ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில் வந்து போனது.
தேவாவின் முன் பதினொரு வயது சங்கவி மிரண்டு நின்றதும் அவனுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
“இன்னொரு தடவை அவளை அழ வச்ச, உன் மண்டையை வீங்க வச்சிடுவேன்” என்று தேவா மிரட்டியது, அப்படியே படம் போல அவன் கண் முன் தோன்றி மறைந்தது.
சங்கவி அழுது கொண்டே சென்றது. வித்யா, பல்லவியின் கைப் பிடித்து அவர்களின் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனது, தேவா பல்லவியைத் தேற்றி, “வா சைக்கிள்ல ஒரு ரவுண்ட்ஸ் போவோம்” என்று அழைத்துப் போனது எனத் தொடர் காட்சிகள் அவன் கண் முன் வலம் வர, சூர்யாவின் இதழ்கள் தாமாகப் புன்னகையில் மலர்ந்தன.
“அவ குட்டி பாப்பா சங்கவி. அவளை நாமதான் பார்த்துக்கணும்” என்று தங்கையிடம் அவன் சொன்னதும் சூர்யாவிற்குப் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
அதுவரை வீட்டின் செல்லமாய் இருந்த சங்கவிக்கு, தன் இடத்தைத் தட்டிப் பறித்த குட்டித் தங்கையைப் பிடிக்கவே இல்லை. அதிலும் அனைவரும் அவளைத் தூக்கி கொஞ்ச, பல்லவியின் மேலான அவளின் கோபம் கூடிக் கொண்டே போனது.
இப்போது அவளுக்கும் திருமணமாகி, அவளே தாயான பின்புதான் தங்கையின் மேல் அவளுக்குப் பாசம் துளிர்த்திருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது துளி வெறுப்பும் இது போல அவளை அறியாமல் வெளிப்பட்டு விடும்.
“அக்கா” என்று சங்கவியை அழைத்த பல்லவி,
“நாம எல்லோரும், எல்லோர்கிட்டேயும் ஒரே முகம் காட்டுறது இல்ல கா. அம்மாகிட்ட ஒரு மாதிரி இருக்கோம். அதுவே அப்பா கிட்ட, சூர்யா அண்ணா கிட்ட வேற ஒரு முகம் காட்டுறோம். உன்னையே எடுத்துக்கோ, அத்தான் கிட்ட ஒரு முகம் காட்டுற, உன் பொண்ணு, நம்ம பவி பாப்பா கிட்ட வேறொரு முகம் காட்டுற, இதுவரை நாங்க யாருமே பார்க்காத முகம் அது. பாசம், அன்பு, ஓவர் ப்ரொட்டக்டிவ்னு முழுக்க முழுக்க நாங்க யாரும் பார்க்காத உன்னோட முகம் அது.
உன்னைப் போலதான் கா, நானும். ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு முகம் காட்டுறேன். கனி அத்த, கதிர் மாமா, வித்யா, தேவா என்னைக் குழந்தையா கொண்டாடினவங்க. இன்னமும் எனக்குள்ள இருக்கக் குழந்தையைத் தொலைய விடாம பார்த்துக்கறாங்க. நான் அவங்ககிட்ட நானாவே இருக்க முடியுது. அதுனால எனக்கும் அவங்களை அதிகம் பிடிக்குது.
நம்மளை யார் நம்மோட குழந்தைத் தனத்தோட இருக்க விடுறாங்களோ, அங்க.. அவங்க பக்கத்துல நாம ரொம்பச் சந்தோசமா இருப்போம் கா. உன்கிட்டயும் அத்த, மாமா பாசமாதானே இருக்காங்க. நீயும் தேவா, வித்யா கிட்ட பேசு. யார் வேணாம்னு சொன்னா?.” என்று பல்லவி நீளமாகச் சொல்லிக் கொண்டே போக,
“தேவா கிட்ட, சோடா கொண்டு வர சொல்லவா பல்லவி?” என்று வித்யா கேட்க, தன் இறுக்கம் மறைந்து பக்கென்று சிரித்து விட்டாள் பல்லவி.
“இப்படி மேடையில் நின்னு பேசிட்டு இருக்கறதுக்கு அத்தை திட்டப் போறாங்க” என்று வித்யா சொல்ல, சூர்யா, பாரதி, சங்கவி என அனைவரின் முகத்திலும் புன்னகை கீற்றாக வந்து போனது.
சூர்யா மலர்ந்த முகத்துடன் நண்பனை கண்களால் தொட்டு பார்வையால் சிரித்தான்.
“சாரி, பாப்பா” என்றாள் சங்கவி. பல வருடங்களுக்குப் பிறகான அவளின் பாப்பா எனும் அழைப்பு, பல்லவியைக் கண் கலங்க செய்தது.
“மன்னிச்சுட்டேன் கா” என்று சிரித்துக் கொண்டே மேடையை விட்டு கீழிறங்கிப் போனாள் பல்லவி.
அவளின் கைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய சங்கவி, “தேவா உனக்கு ரொம்பப் பிடிக்கும் இல்ல?” என்று கேட்க,
“ம்ம்ம், எனக்கு என்னை விட அவனைத்தான் அதிகம் பிடிக்கும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு நகர்ந்தாள் பல்லவி.
தேவா நின்ற இடத்தில் இருந்தே பல்லவியை முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ அவனைத் திரும்பிப் பார்ப்பதாகவே இல்லை.
ஒரு மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான், இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்துடன் அவளை நெருங்கினான் அவன்.
பாரதியின் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தாள் பல்லவி. சத்தமாகச் சிரித்து, மலர்ந்த முகத்துடன் நின்றவளின் பக்கத்தில் போன தேவா, “பல்லவி” என்று அழைக்க, அதிர்ந்து திரும்பினாள் பல்லவி.
அவனைப் பார்வையாலேயே முறைத்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல், “உன்னை அம்மா கூப்பிட்டாங்க. என்னனு போய்க் கேளு” என்று கோபக் குரலில் சொல்ல, நிமிர்ந்து அவன் முகத்தை ஆராய்ந்தாள் பல்லவி.
“சாரி” என்று அதுவரை அவளுடன் பேசிக் கொண்டிருந்த பாரதியின் அண்ணன், அவளின் பெரியப்பா மகன் பிரவீனிடம் விடைப் பெற்று கனிமொழியைத் தேடி நகர்ந்தாள் பல்லவி.
மேடையில் சூர்யாவின் கையைச் சுரண்டினாள் அவனின் தற்போதைய காதலி, நாளை மனைவியாகப் போகும் திவ்யபாரதி.
“என்ன பாரதி? எதுவும் வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே, அவர்களுக்குப் பின்னே நின்றிருந்த தங்கை சங்கவியைப் பார்த்தான் சூர்யா.
“இல்ல சூர்யா, எதுவும் வேணாம்” என்ற பாரதி, “ஒன்னு கேட்கவா? தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல?” என்று கேட்க, “கேளு மா” என்றான் சூர்யா.
“தேவா..” என்று அவள் ஆரம்பிக்கச் சூர்யாவின் முகம் லேசாக மாறவே செய்தது.
“பல்லவி, தேவா நடுவுல… ஏதாவது?” என்று அவள் கேள்வியாக இழுக்க, சிறிய தயக்கத்திற்குப் பின்,
“ச்சே, இல்ல பாரதி. அப்படி எதுவும் எனக்குத் தெரிஞ்சு இல்ல” என்றான் சூர்யா.
‘எதுவும் இருக்குமோ?’ என்று பதில் சொன்ன பிறகே அவன் மனதில் கேள்விகள் முளைத்து கிளைப் பரப்ப ஆரம்பித்தது.
“இல்ல, ஏன் கேட்டேன்னா எங்க பிரவீன் அண்ணாக்கு பல்லவியைக் கேட்கலாம்னு பெரியம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு அவளை ரொம்பப் பிடிச்சு இருக்கு. எங்க அண்ணனுக்கும்தான்” என்று சேர்த்தே சொன்னாள் பாரதி.
“ஓ, சரி பாரதி” என்று முடித்துக் கொள்ளப் பார்த்தான் சூர்யா.
“வீட்ல இதைப் பத்தி பேசும் போது, மாமா கிட்ட நீங்கதான் பேசி, சம்மதிக்க வைக்கணும்” என்று அவள் அழுத்தி சொல்ல, புது மாப்பிள்ளையின் தலை தானாக ஆடியது.
கனிமொழியைத் தேடிக் கொண்டு சென்ற பல்லவியைக் கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தான் பிரவீன்.
தேவாவிற்கு அவனுள் அதுவரை மறைந்து இருந்த ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் பளிச்சிட்டு வெளியில் வந்தது.
வேக வேகமாக மணமேடையை நோக்கி நடந்தான் அவன். நேரே போய் நண்பனின் முன் நின்றான்.
நெருங்கிய உறவினர் குடும்பம் ஒன்று அவர்களை வாழ்த்தி கொண்டிருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழிறங்கும் வரை பொறுமையாய் நண்பனின் பக்கத்தில் நின்றான் தேவா.
அவர்கள் சென்றதும் திரும்பி நண்பனைப் பார்த்த சூர்யா, “என்ன தேவா? ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமே சரியில்ல?” என்று கேட்க, தேவாவின் பார்வை பாரதியை தொட்டு மீண்டது.
உடனே தேவாவின் கரம் பற்றி அங்கிருந்து நகர்ந்து நின்றான் சூர்யா. தங்கள் பேச்சை பாரதி கேட்க முடியாத அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தினான்.
“சொல்லு தேவா” என்றவனை, தீர்க்கமாகப் பார்த்த தேவா, நொடி கூடத் தாமதிக்காது, “பல்லவி, பல்லவியை என்கிட்ட… எனக்குக் கொடுத்துடு சூர்யா” என்றான்.
பட்டென்று தெளிவாக, தீர்க்கமாகச் சூர்யாவின் கண்களைப் பார்த்துக் கேட்டான் தேவா.
ஆனால், அதைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவிற்குத் தான் பலவித உணர்வுகள், பல்வேறு கேள்விகள், கேட்டதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறினான் அவன்.
இதே கேள்வியை முன்னொரு முறை சூர்யாவின் பெற்றோரிடம் தேவா கேட்டது அவன் காதில் அந்நொடி எதிரொலித்தது.
“தேவா… தேவா, நீ பல்லவியை… அவளை நேசிக்கிறியா? டூ யூ லவ் ஹர்?” கேட்டான் சூர்யா.
என்ன சொல்லப் போகிறான் தேவா?
தேவாவின் பதிலை கேட்கும் சூர்யாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறது?
ஒருபக்கம் வித்யாவின் மகன் விக்ரமையும், மறுபக்கம் சங்கவியின் மகள் பவித்ராவையும் கையில் வைத்துக் கொண்டு, ஜன்னல் வழியே மழை நீரைப் பிடித்து அவர்களுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த பல்லவி அறிவாளா?
தன் பிரிய மழை தன்னுடன் விளையாடப் போகும் ஆட்டத்தை???
மழை நனைக்கும்…