அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன்.
கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச வீடு என அனைத்திற்கும் பழகி விட்டிருந்தார். ஆனாலும், மனத்தின் ஓரம் சின்னதாக ஆசையும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் அவருக்கு இந்த வயதிலும் இருக்கத்தான் செய்தது.
அன்றைக்குப் பல்லவி விளையாட்டுக்குச் சொல்வதாக, தன்னைச் சமாதானப்படுத்த சொல்வதாகதான் நினைத்தார் கனிமொழி.
ஆனால், இன்று அவள் அதைச் செய்து விட்டு வந்து நிற்பதை பார்க்கையில் அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
அவள் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவில் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால், கனிமொழிக்கு பல்லவியின் வார்த்தைகள் துல்லியமாக நினைவில் இருந்தது.
தேவா உணவை முடித்துக் கொண்டு, விக்ரமை தூக்கி, அவனுக்குக் கை, வாய் கழுவி அவளிடம் வந்து நீட்டினான்.
“வித்யா, நம்ம வீட்ல இருக்கா” என்று சொன்ன பல்லவி.
“ரெண்டே நிமிஷம் இரு தேவா, வந்துடுறேன்” என்று கையைக் கழுவி விட்டு அடுப்படிக்குள் புகுந்தாள்.
கனிமொழி, கதிர்வேலனுக்கு டீயும், தேவாவிற்கு லெமன் டீயும் போட்டுக் கொண்டு போய் நீட்டினாள்.
மௌனமாய் அவள் நீட்டிய டீயை குடித்து, கோப்பையை அவளிடம் நீட்டிய தேவா, “உனக்கு விருப்பம் இல்லனா, எதுக்கு நான் சொன்ன படிப்பை எடுத்துப் படிச்ச பல்லவி?” என்று கேட்க, பதில் இல்லை பல்லவியிடம்.
“இல்ல தேவா. எனக்கு…” கை நீட்டி அவளை மேலே பேச விடாமல் தடுத்த தேவா, “வேண்டாம், விடு. நான் கிளம்பறேன்” என்று விட்டு, வேகமாக வெளியேறி இருந்தான்.
அவன் காரை நோக்கி நடக்க, அவனையே பார்த்தபடி சிலையாக நின்றிருந்தாள் பல்லவி.
இது எதுவுமே அவள் திட்டமிட்டு செய்தது இல்லை என்று அவனிடம் எப்படிச் சொல்வாள்? புரிந்து கொள்வானா தேவா? இந்த விஷயத்தில் அவளிடம் ஏன் விளக்கம் கேட்கவே முனையவில்லை அவன்? அவனுக்குப் பிடித்த மருத்துவத் தொழிலை, ஏன் அவள் மேலும் திணிக்கிறான் அவன்?
பல்லவியின் மனத்தில் கேள்விகள் சூழ்ந்து அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. அவள் மனத்தைப் போலவே வானமும் கரும் மேகங்களால் சூழ ஆரம்பித்தது.
அவள் நின்ற இடத்தில் இருந்தே தேவாவை பார்த்தாள். அவளைத் திரும்பியும் பாராமல் காரில் ஏறப் போனான் தேவா. ஓடிப் போய் அவன் கைப் பிடித்து நிறுத்தினாள் பல்லவி.
மழை பூந்தூறலாகப் பொழிய ஆரம்பித்தது.
மெல்ல நிமிர்ந்து வானத்தைப் பார்த்த தேவா, “ஏய், கையை விடு பல்லவி” கத்தினான். மெல்ல மழை அவனை நனைக்கத் தொடங்கியிருந்தது.
“முடியாது” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“அதேதான், நானும், உன்கிட்ட எதையும் கேட்க முடியாது. உன் பதில் எனக்குத் தேவையில்ல.” என்று அவன் இறுகிய குரலில் சொல்ல, கண்களை மூடித் திறந்தாள் பல்லவி.
முத்து முத்தாக மழைத் துளிகள் அவள் முகத்தில் கோலம் போட தொடங்கியது.
“உனக்கு என்கிட்ட சொல்லிட்டு செய்யணும்னு தோனல இல்ல? அப்புறம் எதுக்கு இப்போ மட்டும் காரணம் சொல்ல வர்ற? எனக்கு உன் காரணம் எதுவும் தேவையில்ல.” என்று அவளை மென்மையாகத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன், காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்தான்.
“தேவா” என்று அழைத்தாள் பல்லவி.
“எனக்கு ஹாஸ்பிட்டல் நேரமாச்சுப் பல்லவி. நான் என்ன எங்க மாமன் கம்பெனியிலா வேலை பார்க்கறேன். என் இஷ்டத்துக்கு வேலைக்குப் போக?” என்று அப்போதும் அவளை வார்த்தைகளால் குத்திக் காட்டி விட்டே காரை நகர்த்தினான்.
“மழையில நனையாம, வீட்டுக்குள்ள போ” அவனிடம் இருந்து அனிச்சையாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.
பல்லவியின் முகத்தில் அதுவரை இருந்த கோபம் மறைந்து மெல்ல புன்னகை முளைத்தது.
அதை அவனிடம் இருந்து மறைத்தபடி வீட்டிற்குள் போனாள் அவள்.
அடுத்தப் பத்தாம் நிமிடம் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு டிராவல்ஸ் ஆஃபீஸ் விரைந்தாள்.
நான் வீட்டில் ஓய்வெடுக்கிறேன் என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு, சேதுராமனுடன் இணைந்து கல்யாண வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கதிர்வேலன்.
நாள்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக நகர, நாளை விடிந்தால் திருமணம் என்று வந்து நின்றது காலம்.
அன்றைய இரவு நிச்சயமும், வரவேற்பும் ஏற்பாடாகி இருந்தது.
பெரியவர்கள் முன்னிலையில் நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு, மணமக்கள் உடை மாற்றி வரவேற்பிற்குத் தயாராக வந்து நின்றனர்.
வீட்டினர் ஓரிடத்தில் அமர முடியாதபடி ஆளுக்கொரு வேலை அங்கே அவர்களுக்கு இருந்து கொண்டேயிருந்தது.
மணமேடையில் மணமக்களுக்கு அருகே இருந்த பல்லவி, கீழே தேவா யாரையோ வரவேற்று முன்னிருக்கையில் அமர வைப்பதை பார்த்தாள்.
“தேவா..” என்று சத்தமாக அழைத்தாள்.
சூர்யா புன்னகையுடன் அதைப் பார்த்திருக்க, அவனின் மனைவியாகப் போகும் பாரதியின் முகத்தில் சின்னதாய் ஓர் அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது.
“என்ன பல்லவி?” என்று அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று கேட்டான் தேவா.
“எதுவும் வேணுமா சூர்யா?” என்று நண்பனையும் விசாரிக்க மறக்கவில்லை அவன்.
“அண்ணாக்கு இல்ல, எனக்குத்தான் பசிக்குது தேவா. குடிக்க ஏதாவது வேணும்” என்றாள் பல்லவி.
ஒரு நொடி நிமிர்ந்து அவள் முகம் பார்த்த தேவா, “இதோ வரேன்” என்று கீழே இறங்கி உணவு கூடத்தை நோக்கி நடந்தான்.
ஐந்தாம் நிமிடம் கையில் அங்கிருந்த அனைவருக்கும் குடிக்கக் குளிர்பானம் எடுத்து வந்திருந்தான். பல்லவிக்கு மட்டும் சூடாகக் காஃபி.
காஃபியை கையில் எடுத்த பல்லவி, “உனக்குத் தேவா?” என்று கேட்க, “வேணாம். நீ குடி” என்றான்.
“ஓகே” என்று குடித்து முடித்து விட்டு, காகித கோப்பையை அவனிடம் நீட்டினாள்.
அதையே செய்தனர் மற்றவர்களும், காலி கோப்பைகளுடன் விலகிப் போனான் தேவா.
“இப்பதான் எனக்கு மூச்சே வந்தது வித்யா” என்றாள் பல்லவி.
“உன்னை விட வயசுல பெரியவங்களை மரியாதையா பேச மாட்டியா பல்லவி?” என்று சிரித்துக் கொண்டே பாரதி கேட்க, அந்நேரம் ஒரு குடும்பம் மணமக்களை வாழ்த்த மேடை ஏறியது. பல்லவிக்கு என்னவோ போலாகி விட்டது.
சட்டென்று தொண்டையை அடைத்த உருண்டையைக் கண்களை மூடி விழுங்கினாள் அவள்.
“அவ குழந்தையில் இருந்தே அப்படிக் கூப்பிட்டுப் பழகிட்டா பாரதி. அதான் சட்டுனு மாத்திக்க முடியல” தங்கைக்கு மெல்லிய குரலில் பரிந்து கொண்டு வந்தான் சூர்யா.
“உங்களை, நான் என்ன சொல்லி கூப்பிட வித்யா?” என்று பல்லவி முணுமுணுக்க, அது பக்கத்தில் நின்றிருந்த பாரதியின் காதிலும் விழுந்திருந்தது.
“அக்கா சொல்லி கூப்பிடு. உன்னை விட அஞ்சு வயசு பெரியவங்க” பட்டென்று சொன்னாள் பாரதி.
“சரிங்க அண்ணி” என்ற பல்லவி, திரும்பி வித்யாவை பார்த்து,
“தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அக்கா” என்றாள் அழுத்தமாக, உதடு கடித்துச் சிரிப்பை அடக்கினாள் வித்யா.
சரியாக அப்பொழுது பார்த்துச் சங்கவி மேடையேறி வர, “அதோ காரணமே மேடை ஏறி வருது பார். என் செல்ல அக்கா சங்கவி” என்று அவள் கிசுகிசுக்க, “பேசாம இரு பல்லவி” என்றாள் வித்யா.
“நீ என்னை அண்ணி சொல்லு” என்று வித்யா சொல்ல, சடாரென்று அவர்களைத் திரும்பி பார்த்தாள் பாரதி. ஆனால், ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை அவள்.
“ரொம்பக் கஷ்டம் வித்யா அண்ணி” என்று சொல்லி விட்டு, மேலே பாரதி பேச இடம் கொடுக்காமல் கீழே இறங்கிப் போனாள் பல்லவி.
அவளைக் கடந்து மேடையில் ஏறிய சங்கவி,
“உங்களை மேடையில் நின்னுட்டு வாயாடாம இருக்கச் சொன்னாங்க அத்த” என்று வித்யாவிடம் அவள் சொல்ல, சன்ன சிரிப்புடன் சரி என்று தலையாட்டினாள் வித்யா.
“இந்தக் குட்டி பிசாசு எங்க போச்சு? அம்மா அவளை அண்ணா கூடவேதானே நிற்கச் சொன்னாங்க” என்று சங்கவி சொல்ல, வித்யா பல்லவியை விழிகளால் தேடினாள்.
மண்டபத்தின் ஓரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த தேவாவிடம் குடிக்க எதையோ கொடுத்துக் கொண்டிருந்தாள் பல்லவி.
பத்து நிமிடம் கழித்து அவள் மீண்டும் மேடையேறி வர, “அதென்ன தேவா மட்டும் ஸ்பெஷல்? அவன் கிட்ட மட்டும் வேற மாதிரி பேசுற?” என்று சங்கவி கேட்க, பல்லவிக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
இது சங்கவி அடிக்கடி கேட்கும் கேள்விதான். ஆனால், இன்று பதில் கொடுத்தே ஆவது என்ற முடிவுடன் அவளைத் திரும்பிப் பார்த்தாள் பல்லவி.
வித்யா கிளுக்கென்று சிரித்து விடத் திரும்பி அவளை முறைத்தாள் சங்கவி. “பல்லவி சொன்னா, தேவா இப்பவும் உன்னை அடிப்பான் சங்கவி. பார்த்துக்கோ. அப்புறம் உன் இஷ்டம்” என்றாள் வித்யா, சிரித்துக் கொண்டே.
அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த விருந்தினர் மேல் கண் இருந்தால் கூட, காதை பின்னால் பேசிக் கொண்டிருந்தவர்களின் மேல் வைத்திருந்த சூர்யாவுக்கு, சட்டென்று சிரிப்பு வரும் போலிருந்தது.
ஒரு தொண்டை செருமலில், இருமலில் அதை லாகவமாக மறைத்தான் அவன்.