மழை மேகம் – 8 (3)

வீட்டு பெண்களின் மேல் தேவா அதீத அக்கறை கொண்டிருந்த காரணத்தினால் தான் அவன் மறைத்தானே தவிர, வேறு காரணங்கள் இல்லை.

மௌனமாய்ச் சில நிமிடங்கள் அவரவர் டீயை அருந்தினர் மூவரும்.

சங்கவி மெல்ல தொண்டையைச் செருமி கொள்ள, சட்டென மற்ற இருவரும் என்னவென்று அவளைப் பார்த்தனர்.

“ஹேய், உனக்கும்…” என்று வித்யா ஆரம்பிக்க, தலையையை வேகமாக ஒப்புதலாய் அசைத்தாள் சங்கவி.

“தேவா ஹெல்ப் பண்ணான்” என்று அவள் சொல்ல,

“என் தங்கச்சியை… அந்தத் திமிர் பிடிச்சவனை இன்னைக்கு…” என்று சூர்யா, பொங்கிக் கொண்டு எழ, அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் வித்யா.

“அடங்கு சூர்யா” என்றாள்.

“காலேஜ் ஃபைனல் யியர் படிச்சுட்டு இருக்கும் போது, கூடப் படிச்ச பையன் தான். தேவா பார்த்திட்டு, பையன் பார்வை சரியில்லை சொன்னான். அவன் சொன்னது போலத் தான் ஆச்சு. என் ப்ரெண்ட்க்கும் சேர்த்து ரூட் விட்டு இருக்கான். அட போடான்னு ஒதுங்கிட்டேன்” என்று அவள் சொல்ல, மூவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.

“அடப்பாவிகளா, வெளில ஸ்ட்ரிக்ட்டா நடிப்பை கொடுத்துட்டு.. ப்ரெண்ட் தங்கச்சி லவ்க்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க, ரெண்டு பேரும். ரொம்ப நல்லவங்க டா நீங்க” என்று வித்யா கேலியாகச் சொல்ல, சூர்யா முகம் மலர சிரித்தான்.

“ஆனா, ஒன்னு. பல்லவியை மட்டும் தனக்கே தனக்குன்னு எடுத்துக்கிட்டான் தேவா. இல்ல? ஒருத்தனை கூட அவ நிழலையும் நெருங்க விட்டு இருப்பானா அவன்? சரியான ஆளு தான்” என்று சங்கவி நக்கலாகச் சொல்ல, அவளின் தொடையைத் தட்டி சிரிக்கத் தொடங்கினாள் வித்யா.

“பல்லவி, நம்ம பல்லவி? லவ்? யார் அவன்? இந்தத் தேவா திமிர் பிடிச்சவனைக் கொல்லப் போறேன் நானு” சூர்யா இப்போதும் கொதிக்க,

“ஹா… அவன் டிரை பண்ணான். ஆனா, பல்லவி? வாய்ப்பே இல்ல. தேவா கூடப் படிச்ச ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட்க்கு இவ மேல இன்ட்ரெஸ்ட். தேவா கூடப் பல்லவியைச் சில டைம் பார்த்து இருப்பான் போல. அது தெரிஞ்சு தேவா எங்களை ஒரு நாள் லஞ்சுக்கு வெளில கூட்டிட்டுப் போனான். அந்தப் பையனையும் வரச் சொல்லி இருந்தான். இவங்க ரெண்டு பேரையும் பேச சொல்லிட்டு, நாங்க அதே மாலில் பத்து நிமிஷம் நடந்துட்டு திரும்பி வந்தா…” அவள் சத்தமாகச் சிரிக்க ஆரம்பிக்க,

“என்ன பண்ணா?” கேட்டான் சூர்யா.

“அவனை அண்ணா சொல்லி, கூப்பிட்டு பேசிட்டு இருக்கா பல்லவி” அவ்வளவு தான். மூவரும் சத்தமாகச் சிரித்து விட்டனர்.

“இன்னொரு பையனை, அவன் என்னை முறைச்சு, முறைச்சுப் பார்க்கறான். அந்தக் கண்ணை நொண்டி போட போறேன் பாரு வித்யா, சொல்றா. அப்புறம் தேவா அந்த முயற்சியைக் கை விட்டுட்டான்” என்று அவள் புன்சிரிப்புடன் சொல்ல,

சூர்யாவிற்கு முன்பு ஒரு முறை தேவா சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவில் வந்தது.

“பறவையைக் கூண்டில் அடைச்சு வச்சுட்டு, அதுக்கு வானமும் தெரியல. வனமும் தெரியலைன்னா எப்படிச் சூர்யா? அதைப் பறக்க விட்டா தானே, அதற்கான அழகான, பாதுகாப்பான கூட்டை தானே கட்டிக்கும்” என்று தேவா அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றிப் பேசும் போது சொன்னது நினைவில் வர, அவனுக்கு அதின் அர்த்தம் இப்போது தெளிவாக விளங்கியது.

“ஆப்போசிட் ஜெண்டர் மேல வர்ற ஈர்ப்பு ரொம்ப இயல்பான விஷயம் டா. சரியான ஆளை தேர்ந்தெடுக்கறாங்களான்னு மட்டும் நாம பார்த்தா போதும்”

மெலிதாக இதழ் பிரித்துப் புன்னகைத்துக் கொண்டான் சூர்யா.

தங்கள் வாழ்வில் வந்த காதலை, கடந்த காலத்திலேயே விட்டுவிட்டு இப்போது மகிழ்ச்சியாக, நிறைவாக வாழும், இருவரையும் பெருமையாகப் பார்த்தான் சூர்யா.

சங்கவி, வித்யா அதற்குள் வேறு எதையோ பேசி சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

சூர்யா தலையைத் திருப்ப, பல்லவியும், தேவாவும் வந்து கொண்டிருந்தார்கள்.

பல்லவியின் கையில் பவித்ரா இருக்க, தேவாவின் கையில் விக்ரம் இருந்தான்.

இருவரையும் ஒன்றாகக் குழந்தையுடன் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

“பவி எழுந்துட்டியா? அம்மா கிட்ட வாடா” என்று சங்கவி அழைக்க,

“வர மாட்டேன், போ மா.” என்று பல்லவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் குட்டி பவித்ரா. அதைப் பார்த்ததும் தேவாவின் கரத்தில் இருந்தே தாவி, பல்லவியின் கன்னத்தில் முத்தமிட்டான் விக்ரம்.

அவளிடம் தனக்கு இருக்கும் உரிமையைக் குட்டி பவித்ராவிடம் நிலை நாட்டும் முயற்சி. எல்லாம் பொறாமை தான் காரணம்.

“அத்த..” என்று அவன் சிரிக்க, பெரியவர்களுக்கும் சிரிப்பு வந்தது.

தேவாவின் குறுகுறு பார்வையை வெகு கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி.

“பவி” என்று சங்கவி மீண்டும் அழைக்க, சித்தியிடம் இருந்து இறங்க மறுத்தாள் பவித்ரா.

“நான் தான், உங்கம்மா குட்டி சாத்தானே. அவ இல்ல. அவ உனக்குச் சித்தி” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சங்கவி சொல்ல, அனைவருக்கும் சிரிப்பே வந்தது.

குழந்தையுடன் அமைதியாய் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் பல்லவி.

வித்யா எழுந்து சென்று பல்லவி, தேவா மற்றும் குழந்தைகளுக்குக் குடிக்கச் சூடான பானமும், கொறிக்க வடையும், பக்கோடாவும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

சூர்யா, தேவா பேசிக் கொள்ளவில்லை. ஆளுக்கொரு பக்கமாக முகம் திருப்பி அமர்ந்திருந்தனர்.

சூர்யா பேச நினைத்தான். ஆனால், ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. இது அவர்களுக்குப் புதிது. இது போலப் பேசாமல் அவர்கள் இருந்தே இல்லை.

இருவருக்குமே இப்படி இருப்பது பிடிக்கவில்லை தான். ஆனாலும், வீம்பாக முகம் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.

தேநீரை குடித்து முடித்த பல்லவி, வித்யாவின் கையைச் சுரண்ட, அவள் கேட்க வருவது புரிந்து குறும்பாகச் சிரித்தாள் வித்யா.

சங்கவி, சூர்யா இருவரும் எழுந்து வீட்டிற்குச் செல்ல, மழைக்குத் தோகையை விரித்து ஆடியது, அதிசயமாக இங்கே பெண் மயில்கள்.

வித்யா, பல்லவி நடனமாட தேவா புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தான்.

“நீயும் வா, தேவா.” என்று இருவரும் அழைக்க, இருந்த இடத்தை விட்டு நகரவில்லை அவன். அவனோடு அமர்ந்து கையைத் தட்டி அம்மா, அத்தையின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தான் குட்டி விக்ரம்.

“அச்சோ, ஆரம்பிச்சுட்டீங்களா? சளி, காய்ச்சல் வரட்டும். ரெண்டு பேருக்கும் இருக்கு. உனக்கும் தான் டா.” என்று அப்போது தான் மாடியேறி வந்த கனிமொழி, பெண்களை மட்டுமல்ல, தேவாவையும் சேர்த்தே திட்டினார்.

அவர் திட்டியதை அவரே மறந்தவராக அவர்களது நடனத்தை நின்று ரசிக்க ஆரம்பித்திருந்தார்.

வித்யா, பல்லவி மழையில் தொப்பலாக நனைந்து விட, உடை மாற்ற கீழிறங்கி சென்றனர்.

விக்ரமை தூக்கிக் கொண்டு தானும் கீழிறங்கி போனார் கனிமொழி.

தேவா அலைபேசியை எடுத்து வீடியோக்களை ஒவ்வொன்றாகத் தேட ஆரம்பித்தான். சில நிமிடங்களுக்குப் பின்னர், அவன் தேடிய வீடியோ கிடைக்க, அதை ஓட விட்டு ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

“ஏன் டா, அப்பவும் உன் தங்கையைத் தொடாம தான் ஆடி இருக்க. ஆனா, என் தங்கை கூட அப்படி ஒரு நெருக்கம்” திடீரென்று பின்னிருந்து வந்த சூர்யாவின் குரலில், திடுக்கிட்டுத் திரும்பினான் தேவா.

“எப்படி டா, உனக்கு ரியலைஸ் ஆகவே இல்ல?” சூர்யா கேட்க, தேவாவிடம் பதிலில்லை.

அன்றைக்கு வெகு இயல்பாக அவளிடம் பழகிய போதும் சரி, இன்றைக்கு அவள் மேல் இருக்கும் அளவிலா நேசத்தை உணர்ந்த போதும் சரி. அவன் பயப்படுவது ஒன்றே ஒன்றுக்கு தான். அவளை எப்போதும் பொத்தி, பாதுகாக்க வேண்டும் என்று அவனைத் தூண்டும் உள்ளுணர்வில்… அவன் அவளைக் காயப்படுத்தி விடக் கூடாது.

காதலை அவளுக்குத் தரவும், அவளிடமிருந்து பெறவும் என்னால் முடியுமா? என்பது தான் அவனது மனதின் கலக்கம். மீண்டும் அதைச் சொல்லி நண்பனை கோபப்படுத்த அவன் விரும்பவில்லை.

கடந்த இரு நாட்களாக அவனுள் துளிர்க்க தொடங்கி இருக்கும், இல்லை… ஏற்கனவே மரமாக வளர்ந்து நின்ற காதலை அவன் இப்போது தான் ரசித்து அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறான். அதைப் பல்லவிக்கும், இப்போது அவனால் கடத்த முடியும்.

ஆனால், சில வருடங்களுக்கு முன் எடுத்த வீடியோவில், அவர்கள் இருவரும் யதார்த்தமாகத் தான் நடனமாடினார்கள் என்று சொன்னால், சூர்யா இப்போது இருக்கும் மன நிலையில் புரிந்துக் கொள்வான் என்று தேவாவிற்குத் தோன்றவில்லை.

ஆகவே, மௌனமாய் நின்றான்.

சூர்யாவே தான் வார்த்தைகளை மீண்டும் கோபத்தில் சிதற விட்டதை உணர்ந்து, “சாரி, தேவா” என்றான்.

“நல்லது டா. இப்பவே சொல்லிட்ட. ஆனாலும், பின்னாடி நிறைய

சாரி தேவைப்படும்னு நினைக்கறேன்” என்று கட்டுப்படுத்திய கோபத்துடன் சொன்ன தேவா,

“நீ பண்ண தப்பை ஒழுங்கு, மரியாதையா நீயே சரி பண்ணிடு. கல்யாணம் நடந்திருக்க வீடு. அதனால் தான், நான் உன் வீட்ல வந்து எதுவும் பேசாம இருக்கேன், நான் தலையிட்டு எந்தக் குளறுபடியும் பண்ணக் கூடாதுன்னு தான் ஒதுங்கி இருக்கேன். இல்லனா..” என்று தேவா கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, சூர்யா ஆழ மூச்செடுத்து வெளியிட்டான்.

“இப்பவும் சொல்றேன் சூர்யா. பல்லவியை எனக்குக் கொடுத்துடு. பிளீஸ்” என்றான் தேவா கட்டளையில் தொடங்கி, பின் கெஞ்சலாக, பதில் இல்லாமல் நண்பனை வெரித்தான் சூர்யா.

மனதில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும், எதுவுமே அந்நேரம் அவனுக்குக் கைக் கொடுக்கவில்லை.

“பல்லவி கண்ல கண்ணீர் வந்தது. வேணாம் சூர்யா. என்னைக் கஷ்டப்படுத்த நினைச்சு… நம்ம மூனு பேரையும் காயப்படுத்தாத டா. பிளீஸ்.” இறைஞ்சினான் தேவா.

“சாரி, தேவா” என்றான் சூர்யா.

அவனைக் கடந்து அமைதியாய் கீழிறங்கி போனான் தேவா.

சூர்யா உடனேயே ஏதாவது செய்து தங்கைக்கு, பிரவீன் உடனான திருமணப் பேச்சு வார்த்தையை, அப்படி ஒன்று நடக்கவே நடக்காததாகத் தான் மாற்ற விரும்பினான்.

அவன் மனதறிந்து இம்முறை எதையும் செய்யவில்லை.

ஆனால், மறுநாள் அவனால் பல்லவி அழுது கொண்டே வீடு வந்தாள். அதுவும் தேவா தான் வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

ஏற்கனவே நண்பர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை அந்நிகழ்வு அதிகப்படுத்த போகிறதா?

தேவாவின் எச்சரிக்கையை மீறி சூர்யா நடந்து கொண்டதை தேவா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறான்?

சொட்ட, சொட்ட மழையில் நனைந்து கொண்டு, மழையில் கோபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பல்லவி, என்ன செய்யப் போகிறாள்?

அவளின் கண்ணீரை கழுவி துடைத்து தரை சேர்த்துக் கொண்டிருந்த மழை, அவளுக்குப் புன்னகையைப் பரிசளிக்கப் போகிறதா?

பல்லவி, அண்ணனை மன்னிப்பாளா?

தேவாவிடம் மனதை திறக்க அவளுக்குச் சமயம் வாய்க்குமா?

மழை நனைக்கும்…

error: Content is protected !!
Scroll to Top