சில வருடங்களுக்குப் பின்,
“வித்யா, பிளீஸ். எனக்காக, பிளீஸ்” என்று கொஞ்சி, கெஞ்சிக் கொண்டிருந்தாள் பல்லவி.
அவளைத் தொடர்ந்து கெஞ்சியது பல இளம் குரல்கள்,
“அத்த, பிளீஸ்”
“அம்மா பிளீஸ்”
வித்யாவின் மகன் விக்ரம், மகள் வினோதினி. தேவா, பல்லவியின் மகன் வருண். சங்கவியின் மகள் பவித்ரா, மகன் கார்த்திக் மேலும், சூர்யா, பாரதியின் மகள் இமயா என இருவர் வீட்டின் குழந்தை பட்டாளமும் அங்குத் தான் இருந்தனர்.
வேறு ஒன்றுமில்லை. மழை பெய்து கொண்டிருந்தது.
அதுவரை பல வடிவங்களில், வண்ணங்களில் காகித கப்பல்கள் செய்து விட்டு அலுத்துப் போய் அமர்ந்தவர்கள், வித்யாவை மழையில் நடனமாட சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
அவளோ முடியவே முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும், அவள் மழையில் இறங்கினாள் மொத்த கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்து தைய, தக்கா போடும் என்று.
வருண், பவித்ரா இவர்கள் இருவரை மட்டுமே மழை ஒன்றும் செய்யாது. மற்ற அனைவரும் மழையில் நனைந்தால் காய்ச்சல், சளி என்று படுத்து விடுவார்கள். என்ன தான் வீட்டிலேயே குழந்தைகள் நல மருத்துவர் இருந்தாலும் கூட, வித்யா ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
“வித்யா அண்ணி பிளீஸ்.” பல்லவி காரியம் ஆக வேண்டி, “அண்ணி” எல்லாம் போட்டு அழைக்க, வித்யாவிற்குச் சிரிப்பு தான் வந்தது.
“சும்மா இரு பல்லவி” என்று அவளை அதட்டி அடக்கினாள்.
அந்நேரம் வேலை முடித்து வந்த பாரதி, அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்து மகளைத் தூக்கிக் கொண்டாள். கூடவே வந்திருந்த சங்கவியும் குழந்தைகளைக் கிளப்பிக் கொண்டு போக, வித்யா அவர்களோடு இணைந்து, தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினாள்.
“என்கிட்ட பேசாத, போ” என்று வித்யாவை பார்த்து, கத்தி விட்டு, மகனை குனிந்து கைகளில் அள்ளப் போனாள் பல்லவி.
“ஏய் பல்லவி, அவனைத் தூக்காத. நான் வரேன், இரு” பதட்டமாகக் கத்திக் கொண்டே வந்தான் தேவா.
அவனைப் பார்த்ததும் அம்மா, மகன் இருவரின் முகமும் பளிச்சென்று மலர்ந்தது.
“அப்பா” என்று கத்தியபடி, ஓடிப் போய் அவன் காலைக் கட்டிக் கொண்டான் மூன்று வயது வருண். அவனைத் தூக்கி மூக்கை உரசி, முகம் முழுக்க முத்தமிட்டான் தேவா. பதிலுக்கு அப்பாவின் கன்னத்தை எச்சில் படுத்தினான் மகன்.
மெல்ல நடந்து அவனுக்குப் பக்கத்தில் வந்த மனைவியின் தோளில் கைப் போட்டு, சேர்த்து அணைத்துக் கொண்டான் தேவா.
“அம்மா, இங்க கொஞ்சம் வாங்க” கீழே பார்த்துக் கத்தினான். அடுத்த இரண்டாம் நிமிடம் மாடியேறி வந்த கனிமொழியிடம் மகனை கொடுத்து விட்டான் அவன்.
வருணும் துள்ளி குதித்துக் கொண்டு அப்பத்தாவிடம் சென்றான்.
அவர்கள் கீழிறங்கி போக, மெல்ல திரும்பி மனைவியைப் பார்த்தான் தேவா.
“என்ன?” புருவம் உயர்த்தினான்.
அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போலும், சரியாகத் துவட்டாத தலை முடிகளில் ஈரம் மின்ன, நின்றிருந்தவனின் டீசர்ட்டை பிடித்து அவனை இன்னும் தனக்கு நெருக்கமாக இழுத்தாள் பல்லவி.
அவளின் ஆறு மாத வயிறு அவர்களுக்கு இடையில் முட்டிக் கொண்டு நிற்க, “ப்ச்” சலித்துக் கொண்டு கணவனை இறுக்கி அணைத்தாள்.
சிரித்துக் கொண்டே அவளைத் தன்னோடு முடிந்த மட்டும் இறுக்கினான் தேவா. மெல்ல பல்லவி தலை உயர்த்தி அவனைப் பார்க்க, புரிந்துக் கொண்டவனாக, “வாய்ப்பே இல்ல டா. கேட்கவே, கேட்காத. முடியாது” சிரித்துக் கொண்டே மறுத்தான்.
“ப்ரெக்னன்ட்டா இருக்கேன் தேவா. அப்புறம் உங்க பொண்ணு தான், அம்மா ஆசை நிறைவேறலைன்னு ஃபீல் பண்ணுவா. வெளில வந்ததுக்கு அப்புறம் உங்க கூடச் சண்டை போடுவா. பார்த்துக்கோங்க” என்று பல்லவி முகத்தைப் பாவம் போல வைத்துக் கொண்டு அவனை எச்சரிக்க,
“குழந்தை வரும் போது பார்த்துக்கலாம் சக்கரப் பல்லவி” நெற்றியில் முட்டி சொன்னான்.
“தேவா, பிளீஸ்” சிணுங்கினாள்.
அதற்கு மேலும் அவளுக்கு மறுக்க முடியாமல், நிமிர்ந்து வானைப் பார்த்தான் தேவா.
மழை அவனுக்காகத் தன் வேகத்தைக் குறைத்து பூந்தூறலாகத் தூறி கொண்டிருந்ததைக் கவனித்தான்.
இரண்டாம் நிமிடம் மொட்டை மாடியின் திறந்த வெளியில் இருந்தார்கள் இருவரும்.
அவர்களின் கால்களுக்கு அடியில் பல கப்பல்கள் ஓடிக் கொண்டும், மூழ்கிக் கொண்டும் இருந்தது. ஆனால், அவர்கள் இருவரின் உறவும், வாழ்வும் எத்தனை பலமான புயல் மழைக்கும், சாய்ந்து விடாமல் நாளுக்கு நாள் வலிமையாக, அழகாக முன்னேறிக் கொண்டிருந்தது.
பல்லவியை இறுக்கமாய் அணைத்து, மென்மையாய் முத்தமிட தொடங்கி இருந்தான் தேவா. கண் மூடி அவன் காதலில் கரைந்து கொண்டிருந்தாள் பல்லவி.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் கடந்தும், அவர்களின் காதலும், நேசமும் கொஞ்சமும் குறைந்ததிருக்கவில்லை.
இனியும் அதுவே தொடரும் என்பது போல மென்மையாய் மழை அவர்கள் மேல் பொழிந்து ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது.
வான் மழையில் மட்டுமல்லாது, காதல் மழையிலும் முழுமையாக நனைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
பல்லவியின் தேவா.
தேவாவின் பல்லவி.
மழை நனைத்தது!!!
சுபம்