வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில் மகிழ்ச்சிப் பொங்க சொன்னான்.
“பல்லவியின் தேவராஜன், அப்பா ஆகப் போறாங்க” என்றாள் பல்லவி. உடல் குலுங்க சத்தமாகச் சிரித்தான் தேவா.
“எல்லாமே கனவு போல இருக்குப் பல்லவி” என்று அதிசயித்தான் தேவா. அவளை அழுத்தமாய் முத்தமிட்டு, உண்மை தான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.
மெல்ல மெல்ல அவன் முன்னேற, “தேவா, டாக்டர் கிட்ட கேட்கல” என்று மென்குரலில் பல்லவி மறுக்க,
“இந்த டாக்டருக்கு பொண்டாட்டியை, என் பல்லவியை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு தெரியும்”
சொன்னவன், அத்தனை மென்மையாய் தன் காதலை, அவள் கர்ப்பம் என்பதும் வந்த மனதின் நிறைவை, அப்பாவாகப் போகும் தன் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை முழுவதுமாக அவளுக்குக் கடத்தத் தொடங்கினான்.
மறுநாள் காலை, “அத்த, மாமா இங்க வாங்களேன்” என்று பல்லவி அழைக்க,
“என்ன பல்லவி மா” என்று வந்து நின்றனர் இருவரும்.
“அப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னாங்க. வாங்க போகலாம்” என்று அவள் சொல்ல, கேள்வியின்றி அவளுடன் வந்தார்கள் இருவரும்.
முந்தைய இரவே தேவாவிடம் தெளிவாகச் சொல்லி விட்டாள் பல்லவி. “வீட்ல நீங்க தான் சொல்றீங்க. எனக்குக் கூச்சமா இருக்கு தேவா” என்று, அவனும் “சரி” என்று விட்டான்.
இப்போது இரண்டு குடும்பத்தின் பெரியவர்களும் பல்லவி வீட்டின் ஹாலில் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, சூர்யா, பாரதி இருவரும் கூட அலுவலகம் கிளம்பாமல் அங்கு வந்து நின்றனர்.
அனைவரையும் ஒரு முறை கண்கள் உயர்த்திப் பார்த்த தேவா, “பல்லவி உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்னு சொன்னா மாமா” என்று சேதுராமனை பார்த்து சொன்னவன்,
“அப்பா உங்க கிட்ட இருந்து, நம்ம டிராவல்ஸை அவ பேருக்கு எழுதி வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தா” என்று கதிர்வேலனை பார்த்து அவன் சொல்ல, அனைவர் முகத்திலும் குழப்ப ரேகைகள்.
“ஆசிர்வாதம் பண்ணி பெரிய அமவுண்டா நீங்களே கொடுத்திடுங்க மாமா” என்று அவன் சிரிப்புடன் சொல்ல,
அவனைக் கேள்வியுடன் பார்த்து,”சரிப்பா தேவா” என்றார் சேதுராமன்.
“என்ன தேவா?” என்று கனிமொழி கேட்க,
அவனுக்குச் சிரிப்பாக வந்தது. நல்ல செய்தியை நேரடியாகச் சொல்ல முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவனது அவஸ்தையை, வெட்கத்தைக் கனிமொழியின் பக்கத்தில் நின்று கொண்டு ரசித்துப் பார்த்திருந்தாள் பல்லவி.
“டிராவல்ஸ் தானே டா பல்லவி. அது உனக்குத் தான் என்னைக்கு இருந்தாலும்…” என்று கதிர்வேலன் சொல்லிக் கொண்டே போக, இடையிட்ட தேவா,
“அப்போ பேரன், பேத்திக்கு ஒன்னுமில்லையா பா? எல்லாத்தையும் உங்க மருமகளுக்கே கொடுத்துட்டா, எட்டு மாசம் கழிச்சு வரப் போற பேரனுக்கோ, பேத்திக்கோ என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று கேட்க, பளிச்சென்று அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் வந்து விட்டிருந்தது.
கனிமொழி பக்கத்தில் இருந்த பல்லவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
தன் கடைக்குட்டி மகள் தாயாகப் போவதை நம்ப முடியா ஆச்சரியத்துடன் கண்கள் கலங்க பார்த்தார் கஸ்தூரி.
மகளை உச்சி முகர்ந்து, கண் கலங்கினார் அவர்.
மகளின் தலைக் கோதி ஆசிர்வதித்து, தன் சட்டை பையில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து மகளிடம் கொடுத்தார் சேதுராமன்.
“பேரன், பேத்தி யார் வந்தாலும் டிராவல்ஸ் உனக்குத் தான் பல்லவி” என்று சிரித்தபடி கதிர்வேலன் சொல்ல, மனம் நெகிழ்ந்து நின்றாள் பல்லவி.
மகளைத் தனது பக்கத்தில் அமர வைத்து, விவரங்களைக் கேட்க ஆரம்பித்தார் கஸ்தூரி. அவருடன் இணைந்து கொண்டார் கனிமொழி. பாரதியும் ஓடிப் போய்ப் பல்லவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கே அமர்ந்து விட்டாள்.
தேவா வேறு வழியின்றித் திரும்பி நண்பனை பார்த்தான்.
இருவருக்கும் சூர்யாவின் திருமண வரவேற்பு அன்று பேசிய பேச்சுக்கள் தான் நினைவில் வந்தது. சிரிப்பை மறைக்கப் படாதபாடு பட்டனர்.
சூர்யா, தேவாவின் எதிரே வந்து நின்றான்.
“தேவா..” என்று அவன் அழைக்க,
“டேய், நான் உன் தங்கச்சி புருஷன் டா” சூர்யா எதுவும் கிண்டலாகச் சொல்லி விடும் முன்பு முந்திக் கொண்டு சொன்னான் தேவா.
மெல்ல சிரிக்க ஆரம்பித்தான் சூர்யா. சிரித்துக் கொண்டே அவன் எதையோ சொல்ல வர, “வேணாம் சூர்யா. நான், உன் தங்கச்சி புருஷன்” என்று சொன்னதையே திரும்பச் சொன்னான் தேவா.
சத்தமாகச் சிரித்துக் கொண்டே, தேவாவை இழுத்து தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சூர்யா.
“கங்கிராட்ஸ் டா தேவா.” என்றான் முகம் மலர, வெட்கத்துடன், “தேங்க்ஸ் டா” என்றான் தேவா.
“வெட்கமா தேவா? பாரேன்” என்று சூர்யா வியக்க,
“உனக்கும் ஒரு நேரம் வரும் டா. அப்போ நான் என்ன பண்றேன் பாரு” என்று தேவா சிரிப்புடன் சொல்ல,
“திமிர் பிடிச்சவன், அடங்கவே மாட்டான்” முணுமுணுத்தான் சூர்யா.
அதற்குத் தேவா சிரிக்க, சூர்யாவையும் தொற்றிக் கொண்டது அச்சரிப்பு.
குடும்பமே புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தனர்.
பல்லவி கர்ப்ப காலம் முழுவதும் வேலைக்கும், டிராவல்ஸ் ஆஃபீஸிற்கும் செல்லவே செய்தாள். தேவாவும் அவளைத் தடுக்கவில்லை. கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டான் அவ்வளவே.
கனிமொழி அவள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததையும் செய்து நீட்டினார்.
மாமியார், நாத்தனார் சண்டைக்கு ஆசைப்பட்டவள், அது நடக்காது என்பது தெரிந்ததால், அம்மா, மகளுக்கு நடுவே சண்டையைக் கிளப்பி விட்டு உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தாள்.
“அத்த, வித்யா என்னை அண்ணி சொல்ல மாட்டேங்கறா.”
“அத்த, பூ பறிச்சு தர மாட்டேங்கறா”
“அத்த, துணி மடிச்சு தர மாட்டேங்கறா வித்யா” என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
“ஏன் வித்யா இப்படி இருக்க. அவ மாசமா இருக்கா டா. ஆசையா அண்ணின்னு கூப்பிட சொல்லி கேட்கறா இல்ல?. ஒரு முறை கூப்பிட்டா என்ன குறைஞ்சா போய்ட போற நீ?” என்று மகளைத் திட்டுவார் கனிமொழி.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, பல்லவியை முறைப்பாள் வித்யா. ஆனாலும், கோபம் எல்லாம் வராது. அவளுக்குத் தான் பல்லவியைப் பற்றி நன்றாகத் தெரியுமே.
“அடுத்த மாசம் உன்ன, நான் பாக்க வர மாட்டேன் போ” என்று கோபமாகச் சொல்வாள். ஆனாலும், மறக்காமல் மகன் விக்ரமை தூக்கிக் கொண்டு மாதம் ஒரு முறை அம்மா வீடு வந்து விடுவாள் வித்யா.
ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தினர். ஒரு வாரம் மட்டுமே அம்மா வீட்டில் இருந்தாள் பல்லவி. அதற்கு மேல் முடியாமல் தேவா வீட்டிற்கு வந்து விட்டாள்.