‘ஐயோ, பிரவீனும் போய் இருக்கிறானா?’ என்று அலறியது அவன் மனம். பத்து பேருக்கு மேல் இருந்ததால் மட்டுமல்ல, பிரவீன் போர்டிக்கோவிலேயே நின்றிருந்ததால், ஹாலில் அமர்ந்திருந்த சூர்யா அவனைக் கவனித்திருக்கவில்லை.
குளிர்பானம் கொடுக்கச் சென்ற பல்லவி அவனைப் பார்த்திருந்தாள். உள்ளே வருகையில் அவள் எரிச்சலுடன் திரும்பி திரும்பி பார்க்க, அவளின் பார்வையைப் பின் தொடர்ந்த பாரதி, அங்கே நின்றிருந்த அண்ணனை பார்த்து லேசாகப் புன்னகைத்திருந்தாள்.
இப்போது மடாரென்று ஓங்கி தலையில் அடித்துக் கொண்டான் சூர்யா.
எப்பொழுதும் யோசிக்காமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்து, பின்னர் வருந்தும் தன் அவசர புத்தியை என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அதுவும் தனக்கு நெருங்கியவர்கள் என்று வரும் போது அவனுக்கு இந்த அவசரத்தையும், ஆத்திரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரத்தான் நினைக்கிறான். முடியவில்லையே.
பெட்டியை மூடி ஓரமாக நகர்த்தி வைத்த பாரதி, “நான் எத்தனை முறை கண் காட்டினேன். நீங்க பார்த்தா தான? பெரிய தலை போற வேலை, உடனே உள்ள வந்துட்டீங்க. அண்ணா கார்ல போய் உட்காந்துட்டான். கார் வரை பல்லவி கூட, நீங்க போய் இருந்தா… சரி விடுங்க. ஒன்னும் ஆகாது. சங்கவி அண்ணி, அவங்க ஹஸ்பெண்ட் எல்லாம் கூடவே இருக்காங்க. நானும் பிரவீன் அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். பல்லவி கிட்ட வம்பு பண்ணாத. அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிடும்னு.”
சூர்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ஆனாலும், சங்கவி உடன் சென்றிருக்கும் தைரியத்தில், கூடவே பாரதியின் தங்கை மற்றும் தம்பி எனப் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் உடன் இருக்கும் நிம்மதியில், அமைதியாகி வேலையைப் பார்க்கத் தொடங்கினான் அவன்.
அந்த நிம்மதி இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
கார் ஒன்று சத்தத்துடன் வீட்டின் முன் வந்து நிற்க, கதவு அடித்து மூடப்படும் சத்தத்தில் முகம் சுளித்தபடி எழுந்தான் சூர்யா.
அவன் வாசலை நோக்கி நடக்க, எதிரே பல்லவியின் வலக் கரத்தை இறுக பற்றி அவளை நிறுத்தி வைத்து, முகத்தில் இருந்த முடிக் கற்றையை ஒதுங்கி விட்டு, மென்மையாய் அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் தேவா.
சூர்யாவின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.
தங்கை மட்டும் தனியாக, அதுவும் தேவாவுடன் திரும்பி வந்திருக்கிறாள். தேவாவின் கண்களில் ஏன் அத்தனை பரிதவிப்பு? என்ன நடந்தது? அவனின் சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது.
ஆனால், மேலே நடக்கவோ, என்ன நடந்தது என்று அவர்களிடம் கேட்கவோ துணிவற்றவனாக இறுகி நின்றிருந்தான் சூர்யா.
மெல்ல கண்களை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தான் தேவா. இருவருக்கும் இடையில் தூரம் இருந்தது. ஆனால், சூர்யாவிற்குத் தேவா அப்படியே எட்டி அவனை அறைந்து விடுவான் என்றே தோன்றியது. நடந்தது தெரிந்திருந்தால் நிச்சயம் அடித்தும் இருப்பான். ஆனால், தேவாவுக்கும் என்ன நடந்தது என்று தெரியாதே.
தேவாவின் பார்வையில் இருந்த கடுமையில், எச்சில் கூட்டி விழுங்கிய சூர்யா, கண்களைத் தேவாவிடம் இருந்து விலக்கி, தங்கையைப் பார்த்தான்.
தேவாவின் கையில் பொதிந்திருந்த அவளின் கையை அகற்றாமல், அவனோடு இணைந்து நடந்து வந்தாள் பல்லவி.
அவனுக்கும், அவளுக்கும் இரண்டடி இடைவெளியில் தேவா அப்படியே நின்று விட, பல்லவி மட்டுமே அவனை நோக்கி நடந்து வந்தாள்.
“உன் கிட்ட இதை நான் எதிர்ப்பார்க்கலை ண்ணா.” அவளின் வார்த்தைகளை விட, உடைந்த குரலும், கலங்கிய கண்களும் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டது.
“பாப்பா, நான்.. சாரி மா..”
அவனுக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை பல்லவி.
“எப்பவும் அப்பா, அம்மா சொல்றது, நீ சொல்றது, தேவா சொல்றது தான் கேட்டிருக்கேன். செய்திருக்கேன். நீங்க எனக்குப் பெஸ்ட்டானதை தான் செலக்ட் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமில்ல, எனக்கும் பிடிச்சதால தான், நீங்க சொன்னதை எல்லாம் கண்ணை மூடிட்டு பண்ணேன். ஆனா, இப்போ… கல்யாணம். இட்ஸ் மை லைஃப் அண்ணா. திஸ் டைம் லெட் மீ டிசைட் ப்ளீஸ். என்னை இந்த விஷயத்தில் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாதீங்க பிளீஸ்.”
என்று சொன்ன பல்லவி, தேவாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.
இப்படி ஒரு குரலை பல்லவி, இது நாள் வரை அவனிடம் உபயோகித்ததே இல்லை என்று சூர்யா அடித்துச் சொல்வான். இன்று அவளின் குரலைக் கேட்கும் போதே, அவனுக்கு அப்படி ஒரு வலியை தந்தது.
உடலின் ஓர் அணுவை கூட அசைக்க முடியாதவன் போல அசையாமல் நின்றான் சூர்யா.
எதிரே நின்றிருந்த தேவாவின் நிலையும் அதுவாகத் தானிருந்தது.
‘என்ன சொல்லி விட்டாள் பல்லவி. இத்தனை நாட்கள் என் முடிவுகளை அவள் மேல் திணித்தேனா நான்? என்னை மகிழ்விக்க என் முடிவுகளை மறுபேச்சின்றி ஏற்றுக் கொண்டாளா பல்லவி?’ ஏற்கனவே அவளது பதட்டமான அலைபேசி அழைப்பு, நடுங்கிய குரல், அழுது சிவந்த கண்கள் என்று அனைத்தும் அவனைக் கலங்கடித்திருக்க, இப்போது அவளின் பேச்சு அவனை மேலும் சோர்வுற செய்தது.
மெதுவாக ஓரடி நண்பனை நோக்கி எடுத்து வைத்த தேவா, “சாதிச்சுட்ட இல்ல டா? சந்தோசமா? என்னடா பண்ணி தொலைச்ச?” கடுமையான குரலில் கேட்ட தேவாவிற்கு, சொல்ல சூர்யாவிடம் பதில் தான் இல்லை.
“இன்னைக்கு அவளை மட்டுமில்ல, நான் அன்னைக்குச் சொன்ன மாதிரி நம்ம மூனு பேரையும் சேர்த்து தான் நீ காயப்படுத்தி இருக்க. ஆனா, இதுல என் பங்கும் இருக்கு. அதுனால அமைதியாகப் போறேன் சூர்யா” என்று தீர்க்கமாக நண்பனின் முகம் பார்த்து சொன்ன தேவா,
“இனி, உன்கிட்ட கெஞ்சிட்டு எல்லாம் இருக்க மாட்டேன் நான். நேரா மாமா கிட்ட பேசிக்கறேன். ரெண்டு வாரம் ஊர்ல இருக்க மாட்டேன். அதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்னு…”
“டேய், ரொம்பப் பேசாத டா தேவா” கோபத்துடன் கத்தினான் சூர்யா.
“எனக்கு ஒன்னும் உங்களைப் பிரிக்கற ஐடியா எல்லாம் இல்ல” என்று அவன் சொல்ல,
நக்கல் சிரிப்புடன், “யார் சொல்றா பாரு. என் கண் முன்னாடி, என் பல்லவிக்கு, உன் மச்சானை…” என்று தேவா சொல்லி முடிக்கும் முன்,
“போதும் தேவா. ஐ ஆம் சாரி” என்று கத்தினான் சூர்யா.
“யூ ஷுட் பி. அன்னைக்கு உன் நண்பனை தூரம் போக விட்ட, இன்னைக்கு உன் தங்கையை…”
“தேவா, போதும். ஏதோ தெரியாம பண்ணிட்டேன் டா.” என்று மன்னிப்பை வேண்டும் குரலில் சொன்ன சூர்யா, எட்டி தேவாவின் கைகளைப் பிடிக்கப் போக, வேகமாகப் பின்னால் நகர்ந்து நின்றான் தேவா.
சூர்யாவின் முகம் அடிபட்ட வலியை காட்டியது. தேவா அவன் கண்களை நேராகப் பார்த்து விட்டு, திரும்பி தன் காரை நோக்கி நடந்தான்.
வீட்டுக்கு வந்து, உடை மாற்றி, அம்மா கொடுத்த காஃபியை குடித்து விட்டு, அன்றைய இரவு பயணத்திற்காக எடுத்து வைத்திருந்த பெட்டியை மீண்டும் ஒருமுறை சரி பார்த்து அதைக் காரில் கொண்டு வைத்தான் தேவா.
அவன் மனம் மீண்டும் மீண்டும் பல்லவியிடம் போய் நின்றது. அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
முன்னர் என்றால் எதற்கும் அஞ்சாமல் அவளது வீட்டிற்குச் சென்று விடுவான். ஆனால், இன்று, அவளது பேச்சை கேட்டப் பின், அவனுக்கு மனதை என்னவோ செய்தது.
அவன் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு கேட்பாள் தான். ஆனால், அவளுக்கு நல்லதை, தேவையானதை, சரியென்று பட்டதைத் தான் அவளைச் செய்ய வைத்திருக்கிறான் தேவா.
மாலை பல்லவி அவனை அழைத்த போது கூட, தனக்கு ஒரு பிரச்சனை என்றால், என்னைத் தான் தேடுகிறாள் என்று மகிழ்ந்தானே. ஆனால், இப்போது? அவனுக்கே அவன் சிந்தனை செல்லும் பாதை பிடிபடவில்லை.
அன்று பின் மதிய பொழுதில் ஹாஸ்பிட்டலின் கார் பார்க்கிங்கில் இருந்து காரை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தான் தேவா. அப்போது பல்லவி அவனை அலைபேசியில் அழைக்க, எப்போதும் போல முதல் ரிங்கிலேயே எடுத்து விட்டான் அவன்.
“தேவா..” என்று பரிதவித்து வந்த பல்லவியின் அழைப்பில்,
“பல்லவி என்னாச்சு?” என அவன் பதறி கேட்க, அந்தப் பக்கம் ஒரு நொடி மௌனம் தான் பதிலாக வந்தது.
“ஏய் பல்லவி, என்ன?” என்று தேவா மீண்டும் கேட்க,
“என்னை வந்து கூட்டிட்டு போ தேவா” என்றாள், அழுகையைக் கட்டுப்படுத்திய குரலில்,
நம்மை இக்கட்டான சூழ்நிலையில் வாழ்க்கை நிறுத்தும் போதெல்லாம், கேட்கும் பிரியமானவர்களின் குரல் நமக்கு ஆறுதலையும், அழுகையையும் சேர்த்தே தருகிறது. பல்லவி அந்நேரம் அப்படித் தான் உணர்ந்தாள்.
“எங்க கூட்டிட்டுப் போகப் பல்லவி? நீ எங்க இருக்க, இப்போ?” படபடப்புடன் கேட்டான் தேவா.
பல்லவி தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு, “உன் ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்க மால்ல இருக்கேன். சீக்கிரம் வா”
சொல்லி விட்டு அழைப்பை துண்டித்திருந்தாள்.
ஹாஸ்பிடலுக்கும், மாலுக்கும் இடையில் இருந்த ஐந்து நிமிட பயணத் தூரத்தை, இரண்டே நிமிங்களில் கடந்து, அவள் முன் இருந்தான் தேவா.
காரில் ஏறியதும் அவளின் வழக்கத்திற்கு மாறாக, கியர் மேலிருந்த அவன் கையைப் பற்றி, லேசாக அவன் தோள் சாய்ந்து, பின்னர் விலகி நேராக அமர்ந்தவளை விசித்திரமாகப் பார்த்தான் தேவா. மனதில் மெல்லிய தூறலும், ஆச்சரியமும் பரவ,
“என்ன பல்லவி? இங்க என்ன பண்ற? யார் கூட வந்த? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? அழுதியா? என்னாச்சு?” அவனது கேள்விகள் தீரவில்லை. ஆனால், அவளிடம் இருந்து ஒற்றைக் கேள்விக்குக் கூடப் பதில் வரவில்லை.
“வீட்டுக்குப் போகலாம் தேவா” என்று மட்டுமே சொன்னாள்.