மழை மேகம் – 10 (3)

“இனி அவ சூர்யநாராயணன் தங்கச்சி பல்லவி இல்ல. பல்லவி தேவராஜன் அதை மனசுல வச்சுக்கோ”

காதில் அறைந்த குரலுக்குக் கண்களை மூடிக் கொண்டான் சூர்யா.

‘இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

திமிர் பிடிச்சவன், இன்னும் கல்யாணமே ஆகலை. கல்யாண பேச்சு கூட ஆரம்பிக்கலை. அதுக்குள்ள…’ சூர்யாவிற்கு நண்பனை மனதில் மட்டுமே தாளிக்க முடிந்தது.

“டேய், காது கேட்குதா இல்லையா?” என்று தேவா கத்த,

“ஆ, சொல்லு தேவா”

“நீயெல்லாம் என்ன அண்ணனோ. அவ ப்ரெண்ட் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் அனுப்பு” உட்சபட்ச கோபத்துடன் சொன்னான் தேவா.

“அனுப்பறேன். ஆனா, அவ இப்போ ப்ரெண்ட் வீட்ல இல்ல. வெளில, ரிசார்ட்ல…”

“என்ன சொன்ன?”

“டேய், டேய் திட்டாதா டா தேவா. அவ கூடக் காலேஜ் ப்ரெண்ட்ஸ் தங்கி இருக்காங்க. அவ தனியா இல்ல. நமக்கு அந்தப் பொண்ணுங்களை நல்லா தெரியும்” நண்பனின் கோபம் எல்லை தாண்டும் முன், பதறி அடித்துக் கொண்டு சொன்னான் சூர்யா.

“அவ தனியா தங்கி இருந்தாலும், பிரச்சினை இல்ல டா. உன்கிட்ட சொல்லி இருக்கா இல்ல. அது போதும். இப்போ அட்ரஸ் அனுப்பு. நான் கிளம்பிட்டேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்தான் தேவா.

கையில் தன் பயணப் பெட்டியை இழுத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியில் வந்தவன், அடுத்தப் பத்தாம் நிமிடம் நண்பன் குடும்பத்திடம் விடை பெற்று அவர்களின் காரை கேட்டு வாங்கிக் கொண்டு எர்ணாகுளம் நோக்கி விரைந்தான்.

பல்லவி பத்திரமாகத் தான் இருப்பாள் என்று அவனது அடி மனது அடித்துச் சொல்லியது. ஆனாலும், அவள் முகம் பார்க்கும் வரை, தன்னால் இயல்புக்கு வர முடியாது என்று தோன்றியது அவனுக்கு.

வெறும் பத்து கிலோமீட்டர் தானே, பத்தே நிமிடத்தில் போய் விடலாம் என்று காரை விரட்டிக் கொண்டே, ஒரு கையில் அலைபேசியை எடுத்து சூர்யாவின் குறுஞ்செய்தியை திறந்தான். அதில் இருந்த முகவரியை பார்த்ததும், கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது அவனுக்கு.

நேரியாமன்கலம் என்ற ஊரின் பெயரைப் பார்த்ததும்,

“என் ப்லுவியோபைள் அடங்க மாட்டா” என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டான் தேவா.

(Pluviophile / ப்லுவியோபைள்- someone who loves Rain. மழையை ரசிப்பவர் / நேசிப்பவர்)

அங்குப் போய்ச் சேர இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்பதைப் பார்த்தவன், தன் வாழ்நாளின் மிக நீண்ட இரண்டு மணி நேரங்கள் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

தேவாவின் சிரிப்பிற்கும், கோபத்திற்கும் காரணம் இருந்தது. நேரியாமன்கலம் கேரளாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் ஊர். இந்தியாவில் அதிக மழைப் பொழிவை கொண்ட இடங்களில், இந்த ஊர் முதல் பத்தில் இடம் பிடித்திருக்கிறது.

சத்தமாகப் பல்லவியைத் திட்டிக் கொண்டே காரை செலுத்தினான்.

முன் தின இரவு பல்லவி அவனிடம் பேசி இருக்க, அது இப்போது தான் அவனுக்கு உரைத்தது. மனதில் அவளுக்கு எதுவும் இருக்காது, பத்திரமாகத் தான் இருப்பாள் என்று சொல்லிக் கொண்டே அவள் தங்கி இருந்த ரிசார்ட்டின் தொடர்பு எண்ணை கூகுளில் தேடி அழைத்தான்.

அவளது காட்டேஜிற்கு அழைப்பை இணைக்கச் சொன்னான். ஆனால், பல்லவி தொலைபேசியை எடுக்கவேயில்லை.

மனதில் பதட்டமும், பயமும், எரிச்சலும் மூழ, அவளின் பொறுப்பற்ற தன்மையைத் திட்டுக் கொண்டே காரை அவனது வழக்கத்திற்கு மாறாக வேகமாகச் செலுத்தினான்.

ரிசார்ட்டில் அவள் அறையில் தான் இருக்கிறாள் என்று நிர்வாகத்தினர் உறுதியாகச் சொல்ல, மனம் தானாக அமைதியடைந்தது. ஆனாலும், அவளை நேரில் காணும் வரை இதயத் துடிப்பு இப்படித் தான் இஷ்டத்திற்கு எகிறி இருக்கும் என்று உணர்ந்தே இருந்தான் தேவா.

அந்நேரம் சூர்யா அவனை அழைக்க, அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டுப் பேசினான்.

“சொல்லு…” அவன் எதிர்பார்த்ததை விடக் கடினமாக வந்த விழுந்தது கேள்வி.

அந்தப் பக்கம் சூர்யா, ஒரு “ஷப்பா” உடன் பெருமூச்சு விட்டு, “எங்க இருக்கத் தேவா?” என்று வினவினான்.

“கேரளா ரோட்ல கதகளி ஆடிட்டு இருக்கேன். நீயும் வரியா?” தேவா நக்கலாகக் கேட்க,

“தேவா, ஒழுங்கா பதில் சொல்லு டா.”

“தங்கச்சி மேல அவ்ளோ அக்கறை இருந்தா, காலைல முதல் ப்ளைட் பிடிச்சு நீயே வந்திருக்க வேண்டியது தானே?” என்று கத்திய தேவா,

“காரை இதுக்கு மேல பாஸ்ட்டா என்னால ஓட்ட முடியாது டா. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன். போனை வை.” என்றான் தேவா கோபத்துடன்.

“ஓ, ஓகே. உன்கிட்ட ஒன்னு சொல்லணும் தேவா” என்று தயக்கத்துடன் சூர்யா இழுக்க,

“என்ன டா சூர்யா? எதுனாலும் டக்குனு சொல்லு. உன் கூடக் கதையடிக்க எனக்கு நேரமில்ல” தேவா எரிந்து விழ,

“அன்னைக்குத் தியேட்டர்ல, நடந்ததை, பல்லவி சொன்னாளா?”

“என்ன? ம்ஹூம். இல்ல. நீ சொல்லு. என்ன நடந்தது?”

அதுவரை தேவாவின் கவனம் முழுவதும் சாலையில் தான் இருந்தது. இப்போது அதை நண்பனின் பேச்சில் குவித்தான் அவன். ஆனாலும், அடுத்து நண்பன் சொன்ன தகவலில் கார் அவன் கைகளில் சில நொடிகள் தடுமாறி பின்னரே நேராகியது.

“பிரவீன் கிஸ் பண்ண டிரை பண்ணி இருக்கான்…” சூர்யா சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் கத்தத் தொடங்கி இருந்தான் தேவா.

“வாட் த ஹெல் டா சூர்யா. எருமை மாடே. அறிவு மயிரு கொஞ்சமாவது இருக்கா உனக்கு? அந்தப் பொறுக்கி கூட என்ன டேஷுக்கு பல்லவியை அனுப்பின நீ. உன் மண்டையில மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லையா? அவளுக்கு அண்ணன் தானே நீ. டேம் இட்” அதற்குப் பின் வந்தது எல்லாம் ஆங்கில வார்த்தைகள் மட்டுமே.

ஒரு கட்டத்திற்கு மேல் அதைக் கேட்க முடியாமல்,

“பல்லவி அவனை அறஞ்சுட்டா. எதுவும் நடக்கல தேவா. காம் டவுன்.” கத்தினான் சூர்யா.

‘அறைந்து விட்டாள். ஆங், தட்ஸ் மை பல்லவி’ மனதுக்குள் அவளை மெச்சி கொண்டான் தேவா.

சூர்யாவிடம், “எதுவும் நடக்கல? இல்லடா? ஆங், இருடா ஊருக்கு வந்து இருக்கு உனக்கு. உன் மச்சான் ரெண்டு கையையும் உடைக்கறேன் இரு. பொறுக்கி நாய். எதுவும் நடக்கலையாம் இல்ல? நடக்கல. என்ன தைரியம் இருந்தா பல்லவி மேல கை வச்சு இருப்பான். எல்லாம் உன்னால. முதல்ல உன்ன வந்து கவனிச்சுக்கறேன். போனை வச்சுத் தொல டா, எரும”

அவனே அலைபேசியை ஆத்திரத்துடன் அணைத்து பக்கத்து இருக்கையில் வீசினான்.

ஏதோ நினைவு வந்தவனாக வேகத்தைக் குறைத்து, மீண்டும் அலைபேசியை எட்டி எடுத்து நண்பனை அழைத்தான்.

“இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு எதுக்குப் பிரவீன் விஷயம் என்கிட்ட சொன்ன சூர்யா?” பட்டென்று கேட்டான் தேவா.

அந்தப் பக்கம் சூர்யா மெலிதாகச் சிரிப்பது கேட்கவே செய்தது.

“இல்ல, உனக்குத் தெரியணும்னு…” என்று சூர்யா இழுக்க,

“சென்னை வர்றதுகுள்ள கிஸ் என்னடா, என் பல்லவிக்குக் கழுத்துல தாலியே கட்டி கூட்டிட்டு வரேன். போனை வை டா, வெளக்கெண்ண”

தேவா சொல்ல, சத்தமாகச் சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தான் சூர்யா.

இங்கே அவனை மானாவாரியாகத் திட்டிக் கொண்டிருந்தான் தேவா.

பல்லவியைப் புதுச் சூழலில், தனிமையில் சந்திக்கப் போகிறான் என்பது இதுவரை அவன் புத்தியில் பதியவே இல்லை. இப்போது சூர்யா மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய பிறகு, அவனுக்கு அடிவயிற்றில் இருந்து பதட்டம் மேலெழும்பத் தொடங்கியது.

அட்ரிலின் சுரப்புக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணர்ந்து, கண்ணை மூடி திறந்து பார்வையைச் சாலையில் பதித்தான் தேவா.

அடுத்தப் பத்தாம் நிமிடம் பல்லவியின்‌ காட்டேஜ் முன்பு இருந்தான். அவள் கதவை திறக்க எடுத்துக் கொண்ட சில நொடிகள் யுகங்களாகக் கழிந்தது அவனுக்கு.

“யாரு?” என்று கேட்டுக் கொண்டே அறையின் கதவை திறந்த பல்லவி, மறு கணமே தேவாவின் இறுக்கமாக அணைப்பில் இருந்தாள்.

அவளுக்கு மூச்சு முட்டும் அளவுக்கு, அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி இருந்தான் தேவா.

“பல்லவி” ஆழ்ந்த மூச்சினை இழுத்து, அவள் வாசம் நுகர்ந்து அவளது இருப்பை உறுதி செய்து கொண்டான் தேவா.

“தேவா, நீ எங்க இங்க?” அவனின் அணைப்பிற்குள் அழகாய் பொருந்தி நின்றபடி கேட்டாள் பல்லவி.

“உன் போனுக்கு என்னாச்சு?” கேட்டான். அணைப்பை விலக்க முனையவில்லை இருவரும்.

“மழையில நனைஞ்சு, போன் செத்து போச்சு தேவா” என்றாள் அவள். மெலிதாகச் சிரித்துக் கொண்டே அவளிடம் இருந்து விலகி, அவள் முகம் பார்த்தான் தேவா.

அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பாள் போல, மழையில் நனைந்த ரோஜாவை போலப் பளிச்சென்று இருந்தாள். மிதமான பன்னீர் ரோஜாவின் மணத்துடன் இருந்தாள்.

அவளின் கைப் பிடித்து அறைக்குள் நுழைந்து கதவடைத்தான் தேவா.

ரூம் சர்வீஸ் அழைத்து, இருவருக்கும் இஞ்சி டீயும், வெங்காயப் பக்கோடா, பழம் பொரியும் (நேந்திர பழ பஜ்ஜி) கொண்டு வரச் சொன்னான்.

மழையில் நனைந்திருந்தவனுக்குத் துடைக்கத் துண்டு எடுத்து நீட்டினாள் பல்லவி.

“வீட்டுக்கு கால் பண்ணி ஃபோன் வேலை செய்யலைன்னு சொல்லலையா பல்லவி? சூர்யா பயந்திட்டு எனக்குக் கால் பண்ணான். அதான் நான் வந்தேன்.” என்று அவன் சொல்ல, நுனி நாக்கை கடித்து,

“அச்சோ. உன் நம்பர் மட்டும் தான் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. அதான், நைட் உன்கிட்ட மட்டும் பேசினேன். ஆனா, போன் விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். சாரி தேவா” என்றாள் அவள்.

அதுவரை உடலில் இருந்த பதட்டம் வடிய, “சரி விடு” என்றான் தேவா.

தேநீரும், சிற்றுண்டியும் வர அதைக் கையில் எடுத்துக் கொண்டு, அறையை ஒட்டி தோட்டத்தைப் பார்த்திருந்த ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்து, மழையில் காலை நனைத்த படி அங்கே அமர்ந்தனர் இருவரும்.

மழையும், தேநீரும், மனதுக்கு நெருக்கமானவளும் பக்கத்தில் இருக்க, மீதம் இருந்த வெற்றிடத்தை இசையைக் கொண்டு நிரப்பினான் தேவா.

அலைபேசியில் தேடி பாடலை ஒலிக்க விட்டான்.

சமீபமாக அவன் அடிக்கடி கேட்கும் பாடல். அவனுக்கு அப்பாடல் எப்போதும் பிடிக்கும் தான். ஆனால், இப்போது மிக மிக அதிகமாகப் பிடித்திருந்தது.

“இதோ.. இதோ.. என் பல்லவி…” மழையோடு சேர்ந்து இசையும் அவர்களை நனைக்கத் தொடங்கியது. பல்லவியின் உள்ளங்காலில் இருந்து கிளம்பிய விநோத உணர்வு, மெல்ல உச்சந்தலையை நோக்கி பாயத் தொடங்கியது

இருவருக்கும் தேநீருடன், காதலும் மிடறு மிடறாக உள்ளிறங்க தொடங்கியது.

மெல்ல பல்லவியின் கைப் பற்றினான் தேவா.

பாடல் வரிகளுடன், இணைந்து அவனும் பாடினான்.

“நீ கீர்த்தனை… நான் பிரார்த்தனை.. பொருந்தாமல் போகுமா?

இதோ… இதோ… என் பல்லவி..”

பாடல் ஒலித்துக் கொண்டிருக்கையிலேயே,

“கட்டிக்கலாமா பல்லவி?” அவளின் கண்களை நேராகப் பார்த்து மென்மையாகக் கேட்டான் தேவா.

என்ன பதில் சொல்லப் போகிறாள் பல்லவி?

பல்லவியின் பிரிய மழை, ஏற்கனவே அவர்களை நனைத்துக் கொண்டிருக்க, காதல் மழையில் நனைவார்களா அவர்கள்?

மழை நனைக்கும்…

error: Content is protected !!
Scroll to Top