புகைப்படத்தில் பிரவீன் கை ஒடிந்த நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். நெற்றியில் பெரிதாகக் கட்டு வேறு போட்டிருந்தான்.
அவனை அப்படிப் பார்க்க சிறிது பாவமாக இருந்தது தான். ஆனாலும், அதைக் காட்டிலும் கோபம் அதிகமாக இருந்தது.
“அண்ணா, அண்ணி ஹனிமூன் போய்ட்டு ஊருக்கு வந்த மறுநாள், என்கிட்ட சாரி கேட்க வீட்டுக்கு வந்தான். அண்ணிக்கு கால் பண்ணி சொல்லிட்டு தான் வந்தான். நானும், வித்யாவும் மாடில பிச்சிப் பூ பறிச்சுட்டு இருந்தோம்.
இந்தப் பிரவீன் பைக்கை நிப்பாட்டிட்டு உள்ளே வந்தான். போர்டிக்கோ ஸ்டெப்ஸ் கிட்ட சூர்யா ண்ணா, சங்கவி கா நின்னுட்டு இருந்தாங்க.
அப்போ பிரவீன் அவங்க பக்கத்துல நடந்து வர, சூர்யா ண்ணா, சங்கவி காதுல ஏதோ சொல்ல, அக்கா காலை நீட்ட, அடுத்த நிமிஷம் பிரவீன் தடுக்கி, பாலன்ஸ் போய், தலை குப்புற படியில விழுந்துட்டான்.
கல்லு படி வேறையா, நெத்தியில அடிபட்டு குபுகுபுன்னு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.
சூர்யா அண்ணா, “ஐயோ, பார்த்து வரக் கூடாதா பிரவீன். எழுந்துக்கோங்கன்னு கையைப் பிடிக்கப் போக, பிரவீன் ஒரே அலறல். அப்புறம் அண்ணா அவனை அள்ளிப் போட்டு, அண்ணியையும் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போனாங்க. தலைல அடி மட்டும் தான் நினைச்சோம். ஆனா, கை உடைஞ்சது அங்க போய்த் தான் தெரியும்” என்று அவள் நீளமாகச் சொல்லி முடிக்க, மெலிதான புன்னகை தேவாவின் முகத்தில் வந்து போனது.
“நேரா அவனை நிக்க வச்சு, அப்படியே கையை உடைச்சு விட்டு இருக்கணும்” என்று கோபமாகத் தேவா சொல்ல,
“அது எப்படி முடியும் தேவா? இது ஒன்னும் சினிமா இல்ல. இன்பேக்ட், இதுவே அதிகம் தான். அவன் இவ்ளோ வீக்கா இருப்பான்னு யார் எதிர்பார்த்தா. இடியட்” என்றவள்,
“அவன் பாரதி அண்ணியோட, அண்ணன். அவனை நேரா நிக்க வச்சு, அடிச்சு அனுப்பினா, நாளைக்கு ரெண்டு குடும்பத்துக்கும் தேவையில்லாத மனஸ்தாபம் தான் வரும். அதுக்கு இது எவ்ளோ பெட்டர் தெரியுமா? அவன் வாயை திறக்கவே இல்ல. கால் தடுக்கி விழுந்துட்டேன் தான் அங்க சொல்லி இருக்கான். அக்கா தடுக்கி விட்டதைக் கவனிக்கலையா, இல்ல அவமானப்பட்டு வெளில சொல்ல விரும்பலையான்னு தெரியல” என்று அவள் விளக்கம் கொடுக்க,
“சங்கவிக்குத் தைரியம் தான்” என்றான் தேவா.
“சூர்யா ண்ணா கொடுத்த தைரியம். அண்ணா சொல்லி தான் பண்ணா. அன்னைக்கு என்னைப் படத்துக்கு அனுப்பினப்பவும், பிரவீன் வந்தது அண்ணாக்குத் தெரியாது. அவன் கார்ல போய் உட்கார்ந்துட்டான் முதல்ல. அண்ணா அவனைப் பார்க்கல. அண்ணி சொன்னாங்க.” பல்லவி படபடவென அண்ணனுக்குப் பரிந்து கொண்டு பேச,
“உங்க அண்ணனை மன்னிச்சுட்டேன். விடு பல்லவி” என்று அவன் கண் சிமிட்ட,
“நீ என்ன, என் அண்ணனை மன்னிக்க…” என்று வரிந்து கட்டிக் கொண்டு சென்றவள், அவனின் கிண்டலான சிரிப்பை கண்டதும், அப்படியே அமைதியானாள்.
அவன் மார்பில் வலிக்காமல் அடித்து, “அண்ணா கூடச் சண்டைப் போடாத தேவா.” என்று சொல்ல,
“சரிம்மா, பாச மலரே” என்றான் அவன். சிரித்துக் கொண்டே அவனிடம் இருந்து விலகினாள் பல்லவி.
அவளின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தனர் இருவரும்.
“புதுப் போன் சிட்டிக்குள்ள போனதும் வாங்கிடலாம் பல்லவி”
“ஹ்ம்ம், சரி தேவா” என்றவள்,
“ப்ரெண்ட்ஸ் எல்லாம் காலைல தான் ஊருக்கு கிளம்பினாங்க. நைட் எல்லாம் மழையில ஆட்டம் போட்டு, காலையில அவங்க கிளம்பினதும் தான் தூங்கினேன் தேவா. அதான், உனக்கும், வீட்டுக்கும் கால் பண்ண மறந்துட்டேன். சாரி” என்று அவள் கண் சுருக்கி கேட்க,
“ஓகே” என்றவன், “பட், இனி இது போல நடக்கக் கூடாது. பொறுப்பா இருக்கணும். நானும், சூர்யாவும் ரொம்பப் பயந்துட்டோம்” என்று அவன் கடுமையாகச் சொல்ல,
“ம்ம். இனிமே நீ தான், என் கூடவே இருக்கப் போறியே தேவா. அப்புறம் நான் எங்க தனியா இருக்கப் போறேன்.” என்று அவள் வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டே நடக்க, தலையை அசைத்துச் சிரித்துக் கொண்டான் தேவா.
ரிசார்ட்டின் வரவேற்பறையை அடைந்து அவள் அறைக்கான கட்டணத்தைச் செலுத்தி, அறையைக் காலி செய்ய, அங்கிருந்த பெண், “மேம், உங்க அண்ணா மிஸ்டர் சூர்யா, காலைல இருந்து பத்து முறைக்கு மேல கால் பண்ணிட்டார். நாங்க கால் உங்களுக்குக் கனெக்ட் பண்ணோம். ஆனா, நீங்க எடுக்கல போல. சோ, அவர் திரும்பத் திரும்பக் கால் பண்ணார்” என்று சொல்ல, பதட்டத்தில் நாக்கை கடித்து, தேவாவை திரும்பிப் பார்த்தாள் அவள்.
அவன் முறைத்துக் கொண்டு நின்றிருக்க, “சாரி, ரூம்ல போன் எதுவும் வரல. மே பி, எனக்கு ரிங் கேட்கல போல” என்று அவள் சொல்ல,
“நாங்க போனை செக் பண்றோம் மேம்” என்றாள் வரவேற்பில் இருந்த பெண்.
“ஒரு முறை ரூம் கதவை தட்டினோம். நீங்க ஓபன் பண்ணல. அப்புறம் சிசிடிவி கேமராவுல பார்த்து, நீங்க வெளில போகலைன்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டோம். உங்க அண்ணாவுக்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மேம்.” அந்தப் பெண் சொன்னதை அதிர்ச்சியுடன் பார்த்தான் தேவா.
தங்கை பத்திரமாக இருக்கிறாள் என்று தெரிந்தே தான், தன்னை இங்கே வர வைத்திருக்கிறான் நண்பன் என்பது புரிய, அவனால் கோபப்படக் கூட முடியவில்லை.
தங்கையின் பாதுகாப்பு, மேலும் இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசட்டும் என்று தான் இப்படிச் செய்திருக்கிறான் என்று புரிய மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டான் தேவா.
“சாரி மேம். ஐ தாட், இது உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கணும்னு நினைச்சேன். அதான், உங்ககிட்ட சொன்னேன் மேம்” என்று விளக்கம் கொடுக்க,
“எஸ், எஸ். சொன்னதுக்குத் தாங்க்ஸ்” என்று புன்னகைத்து, பணத்தைக் கட்டியவள், அறைச் சாவியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, தேவாவுடன் இணைந்து காரை நோக்கி நடந்தாள் பல்லவி.
காரில் ஏறியதும், “எங்க போறோம் தேவா?” என்று அவள் கேட்க,
“ப்ரெண்ட் வீட்டுக்குப் பல்லவி. அங்க இருந்து ஊருக்குக் கிளம்பலாம்” என்றான் அவன்.
“கார் அவங்களோடது பல்லவி. சூர்யா கால் பண்ணவும். அவசரத்துக்கு வாங்கிட்டு வந்தேன்” என்று அவன் சொல்ல,
“இன்னும் கொஞ்ச நேரம் இங்க, இந்த ஊர்ல இருந்துட்டுப் போகலாம் தேவா” என்று அவள் கேட்க, அந்தக் கண்களைப் பார்த்து அவனால் எதையுமே மறுக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
“ஓகே” என்றவன், காரை நேராக நேரியான்மன்கலம் பிரிட்ஜை நோக்கி செலுத்தினான்.
கீழே பெரியார் ஆறு ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பழமையான பாலத்தின் மேலே நின்று கீழே அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டே, மழைத் தூறலில் நனைவது புதியதொரு அனுபவமாக இருவருக்குமே இருந்தது.
தேவாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, இயற்கையை ரசித்தாள் பல்லவி. அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவளின் ரசனையை ரசித்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் அலைபேசியில் தங்களைச் சுற்றி இருந்த இயற்கையை, அதன் அழகை படம் பிடித்தவன், அத்தோடு தங்களையும் இணைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
“போகலாம், பல்லவி” என்று அவன் சொல்ல,
“இன்னும் கொஞ்ச நேரம் தேவா பிளீஸ்.” என்று கெஞ்சிய பல்லவி,
“மழையோடு ஒரு நாள்” என்க,
“என் மனதோடு ஒரு நாள்” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, ஆழ்ந்த குரலில் சொன்னான் தேவா.
“கவிதையா பேசுறீங்க டாக்டரே” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு, மலர்ந்து புன்னகைத்தாள் பல்லவி.
“எல்லாத்துக்கும் காரணம் நீ” என்றான் தேவா.
சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
செல்லும் வழியில் எல்லாம், ஆங்காங்கே காரை நிறுத்தி, கடவுளின் சொந்த தேசமான கேரளத்தின் அழகை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் மறக்கவில்லை அவர்கள்.
அப்படியே வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தி, மதிய உணவை உண்டனர்.
அவளிடம் கேட்காமலேயே, அவளுக்குப் பிடித்த அத்தனையும் அவன் சொல்ல, பல்லவி முகத்தில் நிரந்தரமாக வந்து அமர்ந்து கொண்டது ஒரு புன்னகை.
மாலை நெருங்கும் வேளையில் தேவாவின் நண்பரின் வீட்டை சென்றடைந்தனர்.
அவள் முன்னரே சூர்யா மற்றும் பெற்றோரை தேவாவின் அலைபேசியில் இருந்தே அழைத்துப் பேசி இருந்தாள். பெற்றோரின் திட்டில் இருந்து அவளைப் காப்பாற்றி இருந்தான் அவளின் அண்ணன் சூர்யா.
சென்னை சென்று புது அலைபேசி வாங்கிக் கொள்ளலாம் என்று அவள் சொல்ல, தேவா உடனே சரியென்று விட்டான்.
இருவருக்கும் மறுநாள் காலையே சென்னை செல்ல விமான டிக்கெட் புக் செய்திருந்தான் தேவா.
அவன் நண்பரின் குடும்பத்துடன் பேசி விட்டு, அவர்கள் அவளுக்குக் காட்டிய அறைக்குள் நுழைந்து, சுடு நீரில் குளித்து, உடை மாற்றி விட்டுப் படுக்கையில் சரிந்தாள் பல்லவி.
அரை மணி நேரம் கழித்து அறைக்குள் வந்த தேவா, “பல்லவி, பல்லவி. எழுந்திரு” என்று அவள் தோள் தொட்டு எழுப்பி, “சாப்பிட்டு படு” என்றான்.
“வேணாம் தேவா. தூக்கம் வருது” என்று உணவை மறுத்து விட்டு, தூக்கத்தைத் தொடர்ந்தாள் பல்லவி.
மறுநாள் அதிகாலை கிளம்பி, அவர்கள் பின் காலை பொழுதில் சென்னை வந்தடைந்தனர்.
வித்யா, தேவாவின் காரை எடுத்துக் கொண்டு அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையம் வந்திருந்தாள்.
தேவா, பல்லவியைப் பார்த்து தன் மொத்தப் பற்களையும் காட்டிப் புன்னகைத்தாள் வித்யா. அவளைக் கண்ணைச் சுருக்கி, சந்தேகமாகப் பார்த்தாள் பல்லவி.
அதற்குள் குட்டி விக்ரம் அவளிடம் தாவிக் குதித்து வர, அவனைக் கைகளில் அள்ளிக் கொண்டாள் பல்லவி.
தங்கையைப் பார்த்துக் கண்ணைக் காட்டிய தேவா, மௌனமாய்க் காரில் ஏறி அமர்ந்து, காரை இயக்கினான்.
அவர்கள் முதலில் தேவாவின் வீட்டை அடைய, பல்லவி, தேவா இருவருக்கும் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்துக் கொள்ள, ஆவலாகத் தயாராக நின்றிருந்தார் கனிமொழி.
பல்லவி காரில் இருந்து இறங்கவும், வேகமாக அவளை நெருங்கி வந்து அணைத்துக் கொண்ட கனிமொழியை, கண்களில் கேள்வியுடன் பார்த்தாள் பல்லவி. இந்த வரவேற்பு அவளுக்குப் புதிது.
கனிமொழியின் பின்னேயே வந்து நின்ற அவளின் அம்மா கஸ்தூரியை பார்த்ததும், அவளுக்குப் புரிந்தும், புரியாத நிலை.
“என்னடா நடக்குது இங்க?” திரும்பி தேவாவை தேடியது அவள் விழிகள். அவனோ மும்முரமாகக் காரில் இருந்து பெட்டிகளை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தான்.
மிதமான வெயில் சென்னையை இதமான காலநிலையில் வைத்திருக்க, பல்லவியின் மனதில் மழையடித்துக் கொண்டிருந்தது.
தேவா தன் காதலை சொல்லி விட்டான்.
வீட்டினர் என்ன திட்டத்துடன் இருக்கின்றனர்?
இனி, கல்யாணம் தானே?
மழை நனைக்கும்…