மலர் பாதம் பணிந்து – 40(2)
அதன் பின்னர் அவனுக்குத் தேவையான உடமைகள் அனைத்தையும் கவி பேக் செய்து அமுதனிடம் கொடுக்க, அமைதியாக தொடர்ந்தது அவர்களின் ஏற்காடு பயணம்!
போதையில் ஏதேதோ பேசிக் கொண்டு வந்த திவாகரன் ஒரு கட்டத்தில் உறங்கி இருந்தான். கண் விழிக்கையில் கட்டிட வேலைப்பாடுகள் முழுவதுமாக முடியாத நிலையில் இருந்த பிரம்மாண்டமான ரிசார்ட் தான் அவனை வரவேற்றது!
அதன் அழகிலும் கம்பீரத்திலும் கட்டிட வேலைப்பாடுகளும் திவாகரனை வாயைப் பிளக்க வைத்தது!
ஆனால், அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு தான்! அவனை மேல் தளத்தின் கடைசியாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்ற அமுதன் அதன் பின்னர் அவனை வெளியே விடவில்லை!
அறைக்குள்ளேயே முடக்கினான்! அவன் அறியாமல்!
“நல்லா தூங்கி எழும்புங்க. ஈவ்னிங் பாக்கலாம்” என்ற அமுதன் அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் அறையை வெளிப்புறம் இருந்து பூட்டி விட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.
உள்ளிருந்த திவாகரனுக்கு திக்கென்று இருந்தது. “என்ன கதவை சாத்திட்டு போன மாதிரி இருக்கு..” என்றவன் வந்து கதவை திறக்க முயற்சிக்க, தோல்வியே மிஞ்சியது.
சரி அவன் வரும் போது கேட்டுக் கொள்ளலாம் என்றவன், அந்த அறையில் இருந்த குளியலறை சென்று முகம் கழுவி வந்து கட்டிலில் அமர்ந்தான்.
போதை சற்றே தெளிந்திருந்தது.
கவி பேக் செய்து கொடுத்திருந்த தன் பையை எடுத்துப் பார்த்தான். பத்து உடைகளுக்கும் மேல் இருந்தன.
“எதுக்கு இவ்வளோ ட்ரெஸ் கவி பேக் பண்ணி இருக்கா? எத்தனை நாள் இங்க இருக்க போறேன்?” என தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு உறக்கமும் வரவில்லை.
மதிய வேளை நெருங்கியதும் அவனுக்கான உணவை ஒருவன் கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல, அவனிடம் அமுதனைப் பற்றி கேட்டான் திவாகரன்.
“அமுதன் சார் ஈவ்னிங் வருவார்” என்று சுருக்கமாக சொல்லி விட்டு அமுதனைப் போலவே கதவை பூட்டி விட்டு சென்றிருந்தான் அவன்.
“ஏன் கதவை பூட்டிட்டு போறீங்க?” திவாகரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அந்தப் பணியாளன் அங்கு இல்லை.
மாலை நான்கு மணிக்கு மேல் அவனது உடலும் உள்ளமும் மதுவை நாடியது!
அவனின் அன்றாட வழக்கம், காலை,மாலை, இரவு குடிப்பது தான்!
ஐந்து மணியாகியதும் அவனுக்கு மதுவின் நாட்டம் அதிகமாகத் துவங்க, தன் அலைபேசியை எடுத்தான். அமுதனின் எண் அவனிடம் இல்லை.
இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தவனுக்கு மூளைக்குள் ‘சரக்கு வேணும்..’ எனும் சிந்தனை தான் ஓடிக் கொண்டே இருந்தது.
அதற்கு மேல் முடியாது எனும் பட்சத்தில் உள்புறம் இருந்து கதவினை தட்ட எத்தனித்த சமயம், அமுதன் கதவினை திறந்து உள்ளே வந்தான்.
அவனின் பின்னே மதியம் உணவு கொண்டு வந்தவனும் இருக்க, அவன் கையில் இருந்த ட்ரேயில் கிட்டத்தட்ட நான்கு உயர்ரக மது பாட்டில்கள் இருந்தன.
திவாகரனின் கண்கள் அவையைக் கண்டு விரிந்து கொண்டன.
அமுதனின் கண்ணசைவில் அங்கிருந்த டீப்பா மீது அந்த பாட்டில்களை வைத்து விட்டு வெளியேறி இருந்தான் அந்தப் பணியாளன்.
டீப்பாவிற்கு எதிரே இருந்த சோஃபா மீது அமர்ந்த அமுதன் திவாகரனையும் கை அசைத்து தன் மறு புறம் வந்து அமரச் சொல்ல, திவாகரனும் மௌனமாகவே வந்து அமர்ந்தான்.
அவன் உள்ளம் நான்கு பாட்டில்களை கண்டு துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. அது அவன் கண்களில் தெரிய, ஒரு கையில் பாட்டிலை எடுத்த அமுதனிடம் “நீங்களும் எனக்கு கம்பெனி கொடுக்கப் போறீங்களா மாப்பிள்ளை!” என திவாகரன் உற்சாகமாக கேட்டதும், வில்லன் தன்மையுடன் ஒரு புன்னகையை சிந்திய அமுதன், அந்த பாட்டிலை அவன் புறம் நீட்டி, “உங்களுக்கு போதை ஏத்துறதுக்கு கம்பெனி வேணுமா என்ன?” என்று நக்கலாகக் கேட்டவன்,
“பாட்டில திறங்க” என்றான்.
அவனையும் அந்த மது பாட்டிலையும் மாறி மாறி திவாகரன் பார்க்க, “எனக்கு இதுல முன் அனுபவம் எல்லாம் எதுவும் இல்லை. எனக்கு இதெல்லாம் திறக்கத் தெரியாது. சோ, நீங்களே திறங்க” என்று கூற, திவாகரனும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் பாட்டிலைத் திறந்தவன் அப்படியே தொண்டையில் சரிக்கப் போனான்.
அதற்கு விடாமல் கண்ணாடி கோப்பைக்குள் மதுவை ஊற்றி அவனிடம் கொடுத்தான் அமுதன்.
வேகமாக அதனை வாங்கி ஒரே மடக்கில் குடித்த திவாகரன் அடுத்ததிற்காக கோப்பையை நீட்ட, அடுத்த பாட்டிலை அவனை திறக்கச் சொன்னவன் அதிலிருந்து சிறிதளவு ஊற்றி கொடுத்தான்.
“இந்த பாட்டில் முடிஞ்சதும் அந்த பாட்டிலை திறக்கலாமே மாப்பிள்ளை..” என்றவனை அமுதன் கண்டு கொள்ளவில்லை.
அவன் அழுத்தமான தோற்றமும், வில்லன் தன்மையுடன் சிந்திய புன்னகையும், “அடுத்த பாட்டிலைத் திறங்க” என்று சொன்ன போது அவன் முகத்தில் இருந்த கடுமையும் அதற்கு மேல் திவாகரனை வாய் திறக்க விடவில்லை.
அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களையும் திறக்கச் சொன்னவன் அதிலிருந்து சிறிது மதுவை ஊற்றி கொடுத்தான். திவாகரனும் மௌனமாகவே அருந்தியவன், ஐந்தாவது சுற்றுக்காக மீண்டும் கண்ணாடி குடுவையை அவன் புறம் நீட்ட, நான்கு பாட்டில்களையும் வரிசையாக மூடத் துவங்கினான் அமுதன்.
“மாப்பிள அதுக்குள்ள ஏன் மூடுறீங்க? நான் இன்னும் குடிச்சு முடிக்கல.. எனக்கு இன்னும் வேணும். இன்னும் ஊத்துங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.
அந்த நான்கு பாட்டில்களையும் மூடிய அமுதன், திவாகரனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து “நாலு கிளாஸ் குடிச்ச அப்புறமும் இன்னும் வேணும்?? ஹ்ம்ம!!” என்று சொல்லியபடி, ஒரு பாட்டிலை மட்டும் கையில் எடுத்து அதனை கைகளுக்குள்ளேயே சுழற்றி பார்த்தவன், “நல்லாவே குடிக்கிறீங்க! ஆனா, இனி உங்களுக்கு இதான் லிமிட்” என்றான் அழுத்தமாக
திவாகரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், மெல்லிய போதை மட்டுமே ஏறியிருந்த நிலையில் “என்னது லிமிட்டா…? நாலு பெக்’ எல்லாம் போதவே போதாது. இந்த மாதிரி காஸ்ட்லி சரக்கு எல்லாம் என் கனவு மாப்பிள. இன்னும் ஊத்துங்க” என்றவன் மீண்டும் அதையே கூற, அமுதன் அசையாமல் அமர்ந்திருந்தான்.
பொறுத்துப் பார்த்த திவாகரன் தானே ஒரு பாட்டிலை எடுத்து அவசர அவசரமாக தொண்டையில் சாய்த்து விட்டான்.
அமுதனும் அவனைத் தடுக்கவில்லை! அன்று மட்டுமல்ல அந்த வாரம் முழுவதும் அவனின் போக்கிற்கே விட்டு விட்டான்.
அதற்கு காரணமும் இருந்தது. இங்கு அவனை அழைத்து வருவதற்கு முன்பே மறுவாழ்வு மையத்தை அணுகி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுத்தான் வந்திருந்தான்.
“ஆல்கஹாலிக் அடிக்ட் ஒரே நாள்ல எல்லாம் குடிய நிறுத்த முடியாது மிஸ்டர். அமுதன். கொஞ்சம் கொஞ்சமா தான் கன்ட்ரோலுக்கு கொண்டு வர முடியும்! கண்ட்ரோல் வந்தாலும் ஒன் ஆர் டூ பெக் குடிக்காம அவுங்களால இருக்க முடியாது. இத்தனை நாள் குடிச்சவரு சட்டுன்னு ஆல்கஹால் கன்சியூம் பண்றதை ஸ்டாப் பண்ணாருன்னா அது சீரியஸ் ஹெல்த் இஸ்யூஸ்சை உண்டாக்கும். சோ, கொஞ்சம் கொஞ்சமா கட்டுப் படுத்தி, அவங்களே மனம் மாறி, ஒரு லிமிட் செட் பண்ண பின்னாடி தான் சீரியஸ் ஹெல்த் இஸ்யூஸ்சை அவாய்ட் பண்ண முடியும்” என்றிருந்தார்.
“அப்போ எப்போதான் அவரை ட்ரீட்மென்ட்கு கூட்டிட்டு வர்றது டாக்டர்?” என்று அமுதன் கேட்க,
“அவர் முழு ஒத்துழைப்போட ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்கிட்ட பின்னாடி இங்க கூட்டிட்டு வாங்க. நாங்க என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் பேஷண்டோட முழு ஒத்துழைப்பு இல்லைன்னா எல்லாமே வீண் தான். அவரோட மன நிலையும் ரொம்ப முக்கியம்! கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க. ஒரு கட்டத்துல அவரே மனசு மாறி குடிக்க வேண்டாம்னு முடிவெடுத்திட்டா இமீடியட்டா அவரை அட்மிட் பண்ணிடுங்க. உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறது நல்லது. இல்லேன்னா ஹீ வில் ஃபேஸ் சீரியஸ் ஹெல்த் இஸ்யூஸ்” என்று கூறி, மேலும் சிறு அறிவுரைகள் வழங்கி இருந்தார்.
எனவே, தான் திவாகரன் அரை பாட்டில் முழுவதும் மது அருந்தினாலும் அமுதன் எதுவும் கூறவில்லை.