மழை மேகம் – 14

திருமணம் முடிந்த மறுநாள் காலையிலேயே தாங்கள் இருவரும் ஆகும்பே கிளம்புவதாக வீட்டில் தெரிவித்து விட்டான் தேவா.

அவனுக்கு விடுமுறை தினங்கள் குறைவாகவே இருந்ததால் வீட்டினரால் அவர்களது பயணத்தைத் தடுக்க முடியவில்லை. அதுவும் தேனிலவு போலச் செல்ல விரும்பியதை மறுக்க மனமில்லாமல், இரு வீட்டு பெரியவர்களும் அரை மனதாக ஒப்புக் கொண்டனர்.

காலை எட்டு மணிக்கு, உணவை முடித்துக் கொண்டு, தேவாவின் காரிலேயே செல்லும் எண்ணத்துடன் அவர்கள் இருக்க, கதிர்வேலன் அதைக் கடுமையாக எதிர்த்தார். அதைப் பல்லவி வீட்டுப் பெரியவர்களும் ஆதரித்தனர்.

“இல்லப்பா தேவா. அவ்ளோ தூரம் நீயே வண்டி ஓட்டிட்டு போக வேணாம். அதுவும் பகல்ல, வேணாம் பா.” என்றவர்,

“நான் டிரைவர் ஏற்பாடு பண்றேன். அவன் காரை ஓட்டிட்டு வரட்டும்” என்று அவர் முடிவாகச் சொல்ல,

“அப்பா..” என்றான் தேவா.

‘நாங்க போவது ஹனிமூன் பா’ என்று மனதில் புலம்பிக் கொண்டே அவரைப் பார்த்தான் தேவா.

“டிரைவரை உங்களை அங்க விட்டுட்டு திரும்பி வந்திட சொல்றேன் பா. இல்லனா, அவர் பெங்களூர்ல இருக்கட்டும். நீங்க திரும்பி வரும் போது, அவரே கூட்டிட்டு வந்திடுவார். அப்படியே இன்னொரு விஷயம் பா. நேத்து தான் கல்யாணமாகி இருக்கு. இன்னைக்கு ஒரு பொழுது வீட்ல இருந்துட்டு, சாயங்காலம் போலக் கிளம்புங்க. நாளைக்குக் காலைல அங்க போய்டலாம்” என்று அவர் சொல்ல, தங்கள் பாதுகாப்பை கருதி தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட தேவா,

“சரிங்கப்பா” என்று விட்டான்.

பின் காலை பொழுதில் வீட்டுக்கு வந்த சூர்யா தான், அவர்கள் ஆகும்பே செல்வதற்கு முதல் தடையைப் போட்டான். ஆனால், தேவாவை அதெல்லாம் தடுக்குமா என்ன?

“டேய் தேவா. என்கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல மாட்டியா? நான் உங்களுக்கு மால்தீவ்ஸ் போக டிக்கெட் போட்டுட்டேன் டா. அதுவும் இல்லாம, அங்க நீங்க ஒரு வாரம் தங்க ரிசார்ட் எல்லாம் புக் பண்ணிட்டேன். இப்ப வந்து கர்நாடகா போறேன்னு சொல்ற?” என்று படபடத்தான் சூர்யா.

“என்ன சொன்ன?” என்று நிதானமாகக் கேட்டான் தேவா.

அந்தக் குரலுக்குச் சுதாரித்த சூர்யா, “என்னடா தேவா?” என்று அமைதியாகக் கேட்க, மீண்டும் முன் தின சீண்டலை தொடங்கினான் தேவா.

“நான் உன் வீட்டு சின்ன மாப்பிள்ளை டா. என்னைக் கேட்காம நீ எப்படி டிக்கெட் போடலாம்? அதை முதல்ல சொல்லு? என்னைக் கேட்காம டிக்கெட் போட்டுட்டு, இப்ப வந்து என்னை மிரட்டிட்டு இருக்க. அதுவும் நான் நேத்து அவ்ளோ சொல்லியும் காதுலயே வாங்காம, இப்பவும் எனக்கு மரியாதை கொடுக்காம வேற பேசுற. ம்ம்” என்று தேவா இழுக்க, மனதில் எழுந்த கடுப்பை வெளிக் காட்டி கொள்ளாமல் சிரித்தபடி நின்றான் சூர்யா.

தேவாவிற்கு அவன் நிலையைப் பார்க்கும் போது சிரிப்பாக வந்தது. மீசை மடித்துச் சிரிப்பை விழுங்கினான்.

‘இந்தத் திமிர் பிடிச்சவனை வச்சுட்டு’ என்று மனதில் மட்டுமே சூர்யாவால் புலம்ப முடிந்தது.

“ரொம்பப் பண்ணாத தேவா” என்று அவன் அலுத்துக் கொள்ள, அப்போது அவர்களைக் கடந்து போன சேதுராமனை சத்தமாக அழைத்தான் தேவா.

“மாமா, ஒரு நிமிஷம்” என்று அவன் கூப்பிட,

“சொல்லுங்க மாப்பிள்ளை” என்றபடி வந்தார் அவர். சிறு நமுட்டு சிரிப்புடன் நண்பனை திரும்பிப் பார்த்தான் தேவா.

“என்னங்க மாமா நீங்க. நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல. தேவா சொல்லிக் கூப்பிடுங்க மாமா” என்றவன்,

“கர்நாடகா போய்ட்டு ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவோம் மாமா. பிளீஸ், உங்ககிட்ட முன்னாடியே சொல்லாததுக்குக் கோவிச்சுக்காதீங்க மாமா” என்று அவன் சொல்ல, அவன் தோளில் தட்டி,

“பத்திரமா போய்ட்டு வாங்கப்பா. மறுவீடு எங்க போகப் போகுது. இந்தா இருக்க நம்ம வீடு தானே?” என்று விட்டு அவர் நகரப் போக,

“அப்புறம் மாமா, இந்தச் சூர்யா ஏன் இப்படி இருக்கான்?” என்று நண்பனை கோர்த்து விட,

“என்னப்பா தேவா?” என்று அவர் யதார்த்தமாகக் கேட்க,

“நம்ம பாரதியோட தம்பி, இவனுக்கு மரியாதை கொடுத்து கூப்பிடலைன்னு புலம்பிட்டு இருக்கான் மாமா.” என்று அவன் சொல்ல,

“இப்ப இருக்கப் பசங்களுக்கு எங்க மரியாதை தெரியுது? உறவுக்கு சரியா மரியாதை கொடுத்து எங்க பேசுறாங்க. ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னவர்,

“விடுப்பா சூர்யா. உங்களை எல்லாம் பார்த்து அவனும் சீக்கிரம் கத்துப்பான்” என்று விட்டு அவர் விலகி செல்ல, தேவா சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

“கேட்டுக்கோ டா, உன்னைப் பார்த்துக் கத்துக்கனுமாம். நீயே வீட்டு மாப்பிள்ளையை டா போட்டு தான் பேசுற” என்று அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி நக்கலாகச் சொல்ல,

“மாப்பிள்ளை, தெரியாம பேசிட்டேன் மாப்பிள்ளை. நீங்க ஆகும்பே பத்திரமா போய்ட்டு வாங்க மாப்பிள்ளை. உங்களைக் கேட்காம, டிக்கெட் போட்டது என் தப்பு தாங்க மாப்பிள்ளை. இனி மேல் இது போல நடக்காது மாப்பிள்ளை. ரொம்பச் சாரி மாப்பிள்ளை” என்று வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை போட்டுச் சூர்யா பேச, தேவா சத்தமாகச் சிரிக்கத் தொடங்கி இருந்தான். கூடவே பெண் குரலும் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே பாரதி நின்றிருந்தாள்.

“வாம்மா, ‍காய்ச்சல் எப்படி இருக்கு?” என்று தேவா கேட்க,

சிரித்துக் கொண்டே,

“இப்போ, பரவாயில்லை ண்ணா” என்றாள் பாரதி. ஆனாலும், கணவனைப் பார்த்து சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை.

பாரதிக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து, இப்போது தான் ஓரளவு சரியாகி இருந்தது. கடந்த நான்கு நாட்களாகக் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டாள் அவள். திருமண நேரத்தில் மிகவும் சோர்வாக உணர்ந்ததால் அவள் முக்கியச் சடங்குகளில் மட்டுமே கலந்து கொண்டாள். இப்போதும் லேசான காய்ச்சல் இருக்கவே செய்தது. ஆனால், ஓய்ந்து அமர்ந்து விடாமல், எழுந்து பல்லவியைப் பார்க்க வந்திருந்தாள் அவள்.

“ஏன் சூர்யா, இப்படி இருக்கீங்க? வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?” என்று அவளும் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்க,

இருவரையும் எதுவும் செய்ய இயலா கோபத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சூர்யா. ஒரு நொடி தீவிர சிந்தனைக்குப் பின், ரெண்டு எட்டு எடுத்து வைத்து, நண்பனை நெருங்கி,

“சத்தியமா, மரியாதை எதிர்பார்க்கறியா தேவா?” என்று அவன் வெகு தீவிரமாகக் கேட்க, பக்கென்று சிரித்து விட்டான் தேவா. பாரதியும் சிரிக்க, சூர்யா முழித்துக் கொண்டு நின்றான்.

தேவா நண்பனை, இப்போது மனைவியின் அண்ணனை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டான். நண்பர்கள் பேச இடம் கொடுத்து, விலகி போனாள் பாரதி.

“சாரி டா சூர்யா. உன்கிட்ட விளையாடாம, யார்கிட்ட விளையாட போறேன். சொல்லு?” என்று தேவா சொல்ல, பெரிதாக ஆசுவாச பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியிட்டான் சூர்யா.

“வெண்ண, என்னை வச்சு செஞ்சுட்ட இல்ல. உனக்கு இருக்கு டா” என்று தேவாவின் தோளில் அடித்தான் சூர்யா. தேவாவின் சிரிப்பு நிற்கவேயில்லை.

“சரி. பார்த்து, கவனமா போய்ட்டு வாங்க” என்று சூர்யா சொல்ல,

“ரெண்டு நாள்ல வந்திடுவோம் சூர்யா. அப்புறம் மால்தீவ்ஸ் போறோம். ஓகே?” என்று கேட்க,

“ம்ம். சரி டா” என்ற சூர்யா,

“ஆகும்பே போயே ஆகனுமா டா?” என்று கேட்க, எரிச்சலுடன் கண்களை மூடித் திறந்தான் தேவா.

“இல்லடா, அந்த ஊர் அவ்வளவு சேஃப் இல்லைனு… அட்டைப் பூச்சி, ராஜநாகம் எல்லாம் அதிகம் இருக்க இடம். அதான், வேண்டாமேன்னு” சூர்யா தயக்கத்துடன் இழுக்க,

“டேய், நாங்க என்ன ட்ரெக்கிங்கா போறோம்? அட்டைப் பூச்சி, ராஜநாகத்துக்குப் பயப்பட?” எரிச்சலுடன் கேட்டான் தேவா.

“சரி, சரி தேவா. ஆனா, பார்த்து, பத்திரமா போய்ட்டு வாங்க” என்று அரை மனதாகச் சம்மதித்தான் சூர்யா.

சூர்யா கவலைப்படவும் காரணம் இருந்தது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி பகுதியில் இருக்கிறது ஆகும்பே. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகான ஊர்களில் இதுவும் ஒன்று.

கண்ணை நிறைக்கும் பசுமையை மட்டுமே கொண்டிருக்கும் இந்த ஊரில் தான் இந்தியாவின் மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மழை பொழிவை கொண்ட ஊரான சிரபுஞ்சியை அடுத்து, அதிக மழை பொழிவை கொண்ட பகுதியும் இது தான்.

அடர்ந்த மழைக்காட்டினைக் கொண்டுள்ள இந்த இடம் தெற்கின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது இந்தியாவிலேயே அதிக ராஜநாகங்கள் வசிக்கும் இடமும் இது தானாம். எந்த அளவிற்கு என்றால், “கோப்ரா கேபிடல்” என்ற பெயரை பெரும் அளவிற்கு.

அதனால் தான் சூர்யா பயந்ததும், ஆனால் தேவா அலட்டிக் கொள்ளவேயில்லை. ஏனென்றால் அவர்கள் என்ன ஊர் சுற்றியா பார்க்கப் போகிறார்கள். அவர்கள் போவது தேனிலவு கொண்டாட, ஒருவரை ஒருவர் கொண்டாடி தீர்க்க, இதில் ராஜநாகம், அட்டைப் பூச்சி எல்லாம் அவன் கவனத்திலேயே இருக்கவில்லை.

அவன் கவனித்தது மழை ஒன்றை பற்றி மட்டும் தான்.

“ஆமா, என் தங்கச்சி எங்க காணோம்?”

“தூங்கறா” என்றான் தேவா.

“என்ன? தூங்கறாளா? இந்நேரமா? ஏன் என்னாச்சு?” என்று சூர்யா பதற, தேவாவிற்குப் படாரென்று தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

“டேய், எந்நேரமும் அண்ணனாவே இருக்காதா என்ன?” என்று விட்டு தேவா விலகி செல்ல,

“டேய் தேவா” கத்தினான் சூர்யா.

“டேய், வெளக்கெண்ண. ஏதாவது சொல்லிடப் போறேன். போடா” என்று விட்டு நடந்தான் தேவா.

‘அப்படி என்ன கேட்டேன்னு, இவன் கோவிச்சுட்டுப் போறான்?’ என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான் அந்தப் பாசக்கார அண்ணன் சூர்யா.

அதற்கு அடுத்து வந்த இரு நாட்களும் மழையிலும், காதல் மழையிலும் தான் நனைந்தார்கள் பல்லவியும், தேவாவும்.

அங்குப் பெரிதாக ஹோட்டல், ரிசார்ட் என்று எதுவும் கிடையாது. தேவா, ஹோம் ஸ்டே புக் செய்திருந்தான். அவர்களுக்கு அங்கு எதிர்பார்த்த அளவு தேவையான அடிப்படை வசதியும், தனிமையும் வாய்த்ததில் அவனுக்கு வெகு திருப்தி.

தேவா உறக்கத்தில் இருக்க, அறையை ஒட்டி இருந்த பால்கனியில் நின்று மழைச் சாரலில் நனைந்து கொண்டிருந்தாள் பல்லவி.

ஆயிரம் ஊசிகள் கொண்டு முகத்தில் மிக மிக மென்மையாக யாரோ குத்துவது போலிருந்தது. கூடைப் பூக்களை ஈரமாக யாரோ தலையில் கொட்டுவது போல இருந்தது. கண்ணைச் சிமிட்டி, சிமிட்டி மழையைத் தனக்குள் வாங்கிக் கொண்டிருந்தாள் பல்லவி.

அவள் கைகள் இரண்டையும் விரித்து மழையில் நனைந்து கொண்டே, ஒரு வட்டம் அடிக்க, அவளின் வட்டம் தேவாவின் கைகளில் முடிந்திருந்தது. அவளை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவனும் பூந்தூறலாய் விழுந்து கொண்டிருந்த மழையில் நனையத் தொடங்கினான்.

இருவரையும் மழை தொட்டுத் தழுவி, மெல்ல நழுவி தரையில் கரைந்தது.

லட்சம் மழைத் துளிகள் ஆசீர்வதிக்க, பல்லவியின் முகம் பற்றி, தன் காதல் மொத்தத்தையும் அவளுக்கு முத்தமாகக் கடத்த தொடங்கினான் தேவா. மழை நாளின் முத்தம் இத்தனை இனிக்கும் என்று கற்பனை செய்திருக்கவில்லை அவர்கள்.

மழை உடலை நனைக்க, முத்தமும், அதன் வழியாகக் கடத்தப்பட்ட அன்பும் இருவரின் இதயத்தையும் நனைத்து நிறைத்தது.

மழை பார்வையை மறைக்க, இமை மூடித் திறந்து, சிரித்துக் கொண்டே மனைவியைப் பார்த்து, “மழைக் காதலி” கிசுகிசுத்தான் தேவா.

“தேவாவின் காதலி” பட்டென்று பதில் கொடுத்தாள் பல்லவி. கண்கள் மின்ன அவளை முத்தமிட்டான் தேவா.

சட்டென மழை வலுக்க, மனைவியை அணைத்திருந்த தேவாவின் கரங்களும் தன் வலிமையைக் காட்டியது. அப்படியே அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு அறைக்குள் போனான் தேவா.

இப்போது அறைக்குள் காதல் மழை வலுத்தது.

மழை நனைத்தது!!!

error: Content is protected !!
Scroll to Top