வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள் பல்லவி.
அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்குத் துணையாக அங்கேயே நின்றிருந்தாள் சங்கவி.
“என்னை ஆள விடுங்க ரெண்டு பேரும். எனக்குச் சேலை கட்டத் தெரியும். தலை சீவ தெரியும்” சலித்துக் கொண்டு சொன்னாள் பல்லவி.
“குட்டி பிசாசே, பேசாம உட்காரு” என்ற சங்கவி, ஏற்கனவே அழகாகப் பின் குத்தி இருந்த தங்கையின் சேலை முந்தானையில், மேலும் இரு பின்களைக் குத்தி விட்டாள்.
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, சேலையைச் சரி செய்யும் சாக்கில், பின்களைக் குத்தி விட, எரிச்சலுடன் கண்ணை உருட்டினாள் பல்லவி.
“ஏன் இப்படி லூசு மாதிரி பண்ற சங்கவி? அவ உன் தங்கச்சி. தேவா, என் அண்ணா” என்று பல்லைக் கடித்தபடி சங்கவியின் காதில் முணுமுணுத்தாள் வித்யா.
பதிலுக்குச் சங்கவி உதடு சுளிக்க, “என் அண்ணனை பழி வாங்க டிரை பண்றியா? உனக்குத் தான், உன் தங்கச்சியைப் பத்தி தெரியல” என்று கிசுகிசுத்து, கிளுக்கி சிரித்தாள் வித்யா. அவளைக் கடுப்பாகப் பார்க்க முயன்று முடியாமல் தானும் சிரித்து விட்டாள் சங்கவி.
“நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்” என்று அவளை வெளியில் துரத்தி விட்டாள் வித்யா.
மெல்ல தங்கையின் முகம் பற்றி, “பி ஹேப்பி டா பல்லவி” என்று விட்டுச் சங்கவி செல்ல, புன்னகைத்தாள் பல்லவி.
வித்யா அவளுக்கு மல்லிப் பூவை அழகாக வைத்து விட்டுக் கொண்டே, “பல்லவி” என்று அழைக்க, கண்ணாடியில் வித்யாவின் கண்களைப் பார்த்தாள் பல்லவி.
“தேவாக்கு குழந்தைங்க ரொம்பப் பிடிக்கும். தெரியும் இல்ல?” என்று கேட்க,
“ஓ, ஏன் தெரியாம? குழந்தைகள் நல மருத்துவர் ஆச்சே” என்று விட்டு சிரித்தாள் பல்லவி.
“ம்ம், அப்போ சீக்கிரம் குழந்தை…” என்று வித்யா ஆரம்பிக்க,
“நீ கவலைப்படாத வித்யா. இன்னைக்கு வரைக்கும் தேவா தனியா கிளினிக் வைக்காம இருக்கான், இல்ல? நான் பதினாறு பெத்து, சொந்த புள்ளைங்களுக்காக டாக்டரை கிளினிக் வைக்க வச்சுடுறேன்” என்று பல்லவி கண் சிமிட்ட, சத்தமாகச் சிரித்து விட்டாள் வித்யா.
அதுவரை மாடியில் அலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிக் கொண்டிருந்து விட்டு, கீழே இறங்கி வந்த தேவாவின் காதில் அவளின் பேச்சு விழ, பதட்டமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது அவனுக்கு.
“ஆனா, ஒரு கண்டிஷன்…” என்று பல்லவி இழுக்க,
“என்ன?” என்று சந்தேகமாகக் கேட்டாள் வித்யா.
“நான் தேவா பொண்டாட்டி. உனக்கு அண்ணா பொண்டாட்டி. சோ, அண்ணி. என்னை, நீ அண்ணி சொல்லி கூப்பிடு. நான் உன்னை அத்தை ஆக்குறேன்” என்று அவள் பேரம் பேச, மௌனமாய்த் தனக்குள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் தேவா.
“என்னை விட அஞ்சு வயசு சின்னப் பொண்ணு நீ. உன்னை, நான் அண்ணி சொல்லி கூப்பிடனுமா? முடியாது போ” என்று வித்யா சொல்ல,
“உன் அண்ணனை யாரு, அவனை விட ஆறு வயசு சின்னப் பொண்ணைக் கட்ட சொன்னது?” என்று பதில் கேள்வி கேட்டாள் பல்லவி.
“ஐயோ” என்று வித்யா முழிக்க, அந்நேரம் அங்கே கனிமொழி வந்து அவளைக் காப்பாற்றினார்.
பெரிவர்களிடம் ஆசிப் பெற்றுக் கொண்டனர் மணமக்கள்.
“ஆளை விடுங்க டா, சாமிகளா” என்று மெல்ல புலம்பிக் கொண்டே தேவாவின் அறைக்குள் நுழைந்தாள் பல்லவி.
உள்ளே வந்ததும் கண்ணை அறைந்த, அறையின் அலங்காரம் அவளை மிரள வைப்பதாக இருந்தது.
பூக்களும், வாசனை திரவியமும் தலை வலியை கொடுக்கும் போலிருந்தது.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நடந்து வந்து அவளை நெருங்கிய தேவா, ஒரு கையால் அவளை உள்ளே இழுத்து, அறைக் கதவை தாழிட்டான்.
“அச்சோ தேவா. அத்த கூப்பிடுறாங்க. கேட்கல?” என்று அவள் கேட்க, பதட்டத்தில் உளறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட தேவா,
“கேட்கலயே பல்லவி” என்று நிதானமாகப் பதில் சொன்னான்.
அவள் உதடு கடித்து நிற்க, சிரித்துக் கொண்டே, அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான் தேவா.
“தேவா, தேவா, என்னைக் கீழ இறக்கி விடு” பதறி அடித்துக் கத்தினாள் பல்லவி.
“ஓகே, இறக்கி விடுறேன். நீ, முதல்ல டிரஸ் மாத்தி்க்கோ. சேலையோடவா தூங்கப் போற?” என்றவனை, விசித்திரமாகப் பார்த்தாள் பல்லவி.
அவளை மெல்ல தரையில் இறக்கி விட்டவன், அவள் பார்வையைக் கவனித்து விட்டு, “என்ன?” என்று கேட்க,
“என்ன தேவா?” அவளுக்குக் குரலே வரவில்லை.
மெலிதான முறுவலுடன் அவளைப் பார்த்தவன், நெருங்கி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
“பல்லவி தேவராஜன்” என்று அவன் கிசுகிசுப்பான குரலில் அவள் காதில் சொல்ல, அவளுடல் சிலிர்த்து அடங்கியது.
“பல்லவி. இதோ… இதோ என் பல்லவி” இதற்கு முன் இத்தனை இனிமையாய் தேவாவின் குரல் அவளுக்கு ஒலித்ததே இல்லை.
அவனின் இரு கரங்களும், அவளின் தோளில் பதிந்தன. தலை முதல் கால் வரை அவளை நிதானமாக ரசித்துப் பார்த்தான் தேவா.
சில நொடிகள் அவன் கண்கள் அவள் கழுத்தில் இருந்த, அன்று காலை அவன் கையால், அவள் கழுத்தில் ஏறியிருந்த திருமாங்கல்யத்தில் அப்படியே நிலைத்து நின்றது.
அவள் தோளில் இருந்து கையை விலக்கி, இரு கரங்களிலும் அவள் முகத்தைப் பற்றி, அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே குனிந்து அவளிதழ்களில் முத்தமிட்டான்.
இதழ்கள் தீண்டிய நொடி, இருவரின் விழிகளும் தானாகவே மூடிக் கொண்டது. நீண்டதொரு முத்தத்தை அவளுக்குக் கொடுத்து, அவளிடமும் பெற்றுக் கொண்டு மெல்ல விலகி, நிமிர்ந்தான் தேவா.
“முதல் முத்தம். வாவ். அமேசிங்” என்று வியந்தவனின் கழுத்தில், வெட்கத்துடன் முகம் புதைத்தாள் பல்லவி.
“ட்ரெஸ் மாத்திட்டு வா, பல்லவி” என்று அவனது அறையின் ஓரமாய் இருந்த உடை மாற்றும் பகுதியை கைக் காட்டினான்.
சங்கவியைத் திட்டிக் கொண்டே ஒவ்வொரு பின்னாகச் சேலையில் இருந்து நீக்கினாள் பல்லவி.
அவள் இலகுவான இரவு உடைக்கு மாறி வர, இங்கே படுக்கையில் சாய்ந்து, அலைபேசியில் மூழ்கியிருந்தான் தேவா.
அவளைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்தான். அவனுக்கு மறுபக்கமாகச் சென்று அவள் படுக்கையில் சரிய, ஒற்றைக் கையால் அவளை இழுத்து அணைத்தவன், “டையர்டா இருப்ப, தூங்கு பல்லவி” என்றான்.
அவனை விழி விரித்துப் பார்த்தாள் பல்லவி.
“எனக்கும் தூக்கம் வருது” என்றபடி படுக்கையில் அவளோடு சரிந்து, அவன் கண் மூட, அவனது நெருக்கத்தில் சில நிமிடங்கள் அசையாமல் படுத்து இருந்தவள், சிறிது நேரத்தில் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்திருந்தாள்.
சடசடவென மழை பொழியும் சத்தமும், மழையைத் தொட்டு வீசிய குளிர் காற்றும், மலர்களின் வாசமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை கலைக்க, கண்ணைத் திறக்க முயன்றாள் பல்லவி. ஆனால், முடியவில்லை.
மெல்ல புரண்டு படுத்தாள். ஆனாலும் மழை தொடர்ந்து கொண்டிருக்க, விழிகளை வெகுவாக முயன்று திறக்க, தேவாவின் முகம் தான் கண்ணில் பட்டது.
“மழை பெய்யுது தேவா” தூக்கக் கலக்கத்துடன் சொன்னாள் அவள்.
“ஆமா, பல்லவி. மழை பெய்யுது” என்றவன், முத்த மழை பொழியத் தொடங்கி இருந்தான்.
அவள் மேல் துளி கூட ஈரம் படவில்லை. ஆனால், மழை சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. குளிரவும் செய்தது. மலர்களின் வாசமும் குறையவில்லை.
உறக்கம் கலையா அவள் மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, அவள் கன்னம், கழுத்து என்று முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்த கணவனின் தோளை பற்றி, “தேவா மழை பெய்யுது” என்றாள் மீண்டும்.
“ஆனா, நான் நனையல. எப்படி?” என்று அவள் வியக்க, சிரித்துக் கொண்டே, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டவன்,
“காதல் மழை பல்லவி.” என்று அவள் உதடுகளில், உதடு வைத்து அவன் கிசுகிசுக்க, அறையின் ஏசியின் மெல்லிய ஒலி கூடத் துல்லியமாக அவளுக்குக் கேட்டது.
இமைகளைப் படபடவென அடித்து, விழிகளை முழுதாகத் திறந்தாள் பல்லவி.
அறையில் இருந்தது ஏசியின் குளிர் என்பது புரிந்தது. பூக்கள் அறையின் அலங்காரத்திலும், தன் கூந்தலிலும் இருப்பதை உணர்ந்து கொண்டாள். மழை தேவாவின் அலைபேசியில் இருந்து பொழிந்து கொண்டிருக்கிறது என்பது மெதுவாக விளங்க, கணவனை இறுக கட்டிக் கொண்டாள் பல்லவி.
அறைக்குள் ஒலியாய் நிறைந்திருந்த மழை, அவர்களுக்கு இடையில் பொழிய ஆரம்பித்தது.
மழை எங்கும், எப்போதும் எதையாவது செய்து கொண்டே தானிருக்கிறது.
இப்போது அவர்களுக்குள் காதலை ஒரு மென்மையான மலரைப் போல மலர செய்து கொண்டிருந்தது.
இதயங்கள் இணைந்திருக்க, இதழ்கள் இப்போது தாமாக இணைந்தன, இளமை இடையூறு இன்றி இரு கரம் கோர்த்துக் கொண்டது. இருவரும் இணைய இடைவெளிகள் இல்லாமல் போய் இருந்தது.
அவர்களின் மோகனத்திற்கு ஏற்ப, மழை மெல்லிய இசையை எழுப்பிக் கொண்டிருந்தது. பல்லவியிடம் மொத்தமாய்ச் சரணடைந்து இருந்தான் தேவா.
காதலோடு இணைந்த காமம் அவர்களைப் பெரு மழைக்குப் பின்னான காட்டாற்று வெள்ளம் போல அடித்துச் செல்லத் தொடங்கியது.
பூந்துறலாய் அவள் மேனி நனைத்து, லேசான மழையாய் அவளைத் தழுவி, மிதமான மழையாய் அவளுள் மூழ்கி, பின் கனமழையாய் மாறி காதலை பொழிந்து கொண்டிருந்தான் தேவா.
மழை ஓசையும், மலரின் மணமும், மனைவியின் இசைவும், மென்மையும் அவனுக்கு மோகத்தைக் கூட்டிக் கொண்டிருந்தன.
அவனது மென்மையான வன்மையில் தத்தளித்தவளின் இதழ்கள் தாமாக, “தேவா பிளீஸ்” என்று உச்சரித்தன.
“யா. டிரையிங் டு ப்ளீஸ் யூ, பல்லவி” மோகத்தில், மயக்கத்தில், கிறக்கமாய் வந்த, கவர்ச்சியான அவன் குரலில் சிலிர்த்து, பிடிமானத்திற்காக பற்றி இருந்தவனை மேலும் இறுக்கினாள் அவள்.
மனைவியின் பெயரை மந்திரமாய் ஜெபித்து, அவளை ஆராதித்து, காதலை மட்டுமல்லாது, அவளுக்குக் காமத்தையும் முழுமையாய் உணர்த்தி அவளானான் தேவா.
முழு மயக்கத்தில் கிறங்கி விழி மூடி கிடந்தவளின் இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டு, அவளை அள்ளி தன் மார்பில் சாய்த்து, “தூங்கு பல்லவி” என்றான்.
அவன் மார்பில் இருந்த தலையை லேசாக நிமிர்த்தி, அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள் பல்லவி.
அவள் முகத்தைத் தன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தவன்,
“நீயும், நானும்…” என்று தொடங்க,
“ம்ம்ம், கவிதை டாக்டரே” என்றாள் பல்லவி.
முகம் நிறைத்த முறுவலுடன் தொடர்ந்தான் தேவா.
“நனைந்திட ஒரு மழை
சிரித்திட சிறு வெயில்
அணைத்திட மென்பனி
சிலிர்த்திட உன் ஸ்பரிசம்
இசைத்திட என் பல்லவி” அதைச் சொல்லும் போதே, அவன் கைகள் அவளை இசைக்க ஆரம்பித்தன.
“தேவா…” சிணுங்கினாள் பல்லவி.
“உயிர் வாழ நம் காதல்
அது போதுமே…” என்று அவள் முகம் பார்த்துக் கண் சிமிட்டி கவிதையை முடித்தான் அவன்.
“இசை நீயானால்…” என்று பல்லவி தொடங்க,
“வாவ், பொண்டாட்டி கவிதை சொல்றா. என் சக்கரப் பல்லவி” முத்தமிட்டு, மொத்தமாய் மயங்கியபடி சொன்னான் தேவா.
“இசை நீயானால்
உயிர் மீட்டும்
ராகம் நானாவேன்
உனதுயிரில் எனதுயிர்
கலந்திட” மேலே சொல்ல விடாமல் அழுத்தமாய் அவள் இதழ்களில் முத்தமிட்டான் தேவா.
மூச்சு வாங்க விலகியவள் கவிதையைத் தொடர்ந்தாள்,
“உனதுயிரில் எனதுயிர்
கலந்திட
ஒரு காதல்…
மனதோடு,
மழையோடு,
தினம் வளர்ந்திடுமே”
(கவிதை : நன்றி – எழுத்தாளர் துமி)
பல்லவி சொல்லி முடிக்க, இறுக அணைத்துக் கொண்டான் தேவா.
இருவர் மனதிலும் அப்படி ஒரு நிறைவு. இருவரும், ஒருவர் மற்றவரின் கரம் பற்றி, திருமண வாழ்க்கையில், தாம்பத்தியத்தில் முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்திருந்தனர்.
அறையில் நிறைந்திருந்த மழை, அவர்களுக்குள் காதல் மழையை நிரந்தரமாகப் பொழிய வைத்திருந்தது.
இனி, காலம் முழுமைக்கும் அவர்களிடையே காதல் மழை பொழியும்.
மழை நனைத்தது!!!