மழை மேகம் – 7 (3)

பல்லவிக்குக் காலையில் எழுந்ததில் இருந்து நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. அம்மாவிற்கு உதவினாள். சங்கவியின் குழந்தையைக் கவனித்துக் கொண்டாள்.

மாலை அனைவருக்கும் டீ, காபி, சிற்றுண்டி கொடுத்து விட்டு, அதற்கு மேல் முடியாது என்று தனது கையில் இருந்த காஃபியுடன் மாடியேறி விட்டாள்.

அம்மாவின், “மழை வர மாதிரி இருக்குப் பல்லவி. மேல போகாதடா” என்ற எச்சரிக்கை குரலை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு வாய் காஃபியை அருந்தி விட்டு, வானை நிமிர்ந்து நோக்கினாள். மழை மேகங்கள் கருமையும், வெண்மையும் கலந்து ஒரு மாடர்ன் ஓவியத்தை வானில் தீட்டியிருந்ததை ரசித்துப் பார்த்தாள்.

விழிகளை மெல்ல தாழ்த்த, எதிர் பக்கம் நான்காவது மாடியில் இருந்து தேவா அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அன்று காலையில் தந்தை அவளிடம் பேசிய கணங்களை நினைவு கூர்ந்தாள். தேவாவிடம் பேசு என்று அவளை உந்தி தள்ளியது அவள் மனம். ஏனோ, படபடப்பாக வந்தது.

அவளுக்கு நினைவு தெரிந்து அவன் அறியாமல் அவள் வாழ்வில் எதுவுமே நடந்தது இல்லை. பல முக்கிய முடிவுகளை அவளுக்காக அவன் தான் எடுத்திருக்கிறான்.

எந்தப் படிப்பு, எந்தக் கல்லூரி, எந்த வண்டி, எந்த ஹாஸ்பிட்டலில் வேலைக்குச் சேர்வது, எந்த நண்பர்கள் சரி, யாரை ஒதுக்க வேண்டும்.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இன்று. அவள் வாழ்நாளுக்குமான முடிவு, அவனிடம் என்னவென்று சொல்லப் போகிறாள் அவள்.

இரு ஜோடி கண்களும் ஒன்றை ஒன்று இமைக்காமல் பார்த்திருந்தன. மெல்ல கையசைத்து, “இங்க வா” என்று சைகை காட்டினான் தேவா.

அடுத்த இரண்டாம் நிமிடம் அவன் முன், அவனோடு, அவன் வீட்டு மாடியில் இருந்தாள் பல்லவி.

அவன் முன் எவ்வித கேள்விகளும் இல்லாமல் வந்து நின்ற பல்லவியை நிதானமாகப் பார்த்தான் தேவா.

எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பட்டு சேலை அணிந்திருந்தாள். கூந்தலை தளர பின்னலிட்டு இருந்தாள். வீட்டில் பூத்த பிச்சிப் பூவை குட்டி குட்டி ரோஜாக்களாகச் சுற்றி கட்டி, பின்னலை சுற்றி ரோஜாக்களை அடுக்கியது போல வைத்திருந்தாள்.

கொண்டையிட்டு அதைச் சுற்றி வைத்திருந்தால், இன்னும் கம்பீர அழகை தந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான் தேவா.

புடவையும், பூவும் அவளை அழகியாக்கி காட்டியது. பளிச்சென்று முகத்தில் புன்னகையை மட்டுமே அலங்காரமாகக் கொண்டு, நின்றிருந்தவளின் முக வடிவை கண்களால் அளந்தான் தேவா.

நெற்றி, புருவம், நாசி, உதடுகள் என்று பார்வை பயணிக்க,

“சேலை மாத்திட்டு வரவா தேவா?” என்று கேட்டாள் பல்லவி.

திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் தேவா.

முன்னர்ப் பல முறை, “சேலையை ஹேண்டில் பண்ண தெரியலைன்னா, எதுக்குக் கட்டிட்டு அவஸ்தை படுற? போய் வேற ட்ரெஸ் மாத்திட்டு வா. உன்னோட கம்போர்ட் தான், நீ முதல்ல பார்க்கணும்” என்று கத்தி இருக்கிறான்.

இப்போது யோசித்துப் பார்த்தால் தெரிகிறது. அவன் பல்லவியிடம் எப்போதும் மென்மையாகப் பேசியதே இல்லை.

தன் மனதை கடுமையில் மறைத்தானா அவன்? அவனுக்கே விளங்கவில்லை.

“தேவா..” என்று பல்லவி அழைக்க,

“வேண்டாம். இந்தச் சேலை நல்லா இருக்கு. அழகா இருக்கப் பல்லவி” என்றான் தயக்கத்தை உதறி, நிமிர்ந்து அவன் கண்களை நேராகப் பார்த்தாள் பல்லவி.

அதிர்ச்சி, ஆச்சரியம் எனப் பலவும் மின்னலாய் ஓடி மறைந்த அவள் விழிகளில், சிறிதே வெட்கத்தையும், மகிழ்ச்சியையும் சேர்த்துக் காணவும், தேவாவின் மனதில் சாரலடிக்கத் தொடங்கியது.

பல்லவி கல்லூரி முதலாம் ஆண்டுப் படிக்கையில், ஒருவன் அவளைப் பின் தொடர்ந்து, அவர்கள் தெரு வரை வந்து,

“அழகா இருக்கப் பொண்ணே” என்று சொல்லி முடிப்பதற்குள் தேவா அவனைப் பின்னிருந்து கைப் பிடித்து நிறுத்த, சூர்யா, அவனைக் கேள்வியே கேட்காமல் அடித்தது நேரம், காலம் தெரியாமல் இப்போது நினைவிற்கு வந்து அவனுக்குச் சிரிப்பை மூட்டியது.

“அதிசயமா இன்னைக்குப் பார்த்து, அழகா இருக்கேன்னு சொல்லிட்டு, சிரிக்கற? நக்கலா?” என்று கொதித்த பல்லவி, அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி அவனை அடிக்க, அவன் தலை மேல் புத்தகத்தை உயர்த்திய நொடி, புத்தகம் கவிழ, சொற்களைக் கொட்டியதைப் போலக் கொட்டத் தொடங்கியது மழை.

மனதில் அடித்த சாரல், நிஜ மழைச் சாரல் தான் என்பதை உணர்ந்து பெரிதாகச் சிரித்தான் தேவா.

மழையைக் கண்டதும், அவன் நனைய விட மாட்டான் என்று உணர்ந்து வேகமாக நகரப் போனவளின் கரம் பற்றித் தடுத்து நிறுத்தி, தூறலில் நனைந்து கொண்டு, விழி மூடாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தேவா.

மழைத் துளி முத்து முத்தாக இருவர் மேலும் விழுந்து கரையத் தொடங்கி இருந்தது.

மழையில் நனைந்து கொண்டிருந்தவர்களும் ஒருவரில் ஒருவர் கரைந்து கொண்டு தான் இருந்தார்கள்.

மழை மெல்ல வலுக்கத் தொடங்கவும், மெல்ல அவளை இழுத்துக் கொண்டு, மாடியில் செடிகளுக்காகப் போட பட்டிருந்த கூரை அமைப்பின் கீழ் வந்து நின்றான் தேவா.

“மழை அழகு தான், இல்ல தேவா?” என்று அவள் கேட்க,

“ம்ம், உன்னைப் போல” என்றான் தன்னிச்சையாக,

“ரெண்டு நாள்ல வெளியூர் போறேன் பல்லவி. வந்ததும், உன்கிட்ட பேசணும்” என்றான்.

அவன் குரல் பேதத்தை, வார்த்தைகளை அழுத்திய விதத்தைப் புரிந்து கொண்டு, “சரி, தேவா.” என்றவள்,

“நான் எங்கேயும் போகப் போறதில்ல. இங்கேயே தான் இருப்பேன். உனக்கு எப்போ பேசத் தோணுதோ. அப்போ பேசு தேவா” என்றாள், அவன் கண்களைப் பார்த்து, ஒருநொடி அவள் கண்களிலும், வார்த்தைகளிலும் இருந்த அர்த்தத்தில் தடுமாறிப் போனான் தேவா.

“நீயும் இங்க தான் இருக்கப் போற, நானும் இங்க தான் இருக்கப் போறேன்” என்ற அவன் வார்த்தைகளே, அவனுக்கு அப்போது தான் மண்டையில் உரைத்தது.

அன்றைக்குப் பல்லவி அவனை மெலிதாய் அதிர்ந்து, விரிந்த புன்னகையுடன் பார்த்திருந்தது நினைவில் வந்தது.

என்ன அர்த்தத்தில் அன்று அதைச் சொன்னேன் நான்? மீண்டும் தன்னையே கேள்வி கேட்கத் தொடங்கி இருந்தான் தேவா.

“நீ திரும்பி வர எத்தனை நாள் ஆகும் தேவா?” என்று பல்லவி கேட்க,

“ரெண்டு வாரம் பல்லவி” என்றான். அவள் முகம் கசங்கிப் போனது. சரி என்று தலையை மட்டும் லேசாக அசைத்தாள்.

அதன் பின் வந்த நிமிடங்கள் இருவரும் மௌனமாய் மழையைப் பார்த்திருந்தனர்.

மழை பூமியில் மட்டுமல்ல, அவர்களுக்குள்ளும் பல இரசாயன மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

மழையைப் போலவே தங்களுக்குள் நிகழும் மாற்றத்தையும் இருவரும் வெகு இயல்பாக ஏற்றுக் கொள்ள முயன்றனர்.

“பாடேன் தேவா” என்று பல்லவி தயக்கத்துடன் கேட்க, தலையைத் திருப்பி அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான் தேவா.

மழை வந்தால் வித்யாவும், பல்லவியும், அவனையும் அவர்களுடன் மழையில் நடனமாட அழைப்பார்களே தவிர, இது போல அவள் பாட சொல்லிக் கேட்டு பல வருடங்கள் ஆனதால், இனிமையாக அதிர்ந்தான் தேவா.

மாடி சுவரில் சாய்ந்த வாக்கில், பல்லவியின் பக்கம் திரும்பி, தன் வலக் கரத்தால் அவள் முகம் தாங்கி, மென்மையாகப் பாடினான் தேவா.

“இதோ… இதோ.. என் பல்லவி… எப்போது கீதமாகுமோ.

இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ…

இதோ.. இதோ.. என் பல்லவி..”

அவன் கண்களில், அவன் குரலில், அவன் பாடிய வரிகளில் கட்டுண்டு, கண் இமைக்காமல் அவனையே கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தவளை, இன்னும் பதினைந்து நாட்கள் காத்திருக்காமல், அந்த நொடியே அவன் மனதை சொல்ல இருந்தவனை… கலைத்தது, கீழிருந்து வந்த,

“பல்லவி, பல்லவி மேலயா இருக்க? தேவா, பல்லவி வந்தாளா பா?” எனும் கனிமொழியின் அழைப்பு.

அப்போதும் அவன் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

மெலிதாக இதழ் பிரித்துப் புன்னகைத்து, “போ, பல்லவி. நாம இங்கேயே தான் இருக்கப் போறோம். பேசலாம்” என்றான் தேவா.

அவனைத் திரும்பி, திரும்பி பார்த்தபடியே படியிறங்கிப் போனாள் பல்லவி.

“அம்மா தேடினாங்க பாரு டா பல்லவி” என்று அவன் அம்மா பல்லவியிடம் சொல்வது, தேவாவிற்கு மாடி வரை கேட்டது.

சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். பல்லவி விட்டு சென்ற பிச்சியின் மனம் இன்னும் அவனைச் சுற்றியே மிச்சம் இருக்க, அவனுக்கு அவளே அங்கிருப்பது போலிருந்தது.

ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து அவளைச் சுவாசித்துக் கொண்டான் தேவா.

இங்கே வீட்டிற்குள் நுழைந்த பல்லவி, அங்குச் சோஃபாவில் சட்டமாக அமர்ந்திருந்தவனை எரிச்சலுடன் பார்த்தாள்.

அண்ணன் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு. அந்தக் கோபத்தில் அவனைக் காலையில் இருந்து தவிர்த்திருந்தாள்.

இப்போதும் அவன் மேல் துளிர்த்த கோபத்துடன், அம்மாவை தேடி உள்ளே சென்றிருந்தாள் அவள்.

சற்று முன் அவர்களை நனைத்த மழை, அவர்களைக் காதல் மழையிலும் நனைக்குமா?

அவளின் பிரிய மழையைப் போல், அவளின் தேவாவும் காதல் மழையைப் பொழிவானா?

ஒருபக்கம் அவளின் திருமணப் பேச்சு, மறுபக்கம் தேவா… திடீரென்று வேறொரு முகம் காட்டும் அவளின் அண்ணன் சூர்யா.

என்ன நடக்கப் போகிறது???

மழை நனைக்கும்….

error: Content is protected !!
Scroll to Top