பேசவில்லை.
இரண்டு நாட்களாக எவ்வளவு போராடியும் உணவை உண்ண மறுத்தவள் இப்போது உண்டதே போதும் என்று இருந்தது அவனுக்கு.
மதியம் நெருங்கியதும் செவிலி வந்து கவி விழித்து விட்டாள் என்று சொல்லியதும், கவியின் பெற்றோர், திவாகரன், தேன்மலர், மங்கை என எல்லோரும் அவளைக் காண பரபரக்க,
“ஒவ்வொருத்தரா போய் பாத்துட்டு வாங்க. ஆனா, உடனே வந்திடனும்”என்ற கட்டளையோடு செவிலி நகர, கவியின் பெற்றோர் முதலில் சென்று மகளைப் பார்த்து விட்டு கண்ணீருடன் வெளியே வந்தனர்.
அடுத்து திவா செல்லட்டும் என தேன்மலர் நிற்க,
“நீ போய் பாத்துட்டு பார்த்திட்டு வா தேனு” என்று கூறிய அண்ணனை திகைத்து விழி விரித்து பார்த்தாலும், தனக்கு இன்னொரு தாயாக விளங்கியவளை காண மனம் உந்த, எந்த யோசனையுமின்றி, ஐ.சி.யூ.வினுள் சென்றாள் தேன்மலர்.
உடலில் ஆங்காங்கே மருத்துவ உபகரணங்கள் பொருத்தி, அறுவை சிகிச்சைக்கென தலைமுடி நீக்கப்பட்டு, பெரிய கட்டுடன், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு என முற்றிலும் சிதைந்து போய் இருக்கும் அண்ணியை கண்டவளால் வெடித்து கிளம்பும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இரு கரம் கொண்டு வாயைப் பொத்தி பெரும் கேவலை அடக்கியவளை, சோர்ந்த விழிகளுடன் கவியும் ஏறிட, அவள் விழிகளிலும் கசிந்தது கண்ணீர்.
உணர்ச்சி மிகுந்த தருணங்கள்! அதனைக் கடக்க வேண்டிய நிர்பந்தம்!
அழுது அவளை மேலும் சிரமப் படுத்தக் கூடாது எனும் நிதர்சனம்! என எல்லாம் தேன்மலரை கட்டுக்குள் கொண்டு வர, மெல்ல அடி எடுத்து வைத்து கவியின் விரல்களைப் பற்றிக் கொண்டவள்
கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவளை ஏறிட்டு,
“ரொம்ப பயந்துட்டேன் அண்ணி..” என்றாள் குரல் தழுதழுக்க.
விழிகளால் அவளை தேற்றிய கவி, என்னவோ கேட்க முயற்சிக்க, “இல்ல.. எதுவும் பேசாதீங்க. ஸ்ட்ரெஸ் பண்ணிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்” என்றவள்,
அவளின் விழிகளில் தென்பட்ட பரிதவிப்பில் தாய்க்கான உணர்வினை புரிந்து கொண்டு,
“கோகுலுக்கு ஒன்னும் இல்ல அண்ணி. அவன் நல்லா இருக்கான்” என்றதும் கவியின் விழிகளில் பரிதவிப்பு அடங்கியது.
“உங்கள அண்ணா பார்க்கணும்னு வெளிய நிக்கிறான். நான் போய் அவனை வர சொல்றேன்” என்றதும் மீண்டும் கவியின் கண்களில் பரிதவிப்பு.
“ஷ்ஷ்… எல்லாம் தெரியும் அண்ணி எனக்கு. கீதன் சொல்லிட்டார்” என்றவள், கண்ணீருடன் அவளது கையை மென்மையாய் வரடி கொடுத்து
“நான் போய் திவாவை வரச் சொல்றேன்” என்று விட்டு வெளியேறினாள்.
தங்கை வந்ததும் அன்னையின் பக்கம் திரும்பிய திவாகரன் “அடுத்து நீங்க போய் பாத்துட்டு வாங்கமா” என்றான் குரலில் தடுமாற்றத்துடன்.
“நீயே போய் பார். நீ வர்றேன்னு தான் அண்ணிக்கிட்ட சொல்லி இருக்கேன்” என்ற தங்கையின் வார்த்தைகளில் அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல், தலை குனிந்தவன் “இல்ல. தேனு. அம்மாவே போய் பார்க்கட்டும். எனக்கு… எனக்கு பயமா இருக்கு. எந்த முகத்த வச்சுட்டு நான் அவளை போய் பார்ப்பேன்” என்றான் கண்ணீருடன்.
“இந்த நிமிஷம் நீ இப்படிப் பேசுறதுல எந்த அர்த்தமும் இல்ல. போய்ப் பார். அண்ணா வரான்னு தான் நான் அண்ணி கிட்ட சொல்லிட்டு வந்தேன். அவங்களும் மறுத்து எதுவும் சொல்லல. அதிலேயே புரிஞ்சுகிட்டேன் அவங்களும் உன்ன பாக்கணும்னு நினைக்கிறாங்கன்னு. போய் பார்” என்றவள் அழுத்தமாக சொல்லவும், தங்கையின் சொல்லைத் தட்ட முடியாமல் உள்ளே சென்றான் திவாகரன்.
மங்கை கண்ணீருடன் மகளைப் பார்த்து “கவி எப்படி இருக்கா..? ஏதாவது பேசினாளா” என்று கேட்க,
இல்லை என தலையசைத்தவள் “கண் முழிச்சு பார்த்தாங்கமா. அவங்களால பேச முடியல” என்றவள், தாயின் அழுகையை கண்டிப்புடன் நோக்கி “அண்ணி முன்னாடி போய் அழுதுட்டு இருக்காதீங்க” என்றாள் தான் அழுததை மறந்து.
மங்கை ஆமோதிப்பாய் தலையசைத்தாலும் கண்ணீர் நின்றபாடில்லை.
உள்ளே நுழைந்த கணவனின் உயிரில்லாத முகத்தையும், தள்ளாட்டம் இல்லாத நடையையும், தாடியில்லாத தெளிந்த முகத்தையும்,
நடுக்கம் கொண்ட தேகத்தையும் கண்டவளுக்கு நெஞ்சின் ஓரம் சிறு நிம்மதி பரவ, அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் கண்களை மூடியதும், முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடுங்கும் தன் விரல்களால் அவளின் விரல்களை பற்றிக் கொண்டவன் “பத்திரமா திரும்பி வா கவி. இனி எப்பவும் உனக்காக நான் இருப்பேன்” என்றவன் குரலில் இருந்த உண்மையும், அன்பும், அதையும் மீறி தென்பட்ட குற்ற உணர்வும் கவியின் கண்களில் கண்ணீரை பொழிய வைத்தது.
மற்றொரு கையால் அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன், “நான் போய் அம்மாவை வர சொல்றேன்..” என்று எழுந்த போது பற்றிய அவன் கையை விடாமல் இருந்தாள் கவிரத்னா.
திவாகரன் நம்ப முடியாது திகைத்து விழித்தாலும், பெருகிய கண்ணீருடன் அவளின் கரத்தை தன் முகத்தோடு வைத்து அழுத்திக் கொண்டவன், “எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடு கவி. இனி சத்தியமா அந்தக் கருமத்தை தொட மாட்டேன். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். உன்னையும், கோகுலையும் இனி நல்லா பாத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா, நீங்க ரெண்டு பேருமே இப்ப இப்படி…” என்றவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
முதுகு குலுங்க அழுது கரைந்தான்.
நொடிகள் கடக்க, “இனி நான் எப்பவும் உன் கூட உனக்குத் துணையா இருப்பேன் கவி. நீ இனி அழாத” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டவன், கட்டுப் போடப்படாத அவளின் நெற்றியில் நடுங்கும் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
பட்டென்று விழி விரித்த கவி கணவனின் கையை மேலும் இறுக பற்றிக் கொள்ள, “நான் போய் அம்மாவ வர சொல்றேன் கவி” என்று விட்டு வெளியேறினான்.
தெளிந்த முகத்துடன் வெளியே வந்த திவாகரனை கண்ட அமுதனுக்கும் மலருக்கும் மனம் நிறைந்து இருந்தது.
சிறிது நேரத்தில் இன்பசேகரனும் வசந்தலாவும் வந்துவிட, “அமுதா நீயும் மலரும் வீட்டுக்கு போங்கப்பா. ரெண்டு நாள் தூக்கம் இல்லாம இருக்கீங்க. தூங்கி எழுந்து நாளைக்கு காலைல வாங்க. இங்க நாங்க பாத்துக்கிறோம்” என்றார் இன்பசேகரன்.
அமுதனும் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர, தங்கள் அறைக்குச் செல்வதற்கு முன் கிருஷ்ணாவின் அறையை எட்டிப் பார்த்தாள் தேன்மலர்.
நன்கு அசந்து துயில் கொண்டிருந்தாள் கிருஷ்ணா. அவளும் இரண்டு நாட்களாக மருத்துவமனை இல்லம் என அலைந்து திரிந்ததில் வெகுவாக சோர்ந்திருந்தாள்.
இந்த இரண்டு நாட்களாக தன்னைத் தாயாக அரவணைத்து, தான் அழுத போது அழுது, தனக்கு ஆறுதல் அளித்து, தைரியம் கூறிய கிருஷ்ணாவை எண்ணி மெல்லிய புன்னகையுடன் அவளின் தலை கோதி “என் கிருஷ்ணா வளந்துட்டா..” என்றவள், அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்தி விட்டு, அறையின் வெப்பத்தை உணர்ந்து குளிர் சாதனத்தை உயிர்ப்பித்து வைத்து விட்டு எழுந்து வெளியே வர, அறையின் வாசலில் தான் அமுதன் நின்றிருந்தான்.
மௌனமாக அவனைக் கடந்து மாடிப் படிகளில் ஏறியவளை பெரு மூச்சுடன் நோக்கிய அமுதனும் மௌனமாக பின் தொடர்ந்தான்.
இருவரும் குளித்து வரும் வரையிலும் அவர்களுக்கும் நீளமான மௌனம் நீண்டிருக்க, அதை உடைத்தெறிய வேண்டும் எனும் வேகத்துடன், உடை மாற்றி வந்த மனைவியை கட்டிலில் அமர வைத்து, தானும் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“மலர்…” என்றவன் அழைத்ததும்,
அழுகைக்கு தயாராகிறாள் என்பதை சொல்லும் வகையில் நாசி சிவந்து, உதடு கடித்து, முகத்தை மெல்ல திருப்பிக் கொண்டாள் தேன்மலர்.
“மலர்…” என்றான் மீண்டும்.
அவளின் கண்கள் கண்ணீரை ஏந்திக் கொள்ள, அடுத்த நொடி யோசிக்காமல் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் அமுதகீதன்.
அதற்கு மேல் தன்னுணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழுதாள் தேன்மலர்.
அழுகைக்கு இடையே அவன் மார்பில் வலிக்காத வண்ணம் மெல்லிய அடிகளை வைத்து “ஏன் என் கிட்ட எதையுமே சொல்லல.. ஏன்.. ஏன்..” என்று கேட்டுக் கேட்டு அழுதாள்.
“ஷ்ஷ்… அழாத மலர்..” என்றவன் சமாதானங்கள் எல்லாம் எடுபடவே இல்லை.
அழுகை ஓய்ந்து சிவந்து வீங்கிய முகத்துடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “இவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்கீங்க! ஆனா, என் கிட்ட சொல்லாம..” என்றவளுக்கு ஆற்றாமை பொங்கியது.
அதை உணர்ந்தவன் தன் விளக்கத்தை கொடுக்க முன் வர, அவன் வாயில் கரம் வைத்து தடுத்தவள், “காரணம் சொல்லாதீங்க. எனக்கே தெரியும். எங்க உங்களாலையும் அவன திருத்த முடியலன்னா நான் இன்னும் கஷ்டப்படுவேன்னு தானே சொல்லல..” என்றவளை புன்னகையோடு பார்த்தவன் ஆமோதிப்பாக தலையசைக்க,
“அதுக்காக என் கிட்ட சொல்லாம விடுவீங்களா..” என்றவள், பெருகிய கண்ணீருடன் அவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி “நீங்க எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க தெரியுமா கீதன்..? தள்ளாடாம ஒழுங்கா நின்ன என் அண்ணனைப் பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. நீங்க சொல்லலேன்னா இன்னும் அவனை போட்டு அடிச்சிருப்பேன்” என்றாள் மெல்லிய குரலில்.
புன்னகையுடன் தன்னையே பார்த்திருந்தவனின் அன்பில் உள்ளம் நெகிழ, அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்தவள், வேறு எதுவும் பேசாமல் அவன் நெற்றியோடு தன் நெற்றியை வைத்து அழுத்திக் கொண்டாள்.
இரண்டு நாட்களாக அவள் பட்ட வேதனையை கண் கூடாக பார்த்தவன் அவளின் தலை கோதி, “தூங்கு மலர்” ஆதூரமான குரலில் கூறி, அவளோடு தானும் படுத்து விட்டான்.
நிம்மதியுடன் கணவனின் மார்பில் சாய்ந்து கண் மூடியவள் அடுத்த நொடி உறங்கி இருக்க, அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டு தானும் கண் மூடினான் அமுதகீதன்.
********************
ஏகப்பட்ட அறிவுரைகளும், மருந்துகளும், தொடர்ந்து செக்கப் வர வேண்டும் எனும் சில பல அறிவுறுத்தல்களுடன் இரண்டு வாரங்கள் கழித்து கவிரத்னாவை டிஸ்சார்ஜ் செய்திருந்தனர் மருத்துவர்கள்.
கோகுலன் காயங்களுக்கு தொடர்ந்து டிரெஸ்ஸிங் செய்ய வேண்டும் என வாரம் ஒரு முறை மருத்துவமனை வரச் சொல்லி இருந்தனர்.
கவி கண் விழித்த இரண்டாம் நாளே திவாகரன் சிகிச்சைக்கு திரும்பி இருந்தான். தொடர் சிகிச்சை அவசியம் என மருத்துவர் வலியுறுத்தி இருக்க, அவன் உடனே திரும்ப வேண்டிய கட்டாயம்.
செல்ல மனமே இல்லாமல் இருந்தவனை “முதல்ல ஒழுங்கா போய் டிரீட்மென்ட் முடிச்சிட்டு வா. நாங்க அண்ணியும் கோகுலனையும் பார்த்துகிறோம்” என்று அதட்டி மிரட்டி அவனை அனுப்பி வைத்திருப்பது தேன்மலரன்றி வேறு யாராக இருக்க முடியும்?
மங்கையும், கவியின் அன்னையும் கவியை நன்றாக சிரத்தை எடுத்து கவனித்துக் கொண்டாலும் தேன்மலருக்கு தானும் உடன் இருந்து அண்ணியை கவனிக்க வேண்டும் என்கிற அக்கறை, அவளை தொடர் விடுமுறைகளை எடுக்க வைத்தது.
ஒரு மாதம் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் விடுமுறை எடுத்து தாய் வீட்டிலேயே இருந்து கொண்டாள்.
“அம்மாவும் அத்தையும் இருக்காங்க தானே தேனு.. நீ ஆஃபிஸ் போ” என்று கவி சொல்லியதை அவள் கேட்க வேண்டுமே?
“அம்மா வீடே கதின்னு புருஷனை மறந்துட்ட மலர்..” என்று அமுதன் கிண்டல் செய்யும் நேரங்களில், “ரிசார்ட்டே கதின்னு நாலு நாள் முன்னாடி நீங்க கிளம்பி போய்ட்டீங்க தானே! நான் ஏதாவது சொன்னேனா? இப்பகூட நான் தான் உங்களுக்கு கால் பண்ணி பேசுறேன் மிஸ்டர். மலர்தாசன்” என்றவள் மூச்சு விடாமல் பேசியதும் அமுதன் அதற்கு மேல் பேசுவானா?
“தெரியாம சொல்லிட்டேன்..” என்று கையெடுத்து கும்பிடாத குறையாக நழுவி விட்டான்.
மேலும் ஒரு மாதம் இது போலவே கழிந்து விட, திவாகரன் சிகிச்சை முடிந்து முற்றும் முழுதும் புது மனிதனாகவே மாறி வந்திருந்தான்.
வந்தவன் கவியை முழுதாக கவனித்துக் கொள்ள ஆரம்பிக்க, கவி தடுக்காத பட்சத்தில் அவனை யாரும் தடுக்கவில்லை. கவி தன்னை கவனித்துக் கொள்பவனை தடுக்கவில்லை என்றாலும், அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
திவாகரனும் மனைவி தன்னுடன் இணங்கி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தனை நாட்கள் அவன் இருந்த லட்சணத்திற்கு மனைவி என்று தன்னை மன்னித்து, மனதார பேசுகிறாளோ அன்றே பேசட்டும் என்று மௌனமாக இருந்து கொண்டான்.
கோகுலன் மட்டும் திவாவிடம் செல்ல மறுத்தான்.
“நோ.. அப்பா கிட்ட பேட் ஸ்மெல்.. எனக்கு வாமிட் வரும். நான் அப்பாட்ட போக மாட்டேன்” என்று அடம் பிடிக்கும் குழந்தையிடம் அப்பா மாறி விட்டார் என்று எவ்வளவு சமாதானம் கூறியும் அவன் கேட்க மறுக்க, அதனை காணும் போது திவாகரனுக்கு நெஞ்சம் நொறுங்கினாலும் “விடுங்கமா.. குழந்தை அவனுக்கு எப்படி புரியும்?” என்றவன்,
“புரியும் போது அவனே என் கிட்ட வரட்டும். அது வரைக்கும் அவனை கட்டாயப் படுத்தி அழ வைக்காதீங்க” என்று விட்டான் முடிவாக.
நாட்கள் வேறு எந்த வித சலசலப்பும் இல்லாமல் நகர, அமுதகீதன் மற்றும் நந்தன் கட்டிய இரண்டாவது ரிசார்ட்டின் திறப்பு விழா தினம் இனிதே புலர்ந்திருந்தது.