கஸ்தூரி மகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு காட்டினார்.
ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். அவளைச் சோம்பி ஓரிடத்தில் அமர விடவில்லை அவர்.
“மா, நான் தான் ஏற்கனவே வேலைக்குப் போறேன் இல்லம்மா. அப்புறம் வீட்லயும் வேலை சொல்றீங்க?” என்று அவள் புலம்ப, அவர் கேட்பதாகவே இல்லை.
“போ மா. நான் எங்க வீட்டுக்கு போறேன். அத்த, என்னைத் திட்டவே மாட்டாங்க” என்று பொய் கோபத்துடன் வாசலை நோக்கி அவள் நடக்க, அவரும் சிரித்துக் கொண்டே அவளுடன் தேவா வீடு வரை வந்தார்.
கோடைக் காலம் முடிந்து, கார்காலம் தொடங்கி இருந்தது.
ஒரு வாரமாக மழை மெல்ல எட்டி எட்டி பார்த்து விட்டு மறைந்து கொண்டது.
அன்றைய தினம் காலையில் இருந்தே சூரியன் விடுமுறை எடுத்திருந்தான். வானம் வெண் மேகமும், கருமேகமும் கலந்து ஓவியம் போலக் காட்சியளித்தது.
மாலை நெருங்கும் வேளையில் முழுதாகக் கருமேகங்கள் வானை நிறைக்கத் தொடங்கியது.
தேவா அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தான்.
“ஏய் பல்லவி, மழையில நனைஞ்ச, உதை விழும்” மிரட்டினான். அவனிடம் உதடு சுளித்துக் காட்டி விட்டு, கனிமொழியிடம் சென்றாள் பல்லவி.
மழை மெல்லத் தூறலாகப் பொழியத் தொடங்கி இருந்தது. அவள் கேட்காமலேயே வெங்காயப் பக்கோடா போட தொடங்கினார் கனிமொழி. தேவா எழுந்து வந்து இஞ்சி டீ போட்டு அவளிடம், பக்கோடாவுடன் நீட்டினான்.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இதே போல் ஒரு மழை நாளில், இதே இடத்தில் நின்றது நினைவில் வந்தது.
இன்று வாழ்க்கை எவ்வளவு மாறி விட்டது. அன்று போல அவர்களுக்குள் இடைவெளி இல்லாமல், கணவனை இடித்துக் கொண்டு நின்றாள் பல்லவி.
மெல்ல தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு அந்தப் பார்வையை நன்றாகத் தெரியுமே.
“நோ பல்லவி” என்று வேகமாக மறுத்தான் தேவா. அவள் முகம் சட்டென வாடிப் போனது.
கையில் இருந்ததை ஓரமாக வைத்து விட்டு, அவனை விட்டுத் தள்ளி நின்றாள் அவள்.
கை நீட்டி அவளை இழுத்து, “என்ன?” என்றான் அவள் கண்களைப் பார்த்து,
“மழையில ஒரே ஒரு கிஸ் தேவா” என்று அவள் மூக்கை சுருக்கி, உதடு குவித்துக் கேட்க, அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
அவள் எப்போதுமே கண்ணை உறுத்தாத அழகு தான். இப்போது தாய்மை அவளை இன்னும் அழகியாக்கி இருந்தது. விழிகளை மனைவியின் மேலிருந்து எடுக்க முடியாமல் தடுமாறினான் தேவா.
“தேவா” என்று அவள் அழைக்க,
“மழையில நனைய எப்படி எல்லாம் காரணம் தேடுற நீ?” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க, படக்கென்று அவன் கைப் பிடித்து இழுத்து, அவர்கள் முன் இருந்த இரண்டு படியையும் கடந்து மழையில் நின்றிருந்தாள் பல்லவி. வீட்டின் பின் பகுதி முழுவதையும் தன் பெரிய பெரிய கரங்களைக் கொண்டு, மாமரம் மறைத்திருக்க, மழை அத்தனை நனைக்கவில்லை அவர்களை.
“ஏய் பல்லவி” எதிர்பாரா அவளின் செயலில் அதிர்ந்து கத்தினான் தேவா.
மழை தன் பல்லவியைத் தாண்டி சரணத்தை அவர்கள் இருவரின் மேலேயும் எழுதத் தொடங்கி இருந்தது.
“அடி வெளுக்கப் போறேன் உன்னை” அவன் கோபத்துடன் மேலே பேசு முன், அவன் கழுத்தை வளைத்து அழுத்தமாக முத்தமிடத் தொடங்கி இருந்தாள் பல்லவி.
தேவாவின் உடலில் இருந்த பதட்டம் மொத்தமும் மெல்ல வடியத் தொடங்கியது.
அவனை இடித்துக் கொண்டிருந்த மனைவியின் நிறைமாத வயிற்றில் மென்மையாகக் கரம் பதித்தான்.
அம்மாவை போலவே வயிற்றில் இருந்த குழந்தையும் மழை பிரியர் போல, வேகமாக நகர்ந்து உதைக்கத் தொடங்கியது. அதை உணர்ந்ததும், அவளின் இதழ்களுக்குள் சிரித்தான் தேவா.
அவன் எண்ணம் போன திசையை அறிந்தவளாக நொடி நேரம் அவனிடம் இருந்து விலகி, பதில் சொன்னாள் பல்லவி.
“குழந்தையும், அம்மாவும் மழையைப் பார்த்தா மட்டுமில்ல. தேவாவை பார்த்தாலும் குஷியாகிடுவோம்” கண் சிமிட்டி சொன்னாள் பல்லவி. தேவா மலர்ந்து புன்னகைத்தான்.
மழை முத்து முத்தாகப் பல்லவியின் முகத்தில் விழ, கண்ணை மூடி மூடித் திறந்தவளின் அழகில் மயங்கியவனாக, மென்மையாக அவளின் இடை வளைத்து, அதை விட மென்மையாக முத்தமிடத் தொடங்கினான் தேவா.
அவளில் மொத்தமாக மூழ்கிக் கொண்டிருந்தவனிடம் இருந்து மெல்ல விலகி, மூச்சு வாங்கினாள்.
அவன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “அத்த, தேவா மழையில் நனையறான்” என்று கத்தி விட்டு வேகமாக வீட்டுக்குள் போகப் போனவளை, அவளை விட வேகமாக ஓடி, இழுத்து அணைத்து நிறுத்திப் பிடித்தான் தேவா.
“இவ்வளவு பெரிய வயிறை வச்சிட்டு ஓடப் பார்க்கற. மெல்ல நட” அவன் அதட்டிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டார் கனிமொழி.
“என்ன தேவா? இதென்ன விளையாட்டு? இன்னும் ஒரு வாரத்தில அவளுக்கு டெலிவரிக்கு நாள் கொடுத்து இருக்கு பா. இப்போ போய், நீ நனையுறது மட்டுமில்லாம, அவளையும் சேர்த்து மழையில் நனைய வச்சிருக்க? என்னப்பா, இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்க?”
வெடித்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றாள் பல்லவி.
தேவா பதில் பேசாமல் அமைதியாக நிற்க, “என்னப்பா பேசாம பார்த்திட்டு நிக்கற? போங்க, ரெண்டு பேரும் வேகமாகப் போய் வேற துணி மாத்துங்க. சளி பிடிக்கப் போகுது” விடாமல் மகனை விரட்டினார் அவர்.
தேவாவின் கைப் பிடித்து அறையை நோக்கி நடந்தாள் பல்லவி.
கனிமொழிக்கு முதலில் இருந்தே, இது பல்லவியின் விளையாட்டு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அன்றும் சரி. இன்றும் சரி, அவளைத் திட்ட தான் அவருக்கு மனது வராது.
“கடவுளே எம் பிள்ளை நல்லபடியா குழந்தையைப் பெத்து எடுக்கணும்.” சத்தமாக வேண்டிக் கொண்டே, சூடாகக் காய்கறி சூப் தயாரிக்க அடுப்படியை நோக்கி நடந்தார் அவர்.
இங்கே மனைவியைச் செல்லமாக முறைத்துக் கொண்டே, அவள் உடை மாற்ற உதவி கொண்டிருந்தான் தேவா.
“சாரி தேவா” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டு, “இட்ஸ் ஓகே டா பல்லவி” என்றான் அவன். இருவரும் ஒன்றாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
மறுநாள் அடைமழை அடித்து வெளுத்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு வாரம் காத்திருக்கும் பொறுமை இன்றி, அன்றே பல்லவியை வலியில் துடிக்க வைத்து, மனைவி துடிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் தேவாவை தவிக்க வைத்து, தானும் சத்தமாக அழுதபடி மழை நாளில் பிறந்தான், வருண் தேவராஜன்.
மகனை கையில் வாங்கிய நொடி, முதல் முறையாக அந்தக் குழந்தைகள் நல மருத்துவனின் கைகள் நடுங்கியது. கண்கள் கலங்க, உதடுகள் புன்னகைத்தது.
அறையில் இருந்த மருத்துவக் குழுவுடன் அவனும் இருக்க, சுற்றியிருந்த அத்தனை பேரையும் பொருட்படுத்தாமல், பல மணி நேர போராட்டத்தில் சோர்ந்து கண்களை மூடி, மயக்கத்தில் அமிழ போன மனைவியின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் தேவா.
“தேங்க்ஸ் டா பல்லவி” கரகரத்த குரலில் சொன்னான்.
“தே….வா” முனங்கலாக வந்தது அவள் குரல்.
“என்னடா பல்லவி” அவனை இன்னும் பக்கத்தில் வரும்படி கண் காட்டினாள் பல்லவி.
அவளின் முகத்துக்கு நெருக்கமாகத் தன் முகத்தைக் கொண்டு சென்றான் தேவா. கணவனையும், மகனையும் விழிகளை அசைத்து மாறி மாறிப் பார்த்த பல்லவி,
“அழகா இருக்கத் தேவா. இப்படியே குட்டி பையனோட ஒரு ஃபோட்டோ எடுத்து வை. எனக்கு வேணும்” முணுமுணுப்பாகச் சொன்னாள். மேலே பேச முடியாமல், மெலிதாகப் புன்னகைத்து, உறக்கத்தில் அமிழ்ந்து போனாள் பல்லவி.
முகம் நிறைத்த முறுவலுடன் அழுத்தமாய் மனைவியின் நெற்றியில் இதழ் ஒற்றினான் தேவா.