சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது.
முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது, இப்போது நினைக்கையிலும் மனதை பிசைந்தது.
அவன் செய்த காரியம் பல்லவிக்குத் தெரிந்தால் அம்மா, மனைவி போன்று நிச்சயம் அடிக்க மாட்டாள். ஆனால், தேவாவை போலவே அவனை அடிபட்ட பார்வை பார்ப்பாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
அவன் ஏதோ ஒன்றை நினைத்துச் செய்யப் போக, இறுதியில் எதிர்பார்த்ததை விட அவன் தான் அதிகம் உடைந்துப் போய் நிற்கிறான். அந்தக் குளிர்கால வேளையிலே அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
“எதையும் யோசிக்காம பண்ணிட்டு, இப்போ என்ன பண்றதுன்னு என்னைக் கேட்கற சூர்யா, நான் என்ன செய்யட்டும் இப்போ?” என்று கோபத்துடன் வித்யா படபடக்க,
“ப்ச், தேவாவை சீண்டி விடத் தான் அப்படிப் பண்ணேன். பிரவீன் கூடப் பல்லவிக்குக் கல்யாணம் பேசினா, கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் கோபமாவாங்க. அப்பவாவது அவங்க மனசு அவங்களுக்குப் புரியும். இல்லனா, யாராவது ஒருத்தர் கடுப்பாகி, இந்தக் கல்யாணத்தை நிறுத்தி, அவங்களுக்குள்ள இருக்கக் காதலையும் ரியலைஸ் பண்ணி, ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்குவாங்கன்னு கணக்குப் போட்டேன். நடக்குமா வித்யா?” என்றவனைச் சுவாரசியமாகப் பார்த்த வித்யா,
“தட்ஸ் அ மொக்கை ஐடியா. ஆனாலும், உன்னை அடிச்சு என் கோபத்தை ஏற்கனவே தீர்த்துட்டேன். சோ, இந்த மொக்கை ஐடியாக்கு உன்னை மன்னிச்சு விடுறேன்” என்றாள் இறுக்கம் தளர்ந்து, மெலிதாகச் சிரித்துக் கொண்டே.
“ம்ம்ம்” என்றான் சூர்யா.
“சரி, இந்தப் பிரவீன் குடும்பம் அவங்களை எப்படிச் சமாளிக்கறது?”
“நீ என்ன வித்யா நினைச்சுட்டு இருக்க? அப்பா பல்லவியைக் கேட்காம, அவ சம்மதம் இல்லாம, அவ கல்யாணத்தை நான் சொல்றது வச்சு முடிவு பண்ணுவாருன்னா? வாய்ப்பே இல்ல” என்று சூர்யா பட்டென்று சொல்ல, மௌனமாய் அவன் முகம் பார்த்திருந்தாள் வித்யா.
“அம்மா அடிச்சதுக்குக் கூட அது தான் காரணம். நீ பாட்டுன்னு அவளுக்குச் சம்மதம்னு சொல்லிட்டு போய்ட்ட. அவளை ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா? நீ அவ கிட்ட இதைப் பத்தி பேசலைனு பாரதியே சொல்றா. ஒருவேளை பல்லவி பிடிக்கலை சொன்னா? இனி என்ன சொல்லி, இந்தக் கல்யாண பேச்சை தவிர்க்கறது? கொஞ்சமாவது அண்ணன்ங்கிற பொறுப்பு இருக்கா உனக்கு? பல்லவி எழுந்து வரட்டும். உனக்கு இருக்கு. தேவையில்லாம பாரதிக்கும் அவங்க வீட்ல சங்கடம்”
கஸ்தூரி காலையில் சொல்லி புலம்பியதை அப்படியே சொன்னான் சூர்யா. வித்யாவிற்கு அந்தக் காலை வேளையிலும் தலைவலிக்கான அறிகுறிகள் தென்பட்டது. இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
“பிரவீன் வீட்டை பாரதி பார்த்துப்பா. அவ பேசி புரிய வைப்பா. நீ கவலையை விடு” என்றான் அவன்.
“சரி சூர்யா. நீ சொன்னபடி, தேவா, பல்லவி ரெண்டு பேரும் சேர்ந்து இதை ஹேண்டில் பண்ணட்டும். லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச். பல்லவி வேணாம்னு சொன்னா, மாமா கல்யாண பேச்சை வளர விட மாட்டார். பார்ப்போம். எல்லாம் நல்லபடியா நடக்கணும். ஏதாவது சொதப்புச்சு, அப்புறம் நீ நல்லபடியா நடக்க முடியாது. ஞாபகத்தில் வச்சுக்கோ.” என்றாள் முடிவாக.
சூர்யா எதையோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டே தலையை அசைக்க, பாரதியும், சங்கவியும் கையில் காஃபியுடன் மாடிக்கு வந்தனர்.
உடனேயே பேச்சு மற்ற விஷயங்களுக்குத் தாவி இருந்தது.
“தேவாகிட்ட எதுவும் சொல்லாத.” என்று வித்யாவிடம் மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் சொன்னான் சூர்யா.
“ஓகே. ஆனா, நீயும் அவனை இனி ஹர்ட் பண்ணாத.” என்று விட்டு, கீழிறங்கி போனாள் வித்யா.
மனைவியும், தங்கையும் பேசிக் கொண்டிருக்கச் சூர்யா மௌனமாய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கே வீட்டிற்குள் நுழைந்த வித்யா, முதல் வேலையாக அண்ணனின் அறையைத் தான் பார்த்தாள்.
அடுப்படியில் இருந்து காஃபி கோப்பையுடன் வெளியில் வந்த கனிமொழி, “இப்ப தான் எழுந்தியா வித்யா? இரு பால் சூடா தான் இருக்கு. உனக்கும் காஃபி கலக்கறேன். நீ இதைக் குடி” என்று கையில் இருந்ததை அவளிடம் நீட்ட,
“நீ குடி மா. நான் எனக்குக் கலந்துக்கறேன்” என்றவள், பல்லவி வீட்டுக்கு சென்றதை அவரிடம் சொல்லவில்லை.
அம்மாவின் கைப் பிடித்து அவரை இருக்கையில் அமரச் செய்தாள்.
“அண்ணா எழுந்தாச்சா? அவனுக்கும் காஃபி கலக்கவா?” என்று அவள் கேட்க,
“அவன் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்பிட்டல் கிளம்பினான் வித்யா. என்னமோ அவன் முகமே சரியில்ல” என்றார் அவர்.
“ஓ, சரிங்க மா” என்று அடுப்படிக்குள் சென்று மறைந்தாள் வித்யா.
காரை மருத்துவமனை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் தேவா. எத்தனையோ நாட்கள் இதே காரில் பல்லவி வெகு யதார்த்தமாக அவனோடு அமர்ந்து வந்தது நினைவில் வந்தது. எப்போதும் அவளை முன்னிருக்கையில், தனக்குப் பக்கத்தில் அமரச் சொன்னது நினைவில் வந்து அவனைப் புன்னகைக்கச் செய்தது.
பல நாட்கள் அவன் முகம் பார்த்தே அவன் சோர்வாக இருப்பதை உணர்ந்து, “இன்னைக்கு நான் ட்ரைவ் பண்றேன் தேவா” என்று காரை பல்லவி செலுத்தியது என்றைக்கும் உணராத இதத்தை இன்றைக்கு அதை நினைக்கையில் தந்தது.
அவள் காரை ஓட்டும் பொழுதுகளில் வேண்டுமென்றே வேகத்தைக் கூட்டி, அவனது கோபத்தைக் கூட்டி, அவனைக் கத்த செய்ததை நினைத்து, சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.
“இவ்ளோ கோபம் ஆகாது டாக்டரே” என்ற பல்லவியின் வார்த்தைகள், இப்போது குறும்பாக அவன் காதில் எதிரொலித்தது.
பல்லவி எனும் பெயரும், அவள் முகமும் மனதிலும், கண்களிலும் வலம் வர, முகம் முழுக்க நிரந்தரப் புன்னகையைப் பூசிக் கொண்டான் தேவா.
அன்றைய தினம் வந்த குழந்தைகள் அத்தனையும், அவனுக்கு அவர்கள் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையைக் கிளப்பி விட, முதலில் மெலிதாக அதிர்ந்து, பின் இனிமையாக உணர ஆரம்பித்திருந்தான்.
“உன் ரூம் முழுக்க ஒரே பாப்பா படமா இருக்கு. இல்லனா, அம்மாவும், குழந்தையுமா இருக்கு. இந்த அப்பா குழந்தையை அழகா தூக்கி வச்சு இருக்கற மாதிரி ஃபோட்டோ வைக்கலாம் இல்ல? அவங்க குழந்தையை அதிசயமா பார்த்திட்டு இருக்க ஃபோட்டோ வைக்கலாம், இல்ல?” என்று பல்லவி எப்போதோ சொன்னது நினைவில் வர, மொபைலை எடுத்து அவனுக்குப் பரிச்சயமான, புகைப்படக் கலைஞனாக இருக்கும் நண்பனை அழைத்திருந்தான்.
அன்று மாலை அவன் மருத்துவமனையை விட்டு வெளியில் வரும் போது, அவனது அறையில், இரு கரங்களிலும் பூங்குவியலை போலக் குழந்தையை ஏந்தி, அதை மலர்ந்த புன்னகையுடன் அதிசயித்து, விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளம் தந்தையின் புகைப்படம் நேர்த்தியாகச் சட்டம் செய்யப்பட்டுச் சுவரை அலங்கரித்திருந்தது.
குழந்தையை அணைத்தபடி உறங்கும் தந்தையின் புகைப்படம், தோளில் குழந்தையைச் சுமக்கும் புகைப்படமும் ஒரு பக்க சுவரை அழகாக்கிக் கொண்டிருந்தது.
அந்தப் புகைப்படங்களோடு நின்று, அவனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான் தேவா.
வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் மனது, மீண்டும் பல்லவியிடமே போய் நின்றது. முன்பும் அவளை அடிக்கடி நினைப்பான் தான். ஆனால், இப்படிக் கண் இமைக்கும் நேரமெல்லாம் அவள் முகமே கண் முன் வருவது அவனுக்குப் புதிது.
அவனது மாற்றங்கள் அவனுக்கு நன்றாகப் புரியவே செய்தது.
“மழை வரப் போகுதே… துளிகளும் தூறுதே… நனையாமல் என்ன செய்வேன்” காரில் ஒலித்த பாடல் வரிகள் அவனை விசிலடிக்க வைத்தது.
“யூ ஆர் மை டெஸ்டினி பல்லவி. என் மழை நீ. உன்னிடம் நனையாமல்.. எப்படித் தப்பிப்பேன்” மனம் கொஞ்சம் கொஞ்சமாகப் பல்லவியைச் சரணடைய தொடங்க, சத்தமாகத் தனக்குத் தானே பேசிக் கொண்டான் தேவா.
“உன்னிடம் தொலையாமல் எங்கே போவேன்?” வரிகளைத் தனக்கு ஏற்றார் போல மாற்றிப் பாடிக் கொண்டிருந்தான் தேவா.
“மழை என்றால் மண்ணைத் தானே வந்து சேரும்” கரங்கள் ஸ்டியரிங்கில் தாளம் போட்டன.
“எஸ். மழை மண்ணைச் சேர்ந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது டா சூர்யா. இந்தத் தேவா பல்லவியைச் சேர்ந்தே தீருவான்.” சத்தமாகக் கத்தினான். தான், தன் இயல்பை மீறி நடந்து கொள்வதை நினைத்து, மீண்டும் சத்தமாகச் சிரித்தான்.
அவனையே அவனுக்குப் பிடிக்கத் தொடங்கி இருந்தது. காதலை ரசிக்கத் தொடங்கி இருந்தான். தன்னுள் புதிதாக மலர்ந்து மணம் வீசிய காதலெனும் மாய உணர்வை விரும்பத் தொடங்கி இருந்தான்.
பல்லவி, தேவாவை அவன் உலகம் மறந்து இனிமையான பல பல்லவிகளை முணுமுணுக்கச் செய்திருந்தாள்.
முந்தைய இரவு தூக்கம் இன்றித் தவித்த தேவா, விடியலில் தெளிவாகி இருந்தான்.
பல்லவி இனி தேவாவிற்குத் தான், என்ற முடிவுடன் எழுந்து வேலைக்குக் கிளம்பினான்.
இப்போது வீட்டை அடைந்து காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு இறங்கினான். கண்கள் தானாக எதிர்பக்கம் பார்த்தது. பல்லவியைத் தேடியது. அவளைக் காணாது முகம் சுளித்து, வீட்டிற்குள் நுழைந்தான் தேவா.