மழை மேகம் – 12 (2)

பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா.

“மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க, இதழ் பிரித்து அழகாகச் சிரித்து அவள் நெற்றியில் முட்டினான் அவன்.

அவள் அப்படியே அமைதியாக நிற்க, “ஆர் யூ சீரியஸ் பல்லவி?” என்று கேட்க,

“ம்ம்ம்” என்று தலையை ஆட்டினாள் பல்லவி.

“என்னடா சொல்ற பல்லவி. கல்யாணத்துக்கு இன்னும் ஆறு நாள் தான்டா இருக்கு. வெயிட் பண்ணுவோம்” என்றவனின் வார்த்தைகளைத் தலையை அசைத்து மறுத்தாள் பல்லவி.

“ப்ச், தேவா. மழையில் கல்யாணம் தான் கேட்டேன். மழையில் நனைஞ்சுட்டே உன் கைப் பிடிச்சு, கழுத்துல பன்னீர் ரோஜா, மல்லிப்பூ மாலையோட, பட்டுச் சேலை கட்டி, நீயும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமா, உன் கைப் பிடிச்சு, புதுத் தாலி மின்ன நடக்கணும் எனக்கு. ஆனா, தை மாசம் மழை நின்னுடும் இல்ல?” என்று அவள் தீவிரமாகப் பேசிக் கொண்டு செல்ல, தேவாவின் முகத்தில் வருத்தத்தின் ரேகைகள்.

அதைப் பார்த்த பல்லவி, சட்டென்று அவன் கைப் பிடித்து, “இட்ஸ் ஓகே தேவா. நான் சும்மா, என் ஆசையைச் சொன்னேன்.” என்று சொல்ல அவன் முகம் அப்போதும் தெளியவில்லை.

“தேவா, உண்மையா வீட்ல ஃபிக்ஸ் பண்ண தேதியில் கல்யாணம் பண்ணிக்கலாம். என் மழை நீ தான் சொன்னேன் இல்ல. நீ, என் கூட இருந்தா போதும். வேற எதுவும் வேணாம்” என்று சொல்லி, மீண்டும் அழுத்தமாக அவனிடம் இருந்து முத்தம் வாங்கிக் கொண்டாள் பல்லவி.

பதிலுக்கு அவன் கழுத்தை வளைத்து, அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் புதைத்தாள் பல்லவி.

அவர்களைச் சுற்றி இருந்த அத்தனையும் அப்படியே தான் இருந்தது. அவர்கள் உலகில் எதுவும் மாறவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் எல்லாமே மாறி இருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை தொடங்கி, தொடுகை வரை அனைத்தும் மாறி இருந்தது.

கண்களால் பேசி, சிரித்துக் கொண்டனர். அவர்களின் கண்கள் சந்திக்கும் போதே, இதழ்கள் தாமாகப் புன்னகைத்துக் கொண்டன. காரணமற்றுக் கைப் பற்றிக் கொண்டனர்.

அவ்வப்போது அணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

வெகு இயல்பாக அவர்களை அறியாமலேயே அவர்கள் உறவு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது.

மனதளவில் அந்த மாற்றத்தை அவர்களும் இயல்பாக ஏற்றுக் கொண்டனர்.

நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய திருமண நாளும் வந்து சேர்ந்தது.

மிகப் பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்தினார் கதிர்வேலன். அவரின் ஒரே மகனின் திருமணம் அல்லவா? அதுவும் அவருக்குப் பிரியமான பல்லவி உடன். கேட்கவும் வேண்டுமா?

மேலும், இத்திருமணம் தான், இரு வீட்டினருக்கும் கடைசித் திருமணம் என்பதால் அத்தனை செலவு செய்திருந்தனர்.

தேவா, பல்லவி இருவருக்குமே அதில் விருப்பமில்லை. ஆனாலும், பெரியவர்களை அவர்கள் தடுக்க முற்படவில்லை.

பெற்றோர், குடும்பத்தினர், சொந்த பந்தங்களின் ஆசீர்வாதத்தோடு, குறித்த முகூர்த்தத்தில் பல்லவி, தேவா இருவரும் திருமணப் பந்தத்தில் இணைந்திருந்தனர்.

சேதுராமன், கஸ்தூரி கண்கள் பனிக்க மணமக்களை ஆசிர்வதித்தனர்.

கதிர்வேலன், கனிமொழி ஆசிர்வதித்து மணமக்களைச் சேர்த்து அணைத்துக் கொண்டனர்.

கனிமொழி, பல்லவியின் முகத்தைக் கையில் ஏந்தி நெற்றியில் பாசமாய் முத்தமிட்டு அவளை இறுக அணைத்து விடுவித்தார்.

அங்கிருந்த அனைவரையும் காட்டிலும் அவரின் முகம் தான் மிகப் பிரகாசமாக இருந்தது.

சூர்யா தனக்கு மிகப் பிரியமான இருவரின் திருமணம், தன் வீட்டுத் திருமணம் என்பதால் ஓடி, ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கவி தங்கையை விட்டு நகரவே இல்லை.

“தேவா வீடு, உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க பாப்பா. சந்தோசமா இருக்கு குட்டி பிசாசே” என்றாள் சங்கவி.

வித்யாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். பல்லவி அணிந்திருந்த அதே நிறத்தில் சேலை உடுத்தி, அவளோடு ஒட்டிக் கொண்டே திரிந்தாள் அவள். ஒவ்வொன்றையும் அவளுக்காகப் பார்த்து, பார்த்து செய்தாள் வித்யா.

தேவா, இப்போது அவளின் கணவன். பல்லவிக்கு நினைக்கையிலேயே தித்தித்தது.

கண்களால், கையின் அழுத்தத்தால், அவள் நலனை அத்தனை பேரின் முன்னிலும், அவளுக்கு மட்டும் புரியும் படியாக விசாரித்துக் கொண்டே இருந்தான் தேவா.

உண்மையில் தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றே பல்லவிக்குத் தோன்றியது.

கண்களைச் சுழற்றி பார்த்தாள். அவளுக்கு நெருக்கமான அத்தனை முகங்களிலும் அளவில்லா மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.

ஒரு திருமணம் தங்களைச் சுற்றி இருந்த அத்தனை பேர் முகத்திலும், இத்தனை மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்குமா என்று ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பல்லவி.

அன்று மாலை அவர்களின் திருமண வரவேற்பில் நின்றுக் கொண்டிருந்தனர் இருவரும்.

அவர்களுக்கு அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருக்க, அதன் பின்னர் வந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முடித்து, மதிய உணவுக்குப் பின் சிறிது நேரமே ஓய்ந்து அமர்ந்தனர்.

உடனே அவர்களை மாலை வரவேற்பிற்கு‌ தயாராகச் சொல்ல,

முகூர்த்த ஆடைகளைக் களைந்து, இப்போது வரவேற்பிற்கென வாங்கி இருந்த உடையை மாற்றி விட்டு, அதற்குத் தகுந்த நகை, ஒப்பனையுடன் வந்து மேடையேறிய இருவரின் முகத்திலும் ஒப்பனையை மீறிய சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

சில மணி நேரம் கழிந்திருக்க,

“யூ ஓகே டா பல்லவி?” என்று தேவா கேட்க,

“ம்ம், தேவா” என்றாள் அவள். உடல் ஓய்விற்குக் கெஞ்சியது. அதைப் புரிந்தவனாக,

“ஒரு ரெண்டு நிமிஷம் ரூமுக்கு போய் உட்காந்துட்டு வா. நான் பார்த்துக்கறேன் இங்க. இப்ப ஆளுங்க அவ்வளவா வரல டா. எல்லாம் சாப்பிட போயாச்சு” என்று தேவா சொல்ல, வித்யாவின் கைப் பிடித்து அறையை நோக்கி நடந்தாள் பல்லவி.

அப்போது அவர்களின் எதிரே வந்தான் பிரவீன்.

பல்லவியின் முகம் பார்த்து விட்டு, “சாரி. நான் பண்ணது ரொம்பத் தப்பு. என்ன காரணம் சொன்னாலும், நான் பண்ணது சரியாகாது. சாரி. பிளீஸ் மன்னிச்சுடுங்க.” தலைக் குனிந்து சொன்னான் அவன்.

மெலிதாகப் புன்னகைத்து, “ஓகே பிரவீன்” என்றவள்,

“அப்படியே எங்களையும் மன்னிச்சுடுங்க. உங்களை இப்படிப் பண்ணி இருக்கக் கூடாது” என்று அவன் கையைக் காட்டி அவள் சொல்ல,

“ஐ டிசர்வ் இட்.” என்றான் அவன்.

“அவங்க என் கையை உடைக்கற இன்டன்ஷன்ல பண்ணலன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, கை உடைஞ்சதில் நான் பெருசா ஃபீல் பண்ணல. இனிமே இப்படி ஒரு எண்ணம் எனக்கு வராது பாருங்க”

என்று சொன்னவனை, வித்யா, பல்லவி இருவரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.

“உங்களோட அந்தப் பக்கம் என் தங்கை, சித்தி பொண்ணு உட்கார்ந்து இருந்தா. அவளை வச்சுட்டு நான் என்ன காரியம் பண்ணி… ரொம்பச் சாரிங்க” இம்முறை அவள் கண்களைப் பார்த்து அவன் மன்னிப்பை வேண்ட, நன்றாகப் புன்னகைத்து,

“கெட் வெல் சூன் பிரவீன்” என்று வித்யாவுடன் விலகி நடந்தாள் பல்லவி.

மேடையில் இருந்து தேவா அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இங்கே அறைக்குள் நுழைந்த பல்லவி, வித்யா எதிர்பாரா விதமாகச் சத்தமாக அழத் தொடங்கி இருந்தாள். வித்யா தான் மிரண்டு போனாள்.

“பல்லவி, பல்லவி. என்னடா ஆச்சு? தேவாவை கூப்பிடவா? கஸ்தூரி அத்தையை, அம்மாவை கூப்பிடவா?” என்று வித்யா பதறிய படி கேட்க, பதில் சொல்லாமல் அழுகையைத் தொடர்ந்தாள் பல்லவி.

“மேக் அப் கலையுது பாரு பல்லவி. பிளீஸ் அழாத டா. என்ன பண்ணுது சொல்லு? இப்படி அழுதா, நான் என்ன..” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த குளியல் அறையில் இருந்து புடவையைச் சரி செய்து கொண்டே வெளியில் வந்தாள் சங்கவி.

அவள் பல்லவியைப் பார்த்ததும், “குட்டி பிசாசே, பொய் அழுகை அழுகாத. அழுகையை நிப்பாட்டு” என்று அவள் பல்லவியை அதட்ட, கண்ணைத் துடைத்துக் கொண்டு, நிமிர்ந்து அவளை முறைத்தாள் பல்லவி.

“எதுக்கு இப்ப முதலை கண்ணீர் விடுற நீ?” என்று மேலும் சங்கவி குரலை உயர்த்த, வித்யா அவளை அடக்கினாள்.

“என்ன சங்கவி நீ? அவளே அழுதிட்டு இருக்கா? அவளைப் போய்த் திட்டிட்டு இருக்க?” என்று கோபத்துடன் கேட்க, சங்கவி அலட்டிக் கொள்ளவே இல்லை.

“உங்களை எல்லாரையும் விட, இந்தக் குட்டி பிசாசோட அழுகை பத்தி எனக்குத் தான் நல்லா தெரியும். எத்தனை முறை இப்படிப் பொய்யா அழுது, அம்மா, அப்பா கிட்ட எனக்குத் திட்டு வாங்கிக் கொடுத்து இருப்பா” என்று அவள் சொல்ல, பல்லவி அவளை நன்றாக முறைத்து வைத்தாள். இப்போது அவளின் அழுகை காணாமல் போய் இருந்தது.

வித்யா, மெலிதான சிரிப்புடன், “என்ன பல்லவி?” என்று கேட்க,

“எனக்குச் சண்டை போடுற மாமியார், நாத்தனார் வேணும்.” என்று பல்லவி மீண்டும் கண்ணைக் கசக்க, வித்யா, சங்கவி இருவரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர்.

“என் வாழ்க்கை ரொம்பப் போர் அடிக்கப் போகுது. ப்ச், கனி அத்த என்னைத் திட்டவே மாட்டாங்க. நீயும் நாத்தனார் சண்டை போட மாட்ட..” என்று அவள் சொல்லிக் கொண்டே போக, அவளை இடுப்பில் கை வைத்து முறைத்த வித்யா,

“நீ உட்கார்ந்தது போதும். எழுந்திரு. மேடையில் அண்ணா தனியா நின்னுட்டு இருப்பாங்க” என்று அதட்டி, அவளின் ஒப்பனையைச் சரி செய்து அழைத்துக் கொண்டு போனாள்.

சற்று முன்னர் அழுததை, ஒன்றுமே இல்லாதது போல மறந்து விட்டு, இருவரையும் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டே மேடையேறினாள் பல்லவி.

“அப்பாடா, ஒரு நிமிஷம் என்னைப் பயமுறுத்தி விட்டுட்டா” என்று புலம்பிக் கொண்டே, ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியிட்டாள் வித்யா.

தங்கையை நன்றாக அறிந்தவளாகச் சிரித்துக் கொண்டாள் சங்கவி.

அங்கே எதுவுமே நடக்காதது போல நடந்து போய், தேவாவை நெருங்கி, அவனை ஒட்டிக் கொண்டு நின்றாள் பல்லவி.

அவளைத் திரும்பிப் பார்த்து, புன்னகைத்தான் தேவா.

பிரவீன் குறித்துக் கணவன் கேட்பான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ எதுவுமே கேட்கவில்லை. அந்த நம்பிக்கை கூட, பல்லவிக்கு அத்தனை பிடித்தது.

சரியாக அந்நேரம், “தேவா, தேவா” என்று சூர்யா அழைக்க, தேவாவின் கண்கள் மனைவியின் மேல் தான் இருந்தன.

அதில் எரிச்சலுற்ற சூர்யா, “டேய் தேவா” என்று அழைக்க, மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தான் தேவா.

“இந்தா, இதைக் குடி” என்று அவன் கையில் குளிர்பானத்தைத் திணித்தான் சூர்யா.

“இப்ப நீ என்ன சொன்ன?” என்று நிதானமாகக் கேட்டான் தேவா.

“ஜுஸ் குடிக்கச் சொன்னேன்” என்றான் சூர்யா.

“இல்ல, அதுக்கு முன்னாடி ஒன்னு சொன்னியே?” என்று தேவா அழுத்திக் கேட்க,

“அதுக்கு முன்னாடி, நான் ஒன்னும் சொல்லலையே டா தேவா” என்று முழித்துக் கொண்டு சூர்யா சொல்ல,

“ஆங், இதான். இதைத் தான் கேட்டேன்” என்ற தேவா,

“என்னை, என்ன சொல்லி கூப்பிட்ட?” என்று கேட்க, சூர்யா திருதிருவென்று முழித்தான்.

“தேவா, தானே டா சொன்னேன்” என்று சூர்யா விளக்கம் அளிக்க,

அவனைப் பல்லைக் கடித்து முறைத்த தேவா, “சங்கவி வீட்டுக்காரரை என்ன சொல்லி கூப்பிடுவ?” என்று கேட்க, சூர்யா அவனை அதிர்ந்து போய்ப் பார்த்தான்.

“மாமா சொல்வேன்” என்றான் சூர்யா.

“அப்புறம்?” தேவா நிறுத்தவில்லை.

“மாப்பிள்ளை… சொல்வேன்” என்று சூர்யா இழுக்க,

“ஆனா, நான் மட்டும் டா? வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்ல.” என்று இழுத்தவன்,

“ஒழுங்கா, மரியாதை கொடுத்து கூப்பிடு டா. உன் தங்கச்சி புருஷன் நான். உன் வீட்டு மாப்பிள்ளை நான். அதனால், வாங்க, மாப்பிள்ளை. சொல்லுங்க மாப்பிள்ளை. என்னங்க மாப்பிள்ளை. இப்படிப் பேசணும்.” என்று தேவா சொல்லிக் கொண்டே போக,

“டேய், தேவா. ரொம்பப் பண்ணாத டா” என்று சூர்யா கோபமாக இடையிட்டு சொல்ல,

“ஓஹோ, டேய் தேவாவா? சரி தான் போ. இனி உன் தங்கச்சி எப்படிப் பொறந்த வீடு வர்றானு நானும் பார்க்கறேன். எனக்கு மரியாதை இல்லாத வீட்டுக்கு, நானும் வர மாட்டேன். நான் இல்லாட்டி, நான் ஓகே சொல்லாட்டி, என் சக்கரப் பொண்டாட்டியும் வர மாட்டா” என்றவன், மெல்லத் திரும்பி,

“அப்படித் தானே பல்லவி?” என்று மனைவியிடம் கேட்க, வித்யாவிடம் கதை அளந்து கொண்டிருந்த பல்லவி, எதையும் கேட்காமல், “ஆமா, தேவா” என்று கணவனுக்கு ஆதரவாகவே பேசினாள்.

‘திமிர் பிடிச்சவன்’ சூர்யா, மனதில் நண்பனை, இன்றில் இருந்து தன் செல்ல தங்கையின் கணவனானவனைத் திட்டிக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்து,

“சாரிங்க மாப்பிள்ளை. இனிமே இது போல நடக்காது. உங்களை எப்பவும் மரியாதையா பேசுறேன். இதுக்குப் போய்க் கோவிச்சிட்டு என் தங்கச்சியை அம்மா வீட்டுக்கு, எங்க வீட்டுக்கு அனுப்பாம இருக்காதீங்க. உங்க வீட்டுக்கு வரணும்னா, நாங்க வேற கண்டம் விட்டுக் கண்டம் வரணும், பாருங்க. ரெண்டு ஃப்ளைட் மாறி, ரெண்டு நாள் டிராவல் பண்ணி வரணும் வேற, அது ரொம்பக் கஷ்டம். அதனால, பெரிய மனசு பண்ணி நீங்களே அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை” என்று வெகு பவ்வியமாகச் சொன்னான் சூர்யா.

சூர்யாவும், அவன் பங்கிற்கு நண்பனை நன்றாக வாரினான்.

தேவா பொங்கிக் கொண்டு வந்த சிரிப்பை உதடு மடித்து மறைத்தான்.

“ஆங், அந்தப் பயம் இருக்கட்டும்” என்று வெளியில் கெத்தாகச் சொல்லிக் கொண்டான் தேவா.

“எனக்கும் ஒரு காலம் வரும்டா. அப்போ இருக்கு உனக்கு” என்று சொல்லிக் கொண்டே, சூர்யா கீழிறங்கி போனான்.

இப்போது நன்றாக மலர்ந்து சிரித்தான் தேவா.

“அண்ணனை படுத்தாம இரு தேவா” என்றாள் பல்லவி.

“சரிம்மா பாச மலரே” என்று கண்ணடித்தான் தேவா.

மழை நனைக்கும்…

error: Content is protected !!
Scroll to Top