மலர் பாதம் பணிந்து..36

மலர் பாதம் பணிந்து – 36

அழகான அதிகாலை விடியல்!!

அருகில் சுகமான களைப்புடன் அயர்ந்து உறங்கும் அவளின் கணவன்!!

அவனின் கை வளைவில் தான்!!

அதுவும் அவனோடு ஒரே போர்வையில் பின்னிப் பிணைந்த நிலையில்!!

வெட்கப் புன்னகை மலரின் இதழை ஆக்ரமித்து, அவளின் முகத்தை கணவனின் மார்பிலேயே முட்டி மறைத்துக் கொள்ள வைத்தது!

தன் வாழ்வில் அமுதனோடு ஒரு விடியல் இத்தனை அழகாக இருக்கும் என்று தேன்மலர் நினைக்கவில்லை. தன்னை மார்பில் தாங்கிக் கொண்டு அயர்ந்து உறங்கும் கணவனை விழி அகலாமல் பார்த்தவள் அவனின் கலைந்து கிடந்த கேசத்தை கோதிக் கொடுக்க, அமுதனிடம் மெல்லிய அசைவு!

அதை உணர்ந்தவள் தன் விரல்களை விலக்க நினைக்க, அதனை விடாமல் பற்றிக் கொண்டு மீண்டும் தன் கேசத்தில் வைத்தவன், “மலர்..” என்றபடி மேலும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

இதழில் புன்னகை தவழ அவனின் சிகையை கோதிக் கொடுத்தவள், கண்ணிமை, கண்கள், கன்னங்கள், என வருடி இறுதியில் மீசை ரோமங்களில் விரல்கள் வந்து நிற்க, ‘நேற்று இந்த மீசை தன்னை எந்த அளவிற்கு சிலிர்த்து சிவக்க வைத்தது என்று செல்லமான முறைப்புடன் அவன் மீசையை பற்றி இழுக்க, அமுதன் அவளின் செய்கையில் மெல்ல புன்னகைத்தானே தவிர கண்களை திறக்கவில்லை.

அவன் முகம் புன்னகையில் விகசித்து விட்டதை உணர்ந்தவள் விரலை எடுத்து விட்டு அவன் மீசையில் அழுந்த இதழ்களை பதித்தாள்.

புன்னகை விரிய அமுதன் பட்டென்று விழிகளைத் திறக்க, அடுத்த நொடி அவன் மீசையை வலிக்கும் படி கடித்து இழுத்து வைத்தாள் மனைவி!

அதில் மெல்ல அலறி மீசையை தடவிக் கொடுத்தவன் “மலர்..” என்க, “இந்த மீசை என்னை ரொம்பவே படுத்திடுச்சு நேத்து! அதான்” என்ற தேன்மலருக்கு பொங்கி வந்த சிரிப்பை கட்டுப் படுத்தவே முடியவில்லை.

மலர்ந்து சிரித்தவளை இமை சிமிட்டாமல் பார்த்தவன், அவளின் கன்னம் வருடி “ரொம்ப அழகா இருக்க மலர்” என்றான் மென்மையான குரலில். அந்தக் குரலில் மயங்கியவளாக “நீங்களும்..” என்றாள் அவனின் கண்களைப் பார்த்து.

அதிகாலை நேரத்தின் அணைப்பு தேகங்களில் அனலை பரப்ப, அமுதனின் ஒற்றை விரல் மலரின் இதழை வருட, அடுத்த நொடி வருடிய இதழை தன்னுள் திருடிக் கொண்டான்.

முத்தம் மோகம் கூட்ட, காலைக் கூடல் மங்குல் பொழுதின் கூடலை விட ஒரு படி அதிகமாக இனித்தது.

சுகமான சோர்வுடன் கண்களில் மயக்கங்கள் மிச்சமிருந்த நிலையில் கட்டிலின் குறுக்கே படுத்திருந்தனர் இருவரும்.

சிறிது நேரம் சுக மௌனத்தில் கழிய திடீரென்று மலர் அவனிடம் “உங்க பழைய கார் என்னாச்சு கீதன்?” அவன் மார்பு ரோமங்களுக்குள் மறைந்து கிடந்த செயினை தன் விரல்களில் வைத்து இங்குமங்கும் அசைத்தபடி கேட்டாள் தேன்மலர்.

திடீரென்று அவள் கேட்டதும் புருவங்கள் சுருங்க “இன்ஷுரன்ஸ் க்ளைம் பண்ணியாச்சு மலர். கார் ரிப்பேருக்கு கொடுத்தாச்சு. என்ன தான் எல்லாம் பண்ணாலும் கார் ஃப்ரென்ட் போர்ஷன் நல்லாவே டேமேஜ் ஆகி இருக்கு. திரும்ப பழைய கண்டிஷன் வருமான்னு தெரியல. அந்தக் காரை ஷோ ரூம்லையே கொடுத்துடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றவன் கூறியதும், அவன் செயினை விட்டவள் “வேண்டாம் கீதன்..” என்று பட்டெனக் கூறினாள்.

அதில் மனைவியின் முகத்தை குனிந்து பார்த்தவன் “ஏன் மலர்? அதான் புது கார் வாங்கியாச்சே.. அந்த கார் நான் வாங்கி நாலு வருஷம் இருக்கும். அதான் டேமேஜ் எல்லாம் சரியாகி வந்ததும் வாங்குன ஷோ ரூம்லயே எவ்ளோ ரேட்கு எடுத்தாலும் பரவாயில்லனு யோசிச்சேன்” என்றான் விளக்கமாக.

மலரோ அப்போதும் “இல்ல. விக்க வேண்டாம்! நாமளே அதை வச்சுக்கலாம். ப்ளீஸ்” என்றாள். அந்தக் காரிற்காக மனைவி ஏன் இவ்வளவு தூரம் தன்னிடம் கேட்கிறாள் என்று யோசனையாக இருந்த போதும் அவள் விருப்பத்தை அவனால் தட்ட முடியாதே! எனவே, “சரி மலர். நாமளே வச்சுப்போம்” என்றவனுக்கு ஏன் என்னும் கேள்வி முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதைப் புரிந்து கொண்டவளாக சற்று தயங்கி அவன் முகம் பார்த்து “அது.. அந்தக் கார் உங்களுக்கு ஸ்பெஷல் இல்லையா?” என்று கேட்க, அமுதனுக்கு அவளின் கேள்வி புரியவில்லை!

“ஸ்பெஷலா.. அப்படி எல்லாம் இல்ல மலர்! முதல் முதல்ல கார் வாங்கப் போகும் போது மோரிஸ் கேரேஜ் தான் வாங்கனும்னு நான் நினைக்கல. ஆனா, அப்பாக்கு அந்தக் கார் தான் பிடிச்சிருந்தது. அதை நான் டெஸ்ட் ட்ரைவ் பண்ணிப் பாக்குறதுக்காக ஏறி உக்காந்த போது கிருஷ்ணாவும் எனக்கு அந்தக் கார் ஷுட் ஆகுதுன்னு சொன்னா. சோ, அதையே வாங்கிட்டேன்” என்றவனிடம்,

“ஓ..” என்றவள் மீண்டும் அவனின் செயினைப் பிடித்து விரல்களால் வருடியபடி, “ஆனா, எனக்கு அந்த கார் ஸ்பெஷல் தான். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நான் உங்களை முதல் முறையா பாத்தது அந்தக் கார்ல தான். நியாபகம் இருக்கா உங்களுக்கு? என்னையும் அண்ணியையும் பஸ் ஸ்டாண்ட்ல பிக்கப் பண்ண வந்தீங்களே!” என்றதும் அமுதன் விழிகள் விரிய அவளைப் பார்த்தான்!

‘ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்… ‘ என்று அவள் சொல்கையில் அவள் குரலில் இருந்த எதுவோ ஒன்று அவனை ஆட்டிப் படைத்தது. அதை உணராதவளாய் தேன்மலர் தொடர்ந்தாள்.

“அன்னைக்கு தான் நமக்குள்ள காரசாரமா சண்டை வேற வந்தது. நான் கூட ஆயிரம் ரூபாயை உங்க கிட்ட வீசினேன் தான..” எனும் போதே அவள் குரல் தழுதழுக்க, அன்றைய நாளின் தாக்கத்தில் அமுதன் சின்ன புன்னகையுடன் மனைவியை விட்டு விலகி எழுந்தான்.

கட்டிலின் ஒரு மூலையில் கிடந்த தனது கையில்லா பனியனை அணிந்து கொண்டவன் தன் வாட்ரோபை திறந்து அதன் மையப் பகுதியில் உள்ள லாக்கரையும் திறந்து அதற்குள் எதையோ எடுத்தவன் மீண்டும் கட்டிலிற்கு வந்து எழுந்து அமர்ந்திருந்த மனைவியை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் கைகளில் எடுத்ததை வைத்தான்.

அதனைக் கண்டதும் தேன்மலர் நம்ப முடியாத திகைப்பில் அவனைப் பார்க்க, “நீ கொடுத்தது தான் மலர்!” என்று கூற, தன் கையில் இருந்த இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை கண்டவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

அந்தப் பணக் காகிதங்கள் கசங்கியதன் அடையாளமாக சற்றே நலுங்கி காட்சி அளித்தாலும் அதை அவன் இன்றளவும் பத்திரமாக வைத்திருப்பது தேன்மலருக்கு நெஞ்சை நெகிழ வைத்தது.

“இதை நீங்க..” என்றவள் மேலும் வார்த்தைகள் வராமல் திக்க, “அன்னைக்கு கோபமா கசக்கி கீழ போட்டேன் தான். ஆனா, அதுக்கு அப்புறம் ரஞ்சித் சொன்னதை கேட்டதும் இதை அப்படியே விட முடியல. என்னமோ இந்த ரெண்டு நோட்லயும் உன் வைராக்கியம், ரோஷம் எல்லாம் இருக்கதை தாண்டி உன் சுய மரியாதையோட அழகும் உன் உழைப்பும் இருக்கிற ஃபீல் எனக்கு. அதான் பத்திரமா இருக்கட்டும்னு என் கிட்டயே வச்சுக்கிட்டேன்” என்றான் அவளின் தலையை வருடியபடி.

கண்களில் நீர் நிறைய அவனை நிமிர்ந்து பார்த்தவள் “சாரி..” என்றாள். “எதுக்கு??” என்று அமுதன் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டபடி கேட்க, “அன்னைக்கு அப்படி சண்டை வந்ததுக்கு நான் தான் முதல் காரணம்! ‘எங்களைக் கூப்பிட்டு வர ரஞ்சித் போயும் போயும் உங்களை அனுப்பி இருக்க மாட்டான்’னு முதல்ல மரியாதை இல்லாம பேசினது நான் தானே! அதனால தானே நீங்களும் அப்படி திருப்பிப் பேசினீங்க. என்ன இருந்தாலும் நானும் அன்னைக்கு அப்படி பேசி இருக்கக் கூடாது. உண்மையாவே சாரி” என்றாள் உணர்ந்து.

“நீ பேசினதை விட நான் பேசினது ரொம்பவே அதிகம் மலர். நானும் சாரி..” என்றவனை முடிக்க விடவில்லை தேன்மலர்.

“அன்னைக்கு நீங்க பேசினதுக்காக எவ்வளவோ முறை சாரி சொல்லிட்டீங்க கீதன். ஆனா, நான் தான் சாரி சொல்லவே இல்ல! சாரி.. சாரி.. ஒரு வேளை நான் அன்னைக்கு அப்படிப் பேசி இருக்கலேன்னா நமக்குள்ள அவ்வளவு பேச்சு வளர்ந்திருக்காது தானே!” என்றாள் வருத்தமாக.

“ஹே மலர். இதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற? நடந்தது எல்லாமே நம்மளோட நல்லதுக்கு தான். அன்னைக்கு உங்களை பிக்கப் பண்ணிட்டு வர்றதுக்காக ரஞ்சித் என்னை போக சொல்லலேன்னா எனக்கு என் மலர் கிடைச்சிருக்கவே மாட்டா! நமக்குள்ள அப்படி ஒரு சண்டை வராம இருந்திருந்தா எனக்கு உன்னோட அருமை தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது. அவ்வளவு ஏன் அன்னைக்கு இருந்த அமுதனோட கவனம் உன் மேல பதிஞ்சிருக்கவே இருக்காது. வழக்கம் போல நான் ஒரு பக்கம் போய் இருப்பேன்..” என்று கூறிக் கொண்டே வந்தவன் மலரின் மெல்லிய விசும்பல் சத்தத்தில் பதறி அவளின் முகம் பற்ற நினைக்க, அதற்கு அனுமதிக்காமல் அவனின் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டு விசும்பினாள்.

“மலர்…” என்று அமுதன் பதைபதைப்புடன் அழைக்க, அவள் நிமிரவே இல்லை! “என்ன மலர் ஆச்சு?” என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலை அசைத்தாலும் கண்ணீர் தாங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நீங்க சொன்னது எவ்வளவு உண்மைல! அன்னைக்கு ரஞ்சித் அப்படி சொல்லி உங்களை அனுப்பலேன்னா நீங்க வழக்கம் போல எங்க பக்கம் பார்வையை கூட திருப்பி இருக்க மாட்டீங்க. அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டே இருந்திருப்பீங்க தான..” என்று மேலும் அழ, அப்போது தான் தான் கூறிய வார்த்தைகள் அவளுள் உணர்த்தி இருக்கும் அர்த்தத்தை புரிந்து திகைத்தான்!

ஆனால் அவள் சொல்வதிலும் பொய்யில்லையே! அன்று அவளை அழைத்து வரவென அவன் சென்றிருக்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பாக தவிர்த்திருப்பான்! விசேஷம் முடிந்ததும் கிளம்பி இருப்பான். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட கருதி இருக்க மாட்டான்! ஒன்றும் சொல்ல முடியாத வருத்தத்துடன் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவன் “அதான் அப்படி எல்லாம் ஆகலயே. அழாத மலர்” என்றவன்,

அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் வைத்து, “அன்னைக்கு நாம நேரா சந்திச்சு சண்டை போடாம இருந்திருந்தாலும் வேற எதோ ஒரு ரூபத்துல நாம மீட் பண்ணி சண்டை போட்டு இதே மாதிரியே நான் உன் மேல பைத்தியமா மாறி, உன்னை காதலிச்சு நிச்சயம் கல்யாணம் பண்ணி இருப்பேன் மலர். எனக்கு நீ தான்னு நான் முடிவு பண்ணதுக்கு முன்னாடியே கடவுள் முடிவு பண்ணி இருக்கார். அதனால எப்படி இருந்தாலும் நீ அமுதனோட மலராவும், நான் மலரோட கீதனாவும் சேர்ந்திருப்போம். அதனால வருத்தப்படாத!” என்றவனின் வார்த்தைகள் அவளுள் அப்படி ஒரு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் பரப்பியது.

சற்று தயங்கினாலும் அவளின் முகம் பற்றி, “ஒரு வேளை நான் உன்னை விரும்பி இருக்கலேன்னா, உன்னை பொண்ணு கேட்காம இருந்திருந்தா நீ நிச்சயம் வேற யாரையும்….” என்றவனின் வாயை கரம் கொண்டு மூடியவள், அடுத்து பேசாதே என்று கண்களை இறுக மூடி இடமும் வலமும் தலை அசைக்க, அமுதனும் அமைதியாகி விட்டான்.

“எப்படி மலர் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொன்ன? அன்னைக்கு போன்ல பேசும் போது எதோ காரணம் இருக்குன்னு சொன்னியே?” என்று கேட்க, மலரால் பதில் சொல்ல முடியவில்லை.

அவள் மௌனத்தில் என்ன புரிந்து கொண்டானோ அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன், “வேற எதனால எல்லாம் என்னோட மோரிஸ் கேரேஜ் உனக்கு ஸ்பெஷல்?” புன்னகையுடன் கேட்டவாறு பேச்சை மாற்றினான்.

அதில் நிம்மதி அடைந்தவளாக “நீங்க உன் மனசைச் சொன்னதும் அந்தக் கார்ல வச்சுத் தானே! மல்லிகைப் பூவை என் மடில வச்சு மனசுல இருக்கதை மறைக்காம என் கிட்ட உங்க காதலை சொன்னது தான் இருக்கதுலயே ரொம்ப ஸ்பெஷல். அதனால எனக்கு அந்தக் காரை விக்க வேண்டாம்” என்று கூற, விழிகள் விரிய அவளையே பார்த்திருந்தான் அமுதகீதன்.

தன்னைக் கண்ட பொழுது முதல், தான் நேசத்தை வாய் மொழியாக உதிர்த்த பொழுது வரை அத்தனையும் நினைவில் வைத்து காரை விற்க வேண்டாம் என்று அவள் சொன்னது அவனுக்கு ஆச்சர்யத்தையும், பிரம்மிப்பையும் கொடுத்தது.

அவள் சொன்னதும் அந்த வாகனத்தின் மீது அவனுக்குமே சொல்லொண்ணா உணர்வு பிறக்க, பழுதுகள் எல்லாம் சீராகி வந்ததும் அதையே மீண்டும் உபயோகிக்கத் தொடங்கி இருந்தான்.

அடுத்து வந்த நாட்கள் மிகவும் இனிமையாகவே கழிந்தது அமுதகீதன் தேன்மலர் இருவருக்கும்.

கிருஷ்ணாவிற்கு கோடைகால விடுமுறை என்பதால் தேன்மலர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவளோடு ஸ்கூட்டியில் நன்றாக ஊர் சுற்றினாள்.

புதிதாக வெளி வந்திருக்கும் படங்களைக் காண தியேட்டர் அழைத்துச் சென்றாள். சேலத்தில் இருக்கும் சின்ன வணிக வளாகத்திற்கு அவளோடு சென்று அவளுக்குப் பிடித்ததை தானே வாங்கிக் கொடுத்தாள்.

“தட்டு வடை செட் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணி” என்று அவள் சொன்ன நாளில் இருந்து வேலை விட்டு வீடு வரும் போது தினம் அவளுக்காக ஒரு தட்டு வடை செட் பார்சல் அவளோடு வீட்டிற்கு வரும்!

சிறப்பாக பரதநாட்டியம் ஆடும் கிருஷ்ணாவை மொட்டை மாடிக்கு அழைத்து தினமும் ஏதேனும் ஒரு பாட்டை போட்டு விட்டு ஆடச் சொல்வாள் தேன்மலர்.

அவள் விழி அபிநயங்களும், விரல்களில் நேர்த்தியாக இடம் பெற்றிருக்கும் முத்திரையும், நளினமான உடல் அசைவுகளும் அவளின் நடனத்திற்கு அத்தனை அழகினைச் சேர்த்திருக்க, அவளோடு சேர்ந்து தானும் ஆட வேண்டும் என்கிற ஆசையில் முத்திரையை மட்டும் சரியாக வைத்து இப்படியும் அப்படியும் ஆடி அவளோடு அவளைப் போலவே இணைந்து கொள்வதில் தேன்மலருக்கு மட்டுமல்ல கிருஷ்ணரூபிக்கும் அத்தனை மகிழ்வு!

கைப்பேசியில் அவர்கள் இருவரின் எண்ணற்ற புகைப்படங்கள் இடம் பெற ஆரம்பித்திருந்தன. அதுவும் அமுதன் அவர்களை எங்காவது வெளியே அழைத்துச் சென்று விட்டான் என்றால் அவனது நிலை தான் பாவம்!

வாங்கிய லக்கேஜ்களை எல்லாம் அவனிடம் தள்ளி விட்டு, பெண்கள் இருவரும் கை கோர்த்து நடந்து எதையாவது பார்த்து தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு அவர்களின் உலகில் அவர்கள் மட்டுமே இருப்பது போல் நடப்பார்கள்.

இருவரும் ஒன்றாக நின்று கொண்டு அமுதனிடம் ‘எங்கள இப்படி போட்டோ எடுங்க. அப்படி எடுங்க. இந்த ஆங்கில்ல எடுங்க’ என்று சொல்லி அது தெளிவாக இல்லை என்றால் “என்ன கீதன்? ஒழுங்கா க்ளியரா எடுங்க” என்று ஒரே கலாட்டா செய்வாள் தேன்மலர்.

கிருஷ்ணாவோ ஒரு படி மேலே சென்று “அண்ணா… நானும் அண்ணியும் நீங்க எடுக்குற போட்டோல நல்லா அழகா தெரியணும். இல்லைன்னா அவ்வளவு தான்..” என்று மிரட்டும் அளவிற்கே வந்திருந்தாள்.

எல்லாவற்றையும் நிறைந்த புன்னகையுடன் பார்த்திருக்கும் அமுதனுக்கு இவர்கள் அடிக்கும் லூட்டியில் சிரிப்பாக இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தோஷமாகவே அவர்களுடன் தானும் இணைந்து கொண்டான்.

கிருஷ்ணாவின் விடுமுறை தினங்கள் முடியும் தருவாயில் இருக்கவும் அமுதன் கிருஷ்ணாவை ஏற்காடு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு வரலாம் என்று மலரிடம் கூற, தேன்மலரும் ஒப்புக் கொண்டாள்.

விபத்து நிகழ்ந்த பிறகு அமுதன் ஏற்காட்டிற்கு சென்றிருக்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் அங்கு அனைத்து வேலைகளையும் நந்தனே கவனித்துக் கொண்டான்.

அமுதன் வரட்டுமா என்று கேட்ட போது உறுதியாக மறுத்திருந்தான் நந்தன். “இங்க என்னால தனியா சமாளிக்க முடியும். சோ, நீ முழுசா ரெஸ்ட் எடுத்த பின்ன வா” என்று கூறியிருந்தான் நந்தன்.

இப்போது ஏற்காடு செல்லும் திட்டம் இருந்ததால் நண்பனுக்கு அழைத்துத் தாங்கள் வரும் விஷயத்தைக் கூற, நந்தனோ “டேய்.. நீ தங்கச்சி ஒயிஃபை கூட்டிட்டு வரது எல்லாம் ஓகே தான். ஆனா, உன் ஒயிஃபோட அண்ணன் வேற இன்னும் இங்க தான் இருக்கார். எப்படிடா சமாளிப்ப? ஒரு வேளை தேனு சிஸ்டர் பாத்துட்டா?” என்று வினவ,

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது நந்தா. இப்ப கட்டிட்டு இருக்க ரிசார்ட் பில்டிங்ல தான அவர் இருக்கார். எப்படியும் நாங்க அங்க ஸ்டே பண்ண போறது இல்லை தானே. சோ பாத்துக்கலாம்” என்று கூறி விட்டான் அமுதன்.

ஆம். திவாகரனை ஏற்காட்டில் தான் வைத்திருந்தான் அமுதகீதன். இப்போது கட்டிக் கொண்டிருக்கும் ரிசார்ட்டின் ஒரு அறையில் தான் திவாகரன் தன் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறான்.

அமுதன் செய்த செய்கையில் இனிமேலும் குடிக்க முடியுமா? குடிக்கவும் வேண்டுமா? எனும் நினைப்பு தான் திவாகரனை சூழ்ந்திருந்தது!

அந்த அளவிற்கு அமுதன் அவனை கவனித்திருந்தான் என்று சொல்லவும் வேண்டுமா? இத்தனைக்கும் அடிக்கவில்லை! உதைக்கவில்லை! அவன் மேல் ஒரு சிறு காயம் கூட அமுதனால் ஏற்படவில்லை! எந்த வித மிரட்டலோ உருட்டலோ இல்லை!

அழுத்தமான முறையில் அவன் காட்டிய கோபத்தில் திவாகரன் கதி கலங்கித் தான் போனான்!

அடுத்து விபத்திற்கு உள்ளாகி அமுதன் வராமல் இருந்த போதிலும் அவன் ஏற்படுத்தி விட்டுச் சென்ற தாக்கத்தில் திவாகரனின் மன நிலையே முற்றிலும் மாறி விட்டிருந்தது.

******************

இன்னும் இரண்டு நாட்களில் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு ஏற்காடு கிளம்பவிருந்தனர் அமுதனும் மலரும்.

அமுதன் எவ்வளவு கெஞ்சியும் தேன்மலர் அவனை காரினை செலுத்த அனுமதிக்கவில்லை.

“சேது அண்ணா வண்டியை எடுக்கட்டும். இனிமேல் நீங்க ஏற்காட்டுக்கு தனியா கார் ட்ரைவ் பண்ணக் கூடாது” என்று பிடிவாதமாக கூற, “மலர்.. அது யதார்த்தமா நடந்த ஆக்சிடென்ட். அதுக்காக இனி நான் ஏற்காட்டுக்கு கார் ட்ரைவ் பண்ணக் கூடாதுன்னு சொல்றது தப்பு” என்று அவனும் அழுத்தமாக கூற, மலர் மனம் இறங்கவில்லை.

அன்று அவள் பயந்த பயம் அவளுக்கு மட்டும் தானே தெரியும்? எனவே, “என்ன வேணாலும் இருக்கட்டும். யதார்த்தமா நடந்தது சாதாரண விஷயம் இல்ல. ஆக்சிடென்ட்! எப்படி என்னால இனிமேல் உங்களை தனியா ஏற்காடு வரை அனுப்ப முடியும்? ஹ்ம்ம்ஹும்! முடியவே முடியாது. ட்ரைவர் இல்லாம இனி நீங்க ஏற்காடு போகக் கூடாது. அப்படி போவீங்கன்னு சொன்னா நான் உங்களை போக விட மாட்டேன். ரூம் கதவை லாக் பண்ணி கீழ கூட போக விட மாட்டேன்” என்று சிறு பிள்ளையை கண்டிக்கும் அன்னை போல் மிரட்டிய மனைவியின் பேச்சில் அயர்ந்து போனான் அமுதன்.

இரண்டு நாட்கள் இருவரும் மெல்லிய கோபத்துடன் பழைய மலராக அமுதனாக முட்டிக் கொண்டு திரிந்தனர். இருப்பினும் மலர் அவனை ஏற்காட்டிற்கு தனியே காரில் செல்வதை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அமுதன் கோபத்தை விடுத்து அவளோடு பொறுமையாக பேசினான்.

“மலர்.. நீ இப்படி பயந்தா நான் இனி கார் எடுக்கவே யோசிக்கிற மாதிரி இருக்கும். இட் ஜஸ்ட் ஹாப்பென்ஸ் சம்டைம். இனி இப்படி ஆகாம பாத்துக்குறது என்னோட பொறுப்பு. ப்ளீஸ். பயப்படாத. அப்புறம் எப்படி நான் நிம்மதியா ஏற்காடு போய்ட்டு வர முடியும்?” என்று எடுத்துக் கூறினான்.

எல்லாம் புரிந்தாலும் அவளுள் இருக்கும் பயம் அகல்வேனா என்று சண்டித்தனம் செய்ய, “சரி மலர். இப்ப சேது கூடயோ இல்ல வேற ட்ரைவர் கூடயோ போகும் போது இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காதுன்னு…..” என்றவனின் இதழ்களில் பட்டென்று ஒரு அடி வைத்தவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருந்தன.

“மலர்…”

“இப்ப என்ன? நீங்க ட்ரைவ் பண்ணனும். பண்ணுங்க. அதுக்காக இப்படி எல்லாம் பேசாதீங்க. பேச்சளவுல கூட எனக்கு அதைக் கேக்குற தைரியம் இல்ல” என்றவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் மௌனமாக அவளை ஆற்றுப் படுத்தினான்.

“சரி.. சரி.. அழாத மலர். நான் எப்ப வேணும்னாலும் ஏற்காடு போய்ட்டு வர மாதிரி இருக்கும். நினைச்ச நேரம் எல்லாம் ட்ரைவர் கிடைக்க மாட்டாங்க. சேது அண்ணா எப்பவும் இங்க இருக்க வேண்டிய கட்டாயம். நம்ம ரிசார்ட் அங்க இருக்கும் போது நான் போய் வரது ரொம்ப அவசியம் மலர்” என்றவன் தனக்காக அவ்வளவு விளக்கிக் கூறியதில் புரிந்தார் போல் தலை அசைத்தவள், அவன் கூறிய இறுதி வரியை நினைவில் வைத்து நன்றாக முறைத்தாள்.

“இப்ப எதுக்கிந்த முறைப்பு?” என்று அமுதன் அவளின் கன்னங்களை நாசியால் தீண்டியபடி கேட்க, “ஹ்ம்ம்.. நம்ம ரிசார்ட்னு சொன்னீங்களே! அதுக்குத் தான்” என்று பல்லைக் கடித்தவள்,

“அது நம்ம ரிசார்ட் இல்ல. உங்க ரிசார்ட் தான். முதல் ரிசார்ட் கட்டி முடிச்சு ஓபன் செரிமொனிக்கு கூட எங்களை கூப்பிடல தான! கூப்பிடுறதை விடுங்க. எங்க அண்ணன் இருந்த லட்சணத்தில் நீங்க கூப்பிடாம விட்டது கூட சரின்னு ஏத்துக்கலாம். ஆனா, ஒரு வார்த்தை கூட சொல்லல தான. என்ன தான் கோபமா இருந்தாலும், தங்கச்சி மேல அதிருப்தி இருந்தாலும் பேச்சுக்காவது மாமா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வேற சொந்தம் யாரோ சொல்லி தான் அம்மாக்கு நீங்க சொந்தமா ஏற்காடுல ரிசார்ட் கட்டி இருக்க விஷயம் தெரியும்! எனக்கு ரஞ்சி சொன்னான். கேட்டதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? சின்ன வயசுல நீங்க பண்ணது எல்லாம் மனசுக்குள்ள அப்படியே இருந்தாலும் உங்களை நினைச்சு அவ்வளவு பெருமையா இருந்தது. இன்னொரு பக்கம் நம்ம சொந்த அண்ணன் இந்த அளவு வளர்ந்து நிக்கலேன்னாலும் கொஞ்சமாவது பொறுப்பா வீட்டுக்கு மூத்தவனா நடந்திருக்கலாமேன்னு தோணும்” என்றவள், “இனிமேல் அதை நம்ம ரிச்சார்ட்னு எல்லாம் சொல்லாதீங்க. உங்க ரிசார்ட் தான்” என்றாள் உரிமைக் கோபத்துடன்.

அவள் பேசப் பேச திகைத்து போய் அமர்ந்திருந்தவன் அடுத்து என்ன பேச என்று கூட மறந்தவனாக அவளையே பார்த்திருந்தான்.

கணவனின் அமைதியில் சற்று அதிகமாகத் தான் பேசி விட்டோமோ என்று மலருக்குத் தோன்றி விட்டது. என்றோ நிகழ்ந்தவைக்கு இன்று அவனிடம் கோபம் கொண்டது தவறு என்று அறிவு எடுத்துரைக்க, “சாரி கீதன்..” என்றாள் தலை கவிழ்ந்தபடி!

“இன்னும் என்னென்னத்த தான் உன் மனசுல போட்டு அழுத்தி வச்சிருக்க? எல்லாம் கொட்டிடு மலர்” என்றான் அமுதன் சக்தியற்ற குரலில்.

அதில் கலங்கியவள் “கீதன்… நான் டக்குன்னு.. ஐயோ சாரி..” என்று மலர் மெய்யாகவே வருத்தம் கொண்டாள். அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை! ஆனால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாக சிந்திக்கத் துவங்கினான்.

அந்த சிந்தனையின் விளைவாக ஒரு யோசனை தோன்ற, நண்பனிடமும் அதைப் பற்றி பேசி விட்டு அதற்குண்டான வேலைகளை எல்லாம் திட்டமிட்டு அதனை வரிசையாக நடத்தி முடிக்கும் தினம் வரை அனைத்தையும் யோசித்து விட்டே ஓய்ந்தான்!

error: Content is protected !!
Scroll to Top