மழை மேகம் – 8 (2)

பாரதி எழுந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஒரே சிரிப்பும், கண்ணீருமா இருக்கீங்க? நான் கேட்டா மட்டும், சரியான காரணம் வராது” என்று சொல்லிக் கொண்டே எழுந்து, குளியல் அறைக்குள் சென்று மறைந்தாள் அவள்.

சூர்யாவின் மனம் தங்கையிடமே போய் நின்றது. அவனுக்குப் பாசத்தை மட்டுமே மழையாகப் பொழிந்த தங்கைக்கு என்ன செய்து விட்டான் அவன்? மன்னிப்பாளா அவனை?

‘காலையில் இருந்து என் முகம் பார்க்க மறுக்கும் தங்கையை, எப்படிச் சமாதானம் செய்யப் போகிறேன்? நண்பனை எப்படிச் சரி செய்யப் போகிறேன் நான்?’ என்று குற்ற உணர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தவனைக் கலைத்தது மனைவியின் தொடுகை.

“என்னாச்சு?” என்றாள் பாரதி.

பதிலேதும் சொல்லாமல் அவளுடன் இணைந்து கீழிறங்கி சென்றான் அவன்.

மாலை ஐந்து மணி. வித்யா, சங்கவி இருவரும் தேவா வீட்டு மொட்டை மாடியில் பாய் விரித்து அமர்ந்து, சாய்ந்து கொள்ள முதுகுக்குத் தலையைனை சகிதம் செட்டில் ஆகியிருந்தனர்.

கனிமொழி அவர்களுக்குச் சுடச்சுட வாழைப் பூ வடையும், டீயும் கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல, மழைச் சாரலில் நனைந்து கொண்டு, மழையை ரசித்துக் கொண்டு, அதற்கு இதமாகச் சூடான வடையும், டீயும் உண்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களைத் தேடிக் கொண்டு அங்கு வந்தான் சூர்யா.

“வாங்க, புது மாப்பிள்ளை. என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது.?” என்று வித்யா கேலியாகக் கேட்க,

மழையில் இருந்து தப்பிக்கக் கையில் பிடித்திருந்த குடையை மடித்து ஓரமாக வைத்து விட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, அவனும் அவர்களோடு அமர்ந்து விட்டான்.

குடையைப் பார்த்ததும், “குடையைத் தூக்கி தூரப் போடு வித்யா. மழைக்குக் குடைப் பிடிக்கிறது எல்லாம், மழைக்கு நாம செய்ற மிகப் பெரிய அவமானம், தெரியுமா?” என்ற பல்லவியின் கோபம், நினைவு வர புன்னகைத்துக் கொண்டாள் வித்யா.

அந்நேரம் சூர்யாவும், “நீங்க மட்டும் இருக்கீங்க. பல்லவி எங்க?” என்று கேட்டான்.

“அந்தக் குட்டி பிசாசு….” என்று சங்கவி ஆரம்பிக்க,

“தூங்கறா…” என்று வித்யா சொல்லி முடிப்பதற்குள் இடையிட்டு, “ஏன் இந்நேரம் என்ன தூக்கம்? உடம்பு சரியில்லையா பாப்பாக்கு?” என்று அவன் பதற, அவனை முறைத்துக் கொண்டே டீயை அருந்தினாள் சங்கவி.

அவளின் முறைப்பை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சூர்யாவுக்குப் பதில் சொன்னாள் வித்யா.

“நாங்க பெத்ததுங்க கூட விளையாண்டுட்டு இருந்தா. ரெண்டையும் தூங்க வைக்கறேன்னு கூடப் படுத்து, கதை சொல்லிட்டு இருந்தா. அதுங்க ரெண்டும் சேர்ந்து அவளைத் தூங்க வச்சுட்டு, கூடவே அதுங்களும் தூங்குதுங்க” என்றாள் வித்யா.

“குழந்தைகளை அதுங்க, இதுங்கன்னு என்ன பேச்சு இது வித்யா?” என்று அவன் முகம் சுளிக்க,

“எப்பா டேய், உனக்குப் பிள்ளை பொறந்ததுக்கு அப்புறம் என்ன சொல்றன்னு பார்ப்போம். இப்போ இப்படித் தான் கோபம் வரும். ஆனா, உனக்குக் குழந்தை வந்த பின்னாடி என்ன சொல்றன்னு, நாங்களும் பார்க்கத் தானே போறோம். இல்ல, சங்கவி?” என்று அவள் சங்கவியையும் கூட்டுச் சேர்க்க, சன்ன சிரிப்புடன் முகம் திருப்பினான் சூர்யா.

“மத்தவங்க குழந்தைங்க எப்பவும் அழகு, ஸ்வீட், கியூட் தான். நம்ம புள்ளைங்க வரும் போது தான் தெரியும், புள்ளை வளர்ப்பு.” என்று அவள் சொல்ல,

“ஹேய், ரொம்பப் பயமுறுத்தாத எங்க அண்ணனை” என்று பரிந்து கொண்டு வந்தாள் சங்கவி. சிரித்தனர் மூவரும்.

“என்ன இன்னைக்கு முழுக்க வீட்லயே இருக்க? வெளில எங்கேயும் போகலையா? மறுவீடு எப்போ? பாரதி எங்க?” வித்யா கேட்க,

“நாளைக்குப் புக்கிட் போறோம். வந்து தான் மறு வீடு எல்லாம். பாரதி பேக் பண்ணிட்டு இருக்கா” என்றான் சூர்யா.

கனிமொழி மீண்டும் வந்து வடையும், டீயும் சூர்யாவிற்குக் கொடுத்தவர், கூடவே பல்லவிக்குப் பிடித்த வெங்காயப் பக்கோடாவும் கொடுத்து விட்டு செல்ல,

“குட்டி பிசாசு எழுந்துடுச்சு போல, அதுக்குப் பிடிச்சது வருதே” என்று சங்கவி சொல்ல, வித்யா தலையில் அடித்துச் சிரித்துக் கொண்டே, “ஏன் இப்படி இருக்கச் சங்கவி? நீ மாறவே மாட்டியா?” என்று சலித்துக் கொண்டாள்.

“ம்ம்ம்” வெறுப்பாகச் சொல்லி விட்டு, டீயை குடிக்க ஆரம்பித்தாள் சங்கவி.

“ஏன் ண்ணா. நீயும், தேவாவும் சேர்ந்து எங்களை ஒரு பையனை கூட ஏறெடுத்து பார்க்க விடல. ஆனா, இன்னைக்கு நீ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட. தேவாவும், இந்தக் குட்டி பிசாசை விரும்புறான்னு வித்யா சொன்னா. இது உங்களுக்கே நல்லா இருக்கா? உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?” என்று சங்கவி, சூர்யாவிடம் கேட்க, எதிர்பாரா நேரத்தில் வந்த கேள்வியில் தங்கையை அதிர்ந்து போய்ப் பார்த்தான் சூர்யா.

“அது…” என்று அவன் இழுக்க,

“நம்ம வீட்டு குட்டி பிசாசு தான் கதிர் மாமாவை வச்சு, அப்பா, அம்மாவை சம்மதிக்க வச்சதாம். கேடி அது” என்று சங்கவி சொல்ல, சூர்யாவின் முகத்தில் புன்சிரிப்பு தான்.

“பல்லவி, தேவா.. நாம எதிர்பார்த்து இருக்கணும் இல்ல?” என்று சங்கவி கேட்க, மற்ற இருவரின் தலையும் தானாக ஆடியது.

“என்னவோ நான் அப்படி யோசிச்சதே இல்ல. ரெண்டு பேரும் அது போலப் பழகினதே இல்லைல? அதுனால இருக்கும். ஆனா, இந்தக் குட்டி பிசாசு அன்னைக்கு உன்னோட ரிசப்ஷன் அன்னைக்குச் சொல்லுச்சு. எனக்கு என்னை விடத் தேவாவை தான் ரொம்பப் பிடிக்கும்னு…”அவள் சொல்லிக் கொண்டே போக, மற்ற இருவரும் சட்டென்று ஒருவர், ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

இருவருக்கும் தேவா சொன்ன வார்த்தைகள் தான் மனதில் வலம் வந்தது.

“ஐ லவ் ஹெர் மோர் தென் மைசெல்ஃப்”

மொழி தான் வேறுவேறே தவிர, அவர்கள் இருவர் சொன்னதின் அர்த்தம் ஒன்றே தான் என்பதில் வித்யா, சூர்யா இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

சூர்யாவின் நிலை தான் சங்கடமாகி போனது. இப்போது பல்லவியின் மனதும் தெளிவாகத் தெரிந்த பின், தான் செய்த காரியத்தை நினைத்து அவனுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது. நிச்சயம் இதை நான் சரி செய்வேன் என்று மனதில் உறுதி பூண்டு கொண்டான் அவன்.

“உங்க ரெண்டு பேருக்கு மட்டும் காதல் கல்யாணம். ஆனா, நாங்க? ஒருத்தனை எங்க பின்னாடி வர விட்டீங்களா? பாடிகார்ட் போல எங்க பின்னாடியே வந்து, ஒரு சைட்டு, ஒரு லவ் லெட்டர், ஒரு க்ரஷ்? ப்ச், ஒன்னுமே அனுபவிக்கல. ச்சே… ” என்று சங்கவி அலுப்பும், சலிப்புமாகச் சொல்ல, சூர்யாவின் பார்வை வித்யாவை துளைத்தது.

“அப்படியா, வித்யா?” என்று அவன் கேட்க, வித்யா அதிர்ந்து நிமிர்ந்ததில் குடித்துக் கொண்டிருந்த டீ சட்டென்று வெளியில் வந்திருந்தது.

சங்கவி அவளின் தலையைத் தட்ட, தண்ணீர் குடித்துத் தன்னை நிலைப்படுத்தினாள் வித்யா.

“வித்யா..?” என்று சங்கவி அதிர்ச்சியுடன் விழி விரிக்க,

“கல்யாணத்துக்கு முன்னாடி வேலை பார்த்தேன் இல்ல? அப்போ, என் கூட வேலை பார்த்தார். ஒரு வருஷ காதல்…” என்று அவள் இழுக்க, சங்கவி விழிகள் வெளியில் வந்து விடுமளவு அவளை வெறித்துப் பார்த்தாள்.

“அப்புறம்?” என்று சங்கவி கேட்க,

“முதல்ல தமிழ், அவரா தான் வந்து பேசினார். பக்கத்துப் பில்டிங் தானே சூர்யா ஆஃபீஸ். சோ, அவன் கிட்ட தான் போய் நின்னேன். சூர்யா, அவர்கிட்ட பேசினான். அப்புறம் இவன் சரின்னு சொல்லவும் தான், நான் தமிழுக்கு ஓகே சொன்னேன்.” என்று சூர்யாவை அவள் கைக் காட்டி சொல்ல, சங்கவி அண்ணனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள்.

“நாங்க, ஆபீஸில் பார்த்து, பேசிக்கறதோட சரி. பெருசா வெளில எங்கேயும் போனது இல்ல. சில முறை சூர்யா கூட லஞ்ச் வெளில போனோம். மத்தபடி, ஊர் சுத்தினது எல்லாம் இல்ல. கல்யாண பேச்சு தமிழே தான் எடுத்தார். ஆனா, அவங்க வீட்ல அப்போ தான் அவங்க அண்ணா கல்யாணம் முடிஞ்சு இருந்தது. அதனால், ஒரு ஆறு மாசம் போனதும் நம்ம வீட்டுக்கு வந்து பேசுறேன்னு சொல்லி இருந்தார். சூர்யாவும் சேது மாமா கிட்ட சொல்லி, அப்பா கிட்ட பேச வைக்கலாம்னு சொல்லி இருந்தான்.” வித்யா சிறு குரலில் சொல்லிக் கொண்டே போக, சங்கவி ஆர்வம் தாங்காமல் நேராக உள்ளே குதித்தாள்.

“எப்படிப் பிரிஞ்சீங்க?” என்று அவள் கேட்க, மெலிதாகப் புன்னகைத்து மேலே சொல்ல ஆரம்பித்தாள் வித்யா.

“அவங்க அண்ணா துபாயில் இருந்தார். கல்யாணம் முடிஞ்சு உடனே துபாய் போய்ட்டார். ஒரு மாசம் கழிச்சு, அவங்க… அவங்க வைஃப்பை கூப்பிட விசாவோட வந்தார். அப்போ… அப்போ..”

“என்னாச்சு வித்யா? ஏன் இப்படித் தடுமாறுற?” சங்கவி கேட்க, சூர்யாவின் கரம் உயர்ந்து வித்யாவின் தலைக் கோதியது.

“அப்போ.. நைட்டு அவங்க தங்கச்சி கூட ட்ரைவ் போய் இருக்கார். அந்தப் பொண்ணு காரை ஓட்ட ஆசைப்பட்டு இருக்கா. ஒட்டியும் இருக்கா. மதுரை, விருதுநகர் ஹைவே. ஆக்சிடென்ட். அவங்க அண்ணன் ஸ்பாட் அவுட்”

“ஐயோ, வித்யா..” அலறினாள் சங்கவி.

“கல்யாணமாகி முழுசா ரெண்டு மாசம் கூட ஆகலை வித்யா. அப்புறம்… அவங்க அண்ணிக்கு, தமிழைக் கல்யாணம் பண்ணி…” மேலே சொல்ல முடியாமல் மழையை வெறித்தாள் வித்யா.

“அடிப்பாவி, எனக்குத் தெரியவே தெரியாது வித்யா. சாரி, வித்யா. சாரி. எப்படிக் கடந்து வந்த?” சங்கவியின் கரம் ஆறுதலாக வித்யாவின் முதுகை தட்டியது. சிரித்தாள் வித்யா.

“அவங்கதுல இப்படிப் பண்றது வழக்கம் தானாம் சங்கவி. அவங்க அண்ணன் மனைவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். முதல்ல ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா, அவனோட பக்க நியாயம் பார்த்தேன். சரின்னு விட்டுட்டேன். அந்தப் பொண்ணு வாழ்க்கையும் முக்கியம் தானே? அவங்களுக்கு இன்னொரு வாழ்க்கை அமையறது ரொம்பக் கஷ்டம் இல்லையா? சோ..” என்றவள்,

“எனக்கு அந்நேரம் சூர்யா, பல்லவி, தேவா ஆறுதலா இருந்தாங்க.” என்று அவள் சொல்ல,

“தேவாக்கு தெரியுமா?” என்று கத்தினான் சூர்யா.

“தெரியும்” என்றாள் வித்யா.

“நான் தேவாகிட்ட சொல்லலை சூர்யா. அவனுக்கு எப்படித் தெரியும்னு எனக்குத் தெரியாது. பல்லவியும் சொல்லலைன்னு தான் சொன்னா. ஆனா, அவனுக்குத் தெரிஞ்சு இருக்கு. என் கல்யாண நேரத்தில் தான் அவனுக்குத் தெரியும்னு எனக்கே தெரியும்.” என்றாள் வித்யா.

தங்கையின் கையை இறுக பற்றிய தேவா, “தமிழை மறந்துட்ட தானே வித்யா? அந்த நினைவோட புது வாழ்க்கைக்குள்ள போகாத. அது உனக்கு நீயே செய்யும் துரோகம்” என்று சொல்ல, அண்ணனை அதிர்ந்து போய்ப் பார்த்தாள் வித்யா.

“தமிழ் உனக்கு நினைவா மட்டுமே இருக்கணும் டா. ஆண்களின் காதலை போலப் பெண்களின் கடந்த காலக் காதல் கொண்டாடப்படுறது கிடையாது. மாப்பிள்ளை கிட்ட உண்மையைச் சொல்றேன்னு எதையும் உளறி வைக்காத. அப்படியே உனக்குச் சொல்லியே ஆகனும்னு தோனினா, பின்னாடி உங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் வந்த பின்னாடி சொல்லு. ஆனா, நீயே அவனை மறந்த பின்ன…அது அனாவசியம் தான்னு நான் சொல்வேன்.

இப்போ உனக்கே உனக்குன்னு கிடைச்சு இருக்க இந்த வாழ்க்கையை நல்லபடியா வாழு டா. நல்லா இருப்ப” என்று கண் கலங்க சொன்ன தேவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னாள் வித்யா.

வித்யா காதலை தேவாவிடம் சொல்லாமல் விட்டதற்கு இப்போது அதிகம் வருந்தினான் சூர்யா. அவனைப் பற்றித் தெரிந்தும் மறைத்தது தன் தவறு தான் என்று புரிந்தது.

error: Content is protected !!
Scroll to Top