மழை மேகம் – 6 (2)

இந்தச் சித்திகள் எப்படிச் சட்டென அக்காவின் குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் இன்றி, இன்னொரு அம்மாவாகி விடுகின்றனர் என்று அதிசயித்துப் பார்த்தாள் சங்கவி.

“சக்கரைக்கே சக்கரையா? கொடுத்திடுவோம்” என்று பக்கத்தில் இருந்த பல்லவியைப் பார்த்து, கிசுகிசுத்துக் கண் சிமிட்டினான் தேவா.

அவனையும் அறியாமல் வெகு இயல்பாக வந்து விழுந்திருந்தன வார்த்தைகள். தான் சொன்னது தனக்கே கேட்ட பின்பு தான், என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து மெலிதாக அதிர்ந்தான் அவன். “இதையும் சூர்யாவிற்காகச் செய்கிறாயா?” என்று அவன் மனமே அவனுக்கு எதிராக நின்று கேள்விக் கேட்க, பலமாக அதற்கு மறுப்புத் தெரிவிக்கத் தோன்றியது அவனுக்கு.

பல்லவியோ தலையைத் திருப்பி அவனை விழி விரித்துப் பார்த்து, “நீ இன்னைக்கு ஆளே சரியில்ல தேவா” என்று மூக்கை சுருக்கினாள்.

“ஐயோ” என்றானது அவனுக்கு, “சொதப்புறோமோ?” என்று மனதினுள் பதறவே செய்தான்.

புதிதாக ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் கண் பார்த்து, காதல் வசனம் பேசுவது கூட எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.

ஆனால், இத்தனை நாட்கள் அன்பு, நேசம், பாசம், அக்கறை என்று ஓர் எல்லைக்குள் நின்று விட்ட பல்லவியின் கண் பார்த்து காதல் வசனம் என்ன, அந்த அர்த்தத்தில் எதையுமே பேச அக்கணம் அவ்வளவு தடுமாறினான் தேவா. அவன் சொன்னதற்கு எதிர்வினையாகப் பல்லவி சிரித்திருந்தால் கூடப் போதும், மேலும் முன்னேறி காதல் வசனம் என்ற பெயரில் எதையாவது பிதற்றி இருப்பான். ஆனால், அவளோ, “நீ சரியில்லை தேவா” என்று விட்டிருக்க, அவனுக்குத் தர்மசங்கடமாகிப் போனது.

அவளும் தீவிரமாக யோசித்து அவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு எங்கே தெரிய போகிறது.

அவனுக்கே அவனது நிலை சிரிப்பை மூட்டியது.

முகம் முழுக்க விரிந்த புன்னகையுடன் அவன் தலையைத் திருப்ப, அங்கே சேதுராமனிடம் முக்கியப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இருந்தது பாரதியின் குடும்பம்.

அதைக் கண்டதும் தேவாவிற்கு மின்னல் வெட்டாமலேயே, மனதில் பயக் காளான் ஒன்று முளைத்து வேக வேகமாக வளர ஆரம்பித்தது. ஆனாலும், தன்னையும், பல்லவியையும் மீறி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கையில் தன் மனதிற்குத் தானே திடம் கொடுத்துக் கொண்டான் அவன்.

பல்லவியின் கையில் இருந்த பவித்ரா தூங்கி விட, அவளைப் படுக்க வைக்கக் குழந்தையோடு எழுந்தாள் அவள். அவளோடு சங்கவியும் நகர, வித்யாவும் மகனை தூக்கிக் கொண்டு கணவனைக் கண்களால் தேடினாள்.

“நம்ம வீட்டுக்குப் போகலாம் மா. குட்டி பையன் தூங்கி விழறான். இவரை வேற காணோம்” என்று சொல்லி வித்யா எழுந்து கொள்ள, அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கித் தன் தோளில் போட்டுக் கொண்டான் தேவா.

“அப்பாவும், மாப்பிள்ளையும் அப்பவே வீட்டுக்கு போயாச்சு வித்யா” என்றார் கனிமொழி.

அவர்களின் வீட்டிற்குச் செல்ல தேவா நகர, குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு நின்றிருந்தவனையே எதிர் பக்கம் இருந்த அறையின் கதவில் சாய்ந்து நின்றபடி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

அவள் கண்களில் அவன் இதுவரை கவனித்திராத, இன்று தான் காணும் ஏதோ ஓர் உணர்வு அவனை என்னவோ செய்தது. இதயம் வலப்பக்கம் துடிப்பது போலிருந்தது அவனுக்கு.

அவளுக்கு இப்படிப் பிள்ளையைத் தோளில் தூக்கிக் கொண்டு, கைகளில் ஏந்திக் கொண்டு நிற்கும் அப்பாக்களை எவ்வளவு பிடிக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

எத்தனையோ முறை அவனைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வந்த போது அவனிடமே சொல்லவும் செய்திருக்கிறாள்.

“இந்த அப்பாங்க எல்லாம் குழந்தையைத் தூக்க தெரியாம, பயந்து பயந்து தூக்கி வச்சுட்டு, அதையே உலக அதியசம் போலப் பார்த்திட்டு நிக்குறது எவ்வளவு க்யூட்டா இருக்கு இல்ல தேவா? நீ அவங்ககிட்ட சொல்லலாம் இல்ல. நல்ல பிடிங்க சார், குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுன்னு” என்பவள்,

“எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சீன் இது. அவ்வளவு அழகா இருக்கு தேவா. இதுக்காகவே டெய்லி உன்னைப் பார்க்க வரலாம் போல” என்ற அவளின் ரசனையான வார்த்தைகள் இப்போது அவனின் காதில் கேட்க, அவளைப் பார்த்து, “என்ன?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

மெலிதாக இதழ் பிரித்துப் புன்னகைத்து, “ஒன்றுமில்லை” என்று தலையசைத்து பார்வையைத் திருப்பி, மீண்டும் அவனில் விழிகளைப் பதித்தாள் பல்லவி.

“குட் நைட்” என்று வாயசைத்து விட்டு, தேவா நகர, பல்லவியும் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த வித்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

மெல்ல கனிமொழியின் பக்கம் திரும்பி, “அடுத்து தேவா அண்ணா கல்யாணம் தானே மா?” என்று அவள் குரலில் துள்ளலுடன் கேட்க,

“ஆமா டா. அவனுக்கும் வயசு ஆகிடுச்சு. சீக்கிரமே அவனுக்கும் முடிக்கணும். எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆச. நம்ம பல்லவி…” என்று அவர் சொல்லிக் கொண்டே நடக்க, அப்பொழுது, அவரின் காதில் விழுந்த வார்த்தைகள் அவரை மேலே பேச விடாமல் ஸ்தம்பித்து நிற்க செய்தது.

“அப்போ, பல்லவியை எங்க பிரவீனுக்குக் கொடுக்க உங்களுக்குச் சம்மதம் தானே சம்மந்தி?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாரதியின் பெரியம்மா.

வித்யா, கனிமொழி இருவரும் அதிர்ந்து நின்றனர்.

வாசலை நெருங்கி இருந்த தேவா, அதற்கு மேல் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாதவனாகச் சிலையாக மாறி நின்றான். ‍

அங்கிருந்த அனைவரும் சேதுராமன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடனும், பயத்துடனும் பார்த்திருந்தனர்.

மெதுவாகத் தொண்டையைச் செருமி, சரி செய்து, “பொண்ணு கல்யாண விஷயம், அவ தான் முடிவு செய்யணும். காலத்துக்கும் சேர்ந்து வாழப் போற அவ பிரியம், சம்மதம் தெரியாம, நான் எதுவும் சொல்ல முடியாதுங்க. பல்லவி கிட்ட பேசிட்டு நாங்க சொல்றோம்” என்றார் அவர்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வாயை திறந்து வெளியிட்டான் தேவா. அவரின் பதில் அப்படி ஓர் ஆசுவாசத்தைத் தந்தது அவனுக்கு, ஆனால், அவனின் உயிர் நண்பன் அதை ஒரு நொடி கூட நிலைக்க விடவில்லை.

“நான் ஏற்கனவே இதைப் பத்தி பல்லவி கிட்ட பேசிட்டேன் பா. அவளுக்கும் சம்மதம் தான்” என்றான் சூர்யா அழுத்தமாக, தேவா அதிர்ச்சியுடன் நண்பனை பார்த்தான்.

“என்னப்பா சொல்ற?” என்று சேதுராமன் கேட்க,

“நேத்தே பாரதி இதைப் பத்தி சொன்னா பா. அவங்க பெரியம்மாக்கும், அவங்க அண்ணா. அதான், பிரவீனுக்கும் நம்ம பல்லவியைப் பிடிச்சு இருக்குனு. நான் அப்பவே பல்லவி கிட்ட பேசினேன் பா. அவ சரி தான் சொன்னா” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தான் தேவா.

“அப்போ, வர்ற வாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து, வீட்டோட நிச்சயம் பண்ணிடலாமா? நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடணும்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாரதியின் பெரியம்மா.

தேவாவின் கண்கள் சூர்யாவின் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை.

உண்மையில் மனதில் பலமாக அடி வாங்கி இருந்தான் தேவா. நண்பனிடம் இருந்து நிச்சயமாக இப்படி ஒரு செயலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனுக்குத் தன் மேல் கோபம் இருக்கும், அது உடனேயும் குறையாது என்று அவன் உணர்ந்தே இருந்தான். ஆனால், அவனைக் காயப்படுத்தும் நோக்கில் தங்கையை யாரோ ஒருவனுக்கு மணமுடிக்க அவன் கண் முன்னாலேயே சூர்யா பேசுவான் என்று தேவா கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனுக்குக் காரணம் சொல்ல முடியாமல் கண்கள் கலங்கியது. உணர்ச்சிகளை அடக்கியதில் தொண்டைக் குழி ஏறி இறங்க, சூர்யாவை கண்ணோடு கண் பார்த்து விட்டு, அதற்கு மேல் ஒரு நொடி கூடத் தாமதிக்காது விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

“என்ன பண்றீங்க சூர்யா?” கோபமாக அவன் காதை கடித்த மனைவியைச் சூர்யா திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

“நீங்க பண்றது சரியில்ல” சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பாரதி.

error: Content is protected !!
Scroll to Top