27.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

இப்படிப்பட்ட பேச்சுக்கள் கேட்டு வருடங்கள் ஆகிறது. அவள் ஊனம் ஒன்றும் அவள் விரும்பி வாங்கிய வரம் இல்லையே. இன்று வரை அழுத்தாத பாரம் உள்ளுக்குள் அழுத்தியது. எதிர்பாராததால் வலி அதிகம். அத்தானுக்குத் தான் பொருத்தமில்லையோ? மனம் வெடித்து விடும் போல் இருக்க, கண்கள் நீரைக் கொட்ட ஆரம்பித்தது.

“பெரியம்மா…” அலர் சத்தம் வைக்கவும்,

“என்ன இல்லாததயா சொல்லிட்டேன்” அவர் மீண்டும் ஆரம்பித்தார்.

“அண்ணி… இது என்ன பேச்சு? அப்படி எல்லாம் நம்ம வீட்டு குழந்தைங்கள பேசாதீங்க!” அம்பிகா குரல் உயர்த்தினார்.

முகம் சிவக்க, இதழ் துடிக்க நின்றிருந்தவளையே பார்த்து நின்றவனுக்கு அவளை எப்படி ஆறுதல் படுத்தவென்றே தெரியவில்லை.

“சொல்லுங்க அத்த, இப்போ உங்க பிரச்சன தான் என்ன?” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையோடே…

“என் பொண்ணுக்கு ஒரு வழிய சொல்லு. அவதான் முறை. நீ முறை தெரியாம போய் கண்டவங்களோட சம்பந்தம் பேசுவ நான் பார்த்திட்டு இருப்பேனா? எங்க குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இல்ல? எங்க என் அண்ணன்? அவர்ட்ட கேக்கிறேன் நியாயத்த” என்றார் கோபம் கொஞ்சமும் குறையாமல்.

“வசந்தி!” வினோ கோபத்தின் உச்சியை அடைந்திருந்தான். அவன் அழைக்கவும் வந்தவளிடம், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றான் எடுத்த எடுப்பிலேயே…

நகுநாவிடமிருந்து ஒரு கேவல் வர… பற்களைக் கடித்து கண்களை மூடித் திறந்தவன், “சொல்லு வசு… கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றான்.

“என்ன வினோ? எனக்கு நீ வேற, மாதவன் வேற இல்ல! உன்ன போய் எப்பிடி?” என்று அவள் இழுக்க…

பாக்கியாவை பார்த்தான். ‘பார்த்தாயா?’ என்ற பார்வை அவனிடம். பாக்கியாவிற்கு முகத்தை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. உறவுகளின் முன் மானக்கேடாய் போக, கோபம் இன்னும் அதிகமாகியது.

அங்கிருந்த அனைவர் முகமும் பாக்கியாவின் பேச்சு பிடிக்கவில்லை என்பதைக் காட்டியது. அதற்குள் வெளியே அமர்ந்திருந்த வீட்டு ஆண்களும் உள்ளே வந்துவிட, வினோத் நேரே சென்றது நகுநாவின் முன் தான்.

“இப்போ எதுக்கு அழற? முதல்ல தலைய தொங்க விடாத. என்னைப் பாரு”, என்றான்.

முயன்று தலையைத் தூக்கியவளிடம், “உடம்புல ஊனம் இருக்கறது பிரச்சினை இல்ல. மனசுல தான் இருக்கக் கூடாது. உன் மனசு, உள்ள இருக்கே ஒரு குழந்த… அது மனசு மாதிரி. நாளைக்கே இங்க இருக்க யாருக்கு வேணா… ஒரு ஆக்ஸிடென்ட் ஆகலாம்… ஒரு கையோ ஒரு காலோ போகலாம். உடனே அவங்க குறையுள்ள மனுஷங்களா மாறிடுவாங்களா? என் கண்ணுக்கு நீ நிறைவா இருக்க! அத நீயும் நம்பு.” அவன் கூற, உள்ளே நுழைந்த மகளைப் பெற்ற தியாகுவிற்கும், மகனைப் பெற்ற திருநாவுக்கரசிற்கும் ஒன்றும் புரியவில்லை.

மகளை யாரேனும் ஏதேனும் கூறி விட்டார்களா? தவிப்போடே தியாகு அருகில் வரவும்,

“மாமா, எனக்கு நகுவ பிடிச்சுருக்கு மாமா. அவ கூட என்னோட மீதி வாழ்க்கைய கழிக்கணும்ன்னு ஆசைப்படறேன். அம்மா அப்பாட்ட என் விருப்பத்த சொல்லிட்டேன். உங்கட்டயும் சொல்லிட்டேன். பெரியவங்க பேசி நல்ல முடிவெடுங்க,” என்று அவன் நகர்ந்துவிட, அம்பிகா சென்று நகுநா கையை பிடித்துக் கொண்டார்.

“வா தண்ணி குடி, மனசைப் போட்டு குழப்பிக்காத.” என்றவர், நடப்பதை எதையும் நம்பாத பார்வை பார்த்து நின்ற சௌந்தர்யாவிடம், “என் மகளா, எந்த குறையும் இல்லாம பாத்துப்பேன் அண்ணி. வினோ பத்தி நான் சொல்லி நீங்க தெரிய வேண்டியதில்ல. முடியாதுன்னு சொல்லிடாதீங்க…” என்று கூற, சௌந்தர்யாவிற்கு      பதில் பேச முடியவில்லை.

“எல்லாம் நல்ல விஷயம் தான். இப்போவே பேசணுமா? பொறுமையா ஒரு நல்ல நாள் பார்த்து பேச்ச ஆரம்பிப்போம்,” என்றார் குடும்பத்திற்கு மூத்தவராய், சகுந்தலா பாட்டி.

சபை கலைய ஆரம்பிக்க, உள்ளிருந்து குழந்தையோடு வெளியே வந்த அபிகேல் பாக்கியாவின் கண்களை ஏன் உறுத்தினாள் என்பது தான் அன்றைய மில்லியன் டாலர் கேள்வி. 

அம்பிகாவை எதற்கேனும் கடிந்தே ஆகவேண்டும் என்று பாக்கியலக்ஷ்மி நினைத்திருப்பார் போலும்! மற்றவர் மனதைப் புண்ணாக்க அவருக்குச் சொல்லித்தர ஆசான் தேவையில்லை என்பதால் அவர் விஷ அம்புகளை நிற்கதியாக நின்ற பெண் மீது வீச ஆரம்பித்தார்.

“ஒரு நல்லது நடக்கிற வீட்டுல இப்படித்தான் தாலிய அறுத்துட்டு வந்தவளக் கூப்பிட்டு நடுக் கூடத்தில நிக்க வைப்பீங்களா அண்ணி? இவ முகத்தப் பார்த்துட்டு வாழ்க்கைய தொடங்கினா, அதுங்க பொழைக்குமா? அண்ணன் உங்கள ஒண்ணும் கேக்கிறது இல்லன்னு எல்லாம் உங்க விருப்பம் தான் இல்ல. எதையும் குடும்பத்துல இருக்க யார்கிட்டயும் கேக்கறது இல்ல.

இவள எல்லாம் நல்லது நடக்கிற இடத்துக்கு யாராவது வெத்தல பாக்கு வச்சு அழைப்பாங்களா? வந்து நிக்கிறா பாரு, அப்பன் ஆத்தாவ முழுங்கீட்டு, கட்டினவனையும் முழுங்கீட்டு… அடுத்து கையில ஒண்ண எப்போ பறி…” அவர் மேலும் பேசியிருப்பார், “பெரியம்மா என்ன பேசறீங்க, அவங்களப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்ன்னு பேசறீங்க? அவங்க ஒண்ணும் உங்க வீட்டுப் பொண்ணு இல்ல உங்க இஷ்டத்துக்குப் பேச!” என்ற அலர்விழியின் அதிர்ந்த ஒலி கேட்காமலிருந்திருந்தால்.

உலகம் காலுக்கடியில் நழுவிக் கொண்டிருந்தது அபிகேலுக்கு. இங்கு வந்த நாள் முதலே விதவை, அனாதை எல்லாம் இவள் பின்னால் பேசுவதைக் கேட்டவள் தான்! ஆனால் இன்று? காயப்பட்டுப் போனது பெண் மனம்.

கண் முன்னே காதல் மனைவியையும், செல்ல மகளையும் தனியே விட்டுச் செல்கிறேனே என்ற வலியோடு அப்பா இறக்காமல் போயிருந்தால்… மெலிந்து கூடாய் போன அம்மாவின் இதயம் அதன் துடிப்பை நிறுத்தாமல் இருந்திருந்தால்… யாருமில்லாமல் இருந்தவளுக்குத் தோள் சாய்க்க இடம் கொடுத்தவன் தனக்கு உண்மையுள்ளவனாக இருந்திருந்தால்… இந்தப் பழி எல்லாம் தன் மேல் வந்திருக்காதோ? மகளைப் பற்றி ஏதோ கூற வந்தாரே! நினைக்கும் போதே இதயம் வலித்தது. கால் நிலையில்லாமல் நடுங்கியது. இத்தனை வலியில் தனக்கென ஒருத்தர் இல்லையே. தோள் சாய தனக்கென்று ஒரு உறவில்லையே. கண்ணீர் பார்வையை மறைத்தது. நீர் சிந்திவிடாமல் இருக்கப் பெரும்பாடாய் போனது.

“ஏன் அண்ணி இப்பிடி?” உடைந்து போனார் அம்பிகா. பெண்ணின் முகம் பார்க்க முடியவில்லை.

சௌந்தரியா மெல்ல அபியின் முதுகைத் தடவிக் கொடுத்தார். ‘இது என்ன பேச்சு?’ என்ற பார்வை அவரிடம். ஏதேனும் பேசினால் பாக்கியம் பெண்ணைக் கதற விட்டு விடுவார் என்பதால் ஒருவரும் வாய் திறந்தாரில்லை.

வீடு மயான அமைதியைத் தத்தெடுக்க, வெளியே சென்று கொண்டிருந்த ஆண்கள் கால்களும் ஸ்தம்பித்து நின்றிருந்தது. பாக்கியாவின் குணம் அறிந்தவர்கள் தான். ஆனால் இன்று அளவை மீறி இருந்தார் பாக்கியா.

அபியின் பெரியம்மா, “யோசிக்காம வந்துட்டேன் அம்பிகா. ரொம்ப சாரி” என்றுவிட அவர் முகம் விழுந்து விட்டது. “இல்ல கா… அப்பிடி எல்லாம் இல்லக்கா…” அவரால் பேசவும் முடியவில்லை. அபியின் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லை. அழைத்து அவமானப் படுத்துவதென்பது எவ்வளவு பெரிய தலையிறக்கம்.

“வா டா அபி. பெரியம்மாவ மன்னிச்சுடும்மா. வா நாம போகலாம்…” நிற்க முடியாமல் நின்றிருந்தவளிடமிருந்து குழந்தையைப் பெரியம்மா வாங்க, மகள் நேரம் காலம் தெரியாமல் வீறிட்டாள்.

குழந்தையின் வீறிடலும், வீட்டின் அமைதியும் பாக்கியாவை ஏதோ செய்ய, “நான் ஏதோ இல்லாதத சொன்ன மாதிரியில்ல என்னைப் பாக்கறிங்க? உள்ளத தானே சொன்னேன். அவ பொல்லாத நேரம் சுத்தி இருக்கறவங்கள முழுங்குது… நம்ம வீட்டு பொண்ணுக்கும்…” அவர் முடிக்கும் முன், “அம்மா…” என்ற மாதவனின் சத்தம் அவர் வாயடைத்தது.

இப்பொழுது தான் வீட்டிற்கு வெளியே கோபம் தீரப் புகைத்துக் கொண்டிருந்த வினோவிடம் நகுநாவை பாக்கியா பேசியதைக் கேட்டுச் சகிக்க முடியாமல் வந்தவனுக்கு நிலைமை உவப்பாயில்லை!

“போதுமே மா… வீட்டுப் பொண்ணுங்க மேல இருக்கற உங்க கரிசனை. ஒருத்தி மனச குத்திக் கிழிச்சு தான் உங்க கரிசனையக் காட்ட முடியும்ன்னா, அந்த கரிசனைய உங்களுக்குள்ளே வச்சுக்கோங்க. கேக்க ஆளில்லைன்னா பேசிட்டே போவிங்களா? வேண்டிக்கோங்க நீங்க கும்பிடுற சாமிய… நீங்க சேர்த்து வைக்கிற புண்ணியம் எல்லாம் உங்க பிள்ளைங்கள முழுங்காம இருக்கணும்ன்னு!”

“டேய் மாதவா…”

“போதும்ன்னு சொன்னேன் மா… வீட்டுக்கு கிளம்புங்க” கூறியவன் அமைதியாக அவளருகில் சென்று பிள்ளையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு, அபியைப் பார்க்க… அவள் அழுகையை விழுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த நொடி அவன் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாது. எந்த உறவும் இல்லாத அபிகேலை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த நொடி. ‘நான் இருக்க நீ எப்படி அனாதை’ என்று நாவு வரை வந்த நொடி!

“நம்பி உன் கைய கொடுத்தா… வாழ் நாள் பூரா விடவே மாட்டேன்” என்று கை நீட்டி நின்றான். 

அவளுக்குப் புரிந்ததா தெரியவில்லை. பாக்கியாவிற்குச் சகலமும் புரிந்தது. தலை கிறங்கியது. “டேய் மாதவா…” செத்துப் போனது பாக்கியாவின் முகம். எத்தனை பெரிய தலை இறக்கம். அவர் கடிந்து, நிமிடம் முடியவில்லை. தாலியறுத்த அனாதை என்று கூறி, அதனால் அந்த பெண் விட்ட கண்ணீர் காயவில்லை! அதற்குள் அதே பெண் தன் வீட்டின் குத்து விளக்கை ஏற்ற ஏற்பாடு நடக்கிறதா? எங்கு கொண்டு முகத்தை வைப்பார்? அவமானத்தின் உச்சத்தை அடைந்தது போல் உணர்ந்தார்.

முகம் சிவக்க கத்த ஆரம்பித்தார். ஆனால் கேட்பார் இல்லாமல் போனது. அப்படி ஒருவர் இருப்பது ஒருவர் கண்ணுக்கும் தெரியவில்லை. பார்வை முழுவதும் மாதவன் மீது. மற்ற நேரம் என்றால் ‘பாக்கியத்திற்கு இதுவும் வேண்டும்… இன்னமும் வேண்டும்’ என்று எண்ணியிருப்பர். ஆனால் இருந்த மனநிலையில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெறும் பார்வையாளர்களாய் மாறிப் போயினர்.

“டேய்… அந்த ராசியில்லாதவ வேண்டாம். அந்தக் குழந்தைய குடுத்துட்டு வா. போகலாம்! என்னங்க, பார்த்துட்டே நிக்கறீங்க,” ஏகத்திற்கும் சத்தம் போட்டார்.

அவன் காதில் விழுந்ததற்கான அறிகுறி இல்லை. கை நீட்டி அவள் கண் பார்த்து நின்றான். 

இன்னும் அங்கு நடப்பது எதுவும் அபிகேலுக்கு உரைக்கவில்லை. கலங்கிய கண்களை மறைந்த நீரின் இடையே மங்கலாய் தெரிந்த உருவம் மகளை அணைத்து நின்றதோடு தன்னையும் தாங்கத் தயாராக நிற்பது தெரிந்தது. அதில் அவள் அப்பா… அம்மா… எபி… என்று பல உருவம் புதைந்திருந்தது.

“ஒரு சான்ஸ் தா அபி. ரெண்டு பேரையும் விட மாட்டேன்,” தீர்மானமாய் ஒலித்த குரலில் பிசிர் இல்லை. நீட்டிய கையையும் இறக்கவில்லை.

பிடித்தம்… பிடித்தமில்லை என்பதை விட இந்தக் கூட்டத்தின் நடுவே அவனுக்கு தலை குனிவைத் தர மனமில்லை. பெண்ணின் கை அவன் கையைத் தொடவும்… கைக்குள் பொக்கிஷமாய் பொத்திக் கொண்டான். அந்த வினாடி தேங்கி நின்ற ஊற்றிலிருந்து ஒரு துளி நீர் உருண்டு கன்னம் தொட்டது. அவன் கையின் அழுத்தம் கூட, பாரமெல்லாம் கண்ணீராய் நிற்காமல் வழிய ஆரம்பித்தது.

கை பிடித்து அழைத்துச் செல்ல, பார்த்து கொண்டிருந்த பாக்கியாவிற்குக் கோபம் பீறிட்டது. ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனைத் தடுக்கக் கூட ஒருவரும் முன்வரவில்லை. வாய் திறந்தால் தங்கை குடும்பம் முன் இருக்கும் மரியாதையும் போய்விடும் என்பதால் வைத்தியநாதனும் பல்லைக் கடித்து நின்றார். 

குலம் கோத்திரம் பார்க்கும் சௌந்தர்யாவிற்கு ஏனோ மாதவன் முடிவில் மனத்தாங்கல் இல்லை. மகளை நோகடித்தவர் நொந்து நிற்பது பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

“மாதவா, அம்மா சொல்றேன் அவ கைய விட்டுட்டு வா போலாம். யாரு டி நீ என் மகன…” மீண்டும் பாக்கியா வாய் திறக்க, அவர் அருகில் சென்று, “ரொம்ப பேசிட்டீங்கம்மா. போதுமே! நிற்கதியா நிக்கிற ஒரு ஜீவனுக்கு ஆறுதலா இருக்க வேண்டாம். ஆனா ஒதுங்கி நிக்கலாமே. காயப்படுத்தி அந்த வலியில துடிக்கிறதைப் பாக்க அவ்வளவு ஆசையா? அபி அழறா. குழந்த அழறா. எனக்கு வலிக்குது மா! சத்தியமா ரொம்ப வலிக்குது. இதுனால என்ன சுகம் கிடைச்சுது உங்களுக்கு? ப்ச்! போங்க மா, நீங்க அபியப் பத்தி பேசி இருக்கவே கூடாது!” என்று வெளியே சென்று விட்டான்.

ஒன்றும் விளங்கவில்லை பாக்கியாவிற்கு. அவர் பெருமை… அவர் கர்வம்… அவர் கௌரவம்… எல்லாம் நடுக் கூடத்தில் தான் பெற்ற மகனாலேயே சுக்கு நூறாக உடைந்து சிதறியது. முதல் முறை பாக்கிய லஷ்மியின் உலகம் புதை குழியில் புதைந்து போனது. ஒருவர் முகமும் பார்க்க பிடிக்காதவராய் வெளியே சென்று விட்டார்.

குழம்பித் தவித்த மனம் தெளிவானது, மாதவனுக்கு. பிடித்த கையை இறுக்கிக் கொண்டான். யாருக்காகவும் விடுவதில்லை என்ற தீர்மானம் வலுத்தது.

அபியின் பெரியம்மாவை மட்டும் அவர் வீட்டின் முன் இறக்கியவன் அபியையும் மகளையும் அழைத்து வந்தது இந்த கடற்கரைக்குத் தான். அன்றும் இப்படித்தான் வெறிச்சோடிக் காணப்பட்டது கடற்கரை.

அருகே அமர்ந்தவனிடம் அவளுக்குத் தமிழ் பேச வரவில்லை. “எனக்கு டிக்கெட் எடுத்துத் தர முடியுமா? சொத்து எதுவும் வேண்டாம், என் மக போதும். நான் வீட்டுக்கு போறேன்,” என்று அவள் தேம்ப, உண்மையிலுமே வலித்தது இவனுக்கு.

காதல், பிடித்தம், ஆசை, மயக்கம், சலனம் இப்படியான எந்த வார்த்தையிலுமே அவன் உணர்வை அடக்க முடியவில்லை. மித்துவிடம் தாய்மை உணர்வு பொங்கி வழிந்தது! இவளிடம்? புரியாத புதிர் தான்! 

“உனக்கு வாழ்க்கைத் துணையா இருக்க விருப்பப்படுறேன் அபி. மித்துவ என் பாசம் பூரா கொட்டி, என் மகளா வளர்க்கணும்ன்னு ஆசை. உன்ன பத்தி எனக்குத் தெரிஞ்ச அளவு கூட உனக்கு என்னைப் பத்தி தெரியாது. டைம் எடுத்துக்கோ… யோசிச்சு பதில் சொல்லு! இப்போ காதல் இல்லன்னா என்ன? காலம் இருக்கு அதுக்கு! கல்யாணம் பண்ணிகிட்டு பொறுமையா வாழ்நாள் பூரா காதலிப்போம்.

என் உயிர் இருக்க வரைக்கும் உனக்கும், இவளுக்கும் உண்மையா இருப்பேன். கண்டிப்பா என்னை நீ நம்பலாம்.”

மாதவன் கன்னத்தைக் கடித்தும் எச்சில் படுத்தியும் விளையாடிக் கொண்டிருந்த மகளையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் தன் இலக்கை மாற்றியது. 

“நான் விடோ இல்ல…” என்றாள்.

“தெரியும்.” என்றான்.

“நான் டிவோர்சே இல்ல…” என்றாள்.

“உன் பழைய வாழ்க்கை எனக்கு வேண்டாம். புதுசா ஆரம்பிப்போம். நமக்கான புது வாழ்க்கைய… புதுப் பாதையில!” என்றான்.

மாதவன் கண்களிலிருந்த நேர்மை அவனை நம்பலாம் என்றது. தனக்கே தனக்கென்று ஒருவனா? மகளுக்குத் தகப்பனா? உரிமையாய் இருவரும் தோள் சாய்ந்துக் கொள்ளலாம். கண்கள் பனித்தன.

வாழ்க்கையின் ஆணி வேர் அவளுக்கு ‘நம்பிக்கை’ தான்! அவள் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அவன் மேல் நம்பிக்கை துளிர்த்திருக்க வேண்டும், அது கிடைக்க, பிடித்துக் கொண்டாள் கூடவே அவன் பிடித்திருந்த கையை இறுக்கிக் கொண்டாள்.

கை பிடிக்க சரி என்றவளை நினைத்து மகிழும் முன், மகள் வாழ்வைக் காரணம் காட்டி விஷத்தைக் கையில் எடுப்பேன் என்று நிற்கும் அம்மா இடையே!

“அவ கழுத்துல தாலி கட்ட நினைச்ச, என் பிணத்த தாண்டி தான்!” என்றவரிடம்…

“நீங்க உயிரோட இருந்தா நாளைக்குக் கல்யாணம். இல்லன்னா காரியம் முடிஞ்சதும் கல்யாணம். இந்த எமோஷ்னல் பிளாக்மெயில் வேலை என்ட்ட வேண்டாம் மா. நீங்க வழிவிட்டா, விட்ட வழியில நடப்பேன். வழிய அடைக்க நினைச்சா… புது வழிய நானே உருவாக்குவேன். நீங்க முடிவு பண்ணிக்கோங்க,” என்று விட்டு வந்தவன் தான் விண்ணை வெறித்துக் கொண்டு படுத்திருக்கிறான்.

கைப்பேசி அழைக்க நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தான். திரையில் மாதவனும் மித்துவும் சிரித்தனர். “உங்க மக உங்களப் பாக்கணுமாம்,” அழைத்தற்குக் காரணம் சொன்னாள், அவன் வருங்கால மனைவி. 

“ஏன் உனக்கு என்னைப் பாக்க வேண்டாமா?” உரிமையாய் கேட்டான்.

“நானும் தான்…” மென்மையாய் புன்னகைத்தாள்.

“நாளைக்கு கல்யாணத்துக்கு நான் ரெடி. நீ?” பதில் தெரிந்தே கேட்டான்.

மாதவனைக் கண்ட மகள் துள்ளினாள். ‘ஆ ஊ ப்ப’ என்று கதை பேசினாள்.      ஏகாந்த இரவு செய்யத் திணறியதை ஒற்றைப் பல் சிரிப்பு செய்தது! அந்த சிரிப்பில், மழலையில் பூரிப்பில், மாதவன் மனம் லேசானது.

பேசி முடித்தவன், முகத்தைத் தீண்டி உடலைச் சிலிர்க்கச் செய்த உப்புக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டான். நிம்மதியாக உணர்ந்தான். நாளையிலிருந்து கணவன்… தகப்பன் என்ற புதுப் பொறுப்பு! மிகவும் இனிமையாக உணர்ந்தான்.

நிலவைப் பார்த்தான். மகள் தெரிந்தாள். அழகாய் தோன்றியது. 

ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான்… நிலவு கடலோடு உருகி      கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது.

‘அபி…’ உடல் சிலிர்க்க மெல்லச் சிரித்துக் கொண்டான். 

error: Content is protected !!
Scroll to Top