மழை மேகம் – 11 (1)

“கட்டிக்கலாமா பல்லவி?” தேவா கேட்ட மறுகணமே, அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தாள் பல்லவி.

அமர்ந்த வாக்கில் தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள் அவள்.

தன்னிச்சையாகத் தேவாவின் கரங்களும் நகர்ந்து அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கியது.

உடல் குலுங்க மெலிதாகச் சிரித்தான் தேவா.

“ஏன் சிரிக்கற தேவா?” கோபத்துடன் சிணுங்கினாள் பல்லவி.

முகத்தை மட்டும் அவள் கழுத்தில் இருந்து விலக்கி, அவள் முகம் பார்த்து, “நான் கேட்டது இந்த, கட்டிக்கலாமா இல்ல” என்று அவர்கள் அணைத்திருந்ததைக் கண்களால் சுட்டிக் காட்டி சொல்லியவன்,

முழுதாக அவளிடம் இருந்து விலகி, “இந்தக் கட்டிக்கலாமா?” என்று அவள் கழுத்தில் வெறும் கையால் தாலி கட்டுவது போல அவன் செய்து காட்ட, பல்லவியின் முகம் முழுவதிலும் மெலிதாக வெட்கப் பூக்கள் பூக்கத் தொடங்கின.

அதை ரசனையோடு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “இந்தக் கட்டிக்கலாமாக்குப் பதில் சம்மதம்.” என்று தாலி கட்டுவதைக் குறிப்பிட்டவள்,

“அதனால தான் இப்படிக் கட்டிக்கிட்டேன்” என்று மீண்டும் அவனை அணைத்திருந்தாள் பல்லவி.

முதல் முதலாக முழுவதுமான அணைப்பு. இருவரின் மனம் முழுக்க நிறைந்திருந்த காதலும் முழுமையடைந்திருந்தது.

மெல்ல மெல்ல இறுகிய அணைப்பில், இருவரின் இதயங்களும் ஒன்றாகத் துடிக்க, இதழ்களும் ஒன்றாகிட ஏங்கித் துடித்தன. இளமை இணைந்திட தவித்தது. இமை மூடி அவளின் இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருந்தவன், உணர்வு பெற்று இருவருக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்தினான்.

அப்போதும் அவன் தோள் சாய்ந்து, மழையின் மெல்லிய இசையை ரசித்துக் கொண்டு, மழை நீரில் கால் நனைத்து, காலால் நீரை அடித்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

பெண்மையும், மென்மையும், ரசனையும், அறிவும், பாசமும், இதோ இந்தச் சிறுபிள்ளைத்தனமும் எல்லாம் கலந்த கலவையாக இருந்தவளை பாதுகாக்க, நேசிக்க மட்டுமல்ல, இப்போது ரசித்து, காதலிக்கச் சொன்னது தேவாவின் மனம்.

அவள் தோளை சுற்றி கைப் போட்டு, அவளைத் தன்னோடு மேலும் சேர்த்து அணைத்தான் தேவா.

தன்னிடம் எந்தக் கேள்விகளும் இல்லாமல், தன் நெஞ்சில் தஞ்சமாகியவள், தன் மேல் வைத்திருந்த நேசம் அவனுக்கு மழைச் சாரலை போல மனதை நனைக்க, மெல்ல இட கரம் கொண்டு அவள் முகம் பற்றி நிமிர்த்தினான் தேவா.

அவன் கண்களையே இமைக்காமல் பார்த்த, அந்தப் பெரிய விழிகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து போகத் தொடங்கினான் தேவா.

“தேவா” மென்மையாக அழைத்தாள் பல்லவி.

அவன் கண்கள் அவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது. “இத்தனை அழகா நீ?” அவளையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. இன்றைக்கு அவன் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தாள் பல்லவி.

“தேவா” என்று அவள் குறும்பு சிரிப்புடன் மீண்டும் அழைக்க,

“ம்ம், பல்லவி” என்றவன், இருபத்தியொன்பது வருடங்களில் இல்லாத பழக்கமாக, முதல் முறையாக அவள் கண்களை நேராகச் சந்திக்கத் தடுமாறினான்.

பல்லவி உதடு கடித்து, புருவம் உயர்த்த, பற்றி இருந்த அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தான். அவளின் புன்னகை பெரிதாகியது. அதில் மயங்கியவனாக,

“பல்லவி.” மலரின் மென்மையுடன் வந்தது அவன் குரல்.

“லவ் இஸ் லவ். காதல் என்பது காதல் தான் இல்லையா? அதுக்கு வேற என்ன அர்த்தம் சொல்லிட முடியும்?. முடியாது தானே? அது போலத் தான் எனக்கும். எனக்கு லவ், காதல், அன்பு… இது எல்லாமே நீ தான். எனக்கு லவ் இஸ் பல்லவி. அவ்ளோ தான். என்னுடைய அனைத்தின் தொடக்கமும், முடிவும், நீ தான் பல்லவி.” அழுத்தமாகச் சொன்னான் தேவா.

அவனின் வார்த்தைகளில் புன்னகையோடு, மெல்லிய நீர் படலமும் அவள் விழிகளில் திரண்டு நிற்க, “பல்லவி” என்று இழுத்து அணைத்துக் கொண்டான் தேவா.

அவள் முகம் பற்றி, மென்மையாய், அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான். ஒரு முழு நிமிடத்திற்கும் மேல் அப்படியே தான் இருந்தான்.

மழை இருவர் மேலும் சாரலை தூவி ஆசீர்வதிக்க, இருவருக்கும் உடல் சிலிர்த்தது. மீண்டும் அவனை ஒண்டியவளின் முகத்தை நிமிர்த்தி, “சீக்கிரம் கட்டிக்கலாம் பல்லவி” என்றவன் இறுக கட்டிக் கொண்டான்.

“தேவா” அவன் மீசை, உதடு, கன்னம் மூன்றும் சந்திக்கும் இடத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள் பல்லவி. லேசாக முகம் திருப்பி அவளின் இதழ்களை முத்தமிடும் ஆவல் அதிகரிக்க, பட்டென்று அவளிடம் இருந்து விலகினான் தேவா. மழைநாளின் முத்தம், அத்தோடு நின்று விடும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதனாலேயே விலகினான் அவன்.

மழையும், இளமையும் பேயாட்டம் போட, சடாரென்று எழுந்து நின்றவன், அவளையும் கைத் தூக்கி எழுப்பி விட்டான்.

“எல்லாத்தையும் பேக் பண்ணு பல்லவி. கிளம்பலாம்.” என்று அவன் சொல்ல, விருப்பமே இல்லாமல் அறையை நோக்கி நடந்தாள் பல்லவி.

சட்டென அவளின் கைப் பிடித்து நிறுத்தி, அவளைத் தன்னோடு அணைத்து நிறுத்தினான்.

என்னவென்று கேள்வியாக அவன் முகத்தை அவள் அண்ணாந்து பார்க்க, தனது அலைபேசியை எடுத்து அதை அப்படியே புகைப்படமாக்கி கொண்டான் தேவா.

அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவன் இடுப்பில் இடித்து அவள் சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டே அதையும் படமாகப் பிடித்துக் கொண்டான்.

அதன் பின்னே, அவளைப் போக விட்டவன், “சீக்கிரம் எடுத்து வை பல்லவி” என்று சொல்லவும் மறக்கவில்லை.

அவள் நகர்ந்ததும், “ஊப்ஸ், மூச்சு முட்டுது டா சாமி” புலம்பலாக முணுமுணுத்தான்.

அலைபேசியில் எடுத்த புகைப்படத்தைப் பார்த்தான்.

பல்லவியின் ஒரு கரம் அவன் மார்பில் பதிந்திருக்க, தலை அவன் தோளில் சாய்ந்திருக்க, கண்கள் அவனைக் காதலாய் பார்த்துக் கொண்டிருந்தது. அவன், அவளைச் சுற்றி கரம் கோர்த்து அணைத்திருந்ததும் அத்தனை பாந்தமாய் இருந்தது. அடுத்தப் படத்தில் இருவரின் சிரிப்பும் அவன் மனதையே கொள்ளைக் கொண்டது.

அந்தப் புகைப்படத்தில் தெரிந்த அன்னியோன்யம் கண்களைக் கவர, மேலுதடு மடித்துக் குறும்பு சிரிப்புடன் அதைச் சூர்யாவுக்கு அனுப்பி வைத்தான் அவன்.

“என்னையா வெறுப்பேத்துற” என்றபடியே அனுப்பினான்.

காதல் எல்லாச் சில்லறை தனங்களையும் செய்ய வைக்கும் ஒன்று தானே.

பிரவீன் குறித்துச் சூர்யா, அவனிடம் சொன்னதின் பின் இருந்த அர்த்தம் அவனுக்கு விளங்கவே செய்தது.

மறைமுகமாக அவனை எச்சரிக்கை செய்கிறாராம். என் தங்கையை முத்தமிட முயற்சி செய்தால், அவள் உன்னை அறைவாள் என்று, “லூசு பயலே. தேவாவும் வேறு ஒருவனும் ஒன்னா டா?” என்று நண்பனை மனதில் அர்ச்சித்துக் கொண்டான் தேவா.

சூர்யாவின் திருமண வரவேற்பு இரவில், அவன் பேசியதின் கோபம் நண்பனுக்கு இன்னும் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதைத் தொட்டு தானே அனைத்தும் நடந்தது.

அந்தக் கோபத்தில் தானே பிரவீன் என்பவனை நடுவில் வர விட்டது.

நடந்த அனைத்திருக்கும் தான், தான் முதல் காரணம் என்பதால் நண்பனை மன்னிக்கத் தயாராகவே இருந்தான் தேவா.

அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர, அதைத் திறந்துப் பார்த்தான்.

முதலில் கோப எமோஜிக்களை எக்கச்சக்கமாக அனுப்பி இருந்த சூர்யா, அதைத் தொடர்ந்து, முகம் முழுக்க இதயங்கள் இருந்த எமோஜிக்களை எண்ணிக்கை இல்லாமல் அனுப்பித் தள்ளி இருந்தான். தேவா சத்தமாகச் சிரித்தே விட்டான்.

“ஹேப்பி ஃபார் யூ டா தேவா. என் தங்கச்சி உன்னை நல்லா பார்த்துக்குவா. பயப்படாத” என்றதுடன் கண் அடிக்கும் எமோஜியும் இருக்க,

“உன்னை வந்து கவனிச்சுக்கறேன் டா, எரும” என்று சத்தமாகச் சொன்னான் தேவா.

இருவருக்கும் நட்பு தான் முதலில் நின்றது. பின்னர்த் தான் அவர்களுக்குள் புதிதாக ஏற்படப் போகும் உறவு நினைவில் வந்தது. இன்னும் நட்பை பிரதானமாகக் கொண்டே, பழகினர் இருவரும்.

முழுதாக அரை நிமிடம் கழித்துச் சூர்யாவிடம் இருந்து மீண்டும் செய்தி வர, அதைப் பார்த்தவன் அப்படியே அதிர்ந்து போனான்.

தேவா அதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

“என்னடா பண்ணீங்க?” என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே அவன் நண்பனை அழைக்கப் போக, அந்நேரம் அவனிடம் வந்த பல்லவி,

“என்ன தேவா?” என்று கேட்க, அலைபேசியில் இருந்த புகைப்படத்தை அவளிடம் காட்டினான் தேவா.

ஆனால், தேவா அளவுக்குப் பல்லவி அதிர்ச்சி அடையவில்லை.

சிறு புன்னகையுடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று தேவா வியப்புடன் கேட்க,

“எஸ். என் கண் முன்னாடி தான் நடந்தது” என்றாள் அவள், ஒரு அசட்டையான தோள் குலுக்களுடன்.

“எப்படி?”

“சூர்யா ண்ணா சொல்லி, சங்கவி கா பண்ணா” என்றாள் அவள்.

சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான் தேவா. கை நீட்டி பல்லவியை இழுத்து, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

“எல்லாம் என்னால தான் பல்லவி. எனக்கும், சூர்யாவுக்கும் சின்னப் பிரச்சனை. அவனுக்கு என் மேல ரொம்ப ரொம்பக் கோபம். அதுல முட்டாள் மாதிரி உன்னை, அந்தப் பிரவீன் நாய்க்கு… சாரி டா” என்று அவன் கெஞ்சலாக மன்னிப்பு கேட்க,

“இட்ஸ் ஓகே தேவா.” என்றவள்,

“அன்னைக்குத் தியேட்டர்ல ஃபர்ஸ்ட் ஹால்ப் என் பக்கத்தில, பாரதி அண்ணியோட சித்தப்பா பொண்ணு தான் உட்கார்ந்து இருந்தா. இன்டர்வெல் முடிஞ்சு படம் தொடங்கினதுக்குப் பின்னாடி தான் பிரவீன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் போல. அதான், நான் அவனைக் கவனிக்கலை. நான் முன்னாடி என் பக்கத்துல உட்கார்ந்து இருந்த பொண்ணுன்னு தான் நினைச்சேன் தேவா. அதான் கண்டுக்காம படம் பார்த்தேன்.

படம் போட்டு கொஞ்ச நேரத்துல முதல்ல கையைப் பிடிச்சான். எனக்கு அந்தக் கையோட வித்தியாசம் தெரிஞ்சதும் சட்டுனு கையை உருவிட்டு அவனை முறைச்சேன். ஆனா, அவனுக்கு இருட்டுல அது தெரியலையோ என்னவோ. அகைன், கையைப் பிடிக்க வந்த போது, திட்டிட்டேன். ஆனாலும், தோளோடு இடிச்சிட்டு உட்கார்ந்தான். திரும்ப, திரும்பக் கையைப் பிடிச்சான். ரொம்ப அன்கம்பர்ட்டபிளா இருந்தது. அவ்வளவு எரிச்சல், கோபம்.

ஒழுங்கா பிகேவ் பண்ணுங்க பிரவீன்னு, அவன்கிட்ட கோபமா சொன்னேன். ஆனா, உடனே அவன் கையை, என் தலைக்குப் பின்னாடி கொண்டு வந்தான். கிஸ் பண்ண..” தேவாவின் கரங்கள் அவளை மேலும் இறுக்கி அணைக்க,

“கிஸ் பண்ண தான் போறான் போலன்னு நினைச்சு, அவன் கையைத் தட்டி விட்டு, ஓங்கி முழங்கையால அவன் வயித்துல ரெண்டு தடவை குத்திட்டேன்” என்று அவள் சொல்ல, தேவாவிற்கு எத்தனை முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அவன் எதுவும் பண்ணல தான். ஆனா, கையைப் பிடிச்சது, இடிச்சது. கார்ல பியான்ஸி சொன்னது, எல்லாம் சேர்ந்து கோபத்தைக் கிளப்ப, வச்சுச் செஞ்சுட்டேன். அவன் காலை என் ஹீல்ஸால நல்லா மிதிச்சுட்டு தான் எழுந்து வெளில வந்தேன். ரெண்டு பேருக்கும் நடுவுல ஆர்ம் ரெஸ்ட் இருந்தது. இல்லனா, வயித்துல இருந்து ரெண்டு, மூனு இன்ச் கீழ இறக்கி குத்தி இருப்பேன்” என்று அவள் பல்லைக் கடித்தபடி கோபமாகச் சொல்ல,

சிரித்துக் கொண்டே, “வெல் டன் டா சக்கர” அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான் தேவா.

“உடனே எழுந்து வெளில வந்துட்டேன். அப்புறம் தான் உனக்குக் கால் பண்ணேன்”

“ம்ம்ம்” என்றவன், “சரி. இது என்ன?” என்று அவளிடம் அலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டிக் கேட்க, அவளுக்கு இப்போதும் சிரிப்பு தான் வந்தது.

error: Content is protected !!
Scroll to Top