அன்று காலையிலேயே பல்லவி தன் முடிவினை அப்பாவிடம் தெளிவாகச் சொல்லி இருக்க, இப்போது ஹாலில் அமர்ந்திருந்த பிரவீனை கண்டதும் அவளையும் அறியாமல் அப்படி ஒரு எரிச்சலாக வந்தது.
“உங்க அண்ணியோட பெரியம்மா பையனுக்கு, அதான் பிரவீனுக்கு உன்னைக் கேட்கறாங்க பல்லவி மா. அப்பா என்ன பதில் சொல்லட்டும்? சூர்யாக்கு இதில் விருப்பம் போலத் தெரியுது. ஆனா, அப்பாக்கு உன் முடிவு தான் முக்கியம். நீ சொல்லு டா” என்று சேதுராமன் கேட்க,
“அப்பா…” என்றாள் வெறுமே, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சூர்யா திருமண வரவேற்பு அன்று பிரவீனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, தேவா அவளை ஏன் அங்கிருந்து அனுப்பினான் என்று அவளுக்கு இப்போது தான் புரிந்தது.
பிரவீனின் பார்வையை அவள் தான் கண்டு கொள்ளவில்லை போலும். ஆனால், தேவா அதைக் கவனித்து இருக்கிறான் என்று அவள் சிந்தனை எங்கோ சென்று கொண்டிருக்க,
“அண்ணா, அண்ணி பத்தி எல்லாம் யோசிக்காம, உன் விருப்பத்தைச் சொல்லு மா” என்று சேதுராமன் மீண்டும் அழுத்தி கேட்க,
“இப்போ எனக்குக் கல்யாணம் வேணாம் பா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே. இப்ப தானே அண்ணாக்கு கல்யாணமாகி இருக்கு. உங்க எல்லோர் கூடவும் நான்…” மகள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவராக, அவளை மேலே பேச விடாமல்,
“சரி டா. விடு. அப்பா, பார்த்துக்கறேன். நேத்து அவங்க கேட்கும் போது உன் அண்ணன் சூர்யா, உனக்கும் இந்தக் கல்யாண பேச்சில் விருப்பம் இருக்குனு யோசிக்காம சொல்லிட்டான். நான் அப்பவும் அவங்க பேச்சுக்கு சரின்னு சொல்லலை. இருந்தாலும், அவங்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் இல்லடா. சூர்யா சொன்ன வார்த்தையைப் பிடிச்சுப்பாங்க. இந்தக் கல்யாணத்தை ரொம்ப எதிர்பார்க்கறாங்க போல. இப்ப தான் சூர்யாவுக்கும் கல்யாணமாகி இருக்கு. சட்டுனு முகத்தில் அடிச்ச மாதிரி பேச முடியாது” என்றவர்,
“அவங்களும் உடனே இந்தப் பேச்சை எடுக்க மாட்டாங்கன்னு நினைக்கறேன். அப்படியே எடுத்தாலும், அப்பா கிளியரா முடியாது சொல்லிடுறேன். சரியா டா?” என்று கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் பல்லவி.
“அண்ணா மேல கோபப்படாத பல்லவி. அவன், உன்னையும் தன் குடும்பத்துல கொண்டு வந்துடனும்னு யோசிச்சு சொல்லி இருப்பான் போல..” என்று அவராகவே மகனின் செய்கைக்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு சொல்ல, அதற்கும் சரி என்று தலையை அசைத்து வைத்தாள் பல்லவி.
இப்போது ஹாலில் அமர்ந்து கையில் இருந்த அலைபேசியில் மூழ்கி இருந்த பிரவீனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் தவிர்த்து விட்டு, அமைதியாக உள்ளே வந்து விட்டாள் பல்லவி.
ஏற்கனவே இருக்கும் குழப்பங்கள் போதாது என்று, இவன் வேறு, எதையாவது செய்து குட்டையை மேலும் குழப்பி விடக் கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு, கஸ்தூரி ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் அவள்.
வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, சூர்யா தனிமை வேண்டி மனைவியுடன் மாடியில் இருக்கும் படுக்கை அறைக்கு வந்து விட்டிருந்தான்.
மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க, பாரதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
சூர்யா கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அலைபேசியில் மெயில் திறந்திருக்க, அதில் தேவா அனுப்பியிருந்த மெயிலை பார்த்தவனுக்கு என்ன பதில் அனுப்புவது என்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் என்றுமே பெரிதாக, எதற்கும் நன்றி சொல்லிக் கொண்டது கிடையாது.
சூர்யா விரும்பியதை தேவாவும், தேவா விரும்பியதை சூர்யாவும், கேட்காமலேயே ஒருவருக்கொருவர் வாங்கிப் பரிசளித்துக் கொள்வார்கள்.
அப்படிப் பரிசளிக்கும் போதும், “ஹேய், இதை ரொம்ப நாளா வாங்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன் டா. நல்லா இருக்கு இல்ல?” என்பதோடு முடித்துக் கொள்வார்கள். நன்றி சொல்லிக் கொள்வது எல்லாம் அபூர்வம்.
ஆனால், இன்று, இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்கையில் என்னவென்று பேசிக் கொள்வது.
தேவா, அன்று நண்பனிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிய வார்த்தைகளுக்கு, ஆத்திரத்தில் சூர்யா கொடுத்தது மிகப் பெரிய தண்டனை என்று அவன் உணர்ந்ததுமே உள்ளுக்குள் உடைந்து போனான் சூர்யா.
அவனுக்குத் தன் மேலேயே அத்தனை கோபமாக வந்தது.
தன் உயிர் நண்பனே, தன் கண் முன்னே, தான் நேசிக்கும் பெண்ணை, வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கப் பேசுவதைக் காண்கையில் தேவாவிற்கு எத்தனை வலித்திருக்கும் என்று நினைக்கையில் எல்லாம் தேவாவின் கலங்கிய கண்கள் கண் முன் வந்து சூர்யாவை வெகுவாக வதைத்தது.
அவர்கள் ஒன்றும் பள்ளி, கல்லூரி நண்பர்கள் அல்ல. சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். உள்ளும், புறமாக ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள்.
அவர்கள் மட்டுமல்ல, இருவர் குடும்பமும் அத்தனை நெருக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் உறவினர்கள் என்று நினைக்கும் அளவிலேயே இருக்கும் அவர்கள் உறவு.
அத்தை, மாமா என்று இருவரின் பெற்றோரையும் உறவு சொல்லி தான் அழைத்திருக்கிறார்கள். வெறுமே பெயருக்கு ஆண்ட்டி, அங்கிள் என்று சொல்லியது கிடையாது, அப்படி இருக்கையில் அவன் கோபத்தில், ஏதோ ஒரு கணக்கு போட்டு செய்த குளறுபடியை எப்படிச் சரி செய்யப் போகிறான். அவனுக்கே புரியவில்லை.
அவன் கண்கள் திரும்பவும் அலைபேசிக்கு தாவியது, ஹனிமூன் பேக்கேஜ் மெயில் செய்திருந்தான் தேவா. தாய்லாந்தில் இருக்கும் புக்கிட் (Phuket) தீவில், அவர்கள் ஏழு நாட்கள் தங்க, கடலை தொட்டுக் கொண்டிருந்த பீச் ரிசார்ட் ஒன்றில் ஹனிமூன் சூட் பதிவு செய்து, அதற்குரிய முழுத் தொகையையும் செலுத்தி இருந்தான்.
அதனுடன் அவர்கள் அங்குச் செல்வதற்கான ப்ளைட் டிக்கெட் மற்றும் விசாவையும் இணைத்திருந்தான்.
‘திமிர் புடிச்சவன், இவன் கிட்ட யார் இப்போ ஹனிமூன் பேக்கேஜ் கேட்டா?’ செல்லக் கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டான்.
அத்தனையும் நேர்த்தியாகத் திட்டமிட்டு, விசா, டிக்கெட், தங்குமிடம் என அனைத்தையும் தேவா ஏற்பாடு செய்திருந்ததைப் பார்க்கையில் அவனுக்கே மலைப்பாக இருந்தது.
திருமணப் பதிவிற்காக வாங்கிய அவர்களின் ஆவணங்களை வைத்தே விசா முதற்கொண்டு ஏற்பாடு செய்த அவனது புத்திசாலி தனத்தை மெச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவனால்.
அதே நேரம் இன்னொரு மனம், ‘பாரு டா, நீ என் காதலை பிரிச்சு விட வேலை பார்க்குற. ஆனா, நான், உன் காதலை சேர்த்து வச்சு, உன்னை ஹனிமூன் அனுப்பற வேலை வரை பார்த்து வச்சு இருக்கேன்’ என்று சொல்வதைப் போலிருந்தது.
அது தேவாவின் குணமல்ல என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். தேவா திருமணப் பரிசாக இதை முன்பே கொடுத்தும் விட்டான். டிக்கெட் மற்றும் விசா தான் இப்போது போடப்பட்டிருந்தது.
அவனுக்கு நண்பனின் மேல் இருக்கும் கோபத்தையும் பொருட்படுத்தாமல் செய்திருக்கிறான். முன் எப்போதையும் விட நண்பனின் மேல் அன்பும், தோழமையும், மரியாதையும் அதிகரிக்கவே செய்தது.
அந்த மெயிலிற்குப் பதில் அனுப்பாமல் அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்தான்.
தேவாவை பற்றிச் சிந்திக்கையில் மனம் தானாகவே பல்லவியிடம் சென்று நின்றது. இனி வரும் காலங்களில் இது தான் நிரந்தரம் என்பது அவனுக்கு உரைக்க வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தே விட்டான் சூர்யா.
தேவாவை போலவே பல்லவியும், அவனுக்குக் குட்டி குட்டியாக எதையேனும் பரிசளித்துக் கொண்டே இருப்பாள்.
அவள் உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வைக்கும் பணம் எல்லாம் வீட்டினருக்கு பரிசு பொருட்கள் வாங்க தான் உபயோகித்து இருக்கிறாள்.
வேலைக்குச் சென்ற பின்பும் அதையே தான் செய்கிறாள். சேமிப்பு போக அவர்களுக்குத் தான் செலவழிக்கிறாள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, அவனது இருபத்தி ஒன்பதாவது பிறந்த நாளுக்குக் கூடப் பாஸ்ட் ட்ராக் (Fast Track) புதிதாக வெளியிட்டிருந்த கைக் கடிகாரத்தை வாங்கிப் பரிசாக அளித்திருந்தாள்.
அப்பாவிற்கு அடுத்து ஹீரோவாகத் தங்கைகள் பார்ப்பது அண்ணனை தான் என்று அவனுக்குத் தோன்றியது. சிறு வயதில் இருந்தே அப்பா இல்லாத நேரங்களில் எல்லாம் அவனிடம் வந்து தான் நின்றிருக்கிறார்கள் அவனது தங்கைகள் இருவரும்.
அவனோடு வெளியில் செல்லும் போது தங்களின் இயல்பை தொலைக்காமல், எதற்கும் அஞ்சாமல் சிறு பட்டாம் பூச்சியைப் போலப் படபடத்துக் கொண்டே வருவார்கள்.
ஒருமுறை, பொது வெளியில் சங்கவியை ஒருவன் தவறாக உரசி விட, அடுத்த நொடியே அவனை ஓங்கி அறைந்திருந்தாள் சங்கவி. அவ்வளவு தைரியமாக அடித்து விட்டு,
“நீ கூட இருக்கத் தைரியத்தில் தான் அடிச்சேன் சூர்யா ண்ணா. காப்பாத்து டா” என்று அவனிடம் முணுமுணுக்க, அன்றைக்கு அந்தப் பொறுக்கியை நன்றாகக் கவனித்து அனுப்பினான் சூர்யா.
அவன் திரும்பி பல்லவியைப் பார்க்க, பெரிதாகப் புன்னகைத்து, “அக்கா அடிச்ச மாதிரி தான் நானும் அடிப்பேன் ண்ணா. ஆனா, அடிச்சிட்டு அவளைப் போலப் பயப்பட மாட்டேன். தப்பு பண்ண அவனே பயப்படாத போது, நான் ஏன் பயப்படனும்?” என்று முகத்தை நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்து சொன்னாள் பல்லவி. அப்படியே தேவாவை போல, இந்தப் பாடமும் அவன் கற்றுத் தந்ததாகத் தான் இருக்கும் என்பது புரிந்து அன்றைக்குச் சிரித்தான் சூர்யா.
தங்கைகளை மனதில் நினைக்கும் போதே, பாசத்துடன் தலைக் கோதி விடும் ஆவல் மனதினுள் எழுந்தது அவனுக்கு.
தேவாவின், “எம்மா, பாசமலரே” எனும் கேலியான அழைப்பில் தான் எத்தனை உண்மை இருக்கிறது.
அதிலும், இந்தக் கடைக் குட்டி தங்கைகள் அண்ணனை அப்பாவின் பிரதி பிம்பமாகத் தான் பார்க்கின்றனர். அண்ணனின் கைப் பிடித்து நடை பழக மட்டுமல்ல, உலகையும் அவர்கள் பார்வையிலேயே பார்க்கத் தொடங்குகின்றனர்.
“உலகின் ஓட்டு மொத்த ஆண்களின் ஒரு சாம்பிளா தான், வீட்டு ஆண்களை, பெண்கள் பார்ப்பாங்க சூர்யா. முதலில் நாம சரியா இருந்தா தான், வெளியில் சந்திக்கும் ஆண்களைத் துணிவோடு எதிர் கொள்ள நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தைரியம் வரும். வீட்டில் நாம கொடுக்கத் தவறுற அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் வெளியில தேடி ஏமாந்து போற பெண்கள் தான் இங்க அதிகம். அவங்க வாழ்க்கையில் வர்ற ஆண்களைப் பத்தி, அது நட்போ, காதலோ, மரியாதை நிமித்தமான உறவோ.. அதை நம்மகிட்ட ஷேர் பண்ணிக்க வைக்கறதில் தான் இருக்கு நம்ம உறவின் சக்சஸ்.” தேவாவின் வார்த்தைகள் இப்போதும் அவன் காதில் எதிரொலித்தது. புன்னகைத்துக் கொண்டான் சூர்யா.
தங்கைகள் சமயங்களில் அவர்களுக்குத் தாயுமாகி விடுகின்றனர். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் சுணங்கி படுக்கும் போதெல்லாம், அருகில் அமர்ந்து கதை பேசி அவனை உணவும், மருந்தும் உண்ண வைத்த தங்கைகளின் பாசம் இப்போதும் அவனைக் கண் கலங்க வைத்தது.