வாரம் இரண்டு முழுதாக சென்றிருக்க, எபி பற்றி எந்தத் தகவலும் இல்லை. எபி கூறியது போலவே அன்றைய பெருமழையும், பெருவெள்ளமும் ஒன்று சேர்ந்து பல உயிர்களைக் குடித்திருந்தது. இரவும், மழையும், வெள்ளப் பெருக்கும் பலருக்கு எமனாய் மாற, பாலம் உடைந்து சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு குவிந்த மீட்புப் பணியினரால் அதிக உயிரை மீட்க முடியவில்லை.
3,730கி.மீ. நீளமுள்ள நதி வடக்கு மினசோட்டாவில் ஆரம்பித்து, விஸ்கான்சின் வழியாக, பல மாநிலங்களைத் தாண்டி கல்ஃப் ஆஃப் மெக்ஸிக்கோ-வை சென்றடையும். இத்தனை நீளமான நதி எதை எங்கு கொண்டு செல்லும் என்பதை மீட்புப் பணியினரால் முழுவதுமாகக் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றான் மார்க். “நாங்க ஃப்ரெண்ட்ஸா மினசோட்டா நதிக் கரையோரம் எல்லாம் தேடிட்டு இருக்கோம். ரெண்டு வாரம் ஆகிடுச்சு இதுக்கு மேல… நம்பிக்கை இல்ல! சாரி அலர்!” என்றான்.
“ரெக்கவர் பண்ணின பாடீஸ்ல அவன் இல்ல, காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்த லிஸ்டுலையும் அவன் இல்ல. அது ரொம்ப ஆழமான, உயிருக்கு ஆபத்தான நதி. எத்தன பேர் மிஸ்ஸிங்ன்னு கூடத் தெரியல! ரெண்டு வாரம் ஆகிட்டதனால, தேடறதையும் நிப்பாட்டிட்டாங்க! சாரி அலர்” என்றாள் இலக்கியா.
இதை கேட்கவா காத்திருந்தாள்? ‘தவறவிட்ட கைப்பேசி எங்கேனும் விழுந்திருக்கும். வந்திடுவார்’ என்று ஆறுதல் கூறிக்கொண்டு விமானம் தரையிறங்கக் காத்திருந்தாளே. அன்றிலிருந்து இன்று வரை காத்திருப்பு மட்டும் தான் நிரந்தரம் ஆனது!
அன்று, விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்க நெருங்க மனம் ஒரு நிலையிலில்லை. ‘மனோ வந்திடு மனோ… ப்ளீஸ்’ மனம் அவனோடு பேசிக் கொண்டே இருக்க வாயிலைப் பார்த்தே நின்றிருந்தாள். விமானம் தரையிறங்கி ஒரு மணி நேரம் சென்ற பின்னும் அவன் வரவில்லை! வந்தவர்கள் பெயர் பட்டியலில் அவன் பெயர் இல்லை என்றதும் நின்ற இடத்தில் மயங்கி சரிந்தாள்.
தொலைக்காட்சிப் பெட்டியையும், சமூக வலை தளங்களையும் நிறைத்த ‘ஃப்ளாஷ் நியூஸ்’ கண்முன் வந்தது. படபடவென இடிந்து சரிந்தது பாலம். பெரிய பெரிய கன்டெயினர் ட்ரக் எரிந்து நீருக்குள் விழுந்து கொண்டிருந்தன. கார் எல்லாம் பொம்மைக் கார் போல் உருண்டு சென்று நீருக்குள் விழுந்தன. இறக்கமே இல்லாமல், வெள்ளப் பெருக்கு சிலவற்றை உள்வாங்கியது, சிலவற்றை சருகைப் போல் வாரிக் கொண்டு போனது.
மூடிய காரை அடித்துச் சென்ற வெள்ளம், காரை பத்திரமாகக் கரை ஒதுக்கியிருக்குமா? கதவு திறந்து நீந்தி வெளி வந்திருப்பானா? தண்ணீரில் விழாமலே தப்பித்திருப்பான்! கை கால் ஏதேனும் அடிபட்டதால் விமானம் ஏற முடிவில்லையோ? வந்து விடுவாய் தானே மனோ? அரை மயக்கத்திலும் மனம் பலதைக் கற்பனை செய்து குழம்பித் தவித்தது. கண்ணாடி வழி தெரிவது அவன் தானே… அவனே தான்! “மனோ…” என்ற அலறலோடு எழுந்து அமர்ந்தாள். மீண்டும் கண்ணீரோடு மெத்தையில் விழுந்தாள் பெண். மருத்துவமனையில் விழிப்பதும், கண் மூடுவதுமாக இருந்தாள் அலர்விழி. ஒவ்வொரு முறையும் மனோ நீரில் முங்கித் துடிக்க, பெண் உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது.
“மார்க், ஆட்ரே கூட எடுத்த ஃபோட்டோ அனுப்பினான். கிளம்பறேன்னு சொல்லி முத்தம் கொடுத்தான் என் மகன். ஆனா ஃப்ளைட் ஏறல. என் மகன் என்ன ஆனான்னு தெரியலியே” என்ற எஸ்தரும் உயிர் வடிய அமர்ந்திருந்தார்! பால்ராஜ் மாரடைப்பால் படுத்து விட, மகனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் போக, எஸ்தரும் நடைபிணமாக மாறிப் போனார்.
சென்னையே வேண்டாம் என்று சென்றிருந்த பிரவீனை அம்பிகா அழைத்து விஷயத்தைக் கூறினார்.
“வேல பார்க்கிற இடத்துல லவ்வாம். அந்தப் பையன கல்யாணம் பண்ணி வைக்க கேட்டா போல, அவன் வந்ததும் ரெஜிஸ்டர் மேரேஜ், அப்படியே ரிஷப்ஷன் முடியவும் ரெண்டு பேரும் அமெரிக்கா போய்டுவாங்களாம்! உனக்கு இது தெரிஞ்சு தான் கல்யாணம் வேண்டாம் சொன்னியா கண்ணா?” என்று கேட்ட சித்தியிடம் எதையும் கூறவில்லை.
“இதப் பத்தி பேச வேண்டாம் சித்தி! செஞ்ச தப்ப சரி செய்யத் தெரியல. அவன தான் விரும்பறா! அவன கல்யாணம் பண்ண போறா! இனி அவளப் பத்தி பேச வேண்டாம். நான் டெல்லி போறேன். என்னை பார்க்கணும்ன்னா நீங்க அங்க வாங்க!” என்று கூறி சென்றிருந்தவன், அலர்விழியைத் தேடி அவளிருந்த மருத்துமனைக்கு வந்தான்.
அவன், முன்பு வேலையிலிருந்த அதே மருத்துமனையில் தான் அம்பிகா சேர்த்திருந்தார். மயங்கி சரிந்த மறுநாளே வந்து விட்டான், அலர்விழியைப் பார்க்க. வதங்கிக் கிடந்தாள். கைப்பேசியில் யாரோடோ பேசினான். செவிலி வந்தவள், “டாக்டர், உங்கள சுபாஷினி டாக்டர் கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்று அழைக்கவும், மாதவனை அறையில் அமர்த்தி விட்டு, “நீங்க வாங்க” என்று தியாகு-சௌந்தர்யாவோடு செல்லும் பொழுதே அம்பிகாவை அழைத்து விஷயத்தைக் கூறினான்.
“மன அழுத்தம்! அது தான் மயக்கமும், விழிப்பும், அலறலும்! மைல்ட் ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்திருக்கேன். கர்ப்பமா இருக்கறதுனால மருந்த பார்த்து தான் கொடுக்க வேண்டி இருக்கு. உடம்பும் டிஹைட்ரேட் ஆகி இருக்கறனால டிரிப்ஸ் போயிட்டு இருக்கு. முதல் ட்ரைமெஸ்டர்ல இருக்கறவங்கள இப்படித்தான் பார்த்துப்பீங்களா? கொஞ்சம் கவனமா இருங்க.”
மருத்துவர் கூற, இருவருக்குப் பேரதிச்சி, ஒருவனுக்கு விண்ணைத் தொடும் உவகை! அவசரமாக கணக்கு போட்டவனுக்கு பதினொரு-பன்னிரண்டு வாரக் கணக்கு வந்தது. “பிரெக்னென்ட்? மூனு மாசங்கிட்ட?” அடக்க முடியா ஆர்வத்தோடே கேட்டான் பிரவீன்.
“அத நீங்க தான் சொல்லணும்!” மெல்ல சிரித்த மருத்துவர், அவனைக் கணவன் என்று எண்ணி விடவே, “உங்க வைஃப நெக்ஸ்ட் வீக் கூட்டிட்டு வாங்க டாக்டர். அல்ட்ரா-சௌண்ட் எடுத்துட்டு எத்தனாவது வாரம், குழந்த வளர்ச்சி, என்னைக்கு (due)ட்யூ-ன்னு எல்லாத்தையும் பார்த்துடுவோம். நான் அடுத்த ஆறு மாசம் வெளிநாடு போறேன். எனக்கு பதிலா டாக்டர்.சுபத்திரா தேவி பார்ப்பாங்க, உங்களுக்குத் தெரியுமே அவங்கள!” எனவும் அவன் புருவம் சுருக்கினான்.
“ஒரு வருஷம் முன்னால, காப்பாத்தவே முடியாதுன்னு வந்த அவங்க வயசான அப்பா, தாமோதரனுக்கு பிரெயின் டியூமர் சர்ஜரி பண்ணிக் காப்பாத்துனீங்களே, நினைவு வருதா?” என்றவருக்கு சிறு புன்னகையோடே தலையசைப்பைப் பதிலாகக் கொடுத்தான். டாக்டர்.சுபத்திரா இவன் கைபிடித்து கண்ணீரோடு ‘இந்த உதவிய உயிருள்ள வரை மறக்கவே மாட்டேன் டாக்டர். என்னைக்காவது ஏதாவது உதவி என்னால உங்களுக்கு செய்ய முடியும்னா கண்டிப்பா என் உயிரக் கொடுத்தாவது செய்வேன்’ எனக் கூறினாளே. அலர்விழியை இவளை விட யார் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியும்? ‘அலர்விழி’ என்ற பெயரை மனம் உச்சரிக்கவும், பிரவீன் முகத்தில் பரவசம்!
சௌந்தரியா அதிர்ச்சி குறையாமல் தியாகுவைப் பார்க்க அவர் அமைதியாகத் தான் தெரிந்தார். மருத்துவர் பிரவீனைப் பார்க்க, “தேங்க்ஸ் டாக்டர்” என்றவன், அதற்கு மேல் மருத்துவரின் தனியறையில் நிற்காமல் வெளியே செல்ல, அவன் முதுகைப் பார்த்திருந்தவரின் கவனத்தை தியாகு கலைத்தார்.
மகளின் மனநிலை, உடல் நிலை பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டார். “உடம்புக்கு ஒண்ணும் இல்ல, சோ, அவங்கள இன்னைக்கே வேணும்னாலும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஆனா மன அளவில அவங்க எதையோ நினைச்சு டிஸ்டர்ப்டா இருக்காங்க. சோ இப்போ போனாலும் அதே வேகத்துல இங்க வந்து நிப்பீங்க! கௌன்ஸ்லிங் தேவை. இன்னும் டூ டேஸ் போகட்டும், அவங்ககிட்ட சைக்கியாட்ரிஸ்ட் பேசட்டும், அப்புறம் டிஸ்சார்ஜ் பத்திப் பேசுவோம்!” என்று ஏதேதோ கூறி அனுப்பினார்.
மகளின் மணாளன் வருவானா? கேள்விக் குறியாய் நிற்கும் மகள் வாழ்வை நினைத்துப் பெற்றவர்களுக்கு ஜீவனே இல்லை. இதில் மகள் கர்ப்பம்! எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை பெற்றவளுக்கு!
“மாதவன நம்மளோட வச்சுட்டு இருக்கறது சரி இல்ல சௌந்தரி, அவன கிளம்ப சொல்லு. குழந்தயப் போய் பார்க்கட்டும். நிலம எதுவும் இப்போதைக்கு மாறப் போறது இல்ல! என் பொண்ணு விதியில என்னென்ன இருக்கோ! நான் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன், நீ ரூம் போ…”
தளர்ந்த நடையோடு சென்று கொண்டிருந்த கணவனையே பார்த்திருந்தவர், முந்தியால் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொண்டார். ‘என் பொண்ணு அங்கேயே இருந்திருந்தா கூட நல்லா இருந்திருப்பா! பாவி எல்லாம் என்னால… என் மக உயிரோட செத்துப் போயிட்டாளே. கடவுளே, உனக்கு உயிர் தான் வேணும்ன்னா, அவருக்கு பதிலா என்னை எடுத்துக்கோ… வாழ வேண்டிய குழந்தைங்கள விட்டுடு சாமி’ மனம் வெந்து போய் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.
மருத்துவரின் அறையிலிருந்து வந்த பிரவீன் நேரே அலர்விழியைக் காணச் சென்றிருந்தான். மாதவன் கழிவறை சென்றிருக்க, தனியே கண்மூடிப் படுத்திருந்தவளைப் பார்த்தே நின்று கொண்டிருந்தான் பிரவீன்.
“உன்ன என் வைஃப்ன்னு நினைச்சாங்க அலர்விழி. எனக்கும் நீ அப்படித்தான் தெரியுமா? ஆனா நீ மட்டும் ஏன் அடம் பிடிக்கிற?”
“அவன் தான் வேணுமா? இப்போ உன் வயத்துல என் கரு வளருதே… இன்னும் அவன் தான் வேணுமா? ஆனா அவன் இல்லியே அலர்விழி! என்ன பண்ணப் போற?”
“அவன் திரும்பியே வந்தாலும், என் குழந்தைக்கு அப்பாவா இருக்க அவன விடுவேன்னு நீ நினைக்கிறியா அலர்விழி?”
படுத்திருந்தவளின் தலையை மெல்ல வருடி விட்டான்.
“நான் உன் மேல எவ்வளவு ஆச வச்சிருக்கேன்னு உனக்கு எப்படிப் புரிய வைப்பேன்?”
“அப்படி எல்லாம், ‘இனிமேல், இந்தா வச்சுக்கோ’ன்னு உன்னை என்னால தூக்கிக் கொடுக்க முடியாது! புரியுதா அலர்விழி? நான் சித்திகிட்ட சொல்லி நம்ம கல்யாணத்த முடிக்கிறேன். சரியா?”
“இப்படித்தான் வயித்துல பாப்பாவோட கேர்லெஸ்ஸா கீழ விழுவியா?” நெற்றிக் காயத்தை மெல்ல வருடினான். “ரொம்ப வலிக்குதா? பெயின் கில்லர் நம்ம குழந்தைக்கு நல்லதில்ல, அதனால கொஞ்சம் பொறுத்துக்கோ” கண்ணோரம் உறைந்திருந்த உப்பு தடத்தை அழுத்தித் துடைத்தான்.
“ஏன் உடம்பு இவ்வளவு வீக்கா இருக்கு உனக்கு? பாரு, கைல ஊசி போட வேண்டியதாப் போச்சு!” பார்வை கையில் நிலைக்க, ஊசியிருந்த இடத்தை சுற்றி இதமாகத் தடவினான். “உன்ன ராணி மாதிரி வச்சுப்பேன். என் கூடவே இரு அலர்விழி” கெஞ்சலாய் கேட்டான்.
புடவையை கொஞ்சமாய் விலக்கி வயிற்றில் கை வைத்தான். “நான் அப்பாவா?” மனம் இன்பத்தில் பொங்கி வழிந்தது. திருமண பந்தமே பிடிக்காதவனை என்ன செய்தாய் பெண்ணே? மெல்ல புன்னகைத்தான். “என்னை அரைப் பைத்தியம் ஆக்கிட்ட நீ! அமெரிக்கால இருந்து வந்த பிறகு உன்ன மட்டுமே நினைச்சுட்டு இருக்கேன் தெரியுமா? உன்னப் பிரிஞ்சு நான் நானாவே இல்ல அலர்விழி! உன்ன நினைக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டே, உன்ன மட்டும் நினைச்சிட்டு இருந்தேன்! நீ ரொம்ப சாப்ட் அலர்விழி. நம்ம பாப்பாவத் தாங்குவியா?”
முழிப்பு தட்டிய அலர்விழிக்கு தலை கனத்தது. யாரோ கிணற்றிலிருந்து பேசுவது போல் கேட்டது. வயிற்றில் ஏதோ ஊர்வது போல் இருக்க மெல்ல கனமான இமைகளை பாடுபட்டுத் திறந்தாள்.
பெண்ணவள் வயிற்றில் கை வைத்திருந்ததை உணராமல், இன்பக் கடலில் நின்றிருந்தவன், “பிரவீன்?” என்ற சத்தம் கேட்டுத் திரும்பும் முன் மாதவன் ஒரே தள்ளாய் அவனைத் தள்ளி ஓங்கி அறைந்திருந்தான்.
“என்ன டா பண்ணிட்டு இருக்க அவள? மனுஷனா நீ?” ஆத்திரம் அடங்காமல், “மயக்கத்துல இருக்கா டா… ச்சீ என்ன பிறவி நீ?” மீண்டும் பிரவீன் சட்டையைப் பிடிக்க, “மாதவா அவன தொடாத…” என்ற சத்தம் அம்பிகாவினுடையது.
“அவன் மேல இருந்து கை எடு மாதவா”
“அத்த இவன் என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா?” இதைக் கூறவே வாய் கூசியது தமையனுக்கு!
“ண்ணா…” என்ற ஈனஸ்வரம் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர, “என்ன டா… என்ன பண்ணுது” கேட்டுக் கொண்டே அமர முயன்று கொண்டிருந்தவளை கைத் தாங்கலாய் எழுப்பி அமர வைத்தான்.
“என்ன டா பிரவீன்?” அம்பிகா அவனைப் பார்க்க, “அத்த அவன வெளியில போக சொல்லுங்க” என்றவனை “மாதவா அவனப் பேச விடு!” என்று அம்பிகா தடுத்தார்.
பளார்! பிரவீன் கன்னத்தில் அம்பிகாவின் கை இறங்கியது. “டேய்…” என்று வந்த வேகத்தில் மாதவன் மீண்டும் சட்டையைப் பிடிக்க, அங்கு இருவருக்கும் அடிதடி நிலை ஆரம்பிக்கவும், “ண்ணா” என்று கட்டிலிலிருந்து எழப் போனவளிடம் ஓடினான்.
“என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசறியா?” அம்பிகாவால் நம்ப முடியவில்லை.
“நான் அவ மேல உயிரே வச்சிருக்கேன்னு சொன்னேன். அவ என்னை விரும்பலன்னு சொன்னா! நான் விலக தான் நினைச்சேன்! அமெரிக்கால இருந்து கிளம்பற அன்னைக்கு மருந்தோட சேர்த்து நான் குடிக்க வச்சிருந்த டிரிங்க்ஸ்ச தெரியாமக் குடிச்சுட்டா. ரெண்டு பேரும் போதைல எதிர்பாராத விதமா எல்லை மீறிட்டோம். நடந்த எதுவும் அவளுக்கு நினைவில்ல! இப்போ, அவ வயத்துல என் குழந்த சித்தி” அவன் முடிக்கும் முன், “வாய மூடு… யார் வயத்துல யார் குழந்த?” கழுத்தை நெறிக்கும் ஆத்திரத்தோடு மாதவன் எழவும், மீண்டும் ஓங்கி அறைந்திருந்தார் அம்பிகா.
“என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற. பாவி!” அவரால் ‘போதை’ என்ற கதையை நம்ப முடியவில்லை. என்றேனும் குடிப்பான் என்று தெரியும், ஆனால் நிதானம் இழக்கும் வரை போகும் குடிகாரன் இல்லையே. பெண் வாழ்வை கெடுத்து விட்டு நிற்பவனை என்ன செய்யவென்று அவருக்குத் தெரியவில்லை.
“சித்தி…”
“வாய மூடு! பெத்த பிள்ள மாதிரி நான் தானே டா உன்னையும் வளர்த்தேன். ‘நீ வளர்த்து விட்ட லட்சணத்தப் பாரு’ன்னு என் முகத்துலயே காறித் துப்பிட்டியே! ஐயோ என்ன காரியம் பண்ணிட்டு வந்து என் முன்ன நிக்கிற? என்ன உரிமைல அவ கிட்டப் போன? கூச்சமே இல்லாம பகிரங்கமா நான் தான் அவ வயத்துல குழந்தயக் கொடுத்தேன்னு சொல்ற அளவுக்கு உனக்கு மண்டை கனம் ஏறிப் போச்சா? நீ, என் மகன் என்ன… மனுஷனே இல்ல… போடா என் கண்ணு முன்ன இருந்து!” கண்ணீர் வழிய ஆதங்கத்தைக் கொட்டி நின்ற சித்தியை இயலாமையோடே அவன் பார்க்க, நடக்கும் எதையுமே நம்ப முடியாமல் சுவரோடு சரிந்து அமர்ந்தார் தியாகு.
எத்தனை அருமையாக வளர்த்த மகள். அவளுக்காக மனைவியோடு கூட சண்டை பிடித்தாரே! வாழ்வில் இனிமையாய் இருக்க வேண்டிய தருணமெல்லாம் என் மகளுக்கு கசப்பாய் போனதே… மனிதன் தலையில் கை கொடுத்து அமர்ந்துவிட, சௌந்தர்யா பித்து பிடிக்காத குறையாகப் பார்த்து நின்றார். ‘இவனையா உத்தமன் என்று என் பெண்ணிற்குப் பார்த்தேன்?’ ஓய்ந்து போனார்.
கேட்டுக் கொண்டிருந்த அலர்விழிக்கு மூச்சு முட்டியது. உண்மையா? கண்விழித்த அன்று தன் நிலை! தன்னை விட அதிக வலியில் இருந்த மனோ! அவன் விட்ட கண்ணீரின் பொருள் இது தானா? கொடுத்த கருத்தடை மாத்திரை? திடீர் திருமணம்? எல்லாம் இவன் செய்த வேலையாலா? ஐந்து நாட்கள் முன்பு கைப்பேசியில் மனோவும் பிரவீனும் பேசியது இன்று புரிந்தது.
பிரவீனைப் பார்த்தாள். அவனிடம் கேட்க ஒன்றும் இருக்கவில்லை. கூறினானே அவள் மனோ, நினைவில்லாத ஒன்றை நினைக்க வேண்டாம் என்று! ஆம்! இதில் நினைக்க என்ன உள்ளது? காதலா? காமமா? எதுவுமே தெரியாதே! மரத்துப் போன மனம் கூட வருந்துமா? வருந்தியது! எதிரில் நிற்பவன் செய்ததாய் கூறியதை நினைத்தல்ல, நெஞ்சை நிறைத்தவன் நிற்கதியாய் விட்டுச் சென்றானே என்று நாதியற்ற நெஞ்சம் வருந்தியது! மனோ இருந்திருந்தால், நெஞ்சை நிமிர்த்தி தன் முன் பேசத்தான் இவனால் முடியுமா?
அவள் அழுவாள், உடைவாள் என்று தெரிந்து தான் அன்று விமான நிலையத்தில், “கின்ட்சுகி (kintsugi) எப்பவும் இந்த வார்த்தைய நினைவுல வச்சுக்கோ” என்று கூறினானோ?
“எதுவுமே வாழ்க்கைல நிரந்தரம் இல்ல விழி. இது தான் முழுமை, இது தான் பரிபூரணம்ன்னு எதுவும் இல்ல. உடையறதும், உடைஞ்சத ஒண்ணு சேர்க்கிறதும் வாழ்க்கையோட ஒரு நிகழ்வு அவ்வளவு தான்!
சில ஜீரணிக்க முடியாத விஷயம் நடக்கும் போது கண்டிப்பா காயம் ஏற்படும். நாளடைவில காயம் தழும்பா மாறும்! பச்சக் காயத்தோட வலி அதுல இருக்காது. ஆனாலும் அந்தத் தழும்பு நம்மள கோழையாக்கும்! அப்போ அந்தத் தழும்ப மறைக்க நினைக்காத. ஏத்துக்கோ! நடந்ததை மாத்த முடியாதுன்னு உண்மைய ஏத்துக்கோ!
விலையுயர்ந்த அழகான பீங்கான் கோப்ப உடைஞ்சுட்டா அத ஜப்பான்ல தூக்கிப் போட மாட்டாங்க. பசை வச்சு ஒட்டி தங்கத் துகள்கள பசையில தூவுவாங்க! உடைஞ்ச கோப்ப, முன்ன விட அழகாயிடும். புது தங்க ரேகையோட, அது மதிப்பும் பல மடங்காகிடும்! அது தான் கின்ட்சுகி!
உன் மனசு உடையற மாதிரி ஏதாவது கேள்விப்பட்டா, நினைவு வச்சுக்கோ, நீ என்னோட அழகான விலை மதிப்பில்லாத பொக்கிஷம்! தங்கத் துகள் பசை மாதிரி நம்ம காதல் உன்ன இன்னும் அழகா வெளிக் கொண்டு வரும்ன்னு நினைவுல வச்சுக்கோ.
உன் கண்ணீர துடைக்க நான் உன் பக்கதில இல்லாமப் போகலாம்! ஆனாலும் உன் மூச்சுக் காத்து மாதிரி எப்பவும் உனக்குள்ளவே இருப்பேன். என் வாழ்க்கை, என் உயிர், என் மூச்சுக் காத்து நீ மட்டும் தான் விழி! எதுவும் இந்த உண்மைய மாத்த முடியாது! ஐ ஆம் டுரூலி டீப்லி மேட்லி இன் லவ் வித் யூ மிஸஸ்.மனோ.” என்றவன், “நீ தைரியமான பொண்ணு! உன் நிமிர்வையும் தைரியத்தையும் டைட்டா பிடிச்சுக்கோ! யார் முன்னாடியும் எதுக்கும் தலை குனியாத! நீ மனோவோட புதுமைப் பெண்!” என்றானே! இதற்கு தானா?
“மனோ…” கேவலாய் வெடித்து அலர்விழி அத்தனை சத்தமாக அழவும் மாதவன் தவித்துப் போனான். “அலர்…” என்றவனை, “மனோ மட்டும் தான் ண்ணா… அவர வர சொல்லுண்ணா… அவரில்லாத இந்த உலகம் எனக்கு வேண்டாம். என்னக் கொன்னுடு ண்ணா” என்று முகத்தை மூடிக் கதறுபவளை தோளோடு அணைப்பவனால், மச்சானைக் கூட்டி வர தான் முடியுமா?
“ஏன்?” என்று ஒரே ஒரு வார்த்தை கூட கேட்காத அலர்விழியை பிரவீன் பார்த்து நின்றான். அவன் தவறு பூதாகரமாக எழுந்து அவன் முன் நின்றது! தான் ஒருவன் எந்த விதத்திலும் அலர்விழியை பாதிக்கவே இல்லையா என்ற வலி பிரவீனிற்கு நிரந்தரமானது.
வாரம் இரண்டு ஓடிவிட்ட பின்னும், எபி பற்றி எந்தத் தகவலும் இல்லை. கைப்பேசியை வெறித்தே அமர்ந்திருந்தாள். கைப்பேசியை நிறைத்திருந்த மனோ தன்னை அணைத்தபடி, காற்றில் பறந்து கொண்டிருந்த மலர் இதழ்களுக்கிடையே, பூத்துக் குலுங்கிய மாக்னோலியா மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆத்தங்கரை மரமெல்லாம் பூத்துக் குலுங்குதய்யா!
மரம் மேல் நீ சாய
நான் உன் மார் சாய
நம் மேல் பூ தூவ காத்திருக்கும்- ஆத்தங்கரை மரமெல்லாம்