பார்த்திபன் காதலி – 7 (2)

அன்றைக்கு அத்தோடு நிறுத்தவில்லையே அவன்.

“நானே கொண்டை போட்டுக்கறேன்” என்றவளுக்குச் சிறுவர்களிடம் இருந்து தொப்பி வாங்கி வந்து நீட்டினான்‌. அப்படியும் ஓரிரு முடிக்கற்றைகள் பிரிந்து அவள் முகத்தில் விழவும், ஓடிச் சென்று அவனது தலைக் கவசத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

அதைக் கையில் வாங்கி யோசனையாக அவள் பார்க்கவும், “குடுங்க” என்று அவளிடம் இருந்து வாங்கி, அவனே அணிவித்து விட்டான். அவளின் முகத்தை உயர்த்தி, வாகாகத் தலையில் பொறுத்தினான்.

அத்தனை நெருக்கத்தில் அவளின் கண்களை, புன்னகைத்த உதடுகளை இயல்பாகப் பார்த்து புன்னகைத்திருந்தான்‌. ஆனால் பார்கவி அன்று எவ்வாறு உணர்ந்திருப்பாள்? என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்து அவனைக் கலவரப்படுத்தியது. சில நேரங்களில் அதீத நெருக்கத்தை உணர, ஒற்றைப் பார்வை போதுமே.

முகக் கவசம் அணிந்த முகத்துடன் அவனைப் பார்த்து புன்னகைத்திருந்தாள்.

“கிரிக்கெட்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட்டோ பார்கவி?” அவளின் ஆர்வம் கண்டு கேட்டிருந்தான்.

“சத்தியமா தெரியல பார்த்திபன்” என்று உண்மையைச் சொன்னாள்.

“இந்த ஐபிஎல் வர்றதுக்கு முன்னாடியே அப்பாவோட உக்காந்து கிரிக்கெட் பார்ப்பேன்தான்‌. ஆனா விளையாடணும்னு என்னைக்கும் நினைச்சதுல்ல.” என்று தோள் குலுக்கினாள்.

“இப்போ நீங்களும் இந்தப் பசங்களும் விளையாடுறத பார்க்கவும் ஆசையா இருந்ததா, உடனே களத்தில் குதிச்சுட்டேன்” என்று சிரித்தாள்.

“உண்மையா களத்தில் குதிக்க ஆசைன்னா சொல்லுங்க. இப்பவும் ஒன்னும் லேட் ஆகிடல, கிரிக்கெட் கோச்சிங் சேர்ந்து பிளேயர் ஆகிடலாம் நீங்க” என்றான்.

“நானா?” என்று ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக விழி விரித்தவள், “என்னால மிதாலி ராஜ் ஆக முடியும்னா சொல்றீங்க?” என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் பெயரை சொல்லி அவள் கேட்க, “மிதாலி ராஜ் என்ன? நீங்க யாரா ஆகணும்னு ஆசைப்பட்டாலும் கண்டிப்பா நடக்கும், நடத்திடலாம்” என்று கை உயர்த்தி ஆருடம் சொன்னான்.

“எனக்கு மிதாலியா ஆகணும்னு ஆசையில்ல. ஆனா..” என்று குறும்பு புன்னகையுடன் அவள் இழுக்க, அவளின் தலை கவசத்தை நேராக்கி, “ததாஸ்து” என்றான் சிரிப்புடன்.

அவளின் ஆசையை என்னவென்று கேட்டறிய பெரிதாக ஆர்வம் காட்டிடவில்லை அவன். ஆனால் என்று இன்றைக்குத் தடுமாறி நின்றது அவன் மனம்.

பற்கள் தெரிய பார்கவி புன்னகைத்தது, தலை கவசம் வழியே தெரிந்த அந்தக் கண்களில் மின்னிய குறும்பும், சிரிப்பும் இப்போது அவனது மனக் கண்ணில் வந்து தொந்தரவு செய்தது.

அதன் பிறகு சிறுவர்களும் வர, இருபது நிமிடங்கள் அவர்களுடன் விளையாடியிருப்பார்கள். அவளின் கைப் பிடித்துப் பந்து வீசவும் கற்றுத் தந்திருந்தான் அவன்.

அந்த நிகழ்வுகள் மனக் கண்ணில் வர வர மண்டையை எதிலாவது கொண்டு போய் முட்டி கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.

“அண்ணா பால் போடுங்க” என்று அவனை நிகழ் காலத்துக்கு இழுத்து வந்தார்கள் சிறுவர்கள்.

அங்கு நிற்பதே அவனது நினைவுகளைக் கிளறி விட, சிறுவர்களிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பி விட்டான்.

அவன் வண்டியை நிறுத்தி இறங்க, மைதானத்தில் போட்டி தொடங்கி, தொடர்ந்து கொண்டிருந்தது.

ஏற்கெனவே கிரிக்கெட் உடையில்தான் இருந்தான். தன் பையை அங்கிருந்தவனிடம் கொடுத்து விட்டு, மைதானத்திற்குள் இறங்கி ஓடினான்.

அவனுக்குப் பதிலாக நின்றிருந்தவன் வெளியேற, அவனது இடத்தை நிரப்பினான்.

அவன் கண்கள் மைதானத்தை வலம் வர, அவன் மனத்தில் மீண்டும் மீண்டும் பார்கவி வலம் வந்தாள்.

“அவளை நினையாதே” என்று சொல்ல சொல்லத்தான் மனம் அந்தப் பாதையில் வேகமாகப் பயணித்தது.

பிரபஞ்சன் குடும்பத்துடன் பார்கவி இங்கு வந்திருக்கிறாள்.

“பார்த்திபன்” என்று ஆரவாரித்து அவனை உற்சாகப்படுத்தி இருக்கிறாள். அவளை விளையாட்டாய் ஈர்க்கவே அன்றைக்குப் பந்துகளை அடித்துப் பறக்க விட்டிருந்தான் அவன்.

பிரபஞ்சன் எத்தனையோ முறை எச்சரித்தும் அதை விளையாட்டாய் எடுத்துக் கொண்டான்.

“தல தோனி ஸ்டைல்ல ஒரு சிக்ஸ் அடிச்சு மேட்ச்சை முடிங்க பார்த்திபன்” என்று பார்கவி கத்தியது, அவன் செவிகளில் மோதியது.

அன்று ஆட்ட நாயகன் கோப்பையுடன் அவன் வந்த போது அத்தனை மகிழ்வாக அவன் கரம் பற்றி இயல்பாக அவள் வாழ்த்தியதும், கோப்பையை அவள் கையிலேயே கொடுத்து விட்டான் அவன்.

அதை முன்னும் பின்னுமாகத் திருப்பிப் பார்த்துப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொண்டாள்.

பிரபஞ்சன் மீண்டும் மீண்டும் எச்சரிக்க, அதன் பிறகு அவளிடம் ஓர் எல்லைக் கோடு வரைந்திருந்தான்தான்‌. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டதோ?!

“பார்த்திப் பாலை பிடிடா” என்று ஒருவன் கத்த, சட்டெனத் தலையைச் சிலுப்பி நேரே பார்த்தான். மயிரிழையில் பந்து அவன் முகத்தைத் தாக்காமல் அதைக் கையை உயர்த்திப் பிடித்திருந்தான் அவன்.

அவர்கள் குழு கத்தி அவன் தோளில் தட்டி பாராட்ட தன் கவனத்தை முழுமையாக ஆட்டத்திற்குத் திருப்பினான்.

“நடந்ததுல உன் தப்பு எதுவுமே இல்ல பார்த்தி. டோண்ட் ஃபீல் பேட்” என்று தனக்குத்தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான். முந்தைய நாள் பெய்த மழைக்கு முளைத்த காளான் போல அவன் மனத்தில் புதிதாக முளைத்திருந்த குற்ற உணர்ச்சி அவனை முழுமையாக அலைக்கழித்தது.

“பார்த்தி” என்று அவன் பெயரை ஏலம் போட்டு அவனை ஆட்டத்திற்குள் இழுத்தார்கள். எல்லாம் மறந்து அவன் அதில் மூழ்க, மதிய வேளையை நெருங்கியிருந்தார்கள். இரண்டு அணிகளும் உணவு இடைவேளைக்காக ஓய்வாக அமர்ந்தார்கள்.

“பார்த்தி உன் போன் அடிச்சுட்டே இருக்கு” என்று அவனது பையை நீட்டினான் அவனது குழுவில் இருந்த நண்பன்.

அவன் அலைபேசியைக் கடைசியாகப் பிரபஞ்சன் வீட்டில் வைத்துப் பார்த்திருந்தான். இடைப்பட்ட இந்த நேரத்தில் வந்த குறுஞ்செய்திகள், அழைப்புகள் என எதையும் அவன் பார்த்திருக்கவில்லை.

“ரொம்ப நேரமா அடிச்சுட்டே இருக்கு. என்னானு பாரு”

“அடப்பாவி அதையே இப்பத்தான் சொல்ற?” என்று கடுப்புடன் கேட்டு பையை வாங்கி அலைபேசியை எடுத்தான்.

திரை முழுக்கக் குறுஞ்செய்திகள், தவறிய அழைப்புகளைக் காட்டியது.

“யாரு அந்தப் போலீஸ்காரர்?” திரையை எட்டிப் பார்த்து நண்பன் கேலியாகக் கேட்க, “வருங்கால மாமனார்” என்றான்.

“போலீஸ் போனை மிஸ் பண்ணியிருக்கப் பார்த்தி. உன்னைப் போட்டு வெளுக்கப் போறார்” என்ற நண்பர்களின் கேலியெல்லாம் அவன் மனத்தில் பதியவேயில்லை.

‘இவர் ஏன் இத்தனை தரம் எனக்குக் கால் பண்ணியிருக்கார்?’ என்ற குழப்பத்துடன் புருவம் சுருக்கினான்.

அதற்கு முன்பே பிரபாவதி அவனைப் பல முறை அழைத்திருந்தாள். அவளிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வேறு வந்திருந்தன.

“என்னாச்சு? ஏன் என் கால்ஸ்ஸை எடுக்க மாட்டேங்கறீங்க? காலையில இருந்து என் மெசேஜெஸ்க்கு கூட ரிப்ளை இல்ல, என் மேல கோபமா? நான் ஒன்னும் பண்ணலையே” என்று தொடர்ச்சியாக அவனுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்தாள் பிரபாவதி.

அதைப் பார்த்ததும், “அச்சோ” என்று நெற்றியில் அறைந்து கொண்டான்.

அதைக் கண்டு, “செத்தான்டா சேகரு” என்று கிண்டலடித்துச் சிரித்தார்கள் நண்பர்கள்.

அவனோ அலைபேசியுடன் எழுந்து அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அவன் விரல்கள் பிரபாவதியின் எண்ணை அழுத்த போன கணம் அவனுக்குச் சத்யபாமாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

அம்மாவின் அழைப்பை உடனடியாக ஏற்று, “என்னம்மா?” என்று கேட்டான்.

“எங்கப்பா இருக்கப் பார்த்தி?” என்று பதற்றத்துடன் கேட்டார் அவர்.

“வேற எங்க? கிரவுண்ட்ல இருக்கேன்ம்மா. என்னாச்சு?”

என்று நெற்றியை கீறினான்.

அவரின் குரலே அவனுக்குச் சந்தேகத்தைக் கொடுக்க, “உனக்குப் போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ?” என்ற குரலில் கோபம் கொட்டி கிடந்தது.

“நீங்க போன் பண்ணீங்களாம்மா? எப்போ? சாரி போன் என் கிட் பேக்ல இருந்தது. அதான். நான் கிரவுண்ட்ல இருக்கும் போது போன் எடுக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும் தானேம்மா”

“எனக்குத் தெரியும்ப்பா. ஆனா உன் மாமனாருக்கு தெரியாதுல்ல? அவரு உன்னைத் பார்க்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். உன்னைப் பார்த்தே ஆகணும்னு வெயிட் பண்றார். நீ சீக்கிரமா வா” என்று அவர் இடையிட்டு சொல்லவும், அவன் பேச்சு அப்படியே நின்று போனது.

“சீக்கிரம் வா, பார்த்திபா” அம்மாவின் அந்தப் பதற்ற குரல் அவனை நிரம்பப் பதற்றத்துள்ளாக்கியது. அவனுக்குப் பிடிக்கவும் இல்லை.

‘இவர் போனை அட்டென்ட் பண்ணலன்னா நேரா வீட்டுக்கே வந்துடுவாராமா?’ என்று எரிச்சலும், கோபமுமாக இறுகி நின்றான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top