மலர் பாதம் பணிந்து – 39
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் வாயிலில் போடப் பட்டிருந்த இருக்கையில் கருவிழிகள் இலக்கின்றி எங்கோ நிலைகுத்தி இருக்க, உயிரில்லாத ஜடம் போல் அமர்ந்திருந்தாள் தேன்மலர்.
அவளை அப்படிப் பார்க்கவே பயமாக இருந்தது அங்கு சூழ்ந்திருந்த எல்லோருக்கும்!
ஒரு பக்கம் மங்கை புடவை நுனியால் வாயை மூடிக் கொண்டு அழுது கரைந்தார். இன்பசேகரனுக்கு தங்கையைத் தேற்றுவதே இயலாத காரியமாக இருக்க, மருமகள் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு இன்னுமே கலங்கிப் போனார்!
கவிரத்னாவிற்கும் கோகுலனுக்கும் விபத்து என்று கேள்விப் பட்ட நொடியிலிருந்து இப்படித் தான் அசைவின்றி இமையசைக்கக் கூட இல்லாமல் அமர்ந்திருக்கிறாள் தேன்மலர்.
அவளின் இரு புறமும் ஆளுக்கொரு கரத்தினை பற்றியபடி கிருஷ்ணரூபியும், வசுந்தலாவும் அமர்ந்திருந்தனர்.
கண்ணீருடன் எந்த வித அசைவும் இல்லாது தொய்ந்து போய் அமர்ந்திருக்கும் தேன்மலரையே ஆறுதல் சொல்லக் கூட முடியாதவர்களாகப் பார்த்திருந்தனர்.
கிருஷ்ணாவிற்கு தன் அண்ணியை இப்படிப் பார்க்கவே அச்சமாக இருந்தது.
அவளின் முழங்கையைப் பிடித்து மெல்ல உலுக்கியவள் “அ..ண்ணி.. அழுகை வந்தா அழுதுடுங்க அண்ணி. இப்படி இருக்காதீங்க.. எனக்கு பயமா இருக்கு.. கவி அக்காவுக்கு எதுவும் ஆகாது. கோகுல் குட்டிக்கும் ஒன்னும் ஆகாது. கடவுள் எதுவும் ஆக விட மாட்டார்” என்று தன்னால் முடிந்த வரை அவளைத் தேற்ற போராடினாள் இளையவள்!
பலன் தான் பூஜ்யம்! மலரின் இலக்கில்லா பார்வை இம்மியும் மாறவில்லை!
கண்ணோரங்களில் கசிந்து கொண்டிருந்த நீர்த்துளிகள் நிற்காத நதியாக கன்னத்தில் இறங்கிய வண்ணமே இருந்தது!
அப்போது தான் மருத்துவரிடம் பேசி விட்டு அவரின் அறையில் இருந்து வந்தான் அமுதகீதன்.
வந்தவன் கண்டது வேரிழந்த மரம் போல வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த மனைவியைத் தான்!
நெஞ்சம் துக்கத்தில் உழன்றது.
அவனின் கசங்கி இருந்த முக பாவனைகளை வைத்தே மருத்துவர் எதுவும் சாதகமாகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டனர் எல்லோரும்.
மங்கையிடமிருந்து பெரும் கதறல் ஒன்று வெளிப்பட, இன்பசேகரன் தங்கையின் தோள்களை பற்றி “அழாத மங்க…” என்றார் அவரும் கலங்கிய குரலில்.
மகனிடம் கண்களால் என்னவென்று பரிதவிப்புடன் கேட்க, அவனுக்கு வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள் என்னவோ சிக்கிக் கொண்டது போல் அடைத்தது.
“அமுதா.. டாக்டர் என்னப்பா சொன்னாங்க” என்ற வசுந்தலாவின் குரலில் தான் கணவன் வந்துவிட்டதை உணர்ந்தாள் தேன்மலர்.
அதுவரை ஜடமென அமர்ந்திருந்தவள் கணவனைக் கண்டதும் உயிர்பெற்ற சிலை போல் ஆளுக்கு ஒருவராக பற்றி இருந்த தன் கைகளை பட்டென்று உருவிக்கொண்டு கணவனின் முன்பு சென்று நின்றாள்.
“என்.. என்னாச்சுங்க? டா.. டாக்டர் எ..என்.. ன்ன சொன்னாங்க… அண்ணிக்கு எதுவும் இல்ல தான.. சொ..சொல்..ல்லுங்க.. என் அண்ணிக்கு ஒன்னும் இல்ல தான.. அவுங்க நல்லாகிடுவாங்க தான.. சொல்லுங்க…” என்றவள் படபடவென்று கேட்க, அமுதன் துளிர்த்த கண்ணீருடன் அவளையே பார்த்தான்.
கணவனின் மௌனம் அவளுக்குள் பெரும் பிரளயத்தையே கிளப்ப, அவனின் இருப்பக்க கைகளையும் பற்றி உலுக்கியவள் “உங்கள தான் கேட்கிறேன் கீதன். பதில் சொல்லுங்க! அண்ணிக்கு எதுவும் இல்ல தானே. அவங்களுக்கு ஒன்னும் ஆகல தானே. கோகுல்… கோகுலுக்கு என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்லபடியா வந்துருவாங்க தானே.. சொல்லுங்க கீதன்..” என்றவள் கணவனிடம் பதில் இல்லை என்றதும், ஆத்திரம் கொண்டவளாக கணவனின் சட்டைக் காலரைப் பற்றி,
“அவு..ங்க.. உயிருக்கு ஒன்னும் இல்ல தானே! சொல்லுங்க. சொல்லுங்க…” என்று கத்தியவள், கணவனின் மார்பில் பட் பட் என்று தொடர்ந்து அடிகளை வைத்து கதறலுடன், “சொல்லுங்க கீதன்… அண்ணிக்கும் கோகுல்கும் எதுவும் இல்லைன்னு சொல்லுங்க..” என்று அழுகையில் வெடித்தாள்.
“மலர்…” என்றவனின் உடைந்த குரல் அவளை மேலும் உடைத்து விட, அடிப்பதை நிறுத்தி அவன் மார்பில் தொய்ந்து சாய்ந்தவள், “எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்று குழந்தை போல் அரற்றினாள்.
அமுதனால் மனைவியின் கதறலை கண் கொண்டு பார்க்க முடியவில்லை! அவனுக்கும் கண்ணீர் இமை மீறி இருந்தது.
நான் இருக்கிறேன். தைரியமாக இரு என்று சொல்லக் கூட அவனால் முடியவில்லை!
அழுகையில் கரைந்த மனைவியை தன் நெஞ்சோடு அணைத்ததுக் கொண்டவன், “தைரியமா இருக்கணும் மலர்” என்றான் தொண்டையடைக்க.
அதிலேயே அவளுக்குப் புரிந்து விட, அவளிடம் பெரும் கேவல் ஒன்று வெளிப்பட்டது.
அதைக் கண்டு எல்லோரும் கலங்கிப் போனார்கள்.
“டாக்டர் என்ன தான் சொன்னாங்க அமுதா..” என்று இன்பசேகரன் கேட்க,
“கவி அக்காவுக்கு ஹெட்ல பெரிய இன்ஜுரி ஆகி இருக்காம் ப்பா. ஆப்பரேட் பண்ணி தான் ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்றவன்,
“கோகுலுக்கு கைல கால்ல எல்லாம் சதை கிழிஞ்சு ரத்தம் நிறைய போய் இருக்காம். ப்ளட் ஏத்தனும்னு சொல்லி இருக்காங்க” என சொல்லக் கூடிய வார்த்தைகளை மட்டுமே கூறினான்.
மற்றபடி மருத்துவர் “ஆப்ரேஷன் பண்ணாலும் அவங்க பிழைக்கிறதுக்கு ஐம்பது சதவீதம் தான் சான்ஸ் இருக்கு” என்று கூறியதையோ,
“குழந்தையோட பிளட் குரூப் ரொம்ப ரேர். எங்க ஹாஸ்பிடல்ல இப்போதைக்கு அந்த பிளட் குரூப் அவைலபில்ல இல்ல. பிளட் பேங்க்கு சொல்லி இருக்கோம். இன்னும் டூ ஹவர்ஸ்குள்ள பிளட் கிடைக்கலைன்னா குழந்தை நிலமையும் கஷ்டம் தான்” என்று கூறியதைப் பற்றியோ அமுதன் மூச்சு விடவில்லை.
சொன்னால் அவனின் மலர் தாங்க மாட்டாளே? அவளின் துக்க அளவை அதிகரிக்கத் தயாராக இல்லை அவன்!
மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தன்னைக் கண்டதும் ஆச்சரியத்தில் மலர்ந்து விரிந்த கண்களுடன், அலுவலகப் பையை வேகத்துடன் கழற்றிப் போட்டுவிட்டு ஓடி வந்து தன்னை கட்டிக்கொண்ட மனைவியின் புன்னகை முகம் இப்போதும் நினைவிலாடியது.
“எப்ப வந்தீங்க..?” மார்பில் இருந்து முகம் நிமிர்த்தி அளவில்லாத சந்தோஷத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு அமுதன் பதில் சொல்ல எத்தனித்த சமயம் தான் அவளது அலைபேசி அபாயகரமான செய்தியைத் தாங்கி இசைத்தது.
தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் “யாருன்னு பாரு மலர். நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று அமுதன் நகர, புருவம் சுருக்கியபடியே அழைப்பை ஏற்றவள் அந்தப் பக்கம் இருந்து யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன செய்தியைக் கேட்டு சமைந்து நின்று விட்டாள்.
கோகுலனின் ஐ.டி கார்டில் இருந்த மற்றொரு தொடர்பு எண்ணான தேன்மலரின் எண்ணிற்கு அழைத்திருந்தார் அந்த மனிதர்.
சாலையில் விபத்திற்கு உள்ளாகி இருந்த தாய் மற்றும் மகனைப் பற்றி கூறியவர், “உடனே வாங்க மேடம். நாங்க ஆம்புலன்ஸ்க்கு சொல்லி இருக்கோம்” என்று கூற, தேன்மலர் உடல் நடுங்க அப்படியே நின்றிருந்தாள்.
செவி வழி கேட்ட செய்தியை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.
இதயம் பெரும் சப்தத்துடன், அதீத வேகத்துடன் நடுங்க அலைபேசியை அவளால் இறுகப்பற்ற முடியவில்லை.
விரல்கள் நடுங்கியது. அப்படியே அலைபேசியை நிலத்திற்குத் தாரை வார்த்திருந்தாள்.
குளிக்கச் செல்லவென கபோர்டினைத் திறந்து உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவன் மனைவியின் நிலையில் குழம்பி “என்னாச்சு மலர்?” என்றபடி அவளை நெருங்க,
அலைபேசியை அவள் தவறவிட்டதும் அதனை எடுத்து “யாரு கால் பண்ணி இருக்கா? நீ ஏன் இப்படி நிக்கிற..” என்றவன், அழைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கவும் அலைபேசியை தன் காதிற்கு கொடுத்தான்.
தேன்மலரிடம் சொன்ன அதே செய்தியை, அமுதனிடமும் சொல்லிய அந்த மூன்றாம் நபர், விரைந்து வருமாறு கூறி அழைப்பைத் துண்டித்தார்.
அதற்கடுத்த பொழுதுகள் எல்லாம் நரகம்தான். வீட்டில் உள்ள எல்லோருக்கும் விஷயத்தை சொல்லியவன் தந்தையிடம் “நானும் மலரும் ஹாஸ்பிடல் போறோம் ப்பா. நீங்க போய் அத்தை கிட்ட விஷயத்தை சொல்லி அவங்களை கூட்டிட்டு வாங்க” என்றவன் விரைந்து செயல்பட்டிருந்தான்.
சேலத்தில் உள்ள மருத்துவமனையில் தான் இருவரையும் அனுமதித்திருந்தனர்.
எல்லோரும் கண்ணீரும் வேண்டுதலுமாக அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்னே அமர்ந்திருக்க, எல்லோரின் மனதிலும் பயமும், கலக்கமும் மட்டுமே பிரதானமாக இருந்தது.
மனைவியை மீண்டும் அன்னை மற்றும் தங்கையின் வசம் ஒப்படைத்து விட்டு தந்தையுடன் அந்த தளத்தின் மின்தூக்கி அருகே வந்தவன்,
“அப்பா நான் போய் திவா மாமாவை கூட்டிட்டு வந்துடறேன்பா” என்க, இன்பசேகரனும் அதை ஆமோதித்தார்.
சேலத்தில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் தான் திவாகரனின் போதை மீட்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருந்தான் அமுதகீதன்.
எனவே, அவனை அழைத்து வர கிளம்பி விட்டான். அந்த மறுவாழ்வு மையத்திற்கும் அழைத்து விஷயத்தை பகிர்ந்தவன் திவாகரனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமும் அழைத்துப் பேசி இருந்தான்.
அவரும் திவாகரனிடம் முழுதாக எதையும் கூறாமல் “ஒரு எமர்ஜென்சி. நீங்க கிளம்பனும். உங்க சிஸ்டர் ஹஸ்பன்ட் உங்களை கூட்டிட்டு போறதுக்காக வர்றார். ரெடியா இருங்க” என்று சொல்லி விட, திவாகரனும் தயாராகி ரிசப்ஷனில் காத்திருந்தான்.
அமுதன் வந்ததும் அவனின் கலங்கி இருந்த முகத்தினைக் கண்டு திவாகரன் கலங்கித் தான் போனான்.
“என்னாச்சு மாப்பிள்ளை.. டாக்டர் நீங்க வர்றீங்கன்னு சொன்னார். ஏதோ எமர்ஜென்சியாம்.. உங்க முகமே சரியில்ல. தேனு நல்லா தான இருக்கா? வீட்ல எல்லாரும் நல்லா தான இருக்காங்க” என்று பதகளிப்புடன் கேள்விகளை அடுக்கினான் திவாகரன்.
“அவசரமா போகணும் மாமா. வாங்க. கார்ல போறப்ப சொல்றேன்” என்று முடிந்த அளவிற்கு வரவழைத்த தெம்பான குரலில் கூறியவன், அவனோடு புறப்பட்டான்.
மருத்துவமனைக்கு வரும் வழியில் திவாகரனிடம் கலங்கியவாறே அமுதன் விஷயத்தைப் பகிர, திவாகரனுக்கு உலகமே தன் அசைவை நிறுத்தி விட்டது போலிருந்தது.
நெஞ்சை அடைக்கும் துயரத்துடன் கண்ணில் நீர் நிறைய அமுதன் கூறிய கொடிய செய்தியை உள்வாங்கியவன் “இதுவரைக்கும் கவிக்கு என்னால எந்த நல்லதும் நடந்தது இல்ல அமுதன். இனிமேலாவது அவளுக்கு உறுதுணையா வாழணும்னு நினைச்சேன். ஆனா, இப்ப நான் மாறி வர நேரம் அவ.. இந்த நிலமைல.. ஐயோ கடவுளே..” என்று நெற்றியில் அறைந்து கொண்டு கதறினான்.
“தைரியமா இருங்க மாமா. அம்பது சதவீதம் பிழைக்க வாய்ப்பில்லன்னு சொன்னாங்க தான். அதே நேரம் அம்பது சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்குன்னு தானே அர்த்தம்! நம்பிக்கையை கை விடாதீங்க. கவி அக்காவுக்கு ஒன்னும் ஆகாது” என்று தைரியம் கொடுத்தவன்,
“உங்க ப்ளட் குரூப் என்ன?” என்று கேட்க, திவாகரன் அவனுடையதைச் சொன்னதும் கோகுலனுக்கும் அவனது இரத்தப் பிரிவு தான் என்பதைப் புரிந்து கொண்டவன், விரைந்து மருத்துவமனைக்கு காரினை செலுத்தினான்.
மருத்துவமனை வந்ததும் “சீக்கிரம் மாமா. கோகுல்கு ப்ளட் கொடுத்தே ஆகணும். வாங்க” என்றவன், அவனை நேரே மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.
“தேங்க் காட். பையனோட அப்பாவே வந்ததுல சந்தோஷம். ஆனா, அப்பாவாவே இருந்தாலும் ஒரே பிளட் குரூப்பா இருந்தாலும் Blood Compatibility Test (இரத்த இணக்கப் பரிசோதனை) எடுத்த பின்ன தான் இவரோட ப்ளட் குழந்தைக்கு டிரான்ஸ்ஃபியூஷன் பண்ணலாமா வேண்டாமான்னு பாக்க முடியும்” என்றவர், நர்ஸை வரவழைத்து
திவாகரனை அவருடன் லேபிற்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் பரிசோதனை முடிந்து அவனின் ரத்தத்தை குழந்தைக்கு தானம் செய்யலாம் என பரிசோதனை முடிவு வந்திருந்தது.
கண்ணீருடன் ரத்தத்தை கொடுத்து முடித்தவன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்க, “ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்” எனும் நிபந்தனையோடு அவன் பெற்ற பிள்ளையைப் பார்க்க அனுமதித்தனர்.
இது வரை போதையின் பிடியில் இருந்த போது மட்டுமே பார்த்த குழந்தையை இப்போது நெஞ்சை கொல்லும் துயரத்துடன் பார்த்தான்.
அவன் பார்வை குழந்தையை உச்சி முதல் பாதம் வரை வருடி அவனின் காயங்களைக் கண்டு துடித்து கதற வைத்தது.
“அப்பா இனிமேல் குடிக்க மாட்டேன் செல்லம். அப்பா கிட்ட வந்துடுங்க” என்று கண்ணீருடன் மயக்கத்தில் கிடந்த குழந்தையிடம் மன்றாடினான்.
செவிலிப் பெண் வந்து அதட்டவும் அமுதன் திவாகரன் வெளியே அழைத்து வந்து விட்டான்.
“க.. கவி…யை..யைப் பாக்கணும் அமுதன்..” என்றவன் தவிப்போடு கெஞ்ச, “பாக்கலாம் மாமா. அதுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் ஜுஸ் குடிங்க. ப்ளட் கொடுத்திருக்கீங்க வேற” என்று அவனை கேண்டீன் பக்கம் அழைத்துச் செல்ல முயல,
“இல்ல.. அதெல்லாம் எதுவும் வேண்டாம். எனக்கிப்ப கவியைப் பாக்கணும் அமுதன். அவ கிட்ட கூட்டிட்டு போங்க” என்றவனை வலுக்கட்டாயமாக ஒரு பழச்சாறினை அருந்த வைத்து கவியை அனுமதித்திருக்கும் தளத்திற்கு அவனை கூட்டிச் சென்றான்.
ஐ.சி.யூவை நெருங்க நெருங்க திவாகரனுக்கு நெஞ்சம் நடுங்க, முதல் முறையாக அச்சத்திலும் தாங்கொண்ணா வேதனையிலும் உடல் தள்ளாடியது.
‘கவிக்கு எதுவும் ஆகக் கூடாது கடவுளே.. இது வரைக்கும் நான் திருந்தாம குடிச்சிட்டு இருந்ததுக்கு, என் குடும்பத்து மேல அக்கறை காட்டாம இருந்ததுக்கு என் உயிரைக் கூட எடுத்துக்கோ. ஆனா, அவுங்களை எப்படியாவது பிழைக்க வை!’ எனும் வேண்டுதலுடன் தான் அங்கே வந்தான்!
இன்பசேகரன் தான் அவனை முதலில் கண்டது.
“வாப்பா திவா..” என்றவர் தைரியமாக இருக்கும் படி அவன் தோளில் அழுத்திக் கொடுக்க, “கவி.. கவிய பாத்திட்டு வந்துடுறேன் மாமா..” என்ற அண்ணனின் குரலில், தேன்மலர் அழுது சிவந்து வீங்கிய கண்களுடன் அவன் புறம் சுரத்தே இல்லாமல் பார்வையைத் திருப்பினாள்.
அங்கே நின்றிருந்த உருவம் அவன் தானா… தன் உடன் பிறந்தவன் தானா என்று அறிய வேண்டி கண்ணீர் நிறைந்த கண்களை நன்றாக உள்ளங்கைகளால் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவனே தான்!
அடுத்த நொடி வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல் அண்ணனை நோக்கி நகர்ந்தவள் யாரும் சுதாரிக்கும் முன்னர் அவனைப் பிடித்து இழுத்து கன்னத்தில் சுள்ளென்று ஒரு அறை வைத்திருந்தாள்.
தீயாய் தகித்த கன்னத்தை திவாகரன் பற்றிக் கொள்ள எத்தனித்த சமயம் மீண்டும் பட்டென்று ஒரு அறை வைத்திருந்தாள் தேன்மலர்.
அவள் கண்கள் அக்னியை ஏந்தி இருந்தது போல் செவ்வரியோடிக் கிடந்தது.
யாரும் அவளிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவே இல்லை! அமுதன் “மலர்…” என்ற அதட்டலுடன் மனைவியை நெருங்குவதற்குள் அடுத்தடுத்து இடியென திவாகரனின் கன்னத்தில் பளார் பளார் என அடிகளை இறக்கி இருந்தாள் தேன்மலர்.
அடிப்பதற்கு இடையே “சந்தோஷமா.. இப்ப சந்தோஷமாடா உனக்கு.. இப்ப மட்டும் எதுக்கு வந்த? இப்பயும் எங்கேயாவது குடிச்சுட்டு போய் படுத்திருக்க வேண்டியதுதானே!! ஏன் வந்த? அண்ணியும் குழந்தையும் உயிரோட இருக்காங்களா இல்ல செத்துட்டாங்களான்னு பாத்துட்டு போக வந்தியா.. இல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கவங்க கிட்ட குடிக்கிறதுக்காக காசு கேக்க வந்தியா? சொல்லுடா! ஏன் வந்த?”
ஆத்திரம் நிறைந்த குரலில் தங்கைக் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் திவாகரனை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
மௌனமாக அவளின் அடிகளை வாங்கிக்கொண்டு கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றிருந்தாதான்.
“மலர்..” என்று கணவன் தன்னைத் தடுக்க முயன்றதையோ, “தேனு.. திவாவை அடிக்காதடி. அவன் இப்ப குடிக்கிறது இல்ல” என்று அழுகுரலில் கெஞ்சிய அன்னையையோ கருத்தில் கொள்ளும் நிலையில் அவளில்லை.
அந்த அளவிற்கு அண்ணன் மேல் இருந்த அத்தனை ஆண்டு கால கோபத்தையும் ஒட்டுமொத்தமாக அவனிடமே இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
திவாகரனும் தங்கை அடிப்பதை எல்லாம் தடுக்காமல் “எவ்வளவு வேணாலும் என்னை அடிச்சுக்க தேனு. என்னைக் கொன்னு கூட போடு. ஆனா அதுக்கு முன்னாடி நான் கவியைப் பாத்துட்டு வந்துடுறேன்” என்று குரல் தழுதழுக்கக் கெஞ்சினான்.
அவன் வார்த்தைகளைக் கேட்ட தேன்மலருக்கு இன்னும் ஆத்திரம் பெருகியது.
“குடிகார ராஸ்கல்! இத்தனை நாள் அவங்க கஷ்டத்தை ஒரு பொருட்டாக் கூட நீ மதிச்சதில்லை. இப்ப உயிருக்கு போராடிட்டு இருக்க சமயம் மட்டும் நீ அவங்கள பார்க்கணுமா.. தேவையில்லை. இனிமேல் உன் பார்வை கூட அவங்க மேல படக்கூடாது. போடா.. இங்க இருந்து போ முதல்ல!” என்று இரைந்தவள் அவன் அசையாமல் நிற்கவும் வெறி வந்தவள் போல் அவன் நெஞ்சில் தன் இரு கரத்தையும் வைத்து பலம் கொண்டு அவனைத் தள்ளினாள்.
“தேன்மலர்..” என்று கிட்டத்தட்ட அழுத்தமாகக் கத்திய அமுதன், அவளின் முழங்கை பற்றி தன்னிடம் இழுத்து அவளை பலமாக உலுக்கியவன், “இவ்வளவு தூரம் எல்லாரும் சொல்லிக்கிட்டே இருக்கோம். ஆனா நீ வெறி வந்தவ மாதிரி உங்க அண்ணனை அடிச்சுக்கிட்டே இருக்க.. கொஞ்சம் நிதானமா ஆத்திரப்படாம கண்ணைத் திறந்து உங்க அண்ணனைப் பாரு! அப்ப தான் அவர் குடிகாரனா உன் கண்ணு முன்னாடி நிக்கிறாரா இல்ல உன் அண்ணிக்காக துடிக்கிற உன்னோட அண்ணனா நிக்கிறாரான்னு உனக்குத் தெரியும்” என்று அழுத்தமான குரலில் கூறவும் தான் தேன்மலர் நிதானத்திற்கே வந்தாள்.
அடி பட்ட குழந்தை போல் மலங்க மலங்க விழித்தாள். அமுதனுக்கு மனைவியின் விழிப்பில் உருகி விட்டது.
சட்டென்று முகிழ்த்த கோபம் கூட வடிந்துவிட, அவளின் கலைந்து கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கி, முகத்தை தன் கரத்தால் துடைத்து விட்டவன், “இனி இந்தக் கோபத்துக்கு அவசியம் இல்லடா மலர். என்னை நம்பு. உன் கீதன் பொய் சொல்ல மாட்டான்” என்றான் உருக்கமான குரலில்.
கணவனின் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையில் மெல்ல தன் உடன் பிறந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள் தேன்மலர்.
முதலில் அவள் கருத்தில் பட்டது அவன் தள்ளாடாமல் தடுமாறாமல் நிலத்தில் காலூன்றி நின்றிருந்தது தான். அதற்கே அவளின் கண்கள் மெல்லிய திகைப்பில் விரிந்து கொண்டன.
அடுத்ததாக தாடி மழிக்கப் பட்டு, தலைமுடிகள் சீராக வெட்டப்பட்டு கண்களுக்கு கீழ் கருவளையம் இல்லாமல் குடியின் தாக்கத்தினால் ஏற்பட்டிருந்த தொப்பை இல்லாமல், காலர் வைத்த வெள்ளை ஷர்ட் மற்றும் பழுப்பு நிற பேண்ட் சகிதம்
மிகவும் நல்ல விதமான புறத் தோற்றத்தில் இருந்தவனை அதிர்வில் விரிந்த கண்களுடன் பார்த்தாள் தேன்மலர்.
தன் உடன் பிறந்தவனா இவன் என்று அவளாலேயே நம்ப முடியவில்லை!
மங்கை மகளை நெருங்கி “அவன் இப்ப குடிக்கிறது இல்ல தேனு. மறுவாழ்வு மையத்தில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கான். உன்னோட அண்ணன் குடியை விட்டு ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு” என்று குரலடைக்க கூற, தாய் சொல்பவை நிஜமா என அறிய வேண்டி அவளின் கண்கள் தானாகக் கணவனின் புறம் திரும்பியது.
அமுதன் மெல்ல ஆமோதிப்பாக தலையசைத்ததும் மௌனமாக அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டாள் தேன்மலர்.
திவாகரன் கனத்த இதயத்துடன் தங்கையே பார்த்திருந்தான். தங்கையின் நம்பிக்கையைக் கூட சம்பாதிக்கவில்லை எனும் விஷயம் அவனை இன்னும் கூனிக் குறுக வைத்தது.
“நீங்க போய் கவி அக்காவ பார்த்துட்டு வாங்க மாமா. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கள ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிட்டு போயிருவாங்க” என்று அமுதன் சொல்லியதும் மேலும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் மனைவியைக் காணச் சென்றான் திவாகரன்.
வேக நடையுடன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் செல்லும் அண்ணனைக் கண்ட தேன்மலருக்கு அச்சூழ்நிலையின் துக்கத்தையும் மீறி உடன் பிறந்தவன் இந்த அளவிற்கு எப்படி மாறினான்? எவ்வாறு குடியை நிறுத்தினான் எனும் கேள்வி மனதை ஆக்கிரமித்தது.