என்னமோ பெரிதாக நடந்து இருக்கிறது என்று அவனின் உள் மனது சொல்ல, அவளது அத்தனை மாற்றங்களையும், சிவந்த கண்களையும் பார்க்காதது போலப் பார்த்துக் கொண்டான் தேவா.
சூர்யாவிடம் அவ்வளவு கடுமையாகப் பல்லவி பேசும் அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்து அவன் இப்போது மண்டையை உடைத்துக் கொண்டிருக்க, கீழே அவள் குரல் கேட்டது.
அடுத்த நிமிடம், இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி கீழே சென்றிருந்தான்.
“அது ஒரு மொக்க படம் அத்த. அதான் பாதில வந்துட்டேன்” என்ற அவளின் குரலை கேட்டபடி, அடுப்படி வாசலில் சாய்ந்து நின்றான் அவன்.
“அப்புறம், உன் கூட வந்த பாரதி வீட்டுக் கூட்டம் எல்லாம்?” என்று வித்யா கேட்க,
“அவங்க படத்தை முழுசா பார்த்திட்டு வருவாங்க வித்யா.”
வித்யாவின் கேள்வி, பல்லவியின் பதில் இரண்டும் அவனுக்கு எதையோ சொல்வது போலிருந்தது.
“அம்மா” என்று சத்தமாக அழைத்தான்.
“என்ன தேவா?” என்று அவர் கேட்க, வித்யாவும், பல்லவியும் ஒன்றாக அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“காஃபி கேட்கலாம்னு வந்தேன் மா.” என்றவனின் கையில், நான்கு இட்லிகள், தக்காளி குருமாவுடன் இருந்த தட்டை திணித்தாள் பல்லவி.
“சாப்பிட்டு முடி. லெமன் டீ தரேன்” என்றவளை மலர்ந்த புன்னகையுடன் மனம் நிறையப் பார்த்த தேவா, மறுபேச்சு இல்லாமல் தட்டுடன் ஹாலிற்கு நடந்தான்.
கனிமொழி அவன் பக்கத்தில் வந்து அமர, “அம்மா” என்று கூப்பிட்டு அவரின் கவனத்தைத் தன் மேல் திருப்பினான்.
“நைட் கேரளா போற இல்லடா. அதான் சீக்கிரம் டிபன் கொடுக்கச் சொன்னா பல்லவி. தக்காளி குருமா அவ தான் செஞ்சா. சாப்பிடு. லோக்கல் ப்ளைட்ல சாப்பிட தர மாட்டாங்க தானே? அங்க எத்தன மணிக்கு போய் இறங்கி, அப்புறம் ஹோட்டல் தேடி போய்ச் சாப்பிட்டு…” அவர் பேசிக் கொண்டே போக,
“மா, ப்ரெண்ட் வீட்ல தான் தங்கப் போறேன் மா.”
“இருக்கட்டும் டா. இப்போ சாப்டுட்டு போ” என்றார் கனிமொழி.
மெலிதாகச் சிரித்துக் கொண்டே, “பல்லவியை நாளைல இருந்து, அப்பா கூட டிராவல்ஸ் அனுப்பு மா. நீ என்ன பண்ணுவன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவ நம்ம டிராவல்ஸ் போகனும்”
“ஏன் தேவா? சூர்யா வேற வெளிநாடு போறான் பொண்டாட்டி கூட. கஸ்தூரி பாவம்…” என்று அவர் இழுக்க,
“மா, உன் மரும..” என்று தொடங்கியவன், சட்டென்று நிறுத்தி, தண்ணீரை குடித்துப் போலி இருமலை வெளியிட்டு,
“பல்லவி சொன்னா மட்டும் தான் கேட்பியா மா? அப்பப்போ, நான் சொல்றதையும் கேளு மா” என்று அழுத்தி சொல்ல, அவனைச் சந்தேகமாகப் பார்த்து வைத்தார் கனிமொழி.
“அவளை உன் கூடவே வச்சுக்கோ. பகல்ல அப்பா கூட இருக்கட்டும். ரெண்டு வாரம் நான் வர்ற வரை அவளைப் பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு மா” என்று அவன் சொல்ல, கனிமொழியின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
“சரி தேவா.” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.
இது எதையும் அறியாமல், அங்கே வித்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் பல்லவி.
தேவா உணவை முடித்துப் பல்லவி கொடுத்த டீயுடன் எழுந்து, அலைபேசியில் பேசிக் கொண்டே உள்ளே செல்ல, சங்கவி வந்து நின்றாள் அங்கே.
“என்னாச்சு குட்டி பிசாசே? பாதிப் படத்துல எங்க போன? சொல்லிட்டு போக மாட்டியா? சூர்யா ண்ணா மெசேஜ் பார்த்து தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. உன்னைக் காணாம பயந்துட்டேன்” என்று பல்லவிக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் பொரிய, அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் பல்லவி.
“அப்புறமா வரேன் வித்யா. வரேன் அத்த” என்று கத்தி விட்டு நடந்தாள்.
வீட்டை அடைந்ததும், “எனக்கு ஒன்னும் ஆகல. நீ என்கிட்ட பேசாத.” என்று விட்டு மாடியை நோக்கிப் போனாள் பல்லவி.
சங்கவிக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, பல்லவி சொல்லும், “எப்ப பாரு, என்னை அடிச்சு, அழ வைக்கற. என்கிட்ட பேசாத, போ” நினைவு வந்தது.
தங்கையைப் பின் தொடர சொன்ன மனதை அடக்கி, அம்மாவை தேடிக் கொண்டு போனாள் சங்கவி.
பல்லவிக்கு மதியத்தில் இருந்து அடக்கி வைத்த கண்ணீர் எல்லாம் இப்போது கரை உடைக்கத் தயார் என்று மிரட்டியது.
மாடி சுவரில் சாய்ந்து, சரிந்து அமர்ந்தாள்.
வாழ்க்கை வானவில்லை போல அடர்ந்த நிறங்களை மட்டுமே கொண்டது அல்ல என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அவளுக்குப் பிடித்த கருப்பும் கூடச் சமயங்களில் கலங்கடித்து விடுகிறது தான்.
மனிதர்களின் மனதில் வெண்மையை மட்டுமே எதிர்ப்பார்க்க கூடாது. அது தன் தவறு தான் என்று விழிகளை மூடி, தலையைப் பின்னுக்குச் சாய்த்தாள்.
கண்ணீர் கோடாகக் கீழிறங்க, மேலிருந்து மழைத் துளிகள் விழுந்து, அவளின் கண்ணீரை கழுவி விடத் தொடங்கியது.
எந்தத் துளி மழைத் துளி, எந்தத் துளி கண்ணீர் துளி என்று பிரித்து அறிய முடியா நிலை. மௌனமாய்க் கண்ணீர் வழிய மழையில் அமர்ந்திருந்தாள் பல்லவி.
மதியம் நடந்ததற்கு அவள் அழவில்லை. அவளின் அழுகைக்குக் காரணம் அண்ணன் சூர்யா.
இத்தனை வருடங்கள் அவனிடம் இல்லாத திடீர் மாற்றும் அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
அவனோடு மனம் விட்டு பேசவே விரும்பினாள். ஆனால், தான் இருக்கும் மனநிலையில் அவனைக் காயப்படுத்தி விடக் கூடாது. அண்ணன் அன்றிரவு மனைவியுடன் தேன்நிலவு செல்கிறான். இப்பொழுது எதையும் பேசக் கூடாது. அவன் திரும்பி வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று மனதுள் சொல்லிக் கொண்டே கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் பல்லவி.
“பல்லவி…” என்று பாரதியின் குரலில், வேகமாக எழுந்து நின்றாள். கைகள் தானாக முகத்தைத் துடைத்தன.
“ஏர்போர்ட் கிளம்பறோம் டா. கீழ வா” என்று அழைத்தாள் பாரதி.
“வரேன் ண்ணி” மேலே இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்து ஈர உடையைக் களைந்து விட்டு, அங்கே பாரதி எடுத்து வந்திருந்த உடைக்கு மாறி வெளியில் வந்தாள் பல்லவி.
“சாரி பல்லவி” அவளுக்குத் தலைவாரி விட்டபடி சொன்னாள் பாரதி.
“நானும், எங்க வீட்டு ஆளுங்களும் உன்னை ஹர்ட் பண்ணிட்டே இருக்கோம் இல்ல? ரொம்பச் சாரி பல்லவி” என்று அவள் மீண்டும் சொல்ல,
“அப்படியெல்லாம் இல்ல அண்ணி” என்றாள் பல்லவி.
“கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்கிட்ட அவ்வளவு மோசமா நடந்துக்கிட்டேன்.”
“அண்ணி, எத்தனை தடவை இதுக்குச் சாரி சொல்வீங்க? நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். பிளீஸ், அதுக்காக இன்னொரு டைம் சாரி சொல்லாதீங்க” என்றாள் தீர்க்கமாக,
“சரி பல்லவி. ஆனா, இன்னைக்கு…” என்று பாரதி தொடங்க,
“நாம அதைப் பத்தி பேச வேண்டாம் அண்ணி” என்றாள் பல்லவி, கடினமான குரலில்,
“இல்ல பல்லவி. உங்க அண்ணா வேணும்னு பண்ணல டா.” என்று தயக்கத்துடன் சொல்ல,
“சரிங்க அண்ணி” என்றாள் இயந்திர குரலில்,
“நீ பண்ணது தான் சரி. அதுனால எதுவும் பிரச்சனை வரும்னு… எனக்குப் பிரச்சனை வரும்னு நீ யோசிக்கவே வேண்டாம். எங்க வீட்ல எதுவும் கேட்டா, நான் பேசிக்கறேன். நீ நடந்ததை மறந்துடு, பிளீஸ்” என்று அவளின் முகத்தைத் திருப்பிக் கண்களைப் பார்த்து, கெஞ்சலாகக் கேட்க, வெறுமே கண்களை மூடித் திறந்தாள் பல்லவி.
‘எப்படி மறக்க முடியும்?’ என்று கொதித்தது அவள் மனது. ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவள்.
“பிளைட்க்கு நேரமாச்சு, உங்க அண்ணா வெயிட் பண்ணுவார். போகலாம், வா” என்ற பாரதியை பின் தொடர்ந்து கீழே இறங்கினாள் பல்லவி.
சங்கவியின் கணவர் அவர்களை ஏர்போர்ட்டில் கொண்டு விடுவதற்குத் தயாராக நிற்க, சூர்யா, பாரதி பெட்டிகளை ஹாலிற்கு இழுத்துக் கொண்டு வந்தனர்.
மெல்ல தங்கையின் முன் வந்து நின்ற சூர்யா, அவளின் கண்களைப் பார்க்க முடியாமல், அவளுக்குப் பின்னே சுவரில் பார்வையைப் பதித்து, “அண்ணி சொன்னா, ஐ ஆம் சாரி டா பாப்பா” என்றான் உடைந்த குரலில். மனைவி சொன்ன போதே கேட்காத தன்னைத் தானே அத்தனை வருத்திக் கொண்டான் அவன்.
“என்னால தான். எனக்குத் தெரியாது பாப்பா. பிளீஸ், சாரி டா” என்று கரகரத்த குரலில் தங்கையிடம் மன்னிப்பை வேண்டினான் சூர்யா,
பல்லவிக்கு அண்ணன் மன்னிப்பு கேட்கவும், சற்றே முன் வரை அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் சட்டென்று வடிந்து விட்டது.
“எதுக்கு ண்ணா சாரி சொல்ற? இதுல உன் தப்பு என்ன இருக்கு? நான் என்ஜாய் பண்ணனும்னு நினைச்சு தானே, நீ என்னை அனுப்பின. ஆனா, ஐ ஆம் நாட் சாரி ஃபார் வாட் ஐ டிட்” (I’m not sorry for what I did). என்று அவள் மெலிதாகச் சிரித்துக் கொண்டே சொல்ல, சூர்யாவின் முகத்திலும் பிரதிபலித்தது தங்கையின் சிரிப்பு.
அவளின் தலைக் கோதி, “இனி இப்படி நடக்காது பல்லவி மா” என்றான் உறுதியாக.
“சரி ண்ணா” என்றாள் பல்லவி.
சூர்யா பெரிதாக நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அப்பாவை நோக்கி நடந்தான்.
“தேவாவும் ஏர்போர்ட் தானே போறான். எல்லாம் ஒரே கார்ல போய்டுங்க” என்று கஸ்தூரி சொல்ல, பல்லவியின் விழிகள் தேவாவை தேடியது.
அவன் விழிகளைத் தொட்டு விட்டு, இமைகளைத் தாழ்த்தினாள் அவள்.
“இல்ல அத்த. எனக்கு டோமஸ்டிக் ஃப்ளைட் தானே. லேட்டா போனா போதும். என் ப்ளைட்க்கு இன்னும் நேரம் இருக்கு. அவங்க கிளம்பட்டும்.” என்று பட்டென்று தேவா கஸ்தூரிக்குப் பதில் கொடுக்க, நண்பன் தன்னைத் தவிர்ப்பதை தெளிவாகப் புரிந்து கொண்டான் சூர்யா.
‘கடவுளே, எல்லாச் சோதனையும் ஒன்றாகத் தான் வர வேண்டுமா?’ என்று இருந்தது அவனுக்கு.
“ஓ சரி, தேவா. ஆனா, நீ எப்படிப் போவ?” என்று கஸ்தூரி கேட்க,
“டாக்ஸி புக் பண்ணிக்குவேன் அத்த. வித்யா வீட்டுக்காரர் வெளில போய் இருக்கார். அவர் வந்தா, அவரை ட்ராப் பண்ண சொல்லணும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்ட பல்லவி,
“ஐ வில் ட்ராப் ஹிம் மா” என்றாள் பட்டென்று.
“நானு, அத்த, விக்ரம், பவி குட்டி போய், தேவாவை பத்திரமா ப்ளைட் ஏத்தி விட்டுட்டு வர்றோம்” என்றாள் அனைவரையும் பார்த்து,
“ம்ம், போலாம் டா.” என்று கனிமொழி சொல்லவும், “சரி, போய்ட்டு வா” என்றார் கஸ்தூரி.
“திரும்பி வரும் போது, பொறுமையா காரை ஓட்டிட்டு வரணும் பல்லவி” என்று சேதுராமன் எச்சரிக்க, பல்லவியின் பார்வை, தேவாவை கேள்வியாகப் பார்த்தது.
புன்னகைத்தான் அவன். அதுவரை இருந்த அத்தனை கலக்கமும் அவன் மனதை விட்டு நீங்கி இருந்தது.
வீட்டினர் அனைவரின் முன்னும், அவனுக்காக, அவள் வருவேன் என்று சொன்னது வார்த்தைகளில் வடித்திட முடியா உணர்வை தந்தது அவனுக்கு.
இப்போது சிவந்திருந்த அவளின் கண்களும், வீங்கி இருந்த அவளின் முகமும் அவனைக் கலவரப் படுத்தவில்லை. மாறாக ஏதோ ஒரு வகையில் மிகுந்த நிம்மதியை தந்தது, அவளின் கேள்வியைச் சுமந்த விழிகள். அவனிடம் பேசும் அவளின் விழிகள் அவனைச் சாந்தப்படுத்தியது.
பல்லவி, தேவா மனதளவில் மேலும் நெருக்கமாகி இருக்க, நண்பர்களுக்குள் விழுந்திருந்த மெல்லிய இடைவெளி அதிகரித்து இருந்ததோ?
பல்லவி, சூர்யா உறவு மீண்டும் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பி இருக்க, சூர்யா, தேவா இருவரும் பேசித் தீர்த்து, தங்களின் நட்பை மீட்பார்களா?
திரையரங்கில் நடந்தது தெரிந்தால் என்ன செய்வான் தேவா?
இந்த இரு வார பிரிவு பல்லவி, தேவா காதலை, அதன் ஆழத்தை அவர்களுக்குப் புரிய வைக்குமா?
மழை நனைக்கும்…