மழையோடு ஒரு நாள் – 4 (1)

சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி.

மணமகன் – சூர்யநாராயணன்.

மணமகள் – திவ்யபாரதி

இருவரின் பெயரையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அண்ணன் சூர்யா ஒரு புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் ஹெச்.ஆர். அதே நிறுவனத்தில் டீம் லீடராகப் பணிபுரிகிறாள் அவளது வருங்கால அண்ணி திவ்யபாரதி.

பல்லவி எதிர்பார்த்தபடி எல்லாம் அமைந்ததில் அவளுக்கு வெகு திருப்தி.

அம்மாவுடன் கூடவே, மழையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு அலைந்து முக்கால்வாசி சொந்தங்களுக்குப் பத்திரிக்கையும் விநியோகித்தாகி விட்டது.

நாள்கள் குறைவாக இருந்ததால், வெளியூர் சொந்தங்களுக்குப் பத்திரிக்கையைத் தபாலில் அனுப்பி வைத்து விட்டார்கள்.

திருமண ஜவுளி, நகை என எல்லாம் நல்லபடியாக எடுத்து முடிந்தாகி விட்டது.

திருமணத்திற்கு இன்னும் ஒரே ஒரு வாரமே இருந்தது. வீட்டில் இருந்த மற்ற எல்லோரைக் காட்டிலும் பல்லவிதான் அத்திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தாள். அண்ணனின் காதலைதானே ஜெயிக்க வைத்து விட்ட குதூகலம் அவளுள் மிகுந்திருந்தது.

வித்யா, சங்கவி என இரு வீட்டு பெண்களும், தங்களின் பிள்ளைகளுடன் அப்போதே வந்து விட்டார்கள்.

அவர்கள் வீடு இப்போது முழுவதுமாகத் திருமணக் கோலம் பூண்டிருந்தது.

“பல்லவி, இங்க வாயேன். பல்லவி, உன்ன அப்பா கூப்பிட்டாங்க.” என்று வாசலில் நின்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் தேவாவின் தங்கை வித்யா.

“இதோ வந்துட்டேன் வித்யா” என்று பதிலுக்குக் கத்தினாள் பல்லவி.

“உள்ள வந்து சாப்பிட்டு போடா வித்யா. உனக்குப் பிடிச்ச பூரி, கிழங்கு பண்ணேன்” என்று அவளை உள்ளே அழைத்தார் கஸ்தூரி.

பெரிதாகப் பிகு செய்து கொள்ளாமல், உள்ளே வந்து உணவருந்த அமர்ந்தாள் வித்யா.

“அம்மா, நான் வேலைக்குக் கிளம்பிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு சிட்டாகப் பறந்த மகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. சட்டென்று சிரித்தே விட்டாள் வித்யா.

வாசல் வரை சிட்டாகப் பறந்தவள், அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

“உங்களுக்கு என் மேல பாசமே இல்லம்மா. பிள்ளை சாப்பிடாம போகுதேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா? என் மேல அக்கறையே இல்ல உங்களுக்கு” என்று புலம்பிக் கொண்டே, அடுப்படிக்குள் நுழைந்து கேஸரோல் தேடி எடுத்து, அதில் ஐந்தாறு பூரிகளை அலுங்காமல், குலுங்காமல் அழகாக அடுக்கி எடுத்துக் கொண்டாள்.

இன்னொரு குட்டி பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மாசலாவையும் எடுத்துக் கொண்டாள்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாக, வேறொரு குட்டிக் கிண்ணம் எடுத்து, புசுபுசுவென உப்பலாக இருந்த இரண்டு பூரியை அதில் எடுத்துக் கொண்டவள், மெதுவாகத் திரும்பி கஸ்தூரியையும், வித்யாவையும் பார்த்தாள்.

“என்ன பார்க்கறீங்க? இது என் பங்கு, நான் எடுக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு பையைத் தேடி எடுத்து அதில் பாத்திரங்களை அடுக்கினாள்.

“ஏம்மா, பூரிக்குத் தேங்கா சட்னி செய்யல?” என்று கேட்டவளை, கஸ்தூரி இடுப்பில் கை வைத்து முறைக்க,

“எங்க வீட்டு அடுப்பு சூடு, எங்கம்மா கண்ணுலயே தெரியுது” மெல்லச் சொல்லிக் கொண்டாள்.

அதைக் கேட்டு வித்யா சிரிக்க, “நீயெல்லாம் ஒரு தாயா? சோத்த பார்த்ததும், உன் புள்ளையை மறந்துட்டு பூரியை முழுங்கிட்டு இருக்கப் பார்” என்று உதட்டை சுளித்துச் சொல்லிய பல்லவி,

“சரி, சரி. நான் சொன்னதுக்கு ஃபீல் பண்ணாம நல்லா சாப்பிடு. குட்டி பையனுக்கு நான் பூரி எடுத்துட்டு போறேன். இதோ..” என்று கிண்ணத்தைக் காட்டினாள்.

“அம்மா, பை. வரேன் வித்யா” என்று விட்டு வாசலை நோக்கி நடந்தாள் பல்லவி.

“அங்க உங்க வீட்ல போய்ச் சாப்பிட போறதுக்கு என்ன அலம்பல் பாரு இவளுக்கு” என்று மகளுக்குக் கேட்காத சிறு குரலில் சொன்ன கஸ்தூரி, “தேங்கா சட்னி கேட்ட பல்லவி? வேணாமா?” என்று சத்தமாகக் கேட்டார்.

“வேணாம் மா. இனி நீங்க அதை எப்போ அரைச்சு.. தாளிச்சு… போங்க மா” பதிலுக்குக் கத்திக் கொண்டே கேட்டை திறந்து வெளியில் நடந்தாள்.

ஏதோ ஒரு பாடலை மெலிதாக முணுமுணுத்துக் கொண்டே தேவாவின் வீட்டினுள் நுழைந்தாள் அவள்.

அவளைக் கண்டதும், “அத்த…அத்த” என்று தேவாவின் கைகளில் இருந்து, அவளை நோக்கி தாவினான் வித்யாவின் மூன்று வயது மகன் விக்ரம்.

“செல்லக் குட்டி” என்று அவனை வாங்கிக் கொண்டாள் பல்லவி. அவள் கைகளில் இருந்த பை தேவாவின் கரத்திற்கு மாறி இருந்தது.

“பல்லவி, சாப்பிட வாடா” உள்ளிருந்து கனிமொழியின் குரல் மட்டும் வெளியே வந்தது.

“இதோ அத்த” என்று அடுப்படியை நோக்கி தானாக நகர்ந்தன அவளது கால்கள்.

“வாவ், வெண்பொங்கல், கத்திரிக்கா கொத்சு. இந்தக் காம்பினேஷன் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு. இல்லத்த?” என்றவள், மெல்ல அவர் பக்கமாகக் குனிந்து,

“உங்க புள்ளைக்குப் பிடிக்காதது செய்யறீங்களே, எப்படி?” என்று அவள் கண் சுருக்கி கேட்க, அவள் கேட்ட விதத்தில் சிரித்து விட்டார் கனிமொழி.

“மாமா சாப்பிட வர்ற நேரம். வாயடிக்காம, இதெல்லாம் எடுத்து வை, ஓடு” என்று அவர் சொல்ல, உணவு இருந்த பாத்திரங்களைச் சாப்பாட்டு மேஜைக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கே தேவாவும், குட்டி விக்ரமும் அமர்ந்து பூரியை உண்டு கொண்டிருந்தனர். அதிலும் சரியாகப் புசுபுசுவென்று பூரித்து மலர்ந்திருந்த பூரி விக்ரமின் தட்டில் இருந்தது.

பொங்கலுக்குச் செய்திருந்த தேங்காய் சட்டினியை எடுத்து தேவாவின் தட்டில் பரிமாறியவள், “எண்ணெயில் பொரிச்ச புட் நிறையச் சாப்பிடக் கூடாதாம் டாக்டர். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இருந்தாலும் சொல்லி வைக்கறேன்” என்று அவள் சொன்ன விதத்தில் தேவாவுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது.

ஆனால், உணவில் மும்முரம் போலக் காட்டிக் கொண்டான்.

“இங்க பாரு விக்ரம். உன் மாமா கூடச் சேர்ந்து நல்லா பூரியா சாப்பிடு. அப்புறம் அவர்கிட்டயே போய்ப் பம்ல ஊசிப் போட்டுக்கோ என்ன?” என்று அவள் சொன்ன நொடி,

“சாப்பிடுற குழந்தையை என்ன சொல்லி மிரட்டிட்டு இருக்க? நீதானே பூரியை கொண்டு வந்த?” என்று தேவா எகிற,

“உங்களுக்குப் பிடிக்கும்னு தான் கொண்டு வந்தேன் டாக்டரே. இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போனதும் முதல் வேலையா, உங்க ரத்த அழுத்தம் செக் பண்ணி பாருங்க. எக்கச்சக்கமா ஏறிப் போய் இருக்கும் போல. காலையிலேயே திட்டுறதை பாரு” கடைசி வாக்கியத்தை முணுமுணுத்துக் கொண்டே அவள் செல்ல,

“எங்க போற? உட்கார்ந்து சாப்பிடு முதல்ல” அதட்டினான் தேவா.

“அவளை ஏன்டா அதட்டுற?” என்று அவனை அதட்டிக் கொண்டே வந்தார் கனிமொழி.

இனி தன் பேச்சு எடுபடாது என்று உணர்ந்து தலையைக் குனிந்து கொண்டு, பாதிப் பூரியை எடுத்து வாயில் திணித்தான் தேவா.

“பல்லவி மா, விக்ரம் குட்டி எல்லாம் சாப்பிட உட்கார்ந்தாச்சா? நான்தான் லேட்டா?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் கதிர்வேலன்.

அவருக்குப் பொங்கலை தட்டில் பரிமாறினாள் பல்லவி.

“என்ன விக்ரம் குட்டிக்கும், தேவாக்கும் பூரி. எனக்கு மட்டும் பொங்கல்? அதுலயும் நெய் வாடையே காட்டாத பொங்கல்?” என்று கதிர்வேலன் கேட்க,

“பூரி தேவாக்கு, பல்லவி கொண்டு வந்தா. உங்களுக்கு நாளைக்குத் தண்ணில பொரிச்சுத் தர்றாளாம் பூரி. இப்ப பொங்கலை சாப்பிடுங்க” என்று கறாராகக் கனிமொழி சொல்ல, அமைதியாய் உணவில் கை வைத்தார் கதிர்வேலன்.

பல்லவி தனக்கும், கனிமொழிக்கும் இரு தட்டுகளில் உணவை வைத்து, ஒன்றை அவர் பக்கமாக நகர்த்தி விட்டு, தானும் உண்ண ஆரம்பித்தாள்.

“நீங்க ஈவ்னிங் நாலு மணிக்கு மேல வாங்க மாமா போதும். அதுவரை ஆஃபிஸை நான் பார்த்துக்கறேன்” என்ற பல்லவி,

“இடைல சந்தேகம் எதுவும்னா உங்களுக்குக் கால் பண்றேன் மாமா. நீங்க அத்தையைக் கூட்டிட்டு கோவிலுக்குப் போய்ட்டு வாங்க.” என்று விட்டு அவர் பதில் சொல்ல இடம் கொடுக்காமல் மீண்டும் உண்ண ஆரம்பித்தாள் அவள்.

“ஒரு வாரம்தானே ஆகியிருக்கு மா. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் டா. அதுக்கு அப்புறம் நீ மட்டும் ஆஃபீஸை தனியா கவனிப்ப. இப்போ நானும் வர்றேன்” என்று சற்றே தயங்கியபடி கதிர்வேலன் சொல்ல, மறுத்து தலையைப் பலமாக அசைத்தாள் பல்லவி.

“முடியாது மாமா. நீங்க ஒரு வாரம் கழிச்சு, ஆஃபீஸ் வர்றதுக்கு இன்னொரு சாக்கு சொல்வீங்க. அதெல்லாம் சரி வராது. இன்னையில் இருந்து ஆஃபீஸ் நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க. நைட் மட்டும் நீங்க ஆஃபீஸ் வந்தா போதும். அவ்ளோதான். நான் சொல்லிட்டேன்.” லேசாகச் சிரித்தபடியே சம்மதமாகத் தலையை அசைத்தார் கதிர்வேலன்.

விஷயம் இதுதான், கடந்த ஒரு வாரமாகப் பல்லவி தேவா டிராவல்ஸில் வேலை செய்கிறாள். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. தேவா டிராவல்ஸை கதிர்வேலனுடன் இணைந்து அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்.

டிக்கெட் புக்கிங், பார்சல் புக்கிங், பேருந்துகளின் அன்றைய கண்டிஷன் தொடங்கி, போதுமான அளவு டீசல் நிரப்பப்பட்டு விட்டதா மற்றும் ஓட்டுநர்களின் உடல் நலம் வரை அனைத்தையும் சரி பார்க்க, ஒரே வாரத்தில் கற்று விட்டிருந்தாள் பல்லவி.

தனக்குப் பின்னர்த் தேவா டிராவல்ஸை யார் பார்த்துக் கொள்வார் என்ற கவலை கதிர்வேலனுக்கு எப்போதுமே உண்டு. அதிலும் மகளும், மகனும் வளர்ந்த பின்னர் இன்னுமே அதிகரித்து இருந்தது.

மகள் வித்யா விருதுநகரில் ஒரு தொழில் குடும்பத்தில் மருமகளாகி போன பின்னர் டிராவல்ஸை அவள் கவனிப்பாள் என்று எதிர்பார்க்கவே முடியாது என்பதும் அவருக்கு நன்றாகப் புரிந்தது.

தேவா பனிரெண்டாம் வகுப்பு முடித்து மருத்துவம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதும், ஒரு தந்தையாய் மகனை மருத்துவனாக்கி பார்ப்பதில் அவருக்குமே பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் இருந்ததுதான். ஆனால், உள்ளூர சிறு ஏமாற்றமும், ஏக்கமும் அவருக்கு இருக்கவே செய்தது.

தேவா எம்பிபிஎஸ் முடித்து, மேலே பிடியாட்ரிஷன் படிப்பும் முடித்து, குழந்தைகள் நல மருத்துவனாக ஒரு தனியார் மருத்துவமனையில் அவன் பணிக்குச் சேர்ந்த போது, அவருக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போனது தேவா டிராவல்ஸின் எதிர்காலம்.

இனி தேவா டிராவல்ஸ் நிலை என்ன என்ற கவலை அவரைப் பெரிதும் வருத்தவே செய்தது. ஆனால், சிறிது காலத்தில் எல்லாம் மனத்தைத் தேற்றிக் கொண்டு தொழிலை கவனித்தார் அவர்.

இன்று அவரே எதிர்பாராத விதமாக அவரின் பிரியத்திற்குரிய பல்லவி, அதைப் பொறுப்பேற்றுக் கொண்டது அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.

“சரி, பல்லவி மா. நீ பார்த்துக்கோ. ஆனா, ஏதாவது பிரச்சனைன்னா… வராதுதான். அப்படி வந்தா, யோசிக்காம, மாமாக்கு உடனே கால் பண்ணணும், என்ன?” என்று அவர் கேட்க, “சரிங்க மாமா” என்றாள்.

அவர்கள் பேசுவதை மௌனமாய்ப் பார்த்தபடி, உணவினை உண்டு கொண்டிருந்தான் தேவா.

கனிமொழி கலங்கிய கண்களை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார்.

அவருக்குப் பதினைந்து வயது பல்லவி அவரிடம் பேசியதுதான் அப்போது நினைவில் வந்தது.

அன்று தீபாவளி திருநாள். ஊரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது. தெருவே பலகாரம், புத்தாடை, பட்டாசுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

பல்லவி வீட்டிலும் அதே கதைதான். பல்லவிக்குப் பட்டாசு வெடிக்கப் பிடிக்காது. அதனால் கனிமொழியிடம் வந்து விடுவாள் அவள். சூர்யா, சங்கவி மட்டும் வெடித்துத் தள்ளிக் கொண்டிருப்பார்கள்.

அன்றைய தினம் தீபாவளி பலகாரம் கொடுக்கத் தேவா வீட்டிற்கு வந்தாள் பல்லவி.

தேவா தன் மருத்துவப் புத்தகத்திற்குத் தலையைக் கொடுத்து இருந்தான். வித்யா, சங்கவியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். கனிமொழி மட்டும் தனியாக அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தார்.

“அத்த, இந்தாங்க. அம்மா கொடுத்திட்டு வரச் சொன்னாங்க.” என்று கொண்டு வந்திருந்த பாத்திரங்களை அடுப்படி மேடையில் எடுத்து அடுக்கினாள். பதில் ஒன்றும் சொல்லாமல், அடுப்பில் வேலையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் கனிமொழி.

“ஏன் அத்த ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவர் கைப் பிடித்துக் கேட்டாள்.

அவள் குரல் கேட்டு அங்கு வந்து நின்றான் இருபத்தியோரு வயது தேவா.

“ஏன் மா, இப்படி இருக்கீங்க? அப்பா, எந்தப் பண்டிகைக்கு நம்ம கூட இருந்தார். இன்னைக்கு இல்லைனு ஃபீல் பண்றீங்க நீங்க?” என்று அவன் எரிந்து விழ, அவனை நன்றாக முறைத்து வைத்தாள் பல்லவி.

கனிமொழியின் கையில் இருந்த கரண்டியை பிடுங்கி, ஓரமாக வைத்தாள் பல்லவி.

“நல்ல நாள் அதுவுமா, அத்தையைத் திட்டாத தேவா” என்றவளை, கண்களால் எரித்து விட்டுப் போனான் தேவா.

“நீங்க கவலைப்படாதீங்க அத்த. நான் படிச்சு முடிச்சதும், நம்ம டிராவல்ஸை நான் பார்த்துக்கறேன். அப்புறம் மாமா ஃப்ரீ ஆகிடுவாங்க. அவங்க சாப்பிட்டாங்களானு நீங்க கவலைப்பட வேணாம். ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்டேங்கறாங்கன்னு ஃபீல் பண்ணி அழ வேணாம். முக்கியமா, இது போலப் பண்டிகை நாள்ல உங்க கூட இல்லைனு கண்ணைக் கசக்க வேணாம். அதுக்கு நான் பொறுப்பு. சத்தியமா சொல்றேன் அத்த. பாருங்க. ஒரு நாள் நான் அதைச் செய்து காட்டுவேன்”

கனிமொழியின் கைப் பிடித்து அவள் சொல்ல, கண் கலங்க, பல்லவியின் தலைக் கோதி அவள் நெற்றியில் ஆதூரமாக முத்தமிட்டார் கனிமொழி.

அவருக்குக் கணவரின் வேலையைப் பற்றி நன்றாகவே தெரியும். திருமணமான புதிதில் கணவர் தன்னுடன் இல்லையே என்று அத்தனை கண்ணீர் வடித்திருக்கிறார்.

பின்னர்ப் பிள்ளைகள் பிறந்து, அவர்கள் வளர்ந்து, அவர்களுக்குப் பள்ளி, உடல்நிலை சரயில்லாத போது ஹாஸ்பிட்டல் என்று எதற்கும் கதிர்வேலன் வந்து நின்றது இல்லை. கனிமொழி போகப் போக அவரைப் புரிந்து கொண்டு, அவர் இல்லாமல் சமாளிக்கவும் கற்றுக் கொண்டிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top