மழை மேகம் – 7 (1)

சூரியன் மெல்ல சோம்பல் முறித்து, வெளியில் வருவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மழைக்காலக் காலைப் பொழுது. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இன்னும் இருள் பிரியா விடிகாலை போலவே காட்சி அளித்துக் கொண்டிருந்த அப்பொழுதை ரசித்துக் கொண்டு கையில் காஃபியுடன் மாடி ஏறினான் சூர்யா.

பத்து நிமிடம் கடந்திருக்க, பின்னே கேட்ட காலடி சத்தத்தில் திரும்பி பார்த்தான்.

வித்யா தான் காளி அவதாரம் எடுத்து நின்றிருந்தாள்.

“என்னடா பண்ணி வச்சிருக்க?” அடித்தாள்.

“அச்சோ, அம்மா. ஆளாளுக்கு என்னைப் போட்டு அடிங்க. புது மாப்பிள்ளை வித்யா நானு” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்த வித்யா,

“என்ன சொன்ன? ஆளாளுக்கா? அப்படின்னா? வேற யார் உன்னை அடிச்சா?” என்ற அவளின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை அவன்.

“ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?” என்று வித்யா மீண்டும் கேட்க, “அம்மா…” அவன் சொல்லி முடித்திருக்கவில்லை. அதற்குள் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.

கஸ்தூரி எப்போதும் பிள்ளைகள் தவறு செய்தால், அவர்களைக் கண்டிக்கத் தவறியதேயில்லை. கை நீட்டி அடிக்க மாட்டாரே தவிர, வார்த்தைகளில் கடுமையாகத் தண்டிப்பார். அப்படியும் அடிக்கிறார் என்றால் அவர்கள் செய்திருக்கும் தவறு பெரிது என்று அர்த்தம்.

ஆனால், வித்யாவுக்கு நினைவு தெரிந்து கஸ்தூரி பிள்ளைகளிடம் கை நீட்டியதேயில்லை. இன்று அவரே முப்பது வயதை எட்டும் மகனை, நேற்று தான் திருமணமாகி இருந்த மகனை அடித்திருக்கிறார் என்றால், அவரின் கோபத்தின் அளவு புரிந்து, சூர்யாவின் நிலையை நினைத்து வருத்தத்துடன் சிரித்தாள் அவள்.

“அடி பலமா?” என்று அவள் மேலும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க,

“காஃபி கேட்க போனேன். கையில இருந்த தோசை கரண்டியில போட்டாங்க பாரு, நாலு போடு. என் கை பஞ்சர் ஆகிடுச்சு வித்யா” என்றான் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு,

“அப்புறம்..?” என்று அவள் கேட்க,

“என்ன அப்புறம்?” என்று அவள் கண் பார்க்காமல் அவன் கேட்க, பார்வையை அவனில் பதித்து அமைதியாய் கையைக் கட்டிக் கொண்டு நின்றாள் வித்யா.

“அம்மா மட்டும் தான், அடிச்சாங்க.” என்று அவன் சொல்ல, அவனை நம்பாத பார்வை பார்த்த வித்யா,

“பொய் சொல்லாத சூர்யா. உன்னை எனக்குப் பிறந்ததில் இருந்தே தெரியும்” என்க,

முகத்தைத் திருப்பி, “என் புதுப் பொண்டாட்டி” என்று சிறு குரலில் முணுமுணுத்தான் சூர்யா.

அவ்வளவு தான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.

“பாரதியா? ஹா, சூர்யா… அம்மா, புதுப் பொண்டாட்டி. ரெண்டு பேரையும் ஒரே நேரத்தில் வெறுப்பேத்தி அடி வாங்கி இருக்கப் பாரு. ஐ ஆம் பிரவுட் ஆஃப் யூ சூர்யா” சிரிப்பில் சிந்தியது வார்த்தைகள்.

“எல்லாம் என் நேரம்” முணுமுணுத்தான்.

“ஆமா, ரெண்டு பேர் கிட்டயும், எதுக்கு அடி வாங்கின?”

“நீ எதுக்கு அடிச்சியோ, அதுக்குத் தான் அவங்களும் அடிச்சாங்க” என்று கடுப்புடன் சொன்னவனை, மேலும் கேலி செய்து சிரிக்கும் எண்ணம் மிகுந்தாலும், அதைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அவனை அழுத்தமாகப் பார்த்தாள் வித்யா.

“உனக்குத் தேவா மேல என்ன கோபம்? ஏன் இப்படிப் பண்ண சூர்யா? இல்ல, பல்லவி மேல கோபமா? என்ன தான் உன் பிரச்சினை? ரெண்டு பேருமே உனக்கு உயிர். அப்படி இருக்கும் போது, தேவா மனசு உனக்குத் தெரியாதா சூர்யா? ஏன்…” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பட்டென்று பதில் சொன்னான் சூர்யா.

“என் தங்கச்சி மேல எனக்கு என்ன கோபம் இருக்கப் போகுது. எல்லாம் உன் நொண்ணன் மேல தான் எனக்குக் கோபம்…” விறைப்பாக அவன் சொல்ல, அவனிடம் நொடிப் பொழுதில் ஏற்பட்ட மாற்றத்தை கவலையுடன் பார்த்தாள் வித்யா.

“என்ன சூர்யா நடந்துச்சு? ஏன் இவ்ளோ கோபம்?” அவள் கேட்டதும் படபடவென்று நடந்ததை மறைக்காமல் அவளிடம் ஒப்பித்திருந்தான் சூர்யா.

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த வித்யாவின் கண்களில் பல்வேறு உணர்ச்சிகள் நாட்டியமாடிக் கொண்டிருந்தது.

அவன் சொல்லி முடித்ததும், மிகவும் நெகிழ்ந்தவளாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

“வித்யா…” என்று சூர்யா அழைக்க,

“இதுக்கு நியாயமா பார்த்தா, நீ என் அண்ணனை பாராட்டி, கொண்டாடி இருக்கணும் சூர்யா” என்று அவள் சொல்ல, கடுப்புடன் அவளை முறைத்தான் அவன்.

“ஐ ஆம் வெரி பிரவுட் ஆஃப் தேவா. ரொம்ப ரொம்ப. அவனை என் அண்ணன்னு நினைக்கவே பெருமையா இருக்கு” என்றாள் உணர்ச்சி வசப்பட்டு.

அவளைக் கண்ணை உருட்டி விசித்திரமாகப் பார்த்த சூர்யா, “உனக்குக் கோபம் வரல?” என்று கேட்க,

“வரலை. வரவும் வராது” அழுத்தமாகச் சொன்னாள் வித்யா.

“ஒரு பொண்ணைக் கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணா காதல் வந்திடும். அவ கையைப் பிடிச்சு இழுத்து வம்பு பண்ணா காதல் வந்திடும். அவ விருப்பமே இல்லாம அவ மேல எருமைமாடு மாதிரி விழுந்து முத்தம் கொடுத்தா காதல் வந்திடும்னு மூளையை அடகு வச்சுட்டு சுத்துற ஆண்களுக்கு மத்தியில, என் அண்ணன், உன் நண்பன் தேவா நல்லவன் தானே சூர்யா?”

“சொல்லு? பெண் உடம்பை இன்னமும் ஒரு போகப் பொருளா பார்க்கறவங்க மத்தியில, அவ மனசை பத்தி யோசிக்கறான் இல்ல? தன்னால அவளுக்கு ஒரு நல்ல கணவனா இருக்க முடியுமான்னு யோசிக்கறான் இல்ல? பயப்படுறான் இல்ல? பதறுறான் இல்ல? இந்தக் காலத்தில் யார் இதை எல்லாம் யோசிக்கறா சூர்யா?”

“கற்பழிச்சா காதல் வந்திடும், கடத்தி தாலி கட்டிட்டா, கட்டாயத் தாலி கட்டிட்டா காதல் வந்திடும். அதனால் பெண் மனசை, அவ உடம்பை ஜெய்ச்சுட முடியும்னு நம்புற முட்டாள் ஆண்களுக்கு மத்தில என் அண்ணன் எவ்வளவு நல்லவனா இருந்தா, தன் கண் முன்னாடியே இருபத்தி மூணு வருஷமா இருக்க ஒருத்தியை கட்டி அணைச்சது இல்ல. இனியும் முடியுமான்னு பயப்படுவான்? அது, உனக்குத் தப்பு? இல்ல?”

“அவனைப் பார்த்து மறைமுகமாக, அசிங்கமா கேட்டு இருக்க நீ? இல்ல சூர்யா?”

“அப்படி இல்ல வித்யா, அந்நேரம் எனக்கு அவ்ளோ கோபம்…” என்று சூர்யா தன்னை விளக்க முற்பட,

“ஒரு டாக்டரா, உன்னையும், என்னையும் விட, அவனுக்குத் தான் அதிகமா மனித உடலை, பெண் உடலை பத்தி தெளிவா தெரியும். ஆனா, அவனைப் பார்த்து என்ன கேள்வி கேட்டு இருக்க நீ?”

“அவன் டாக்டரா இருந்தா, அவனுக்குன்னு உணர்வுகள் இருக்காதா சூர்யா? பயங்கள் இருக்காதா? அவனும் மனுஷன் தானே?” என்று அவள் சூர்யாவின் கண்களைப் பார்க்க,

“சாரி” என்றான் அவன்.

“கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டிக்கு விருப்பம் இருக்கா, இல்லையானு தெரியாமயே மேல பாயுறவனுங்க தானே டா, நீங்க எல்லாம்… குற்ற உணர்ச்சியே இல்லாம மேரிட்டல் ரேப் பண்றவனுங்க இருக்க ஊருல…” அவள் சத்தத்தை முழுமையாகக் குறைத்து விட்டு சொல்ல,

“என்ன வித்யா சொல்ற?” எரிச்சலுடன் கேட்டான் சூர்யா. அவள் கடைசியாகச் சொன்னது அவன் காதில் விழுந்திருக்கவில்லை.

“பல்லவி கூடக் காதல் வளர்க்க என் அண்ணாக்கு இடமே இல்லையா?, இல்ல, வாய்ப்பே கிடைக்கலைன்னு நீ நினைக்கிறியா சூர்யா? அவங்க ரெண்டு பேரும் நினைச்சிருந்தா திருட்டுத் தனமா உன் வீட்லயும், என் வீட்லயும் காதல் வளர்த்து இருக்க முடியும். ஆமா, தானே??”

“திருட்டுத் தனமா கட்டிப் பிடிச்சு, முத்தம் கொடுத்து, ஊரை சுத்தி…

நான் எதையும் குத்தம் சொல்லல. ஆனா, இதெல்லாம் பண்ணியிருந்தா நல்லவன்னு சொல்லி இருப்பியா? என் நண்பன் போல உண்டான்னு பெருமை பட்டு இருப்பியா? சொல்லு சூர்யா?”

மௌனமாய் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான் சூர்யா.

“எல்லோருக்கும் பொறுக்கித்தனம் பன்றவனைத் தான் பிடிக்குது. ஒருத்தன் நல்லவனா இருந்தா அவனை ஆ…”

“ஏய் வித்யா. சொல்லாத சொல்லாத. என்ன பேசுற நீ?” அலறினான் சூர்யா.

அதில் வித்யா முகத்தில் கீற்றாகப் புன்னகை உதிக்க,

“பின்ன, என்னடா? கல்யாணத்துக்கு முன்னாடியே அனுப்பவாங்கற‌ அர்த்தத்தில் கேட்டு இருக்க. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து அசிங்கப்படுத்தி இருக்க நீ”

பதட்டத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினான் சூர்யா.

“கல்யாணமாகி பல வருஷங்கள் ஆனாலும் கூடப் புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல புரிதல் வர்றதே இல்ல சூர்யா. ஆனா, வார்த்தைகளைத் தேடி கோர்த்து மனசை வெளியில் சொல்லாமலேயே, வெறுமே கண் பார்த்து, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறாங்க. அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?”

“எல்லாப் பொண்டாட்டியும், புருஷன் தன்னைத் தவிர வேற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க கூடாதுன்னு தான் ஆசைப்படுறாங்க. இங்க ஒருத்தன், அவளைத் தாண்டி யாரையும் என்னால பார்க்க முடியலன்னு உருகறான். சில நேரம் ரொம்ப நல்லவனா இருக்கறது கூடத் தப்பு தான் போல..”

“வித்யா…”

“நான் சொல்றதுல என்ன தப்பிருக்கு சூர்யா? நீயே சொல்லேன்? நீ ஒரு கம்பனிக்கு ஹெச்.ஆர் தானே? உனக்குத் தெரியாததா? சொல்லு? உன் கண் முன்னாடி எத்தனை உறவு சிக்கல்கள், எத்தனை எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபேர், துளி கூட வருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாம, தன்னோட இணையை ஏமாத்திட்டு இருக்காங்க? அதுக்கு எல்லாம் என்ன காரணம் சூர்யா?

இங்க எல்லோருக்கும் அவனவன் சந்தோசம் தான் முக்கியம். தன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கறவனா தான் இருக்காங்க எல்லோரும்.”

“அப்படி இருக்கச் சுயநல உலகத்துல என்னை விட, அவளைத் தான் நான் அதிகம் நேசிக்கிறேன்னு சொல்ற ஒருத்தன் பைத்தியக்காரனா தானே இருப்பான்?” கேள்வியுடன் அவள் சூர்யாவின் முகம் பார்க்க, பதில் இல்லாமல் தலையைத் திருப்பிக் கொண்டான் அவன்.

“உன் அண்ணனுக்கு நல்லா சப்போர்ட் பண்ற வித்யா?” என்று அவன் கோபமும், எரிச்சலும் கலந்து சொல்ல,

“ஆமா டா. என் அண்ணன். அவனுக்காக மட்டும் தான் பேசுறேன். மூஞ்சியைப் பாரு. என்னை என்ன, உன்ன மாதிரி நினைச்சியா? எனக்குப் பல்லவியும் முக்கியம். என் கையவே பிடிச்சு, என் கூடவே சுத்திட்டு இருந்த அவளை எனக்கே அவ்வளவு பிடிக்கும். இதுல தேவா அவ மேல உயிரையே வச்சு இருக்கறதுல ஆச்சரியப்பட எதுவுமே இல்ல.”

“நாம நேசிக்கறவங்களை இன்னொருத்தருக்கு மனசை கடினமாக்கிட்டு விட்டுக் கூடக் கொடுத்திடுவோம். ஆனா, அவங்களை நாமளே காயப்படுத்திட்டா? நம்மால அவங்க அழுதா? அவங்க கண்ணீருக்கு நாம காரணம் ஆகிட்டா? உயிரோட செத்துடுவோம் இல்ல? தேவாவோட பயம் அதுவா தான் இருக்கும்”

“அவங்க கல்யாணமாகி ஆறு மாசம், ஒரு வருஷம், இல்ல நாலு வருசம் கழிச்சு கூட ஒத்து வரலைன்னு பிரிஞ்சி போனா? யோசிச்சு பாரு சூர்யா. அப்போ நாம எல்லோரும் எவ்வளவு ஃபீல் பண்ணுவோம். நம்ம ரெண்டு குடும்பமும் உடைஞ்சு போய்டுவோம். ஆமா, தானே??”

“சாரி வித்யா. எனக்குப் புரியுது. நான் தான் யோசிக்காம அவனை…” சூர்யா குரல் உடைய சொல்ல,

“இல்ல சூர்யா. அந்நேரம் உன் இடத்தில நான் இருந்திருந்தாலும் அப்படித் தான் ரியாக்ட் பண்ணி இருப்பேன். தங்கச்சியா? நண்பனான்னு வரும் போது, நீ பல்லவிக்காக நின்னது, அவ்வளவு சந்தோசமா இருக்கு சூர்யா” என்றாள் மனதில் இருந்து. மெலிதாகப் புன்னகைத்தான் சூர்யா.

“இப்ப என்ன பண்றது?” என்றவனைச் சில நொடிகள் இமைக்காமல் பார்த்த வித்யா,

“அண்ணா கிட்ட அப்பவே, டேய் மடையா. பல்லவி மேல நீ வச்சிருக்க இந்த அதீத அன்பு தான் டா காதல். மத்தது எல்லாம் பூ மலர்வது போலத் தானா நடக்கும்னு சொல்லி இருக்கணும்.

எங்க? மழை நீர் போலத் தூய்மையான எதுக்குமே மதிப்புக் கிடையாது. அதைச் சாக்கடையில் கலக்க விட்டு, அப்புறம் அதுல போய்க் குதிச்சு, குளிச்சுட்டு வருவோம்” என்று வித்யா சலித்துக் கொள்ள,

“உன் அண்ணன்னு வரும் போது, என்னெல்லாம் சொல்ற நீ” என்று அவன் நகைக்க, அவளுக்குமே சிரிப்பு வந்தது.

“ஆமா, இல்ல?” என்று வாய் விட்டு சிரித்தவள்,

“பல்லவியும், நீயும் பேசிப் பாருங்கடா. மனசு ஒத்துப் போனா, உங்க ரெண்டு பேருக்கும் சரின்னா.. மேல கல்யாணத்தைப் பத்தி பேசலாம். அதுவரைக்கும் மனசைப் போட்டு குழப்பிக்காத தேவான்னு, நீ சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு..” என்று அவள் இழுக்க,

“ப்ச், நடந்ததை இனி மாத்த முடியாது. இப்ப என்ன பண்ணலாம். அதைச் சொல்லு” என்றான் சோர்வாக,

“பொண்டாட்டி கிட்ட அடி பலம் தான் போலயே?” வித்யா கேட்க,

உதடு மடித்து, வெட்கமும், சங்கடமும் முகத்தை நிறைக்கச் சிரித்தான் சூர்யா.

“பல்லவி கிட்ட கேட்காமயே… அவ கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதா, நான் பொய் சொன்னதுக்கு…” என்று அவன் முடிக்காமல் இழுக்க, வெடித்துக் கொண்டு வந்த சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாள் வித்யா.

“ஒன்றரை வருஷமா உங்களால முடியாததை, நாம தயங்கினதை, ஒரே நாள்ல, ஒன்றரை மணி நேரத்துல உங்க தங்கச்சி நடத்தி காட்டி இருக்கா. உங்க காதலை கல்யாணத்துல முடிச்சு வச்ச உங்க தங்கச்சிக்கு, நீங்க பதிலுக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க சூர்யா? இது உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று ஆதங்கத்துடன் கேட்டவளுக்கு அவன் பதில் சொல்லாமல் நிற்க, வந்த கோபத்தை அவன் மேல் காட்டி தணித்திருந்தாள் பாரதி.

அவளிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் கண்ணைக் கட்டி விட்டது அவனுக்கு.

“பாரதி எங்க?”

“தூங்கறா. நான் சீக்கிரமே எழுந்துட்டேன். குளிச்சுட்டு வெளில வந்தேன். அம்மா காஃபி கொடுத்தாங்க. பாரதி பொறுமையா எழுந்து வரட்டும்னு சொன்னாங்க. கீழ, வீடு முழுக்க ஆளுங்க இருக்காங்க. ஹால்ல பாரதி வீட்டு ஆளுங்க படுத்திருந்தாங்க. அதான் காஃபியோட மாடிக்கு வந்தேன். இப்போ உன்கிட்ட அடி வாங்குறேன்” என்றவனைப் பார்த்து புன்னகைத்தாள் வித்யா. 

error: Content is protected !!
Scroll to Top