ரோஜாவின் அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல், தலையைத் திருப்பிக் கொண்டார் சுகந்தி.
“அவனுக்குப் பால் பிடிக்காதுன்னு உன்கிட்ட சொன்னானா?”
“ம்ஹூம்” என்ற ரோஜாவை சடாரெனத் திரும்பி கேள்வியாகப் பார்த்தார் சுகந்தி.
அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாய்த் தலையை மறுப்பாக அசைத்தாள் ரோஜா.
அவனுக்குப் பிடிக்காது என்று அவளாக அனுமானித்ததுதான் என்று சொன்னால், சுகந்தி எப்படி எடுத்துக் கொள்வார் என்று அவளால் கணிக்க முடியவில்லை.
திருமணத்திற்கு முன்பு அவர்கள் சேர்ந்து உணவருந்தும் போது, பன்னீர், நெய் பிடிக்காது என்று அவளிடம் அதை மறுத்திருக்கிறான். அதன் பின்னும் அது போலப் பல நிகழ்வுகள். ஆனால், அவனாக எதுவும் பகிர்ந்தது கிடையாது.
நமக்குப் பிடித்தவர்களின் பிடித்தங்களை அறிந்து கொள்வதில் பிரியம் கூடித் தானே போகிறது? அதைத்தான் செய்தாள் ரோஜா.
“அவன் என் கூட உட்கார்ந்து சாப்பிட்டு பல வருஷமாச்சு ரோஜா. நான் அவனுக்காகச் சமைச்சதா எனக்கும் ஞாபகமே இல்ல. குழந்தையா இருக்கும் போது அவனுக்குப் பசும் பால் பிடிக்காதுன்னு தெரியும். பால் பொருள் விரும்பி சாப்பிட மாட்டான். ஆனா, இப்போ மாறியிருப்பான் நினைச்சேன். செஃப் அவன், இதையெல்லாம் சாப்பிட பழகியிருப்பான் நினைச்சேன்.” குற்ற உணர்வுடன் சொன்னார் சுகந்தி.
“இன்னைக்கு அவனுக்காகச் சமைக்கவும் எங்கம்மாகிட்ட கேட்கலாம் நினைச்சேன். ஆனா, என் மகனுக்கு என்ன பிடிக்கும்னு அவங்ககிட்ட கேட்டு சமைக்க எனக்குச் சங்கடமா இருந்தது. இப்போ யோசிச்சா நான் அதைச் செய்திருக்கணும்னு தோணுது”
“இல்லத்த, சாப்பாட்டுல அவர் பெருசா எதையும் எதிர்பார்க்க மாட்டார். நான்தான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி” கணவன் உணவை வீணாக்குவதை விரும்ப மாட்டான் என்றுதான் அவள் எடுத்தது. இப்போது என்ன சொன்னாலும், சமாளிப்பாகவே பட்டது.
“மாறனுக்கு ஒரு அம்மாவா நான் எதுவுமே செய்தது இல்ல ரோஜா. அட்லீஸ்ட் இன்னைக்கு அவனுக்குப் பிடிச்சதா, உன்கிட்ட கேட்டாவது சமைச்சுருக்கணும். என்னோட தப்புதான்” உள்ளார்ந்த குரலில் உணர்ச்சி மிகச் சொன்னார். அந்தக் குரலில் உண்மை மிகுந்திருக்க, ரோஜா மௌனமாய் நின்றாள்.
“ஏற்கனவே என் மேல நிறையக் கோபத்துல இருக்கான். நானும் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து சொதப்பி அவனைக் கோபப்பட வச்சுட்டே இருக்கேன். வாழ்க்கையில் எல்லாரும் தவறுற இடம்னு ஒன்னு இருக்கும் இல்லையா? எனக்கு அது என் மகன். அவனுக்காக எல்லாத்தையும் சரியா செய்திடணுங்கிற பதட்டத்திலேயே தப்புத் தப்பா பண்ணிடுறேன்.” புலம்பினார்.
“அவனுக்கு எட்டு, ஒன்பது வயசு இருக்கும் போது ஒரு கோபத்துல அம்மானு கூப்பிடாத சொன்னேன் ரோஜா. அந்த நிமிஷ கோபத்துல யோசிக்காம நான் வீசின ஒரு வார்த்தையை, வீம்பா இத்தனை வருஷமா பிடிச்சு வச்சுருப்பான்னு நான் நினைச்சதே இல்ல.”
எவ்வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் அவரைப் பார்த்தாள் ரோஜா. இப்போதெல்லாம் அவர் பகிரும் எந்த ஒரு நிகழ்வும் அவளை அதிர்ச்சியடைய வைப்பதில்லை. அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி விட்டாள் அவள்.
அம்மாவின் அன்பில், அணைப்பில், ஆதரவில் வளராத ஒரு சிறுவனிடம் கடும்கோபத்தில் கூட, “என்னை அம்மான்னு கூப்பிடாத” என்று எப்படி இவரால் சொல்ல முடிந்தது என்று அவள் மனதில் மருக, அவளின் எண்ணப் போக்கை அறியாதவராகப் பேசினார் சுகந்தி.
“நான் மாறனை வயித்துல வச்சுருக்கும் போது எங்கம்மா கூட என்னை, செத்து தொலைன்னு பலமுறை சொல்லியிருக்காங்க. ஆனா, அதுக்காக நான்..” ரோஜா சுவரில் பொத்தென இடித்து நிற்க, பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தார் சுகந்தி.
“எங்கம்மா கோபத்தில் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியும். கோபத்துல சொல்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் பார்த்தா வாழ முடியாது இல்லையா ரோஜா?” தன் செயலை நியாயப்படுத்துவது போல அவர் பேச, எதை எதற்கு உதாரணமாகச் சொல்கிறார் இவர் என்று மனதில் மூண்ட எரிச்சலை முகத்தில் காண்பிக்காமல் அவரைப் பார்த்தாள் ரோஜா.
அவளுக்கு இள வயது இளமாறனின் ரணத்தின் முன் இவரின் உதாரணம் எடுபடவில்லை.
இந்த இரண்டு நிகழ்விற்கான ஒப்பீடே தவறு. எட்டு வயது சிறுவன் இளமாறனை கோபத்தில் பேசுவதற்கும், நல்ல மனமுதிர்ச்சியடைந்த சுகந்தியை அவர் அம்மா திட்டுவதற்கும் வித்தியாசம் இல்லையா? சுகந்தியால் அன்று அம்மாவின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். அம்மாவின் வார்த்தை பேதம் அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால், இளமாறன்?
அவன் மனதில் அது எத்தனை ஆழமாய்ப் பதிந்திருக்கும்? எத்தனை காயப்பட்டிருந்தால் இன்று வரை அம்மா என்ற அழைப்பையே மறந்திருப்பான் அவன்?
“நான் மாறன்கிட்ட மனசார மன்னிப்புக் கேட்டேன் ரோஜா. கெஞ்சினேன். ஆனா, நான் சொன்னதை அவன் மறக்கவேயில்ல. அன்னைக்கு இந்த வீட்ல இருந்து போனவன்தான். நானும், அவங்க அப்பாவும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அதுக்கப்புறம் அவன் இங்க வரவேயில்ல. என்கிட்ட வளரவும் இல்ல.”
‘அவர் அப்போ சின்னப் பையன் அத்த’ உதடு வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காமல் அப்படியே விழுங்கினாள் ரோஜா.
வார்த்தைகளும், வசவுகளும் அர்த்தமற்று போவதும், அர்த்தம் கூடிப் போவதும், அதை உதிர்ப்பவரை பொறுத்து மட்டுமே முடிவாவது அல்லவே. நம் மனதும், நாமிருக்கும் சூழலும் அல்லவா அதை முடிவு செய்கிறது?
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை அறியாதவரா இவர்?
கரும் மேகமாய்க் கசப்பு அவள் மனதில் படர்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
ரோஜாவால் அந்தக் கணத்தின் கனத்தைத் தாங்க முடியவில்லை. குழந்தையில் இருந்தே பெற்றோரின் சண்டையைப் பார்த்து வளர்ந்தவள்தான் அவள். ஆனாலும், இது நிரம்பவே கடினமாக இருந்தது.
அவளின் பெற்றோர், அவர்களுக்குள் என்ன நடந்தாலும் குழந்தைகளை அதற்குள் இழுத்தது கிடையாது.
மகள்களுக்கு முடிந்தவரை மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைத் தந்தவர்கள் அவர்கள். குழந்தைகளைக் கண்டித்திருக்கிறார்கள். ஆனால், கோபமாகக் கடின வார்த்தைகள் ஒரு போதும் பிரயோகித்தது கிடையாது.
“ரோஜா, நான் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு முழுசா சொன்னாதான் உன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியும்”
சுகந்தி பல வருடங்களாக மனதில் அடைத்து வைத்திருந்ததை மடை திறந்து விட்டது போலக் கொட்டத் தயாரானார்.
மகனிடம் கிடைக்காத மன்னிப்பை மருமகளிடம் பெற முனைந்தாரோ? இல்லை, மருமகள் வழியே மகனின் மன்னிப்பை பெற முயன்றாரா? அவருக்கே வெளிச்சம்.
“மாறன் குழந்தையில் இருந்தே எங்கப்பம்மாகிட்ட தான் வளர்ந்தான். நான் படிப்பை முடிச்சு வந்து வேலை, ஹாஸ்பிடல்னு பிஸியா இருந்த நேரம் அது. எங்களுக்கு வினோத், வெண்பா அடுத்தடுத்து பிறக்கவும் எனக்கு அவங்களைப் பார்க்கவே நேரம் சரியா போச்சு. ஆனா, அதுக்காக நான் மாறனை ஒதுக்கினது கிடையாது. எப்படி ஒதுக்க முடியும்? என் மகனை நான் எப்படி ஒதுக்க முடியும்?
அவன் வயித்துல இருக்கும் போதே எனக்கு நிறையச் சோதனைகள். எல்லாமே அவனுக்காகத் தாங்கிக்கிட்டேன். அவனைக் குழந்தையா நான் வளர்த்த பத்து மாசமும் என் வாழ்க்கையின் வசந்த காலம்தான்.”
“அவன் முதல் முறையாக அம்மா சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கு. அவனை விட்டுட்டு மேல் படிப்புப் படிக்கப் போகணும்னு முடிவு எடுக்குறது எனக்கு அவ்வளவு சுலபமா இல்ல.
பால் குடிச்சுட்டு இருந்த பச்சக் குழந்தய விட்டுப் போகவே எனக்கு அவ்வளவு போராட்டமா இருந்தது ரோஜா.”
“அம்மா இல்லாம குழந்தை எப்படித் தனியா இருக்கும்னுதான் எல்லோரும் யோசிச்சாங்க. ஆனா, பெத்த குழந்தையைப் பிரிஞ்சு அம்மா எப்படி இருப்பான்னு யாருமே யோசிக்கல. பத்து மாசம் வயித்துல சுமந்து பெத்து, பத்து மாசம் மடியில போட்டு வளர்த்த குழந்தை. அவனை எப்படிப் பிரிய முடியும்? அவன் என்னைப் பிரிய முடியாம அழுதானா? இல்ல, பசிச்சு அழுதானா கூடத் தெரியல. அன்னைக்கு அப்படி அழுதான் குழந்தை. எனக்கு மார் கனத்தாலும் அவனுக்குப் பாலூட்ட முடியாம போராட்டத்தோட விலகிப் போனேன். அங்க போய் எனக்குப் பால் கட்டி, மாறனை தேடி அழுது, எனக்குக் காய்ச்சல் வந்து… பால் சுரக்காம இருக்க ஊசி போட்டு, நிறுத்தி… அது கொடுமையான நாட்கள் ரோஜா.”
“அன்னைக்கு நான் யாரா இருந்தேன், என்னவா மாற ஆசைப்பட்டேன். என் மேல் படிப்பு எதுவுமே எனக்குப் பெருசா படல. இளமாறன், என் மகன். அவன் வேணும். அவன் இல்லாம இருக்க முடியல என்னால. குழந்தை அம்மாவை தேடுவானேன்னு அவ்வளவு தவிச்சேன். அப்போ லாண்ட்லைன் போன்தான். நான் போன் பண்ணும் போது மழலைல அம்மான்னு கூப்பிடுவான். அம்மா, அம்மான்னு அவன் சொல்றது காதில விழும் போது, அவனை அப்படிக் கத்த விட்டுட்டு வந்த நான் ஒரு கல் நெஞ்சக்காரின்னு என்னை நானே குற்றம் சாட்டாத நாள் இல்ல.”
அதைச் சொல்லும் போது அழுது விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அவர் பேசுவது தெரிந்தது. ஆனாலும், உணர்ச்சி மிகுதியில் அவர் குரல் உடையவே செய்தது.
“அத்த..” ரோஜா ஆதரவாய் அவர் கைப் பிடித்தாள்.
“என்கிட்ட போன்ல ஆயிரம் முறை அம்மா சொன்னவன், நான் நேர்ல வந்ததும்.. அவனுக்கு என்னை அடையாளம் தெரியல ரோஜா”
“அத்த, அவர்.. குழந்தை…” சத்தியமாய் அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதெனத் தெரியவில்லை.
“ம்ம், அவன் குழந்தை தானே. என் முகத்தை மறந்துட்டான். என்கிட்ட ஒட்ட அவனுக்குக் கொஞ்ச நாளாச்சு. எங்கம்மாவை அம்மம்மா சொல்வான். என்கிட்ட ஒட்டினாலும் என்னை அம்மான்னு அதிகம் கூப்பிட்டது கிடையாது அவன். அம்மா சொல்லு மாறா, அம்மா சொல்லுன்னு கேட்டுட்டே இருப்பேன். திடீர்னு அவனா அம்மா கூப்பிடுவான். அப்புறம் சும்மா பின்னாடியே வருவான். அவ்ளோதான்”
“….”
“இதையெல்லாம் இப்போ ஏன் நான் சொல்றேன் ரோஜா? இன்னைக்கு நான் என்ன வருத்தப்பட்டாலும் அன்னைக்கு நடந்ததை மாற்ற முடியாது இல்ல?”
“…..”
“மாறனுக்கு எட்டு வயசு இருக்கும் போது அவனை எங்க கூடவே கூட்டிட்டு வந்துட்டோம். ஒரு ஆறு மாசம் எல்லாம் நல்லாதான் போச்சு. இங்கருந்து ஸ்கூல் போனான். அப்போ வெண்பா கைக் குழந்தை. அன்னைக்கு…” பூதம் வெளியில் வரப் போகிறது என்று ரோஜா கூர்மையாகக் கவனிக்க, “சுகந்தி” என்று அழைத்தப்படி அங்கு வந்தார் சங்கரன்.
“போச்சு” சலிப்புடன் முணுமுணுத்தாள் ரோஜா.