மழை மேகம் – 10 (2)

“என்ன விஷயமா கேரளா போற தேவா?” என்று கஸ்தூரி கேட்க,

“எங்க ஹாஸ்பிட்டல், கொச்சின்ல புதுசா ஒரு பிரான்ச் ஓபன் பண்ணி இருக்காங்க அத்த. அங்க பிடியாட்ரிஷன் இன்னும் அப்பாயின்ட் பண்ணல. டாக்டர்ஸ் இன்டர்வியூ போய்ட்டு இருக்கு. ஒரு வாரத்தில் புது டாக்டர் அப்பாயின்ட் பண்ணிடுவாங்க. அதுவரை பார்த்துக்க ஆள் வேணும்னு என்னை அனுப்பறாங்க” என்று விளக்கினான் தேவா.

பல்லவி, “அப்படியா?” என்பது போல விழி விரித்து அவனைப் பார்க்க, “ஐயோ, என் குரலை வச்சே பொய் சொல்றேன்னு கண்டுபிடிக்கறாளே. குட்டி பிசாசு” மனதில் மட்டுமே புலம்ப முடிந்தது அவனால்.

இது அவன் போக வேண்டிய வேலை அல்ல. அவனோடு வேலை பார்க்கும் சக குழந்தைகள் நல மருத்துவரை தான் கேரளா போகச் சொல்லியது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், அன்றைக்குச் சூர்யா மேல் இருந்த கோபத்தில், “நான் போகிறேன்” என்று தானாகவே முன் வந்து கேரளா செல்ல ஒப்புக் கொண்டான் தேவா. அதைப் பல்லவி கண்டு கொண்டது அவனுக்கு அதிர்ச்சி தான்.

“ஓ சரிப்பா. புது ஊரு. பார்த்துக் கவனம். டேக் கேர்” என்று அவனிடம் அக்கறையாகச் சொன்ன கஸ்தூரி, திரும்பி சேதுராமனிடம்,

“பல்லவியைத் தேவா வேலை பார்க்கற ஹாஸ்பிட்டல் குரூப்லயே ஜாயின் பண்ண சொல்லுவோமா? கல்யாணம் வரை அவ வேலை பார்க்கட்டும் சூர்யாப்பா. படிச்ச படிப்பு வேஸ்ட் ஆகக் கூடாது. அவளுக்கு வருமானம் தனிக் கான்ஃபிடன்ஸ் கொடுக்கும். நாளைக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா, வேலைக்கு அனுப்புவாங்களோ, மாட்டாங்களோ, நம்ம வீட்ல இருக்க வரை அவ வேலைக்குப் போகட்டும். தேவா கேரளா போய்ட்டு வந்ததும், வேக்கன்ஸி எதுவும் இருக்கான்னு விசாரிக்கச் சொல்வோம்” என்று அவர் யதார்த்தமாகப் பேசிக் கொண்டே செல்ல, ஒரு நொடி அதிர்ந்து போய் நின்று விட்டான் தேவா.

பல்லவியைத் தேடியது அவன் கண்கள்.

‘நான் எதற்காக அவளையும் மருத்துவம் சம்மந்தமான படிப்பை படிக்கச் சொன்னேன்?’ என்ற கேள்வி காலம் கடந்து அவன் மனதில் எழும்ப, மீண்டும் ஒரு கண் திறப்பு தான் அவனுக்கு. தன் ஆழ் மனம் பல்லவியை‌ எத்தனை விரும்பி இருக்கிறது என்று அவனுக்கே அப்போது தான் முழுமையாகப் புரிந்தது.

எல்லா வகையிலும் அவளைத் தன்னோடு இருத்திக் கொள்ளவே முனைந்திருக்கிறான் அவன்.

அவனுக்குப் பிடித்த மருத்துவப் படிப்பு. அதன் மூலம் வேலை இடத்திலும் தன்னோடு இருப்பாள் என்று வெகு இயல்பாக யோசித்து இருக்கிறது அவன் மனம் என்பது அவனுக்கு உரைக்க, மலர்ந்து புன்னகைத்தான் அவன்.

“என்ன ஒரே ஸ்மைலி ஃபேஸா இருக்கு டாக்டர் தேவா” என்று கிண்டலாகக் கேட்டபடி பல்லவி அவன் பக்கத்தில் வர, அவளை இழுத்து அணைக்கப் போன கரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான் தேவா.

“டைம் ஆச்சு பா. கிளம்பலாம்” என்று கனிமொழி வர, இருவரும் மௌனமாய் விலகி நடந்தார்கள்.

தேவாவை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு வந்த பல்லவியின் முன் வந்து நின்றாள் சங்கவி.

அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விலகி நடந்தாள் பல்லவி.

“பாப்பா, சாரி டா” என்று சங்கவி கெஞ்ச,

“ஓ, பிளீஸ் சங்கவி. என்னைப் பாப்பா எல்லாம் சொல்லாத. ரொம்பத் தான் பாசம் போல நடிப்பு.” என்று கோபமாகச் சொன்னவள்,

“உனக்கு என் மேல பாசமே கிடையாதுன்னு எனக்கு நல்லா தெரியும். சோ, நீ என்னைக் குட்டி பிசாசுன்னே ‍சொல்லு போதும்” விறுவிறுவென்று தன் அறையை நோக்கி நடந்தாள் பல்லவி.

இரண்டு எட்டில் அவளை நெருங்கி அவளின் கையைப் பற்றினாள் சங்கவி.

“இல்லடா பல்லவி..”

“அக்கா பிளீஸ், ஐ ஆம் டயர்ட். இன்னொரு நாள் பேசலாம். நாட் டுடே” என்று தீர்க்கமாகப் பல்லவி சொல்ல,

“சாரி பல்லவி, அக்காவை மன்னிக்கக் கூடாதா?” சங்கவியின் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது. ஆனால், அதை விடக் கடுமையான கோபம் பல்லவியின் மனதில் இருந்ததால் மௌனமாய் அக்காவை ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு சென்றாள் பல்லவி.

அதற்கடுத்து வந்த நாட்களும் சங்கவி எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்து விட்டாள். பல்லவி இறங்கி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

தனக்குச் சிறு வயதில் இருந்தே அக்கா கொடுத்த எத்தனையோ அடிகளை, பேச்சுக்களை எளிதாக மறக்க முடிந்த, மன்னிக்க முடிந்த பல்லவியால் இம்முறை அது முடியவில்லை. அவளுக்கு அக்காவின் மீதிருந்த எதிர்பார்ப்பை எப்படித் தப்பென்று சொல்ல முடியும்.

ஒருநேரம் தன் எதிர்ப்பார்ப்பு தான் தவறு, தன் கோபம் தவறு என்று மனதில் சொல்லிக் கொள்ளும் பல்லவி, மறுநிமிடமே, “அக்கா, ஏன் என்னோடு இருக்கவில்லை? ஏன் எனக்குத் துணையாக இருக்கவில்லை?” என்று யோசித்துச் சங்கவியின் மேல் வீம்பாகக் கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

தேவா கேரளா சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. தேனிலவு சென்ற சூர்யா, பாரதி ஊர் திரும்பி விட்டனர். புகுந்த வீடான மும்பை செல்ல தயாராகினாள் சங்கவி.

அப்போதும் அக்காவை தூரவே நிறுத்தினாள் பல்லவி. இம்முறை நிஜமான வருத்தம் சங்கவியின் முகத்தில் இருந்தது.

பல்லவி, தேவாவிடம் சொல்லி, அவன் திட்டினாள் கூடத் தேவலாம் என்றிருந்தது அவளுக்கு.

தங்கையின் இந்த முகம் சங்கவிக்குப் புதிது. என்ன நடந்தாலும், அக்காவின் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும், மூன்று நாட்களில் அதை மறந்து விட்டு வந்து பேசும் பல்லவியைத் தான் அவள் அறிவாள். ஆனால், இன்று, ஒரு பெருமூச்சுடன் தங்கையின் முகம் பார்த்து விட்டு, மும்பை கிளம்பினாள் சங்கவி.

தேவா கேரளா சென்ற மறுநாளில் இருந்தே பல்லவி, தேவா டிராவல்ஸ் செல்லத் தொடங்கி இருந்தாள்.

கதிர்வேலனே வீட்டிற்கு வந்து அழைக்க, மறுப்பின்றி அவருடன் சென்றாள் அவள்.

தினமும் தேவாவிடம் எப்போதும் போல அலைபேசியில் உரையாடினாள்.

சூர்யா, பாரதி விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கி இருந்தனர்.

வித்யா இன்னமும் புகுந்து வீடு செல்லவில்லை. கணவரை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டு, மகனுடன் இங்கேயே தங்கி விட்டாள்.

“நீ ஊருக்கு போகல வித்யா?” என்று பல்லவி கேட்க,

“இப்பவே நாத்தனாரை துரத்தி விடப் பார்க்கறா பாரு” என்று முணுமுணுத்து விட்டு,

“கொஞ்ச நாள் அம்மா வீட்ல இருக்கணும் போல இருந்தது பல்லவி. அங்க போய்ட்டா, திரும்ப இங்க வர்றது ரொம்பக் கஷ்டம். அதுவும் இல்லாம, எனக்கு இங்க முக்கியமான வேலை ஒன்னு செய்ய வேண்டியது இருக்கு. அதை முடிச்சுட்டு தான் போகனும்” என்று பொடி வைத்து பேச,

வெறுமே, “சரி, சரி வித்யா. விக்ரம் குட்டி வீட்ல இருக்கறது ரொம்ப நல்லா இருக்கு. நீ ஊருக்குப் பொறுமையா போ” என்று அவள் சொல்ல,

மற்ற நேரமானால், “விக்ரம் மட்டுமா? நான் இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?” என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போவாள் வித்யா. இன்று எதுவும் சொல்லாமல், அமைதியாய் சிரித்தாள் அவள்.

தேவா கேரளா சென்று பத்து நாட்கள் சென்றிருக்க, அவளையும் அறியாமல் மனது அதிகமாக அவனைத் தேடியது.

காரணமே இன்றி, அவன் வீட்டிற்கும், அவள் வீட்டிற்குமாக நடையாய் நடந்தாள் அவள்.

அவன் அங்கில்லை என்று தெரிந்தும் கூட, அவன் வீடு நோக்கி நகரும் கால்களைத் தடுக்க முடியவில்லை அவளால்.

என்ன தான் அவனிடம் தினமும் அலைபேசியில் பேசினாலும் கூட, அவனில்லாமல் எல்லாமே இருளாகத் தெரிந்தது. மனம் முழுக்க வெற்றிடமாக, வெறுப்பாக இருந்தது.

அவளின் பிரிய மழையைக் கூட ரசிக்க இயலவில்லை அவளால்.

“ஏய் பல்லவி, மழையில நனையாத.” எனும் தேவாவின் அதட்டல் குரல் காதில் எதிரொலிக்க, மழையில் நனைவதை கூட மறந்திருந்தாள் பல்லவி.

அவளுடன் படித்த தோழி ஒருத்தி தனக்குத் திருமணம் என்று வாட்ஸ்அப்பில் பத்திரிக்கை அனுப்ப, தப்பிக்கும் வழி தேடிக் கொண்டிருந்தவள், வீட்டில் அடம் பிடித்து, தோழியின் திருமணத்திற்குக் கிளம்பி விட்டாள்.

இத்தனைக்கும் உடன் படித்த பெண் தான். அப்படி ஒன்றும் அவளுக்கு நெருக்கம் எல்லாம் இல்லை.

தன்னைப் புதைக் குழியாய் இழுக்கும் தேவாவின் நினைவுகளில் இருந்து தப்பிக்கவே அப்பயணத்தை மேற்கொண்டாள் அவள்.

தனக்குத் தானே அப்படித் தான் சொல்லி, மனதை சமாதானம் செய்து கொண்டாள் பல்லவி.

வெயில் குறைந்திருந்த காலை நேரம், சிலுசிலுவென்று வீசிய காற்றுக்கு உடலை கொடுத்தபடி, ஹாஸ்பிட்டலை விட்டு வெளியில் வந்த தேவா, ஆட்டோ பிடித்து நண்பனின் வீட்டு முகவரியை சொன்னான்.

அவ்வளவு தான். அவன் வந்த வேலை முடிந்தது. புதிதாகக் குழந்தைகள் நல மருத்துவரை பணியில் இருத்தி ஒரு வார காலம் ஆகியிருந்தது.

மறுநாள் மாலை சென்னை ப்ளைட். அவன் மனம் தானாக மெல்லிசை ஒன்றை இசைக்கத் தொடங்கி இருந்தது.

இரண்டு வார பிரிவிற்குப் பின் பல்லவியைச் சந்திக்கப் போவது மட்டுமே காரணம் அல்ல.

அவளிடம் காதலை சொல்லவும், அவள் கரத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொள்ளச் சேதுராமனிடம் பேசவும் போகிறான் என்பதே காரணம்.

தன் இதயத் துடிப்பு அதிகமாவதை அவனால் நன்றாக உணர முடிந்தது. அவன் வீட்டை அடைந்து, முகம் கழுவி, உடை மாற்றி, நண்பன் குடும்பத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவனது அலைபேசிக்குச் சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவன் அழைப்பை ஏற்றதும், “தேவா… பல்லவி, பல்லவி நேத்து மதியம் கடைசியா பேசினது. அப்புறம் அவளைப் பிடிக்கவே முடியல. போன் ஆப் ஆகி இருக்கு. அவ ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்க. பாப்பாவை எப்படி ரீச் பண்ணன்னு தெரியல. பயமா இருக்கு. நீ கொஞ்சம் என்னனு பார்க்கறியா?” அந்தப் பக்கம் படபடத்தான் சூர்யா.

உடல் முழுக்கப் பதட்டம் பரவ, அனிச்சையாய் இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் தேவா.

“என்ன உளருற சூர்யா. நேத்து மதியம் பேசினதுன்னா?” என்று அவன் கேள்வியை முடிக்கும் முன்,

“பல்லவி அவளோட ப்ரெண்ட் கல்யாணத்துக்கு எர்ணாகுளம் போய்… அங்க தான் இருக்கா.” என்றான் சூர்யா.

“என்கிட்ட ஏன் சொல்லல?” கத்தினான் தேவா.

முன் தின இரவு பல்லவி அவனிடம் பேசியது கூட மறந்து விட்டிருந்தது அவனுக்கு.

அவன் கால்கள் தானாக அவனது அறையை நோக்கி நகர்ந்தது.

“அது தேவா, உன்கிட்ட பல்லவி சொல்லி இருப்பான்னு…” சூர்யா தடுமாற,

“நீ ஏன்டா சொல்லலை?” என்று கத்தினான் தேவா. அந்தப் பக்கம் மூச்சுக் கூட விடவில்லை சூர்யா.

error: Content is protected !!
Scroll to Top