மலர் பாதம் பணிந்து..40(3)

மலர் பாதம் பணிந்து – 40(3) 

அந்த வாரம் முடிந்ததும் அடுத்த வாரத்தின் முதல் தினமும் விடிந்திருக்க, வழமை போல் காலை குடித்து விட்டு அமர்ந்திருந்தான் திவாகரன். 

மௌனமாக அமுதனும் அவனின் எதிரேதான் அமர்ந்திருந்தான். 

கோணல் சிரிப்புடன் அமுதனை பார்த்த திவாகரன் “நீங்க உண்மையாலே சூப்பர் மாப்ள. என்னை இங்க கூட்டிட்டு வந்தது மட்டும் இல்லாம தங்குறதுக்கு ரூம் கொடுத்து, குடிக்கிறதுக்கு சரக்கும் கொடுத்து.. அதுவும் தரமான ஃபாரின் சரக்கு..!! யாருக்கு மாப்பிள்ளை இந்த மனசு வரும்? தங்கம் மாப்ள நீங்க!! என் தங்கச்சி.. என்னோட பாசமலர் கொடுத்து வச்சவ…” என்று போதையில் குழறலாக உளறித் தள்ளினான். 

அமுதன் எதுவுமே கூறவில்லை. ஆனால், அவனையே பார்த்திருந்தான். முடிந்த அளவிற்கு குடித்துவிட்டு அந்த பாட்டிலை டீப்பா மீது வைத்த திவாகரன், 

“இது செ…ம்ம காஸ்ட்லி சரக்கு! எ..ங்க வாங்கு…நீங்க மாப்ளே” என்று போதையுடன் கேட்க, 

“உங்க கண்ணுக்கு இந்த பாட்டில் எல்லாம் காஸ்ட்லி சரக்கா தான் தெரியுது இல்ல?” என்ற அமுதன், நிதானமாக எழுந்தான். 

தான் அமர்ந்திருந்த சோபாவின் பின் புறமாக தலை சாய்த்த திவாகரன் “ஆமா மாப்ளே..” என்றான் போதை நீங்காத குரலில்.

“ஓ.. அப்படியா!” என்ற அமுதன் தான் அணிந்திருந்த சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டுக் கொண்டே, “ஆனா பாருங்க.. என் கண்ணுக்கு இந்த காஸ்ட்லி சரக்கு பாட்டில் எல்லாம் வெறும் பாட்டிலா தெரியல! இந்த பாட்டில் எல்லாம் என் கண்ணுக்கு உங்களோட பொண்டாட்டி, புள்ளையா, அப்புறம் என்னோட பொண்டாட்டியா, ஹான்.. அப்புறம் உங்களோட அம்மாவா தான் தெரியுறாங்க” என்றவன், 

ஒரு பாட்டிலை கையில் எடுத்து, 

“அதுவும் இப்படி முழுசா கூடத் தெரியல. இந்த கண்ணாடி பாட்டில் சுக்கு நூறா உடைஞ்சா எப்படி இருக்கும்? சில்லுச் சில்லா சிதைஞ்சு போகும் இல்லையா! அப்படித் தான் தெரியுறாங்க” என்று கடுமையான குரலில் கூறியவன், அடுத்த நொடி திவாகரன் எதிர்பாராத வண்ணம் ஆவேசமாக ஒவ்வொரு பாட்டிலாக எடுத்து அங்கிருந்த சுவரில் அடித்து நொறுக்கினான். 

அதுவும் ஒவ்வொரு பாட்டிலையும் அடித்து நொறுக்கும் போது “இது உங்கள நம்பி கல்யாணம் பண்ணி வந்த கவி அக்கா.. அடுத்து உங்க மூலமா இந்த உலகத்துக்கு வந்த குழந்தை.. அடுத்து நீங்க எப்படியாவது திருந்தி மாறிடணும்னு கோவில் பரிகாரம் பூஜை சாமியார்னு வேண்டிக்கிட்டு இருக்க உங்க அம்மா.. கடைசியா.. என்னோட மலர்! உங்க தங்கச்சி!” என்று ஆவேசத்துடன் கூறியபடி ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கினான்! 

சில நொடிகளுக்கு முன் அவன் சொன்னது போலவே நான்கு கண்ணாடி பாட்டில்களும் சுக்கல் சுக்கலாக உடைந்து சிதைந்து போய் தரையில் சிதறியது! 

அமுதனின் செயலில் திவாகரனுக்கு ஏறிய போதையெல்லாம் ஒரே நொடியில் சட்டென்று இறங்கி விட, பயந்து நடுங்கி இருக்கையில் இருந்து எழுந்து நின்று விட்டான். 

உடல் முழுவதும் பயத்தில் வியர்த்து கொட்டியது!  

கண்கள் பெரிதாக விரிய, “அமுதன்…” என்றான் காற்றாகிப் போன குரலில்! 

“ஓ.. ஒரு வாரமா ஏறின போதை ஒரு நிமிஷத்துல இறங்கிடுச்சு போல. அமுதன்னு தெளிவா சொல்றீங்க” என்று எள்ளலாகக் கேட்டவன், 

“இந்த கண்ணாடிச் சில்லு மாதிரி தான்யா உன் குடும்பம் சிதறிப் போய் இருக்கு! பாரு நல்லாப் பாரு..” மரியாதையை கை விட்டவனாக அறையெங்கும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளை சுட்டிக் காட்டி கூறியவன், 

“குடி குடியைக் கெடுக்கும்னு சொல்வாங்க. அதோட முழு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சும் மொடா குடிகாரனா குடிச்சிட்டு திரியிற நீ எல்லாம் எப்படி குடும்பத்து மேல அக்கறை காட்டி இருப்ப? இல்ல இத்தன வருஷம் உன் குடும்பத்து மேல அக்கறை தான் காட்டிருக்கியா?” 

“உனக்கென்ன? உன் குடி கெடாம இருக்க காசை கரந்துட்டு கிளம்பிடுவ. ஆனா, உன் குடும்பம் சிதறாம இருக்க உன்னை நம்பி கல்யாணம் பண்ணிட்டு வந்த கவி அக்கா எவ்வளவு கஷ்டப் பட்டிருக்காங்கன்னு தெரியுமா? தான் ஆசைப் பட்ட எம்.பி.பி.எஸ் படிப்பை படிக்க முடியாம, நாங்க காட்டின ஒதுக்கத்தை மனசுல வச்சு வேதனை பட்டுட்டு, அவ படிச்ச டிகிரிக்கான வேலைக்கு கூட போகாம, வைரிக்கியமா டென்த் மார்க் மட்டும் வச்சு போஸ்ட் ஆஃபிஸ் வேலைக்கு போற என் மலரோட கஷ்டம் தெரியுமா? நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே தன்னோட அப்பா சரியா நிக்கக் கூட மாட்டாரு. தெளிவா பேச மாட்டாரு. அவரு பக்கத்துல போனாலே குடி நாத்தம் தான் வரும். எனக்கு வாமிட் வரும். நான் அப்பா கிட்ட போக மாட்டேன்னு அழுதிருக்க குழந்தையோட கஷ்டம் தெரியுமா? எப்படியாவது என் மகன் மாறி பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா வாழணும்னு சாமி கும்பிடுற நம்பிக்கைல இருந்து சாமியார் கால்ல போய் விழற மூட நம்பிக்கை வரை எல்லா வகையிலையும் உனக்காக வேண்டிக்கிற உன் அம்மாவோட வேதனை தெரியுமா? இப்படி எதுவுமே உனக்குத் தெரியாது! தெரிஞ்சாலும் அதை எல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டுட்டு அடுத்த வேளை குடிக்கக் கிளம்பிடுவ! அப்படித் தானே!” என்று ஆக்ரோஷமாக இரைந்தான். 

சர்வமும் ஒடுங்கி விட்டது திவாகரனுக்கு. இந்த ஒரு வாரமாக குடித்த மது, அது ஏற்படுத்திய போதை, போதையின் தாக்கம் என அனைத்தும் வடிந்து போனது! 

அந்த நொடி அவன் சொன்ன வார்த்தைகளும், அது ஏற்படுத்திய தாக்கமும், அறையெங்கும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளும் தான் அவனது சிந்தையை முற்றிலும் ஆக்ரமித்திருந்தது.  

அன்று மட்டுமல்ல! அடுத்த வாரம் முழுவதும் இப்படித் தான் தொடர்ந்தது. 

அவனுக்கான, உணவு, தண்ணி, அவன் நாடும் மது, என அனைத்தும் அவனிருந்த அறைக்கே கொண்டு வரப் பட்டது. ஆனால், திவாகரனால் ஒரு கோப்பை அளவு கூட நிம்மதியாக குடிக்க முடியவில்லை! அதே சமயம் குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. 

அமுதனும் அவன் குடித்த மறு நொடி பாட்டில்களை உடைப்பதையும் நிறுத்தவில்லை. 

அந்த பாட்டில்கள் நொறுங்கும் சத்தத்தில் திவாகரனுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. 

“ஐயோ.. உடைக்காதீங்க” என்று கரங்களால் காதை பொத்திக் கொண்டு அலறுவான். 

அதை விட, கொடுமையாக இருந்தது உடைந்த கண்ணாடித் துண்டுகளை சுத்தம் செய்வது தான்! 

ஆம்! சிதறிய கண்ணாடித் துண்டுகளை அவனையே சுத்தம் செய்ய வைத்தான் அமுதகீதன். 

சில சமயங்களில் கண்ணாடி துண்டுகள் திவாகரனின் கைகளை காயம் செய்து விடும். அதுக்கான முதலுதவியை செய்தாலும் அமுதன் இளகவில்லை. 

“இந்தக் காயத்தை விட நிறைய காயப்பட்டவங்க எல்லாம் இருக்காங்க. அதனால யோசிக்காம ஒவ்வொரு துண்டா எடுங்க. நான் சொன்ன மாதிரி என் கண்ணுக்கு இந்த கண்ணாடித் துண்டு எல்லாம் ஒவ்வொருத்தரோட 

கஷ்டமா, வலியா, வேதனையா, கோபமா, இயலாமையா, விரக்தியா, வெறுப்பா, கண்ணீரா.. இப்படி பல உணர்வுகளை தான் காட்டுது!! ஆனா உங்களுக்கு… இந்த கண்ணாடிக்குள்ள இருந்த சரக்கு தான் முக்கியம்! அது தரும் போதை தான் முக்கியம்!! JUST ADDICTION!!” என்று கட்டுக்கடங்காத கோபத்தில் அழுத்தத்துடன் வார்த்தைகளை கடித்துத் துப்பினான் அமுதகீதன்! 

ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் உடையும் சமயம் அமுதன் வார்த்தைகள் அவனைக் குத்திக் கிழித்ததோடு மட்டுமல்லாமல் நால்வரின் பெயரைச் சொல்லி அவன் உடைக்கும் போதெல்லாம் நால்வரின் உருவமும் உடைந்து சிதறுவது போல் கற்பனைகள் மனதினுள் விரிய, அடுத்த நாளில் இருந்து நிம்மதியாக ஒரு மிடறு கூட குடிக்க முடியவில்லை அவனால்.

இங்கு வந்த அன்று உடலும் உள்ளமும் மதுவை நாடியது! ஆனால் இன்றோ உடல் மட்டுமே மதுவை நாடியது. 

உள்ளம் முழுவதும் அமுதனின் வார்த்தைகளும், அவனின் நியாயமான கோபமும், கண்ணாடி துண்டுகள் நொறுங்கும் சத்தமும், தன் குடும்பத்தினரின் பிம்பம் சிதறும் கொடுமையான கற்பனை காட்சியும் அதை சுத்தம் செய்வதில் இருக்கும் கஷ்டமும் தான் பிரதானமாக இருந்தது. 

ஆனாலும், அவனால் மதுவை உட்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. குடித்துப் பழகிய உடல் குடியை விடாதே என்று நடுங்கி அச்சுறுத்தியது.

அந்த வாரத்தின் இறுதியிலேயே குடிக்கும் அளவை குறைத்திருந்தான் திவாகரன். 

error: Content is protected !!
Scroll to Top