சூர்யா, பாரதி இருவருக்கும் சேதுராமன் சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட, அவர்கள் காரை நோக்கி நடந்தனர்.
சேதுராமன் சோர்வாக நின்றிருந்த மகளைத் திரும்பிப் பார்த்து, “இங்க வா பல்லவி” என்று அழைக்க, தேவாவின் பார்வை அவளையே வட்டமிட்டது.
அவன் நிற்கும் பக்கமே விழிகளைத் திருப்பவில்லை பல்லவி.
அவன் கண்களில் இருந்த சிரிப்பை கவனித்து விட்டு தான், அவன் பார்வையைத் தவிர்த்தாள் அவள்.
“என்னாச்சு மா?” என்ற அப்பாவின் கேள்விக்கு, “ஒன்னுமில்ல பா” என்றாள் அவள்.
கையில் இருந்த திருநீரை அவள் நெற்றியில் வைத்து விட்ட சேதுராமன், சட்டை பையில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் பல்லவி.
“வேண்டாம்” என்று சொன்னால், தந்தை கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார் என்று அவளுக்குத் தெரியுமே.
அண்ணன், அண்ணி கிளம்புகையில் அங்கு நிற்போம், என்று அவள் வாசலை நோக்கி நகர, வேண்டுமென்றே அவளை இடித்து விட்டு முன்னே நடந்தான் தேவா.
இப்போது வேறு வழியில்லாமல் கண்ணை உருட்டி அவனை முறைத்தாள் பல்லவி.
“கலெக்சன், பெரிய தொகை போல?” என்று புருவம் உயர்த்தினான் தேவா.
அவள் அப்பாவிடம் பணம் வாங்கியதை குறிப்பிட்டு அவன் சொல்ல, அவனைப் பார்த்து உதடு சுழித்துக் காட்டி விட்டு அண்ணனிடம் சென்றாள் பல்லவி.
பாரதியின் கைகளில் அவள் எதையோ திணிக்க, ஆச்சரியமும், ஆவலுமாய் அதை வாங்கிக் கொண்டாள் பாரதி. அதை அக்கணமே பிரித்துப் பார்க்க, உள்ளே புக்கிட்டில் அவர்கள் க்ரூஸ் ஷிப்பில் ஒரு முழு நாளை கழிப்பதற்கான ஆன்லைன் டிக்கெட் இருந்தது. அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பாரதி.
“தாங்க்ஸ் பல்லவி. ஆனாலும், எதுக்கு…”
“அண்ணி பிளீஸ்” என்று பல்லவி சொல்வது தேவாவிற்குத் தெளிவாகக் கேட்டது. தனக்குள் சிரித்துக் கொண்டான் தேவா.
அவனுக்கு நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன் போய் நின்றது.
அப்போது தான் சூர்யா முதல் முறையாக வேலை விஷயமாக வெளிநாடு சென்றான்.
அவனை வழியனுப்பி விட அவர்கள் சென்றிருந்த போது, அனைவரும் சூர்யாவிற்குப் பல்வேறு அறிவுரைகள் சொல்லி அவனை நிரப்பிக் கொண்டிருந்த போது, பல்லவி அண்ணனின் கைகளில் முன்னூறு அமெரிக்கன் டாலர்களைக் கொடுத்தாள்.
அன்று சூர்யாவே தங்கையை அதிர்ச்சியாகத் தான் பார்த்தான். அவள் எப்போதும் அவனுக்குப் பரிசுகள் கொடுப்பாள் தான். ஆனால், இதை நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“என்னடா பல்லவி? எதுக்கு டாலர் எல்லாம்?” என்று சூர்யா கேட்க,
“ஏதாவது பொருளா வாங்கனும்னு தான் நினைச்சேன் ண்ணா. ஆனா, என்ன வாங்க தெரியலை. அதான் அந்த ஊர் காசா கொடுத்தா, அங்க போய் உனக்கு யூஸ் ஆகுமேன்னு.” என்று சொன்ன தங்கையின் கையை இறுகப் பிடித்துக் கொண்டான் சூர்யா.
அவர்களின் பக்கத்தில் நின்றிருந்த தேவா தான், “ஏய் பல்லவி, இவ்வளோ காசு ஏது உனக்கு?” என்று கேட்க, அவனைப் பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தாள் அவள்.
பின்னே, கல்லூரி முதலாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தவள், முன்னூறு டாலர் பரிசாகக் கொடுத்தால், அவனுக்குச் சந்தேகம் வருவது இயல்பு தானே.
“என்னோட சேவிங்ஸ்ல இருந்து எடுத்து, கொடுத்திருக்கேன். உனக்கு என்ன பிரச்சினை?” என்று அவனிடம் எகிறினாள் பல்லவி.
“உங்கப்பா சட்டையில் இருந்து காசு எடுத்து சேர்த்தியா?” என்று கேட்டவனை, நொடியும் தாமதிக்காது, அவன் கைகளில் ஓங்கி அடித்தாள்.
“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? என்னைப் பத்தி இப்படித் தான் நினைச்சிட்டு இருக்கியா தேவா நீ? எனக்கு அப்பா சட்டையில் இருந்து காசு திருடி எல்லாம் பழக்கமில்ல. உனக்கு எப்பப் பாரு, என்னைத் திட்டிட்டே இருக்கணும். ஏதாவது சொல்லிட்டே இருக்கணும்” என்று அவள் கோபத்தில் பொரிய, கண் சுருக்கி அவளை அமைதியாய் பார்த்தான் தேவா.
“சரி, அப்படியே வச்சுக்கோ. என் அப்பா சட்டையில் இருந்து தான் காசு எடுத்தேன். என்னமோ உன் பாக்கெட்டில் இருந்து எடுத்த மாதிரி தான்….” என்று சொன்னவளுக்கு,
“ஹா, என் பாக்கெட்டில் இருந்து காசு எடுக்காமலா இருக்கப் போறா. அப்ப இருக்கு உனக்கு” என்று அவன் சொன்ன போது, அவனைப் பல்லவி இமைக்காமல் பார்த்தது தேவாவிற்கு இப்போதும் தெளிவாக நினைவில் வந்தது.
‘கடவுளே, அப்போதே பல்லவியிடம் என்ன பேசி இருக்கிறேன் நான்?’ என்று நினைத்து இப்போது மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டான் தேவா. அவன் லேசாகத் தலையைத் திருப்ப, அவனைப் பார்த்து உதடு சுளித்துச் சிரித்தாள் பல்லவி.
அன்று, “என் உண்டியல் காசு” என்று பல்லவி முணுமுணுத்ததும் நினைவில் வந்தது.
அவனுக்குத் தெரிந்து, சேதுராமன், கஸ்தூரி இருவரும் பிள்ளைகளுக்குப் பண்டிகை தினங்கள், பிறந்த நாள் போன்ற விஷேச தினங்களின் போது ஆசீர்வதித்துக் கையில் பணம் கொடுப்பதை வழக்கத்தை வைத்திருந்தனர். சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட்டு, கையில் ஒரு சிறிய தொகையைக் கொடுப்பர்.
பல்லவி எப்போதும் அதைப் பத்திரமாகச் சேமித்து வைப்பாள். அதை எடுத்து வீட்டினருக்கு தான் செலவும் செய்வாள். குட்டி, குட்டி பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுப்பாள். தேவாவிற்கு அது நன்றாகத் தெரியும்.
ஆனாலும், இன்று தொகை பெரிதே, இத்தனையுமா சேர்த்து வைத்திருந்தாள் என்பது தான் அவனின் ஆச்சரியத்திற்கான காரணமாக இருந்தது. ஆனால், அதற்கும் கூடிய விரைவில் விடைக் கிடைத்தது.
ஒரு பண்டிகை நாளில், தைப் பொங்கல் என்று அவனுக்கு நினைவு. தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பல்லவி, அங்கு ஓரமாக நின்றிருந்த தேவாவின் கையையும் பிடித்து இழுத்தாள்.
“தேவா, வா, வா. அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கு.” என்று அவள் சொல்ல, அவளின் பிடியில் இழுபட்டு, அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் தேவா.
மகளுக்குக் கொடுக்கச் சட்டைப் பையில் இருந்து சேதுராமன் பணம் எடுக்க, வேக வேகமாக, “பா, ஏன் பா. இப்படிக் காசை ஒவ்வொண்ணா எண்ணிட்டு இருக்கீங்க? கஞ்சத்தனம் பண்ணாம. அப்படியே கொடுங்க பா” என்று சொல்ல,
“பல்லவி” என்று அடுப்படியில் இருந்து அதட்டிய கஸ்தூரி, வெளியில் வந்து நின்று,
“ஐநூறு ரூபாய்க்கு மேல கொடுக்காதீங்க சூர்யாப்பா” என்று எச்சரிக்க, திரும்பி அம்மாவை பாவம் போலப் பார்த்து வைத்தாள் பல்லவி.
“பா, எங்கம்மா ஓட அப்பா தான் கஞ்சம். பட், எனக்கு உங்களைப் பத்தி தெரியும். காசை எண்ணி டைம் வேஸ்ட் பண்ணாம, அப்படியே கொடுங்கப்பா.” என்று அவர் கையில் இருந்த மொத்த பணத்தையும் பிடுங்கிக் கொண்டாள் அவள்.
மகளின் குணம் அறிந்து சின்னச் சிரிப்புடன் காசை கொடுத்து விட்டு சென்றார் சேதுராமன். அவர் திரும்பி வந்து தேவாவின் கைகளில் ஆயிரம் ரூபாயை கொடுக்க, அதை வாங்க மறுத்தான் அவன்.
“ஆசிர்வாதம் பண்ணி கொடுக்கற காசு. வேணாம், சொல்லக் கூடாது தேவா” என்று பொறுப்பாக அவனுக்கு எடுத்துச் சொன்ன பல்லவியை அவன் முறைக்க,
“வாங்கிக்கோ, தேவா” என்று அவன் சட்டைப் பையில் காசை திணித்தார் சேதுராமன். சங்கடத்துடன் அதைப் பெற்றுக் கொண்டான் அவன்.
ஆனால், பல்லவியோ சோஃபாவில் அமர்ந்து நிதானமாகத் தன்னிடம் இருந்த காசை எண்ண ஆரம்பித்தாள்.
“வெறும் அஞ்சாயிரத்து நானூறு ரூபா தான் பா இருக்கு” என்று அவள் புலம்பலாகச் சொல்ல, தேவா பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
‘ஆக, இப்படித் தான் கொள்ளை அடிக்கறியா?’ என்ற அவன் பார்வையை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
“என்ன அஞ்சாயிரமா? சூர்யா ப்பா, எதுக்கு அவ்வளவு காசு கொடுக்கறீங்க? திருப்பி வாங்குங்க” என்று கஸ்தூரி தொடங்கும் போதே, எழுந்து உள்ளே ஓடி விட்டாள் பல்லவி.
சூர்யாவிற்குக் கொடுக்க அத்தனை பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று அன்றைக்குத் தான் தெளிவாகத் தெரிந்து கொண்டான் தேவா.
அவனுக்கும், அவனது பிறந்த நாளின் போது, அவன் பெயர் பதித்த ஸ்டெதஸ்கோப் பரிசாகக் கொடுத்திருந்தாள் பல்லவி. அதைத் தான் இன்று வரைக்கும் பயன்படுத்துகிறான் தேவா. பழைய நினைவுகள் தித்திக்க, மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
அன்று, ‘பகல் கொள்ளை அடிக்கறா’ என்று சொல்லிக் கொண்டே அவன் வீடு சென்றது இப்போதும் பசுமையாய் அவன் நினைவில் இருக்கிறது.
இன்றும் அவள் தந்தையிடம் பணம் பெறும் போது, அவன் சிரிப்போடு அவளைப் பார்த்ததற்கும் அது தான் காரணம். சில பழக்கங்கள் மாறவே மாறாது என்று அவனுக்குத் தோன்றியது.
எப்படி, பல்வேறு சமயங்களில் தன்னையும் அறியாமல் பல்லவியிடம், “நீ தான் என் எதிர்காலம்” என்று அவன் தொடர்ந்து, அவனையும் அறியாமல் அவளிடம் உளறி வைத்திருந்ததைப் போல.
“என் பாக்கெட்டில் இருந்து காசு எடுக்காமலா இருக்கப் போற?” என்ற அவனின் கேள்வியை நினைக்கையில் மெலிதான முறுவல் ஒன்று அவன் முகத்தில் அரும்ப, அப்படியே திரும்பி பல்லவியைப் பார்த்தான்.
அவளின் பாசமலருக்கு விடை கொடுத்து கொண்டிருந்தாள் அவள். அனைவரும் கைக் காட்ட, கார் மெல்ல கேட்டை தாண்டி சென்றது.