மழை மேகம் – 15 (1)

அவர்கள் ஆகும்பேவில் இருந்து ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அதன் பின்னர் மால்தீவ்ஸ் சென்று விட்டனர். அங்கும் திரும்பின பக்கம் எல்லாம் நீராக இருக்க, தங்கி இருந்த காட்டேஜ் கூடக் கடலுக்கு மேலே இருக்க, பல்லவி முகம் முழுக்க மகிழ்ச்சி மட்டும் தானிருந்தது. அதை அவள் முகத்தில் நிரந்தரமாக நிலைக்கச் செய்தான் தேவா. அவனுக்கும் அதையே திருப்பித் தந்தாள் பல்லவி.

அந்த ஒரு வார காலம் அவர்களை எல்லா விதத்திலும் நெருங்கி வரச் செய்திருந்தது. முன்னெப்போதையும் விட அவர்களுக்குள் புரிதலும், அன்பும், காதலும் பல மடங்கு கூடி இருந்தது.

அவர்களுக்குத் திருமணமாகி பதினைந்து நாட்கள் கடந்திருக்க, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தனர்.

திருமணம் இருவரின் தினசரி வாழ்விலும் பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்து விடவில்லை.

பல்லவி, தேவாவின் வீட்டிற்கு நிரந்தரமாக வந்து விட்டிருந்தாள். அவ்வளவு தான். மற்றபடி பிறந்த வீடு, புகுந்த வீடு என மாறி மாறி இருந்து கொண்டாள். அவளை எல்லா இடங்களிலும் வால் பிடித்தான் தேவா.

அவளது விருப்பம் தான் எதிலும் தேவாவிற்குப் பிரதானம்.

கனிமொழி பல்லவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார் என்றால் மிகையாகாது.

அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று அனைவருமே முன்பை காட்டிலும், இப்போது அதிகமாய் அவளிடம் பாசமாக இருந்தனர்.

தேவா அவளைக் கொண்டாடி தீர்த்தான். ஆர்ப்பட்டமாய் நேசித்தான். அளவில்லாமல் காதலித்தான். காமத்தை அவளையும் உணர வைத்தான். இரவுகளில் இனிமை கூட்டினான்.

இல்லறம் இனித்தது. மொத்தத்தில் அவள் வாழ்க்கை மழை நனைத்த பூமியாய் அழகாக மாறி இருந்தது.

கதிர்வேலனுடன் தேவா டிராவல்ஸ் தினமும் சென்றாள். பல நாட்கள் அவரை வீட்டில் உட்கார வைத்து விட்டு, அவளே அலுவலகத்தை முழுதாகக் கவனித்துக் கொண்டாள்.

கனிமொழி சந்தோசமாகக் கணவருடன் கோவில், சொந்த பந்தங்களின் வீடு, விஷேச வீடு என்று சுற்றி வந்தார்.

பல்லவி புதிதாக டூரிசம் மேனேஜ்மென்ட் படித்த ஒருவரை வேலைக்கு அமர்த்தி, மாமாவை கட்டாயப்படுத்தி அவருக்கு வேலையில் முழுமையான பயிற்சி அளிக்கச் செய்தாள்.

ஒரே வாரத்தில் அவர், தேவா டிராவல்ஸின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்போது டிராவல்ஸில் மேனஜர் என ஒருவருக்கு இருவர் இருக்க, கவலைகள் இன்றி, கணவனுக்குப் பிடித்த வேலையைப் பார்க்கப் போனாள் பல்லவி.

காலை நான்கு மணி நேரம் மட்டும் மீண்டும் பழையபடி, தான் படித்த படிப்புக்கான வேலைக்குச் செல்லத் தொடங்கினாள் பல்லவி.

மதியம் வீட்டிற்கு வந்து உணவை முடித்துக் கொண்டு, தேவா டிராவல்ஸ் சென்று விடுவாள்.

அவளது தினசரி வாழ்க்கை ஒரு சுழற்சியில் இயங்கத் தொடங்கியது.

அன்று மதிய உணவு முடித்து, கனிமொழியுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பல்லவி.

“நான் சொல்ற பொருளை எல்லாம் ஒரு லிஸ்டா எழுது டா பல்லவி. மாமா கிட்ட கொடுத்தா வாங்கிட்டு வந்து தந்திடுவாங்க” என்று அவர் சொல்ல,

“சரிங்க அத்த” என்றவள்,

“வீட்டு மளிகை, அப்புறம் மத்த பொருளுங்க தானே அத்த. நானும், தேவாவும் சாயங்காலம் போய் வாங்கிட்டு வர்றோம்” என்று அவள் சொல்ல,

“சரிடா” என்றார் கனிமொழி.

அவர் சொல்ல, சொல்ல எழுதத் தொடங்கினாள் பல்லவி.

“இந்தா, இது வித்யா இருக்கும் போது வாங்கறது. இப்போ பொம்பளை பிள்ளை நீ இருக்கியே. இதையும் சேர்த்து வாங்குங்க” என்று அவர் நீட்டிய பட்டியலை வாங்கி, அதில் இருந்ததை எழுதத் தொடங்கினாள்.

ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே வந்தவள், ஒரு நொடி நிறுத்தி விட்டு, பின்னர் எழுதுவதைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் எல்லாம், “நீங்க படுங்க அத்த. நான் தேவா பார்க்க போறேன்” என்று விட்டு, வாசலை நோக்கி நடந்தாள்.

“சரிடா. கவனம். வண்டியை மெதுவா ஓட்டிட்டு போ” என்று அவர் எச்சரிக்க, அதற்கு அவசியமே இருக்கவில்லை.

அவள் ஆட்டோ பிடித்துத் தான் கணவனைக் காண சென்றாள்.

திடீரென்று எதிர்பாரா நேரம் அறைக்குள் நுழைந்த மனைவியைப் புன்னகையுடன் ஏறிட்ட தேவா, “வாவ், என் ரூம் பளிச்சுன்னு‌ ஆகிடுச்சு” என்றபடியே எழுந்து அவளின் அருகில் வந்து, அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான்.

“உங்களுக்கு ஷிஃப்ட் முடியுற நேரம் தானே தேவா?” என்று அவள் கேட்க, “ஆமா டா” என்றவன், ரிசப்ஷன் அழைத்துத் தனது அப்பாயின்மெண்ட் செக் செய்து விட்டு நிமிர்ந்தான்.

“இன்னைக்கு அவ்ளோ தான் டா. வா, கிளம்பலாம். டாக்டர் பிரகாஷ் இருக்கார். அவர் பாத்துப்பார்” என்று விட்டு, அவனது கார் சாவி, வாலெட்டை கையில் எடுத்துக் கொண்டான்.

அறை வாயிலை நோக்கி நகரப் போனவள் ஒரு முறை நின்று அவனது அறையின் சுவரை அலங்கரித்து இருந்த புகைப்படங்களை ரசித்துப் பார்த்தாள்.

ஆம், அவளுக்குப் பிடித்த, அப்பா, குழந்தையை ஏந்தி நிற்கும் புகைப்படங்கள்.

மனைவியின் ரசனை தெரிந்த தேவாவும் அந்தப் புகைப்படங்களை அவள் ரசித்துப் பார்ப்பதை முப்பதாவது முறையாகத் தன் கைப்பேசியில் புகைப்படமாக எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு எப்போதும் அவள் தானே அதிசயம்.

“அழகு தேவா” என்றாள். மெலிதாகப் புன்னகையுடன் அவளை அணைத்தப்படியே கதவை திறந்தான் தேவா.

அடுத்த முப்பதாம் நிமிடம் வீட்டில் இருந்தனர்.

எப்போதும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாகக் குளித்து விடுவான் தேவா. இன்று உடை கூட மாற்றாமல் படுக்கையில் சரிந்தான்.

அவன் வேலை பார்ப்பது, இந்தியா முழுவதும் பல கிளைகளைக் கொண்டிருந்த கார்ப்பரேட் மருத்துவனை. சில நாட்கள் நிறைய அப்பாயிண்ட்மெண்ட் இருக்கும். இன்றும் அப்படியான ஒரு நாள் தான்.

அவன் கண்கள் தானாகச் சோர்வுடன் மூடிக் கொள்ள, அவனுக்குப் பக்கத்தில் போய், “தேவா” என மெல்ல அழைத்தாள் பல்லவி.

“என்னடா?” என்று கண் மூடியபடியே கேட்டவன், கை நீட்டி மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

“தேவா…” அவன் தாடையில் இதழ் உரசி அழைத்தாள் பல்லவி.

“ம்ம்ம்” சோம்பலாக வந்தது அவன் குரல்.

“தே…வா..” அழுத்தமாக அழைத்தாள். இதழ்களும் அழுத்தமாக உரசியது.

“ம்ம்ம்ம்ம்ம்” அவனும் அசையவில்லை.

“நமக்கு இருபதாம் தேதி கல்யாணம் ஆச்சா?” என்று அவள் கேட்க, அந்தக் கேள்விக்கு உடனே பதில் வந்தது.

“ஆமா டா. என்ன திடீர்னு அதைக் கேட்கற?”

“ப்ச், பதில் மட்டும் சொல்லு போதும்”

“ம்ம். ஆமா, இருபதாம் தேதி தான்” என்றான் உடனே,

“கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆச்சு?”

சற்று யோசித்து விட்டு, “ரெண்டு மாசம் முடியப் போகுது” என்றான்.

“எனக்குப் பீரியட்ஸ் எட்டாம் தேதி வந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி.” மெல்ல சொன்னாள்.

படக்கென்று கண் முழித்து, சட்டென அவளையும் அள்ளிக் கொண்டு, எழுந்து அமர்ந்திருந்தான் தேவா.

பல்லவியை அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“என்ன சொன்ன, என்ன சொன்ன?” படப்படத்தான்.

“ரெண்டு மாசமா பீரியட்ஸ் வரல தேவா” என்றாள் உதடு கடித்து, அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.

எப்படி, என்ன ரியாக்ட் செய்வது என்றே புரியாத நிலை அவனுக்கு. உறைந்து போய் அமர்ந்திருந்தான். பல்லவி தான் பேசினாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா எல்லாம் மாசமும் தேதி கேட்டுக் குறிச்சி வைப்பாங்க. இங்க வந்து நான் கவனிக்கவே இல்ல” என்றாள் மெல்லிய குரலில். அவனுக்குப் புரிந்தது.

அவளை அப்படியே கண் மூடி அணைத்துக் கொண்டான்.

“ஹோம் டெஸ்ட் கிட் வாங்கினேன். இப்போ டெஸ்ட் பண்ணவா?” என்று அவள் கேட்க, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய்ப் பாத்ரூமிற்குள் விட்டான் தேவா.

அவள் கேட்கவும் அவளின் கைப்பையை எடுத்துக் கொடுத்தான்.

சில நிமிடங்கள் கழித்து அவள் உள்ளே அழைக்க, இதயம் இரு மடங்கு வேகமாகத் துடிக்க, பல்லவி கையில் இருந்ததை, வாங்கிக் காத்திருக்கத் தொடங்கினான் தேவா.

ஒன்றுக்கு மூன்று கிட் வாங்கி வந்திருந்தாள் அவள். மூன்றிலும் டெஸ்ட் செய்திருந்தாள். தேவா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்றிலும் ரோஜா நிறத்தில் இரண்டு கோடுகள் அழுத்தமாக விழ ஆரம்பித்தன.

கையில் இருந்ததைப் பாத்ரூம் ஷெல்பில் பத்திரமாக வைத்து விட்டு, மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

அவளோ கைகளைக் கழுவி கொண்டிருந்தாள்.

“கங்கிராட்ஸ் சக்கர” தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் அவளை முத்தமிட்டுக் கொண்டாடினான்.

“தேவா, டாக்டர் பார்க்கலாம். வாங்க” என்று பல்லவி அழைக்க,

“நானே டாக்டர் தான் பொண்டாட்டி” என்று சிரிப்புடன் சொன்னான்.

“கைனக்காலஜிஸ்ட் பார்க்கணும் தேவா”

“வா, போகலாம்” அவன் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே அழைத்துப் போனான்.

மருத்துவர் இரண்டு மாத கர்ப்பத்தை ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்து, சத்து மாத்திரைகளை எழுதித் தர வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

அதே மருத்துவமனையில் இருந்த அவனது அறைக்குப் போகச் சொன்ன மனதை அடக்கிக் கொண்டு வெளியில் வந்தான் தேவா. மனம் நிறைத்திருந்த மகிழ்ச்சியை உடனே மனைவியிடம் வெளிப்படுத்த முடியாமல் தவித்த படி, காரை நோக்கி நடந்தான் அவன்.

வீடு நோக்கி வரும் போதே, “வீட்ல காலையில் சொல்லலாம் தேவா” என்று பல்லவி சொல்ல,

“ம்ம். சரி டா. நீ இன்னைக்கு டிராவல்ஸ் போகாததால, எப்படியும் அப்பா வீட்டுக்கு வர நைட் ரொம்ப லேட் ஆகும். சோ, காலையில ரெண்டு குடும்பத்தையும் ஒரே வீட்ல வச்சு சொல்லிடலாம்.” என்றான் அவன்.

“சரி” என்று தலையசைத்தாள் பல்லவி.

error: Content is protected !!
Scroll to Top