நற்காதல் நெய்திடவா – 3 (1)

இந்த நிலைமையைச் சிரித்துச் சமாளிப்பதை விட, வேலை செய்து சமாளிப்பது மேல் என்று நினைத்து, தொண்டையில் தண்ணீரை சரித்து விட்டு, குனிந்து வேலையில் மூழ்கினாள் அவள்.

காலை பத்து மணிக்கே களைகட்டி இருந்தது வங்கி.

அவள் முன் இருந்த வாடிக்கையாளர் வங்கிப் படிவங்களைக் கணினியில் ஏற்றத் தொடங்கினாள். முன் தினம் கற்றது, அத்தனை தெளிவாகக் கைக் கொடுக்கவில்லை. படிவத்தையும், கணினித் திரையையும் ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்து அவள் தகவல்களைப் பதிவேற்ற வேண்டியிருந்தது.

அவள் செய்து கொண்டிருந்த வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல், இடையிடையே வாடிக்கையாளர்களின் கேள்விகள், இடையூறு செய்ய, எதிலும் கவனம் பதிக்க முடியாது திணறினாள்.

அருகில் அமர்ந்திருந்த பணியார்களிடம் உதவி கேட்கலாம் என்றால், அவர்கள் அனைவரும் அவளை விட மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரம் பார்த்து,

“மேடம் புதுசா சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும்” என்று பெண் ஒருவர் வந்து நிற்க, “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என்று பணித்து விட்டு, பாதியில் இருந்த வேலையைச் செய்தாள்.

“என்ன டாகுமெண்ட்ஸ் தேவைப்படும்னு சொல்லுங்க மேடம். ரெடியா எடுத்து வைக்கிறேன்” காத்திருந்த பெண் கேள்வி கேட்க, இவளுக்குக் கணக்கு குழம்பியது.

மெல்ல புன்னகைத்து, “ஒரே ஒரு நிமிஷம், பிளீஸ்” என்று கணினியை பார்க்க, தொகையைத் தவறாகப் பதிவிட்டு இருந்தாள். ஒரே ஒரு பூஜியம்தான் கூடியிருந்தது. ஆனால், மொத்த தொகையோ லட்சத்தில் உயர்ந்திருக்க, “ஆத்தாடி..” மெல்ல முணுமுணுத்து மார்பில் கை வைக்கப் போனவள், தான் இருக்கும் இடம் உணர்ந்து கண்களைக் கணினிக்கு தாழ்த்தி தவறை திருத்தினாள்.

“மேடம், எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது?” எதிரில் நின்ற பெண் எரிச்சலுடன் கேட்க, “அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப்…” அவள் முன்னிருந்த கணினியை விட வேகமாக இயங்கினாள் வேதவர்ஷினி.

வெற்றி வேந்தன் தன் இருக்கையில் இருந்து தலையை நிமிர்த்தி, கண்களால் வங்கியை ஒரு முறை வலம் வந்தான்.

ஒவ்வொரு மேஜைக்கும் முன்னும் நீண்ட வரிசை நின்றிருந்தது. இயந்திர முகங்களோடு மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வையில் விழுந்தாள் வேதவர்ஷினி.

புதிது என்பதால் அவள் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனாலும், அதுவும் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போய் விடுவேன் என்ற நிலையில் இருக்க அவன் உதடுகள் தானாகப் புன்னகைத்தன. தன்னைப் போலவே இளவயதிலேயே வங்கித் தேர்வு எழுதி இந்தப் பணிக்கு வந்தவள் என்பதால் அவள் மேல் மரியாதை துளிர்த்தது.

முதல் நாள் வங்கித் திறக்கும் நேரத்திற்கு முன்பே வந்து நின்றதென்ன. இன்று தாமதமாக வந்து விட்டு அவள் முழித்ததென்ன என்பதை நினைக்கும் போதே அவனுக்குச் சிரிப்பு வந்தது. இதையெல்லாம் அவனும் செய்திருக்கிறான். அந்த நாட்களை மனதில் கொண்டு வந்து அவளைப் பார்த்தான்.

இன்று பளிச்சென்று பச்சை நிற புடவையில் இருந்தாள். பெரியவளாகக் காட்டிக் கொள்ள எடுத்திருந்த பிரயத்தனம். ஆனால், அப்பொழுதும் கல்லூரி மாணவி தோற்றம் மறையவில்லை.

அவள் வாடிக்கையாளரிடம் எதையோ விளக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க, எழுந்து வெளியில் போனான் வெற்றி. அவளுக்கு உதவினான். அந்த வாரம் முழுவதும் அதைத்தான் செய்தான் அவன். அவளுக்கு நிறையப் பயிற்சி தேவைப்பட்டது. பணம் சம்மந்தப்பட்ட பணி என்பதால் மிகுந்த சிரத்தையுடன் அனைத்தையும் கற்றுக் கொண்டாள் அவள்.

ஒருமுறை மனதில் பதிந்து விட்டால், அந்த வேலையைச் சந்தேகங்கள் இன்றித் திறம்படச் செய்தாள்.

அன்று மாலை முன்தினம் போலவே அவளை அழைத்துச் செல்ல வந்து விட்டான் விஜய்குமார். வங்கியில் இருந்து நேராக அவளுக்காகப் பார்த்திருந்த புது வீட்டிற்குதான் அழைத்துச் சென்றான் அவன்.

மூன்றடுக்குக் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. தளத்திற்கு நான்கு வீடுகள் கொண்டிருந்தது. இரண்டாம் தளத்தில் இருந்த வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான் விஜய்.

“எப்படி விஜய் ண்ணா? நேத்து தானே சொன்னேன்? அதுக்குள்ள வீடு பார்த்துட்ட? தங்கச்சி மேல இம்புட்டு பாசமா உனக்கு?” வராத கண்ணீரை துடைத்தபடி அவள் கேட்க, வீட்டில் இருந்து வெளியில் வந்தார் அவளின் அப்பா வானமாமலை.

“அப்பா..” அதிர்ச்சியுடன் அழைத்தாள். அப்பா மட்டுமல்லாது சித்தப்பாவும் வந்து நின்றார். வீட்டினுள்ளிருந்து அம்மா மற்றும் சித்தியின் குரலும் கேட்க அவளுக்கு விஷயம் ஓரளவு பிடிபட்டது.

“வா வேதா மா, வீடு பிடிச்சிருக்கா பாரு” அப்பா சொல்ல, புன்னகைத்து உள்ளே சென்றாள். இரண்டு படுக்கையறை கொண்ட சற்றே பெரிய வீடாகத்தான் இருந்தது அது.

வீட்டிற்குத் தேவையான அத்தனை பொருட்களும் அங்கிருந்ததைப் பார்த்துக் கொண்டே அம்மாவின் சத்தம் வந்த படுக்கையறையை நோக்கி நடந்தாள் அவள்.

“பேங்க் பக்கத்துலதான் நீ இருக்கணும்னு அப்பாகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் வேதா. நாங்க நேத்து முழுக்க வீடு தேடுற வேலைதான் பார்த்தோம்.”

“அடப்பாவிகளா, எனக்காக வீடு பார்த்திட்டு, வீட்டுக்கு வந்து கல்யாண பேச்சை எடுத்துக் கலவரம் பண்ணீங்களா?” அவள் கோபமாகக் கேட்க,

“சத்தமா பேசாத. நேத்து அப்பா, சித்தப்பா மதியம் வரை என்கூட அலைஞ்சுட்டு வெயில் தாங்க முடியாம சீக்கிரம் வீட்டுக்கு போய்ட்டாங்க. நான்தான் ஈவ்னிங் வரை வீடுகளைப் பார்த்தேன். இதுவரை பார்த்ததில் எனக்கு இந்த வீடுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவை சரி பண்ணியிருக்கேன். எதையாவது உளறி நீயே கெடுத்துக்காத” எச்சரித்தான் விஜய்.

“தேங்க்ஸ் ண்ணா” என்றாள் வேதா.

அவளிடம் வெற்றி வேந்தன் அழுத்தி சொல்லியிருந்தானே. அவள் வங்கிக்கு மிக அருகில் வசிக்க வேண்டும் என்று. அதுவும் வங்கியின் சட்டதிட்டத்தில் வருமாம். மீற கூடாதாம்.

எதுவும் தெரிந்து கொள்ளாமல் வேலைக்குச் சேர்ந்தாயிற்று. தன்னைத் தானே நொந்து கொண்டபடி உள்ளே சென்றாள்.

“இந்த ஆவடியில என்னக்கா இவ்வளவு வாடகை சொல்றாங்க? எங்க அரும்பாக்கத்தில் சொன்னா ஒரு நியாயமிருக்கு..” சித்தி புலம்புவதைக் கேட்டு சிரித்தாள்.

“எனக்கு வீட்டு வாடகை பேங்க் கொடுக்கும் சித்தி” சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, “நிஜமாவா டி வேதா?” என்று ஆச்சரியப்பட்டவர், “ஏன் மாமா, அப்போ நல்ல பெரிய வீடா பார்ப்போம்” என்று சித்தி பகுமானம் காட்ட, நன்றாக நிமிர்ந்து நின்றாள் வேதா.

அவள் நின்ற நிலையைப் பார்த்துச் சிரித்தான் விஜய்.

“சித்தி, அவ சேஃப்டி முக்கியம்.” என்றான் அவன் அழுத்தமாக.

“நீயென்ன மா என் மகளுக்கு மேல இருக்க?” வானமாமலை சொல்ல, சித்தியை பார்த்துக் கண் சிமிட்டினாள் வேதா.

“இல்ல மாமா” பெரியவர்களின் பேச்சை வேடிக்கைப் பார்த்தவளின் கையில் கிள்ளினான் விஜய்.

“ஆ, வலிக்குது டா அண்ணா” கத்தினாள்.

அவளின் கைப் பிடித்து, “இந்த வீட்ல ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க தங்கி இருக்காங்க. உங்க பேங்க்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு யுனிவர்சிட்டி இருக்கு. அங்கதான் டீச்சிங் ஸ்டாப்பா ரெண்டு பேரும் வேலை பார்க்கிறாங்க. திருநெல்வேலி பொண்ணுங்க. நாங்க பார்த்து பேசிட்டோம். நல்லா பேசினாங்க. நல்ல பொண்ணுங்களா தெரியறாங்க. அதை நம்பிதான் உன்னை இங்க விட்டுட்டுப் போறோம். அவங்க வேலை முடிஞ்சு இப்போ வந்துடுவாங்க. நீயும் பார்த்து பேசிடு. இப்படி வீடு ஷேர் பண்ணிக்கிறதுதான் உனக்குப் பாதுகாப்பு. சரியா?” விஜய் நீண்டதாகப் பேசி முடிக்க, சரியென்று தலையசைத்தாள் வேதா.

அண்ணனோடு சேர்ந்து அந்த வீடு, அவர்கள் தளம், மொத்த குடியிருப்பு, மொட்டை மாடி என முழுவதுமாகச் சுற்றி வந்தாள் வேதவர்ஷினி.

அவள் விரும்பிய வேலை. அவளுக்கென்று சிறு வீடு. நிறைய அனுபவங்களைத் தரப் போகும் சுதந்திரம். நிறைவாக உணர்ந்து புன்னகைத்தாள் வேதவர்ஷினி.

சிறிது நேரத்தில் அந்த வீட்டில் ஏற்கனவே வசித்த கௌசல்யா மற்றும் காந்திமதி வீடு வர, அவர்களிடம் பேசினாள். அவளை விட நான்கைந்து வயது மூத்தவர்களாக இருந்தவர்களைப் பத்து நிமிட பேச்சிலேயே அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

பெரிய மனதாக அவளுக்கு ஒரு படுக்கை அறையைக் கொடுக்க முன் வந்தார்கள் அவர்கள்.

“தேங்க்யூ அக்காஸ்” பற்கள் தெரிய புன்னகைத்து சொன்னாள் வேதா.

அன்று மாலை சித்தி வீடு சென்று மறுநாள் அதிகாலையிலேயே புது வீட்டிற்கு வந்திறங்கி விட்டார்கள் மொத்த குடும்பமும்.

நல்ல நேரம் பார்த்து பல நாள் புழங்கிய வீட்டிற்க்கு புதிதாகப் பால் காய்ச்சி, சாமி கும்பிட்டார்கள். அதைப் பார்த்து அவள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, “இதெல்லாம் முறை. செய்யாம விடக் கூடாது” பேத்தியை கண்டித்தார் முத்துமாரி.

காலைக்கு உணவு ஹோட்டலில் இருந்து விஜய் வாங்கி வர, அதை உண்டு விட்டு நேரத்தோடு வங்கி கிளம்பி விட்டாள் வேதவர்ஷினி.

அவளுக்காக வீட்டை சீர்படுத்தி, அவளுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து, தேடி வாங்கி வந்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது அவளது குடும்பம்.

“புள்ள தனியா எப்படிச் சமைச்சு சாப்பிடும்? நான் வேணும்னா கூட இருக்கட்டுமா?” முத்துமாரி கவலையுடன் கேட்க, அம்மாவின் உடல்நிலை பற்றி அறிந்த வானமாமலை, “அம்மா” என்றார் அழுத்தமாக.

அவர் மறுப்பை அந்த அழைப்பிலேயே சொல்லி விட்டிருக்க, “இதுவரை வீட்டை விட்டு பேத்தி தனியா இருந்ததே இல்லய்யா. எப்படிச் சமாளிப்பானு யோசிச்சா பயந்து வருதா இல்லையா? நல்லா சாப்பிடுற புள்ள வேற..” அப்பத்தா புலம்ப, “ஆமாங்க. மூனு நேரம் சமைக்கணும். வேதா தனியா எப்படிச் செய்வா? சமைக்க, மேல் வேலைக்கு எல்லாம் ஆள் பார்த்து விடுவோமா? இல்ல, நான் கொஞ்ச நாள் கூட இருந்துட்டு வரவா?” என்று கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஜெயலட்சுமி.

“இந்தா அப்பத்தா, கொஞ்சம் பேசாம இரு. நீ இப்படிப் பேசினது உன் பேத்திக்கு தெரிஞ்சது. அவ்ளோதான். அவ பேயாடுவா” அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான் விஜய்.

“ஐயோ, ஆமால்ல. மறந்தே போனேன் பாருய்யா” பேரனுடன் ரகசியம் பேசியவர், எதுவும் நடவாதது போல நிமிர்ந்து அமர்ந்து, “எத்தா ஜெயா, கொஞ்சம் டீ போடு. குடிப்போம்” என்று குரல் கொடுக்க, மகளின் உணவு குறித்து விவாதித்துக் கொண்டிருந்த பெற்றோர் இருவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.

பத்து நிமிடங்களில் மீண்டும் தேநீருடன் பேச்சு வார்த்தை தொடங்கியது.

“அவளுக்கு நல்லா சமைக்கத் தெரியும் ப்பா. மளிகை சாமான் வாங்கி வச்சாச்சு. அவ மேனேஜ் பண்ணிப்பா ப்பா. மத்த ரெண்டு பேரும் கூடச் செல்ஃப் குக்கிங்தான். சோ, பிரச்சனை இல்ல” விஜய் எடுத்துச் சொன்னான்.

முடிவில் ஒரு வாரம் மட்டும் பேத்திக்குத் துணையாகப் பெரியவர்கள் இருப்பார்கள் என்று முடிவானது.

மறுநாள் மாலை அப்பா, அம்மா கலங்கிய கண்களுடன் மகளைப் பிரிந்து விருதுநகர் புறப்பட்டனர்.

“நான் போய்ட்டு வரட்டா வர்ஷி? பத்திரமா இரு. எப்பவும் கவனமா இரு. ஏதாவது சொதப்பினா, யோசிக்காம எனக்குக் கால் பண்ணு. அண்ணா இருக்கேன். ஓகே?” அதுவரை இறுக்கமாக நின்றவளுக்கு மளுக்கெனக் கண்கள் உடைந்தது. விஜய்குமார் தன் பணியிடமான ஹைதராபாத் புறப்பட்டான்.

ஒரு வாரம் விரைந்து மறைந்திருக்க, அந்த வார இறுதியில் சென்னை வந்து மகளோடு நேரம் செலவழித்து, அவளைச் சீராட்டி விட்டு, பெற்றோரை அழைத்துக் கொண்டு விருதுநகர் சென்றனர் அவளது பெற்றோர்.

புதிதாக அவளுக்காக வாங்கியிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மகளின் வயிறு நிறைக்க, தன் அன்பால் நிறைத்திருந்தார் ஜெயலட்சுமி.

இட்லி பொடி, பருப்பு பொடி, பலவகை ஊறுகாய்கள், தொக்கு வகைகள் என வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்.

போதாததற்குக் காய்கறி, பழங்கள் வேறு நிரம்பி வழிந்தது.

“வேதா, அம்மா இட்லி மாவும், பணியார மாவும் அரைச்சு வச்சுருக்கேன். சீக்கிரம் காலி பண்ணிடு என்ன? இல்லனா புளிச்சுப் போகும். அப்புறம், தயிர் ஊத்தி வச்சுருக்கேன். டெய்லி கொஞ்சம் சேர்த்துக்கோ. அதான் சீனி போட்டு சாப்பிடுவியே? அப்படியாவது காலி பண்ணு. கேட்டுச்சா?”

“சரி, சரி, சரி மா” அம்மாவின் முந்தானை பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு சொன்னாள் வேதா.

“ப்ச், விடுடி.” வெட்கப் புன்னகையுடன் சொன்னார் ஜெயலட்சுமி.

அவர்கள் கிளம்பியதும் வீடே வெறுமையாகத் தெரிந்தது அவளுக்கு. நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பத்தா முந்தானை பிடித்தே வீட்டை சுற்றி வந்தவளுக்கு அந்தக் கணம் தனிமை பிடிக்காமல் கண்ணீர் வந்தது.

error: Content is protected !!
Scroll to Top