மலர் பாதம் பணிந்து..37

அத்தியாயம் – 37

மூவருமாக ஏற்காடு கிளம்பும் நேரம் வசுந்தலா மகனிடம் “நீயும் தேனுவும் மட்டும் போய்ட்டு வாங்களேன் அமுதா. கல்யாணமாகி நீங்க எங்கேயும் போகல” என்று கூற, 

“இல்லமா.. நாங்க கிருஷ்ணாவோடயே போறோம்” என்றவனிடம் அதற்கு மேல் வசுந்தரவால் அழுத்தமாக பேச முடியவில்லை. 

இன்பசேகரனிடம் சொன்னபோது “விடு வசு. அவுங்க எல்லாம் கிளம்ப ரெடி ஆகிட்டாங்க. கிருஷ்ணா சந்தோஷமா கிளம்புறா. இந்த நிமிஷம் எதையாவது சொல்லி அவ சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம்” என்று சொல்லி விட்டாலும் மகனின் சந்தோஷமும் அவருக்கு முக்கியமாகப் பட்டது. 

மகனை அழைத்து நீங்கள் மட்டும் செல்லுங்கள். கிருஷ்ணாவை நானும் அன்னையும் எங்காவது அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லிப் பார்த்தார் இன்பசேகரன்.

அமுதன் அவரிடம் “எங்களுக்காக யோசிக்கிறீங்கன்னு புரியுது ப்பா. ஆனா, கிருஷ்ணா அம்மா கூட.. வாய்ப்பில்லை ப்பா. எங்களோட அவளைக் கூட்டிட்டு போறதுல ஒரு பிரச்சனையும் இல்ல. எங்களுக்கு சந்தோஷம் தான்!” என்று சொல்லி விட, இன்பசேகரன் புரிந்தார் போல் மேலும் எதுவும் சொல்லவில்லை! 

மனைவி தங்கையுடன் ஏற்காடு கிளம்பி இருந்தான் அமுதன். கொண்டை ஊசி வளைவுகளில் லாகவமாக கணவன் காரினை செலுத்தும் அழகை ரசித்தாலும் மறு புறம் சாலையின் அமைப்பும் வளைவு முனைகளை தாண்டித் தெரிந்த அடர்ந்த மண் சரிவும் புதரின் தோற்றமும் மலருக்குள் சற்று பயத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், அதை முழுதாக யோசிக்க விடாமல் அடிக்கடி சோர்ந்து தலை சுற்றி, முடியாத நேரங்களில் வாந்தி எடுத்து என தேன்மலரை நன்றாகவே பயமுறுத்தி இருந்தாள் கிருஷ்ணரூபி.

“அவளுக்கு ஹில் ஏறுர வரைக்கும் இப்படி தான் ட்ராவல் சிக்னஸ் படுத்தும் மலர். அங்கே போய் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவா” என்று தன்னை சமாதானம் செய்த கணவனை நன்றாக திட்டித் தீர்த்தாள் தேன்மலர். 

“கிருஷ்ணாக்கு இந்த ஹில் ட்ராவல் ஒத்துக்கலேன்னா வேற எங்கேயாவது போற மாதிரி பிளான் பண்ணி இருக்கலாம் தான.. அதை விட்டுட்டு.. இப்ப பாருங்க. ரொம்ப கஷ்டப்படுறா” என்று அண்ணனைப் பொரிந்து தள்ளிய அண்ணியின் கரத்தினை பற்றிக் கொண்ட கிருஷ்ணா, 

“எனக்கு இந்த ட்ராவல் ஒத்துக்காது தான் அண்ணி. அதான் அடிக்கடி இங்க அண்ணா கூட வர மாட்டேன். ஆனா, ஏற்காடு வர ரொம்பப் பிடிக்கும். அதுவும் இப்ப உங்க கூட வரேன். சொல்லவா வேணும்? ரிசாட் போய் ரெஸ்ட் எடுத்தா நார்மல் ஆகிடுவேன். அண்ணாவைத் திட்டாதீங்க. பாவம் என் அண்ணா. பாருங்க.. நீங்க திட்டின திட்டுல கப் சிப்னு வண்டியை ஓட்டிட்டு இருக்காங்க” என்று கூறி கண் சிமிட்ட, “வாலு” என்று செல்லமாக அவளின் கையில் தட்டியவள் கணவனைப் பார்த்தாள். 

கண்ணாடி வழியே மனைவியைப் பார்த்தவன் தங்கை கண்களை மூடி சீட்டில் சாய்ந்ததை உறுதி செய்து கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்து மனைவிக்கு இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றினை பறக்க விட, திகைத்து போய் கணவனைப் பார்த்தவள் கிருஷ்ணாவை கண் காட்டி கண்டிப்புடன் முறைத்து ‘கப் சிப்னு இருக்கிற ஆளைப் பாரு..’ என்று மனதிற்குள் அவனை செல்லமாக திட்டி விட்டு தானும் கண் மூடி சாய்ந்து கொண்டாள். 

ஒரு வழியாக பயணம் முடிந்து காலை எட்டு மணி போல் தங்களின் ரிசார்ட் வந்ததும், காரை விட்டு கீழிறங்கிய தேன்மலர் தலை சுற்றி தடுமாறிய கிருஷ்ணாவை கைத் தாங்களாக பிடித்துக் கொண்டாள். 

மூன்றாம் தளத்தில் இருக்கும் அவர்களின் தனிப்பட்ட அறைக்கு வந்தவுடன் ஒரு பழச் சாறினை மட்டும் அருந்தி விட்டு அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று உறங்கி விட்டாள் கிருஷ்ணா. 

அவளுக்குப் போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்த மனைவியிடம் “நீ கிருஷ்ணா கூட ரெஸ்ட் எடு மலர். நான் போய் அந்த ரிசார்ட் வேலை எப்படிப் போகுதுன்னு ஒரு பார்வை பார்த்திட்டு வரேன். பக்கத்துல இருக்கது நம்ம ரூம் தான். அங்க போய் தூங்குறதுனாலும் தூங்கு. நான் போய்ட்டு கொஞ்ச நேரத்தில வந்திடுறேன். பாவம் இத்தனை நாளும் நந்தன் தான் எல்லாம் தனியா பாக்குறான்” என்றதும், “போய்ட்டு வாங்க கீதன்” என்று அவனை அனுப்பி வைத்தாள் தேன்மலர். 

அவன் சென்றதும் அந்தத் தளத்தை ஒரு முறை சுற்றிப் பார்வையை வீசினாள். காரை விட்டு இறங்கி வந்ததுமே கிருஷ்ணா இருந்த நிலைமையில் அவளால் சரியாக எதையும் கவனித்துப் பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்கத் துவங்கினாள். 

நன்கு விஸ்தாரமான தளம்! இந்தத் தளம் மொத்தம் நந்தன் மற்றும் நம் குடும்பத்தார் பயன்படுத்த மட்டுமே என்று கூறி விட்டு தான் சென்றிருந்தான் அமுதன். ஆனாலும், அவன் வராமல் தனியே அறைக்குள் செல்லத் தோன்றவில்லை தேன்மலருக்கு.

எனவே, கண்களுக்கு குளிர்ச்சியாக தெரிந்த எதிர் புற இயற்கை காட்சியையும், கணவனின் உழைப்பால் உயர்ந்து நிற்கும் ரிசார்ட் பகுதியையும் நன்றாக பார்வையிடத் தொடங்கினாள்.  

இந்தத் தளத்திற்கு கீழே இன்னும் இரண்டு தளங்கள் இருந்தன. வெள்ளையும் வுட்டன் கலந்த (Wooden) நிறத்தில் தான் கட்டிடம் முழுவதும் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. 

அந்த விராந்தையின் கைப்பிடிச் சுவரை பற்றிக் கொண்டு கீழே ரிசார்டின் முன் பகுதியில் செங்குத்தான அமைப்பில் குவிந்து கிடந்த சிறிய புல் மலையை பார்த்தவள் மனம் அந்தப் பச்சை வர்ண எழிலில் அப்படியே மயங்கிப் போனது.  

புல் வெளியை சுற்றி சிறிய பைப்கள் மூழம் புஸ்வானம் போல் பொங்கி எழும் நீர் அமைப்பு மேலும் அந்த புல் குவியலுக்கு அழகு சேர்த்திருக்க, ரிசார்ட் கட்டிடத்தினை சுற்றி, விட்டால் வானத்தை முட்டி விடுவேன் என்று சொல்லும் வகையில் ஓங்கு தாங்காக எழுந்து நின்ற மரங்கள் குறுகிய அடர்ந்த வனம் போல் ரம்மியமாக காட்சி அளித்தாலும் சற்று கிலியைக் கொடுத்தது.  

சூரியன் உதிக்கும் நேரம் தான் என்றாலும் வானத்தில் மேகங்களின் சங்கமம் நிகழவிருக்கிறதை பறைசாற்றும் வகையில் ஆகாய நீல நிறம் கருமைக்கு மாறி இருந்தது. 

மேகங்கள் மிக நெருக்கத்தில் தெரிய, சற்று நேரத்தில் மெல்லிய தூறல் விழத் தொடங்கின. 

தூறல் வலுத்ததும் தேகம் முழுவதும் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ, கைகளால் தன்னைத் தானே அணைத்துக் கொண்டு அந்த விராந்தையிலேயே கைப் பிடிச் சுவரில் சாய்ந்து நின்று விட்டாள் தேன்மலர். 

கைப்புடிச் சுவர் அவளின் இடுப்பளவிற்கே இருக்க, மழை அவளின் மேனியை நன்றாக நனைந்திருந்தது. குளிரில் பற்கள் எல்லாம் தந்தி அடிக்கத் தொடங்கிய பின்னர் தான் பெரு மழை பெய்வதை உணர்ந்து நன்றாக நனைந்து விட்டோம் என்று தன்னைக் குனிந்து பார்த்தவள், அணிந்திருந்த சுடிதாரின் ஷாலினை எடுத்து அதன் மெல்லிய ஈரத்தைப் போக்க ஒரு முறை உதறி விட்டு நன்றாக தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்டு மீண்டும் மழையினை ரசிக்கத் துவங்கி விட்டாள். 

அவள் அப்படி ரசித்துக் கொண்டிருக்கும் போது தான் அமுதன் வந்திருந்தான். அவனுமே மழையில் நன்றாக நனைந்து போய் வந்திருக்க, மனைவி நின்று ரசித்துக் கொண்டிருப்பதை எல்லாம் தாண்டி அவளின் தேகம் குளிரில் நடுங்கியதைக் கண்டவன், “மலர்..” என்றபடி வேக வேகமாக அவளை நெருங்கினான். 

கணவன் குரலில் அவன் புறம் திரும்பியவள் அவன் நன்றாக நனைந்து வந்திருப்பதை கண்டு “ஐயோ.. என்ன இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கீங்க” என்று கேட்க, 

“நீ மட்டும் என்ன? பாரு எப்படி குளிர்ல நடுங்குறேன்னு.. வா முதல்ல உள்ள போகலாம்” என்று கடிந்தபடி அவளின் கைப் பற்றி அறைக்குள் அழைத்துச் சென்றான். 

அங்கே ஹீட்டர் இருக்க, அதைப் போட்டு விட்டு, கொண்டு வந்திருந்த லக்கேஜ்களில் இருந்து தங்களின் துவாலையை எடுத்தவன், டவல் ஒன்றினை அவளிடம் நீட்டி “முதல்ல ஈரத்தை துடை மலர். எப்படி நடுங்குற பாரு. உள்ள வந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான. அதை விட்டுட்டு இப்படி மழைல ஏன் நின்னிட்டு இருந்த” என்று மீண்டும் கடிந்து கொண்டான். 

தலை முடிக்கு மொத்தமாக பின்னலில் இருந்து விடை கொடுத்தவள் துவாலை கொண்டு தலையை துடைத்தபடி “அங்க நின்னு பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருந்தது கீதன். அதான் அப்படியே நின்னுட்டேன்” என்றவள், சட்டையைக் கழற்றிய நிலையில் முகம் மார்பு என்று துடைத்துக் கொண்டிருந்த கணவனைக் நெருங்கி நிற்க, அமுதன் சிரிப்புடன் துடைப்பதை நிறுத்தி விட்டு மனைவியைப் பார்த்தான். 

அவளும் சிரித்தபடி அவனின் துவாலையை வாங்கி தனதையும் சேர்த்து கட்டிலில் போட்டு விட்டு அவனை அணைத்துக் கொள்ள, “மலர்..” என்ற அமுதனின் குரல் குழைந்து போய் வந்தது. 

“ஹ்ம்ம்..” 

“நான் குளிக்கனும் மலர். மழையில நனைஞ்சுட்டு வந்தது ஒரே கசகசன்னு இருக்கு”

தன் கன்னத்தை அவன் மார்பில் உரசியபடி “ஹ்ம்ம். நானும் குளிக்கணும். ஆனா, இப்ப இல்ல. அப்புறம்..” என்று இழுவையாக இழுத்தாள். 

அமுதனுக்கு அதற்கு மேல் வேறெந்த எண்ணமும் இல்லாமல் போக, மலரை கையில் ஏந்தினான்! கூடவிருந்தவர்களை கட்டில் ஏந்திக் கொள்ள, தன் கழுத்து வளைவில் தேடலைத் தொடங்கிய கணவனின் கன்னம் பற்றி தன்னைக் காண வைத்தவள் “கிருஷ்ணா?” என்று இளையவள் பற்றி கேட்க, 

“அவ தூங்கி எழுந்திருக்க மதியம் மேல ஆகிடும் மலர்” என்றவனுக்கு எப்போதும் தங்கையை நினைத்து அக்கறை கொள்ளும் மனைவி மீது நேசம் பெருகிக் கொண்டே இருந்ததே தவிற குறையவில்லை. 

அதுவும் கிருஷ்ணாவிற்கென அவர்கள் எடுத்த முடிவின் படி முதல் கூடலைத் தவிர்த்து இருவரும் இணைந்த அடுத்த கூடல் எல்லாம் குழந்தை உருவாகாத வகையில் பாதுகாப்பான கூடலாகவே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள் தேன்மலர். 

அமுதன் அவளிடம் “இந்த முடிவு தான் உனக்கு விருப்பம்னா எனக்கும் அதுல சம்மதம் மலர். ஆனா, நாலு வருஷம்.. நாலு வருஷம் குழந்தையை தள்ளிப் போடுறது சாதாரண விஷயம் இல்ல. குழந்தை இல்லாம இருக்கது எல்லார் கண்ணையும் உறுத்த ஆரம்பிக்கும். தேவை இல்லாத பேச்செல்லாம் வரும். சில பேச்சுக்கள் நம்மள பாதிக்கும். சில வார்த்தைகள் நம்மள உடைச்சு கூட போட்டுடும். ரொம்ப காயப் படுத்திற மாதிரி பேசுற ஆட்களும் நம்மள சுத்தி இருக்காங்க தானே. எல்லாத்தையும் சமாளிக்க கூடிய தைரியம் நம்ம கிட்ட இருந்தாலும் இட்ஸ் நாட் ஈஸி மலர். இதனால நீ ரொம்ப காயப் பட்டுடிவியோன்னு தான் கவலையா இருக்கு?” என்றிருந்தான் கவலையுடன். 

மலரோ கணவனின் கவலை நிறைந்த பேச்சை கேட்டு புன்னகைத்தாள். 

“பாதிக்கிற மாதிரியான பேச்சு.. காயப் படுத்திற மாதிரியான பேச்சு.. என்னை உடைக்கிற அளவுக்கான பேச்சு இதெல்லாம் நான் நிறைய பார்த்தாச்சு கீதன்! எனக்கு இந்த மாதிரியான அனுபவம் எல்லாம் புதிசில்ல. என்ன இந்த முறை பேச்சு எல்லாம் குழந்தை இல்லாததை பத்தி மட்டுமே இருக்கும்! இருந்துட்டு போகட்டும்! யாரு கண்டுக்கப் போறா? அப்படியே நீங்க பயப்படுற மாதிரி நான் கலங்கினாலும் என்னைத் தாங்கிக்க நீங்க இருக்கும் போது எனக்கு வேறெதைப் பத்தியும் கவலை இல்லை கீதன். கிருஷ்ணாக்காக நம்ம குழந்தை நாலு வருஷம் வெயிட் பண்றதுல எனக்கு எந்த வித கவலையோ கஷ்டமோ இல்ல” என்று கண்ணாடித் தெளிவுடன் கூறி இருந்தாள். 

அவளின் தெளிவில் அமுதனும் கவலை நீங்கி தெளிந்திருந்தான். 

இருவரும் ஆடை கலைந்து உடல் கலந்து சுகமாகக் களைத்து கண்ணில் மயக்கத்துடன் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்தனர். 

“மலர்..” 

“ஹ்ம்ம்…” 

“என் கூட நீ சந்தோஷமா இருக்கியா மலர்!” என்று கேட்க, ஏன் இந்தக் கேள்வி என்பது போல் தன் மார்பில் தாடையை ஊன்றி நிமிர்ந்து பார்த்த மனைவியின் கன்னத்தை மென்மையாக வருடியவன், “சொல்லேன் மலர்…” என்றான் கண்களை சுருக்கி கெஞ்சுதலாக. 

“என்ன சொல்லணும்?” என்றவள், அவனின் நெற்றியை வருடி “சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் கீதன்! அதனால என்னை எதுவும் சொல்ல சொல்லாதீங்க!” என்றாள் புன்னகையுடன்!

சொல்ல முடியாத அளவிற்கு என சொல்லாமல் அவள் சொன்ன பதிலில் அமுதனின் இதயமும் இதழும் புன்னகையின் மகிழ்வுடன் நிறைந்து போனது. 

அவளைத் தன்னுள் மேலும் பொத்தி வைத்துக் கொண்டு ஒரு வித நிம்மதியுடன் கண்களை மூடிக் கொண்டான்! 

அடுத்த இரண்டு நாட்களும் ஏற்காட்டில் கிருஷ்ணாவுடன் அவர்களது பொழுது மிகவும் அழகாகவே மறக்க முடியாத வகையில் கழிந்தது.  

மீண்டும் தாரமங்கலம் திரும்பியதும், கிருஷ்ணாவின் தேர்வு முடிவுகளும் வெளியாகி இருக்க, நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள் கிருஷ்ணா.

அவள் நினைத்தது போலவே பதினோராம் வகுப்பு பாடப் பிரிவாக அறிவியல் பிரிவையே தேர்ந்தெடுத்தாள். 

“என்ன கிருஷ்ணா சயின்ஸ் சூஸ் பண்ணிட்ட? முன்னாடி எல்லாம் எனக்கும் சயின்ஸுக்கும் ரொம்ப தூரம்னு புலம்புவ! ஆர்ட்ஸ் இல்லனா காமர்ஸ் தான் எடுக்கணும்னு சொல்லிட்டு இருப்ப? இப்ப ஏன் திடீர்னு சயின்ஸ்?” என்று அமுதன் தங்கையிடம் கேட்க, அன்று கோவிலில் வைத்து தேன்மலரிடம் கூறிய காரணத்தை வார்த்தை மாறாமல் அண்ணனிடமும் கூறியவள், 

“மெடிசின் படிக்கணும் அண்ணா! அண்ணி ஆசையை நான் நிறைவேத்தலாம்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்” என்றவள் சொல்லியதும் அமுதனின் கண்கள் கண்ணீரில் நிறைந்து போயின. 

தங்கையை நினைத்து மெய்யாகவே பெருமை கொண்டவன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு “ஐ அம் சோ ப்ரவுட் ஆப் யூ கிருஷ்ணா! கண்டிப்பா நீ மெடிசன் படி! உனக்கு சப்போர்ட்டா அண்ணா இருக்கேன் கூட!” என்றான் அபரிமிதமான பாசத்துடன். 

அடுத்து வந்த நாட்கள் எந்த வித மனக்குறையும் இல்லாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்த நேசத்துடனும் அன்புடனும் நகர்ந்தது. 

அமுதனுக்கும் மலருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் நிறைவாகவே முடிந்திருக்க, ரஞ்சிதனின் திருமண நாளும் இனிதே விடிந்தது. 

தன் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வராமல் சரியாக முகூர்த்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு வந்து நின்ற தோழியை முடிந்த அளவிற்கு முறைத்தான் ரஞ்சிதன். 

“ரொம்ப முறைக்காதடா. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா உன்னை யாரு கல்யாணத்த சென்னைல வைக்க சொன்னா? தாரமங்கலத்தில வச்சிருந்தா ஒரு வாரத்துக்கு முன்னாடியே கூட நான் வந்து இருப்பேன்” என்றாள் தேன்மலர் சிரிப்புடன். 

“சும்மா சமாளிக்காத தேனு. நம்ம குடும்ப வழக்கத்துல கல்யாணம் பொண்ணு ஊருல தானே நடக்கும்! அப்படி பாத்தா கமலி சென்னை. அதான் கல்யாணமும் சென்னைல. ஆனா உனக்கு என்ன? நீயும் தாரமங்கலம்! இதோ வர்றானே.. உன் புருஷனும் அதே ஊர்! சோ, உள்ளூர்குள்ளயே உன் கல்யாணம் நடந்திருச்சு. நானும் ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டேன். ஆனா நீ சரியா முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்து நிக்குற!” உற்ற நண்பனாக கோபித்தான் ரஞ்சிதன்.

“நான் வரலனாலும் அத்தை மாமா, அம்மா எல்லாம் ரெண்டு நாளும் இங்க தானேடா இருந்தாங்க” என்று தேன்மலர் சமாளிக்க, 

“பெரியம்மா பெரியப்பா இருந்ததெல்லாம் இருக்கட்டும். நீ ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து இருக்கனுமா இல்லையா” என்று தோழியிடம் உரிமைக் கோபத்துடன் கேட்டான் ரஞ்சிதன்! 

மாப்பிள்ளை கோலத்தில் இருந்த நண்பனின் தோளில் கைப்போட்டு தன்னோடு அணைத்துக்கொண்ட அமுதகீதன் “மாப்பிள்ளையா கலையா அழகா வெட்கப்பட்டுட்டு சமத்தா இருக்கணும் ரஞ்சித். அதை விட்டுட்டு இப்படி மூக்கு மேல மிளகாய் வச்ச மாதிரி கோவப்படுறது? அதுவும் என்னோட மலர் கிட்ட….” என்று ஆரம்பிக்க, 

“யப்பா சாமி..!!!! இதோ வந்துட்டான்யா மலர்தாசன்” என்றவன், 

“உங்க மலர்கிட்ட நாங்க ஒன்னும் கோவப்படலப்பா. கூட்டிட்டு போங்க உங்க மலர. பார்த்து பத்திரம்! நான் திட்டுன திட்டுல உன் மலர் வாடிடப் போகுது. வந்துட்டான்..!” ரஞ்சித் கடுப்புடன் மொழிய, 

அதில் கணவனை முறைத்த தேன்மலர் “கீதன் சும்மா இருங்க! கல்யாண நாள் அதுவுமா அவனை ஏன் வம்பிழுக்கறீங்க..” என்று கணவனைக் கடிந்து கொண்டாள்.

“பாருடா ரஞ்சித். உன்னால தான் என்னோட மலர் என்கிட்ட இப்ப கோவப்படுறா” என்று அமுதன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற,

“ஐயோ கடவுளே.. இந்த மலர்தாசன் அலப்பறை தாங்க முடியலப்பா..” என்ற தலையைப் பிடித்து விட்டான் ரஞ்சிதன்! 

அதில் சிரித்த அமுதகீதன் அவனை மேலும் வம்பிழுக்காமல், அவனின் எதிர்பார்ப்பின் படி முன்பே வராததற்காக மெய்யாக வருத்தம் தெரிவித்து, அவனது திருமண நாளுக்காக மனதார வாழ்த்தினான். 

குறித்த முகூர்த்தத்தில் ரஞ்சிதன் மற்றும் கமலியின் திருமணம் இனிதே நடந்தேறியது. 

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது தங்களுடனே வந்து நின்று அன்னை மற்றும் அண்ணியை கண்டு புருவம் சுருக்கினாள் தேன்மலர். 

புகைப்படம் எடுத்து முடித்து மேடை விட்டு கீழிறங்கியதும்,

கவிரத்னாவிடமிருந்து கோகுலனை தன் கையில் ஏந்திக் கொண்டவள், “ரஞ்சி கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் இங்க வந்துட்டதா தானே அண்ணி சொன்னீங்க. ஆனா, எங்க திவாவைக் காணும்?” என்று கேட்க, கவிரத்னா அமைதி காத்தாள் என்றால் மங்கை மகளிடம் என்ன கூறுவது என்று புரியாமல் திருதிருவென விழித்தார். 

அவர்களின் மௌனத்தில் அண்ணன் வழக்கம் போல் தான் இருக்கிறான் என்று அவளும் வழக்கம் போல் நினைத்துக் கொள்ள, கோபமாக அவர்களைப் பார்த்தவள் “அவன் கூட வரலைன்னு நீங்க ஏன் என்கிட்ட சொல்லல. சொல்லி இருந்தா நான் வந்து அவனை இழுத்துட்டு வந்திருப்பேன் தான” என்று கோபமாகக் கூறியவள், 

“நானும் பாக்குறேன்.. எனக்கு கல்யாணம் ஆன நாளுல இருந்து அவன் என் கண்ணுல படாம ஆட்டம் காட்டிட்டு இருக்கான். 

நான் வீட்டுக்கு வர நேரம் எல்லாம் அவன் வீட்ல இருக்கறதும் இல்ல. உங்ககிட்ட கேட்டா.. ரெண்டு பேரும் அவன் பண்ற காரியத்தை என்கிட்ட சொல்ல முடியாம அமைதியாவே இருக்கீங்க. இல்லன்னா அவன பத்தி இப்ப எதுக்கு பேச்சு.. நீ எப்படி இருக்கன்னு கேட்டு அப்படியே அந்த டாப்பிக்கை மாத்திடுறீங்க. என்ன தான் அண்ணி நடக்குது? என்னதான் நினைச்சிட்டு இருக்கான் அவன்.. இந்த முறை நான் சும்மா விட போறதில்ல அண்ணி. இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன் முடிஞ்சதும் நைட்டே ஊருக்கு கிளம்பிருவோம் தானே. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்து நான் அவனைப் பார்க்கிறேன். கன்னத்துலயே நாலு போடு போட்டு அவன் திருந்துறதுக்கான வழில அவனைக் கொண்டு போய் சேக்கத் தான் போறேன்” எனப் பிடிவாதமாகக் கூறியவள், 

“நாளைக்கு காலைல அவனை எங்கேயும் போகவிடாம 

அவன் எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே வெளியிலிருந்து ரூம் கதவை பூட்டி வையுங்க. சரியா?” என்று தீவிரமாகக் கூற, மங்கையும் வேறு வழியின்றி சரி என்பதாக மகளிடம் தலையசைத்தார். 

தேன்மலருக்கோ நாளைய பொழுது எப்பொழுது விடியும் என்று தான் இருந்தது. ஆனால், தாரமங்கலம் திரும்பிய பிறகு அடுத்த இரண்டு நாட்களும் அவளால் திவாகரனை சந்திக்க இயலவில்லை! 

அதற்கடுத்து நடந்த நிகழ்வில் அவனாகவே தங்கையின் கண் முன் தோன்றினாலும், அவனிடம் இருக்கும் மாற்றத்தை உணரக்கூடிய நிலைமையில் தேன்மலர் இல்லை. தன் மாற்றத்தை தங்கைக்கு உணர்த்தும் நிலையில் திவாகரனும் இல்லை! 

error: Content is protected !!
Scroll to Top