மலர் பாதம் பணிந்து – 40(1)
அமுதகீதனுக்கும் தேன்மலருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்திருந்த சமயம் அது!
தேன்மலர் திருமணத்திற்காக எடுத்திருந்த விடுமுறை முடிந்து பணிக்குச் சென்ற தினத்தில் தான் அமுதனும் ஏற்காடு கிளம்புவதாக திட்டமிட்டிருந்தான்.
அதோடு திவாகரனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தான்.
அத்திட்டத்தின் படி மனைவியைத் தபால் அலுவலகத்தில் இறக்கி விட்டவன், நான்கு நாட்களில் திரும்பி வருவேன் என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லி விட்டு நேரே சென்று நின்றது மாமியாரின் வீட்டில் தான்!
காலை வேளையிலே வந்து நின்ற மருமகனைக் கண்டதும் மங்கைக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனாலும் பரபரப்புடன் அவனை வரவேற்று உபசரித்தவர் “நீங்க மட்டும் வந்திருக்கீங்க மாப்பிள்ளை. தேனு வரலையா?” என்று கேட்க,
“இன்னைக்கு தேனு ஆபிஸ் போக வேண்டிய நாள் அத்த. இந்நேரம் கிளம்பி இருப்பா” என்றபடி வந்தாள் கவி.
அமுதனை வரவேற்றவள், “தேனு ஆபிஸ் போய்ட்டா தான தம்பி? நேத்தோட அவ கல்யாணத்துக்காக எடுத்த லீவ் முடிஞ்சதே” என்று அவனிடமே கேட்க, புன்னகையுடன் ஆமோதித்தவன் அவரை ஆதூரமாகப் பார்த்தான்.
தன் மலரின் மேல் அளவு கடந்த அன்பு கொண்டு, அவளைப் பற்றி துல்லியமாக அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் கவியின் வாழ்க்கையை எப்பாடு பட்டாவது சீர் செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவை அந்த நொடி மேலும் ஸ்திரமாக்கிக் கொண்டவன், அதனைப் பற்றி அவர்களிடம் நேரடியாகக் கூறியும் விட்டான்.
“நான் உங்க பிள்ளையை கொஞ்ச நாளைக்கு ஏற்காடு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் அத்தை. அவரை திருத்தி புது மனுஷனா மாத்தி உங்களுக்கு நல்ல மகனாவும், கவி அக்காவுக்கு நல்ல புருஷனாவும், கோகுல் குட்டிக்கு நல்ல அப்பாவாவும் மாத்திக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு” என்றதும் மங்கை திகைத்துப்போய் வார்த்தைகளற்று அவனைப் பார்த்தார்.
கவிரத்னாவிற்கும் அதே நிலை தான்!
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மாப்பிள்ளை..” என்றவரின் பார்வை மருமகளைத் தான் தொட்டு மீண்டது.
கவியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
இருவரின் முகத்தையும் பார்த்த அமுதகீதன், “ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்க, “அச்சோ அப்படியெல்லாம் இல்ல மாப்பிள்ளை..” என்றார் மங்கை பதற்றத்துடன்.
“உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல தம்பி. ஆனா உங்களுக்கேன் இந்த சிரமம் எல்லாம்? எங்க தலையெழுத்து இதுதான். நாங்களும் என்னென்னமோ முயற்சி செஞ்சு அதெல்லாம் தோல்வில முடிஞ்சு, அவரோட இந்த நிலைலயே வாழப் பழகிட்டோம். இப்ப எனக்குள்ள அவரை மாத்தணும்ன்ற எண்ணம், அவர் திருந்தனும்ற வேண்டுதல் எல்லாம் கொஞ்சம் கூட இல்ல. சலிப்பு, கோபம்,வெறுப்பு, அழுகை, விரக்தி எல்லாமே அளவு கடந்து போகும்போது நமக்குள்ள எந்தவிதமான உணர்வுகளுமே இருக்காது தம்பி. எல்லாமே மரத்துப் போய் ரொம்ப நாள் ஆச்சு” என்றாள் வெறுமை நிறைந்த குரலில்.
நெஞ்சம் கனக்க அவளைப் பார்த்தவன், “எனக்குப் புரியுதுக்கா. ஆனா, இதை இப்படியே விடவும் கூடாது தானே! நீங்க எல்லாம் முயற்சி செஞ்சு பாத்த மாதிரி நானும் முயற்சி செஞ்சு பாக்குறனே. வெற்றியோ தோல்வியோ என்னோட பக்கத்துல இருந்து ஒரு சின்ன முயற்சி. அவ்வளவுதான்” என்றான் அமரிக்கையான புன்னகையுடன்.
“மாப்பிள்ளை… அவனுக்காக நான் ஏறாத கோவில் இல்ல. பண்ணாத பரிகாரம் இல்ல. போய் பார்க்காத சாமியார் இல்ல. ஆனா, எதுவுமே மாறல மாப்பிள்ளை. அப்படியே தான் இருக்கான்!” என்று மங்கை கண்ணீர் சிந்த,
அழுத்தமான புன்னகையுடன் அவரைப் பார்த்தவன், “உங்க வேண்டுதலுக்கு எல்லாம் இப்ப பலன் கிடைக்கப் போறதா நினைச்சுக்கோங்க அத்தை” என்றான்.
மங்கையின் பார்வை மீண்டும் மருமகளையே தொட்டது. அதிலேயே கவியின் முடிவை அவர் எதிர்பார்க்கிறார் என்று புரிந்துவிட, அமுதனும் கவியின் முகத்தைப் பார்த்தான்.
நீண்ட சிந்தனைக்கு பிறகு கவி அவனிடம் “நீங்க நல்லது செய்யறதுக்காக தான் இவ்வளவு தூரம் வந்து கேக்குறீங்கன்னு புரியுது தம்பி. ஆனா இந்த சமயம் இது அவசியமா? உங்களுக்கும் தேனுக்கும் இப்பதான் கல்யாணம் நடந்திருக்கு. நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்க நேரம் இது. இப்ப இந்த முடிவை நீங்க எடுத்திருக்கத நினைச்சு கொஞ்சம் தயக்கமா இருக்கு தம்பி” என்றாள் தயங்கிய குரலில்!
பெரு மூச்சுடன் கவியைப் பார்த்த அமுதன், “இந்த முடிவை நாங்க முன்னாடியே எடுத்திருக்கணும் க்கா” என்று வருத்தத்துடன் மொழிந்தவன்,
“இப்பவும் தாமதிக்கிறதுல அர்த்தமே இல்ல” என்றான் தெளிவாக.
கவி அப்போதும் தயங்கினாள். மங்கைக்கு பதற்றமாகவே இருந்தது. அதனுடன் எப்படியாவது மகன் திருந்தினால் போதும் என்கிற சிறு ஆசையும் அவரின் முகத்தில் தெரிந்தது.
கவியின் தயக்கத்தில் அமுதனின் முகத்தில் புன்னகை!
“ரொம்ப யோசிக்காதீங்க அக்கா. உங்க புருஷனை பத்திரமா, நல்ல விதமா மாத்தி உங்க கிட்ட சேத்திடுவேன்” என்றதும் கவியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
அவளின் புன்னகையைக் கண்டு “இந்தக் கொஞ்ச நாள்லயே மலர் என் கிட்ட அதிகமா பேசினது உங்களைப் பத்தி தான். மலருக்கு அவ அண்ணின்னா அவ்வளவு இஷ்டம். ஆனா, அதே அண்ணியோட வாழ்க்கை இப்படி இருக்கதுல அவளுக்கு அதிக வேதனை. நீங்க பட்ட கஷ்டம் எல்லாத்தையும் என் கிட்ட சொல்லி அவ அழுத சமயம் தான் நான் இந்த முடிவை எடுத்தேன்” என்றதும் கவி மெல்லிய திகைப்புடன் அவனைப் பார்க்க,
“நிச்சயம் இந்த முடிவு மலருக்காக இல்ல. என் மலருக்காக, அவ எதிர் காலத்துக்காக அவுங்க வாழ்க்கையை இங்கேயே தேங்க வச்சுக் கிட்ட அவளோட அண்ணிக்காக..” என்றான் நெகிழ்ந்த குரலில்.
கவிரத்னாவிற்கு வார்த்தைகளே வரவில்லை! அவன் இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அவளால் மறுக்க முடியவில்லை. எனவே ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“ஆனா இந்த விஷயம் இப்போதைக்கு மலருக்கு தெரிய வேண்டாம். உங்க புள்ளை நல்லாகி வந்த பின்ன சொல்லிக்கலாம். என்னோட முயற்சியும் தோல்வில முடிஞ்சா மலர் ரொம்ப கஷ்டப் படுவா. அதான் இப்ப அவளுக்குத் தெரியப் படுத்த வேண்டாம்னு சொல்றேன்” என்றான் விளக்கமாக.
கவிரத்னா அதனை ஏற்றுக்கொள்ள, மங்கை அப்போதும் பதற்றத்துடன் “ஆனா, எப்படி மாப்பிள்ளை அவனை மாத்தப் போறீங்க..? அதுவும் தேனு கிட்ட வேற சொல்ல வேணாம்னு சொல்றீங்க. எனக்கு ஒரே பயமா இருக்கு மாப்பிள்ளை” என்றதும், கவிரத்னா தான் அவரை தேற்றி இருந்தாள்.
“தம்பி இவ்வளவு சொல்லும் போது நாம தேனு கிட்ட சொல்றது சரியில்ல அத்த. பாப்போம். உங்க புள்ள இனியாவது திருந்துறாரான்னு.. அதுவரைக்கும் தேனு கிட்ட சொல்ல வேண்டாம்” என்று முடிவாக கூறி விட்டாள்.
அவர்கள் பேசி முடிப்பதற்கும் தள்ளாடியபடி வீட்டிற்குள் திவாகரன் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
அமுதனைக் கண்டவன் “வாங்க மாப்பி…பிழ்..ழை.!” என்று உளறலாக வரவேற்றவன்,
“மம்மி… மாப்பி..ழைக்கு காப்ப்பி கொத்தியா மம்மி..” என்று வேறு உளற, பெண்கள் சங்கடத்துடன் அமுதனைப் பார்க்க,
கண்ணமர்த்தி அவர்களை அமைதியாக இருக்கும் படி சொன்னவன், காபி கோப்பையை டீப்பா மீது வைத்து விட்டு நிதானமாக எழுந்தான்.
திவாகரனின் தோளில் கையிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவனிடமிருந்து குப்பென்று வந்த மது நாற்றத்தை முயன்று பொறுத்துக் கொண்டபடி “அதெல்லாம் எனக்கு காபி கொடுத்து நல்லா உபசரிச்சுட்டாங்க. நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா என் கூட ஏற்காட்டுக்கு வாங்களேன். கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வருவீங்களாம். அங்க நீங்க எதிர்பார்க்குறது, எதிர்பார்க்காதது, உங்களுக்கு தேவையானது, நீங்க தேவை இல்லாததுன்னு நினைக்கிறது இப்படி எல்லாமே அதிகமாகவே கிடைக்கும்..” என்று கூற, போதையின் பிடியில் இருந்த திவாகரனுக்கு, அமுதன் கூறிய வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை.
ஆனால், தனக்குத் தேவையானது தான் எதிர்பார்ப்பது எல்லாமே மது தான்! அதைத் தான் அங்கே கிடைக்கும் என்று அவன் சொல்கிறான் என்று போதையில் தானே யூகித்துக் கொண்டவன், கண்ணை மூடிக்கொண்டு “போலாஆஆம் மாப்லே.. நா வரேன்….” என்றிருந்தான் உற்சாகத்துடன்.