மழை மேகம் – 6 (3)

ஆம், பாரதி தான். அவளுக்குத் தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ‌ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்குப் பல்லவியைக் கேட்கும் முன், அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியே சூர்யாவிடம் கேட்டிருந்தாள் பாரதி. அவனும் அவர்கள் நேசிக்கவில்லை என்று சொல்லவும் தான், அண்ணனுக்காக அவளைப் பெண் கேட்டது.

இருவரும் விரும்புகிறார்கள் என்று அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தால் இந்தப் பேச்சையே தன் வீட்டினரை எடுக்க விட்டிருக்க மாட்டாள் பாரதி.

அன்று மதியம் புகைப்படம் எடுக்கையில் தேவா, பல்லவியை அணைத்தது போல நின்றிருந்த காட்சி அவளின் சந்தேகத்தை வலுப்படுத்த, தனது அண்ணன் பிரவீன் உடனான பல்லவியின் திருமணப் பேச்சை அவள் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.

அவளை உடை மாற்றித் திருமண இரவிற்குத் தயாராகப் பெரியவர்கள் சொல்ல, அதற்கு மேல் அங்கு நின்று எதையும் பேச முடியா நிலை அவளை அங்கிருந்து அதிருப்தியுடன் நகரச் செய்திருந்தது.

இரண்டு வருட காதலியே ஆனாலும், திருமண இரவை அதற்கே உரிய பதட்டமும், பரபரப்பும் இன்றி நிற்க வைத்த நண்பனின் மேல் முதலில் கோபம் தான் வந்தது சூர்யாவிற்கு.

தற்போது நண்பன் அடிபட்ட பார்வை பார்த்து விட்டு செல்லவும், அவன் அப்படியே அசையாமல் நின்றான். அவன் இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது. நண்பனின் கலங்கிய கண்கள் அவனை என்னவோ செய்தது. மெல்ல தலையை அசைத்துக் கொண்டான்.

தேவாவை பலமாகக் காயப்படுத்தி விட்டோம் என்று அவனுக்குக் காலம் கடந்து புரிந்தது.

பதினேழு வயது பல்லவியை ஸ்கூட்டி ஓட்ட சொல்லித் தருகிறேன் என்று அவன் கீழே விழ வைத்திருக்க, நடுரோட்டில் வைத்து இருபத்தி மூன்று வயது சூர்யாவை, தேவா ஓங்கி அறைந்தது அவனுக்கு நினைவில் வந்தது.

“டேய் எருமை மாடே. உனக்கே ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாது. இதுல நீ அவளுக்குச் சொல்லித் தர போறியாக்கும். அவளுக்குப் பெருசா அடி படலை அதுனால நீ தப்பிச்ச. தள்ளிப் போடா” என்று அவனை ஒற்றைக் கையால் ஒதுக்கி தள்ளி விட்டு, பல்லவியின் கை, கால், முகம் என்று ஆராய்ந்தது அவனுக்குக் கண் முன் காட்சியாக ஓடியது.

அன்றைக்கு அவளுக்கு லேசான சிராய்ப்புகள் தான். அப்போது முழு மருத்துவனாக மாறி இருந்த தேவா, மருந்தகம் சென்று தானே மருந்துகள் வாங்கி, பல்லவியைக் கவனித்ததும் அவனுக்கு நினைவில் இருக்கிறது.

இன்று யாரோ ஒருவனின் கையில் அவளது விருப்பத்தை அறியாமலேயே, அவளைப் பிடித்துக் கொடுக்கத் தான் சம்மதித்ததை, முதலில் தங்கை அறிந்தால் என்ன செய்வாள் என்று நினைத்து தலைக் குனிந்தான் சூர்யா. இன்னொருவன் அவளைக் காயப்படுத்தினால் தேவா என்ன செய்வான் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க விரும்பவில்லை அவன்.

அங்கே தந்தையும், பாரதியின் பிறந்த வீடும் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவே இல்லை.

“சூர்யா, கொஞ்சம் இங்க வாங்க” என்று சங்கவியின் கணவர் அவனை அழைக்க, அவரோடு நடந்தவனின் மனது, நண்பனின் பின்னேயே போய் நின்றது. கண்கள் கலங்க, தொண்டைக் குழி ஏறி இறங்க தேவா பார்த்த பார்வையை இனி ஒருநாளும் தன்னால் மறக்கவே முடியாது என்றே அவனுக்குத் தோன்றியது.

இங்கே வீட்டிற்குள் நுழைந்ததும் தன் புலம்பலை ஆரம்பித்து விட்டார் கனிமொழி.

“என்ன வித்யா இப்படிப் பண்ணிட்டாங்க. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை டா. நம்ம கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுட்டு தான் செய்வாங்கன்னு நினைச்சேன்” என்று அவர் தொடங்க, வித்யா அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று அம்மாவை கேட்கவே இல்லை.

“இரு மா, வந்துடுறேன்” என்று விட்டு, ஓடிப் போய்க் கணவரும் மகனும் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை மூடி விட்டு வந்தாள்.

குழந்தையை உள்ளே கிடத்தி, அவனுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டு, வெளியில் வந்த தேவா, நேராக மாடிக்கு சென்று விட்டான். அவன் மனநிலையை ஓரளவு புரிந்து கொண்ட வித்யா அண்ணனை கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்யவில்லை.

தன் முன்னே வந்து நின்ற மகளின் கைப் பற்றி, “பல்லவியை நம்ம தேவாக்கு கேட்கலாம்னு இருந்தேன் டா. உங்க அப்பா தான். அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இதைப் பத்தி பேசுற வரை நாமளே அவங்க மேல கல்யாணத்தைத் திணிக்கக் கூடாதுனு சொன்னார். இப்போ பாரு. பல்லவி யார் வீட்டுக்கோ போகப் போறா. அன்னைக்கு அவ சூர்யா, பாரதி அவங்க கல்யாணம் பத்தி பேசும் போது கூடச் சொன்னேன் உங்கப்பா கிட்ட. சூர்யா கல்யாணத்தோட சேர்த்து, தேவா கல்யாணமும் பண்ணிடலாம். பல்லவி வீட்ல பேசுங்கன்னு.

அப்பவும் அவர் என் பேச்சை கேட்கல. புள்ளைங்க ரெண்டும் யதார்த்தமா பழகறாங்க கனி. அவங்களா விரும்பி கேட்கட்டும்னு சொன்னார். இப்ப என்ன ஆச்சு பார்” என்ற கனிமொழியின் குரலில் அத்தனை வருத்தம்.

அறைக்குள் செல்வதற்காக மாடியில் இருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்த தேவா, அம்மாவின் பேச்சை கேட்டு அப்படியே சத்தம் போடாமல் நின்று விட்டான்.

பல்லவியையும், அவனையும் இணைக்க அனைவருமே ஆவலாக இருந்திருக்கிறார்கள். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தானே அனைத்தையும் கெடுத்துக் கொண்டதை நினைத்து தலையைச் சுவற்றில் முட்டிக் கொண்டான் தேவா.

“அம்மா, கல்யாணம் மா. அப்படி ஒன்னும் நாளைக்கே நிச்சயம் பண்ணி, நாளை கழிச்சுக் கல்யாணத்தை வைக்க மாட்டாங்க. நாம பேசுவோம். பொறுமையா இரு மா.” என்று வித்யா சொல்ல, மனதே இல்லாமல் மறுப்பாகத் தலையை அசைத்தார் கனிமொழி.

“எழுந்திரு மா. படுக்கப் போவ. ரொம்ப லேட்டாகிடுச்சு” என்று அம்மாவின் கைப் பிடித்து, எழுப்பி, அவரை அறைக்குள் அனுப்பி விட்டே படுக்கச் சென்றாள் வித்யா.

அறைக்குள் நுழைந்து, உடை கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்த தேவாவுக்கு, பல்லவி அவனைக் கதவில் சாய்ந்து நின்று இமைக்காமல் பார்த்ததே கண் முன் வந்தது.

அந்தப் பார்வை இப்போதும் அவனை என்னென்னவோ செய்தது.

சூர்யா அவளின் திருமணம் குறித்துப் பேசிய வார்த்தைகளை நினைக்கையில் ஓடிப் போய் அவள் கைப் பிடித்து இழுத்து, அவளைத் தன்னோடு இறுக்கி கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

மெல்ல புரண்டு படுத்தான். அவனது அறையில் இருந்த ஒற்றைச் சோஃபாவில் இப்போதும் பல்லவி அமர்ந்து, அவனையே பார்ப்பது போலிருந்தது.

கண்ணை மூடித் திறந்தான், காட்சிகள் மாறி அவள் அங்கில்லை என்று உணர்ந்தவன், தலையணையில் ஓங்கி குத்தினான்.

கையெட்டும் தூரத்தில் இருக்கும் போது தோன்றாத உணர்வுகள் இப்போது புதிதாக முளைத்து அவனை இம்சிக்க, எதையும் தடுக்க இயலாமல் பல்லவியைச் சரணடைந்திருந்தான் தேவா.

அன்று, “என் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவியா பல்லவி?” என்று அவளிடம் நான் ஏன் கேட்டேன்? அவள், “உன் காதலை பிரித்து விடுவேன்” என்று சொன்ன போது, நான் ஏன் மகிழ்ந்தேன்?

என் வீட்டை, ஏன் அவளிடம், “நம் வீடு” என்று குறிப்பிட்டேன்?

காதல் கோட்டை தொட்டு, அவளிடம் பேசிய கணங்களை அவன் மனம் மெல்ல நினைவுப்படுத்த, தன்னைத் தானே கேள்விக் கேட்க ஆரம்பித்திருந்தான் தேவா.

“சக்கரை” என்று கண் சிமிட்டிய தேவாவின் முகம் கனவிலும் வந்து இனிப்பை கூட்ட, மென்நகையுடன் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள் பல்லவி.

அன்று பகலில் எட்டி எட்டிப் பார்த்த மழை இரவில் ஓய்வெடுத்திருந்தது.

பல்லவியின் பிரிய மழை அவளை, அவளின் பிரியமானவனுடன் சேர்த்து வைக்குமா?

அன்று மழை வராதது போல, தேவாவும் அவள் வாழ்வில் வராமல் போய் விடுவானா?

மறுநாள் விடியலில் பல்லவியின் வீட்டுக்கு வந்த வித்யா, சூர்யாவின் முதுகில் ஓங்கி அடி ஒன்றை வைத்தாள்.

“என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று அவள் கத்த,

“அச்சோ, அம்மா. ஆளாளுக்கு என்னைப் போட்டு அடிங்க. புது மாப்பிள்ளை வித்யா நானு” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்த வித்யா,

“என்ன சொன்ன? ஆளாளுக்கா? அப்படின்னா? வேற யார் உன்னை அடிச்சா?” என்று அவள் கேட்க, அவன் சொன்ன பதிலில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.

அவளைப் பொய் கோபத்துடன் கண்ணைச் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, நண்பனின் மேல் இன்னும் கோபத்துடன் தான் இருக்கிறானா?

மழை நனைக்கும்…

error: Content is protected !!
Scroll to Top