மலர் பாதம் பணிந்து..38

மலர் பாதம் பணிந்து – 38 

ரஞ்சிதன் திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில்… 

அன்று காலை மாமியாரின் உதவியுடன் சமையல் வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தாள் கவிரத்னா. 

மதிய சமையலுக்கு வெங்காயம் நறுக்கியபடி மருமகளை மெல்ல ஏறிட்ட மங்கையின் முகத்தில் கவலையும் கலக்கமும் சூழ்ந்திருந்தது. 

“கவி… தேனு கிட்ட பேசுனியா?” என்று மெல்லிய குரலில் கேட்டார் மங்கை. 

மாமியார் கேட்ட கேள்வியில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்தி விட்டாள் கவி. 

பதில் சொல்ல முடியாது தொண்டை அடைத்துக் கொண்டது. 

“கவி..” என்று மங்கை அழைக்க, 

“பேசல அத்த..” என்றாள் குரலடைக்க! 

“வருத்தப்படாத கவி. பாவம் அவளும் தான் என்ன செய்வா?” என்றவரின் குரலும் துயரத்தில் அடைத்தது. 

“முதல்ல மாப்பிள்ளை தேனு கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு நம்ம வாயை கட்டிப் போட்டாருன்னா இப்ப இந்த திவா பய நம்ம வாயை கட்டி வச்சிருக்கான். என்ன தான் பண்றது? பாவம் தேனு. எதுவும் தெரியாம நமக்காக ரொம்ப கஷ்டப் படுறா..” என்றவருக்கு

இரண்டு நாட்கள் முன்பு நடந்த நிகழ்வு தான் கண் முன்னே விரிந்தது. 

அன்று திவாகரனைப் பார்க்க வேண்டும் என்று காலையில் தேன்மலர் வர, அவன் வீட்டில் இல்லை. சரி என்று மறு நாள் காலையும் வேலைக்கு செல்வதற்கு முன்பு வந்து நின்றாள். 

அப்போதும் வீட்டில் அண்ணனின் நடமாட்டத்தை காணாமல் துணுக்குற்று அன்னையிடம் “எங்கம்மா அவன்? நானும் ரெண்டு நாளா தொடர்ந்து வரேன். அவனைப் பாக்கவே முடியல. என்ன தான் பண்றான்?” என்று பொறுமை இழந்து கேட்க,

“அவனை பத்தி தெரியாதா தேனு. முதல்ல நீ வா. உக்காந்து சாப்பி..டு” என்று மங்கை சொன்னது தான் தாமதம்! 

“பேச்சை மாத்தாதமா!!” என்று இரைந்திருந்தாள் தேன்மலர். 

அவளின் கோபத்தில் மங்கை அரண்டு மிரண்டு போனார். கவி அப்போது தான் குளித்து விட்டு வந்திருக்க, தேனுவின் சத்தத்தில் அவளும் சற்று திகைத்து தான் போனாள். 

ஹாலில் வந்து நின்ற அண்ணியை கண்டு அவளிடம் சென்ற தேன்மலர் “அண்ணி நீங்களாவது சொல்லுங்க ப்ளீஸ். இங்க என்னதான் நடக்குது? திவாகரன் வீட்டுக்காவது வர்றானா இல்லையா? வேற எங்கேயாவது போயிட்டானா? இல்ல வேற ஏதாவது தப்பு பண்றானா? அதை நீங்க என்கிட்ட சொல்ல முடியாம கஷ்டப்படுறீங்களா? எதா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று கெஞ்ச, கவிரத்னாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.  

அவளின் கண்ணீர் தேன்மலரை இன்னும் பயம் கொள்ளச் செய்ய, அவளின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “அண்ணி எதா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி. உங்களுக்குள்ளயே வச்சு கஷ்டப்படாதீங்க” என்றாள் அவளும் கண்ணீருடன். 

மங்கைய இதற்கு மேல் மகளிடம் மறைப்பது கஷ்டம் என்று உண்மையைச் சொல்ல முன்வர அதற்குள் கவி தேன்மலரை அணைத்துக் கொண்டு “தேனு.. நான் சொல்றத நீ நம்புவ தானே..” என்றவள் கேட்டதும் அழுகையுடனே மேலும் கீழும் தலை அசைத்தாள் தேன்மலர். 

“ஹ்ம்ம். நான் சொல்றத நல்லா கவனமா கேளு தேனு. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்ல. நீ இந்த அளவுக்கு பயப்பட வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. எல்லாம் உனக்கே புரியும். அதுவரைக்கும் எதுவும் எங்களைக் கேட்காத தேனு. ப்ளீஸ்…” என்று ஆறுதலாகத் தொடங்கியவள் கெஞ்சலில் முடித்திருந்தாள். 

அவளின் பேச்சை எந்த வகையில் உள்வாங்கிக் கொள்வது என்று தேன்மலருக்கு மெய்யாகவே புரியவில்லை. 

‘எங்களை எதுவும் கேட்காதே என்று வேற சொல்கிறாரே அண்ணி!?’ என்று கலங்கியவள் 

“என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு திவா உங்களை மிரட்டி வச்சிருக்கானா அண்ணி..” என்று கலங்கிய குரலில் கேட்க, கவியின் இதழில் மெல்லிய புன்னகை!

“உங்க அண்ணன் எங்களை மிரட்டிட முடியுமா தேனு? மிரட்டி வேற ஏதாவது செஞ்சிருந்தா கண்டிப்பா உனக்கு சொல்லாம இருப்போமா?” என்ற கவி, 

தேன்மலரின் தாடையை பற்றி “அப்படி எல்லாம் எதுவும் இல்ல தேனு. நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு எதையும் யோசிக்காம இரு. நாங்க இங்க நல்லா தான் இருக்கோம்” என்றாள் நம்பிக்கையூட்டும் குரலில். 

கவி எவ்வளவு நம்பிக்கையாக பேசினாலும் தேன்மலரின் அடி மனதில் அசைக்க முடியாத அச்சமே பரவிக் கிடந்தது! 

திவாகரனால் அண்ணி அனுபவித்து வந்த துன்பங்களும் கஷ்டங்களும் கொஞ்சம் நஞ்சம் இல்லையே?  

இப்போது அவனை வீட்டிலும் பார்க்க முடியவில்லை! குடிகார வாழ்க்கையை மட்டுமே வாழ எங்காவது கண் காணாத தூரம் சென்று விட்டானோ.. இல்லை என்றால் வேறு ஏதாவது தப்பு செய்யத் துணிந்து வீட்டில் தங்க வில்லையோ என்று அவளின் மனம் மிக மோசமான எண்ணங்களை வளர்த்துக் கொண்டதே தவிற…

தன் உடன் பிறந்தவன் திருந்தி இருப்பான்… குடியை நிறுத்தி இருப்பான்… பெண்கள் மூவரின் வேண்டுதல் படி நல்ல மனிதனாக மாறி இருப்பான் என்றெல்லாம் அவளால் சிந்திக்கவே முடியவில்லை! 

அந்த அளவிற்கு சிந்திக்க விடாமல் செய்திருப்பது திவாகரன் ஏற்படுத்திய தாக்கங்கள் தானே! 

எதன் அடிப்படையில் அவளுக்குள் இந்த மாதிரியான நம்பிக்கைகள் பிறக்கும்? அதுவும் அண்ணன் இருந்த லட்சணத்தில் அவனை மாற்ற வேண்டும் திருத்த வேண்டும் என்கிற சிந்தனைகள் தான் அவளுக்குள் ஓடியதே தவிற, அவன் மாறி இருப்பான், திருந்தி இருப்பான் என்கிற சிந்தனை எல்லாம் அவளுக்கு வரவே இல்லை! 

அப்படி இருக்கையில் அவள் அண்ணியோ நீ பயப்பட வேண்டாம் என்று சொன்னால் அவளுக்குள் இருக்கும் பயம் நீங்கி விடுமா என்ன? 

மங்கையும் மகளிடம் நம்பிக்கையாகவே பேச, 

தனக்காக பொய் சொல்கிறார்களோ என்று கோபம் கூட வந்து விட்டது அவளுக்கு! 

இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் “நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட எதையோ மறைக்கிறீங்க! அப்படி என்ன என் கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்? நான் கஷ்டப் படக் கூடாதுன்னு தானே உங்க கஷ்டத்தை சொல்ல மாட்டேங்கிறீங்க. ஏன் அண்ணி இப்படி? எனக்கு கல்யாணம் ஆகுற முன்னாடி வரைக்கும் எந்தக் கஷ்டமா இருந்தாலும் நம்ம சேர்ந்து தானே அதை ஃபேஸ் பண்ணோம்? இப்ப ஏன் என் கிட்ட சொல்ல முடியாம தவிக்கிறீங்க!!” மெய்யான வருத்தத்துடன் அவள் கண்ணீர் சிந்த, 

“தேனு.. அப்படி எல்லாம் இல்லடா” என்று கவி சொன்ன எந்த சமாதானங்களும் எடுபடவில்லை. இறுதியில் அவர்கள் எதையும் சொல்லப் போவதில்லை என்று புரிந்த நொடி நீங்கள் எதுவும் சொல்லவே வேண்டாம். நானே தெரிந்து கொள்கிறேன் என்று கோபத்துடன் கிளம்பி இருந்தாள். 

அதற்கடுத்து அவர்களிடம் தேன்மலர் பேசவே இல்லை! 

இங்கு நடந்தவை அனைத்தையும் அமுதனிடமும் தெரியப் படுத்தி இருந்தார்கள்! 

அவனுக்கும் அதீத வருத்தமாகவே இருந்தது! 

திவாகரனின் மாற்றத்திற்கு பாதை வகுத்த முதல் நாளே தன் மலருக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று சொன்னதே அமுதன் தான்!

நினைத்தது போல் திவாகரனிடம் மாற்றம் இல்லை என்றால் அவனை மாற்றுவதற்கு வேறு வழி பார்க்க வேண்டும்! மேலும் அவன் மாறாமல் போனால் மனைவி வருத்தம் கொண்டு கலங்குவாள் என்பதற்காகவே ஆதியில் மலரிடம் எதைப் பற்றியும் சொல்ல நினைக்கவில்லை அமுதன். 

அதற்கு இணங்கவே கவியும் மங்கையும் அவளிடம் இந்த நொடி வரை மூச்சு விடவில்லை. 

ஆனால், அதன் பின்னர் திவாகரன் மறுவாழ்வு மையம் செல்கிறேன் என்று ஒப்புக் கொண்டு அவனுக்கும் சிகிச்சைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் ஓடி இருந்தன. 

அவனிடம் தென்பட்ட நல்ல மாற்றங்களை வைத்து மலரிடம் சொல்லி விடலாம் என்று அமுதன் சொல்லிய போது திவாகரன் ஒப்புக் கொள்ளவில்லை. 

“நான் ஃபுல்லா ட்ரீட்மெண்ட் எடுத்து முழுசா ரெக்கவர் ஆகி திரும்பி வரும் போதே அவளுக்குத் தெரியட்டும் அமுதன். அவ ரொம்ப வருஷமா ஆசைப் பட்டது, வேண்டிக் கிட்டது எல்லாமே நான் மாறி கவி, கோகுல் கூட நல்லா இருக்கணும்னு தானே. என்னோட மாற்றம் அவளுக்கு சர்ப்ரைஸ்சாகவே இருக்கட்டும். அது வரைக்கும் சமாளிங்க ப்ளீஸ்” என்று கெஞ்சி வேண்டுகோளாக கேட்டிருந்தான். 

எனவே, அவர்களும் அமைதி காத்து விட்டார்கள். ஆனால், இன்று மனைவியின் பயத்தையும் கவலையையும் கண்டு அவளிடம் சொல்லி இருக்கலாமோ என்று வருத்தம் கொண்டான் அமுதன். 

மேலும் திவாகரனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் போவதை தந்தையிடம் மட்டுமே தெரியப்படுத்தி இருந்தான் அமுதன். 

“கவி அக்கா அவுங்க வாழ்க்கைல நிறைய கஷ்டத்தையும் வேதனையையும் தான் ப்பா பாத்திருக்காங்க. இனியாவது அவுங்க வாழ்க்கையை எந்த கஷ்டமும் நல்லபடியா வாழணும்ப்பா. அதுக்கு தான் இந்த முடிவு” என்றபோது  

இன்பசேகரனும் மகனைத் தடுக்கவில்லை. 

“சரியோ தப்போ.. ஏதோ ஒரு வகைல திவா இப்படி இருக்கதுக்கு நான் காட்டத் தவறின அக்கறையும் அன்பும் ஒரு காரணம் தான் அமுதா. அதனால, அதை சரி செய்யிற கடமை எனக்கும் இருக்கு. அதனால இந்த விஷயத்துல நான் உன் கூட நிக்கிறேன்” என்றவர், 

“ஆனா, எது செஞ்சாலும் கவனமா செய் அமுதா. திவாகரன் என் தங்கச்சி மகன் மட்டும் இல்ல. உனக்கு மாமா! இனி அவனும் நம்ம குடும்பம் தான்” என்று கூறி இருந்தார். 

அமுதனும் தந்தை சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்து, தன் பாணியில் திவாகரனை வழிக்கு கொண்டு வந்து, போதையில் இருந்து மீட்டு அவனுக்கு நிதர்சனத்தை புரிய வைத்து அவனை மறு வாழ்வு மையத்திலும் சேர்த்திருந்தான். 

ஒரு கட்டத்திற்கு மேல் இதை எல்லாம் அவன் மனைவியிடம் சொல்லி இருக்க வேண்டும். திவாகரனின் வேண்டுகோளிற்கு செவி சாய்த்து மனைவியிடம் எதையும் சொல்லாமல் அவளை தவிப்பிற்கும் கவலைக்கும் உள்ளாக்கியதை எண்ணி உள்ளம் வருந்தியது. 

தேன்மலருக்கோ அன்றெல்லாம் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. மனம் முழுவதும் பயமும் கவலையும் கலக்கமும் மட்டுமே சூழ்ந்திருந்தது. 

மனம் கணவனின் அருகாமைக்கும் அவனின் ஆறுதலுக்கும் ஏங்கியது. உடனே அலுவலகத்தை விட்டு வெளியே வந்து அவனுக்கு அழைத்தாள். 

அமுதன் ஏற்காட்டில் இருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கிளம்பி சென்றிருந்தான். 

மனைவியின் அழைப்பைக் கண்டதும் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன், அழைப்பை ஏற்று “மலர்..” என்றான் ஒட்டு மொத்த உயிரையும் அவளின் பெயரில் தேக்கி! 

அவனின் அழைப்பே மலரின் கண்களை நிறையச் செய்ய, “கீதன்..” என்றாள் தழுதழுத்த குரலில்! 

“மலர்…” என்றவனும் கலங்க, தேன்மலரோ மடை திறந்த வெள்ளமென காலை அன்னை வீட்டில் நிகழ்ந்த அத்தனையும் கூறி விட்டாள்.

“என்னன்னு ரெண்டு பேரும் சொல்ல மாட்டேங்கிறாங்க கீதன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் கண்ணீருடன். 

“மலர்.. எதுக்குடா பயப்படுற! நான் இருக்கேன் தானே” என்று தெம்பூட்டும் விதமாகப் பேசினாலும் அவனின் கையணைப்பிற்குள் அடங்கி கண் மூடிக் கிடக்க மனம் தவியாய் தவித்தது. 

மனதில் தோன்றியதை மறைக்காமல் அவனிடம் வாய் மொழியாகவும் சொல்லி விட்டாள் தேன்மலர். 

“எனக்கு நீங்க வேணும் கீதன். உங்க கைக்குள்ள இருக்கணும் போல இருக்கு. கொஞ்ச நேரம் எதைப் பத்தியும் யோசிக்காம கண் மூடி அமைதியா இருக்கணும் போல இருக்கு. அப்ப தான் தெளிவாவேன் போல” என்றவள் தழுதழுத்த குரலில் தனக்கான அண்மைக்கு ஏங்குவதைக் கண்டதும் அமுதனால் முடியவில்லை. 

“மலர்..” என்றவன் தவிப்போடு அழைத்தான்! 

அவளின் இந்த கலக்கத்திற்கு முதல் காரணம் தான் தானே என்று நினைக்கும் போது அவனது மனமே அவனிடம் கோபம் கொண்டது! 

“மலர்….” என்றான் மீண்டும் தவிப்போடு. 

அப்போது தான் அவன் குரலில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தாள் தேன்மலர். 

“உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க ஏன் ஒரு மாதிரி டல்லா பேசுறீங்க..” தன் கலக்கம் மறந்து கணவனின் குரல் வேறுபாட்டை சரியாகக் கணித்துக் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல மலர். நான் இப்பவே கிளம்பி வரேன். நீ பயப்படாம இரு சரியா” என்றவன் சொன்னதும் தான் அவனின் வேலை பளுவையே உணர்ந்தாள் தேன்மலர். 

இன்னும் மூன்றே மாதங்களில் ஏற்காட்டில் கட்டிக் கொண்டிருக்கும் புதிய ரெசார்ட் வேலைகளை முடித்தாக வேண்டும். அதன் பின்னர் ரிசார்ட்டின் திறப்பு விழா வேறு உண்டு! 

எனவே, இறுதி வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்த நிலையில் தான் அமுதன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்காடு கிளம்பிச் சென்றிருந்தான்.

திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்ல முடியாது என்று முன் கூட்டியே சொல்லி விட்டு தான் சென்றிருந்தான். 

ஆனால், இப்போது தான் கலங்கியதும் உடனே கிளம்பி வரேன் என்று கூறிய கணவனின் அன்பில் நெகிழ்ந்து போனவள், “இல்ல கீதன். அங்க வேலை எல்லாம் நெருக்குப்பதமா முடியிற ஸ்டேஜ்ல இருக்குன்னு சொன்னீங்க தானே. நீங்க வேலையைப் பாருங்க. அங்க இப்ப நீங்க இருக்க வேண்டியதும் அவசியம் தான். நான் சமாளிச்சுப்பேன் உங்களால எப்ப முடியுதோ அப்பவே வாங்க” என சற்றே தெளிந்த குரலில் பேசியவள் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

அவள் தெளிவாகப் பேசினாலும் அமுதனுக்குத் தான் மனம் அடித்துக்கொண்டது. 

இப்போதே இந்த நொடியே கிளம்பி அவளைத் தன் கைக்குள் பொத்திவைத்து அனைத்தையும் கூறி முன்பே சொல்லாததற்கு மன்னிப்பையும் கேட்டு அவளைத் தேற்ற வேண்டும் என்று ஒரு மனம் துடிக்க, இன்னொரு மனமோ ‘திவாகரன் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டார் தானே அமுதா.. மலருக்கும் சப்ரைஸ்சாவே இருக்கட்டுமே.. இன்னும் ஒரு மாசத்துல திவாகரன் ட்ரீட்மென்ட் கம்ப்ளிட்டா முடிஞ்சிடும். அது வரை எப்படியாவது சமாளிக்கலாம்’ என்று யோசித்தது! 

ஆனால், அதுவரை மனைவியை சமாளிப்பது கடினமே என்று நிதர்சனம் புரிந்தது அவனுக்கும். 

அந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டவனாக, இனிமேலும் திவாகரன் விஷயம் குறித்து மனைவியை கலங்க விடக்கூடாது எனும் நோக்கத்துடன் ‘இல்ல வேண்டாம் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பி போய் மலர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்’ என்ற முடிவிற்கு வந்திருந்தான் அமுதகீதன். 

திவாகரனுக்கும் தொடர்பு கொண்டு “மலர இதுக்கு மேல என்னால கஷ்டப்படுத்த முடியாது மாமா. உங்களை நினைச்சு கவலைப்படுறத விட உங்களால கவியும் அத்தையும் கஷ்டப்படுறாங்களோனு நினைச்சு கவலைப்படுறா. அதனால நான் சொல்லிடுறனே..” என்று கூறிய அமுதனின் வார்த்தைகளை திவாகரனாலும் தட்ட முடியவில்லை! 

கூடவே, தங்கைக்காக அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு வீட்டு மாப்பிள்ளையை எண்ணி பெருமை பொங்கிய அதே சமயம் தன்னை எண்ணி வெட்கித் தலை குனிந்தான். 

கவிக்காக இப்படி எல்லாம் அவள் அக்கறை கொண்டதாக அவன் நினைவிலேயே இல்லை! 

முதலில் அவனே ஒரு நிலையில் இல்லாத போது மனைவியைப் பற்றி எங்கே அக்கறை கொள்ள? 

போதை தன் ஒரு பகுதி வாழ்க்கையை விழுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், தன்னையும் அதற்கு அடிமையாக்கி அதன் கைவலைவில் இத்தனை நாட்கள் தான் தெரிந்தே நெரிபட்டுக் கிடந்ததை ஒரு வித அருவருப்புடன் உள்வாங்கிக் கொண்டான். 

நல்ல வேளையாக… தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அன்று அமுதன் தன்னையும் ஏற்காட்டிற்கு அழைத்தபோது ஏதோ ஒரு போதை கலந்த நினைப்பில் உடன் வருகிறேன் என்று சொன்னது நல்லதற்கே என்று இன்று எண்ணிக்கொண்டான். 

இல்லையென்றால் இத்தனை தெளிவாக அவனால் சிந்தித்திருக்க முடியாதே!! 

“மாமா..” என்று அமுதன் அழைத்ததும், தன்னிலை மீண்டவன், “சரிங்க மாப்பிள்ளை. உங்க முடிவு படியே தேனுக்கிட்ட சொல்லிடுங்க” என்ற திவாகரன், 

“அப்புறம்… என்னை மாமான்னு எல்லாம் கூப்பிடாதீங்க மாப்பிள்ளை. நீங்க இப்படி மரியாதையா கூப்பிடறதுக்கு நான் தகுதியானவன் கூட கிடையாது” என்று தாழ்ந்த குரலில் கூற, 

அதைக் கேட்டு ஒரு நொடி மௌனமாக புன்னகை சிந்திய அமுதன் “முன்ன எப்படியோ.. ஆனா, என்னைக்கு நீங்க இத்தனை நாள் குடிச்சதுக்காக வருத்தப்பட்டு, அந்தத் தப்பை உணர்ந்து, நான் மாறுறேன்னு நல்ல முடிவை எடுத்து அதுக்குரிய பாதைல நடக்க ஆரம்பிச்சீங்களோ அப்பவே நீங்க நல்லதொரு மாற்றத்துக்கு தகுதியாகிட்டீங்க மாமா” என்றவன், 

“அப்புறம் என்னை விட நீங்க வயசுல மூத்தவர் கூட! அப்புறம் மாமான்னு கூப்பிடாம…!” என்று உரிமையாகக் கூறியவன், 

“நான் இன்னும் ரெண்டு நாள்ல தாரமங்கலம் போகலாம்னு இருக்கேன். அப்ப மலர்கிட்ட சொல்லிடுறேன். என்ன ரியாக்ஷன் கொடுப்பான்னு எனக்குத் தெரியல. ஆனா உங்களை பாக்கணும்னு சொன்னான்னா கூட்டிட்டு வரேன் மாமா” என்றதும் திவாகரனும் ஒப்புக்கொண்டான். 

மங்கை மற்றும் கவிரத்னாவிடம் நேரில் சென்று சொல்லிக் கொள்ளலாம் என்றவன் அவர்களுக்கு அழைத்துப் பேசவில்லை. வேலைப் பளுவும் அவனை இழுத்துக்கொள்ள, இரண்டு நாட்கள் தன்னால் முடிந்த மட்டும் வேலைகளை கவனித்தவன், அடுத்த நாள் பிற்பகல் பொழுதில் நந்தனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இதோ தாரமங்கலம் புறப்பட்டிருந்தான். 

மாலை நான்கு மணி போலவே தாரமங்கலம் வந்தடைந்தவன் முதலில் மாமியார் இல்லத்திற்கு தான் சென்றான். 

அப்போது தான் கோகுலனை பள்ளியில் இருந்து அழைத்து வரவென கிளம்பிக் கொண்டிருந்தாள் கவி. அமுதனைக் கண்டதும் இன்முகத்துடன் அவனை வரவேற்று அவனுக்கான காபியை கலந்து கொடுத்தாள். 

“தேனு ரெண்டு நாளா பேசவே இல்ல மாப்பிள்ளை..” என்று காலையில் தொடங்கிய வருத்தம் இன்னமும் நீங்காத கவலையில் 

மங்கை பேச, தன் முடிவைப் பற்றி அமுதன் கூறியதும், மங்கைக்கு அப்படி ஒரு ஆசுவாசம்! 

“முதல்ல நீங்க போய் தேனு கிட்ட சொல்லுங்க மாப்பிள்ளை. பாவம் பிள்ள ரொம்ப தவிச்சு போறா..” என்றதும், கவியும் அதையே ஆமோதித்தாள். 

“அப்புறம் திவாகிட்ட பேசினீங்களா மாப்பிள்ளை?” என்று மங்கை ஆவலே உருவாய் கேட்க, “ஹ்ம்ம்.. ரெண்டு நாள் முன்னாடி ‘ரீஹாப்.சென்டருக்கு’ கூப்பிட்டு இந்த விஷயம் பத்தி பேசினேன் அத்த” என்றவன், திவாகரனுடன் பேசியதையும் பகிர்ந்து கொண்டான். 

மங்கைக்கு மகனோடு பேச வேண்டும் என்கிற ஏக்கம் கழுத்து வரை உள்ளது. ஆனால் இப்போது திவாகரன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் மறுவாழ்வு மையத்தில் தீவிர சிகிச்சை

மேற்கொள்ளும் உள்நோயாளிகளுக்கு அலைபேசி உபயோகிக்க கூடாது எனும் சட்ட திட்டங்கள் உள்ளது. 

எனவே, எதாவது முக்கியத் தகவல்கள் பகிர வேண்டும் என்றாலோ, பேச வேண்டும் என்றாலோ மறுபாழ்வு மையத்தின் அலைபேசி எண்ணிற்கே அழைத்து பேச வேண்டும். அதிலும் தினமும் பேச அனுமதி கிடையாது. வாரத்திற்கு இரண்டு முறை. அவ்வளவே!

நோயாளியின் கவனம் முழுவதும் சிகிச்சையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி சில கடுமையான விதிமுறைகள் வைத்திருப்பது சகஜம்தான். 

ஆனால் மங்கைக்கு தான் மகனை எண்ணி கவலையாக இருந்தது. “முன்ன எல்லாம் போதையில் உளறிக் கொட்டுவான் மாப்பிள்ளை. அவன் பேசறத தெளிவா புரிஞ்சுக்கவே முடியாது. ஆனா இப்ப வாரத்துக்கு ரெண்டு முறை தான் பேசுறான். பேசுறது என் மகன் தானான்னு வாயைப் பொளக்குற அளவுக்கு அவ்வளவு தெளிவா சுத்தமா உளறாம பேசுறான். ஆனா, அஞ்சு நிமிஷம் கூட தொடர்ந்து பேசுறது கிடையாது. உடனே வச்சிடுறான்” என்று புலம்பித் தீர்த்தார். 

அத்தையின் பேச்சில் புன்னகைத்தவன் “ட்ரீட்மென்ட் முடிய இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அத்த. முடிஞ்சதும் திவா மாமா இன்னும் சூப்பரா ரெக்கவர் ஆகிடுவாரு. அப்புறம் நீங்க எவ்வளவு நேரம் வேணாலும் உக்காந்து பேசலாம்” என்று சிரிப்புடன் கூறியவன், கவியின் முகத்தைப் பார்க்க, அவளின் முகத்தில் ஆழ்ந்த அமைதி மட்டுமே நிலவியது. 

அதைக் கண்ட மங்கை அமுதனிடம் வருத்தமாக “என்னதான் இந்த திவா பய திருந்தி இப்ப நல்ல வழியில மாறிட்டாலும் அவன் கிட்ட பேச சொன்னா இந்த கவி பேசவே மாட்டேங்குறா மாப்பிள்ள!” என்று அதற்கும் புலம்பித் தீர்த்தவரை இதழ்விரியா புன்னகையுடன் ஏறிட்ட அமுதன், 

“என்னதான் உங்க பிள்ளை நல்ல வழியில மாறிட்டாலும் கவி அக்கா கடந்து வந்த வழில எல்லாம் வலியும் வேதனையும் மட்டும் தானே அத்த மிச்சம் இருக்கு. மாமா முழுசா குணமாகி வந்தாலும் கவி அக்கா ஒதுங்கி நின்னாங்கன்னா அதுல தப்பே கிடையாது.

அவங்களுக்கான ஸ்பேசை நாம கொடுத்து தான் ஆகணும். ஏன்னா எல்லாரையும் விட அவங்க பட்ட கஷ்டங்கள் தான் அதிகம்” என்றதும் மங்கை கண்ணீருடன் மருமகளைப் பார்க்க, கவி கண்ணில் நிறைந்த நீருடன் அமுதனைப் பார்த்து, 

“புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி” என்றாள் கலங்கிய குரலில். 

அந்த நொடி மங்கைக்குமே மருமகளை எண்ணி நெஞ்சம் பெருமையிலும் வேதனையிலும் விம்மித் தணிந்தது. 

மருமகள் விலகிச் சென்றிருந்தால் நிச்சயம் இந்த குடும்பம் சிதறி இருக்கும் என்பது சர்வ நிச்சயம்!  

மகனும் மாறி இருக்க மாட்டான்! ஒற்றை பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு அவர் அல்லாடி இருக்கக் கூடும்!

ஆனால், அதற்கெல்லாம் விடாமல் இந்த குடும்பத்திற்கு ஆணி வேராக நின்ற மருமகளை கண்ணில் கனிவுடன் பார்த்தவர் “உன் கஷ்டம் புரியாம நானும் என் மகனை மாத்திக் காட்டுறேன் பேர்வழின்னு எதை எதையோ செஞ்சு உன்னையும் தேனுவையும் நிறைய கஷ்டப் படுத்திட்டேன் கவி. அதுக்கெல்லாம் என்னை மன்னிச்சிடு” என்று மனதார மன்னிப்பை வேண்டினார் ஞானமங்கை. 

அதில் கவி “என்ன அத்த நீங்க.. இப்படி கண்ணை கசக்கிட்டு?” என்று அவரை கண்டித்து, “முதல்ல தண்ணியை குடிங்க” என்று நீரை கொண்டு வந்து கொடுத்தாள். 

தண்ணீரை வாங்கிப் பருகியவர், அத்தனை நாட்கள் அவளின் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வாங்கியது பற்றியும் விளக்கம் தர முயல, “போதும் அத்த. இனி அதைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம். விடுங்க. டைம் ஆச்சு. ஸ்கூல் முடிஞ்சிருக்கும். நான் போய் கோகுலை கூட்டிட்டு வந்துடறேன்” என்றவள் அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

சரி பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று மங்கையும் விட்டு விட, அமுதனும் தன் இல்லத்திற்கு கிளம்பி இருந்தான். 

கவி ஸ்கூட்டியை எடுப்பதை கண்டவன் “என் கூடவே வாங்கக்கா. ஸ்கூலுக்கு போய் கோகுல கூப்பிட்டதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் வீட்லயே கொண்டு வந்து விட்டர்றேன்” என்று அமுதன் அழைக்க, 

“உங்களுக்கு எதுக்கு தம்பி வீண் சிரமம்.. நீங்க முதல்ல போய் தேனுவப் பார்த்து இந்த விஷயத்தை சொல்லுங்க. நான் போய் கோகுல கூப்பிட்டுக்கிறேன்” என்றவள் சொல்லியதும் அமுதனும் புன்னகையுடன் சரி என்று விட்டு கிளம்பி இருந்தான். 

ஆனால், அடுத்த நாற்பது நிமிடங்களிலேயே ஏன் அவரை தனியாக விட்டோம் என்று உடைந்து போனான் அமுதன்!

கோகுலனை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுது பின்னால் வந்த மினி வேன் ஒன்று ப்ரேக் கட்டுப்பாட்டை இழந்து கவியின் ஸ்கூட்டியில் பலமாக மோதியிருக்க சாலையோடு சாலையாக தாய் மகன் இருவரும் வண்டியுடன் இழுபட்டு எதிர் புற சாலையின் ஓரத்தின் வரை சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தனர்! 

error: Content is protected !!
Scroll to Top