அந்தக் காலை பொழுதிலும் மெலிதாக மழைத் தூறிக் கொண்டேயிருந்தது.
அன்றைய இரவு சூர்யா, பாரதி புக்கிட் செல்வதற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்க, பாரதி இன்னமும் பேக்கிங் தான் செய்து கொண்டிருந்தாள்.
சூர்யா அலுவலக மெயிலில் மூழ்கி இருந்தான். அவன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்பதாலும், மீண்டும் அலுவலகம் செல்ல இன்னும் பத்து நாட்கள் இருப்பதாலும், செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட நினைத்து அதில் கவனம் செலுத்தி இருந்தான்.
வரிசையாக மெயில் மற்றும் அலைபேசி அழைப்புகளுக்குப் பதில் அளித்துக் கொண்டேயிருந்தான். நடுநடுவே மனைவி மட்டுமே குடும்பத்தினரின் இடையூறு வேறு வேலையில் அவனை முழுதாக மூழ்க விடவில்லை.
“சூர்யா, பாரதி. சாப்பிட வாங்க பா” என்ற கஸ்தூரியின் குரலில் கலைந்து, கையை உயர்த்தி நேரத்தைப் பார்த்தான் சூர்யா.
“ஒன்று முப்பது” என்றது கடிகாரம்.
பாரதி டிரெஸ்ஸிங் டேபிளின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு அயர்ச்சியாக வந்தது.
“வேலையை முடிச்சா தான், ஹனிமூன் என்ஜாய் பண்ண முடியும். இல்லனா, அங்க வந்து உன்ன கவனிக்காம, வேலையைத் தான் கவனிப்பேன். எப்படி வசதி?” என்று அவன் புருவம் உயர்த்த, மெலிதான வெட்கச் சிரிப்புடன் எழுந்து அவனுடன் நடந்தாள் பாரதி.
மதிய உணவை மௌனமாய்ப் பரிமாறிய தங்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.
அவன் தங்கையிடம் பேச தவித்தாலும், என்னவென்று அவளுக்கு அன்றைய சூழ்நிலையை விளக்குவது என்ற எண்ணத்தில் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான் சூர்யா.
அவர்கள் உணவை முடித்து ஹாலில் இருந்த சோஃபாவில் அமர, பாரதியின் குடும்பத்தில் இருந்த இளைஞர் பட்டாளம் வீட்டிற்குள் நுழைந்தனர்.
புதிதாக வெளியாகி இருந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு, அப்படியே தியேட்டர் இருந்த அந்த ஷாப்பிங் மாலில் சுற்றி விட்டு வரலாம் என்ற திட்டத்துடன் அவர்களை அழைக்க, சூர்யா தீவிரமாக மறுத்து விட்டான்.
“இல்ல. நைட் எங்களுக்குப் பிளைட். கண்டிப்பா இப்போ வர முடியாது. நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க” என்று அவன் சொல்ல,
“அச்சோ, வாங்க அத்தான். நைட் தானே ப்ளைட். அதுக்கு இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கு. படத்துக்கு மட்டும் வாங்க. லேட் ஆகாது. பிளீஸ்” என்று பாரதியின் தங்கை கெஞ்சி கேட்க, திரும்பி மனைவியின் முகம் பார்த்தான் சூர்யா.
அவள் முகத்தில் போக வேண்டும் என்ற ஆசை தெரிய, “போகணுமா?” என்று அவளிடம் கேட்டான் அவன்.
“இல்லை” என்று வேகமாக மறுத்து தலை அசைத்தாள் பாரதி.
“டிக்கெட் முன்னாடியே புக் பண்ணது அத்தான். நீங்க வருவீங்கன்னு தான் பிளான் பண்ணோம். அக்கா கிட்ட கேட்டு தான் பண்ணோம்” என்று அவள் சொல்ல, சூர்யாவிற்கு நிலைமை புரிந்தது.
தேவா இப்படித் திருமணமான மூன்றாம் நாளே ஹனிமூன் செல்ல டிக்கெட் போடுவான் என்று அவன் என்ன கனவா கண்டான்.
சூர்யா என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிப்பதற்குள், “நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க. நாம நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா சேர்ந்து போகலாம்” என்று பாரதி அழுத்தமாகச் சொல்ல, வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள் அவளின் தங்கை.
ஆனால், இப்போது டிக்கெட் அதிகம் இருக்க, ஆட்கள் குறைவாக இருந்ததால் சங்கவியை அழைத்தனர்.
அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சரி என்று விட, அவளோடு நின்றிருந்த வித்யா ஒரேயடியாக முடியாது என்று விட்டாள்.
சரியாக அப்போது அங்கிருந்த அனைவருக்கும் குடிக்கக் குளிர்பானம் எடுத்துக் கொண்டு பல்லவி வர, அவளைப் பிடித்துக் கொண்டனர்.
அவளும் எவ்வளவோ மறுத்து பார்த்தாள். யாரும் கேட்பது போல இல்லை.
பாரதி, “வேண்டாம் சூர்யா. அவ வீட்ல இருக்கட்டும்” என்று சொல்ல, மனைவியை முறைத்தான் சூர்யா.
“அவ ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கா. வெளில போய்ட்டு வந்தா, பெட்டரா ஃபீல் பண்ணுவா” என்று சூர்யா சொல்ல,
“சொன்னா கேளுங்க. வேண்டாம்” என்று பாரதி அழுத்தி சொல்ல, சூர்யா கேட்பதாகவே இல்லை.
அவனுக்குத் தங்கையின் முகம் தெளிவாகி விட வேண்டும். அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. அதில் மற்ற எதையுமே கவனிக்க மறந்திருந்தான் அவன்.
சூர்யா, பல்லவியின் கைப் பிடித்து, “போய்ட்டு வாடா” என்று சொல்ல,
“வேண்டாம் ண்ணா” என்றாள் அவள் கெஞ்சலாக,
“ஏன் பாப்பா, இப்படி இருக்க? எல்லாம் உன் வயசு பசங்க தானே. போய்ட்டு வா” என்று அவள் மேலே பேச இடம் கொடுக்காமல், அவன் உத்தரவாகச் சொல்ல, மௌனமாய் உடை மாற்ற சென்றாள் பல்லவி.
ஏனோ அவளுக்குக் காரணமற்று அழுகை வந்தது. அம்மாவிடம் சொன்னால், அனுப்ப மாட்டார் தான். ஆனால், பாரதியின் வீட்டினரை தேவையில்லாமல் அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும் என்று பயந்தாள் அவள்.
அப்படியும் அனைவரும் காரில் ஏறும் போது, அம்மாவை பார்த்துக் கண் காட்டவே செய்தாள்.
“பல்லவிக்கு முடியலை போல, சூர்யா. அவ வீட்ல இருக்கட்டுமே” என்றார் கஸ்தூரி.
“என்னம்மா, நீங்க. எப்பவும் அவளைக் கூடவே வச்சுக்க நினைக்கறீங்களா? நாலு பேர் கூட வெளில போறதுல என்ன தப்பு? அதுவும் பாரதி குடும்பம் தானே? சங்கவியும், மாப்பிள்ளையும் இருக்காங்க. அப்புறம் என்னம்மா?” என்று அவன் எரிச்சலுடன் கேட்க, கஸ்தூரி அனைவரின் முன்னும் பேச முடியாமல்,
“நீ சொல்றதும் சரி தான் சூர்யா. போய்ட்டு வா, பல்லவி மா” என்று விட்டார் அவர்.
சங்கவி வந்து பல்லவி பக்கத்தில் நிற்க, ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்திக் கொண்டாள் பல்லவி.
மொத்தம் பனிரெண்டு பேர் இருக்க, மூன்று கார்களில் பிரிந்து ஏறிக் கொண்டனர்.
சங்கவி தன்னுடன் வருவாள் என்று பல்லவி எதிர்பார்க்க, அவளோ வேறு ஒரு காரில் ஏறி இருந்தாள்.
மனதில் அக்காவை திட்டிக் கொண்டே கடைசியாக நின்றிருந்த காரில் ஏறிய பல்லவி, நிமிர்ந்து முன்னே பார்க்க, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் பிரவீன்.
அவளுக்கு அப்படியே இறங்கி வீட்டிற்குள் ஓடி விட வேண்டும் போலிருந்தது.
காரின் கண்ணாடியை மெல்ல கீழிறக்கி விட்டாள். பாரதி அவளையே பார்த்துக் கொண்டு, வீட்டின் வாயிலில் நின்றிருப்பது தெரிந்தது.
“ஹாய் பியான்ஸி” என்று பிரவீன் கண் சிமிட்டி ராகம் இழுத்து அவளை விழிக்க, அவனை ஓங்கி அறைய சொன்ன கைகளை, வெகுவாகப் பிரயத்தனப்பட்டு, இறுக மூடிக் கொண்டாள் பல்லவி.
“அப்படிக் கூப்பிடாதீங்க. நான்.. எனக்கு விருப்பம் இல்லைன்னு. அன்னைக்கே அப்பா கிட்ட சொல்லிட்டேனே. உங்க வீட்லயும் சொல்லிட்டதா, அப்பா சொன்னாங்க” பதட்டத்தில் சிதறியது அவளின் வார்த்தைகள். ஆனால், நிதானமாக அவளின் பதட்டத்தை அவன் ரசித்துச் சிரிக்க, தலையை முட்டிக் கொள்ள இடம் தேடினாள் பல்லவி.
“ஆனா, உங்க அண்ணா கிட்ட, என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் தானே சொல்லி இருக்கப் பல்லவி?” என்று அவன், அவள் கண்களைப் பார்த்து கேட்க, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்.
“சூர்யா, உனக்கும் இந்தக் கல்யாண பேச்சில் விருப்பம் இருக்குனு யோசிக்காம சொல்லிட்டான்.” என்று சேதுராமன் அவளிடம் சொன்னது அவள் மனதில் வந்து போனது.
அண்ணனின் சம்மதத்தை இத்தனை கெட்டியாகப் பிரவீன் பற்றிக் கொள்வான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அதுவும் தந்தை மறுத்து சொன்ன பின்னரும், சூர்யாவின் வார்த்தைகளை உடும்பு பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவனைக் காண்கையில் அவளுக்குப் பெரும் அதிர்ச்சி தான்.
“இல்ல, அது அண்ணா தெரியாம சொல்லி இருப்பாங்க. எனக்கு…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாரதியின் தங்கையும், அவளோடு இன்னொரு பெண்ணும் காரில் ஏற, பட்டென்று வாயை மூடிக் கொண்டாள் பல்லவி.
ஒரு கணம் காரில் இருந்து இறங்கி விடுவோமா, என்று கூட யோசிக்கவே செய்தாள். ஆனால், அதனால் வேறு பிரச்சினைகள் கிளம்பி விடக் கூடாதே என்று அமைதியாக அமர்ந்து விட்டாள்.
காரை எடுக்கும் போது, அவள் பக்கமாக வந்து நின்ற பாரதி, “ஜஸ்ட் என்ஜாய் பல்லவி.” என்று அவளின் கைப் பிடித்து அழுத்தி விட்டு, முன்னிருந்த பிரவீனிடம் சிறு குரலில் ஏதோ சொல்லி விட்டு சென்றாள்.
கார்கள் மழை கழுவி விட்டிருந்த சாலையில் வழுக்கி கொண்டு செல்ல, வீட்டினுள் வந்தாள் பாரதி.
நேராகத் தங்களின் அறைக்குள் வந்தவள், சூர்யாவின் முன்னிருந்த லேப்டாப்பை பிடுங்கி தூரமாக வைத்தாள்.
“என்ன பாரதி பண்ற?” என்று அவன் கத்த, இடுப்பில் கை வைத்து அவனைப் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள் பாரதி.
“ஏன் சூர்யா, இப்படி இருக்கீங்க?”
“எப்படி இருக்கேன்?” கடுப்புடன் கேட்டான்.
“நான் சொன்னா உடனே சரின்னு சொல்ல வேண்டாம் தான். ஆனா, ஏன் சொல்றேன்னு கூடவா யோசிக்க மாட்டீங்க? அத்தனை பேர் முன்னாடி என்னால விளக்கி சொல்லவும் முடியல.”
“எதைச் சொல்ற?”
“ஆங், இப்ப நல்லா கேளுங்க. பல்லவிக்குப் போகவே விருப்பமில்லை. அவளை ஏன் கட்டாயப்படுத்தி, அவங்க கூட அனுப்பி.. ப்ச்..”
“கடுப்பை கிளப்பாத பாரதி. ஆளே டல்லா இருக்கா. அதான் வெளில போய்ட்டு வந்தா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் பாரதி.
“போய்ட்டு வந்தா? சரியாகிடுவாளா? சொல்லுங்க?” என்றவள்,
“தேவா அண்ணா வந்தா, அவளைச் சரி பண்ண போறார். எதையும் யோசிக்கறது கிடையாது. அந்த நிமிஷம் எது தோணுதோ அதைச் செஞ்சுட்டு, அப்புறம் உட்கார்ந்து ஃபீல் பண்ண வேண்டியது” என்று கணவனை அவள் தாக்கிப் பேச, அவளின் பேச்சில் இருந்த உண்மை சூர்யாவை மௌனியாக்கியது.
“நான் கல்யாணத்துக்குக் கண்டிஷன் போட்ட போதும், இப்படித் தான் பண்ணீங்க. குடிச்சு, மயங்கி விழுந்து… ஆனா, அதை வீட்டுக்கே தெரியாம மறைச்சு, இன்னைக்கு நாம சேர்ந்து இருக்கக் காரணமே அவங்க ரெண்டு பேர் தான். அன்னைக்கும் உங்க மேல இருக்கக் கோபத்தை எல்லாம் நான் பல்லவி மேல தான் காட்டினேன். ஆனா, அவ பதிலுக்கு இன்னைக்கு வரைக்கும் என்னைக் கொஞ்சம் கூட மரியாதை குறைவா நடத்தினது இல்ல.
உங்க ப்ரெண்ட் கூட உங்களுக்குப் பிரச்சனைன்னா, அதுக்கு உங்க தங்கச்சியை ஏன் உள்ள இழுக்கறீங்க?
தேவா அண்ணாக்கு அவளைப் பிடிக்கும்னு, அவரைக் கோபப்படுத்த, பல்லவியை, பிரவீன் அண்ணாக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்காதீங்க.
அதுனால தேவா அண்ணாவை மட்டுமில்ல, உங்க தங்கச்சி, ஏன் உங்களையும் சேர்த்து தான் பனிஷ் பண்றீங்கன்னு நம்ம கல்யாணம் ஆன அன்னைக்கே சொன்னேன். என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு இருக்கீங்களா?” என்று பாரதி படபடவென்று பொரிய,
“ப்ச், பைத்தியம் மாதிரி பேசாத. எனக்கும், தேவாக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. அதை விடு. இப்போ எதுக்கு இவ்வளவு நீளமா பேசிட்டு இருக்க?” என்று அவன் கண்களைச் சுருக்கி கேட்க, வலிக்க அவன் தோளில் அடித்தாள் பாரதி.
“பிரவீன் கூடப் பல்லவியைப் படத்துக்கு அனுப்பி இருக்கீங்க. நான் பார்க்கும் போதே கார்ல ஏதோ பேசிட்டு இருந்தான் எங்கண்ணன். பல்லவி முகமே சரியில்ல. அங்க ஏதாவது ஆச்சு. தேவா உங்களை…”
“கொன்னுடுவான்” மனைவி சொல்ல வந்ததைத் தான் முடித்து வைத்தான் சூர்யா.
“ஐயோ, பிரவீன் இருந்ததை நான் கவனிக்கலை பாரதி” என்றான் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு,
“நாம தான் லீவ்ல இருக்கோம். உங்க நொண்ணனுக்கு எல்லாம் ஆஃபீஸ் இல்லையா?” பல்லைக் கடித்தபடி அவன் கேட்க,
“இது முன்னாடியே பிளான் பண்ணது. எல்லாரும் ஆல்ரெடி லீவ் போட்டு இருந்தாங்க.” என்றவள்,
“பேச்சை மாத்தாதீங்க. சீக்கிரம் தேவா அண்ணா கூடப் பழம் விடுங்க. உங்க தங்கச்சி கிட்ட சாரி சொல்லுங்க. இப்ப வேலையைப் பாருங்க” என்று அவன் கண்களைப் பார்த்து அவள் சொல்ல, சரியென்று தலையை அசைத்தான் சூர்யா.