51.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

நேற்று வரை சுகமான சுமையாக இருந்த ஒன்று, தனக்கு சொந்தமில்லாதது என்று தெரிந்ததும் இன்று கனத்தது. சுமையை சுமக்க அவள் தயாராக இல்லை. எங்கு செல்ல வேண்டும் எப்படி இதைக் கலைக்க வேண்டும் என்று தெரியவில்லை. போன மாதம் வரையுமே சென்னையில் சுபத்திரா தான் பார்த்தார். சென்னை வரை செல்ல முடியாது என்றதும் வீட்டருகே இருந்த மகப்பேறு மருத்துவரை தனியே சென்று பார்க்க, “நாலு மாசம் ஆகியிருக்குன்னு சொல்றீங்க… அறிவில்ல உங்களுக்கு… முழுசா உருவான ஒரு உயிரப் போய்… சீ சீ என்ன தாய் நீ எல்லாம்” என்று ஆரம்பித்து அவர் வாய்க்கு வந்தது போல திட்டித் தீர்த்தார்.

அவள் செய்ய நினைத்த காரியம் வீட்டில் தெரியவும், அடுத்த வாரமே வடபழனி கோவிலில், சொந்தங்கள் நடுவே பெண் நிறுத்தப் பட்டாள்! 

“இந்தப் பொண்ணு என்ன, கல்யாணப் பொண்ணு மாதிரியா வந்திருக்கா?”

“ஆமா க்கா, ஒரு பட்டுப் புடவ இல்ல… நகை இல்ல… ஏன் பூ கூட இல்ல? என்ன அபிராமி இது?”

“தில்லிக்கு போகணும். அதுக்கு முன்ன சிம்பிளா கோவில்ல வச்சு தாலி கட்டறேன்னு சொன்னான். அதுக்காக இப்படியா? இப்படி ஒரு கல்யாணம் பண்ணலன்னு யாரு அழுதா…?” அபிராமி அழுதே கரைந்தார்.

நின்றிருந்த முப்பது சொந்தங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும், அலர்விழியிடமோ, பிரவீனிடமோ ஒரு வார்த்தை ஒருவரும் கேட்கவில்லை! இந்த அவசரத் திருமணம் தான் எதற்கு? ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. விடயம் தெரிந்த ஒருவரும் வாய் திறந்தாரில்லை. 

“இத இவா கழுத்துல கட்டுங்கோ” என்ற சத்தம் கேட்டு அலர்விழி தலை உயர்த்த, பிரவீன் கையில் தாலியோடிருந்தான். 

“கூடப் படுக்கறதுக்கும் என்னோட பர்மிஷன் வேண்டாம், வயித்துல ஒண்ணக் கொடுக்கவும் உனக்கு என் பர்மிஷன் வேண்டாம்… தாலி கட்டவும் வேண்டாம்! என்ன விதமான மனுஷன் நீ?” பற்களுக்கிடையிலிருந்து வார்த்தைகள் வந்து விழ, அனைவர் முன்னிலும் அலர்விழி இப்படிப் பேசுவாள் என்று நினைக்கவில்லை பிரவீன். 

“அலர்விழி… நான் உன்ன ரொம்ப விரும்பறேன், உன்னக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்… ஆனா நீ தான்…”

“ஓ… நடந்ததுக்கு நான் தான் காரணம்! விக்டிம் ஷேமிங்! வாவ்!”

“முதல்ல கல்யாணம் முடியட்டும். அப்புறம் தனியாப் பேசலாம். பிளீஸ்!”

உள்ளுக்குள் புதைத்து வைத்திருந்த கோபமும் வலியும் ஒன்று சேர, “நான் பேசணும்! அப்புறம் தாலி கட்டறதப் பத்தி யோசிக்கலாம்” என்றாள்.

“பாப்பா…?” 

“உங்கட்ட இல்ல மா. நான் என்ன பேசினாலும் உங்களுக்குப் புரியவே போறதில்ல! பாசம் கண்ண மறைக்குது உங்களுக்கு. நான் இவர்கிட்ட தான் பேசணும்!” என்றவளைத் தடுக்க, பெண்ணின் தகப்பனோ தங்கையோ முன் வரவில்லை. 

கையைக் கீழே இறக்கியவன், “சொல்லு!” என்றான்.

புடவைக்குள்ளிருந்த தாலியை எடுத்தவள், “இது என் புருஷன் இதே மாதிரி ஒரு கோவில்ல வச்சு கட்டினது! இது மேலயே கட்டப் போறீங்களா?” கேள்வியாய் அவனைப் பார்க்க, சலசலப்பு எங்கு சென்றதோ. அதிர்ச்சி மட்டும் தான் அங்கு! பிரவீனுக்குமே அது அதிர்ச்சி தான்! 

“பார்க்க தாலி மாதிரி இல்லல்ல? ஆனா இத தான், ‘நான் என் புருஷனுக்கும், அவர் எனக்கும் எல்லா சந்தர்பத்துலேயும் உண்மையாவும், ஒண்ணாவும் இருப்போம்’ன்னு கடவுள் முன்ன பிராமிஸ் பண்ணி போட்டுக் கிட்டது. எனக்கும், மனோவா எபெனேசருக்கும் கல்யாணம் ஆகி நாலு மாசத்துக்கு மேல ஆகுது. சர்ச்சுல மோதிரம் மாத்தி, கோவில்ல வச்சு அவர் எனக்குத் தாலி கட்டி, கணவன் மனைவி ஆனோம். அப்புறம் எதுக்கு இந்தக் கூத்துக்கு ஒத்துகிட்டு எங்க நேரத்த வீணடிச்சன்னு உங்களுக்கு எல்லாம் வர கோபம் நியாயமானது. 

எனக்கும் அவருக்கும் ரிஷப்ஷன் வச்சு எங்க கல்யாணத்த சொந்த பந்தம், ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்றதா இருந்தோம். ஆனா முடியாமப் போயிடுச்சு.

நான் ஆயிரம் தரம் இந்த நல்லவர் கிட்ட சொல்லிட்டேன் என் வாழ்க்கை மனோவா கூட மட்டும் தான்னு! இருந்தும் இவர் என்னைக் கல்யாணம் பண்றதுல ரொம்பவே பிடிவாதமா இருக்கார். நானும் அவர் கூட பேச ட்ரை பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுதான் இன்னைக்கு உங்க முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆனதையும் சொல்லிட்டு, இவரோடான கணக்க முடிச்சுடுவோம்னு வந்தேன்”

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீ சொல்லவே இல்ல அலர்விழி!”

“நானும் சொன்னேன். அவரும் உங்ககிட்ட சொன்னார். நீங்க கவனிக்காதது யார் குத்தம்? சரி, இப்போ நீங்க சொல்லுங்க. உங்களுக்கு தெரியும் நான் மனோவ விரும்பறேன்னு, என் மனசுல உங்களுக்கு இடம் கிடையவே கிடையாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்! அப்புறம் ஏன் இந்தக் கல்யாணத்துல இத்தன அவசரம்?”

என்னவென்று கூறுவான்? வெளியே சொல்லக் கூடிய காரியமல்லவே!

“உங்க சித்திகிட்ட மாரத் தூக்கிட்டு சொன்னத, வெளியில சொல்ல முடியல இல்ல?”

“தப்பு தான்! நான் இல்லேன்னு சொல்லலியே. தப்ப சரி செய்யலாமே”

“ஓ… பரிகாரமோ?”

“அலர்விழி…”

“ஒரு தாலியக் கட்டினா எல்லாம் சரி ஆகிடும்ன்னு யாரு சொன்னா உனக்கு? உன்னப் பிடிக்கலன்னு சொன்ன பொண்ண பலாத்காரம் செஞ்சிருக்க. நாலு சுவருக்கு நடுவில யாருக்கும் தெரியாம நீ செஞ்சதனால நீ இன்னைக்கும் உத்தமன் வேஷம் போட்டுட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கிற!  என்ன ஒரு காமெடி!

ஒரு ஃப்ரெண்டா நினைச்சு தானே உன்னை வீட்டில சேர்த்தேன்.     அன்னைக்கு நான் ஒரு பிணம் மாதிரி தான பேச்சு மூச்சில்லாம இருந்திருப்பேன். எங்கிட்ட உன்னால உன் வெறியக் காட்ட எப்படி முடிஞ்சுது? ஒரு நெக்ரோபிலிக் மாதிரி உன் ஆசையத் தணிச்சுக்க ஒரு பிணம் போதும்னா, நான் எதுக்கு உனக்கு?”

“அலர்விழி!” அவள் ஏற்படுத்தும் காயம் வலித்தது. தான் செய்தது தவறு தானே… தன்னை உயர்வாய் பார்த்த நெருங்கிய சொந்தங்கள் முன் தலை கவிழ்ந்து நின்று அடியை வாங்கிக் கொண்டான்.

“என்ன டாக்டர்… நீங்க செஞ்ச வேலய சொன்னா உங்களுக்கே கொமட்டுது போல! நான் உடன் படாமலே என் கிட்ட உங்க வேகத்தக் காட்டினீங்க…. இப்போ அந்தத் தப்ப சரி செய்யப் பார்க்குறீங்க! ஆனா இந்தத் தப்ப சரி செய்ய உங்களால முடியவே முடியாது. அந்த அற்ப சந்தோஷத்த என்னால உங்களுக்குக் கொடுக்கவே முடியாது.

நான் அலர்விழி எபெனேசர். என் மூச்சுக் காத்து நிக்கிற வரை அவர் மட்டும் தான் எனக்குப் புருஷன்!” என்றவள் “இது தமிழ் சினிமாவும் இல்ல, பலாத்காரம் பண்றவன புருஷனா ஏத்துக்கிற ஆளும் நான் இல்ல! தப்ப நான் செய்யல, அதனால நான் தலை குனியவும் மாட்டேன்! கற்பிழந்த நீ, உன் சொந்தங்க நடுவில தலைய தொங்கப் போட்டுட்டே சுத்து!” கூறியவள் கிளம்பவும், “குழந்தைக்காக யோசிமா…” என்றார் அம்பிகா.

“இது என்னோட கர்பப்பை! குப்பத் தொட்டி இல்ல, கண்டவன் எச்சத்த சுமக்க! இன்னையோட இந்தப் பாவத்த இறக்கிற ஏற்பாடு செஞ்சுட்டு தான் வந்திருக்கேன்!” என்றதைக் கேட்ட பின்னும், ‘அது எபெனேசரின் வாரிசு’ என்பதைக் கூறாமலே வாயை மூடி நின்றான் பிரவீன். 

‘அவனால ஏனோ அப்போவே அவன் ரத்த சம்பந்தமில்லாத ஒரு குழந்தைய குடும்பமா பார்க்கவே முடியல’ எஸ்தர் கூறினாரே! மனோவிற்கு சொந்தமில்லாத ஒன்றை அவள் சுமப்பதா? வேண்டவே வேண்டாம்! அன்று மனோ கருத்தடை மாத்திரை கொடுத்த வேளை, ‘உயிர்த் துடிப்பை நிறுத்துவது பாவமாகாதா?’ என்று எண்ணியவளுக்கு இன்று நான்கு மாதக் கரு, ஒரு உயிராய் தோன்றவில்லை! பாவ மூட்டையாகத் தோன்றியது. பாவம், புண்ணியம் பற்றிய நினைப்பும் இல்லை கவலையும் இல்லை! ‘இன்று மாலையோடு வயிறு வீக்கம் குறைந்து விடும்!’ கூறிக் கொண்டாள்.

ஆட்டோ பிடித்தவள் நேரே நுங்கம்பாக்கத்திலிருக்கும் விளையாட்டு மைதானம் சென்றாள். ஆள் அரவமில்லாத மைதானத்தின் கடைசியிலிருந்த மரத்தடிக்குச் சென்றாள். வருடங்கள் சென்ற பின்னும் இடம் அப்படியே இருந்தது. அன்று எபி அமர்ந்திருந்த பென்ச்சை மெல்ல வருடினாள். இமைகள் மூடி, “மனோ…” என்றாள். 

புன்னகை முகமாய், அரும்பியிருந்த வியர்வை மினுங்க, சவ்வு மிட்டாயை மென்று கொண்டிருந்தவன், ஆட்காட்டி விரல் மேல் பந்தை சுற்றிக் கொண்டிருந்தான். “மனோ…” என்றாள். வாயிலிருந்த சவ்வு மிட்டாய் இடம் பெயர, மந்தகாச நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான். நங்கையவளின் மூடியிருந்த இமைக்குள் நீர் திரண்டாலும், இதழ் விரிந்தது.

‘மூச்சோடு மூச்சாக என்னோடே இருந்து விடு’ என்பது போல் மூச்சை உள்ளே இழுத்துப் பிடித்து அவன் வாசத்தை நுரையீரலில் நிறைத்துக் கொண்டாள். 

மதிய வேளை என்பதால் அனல் காற்று மேனியைத் தழுவிச் சென்றது. குளுகுளு அறையில் வீசிய அனல் நினைவில் வந்தது. “ரொம்ப கசகசன்னு இருக்கு போங்க தள்ளி” என்ற தருணம் மீண்டும் வராதா என்ற ஏக்கம் எட்டிப் பார்த்தது. “கசகசன்னு இருந்தா வாயேன், ஒண்ணாக் குளிப்போம்” கையோடு குளியலறை தூக்கிச் சென்றவனின் ஸ்பரிசம் இனி கிடைக்கவே கிடைக்காதா? ‘மனோ…’ கத்திக் கூப்பாடு போட நினைத்தாலும் தொண்டை அடைத்தது. பலம் கொண்ட ஆணின் கரம் தொண்டையைப் பிடித்து நெரித்தது. அது கொடுத்த வலியால் கண்கள் கரித்தாலும், இன்று இதமாக இருந்தது. இன்னும் அழுத்தம் கொடுத்துக் கொன்று விட மாட்டானா என்ற ஏக்கம் எட்டிப் பார்த்தது.

கால்களைக் கட்டிக் கொண்டு மரத்தடியில் அமர்ந்து கொண்டவளைச் சுற்றி மனோவின் வியர்வை வாசம். “எங்க டி போகப் போறேன்? உன் கூட தான் காலம் பூரா! என் கிட்ட வசமா மாட்டிக்கிட்ட” அவன் சிரிக்க, அவளும் புன்னகைத்தாள். “காலம் பூரா!” சொல்லிக் கொண்டாள்! 

error: Content is protected !!
Scroll to Top