மணமகனின் அறைக்குள் வந்த சூர்யா, அங்கே ஜன்னல் கம்பியில் தலை வைத்து, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனின் தோளில் மெதுவாகக் கைப் போட்டான். தேவா அசையாமல் நிற்க,
“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை தேவா” என்றான் சூர்யா.
அங்கே உறங்கிக் கொண்டிருந்த சேதுராமனை பார்த்தான் தேவா, சரியாக அந்நேரம் அவனது தந்தை கதிர்வேலனும் அறைக்குள் வர, நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“மாடிக்குப் போகலாம் தேவா” ஏதேதோ சிந்தனைகள் மனத்தைச் சூழ, தயங்கினான் தேவா.
“அட வா, தேவா” என்று சூர்யா சொல்ல, அவனைப் பின் தொடர்ந்து அறையை விட்டு வெளியேறி மாடிப் படியேறினான் தேவா.
மழையின் ஈரம் தரையை நிரப்பியிருக்க, சுவரில் சாய்ந்து நின்றார்கள் இருவரும்.
“தேவா…” என்று மெல்ல நண்பனின் தோள் தொட்டான் சூர்யா.
“பல்லவியை….” சூர்யாவின் கேள்வி அந்தரத்தில் நிற்க,
“நான் என்னை விட அவளதான் அதிகம் நேசிக்கிறேன் சூர்யா” பட்டென்று பதில் சொன்னான் தேவா.
“ஐ லவ் ஹெர் மோர் தென் மைசெல்ப்” என்று அவன் மேலும் சொல்ல, புன்னகையில் மின்னியது சூர்யாவின் கண்கள்.
“ஆனா…” என்று அவன் இழுக்க, அவனது வார்த்தையோடு தானும் இழுபட்டான் சூர்யா.
“என்ன ஆனான்னு, இழுக்கற தேவா?”
“காதல்… நான் அவளைக் காதலிக்கிறேனான்னு கேட்டீனா, இல்லன்னுதான் சொல்வேன் சூர்யா. பல்லவியைப் பிடிக்கும், ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா, பல்லவியாதான் அவளைப் பிடிக்கும். அவளை வேற மாதிரி நான் நினைச்சுப் பார்த்தது இல்ல. எனக்குச் சரியா சொல்லத் தெரியல சூர்யா. ஒரே குழப்பமா இருக்கு. அவளைத் தப்பான கண்ணோட்டத்தில் நான் பார்த்ததே இல்ல. என் சுண்டு விரல் கூட அவ மேல தப்பா பட்டது இல்ல. அவளை நெருங்கனும், அணைக்கணும்.. ப்ச் எதுவும் இதுவரை தோனினது இல்ல.
அவளை நினைச்சு தூங்காம தவிச்சதில்ல. அவளைப் பார்க்கும் போது இதயத் துடிப்பு எகிறினது இல்ல. இதெல்லாம்தானே காதலுக்கான அறிகுறி?” கேட்ட நண்பனை பார்த்தது பார்த்தபடி இருந்தான் சூர்யா. அவனுக்கும் நண்பனை பற்றி நன்றாகத் தெரியும்தான். ஆனாலும், அவனது பதில், சூர்யாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
“இதுவரை எந்தப் பொண்ணும் என்னை ஈர்த்தது இல்ல சூர்யா. யார் மேலயும் காதல் வரல. காமமும் வரல. யாரையும், ஸ்பெஷலா ரசிக்க, நேசிக்கத் தோனல. பல்லவி, அவளை மீறி யாரையும் பார்க்க முடியல. அவ மட்டும்தான் என் உலகமா இருக்கா. ஆனா, அவளை என்னால.. ரொமான்டிக்.. அந்தக் கோணத்தில் நான் பார்த்ததே இல்ல. பயமா இருக்கு சூர்யா. என்னால அவளுக்கு ஒரு நல்ல கணவனா இருக்க முடியுமா? பல்லவியை வேற மாதிரி பார்க்க முடியுமா…” மேலும் அவன் பேசும் முன், அவன் முன் கை நீட்டி, “போதும்” என்று சைகை செய்து அவனைப் பேச விடாமல் தடுத்தான் சூர்யா.
தன் மனத்தை நண்பனிடம் கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த தேவா, பல்லவி அவனுக்குத் தங்கை என்பதை எப்படி மறக்கலாம்?. அதைக் கேட்கையில் ஒரு அண்ணனாக அவன் எப்படி உணருவான் என்பதை யோசிக்க மறந்தான் தேவா.
சூர்யா இறுகிப் போய்ச் சிலையாக நின்றான். அவனுக்கு என்ன பேசுவது என்றே புரியாத நிலை.
‘என்னால் அவளை மனைவியாகப் பார்க்க முடியாது. ஆனால், அவளை எனக்குத் திருமணம் செய்து கொடு’ என்று நண்பன் கேட்பதாகதான் அவனுக்குத் தோன்றியது.
ஏனோ, அவனையும் அறியாது கோபம், வருத்தம், ஆத்திரம் எனக் கலவையான உணர்வுகள் அவனை நெரிக்க, கண்களை மூடி, கையை இறுக கட்டிக் கொண்டான் சூர்யா.
“யூ மீன், யூ டோண்ட் லவ் ஹெர். அப்படித்தானே தேவா?” என்று சூர்யா கேட்க,
“நான் அப்படிச் சொல்லலையே. அவளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் சூர்யா. எஸ், ஐ லவ் ஹெர். ஐ வான்ட் டூ பீ வித் ஹெர் ஆல்வேஸ்.” என்றவனைச் சட்டென இடைமறித்தான் சூர்யா.
“டேய், வெளக்கெண்ணையில வெண்டக்காயை வதக்கின மாதிரி, வழவழ கொழகொழெனு பேசாம, தெளிவா பேசுடா. சொன்னதையே மாத்தி, மாத்தி சொல்லிட்டு இருக்க?” வழக்கமாகத் தேவா சொல்லும் வார்த்தைகளைத் திருப்பி அவனுக்கே கொடுத்த நண்பனை வெறித்துப் பார்த்தான் தேவா.
“அப்போ இத்தனை நாள், பல்லவியை நீ, என்னை மாதிரியேதான்…” அவன் கேட்க வந்த கேள்வியை, கேட்காமலேயே புரிந்து கொண்ட தேவா,
“வாயை மூடு சூர்யா. அசிங்கமா பேசாத” அதிர்ந்து கத்தினான். சூர்யாவிற்குத் தலையைச் சாய்த்து நின்றிருந்த சுவரில் நங்கென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
“சூர்யா, பிளீஸ். பொறுமையா நான் சொல்றதை…”
“கேட்க முடியாதுடா. நீ பேசிட்டு இருக்கறது என் தங்கச்சியைப் பத்தி.” கோபத்தில் குரலை உயர்த்தினான் சூர்யா.
“மனசாட்சியைத் தொட்டு சொல்லுடா. இதுவரை.. இந்த நிமிஷம் வரை… பல்லவியை நீ…. ச்சே…” அவனால் கேள்வியைக் கேட்க கூட முடியவில்லை.
“சூர்யா” பல்லைக் கடித்தபடி கத்தினான் தேவா.
“எனக்குத் தெரியும் தேவா. நீ பார்வையில் கூட அவகிட்ட கண்ணியமாதான் இருந்த, இருக்குற.. ஆனா, இனியும் அது செல்லாதேடா, தேவா. உனக்குப் புரியுது தானேடா. ஏன்டா என்னைச் சாவடிக்கற?” தூக்கத்திற்குக் கெஞ்சிய கண்களை உள்ளங்கை கொண்டு தேய்த்து விட்டான் சூர்யா.
“ஐ ஆம் சாரி சூர்யா. பிளீஸ் நீயும் என்னைப் புரிஞ்சுக்க டிரை பண்ணுடா. என்னால பல்லவியைத் தாண்டி எதையும் பார்க்க முடியலடா. ஐ வாண்ட் டூ ப்ரொடக்ட் ஹெர். அவளுக்காக எப்பவும், அவ கூடவே நான் இருக்கணும்னு நினைக்கறேன். அவளைக் கண்ணுல வச்சு பார்த்துக்கணும்டா. என்னால, என்னால அவளை வேற யாருக்கும் விட்டுத் தர முடியாது. வேற ஒருத்தனோட் அவளைப் பார்க்க முடியாது” தெளிவாக, தீர்க்கமாகச் சொன்ன நண்பனை குழப்பத்துடன் பார்த்தான் சூர்யா.
“நீ டாக்டர்தானே? ஆர் யூ நார்மல்?” அந்தக் கேள்விக்குக் கையை மடக்கி கண்களை இறுக மூடித் திறந்தான் தேவா.
சூர்யாவிற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தேவா எந்தப் பெண்ணின் பின்னும் அலைந்ததாக நினைவில்லை. அவனே சொன்னது போல யாரையும் நின்று ரசித்து, கேலி, கிண்டல் செய்து, ம்ஹூம் அவன் பார்த்ததே இல்லை. உடன் படித்த பெண்களுடன் நட்பாகப் பேசி, சிரித்து இருக்கிறான். அவ்வளவுதான் அவனது எல்லை. இப்போது அதை நினைக்கையில் ஏனோ சூர்யாவிற்குக் கோபமாகதான் வந்தது. இது என்ன மாதிரியான பைத்தியக்கார தனமாக அன்பு என்று.
நண்பனை இதழ்களில் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த தேவா, “சூர்யா, ஐ அம் நார்மல் டா. ஒரு நிமிஷத்துல என்னை எவ்வளவு அசிங்கப்படுத்திட்டடா. எனக்கு எல்லா ஹார்மோன்ஸிம் நல்லா, சரியா, தெளிவாதான் வேலை செய்யுது. ஆனா,…” என்று சோர்வாகத் தலையைக் கோதிக் கொண்டான் தேவா.
அந்த, “ஆனா” வில் சூர்யாவிற்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
“ஆனா, அது என் தங்கையைப் பார்த்தா வேலை செய்யுமா தெரியல? அப்படித்தானே?”
“டேய் சூர்யா. என்ன பேசுற?”
“கல்யாணம் பண்ணிக் கொடு, பழகி பார்க்கறேன். சொல்றியா? இல்ல அதுக்கு முன்னமே…”
“சூர்யா…” படாரென்று திரும்பி அவனின் சட்டையைப் பிடித்திருந்தான் தேவா.
சில மணி நேரங்களுக்கு முன், நண்பனின் ஒற்றைக் கேள்வியில் எத்தனை மகிழ்ந்தான் சூர்யா. கனவு கோட்டைகளைக் காற்றில் கட்டி விட்டது போலவே அக்கணம் உணர்ந்தான்.
தேவாவின் கையைத் தன் மேலிருந்து மெல்ல விலக்கியச் சூர்யா, “என் தங்கச்சியை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்டா. அவளைப் பொத்தி, பாதுகாக்க, நானும், எங்க அப்பாவும் இருக்கோம்.” என்றவன், நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,
“அவளுக்குக் கணவனா வர்றவன் அவளை எல்லா விதத்துலயும் சந்தோசமா வச்சு இருந்தா எங்களுக்குப் போதும்.” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி சொல்லி விட்டு, தேவாவின் முகம் பார்க்காமல், வேகமாக அங்கிருந்து நகரப் போனான்.
“சூர்யா, பிளீஸ். எனக்கு டைம் கொடுடா. என்னோட பயத்தைதான் உன்கிட்ட சொன்னேன்டா. பல்லவி எனக்கு…” அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமும் ஆத்திரமாக வெளிப்பட, “டேய்…” என்று நண்பனின் சட்டையைப் பிடித்துக் கையை ஓங்கி இருந்தான் சூர்யா.
தேவா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துத் தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்த சூர்யா, ஓங்கிய கையை மெல்ல கீழிறக்கி, “இது பத்தி நீ ஏன் பல்லவி கிட்ட பேசல?” என்று கேட்டான்.
“அவ நான் சொன்னா, அப்படியே கேட்டுப்பா. கல்யாணம், அப்படிக் கட்டாயத்தில் நடக்கக் கூடாது இல்ல. நீ அவ கிட்ட பேசினா, அவ மனசுல இருக்கறதை சொல்லுவா. அதான்” என்று சொன்ன நண்பனை என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தான் சூர்யா.
அவன் மேல் புதிதாகப் பெயர் தெரியாத பல உணர்வுகள் முளைத்து நின்றது. அத்தனையும் விரும்பத்தகாத உணர்வுகள். கோபம், வெறுப்பு, எரிச்சல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏனோ அந்த நிமிடம் அவனைக் காயப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
“இதுக்கு நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ தேவா” என்று தீர்க்கமாக அவன் முகம் பார்த்து சொல்லி விட்டு நகர்ந்தான் சூர்யா.
“சூர்யா..”
“நோ, இதுக்கு மேல பேச எதுவுமே இல்ல.” பட்டென்று அங்கிருந்து விலகி, இரண்டிரண்டு படிகளாகத் தாவி கீழிறங்கி சென்றான் சூர்யா.
அவனுள் கோபமும், வெறுப்பும், ஆத்திரமும் கனலாகக் கனன்று கொண்டே இருந்தன.
“என் தங்கையை உனக்குத் தாரை வார்த்துக் கொடுப்பேன் தேவா” என்று மனத்தில் நினைத்து பூரித்த தன்னையே நொந்து கொண்டான் சூர்யா.
என்னவெல்லாம் நினைத்தான், அத்தனையையும் சுக்கு நூறாக நொறுக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிய நண்பனின் மேல் கொலைவெறியே வந்தது அவனுக்கு.
தேவா கண்களைத் தேய்த்துக் கொண்டு அலைபேசியை எடுத்து மணிப் பார்த்தான். நேரம் நள்ளிரவு ஒன்று என்றது அலைபேசி.
முகத்தை நிமிர்த்தி வானம் பார்த்தான். அவனது மனநிலைக்கு எதிராக வானம் நட்சத்திரங்கள் அற்று நிர்மலமாக இருந்தது. ஆனால், அவனுள் ஆயிரம் குழப்ப நட்சத்திரங்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன.
சூர்யா தனக்கு நண்பன் என்பதற்கு முதல், பல்லவிக்கு அண்ணன். அவனிடம் இதைப் பற்றிப் பேசிய தன்னைதானே திட்டிக் கொண்டான் தேவா.
முழுக்க முழுக்கக் கருமையைப் போர்த்தி இருந்த வானம் அவன் மனநிலையை உணர்ந்தது போல, மழையை மென்மையாக அவன் மேல் பொழியத் தொடங்கியது.
மழை வரப் போவதை கூடத் துல்லியமாகக் கணித்து விட முடிகிற காலத்தில் காதல் எப்போது வரும், யாரின் மேல் வரும் என்று எவ்வாறு கணிக்க இயலும்? என்பதைச் சூர்யா உணர தவறியிருந்தான்.
அவனுக்குத் தன் மனதினை போதுமான அளவு விளக்கி விட்டதாக நினைத்தான் தேவா.
எண்ணற்ற விந்தைகளைத் தன்னுள் அடக்கி இருக்கும் வானை காட்டிலும் அதிக விந்தைகளைத் தன்னுள் அடக்கியது அல்லவா மனித மனம்??
பல்லவி – தேவா குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறான் சூர்யா?
சூர்யாவிடம் மீண்டும் தன்னை நிரூபிக்க, தன் மனதை தெளிவாகப் புரிய வைக்க முயல்வானா தேவா?
ஜன்னலை ஒட்டிப் படுத்திருந்த பல்லவியின் மேல் மழைத் துளிகள் தெறித்து அவளது தூக்கத்தைக் கலைக்க, மெல்ல புரண்டு படுத்தாள் பல்லவி.
மழைச்சாரல் ஜன்னலை தாண்டி அவளைத் தீண்டி முழுவதுமாக நனைக்க முயல, இன்னும் உள்ளே நகர்ந்து படுத்தாள்.
மழையிடமிருந்து விலகி தன் தூக்கத்தைக் காப்பாற்றி, தொடர முடிந்த பல்லவியால், தன் பிரிய மழை சிறிது நேரத்திற்கு முன் கலைத்து போட்ட தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா?
நள்ளிரவில் மழையில் முழுவதுமாக நனைந்தபடி நின்ற தேவா தன் பல்லவிக்காக என்ன செய்யப் போகிறான்? அவளைக் காப்பவனாக மட்டும் இல்லாமல், நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் நேசத்தைக் காதலாக மாற்றுவானா? அவளின் காதலனாக மாறுவானா தேவா?
இதற்கு முன் காதல் கோட்டை தொட்டு அவளிடம் பேசிய கணங்களை எல்லாம் காலம் அவனுக்கு நினைவுப்படுத்துமா?
மழை நனைக்கும்…