பல்லவிக்குப் பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்துதான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன்தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளைக் கட்டாயப்படுத்தி வேலைக்குச் செல்ல வைத்ததும் அவன்தான்.
“வேலைக்குப் போக விருப்பம் இல்லனா? அப்புறம் எதுக்குக் காலேஜ் போய்ப் படிச்ச? பேருக்கு பின்னாடி போட்டு பீத்திக்கவா?” என்று அவன் கத்தியது இன்னமும் அவள் காதில் எதிரொலிக்கிறது.
அவள் ஒன்றும் பொழுது போகாமல் வேலைக்குச் செல்லவில்லை. விரும்பிதான் சென்றாள். ஆனால், அங்கிருந்த சூழல் அவள் எதிர்பாராதது. அவளை மிகவும் பயமூட்டியது. தொடர்ந்து அங்கே வேலையைச் செய்ய முடியாத அளவு பயம் அவளை மழை நனைத்த சாலையின் ஈரத்தைப் போல அப்பிக் கொண்டது.
தேவா சொல்லி தேர்ந்தெடுத்த படிப்புதான். அவள் இரவு நேர வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்த போது, வீட்டில் அவன்தான் பேசி சம்மதிக்க வைத்தான். ஆனால், இன்று அவனை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் வேலையை விட்டதை விடப் பெரிய கவலையாகப் பல்லவிக்குத் தெரிந்தது.
அவள் விளக்கி சொன்னால் தேவா புரிந்து கொள்வான்தான். ஆனாலும், அவளுள் பயம், ஒற்றை மின்னலுக்கு முளைக்கும் மழைக் காளானை போலத் துளிர்த்து நிற்கிறதே.
அவளைப் பி.எம்.எல்.டி (BMLT) பேச்சுலர் ஆஃப் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி படிக்கச் சொன்னது தேவாதான்.
அவள் படித்து முடித்து ஒரு புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில், நல்ல சம்பளத்துடன் அசிஸ்டன்ட் லேப் டெக்னீசியன் வேலையிலும் சேர்ந்தாள். வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரத்த மாதிரிகள் எடுக்கவும், அதைப் பரிசோதனை செய்யவும் என நாள்கள் கழிந்தது. அப்பொழுதெல்லாம் வேலையில் எதுவும் அவளுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. எளிதாகதான் இருந்தது.
நாளடைவில் சாலையில், விபத்தில் அடிப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து வரச் சொல்லும் பொழுதுதான் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வலியில் துடிப்பர்களை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. மனம் பதறிப் போனது.
அது போகக் குழந்தைகளுக்கான கேன்சர் வார்டில் சென்று இவள் ஒரு முறை ரத்தம் சேகரித்து விட்டு வர, அங்கிருந்த பிஞ்சுகளைக் கண்டவளின் மனதே கனத்துப் போய் விட்டது.
ஒரு முறை யாரும் இல்லா நள்ளிரவில் இவள் மட்டும் இரவு நேரப் பணிபுரிகையில், வித்தியாசமாய் ஒரு நோயாளியை இவள் சந்திக்க நேர்ந்தது.
தலையில் மூன்று இடங்களில் வெட்டு. முக்கியமாக அந்த அரிவாள், அப்பொழுதும் அவரின் தலையில்தான் இருந்தது. அவருக்குத் தேவையான முதலுதவி செய்தும், அரிவாளில் சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைக் காண்கையில் பல்லவிக்கு மூச்சே வரவில்லை.
அன்று வந்திருந்த நோயாளிக்கு தன் நிலை குறித்துக் கவலை இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், பல்லவி வெகுவாகப் பயந்துப் போய் இருந்தாள். பரிசோதனைகளுக்குத் தேவையான அளவு ரத்த மாதிரிகளை எடுப்பதற்குள், அவளின் கைகளில் இருந்த நடுக்கம் உடல் முழுமைக்கும் பரவி, ஒரு மாதிரி ஆகி விட்டாள் அவள். அப்பொழுதே, அந்த நிமிடமே முடிவு செய்து விட்டாள் பல்லவி. தனக்கு இனி இந்த வேலை வேண்டாமென்று, தன்னால் இனி இந்த வேலையைச் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து போனது.
எதற்கும் தயங்காமல் வேலையை விட்டு விட்டாள். இதோ, இன்று கதிர்வேலனை வைத்து வீட்டிற்கும் அதைத் தெரியப்படுத்தியும் விட்டாள். இப்போது, அவள் மனம் மழை துடைத்த பூமியை போல் பளிச்சென்று மாறி இருந்தது.
“சரிம்மா, நேரமாச்சு. நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார் சேதுராமன்.
“சரிங்க அண்ணா” என்ற கனிமொழி, கஸ்தூரிக்கு ஒரு தலையசைப்பை தந்து, அவரின் கைகளில் பாயாசம் நிறைந்த பாத்திரத்தை திணித்தார்.
“நாளைக்கு வேலைக்குப் போகாம, வீட்ல இருந்து ரெஸ்ட் எடு சூர்யா” என்று சூர்யாவை பார்த்து சொல்லவும் மறக்கவில்லை கனிமொழி.
“சரிங்க அத்த” என்று அவனும் கஸ்தூரியுடன் இணைந்து நடந்தான்.
கதிர்வேலன் சிறிது நேரத்திற்கு முன்புதான் கடைக்குக் கிளம்பி இருந்தார்.
“நாளைக்கு வரேன் அத்த” என்று கனிமொழியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வேகமாக ஓடிப் போய்த் தாயுடன் இணைந்துக் கொண்டாள் பல்லவி. ஆனாலும், அவளால் தப்பிக்க முடியவில்லை.
“பல்லவி, ஒரு நிமிஷம் இங்க வா” என்று சத்தமாக அழைத்தான் தேவா. பல்லவி, சூர்யா இருவருமே அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
“தேவா, கூப்பிடுறான் பாரு. என்னனு கேட்டுட்டு வா பல்லவி” என்று விட்டு முன்னே நடந்தார் கஸ்தூரி. தேவாவின் முறைப்பை பார்த்து விட்டு, அமைதியாய் அம்மாவை வால் பிடித்து நடந்தான் சூர்யா.
சின்னத் தயக்கத்துடன் அவன் முன் போய் நின்று, “என்ன தேவா?” என்றாள் பல்லவி.
“சூர்யாக்கு டிடி இன்ஜக்சன் இன்னும் போடல. ஃப்ரிட்ஜ்ல இருக்கு, நாளைக்குப் போட்டுக்கலாம்” என்று சத்தமாகச் சொன்ன தேவா, சத்தத்தைக் குறைத்து, “இன்னைக்குச் சாயங்காலம் எனக்குக் கால் பண்ணும் போது நீ எங்க இருந்த பல்லவி?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க,
‘அச்சோ, மாட்டினேன்’ என்று மனத்தினுள் அலறினாள் பல்லவி.
“வேலை முடிச்சுட்டு வந்துட்டு.. அப்புறம்…” என்று அவள் திக்கி, திணற, அவன் பார்வையை மாற்றிக் கொள்ளவேயில்லை.
அவன் கண்களைப் பார்த்து பொய் சொல்ல முடியாமல், “காலேஜிக்கு போனேன் தேவா. ப்ரெண்ட் அங்க வேலைப் பார்க்கறா இல்ல? அவளைப் பார்க்க போனேன்” என்று உண்மையை ஒப்பித்து இருந்தாள்.
அதில் மெலிதாகப் புன்னகைத்தவன், “வேலையை எப்ப விட்ட?” என்று அவன் அடுத்தக் கேள்வியைக் கேட்க, “நேத்து காலையில பேப்பர் போட்டேன்” என்றாள்.
“நோட்டீஸ் பீரியட்?” என்று அவன் புருவம் உயர்த்த,
“முடியாது சொல்லிட்டேன்” என்றாள் தயங்கி,
“சரி போ. நல்லா ரெஸ்ட் எடு. குட் நைட்” என்று அவன் சொல்ல, இப்போது அவனைச் சந்தேகமாகப் பார்ப்பது அவள் முறையானது.
ஆனாலும், தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடி விட முயற்சித்தாள்.
இரண்டே எட்டில் அவளை நெருங்கி, அவளோடு வீடு வரை துணைக்கு வந்து, அவள் வீட்டிற்குள் போனதும்தான் திரும்பி நடந்தான் தேவா.
அடுத்தடுத்து வந்த நாள்களில் கல்யாண பேச்சு வார்த்தை தொடங்கி, ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
பல்லவி நினைத்தது போல, எதுவும் அத்தனை சுலபத்தில் நடந்து விடவில்லை.
அவர்களுக்குச் சாதகமாகப் பேசிய கதிர்வேலனே பெண் வீட்டாரை குறித்து நன்கு விசாரித்துத் திருப்தியான பின்னே, அடுத்தக் கட்டத்துக்கு நகர விட்டார்.
அவள் பெரிதும் பயந்த, வீட்டோடு மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் நிபந்தனை அல்ல. கல்யாண பெண்ணின் நிபந்தனை என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
சூர்யா ஒரு பக்கம் பாரதியிடம் பேசி அவளைச் சரி கட்ட, பாரதியின் வீட்டினரும் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் கல்யாணத்திற்குப் பின் அண்ணன் இங்குதான் இருப்பான் என்பதில் நிம்மதி கொண்டாள் பல்லவி.
அவளுக்கே அது அல்பத்தனமாகதான் பட்டது. தன்னைப் போலதான் பாரதியும், பெற்றவர்களுக்காக யோசித்து இருக்கிறாள் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஆனாலும், அவளது பெற்றோரை அவளால் தனியாக விட முடியாது என்ற எண்ணமே பல்லவிக்கு மேலோங்கி இருந்தது.
அடுத்தப் பதினைந்தாம் நாள் அவளது அண்ணன் சூர்யாவின் திருமணம் முறையாகப் பேசி முடிக்கப்பட்டு, கல்யாண தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த மாத இறுதியிலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டினரும் ஒருமனதாக முடிவெடுத்து இருந்தனர். ஏனென்றால் அடுத்த மாதம் மார்கழி. பின்னர்த் தை வரை காத்திருக்க வேண்டும், எதற்கு நல்ல காரியத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டு என்று கார்த்திகையில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணத்துடன் உடனே தேதியை குறித்திருந்தனர்.
இடையில் இருபது நாள்களே இருந்ததால் அனைவருக்கும் திருமண வேலை வரிசைக் கட்டி நின்றது.
நல்லவேளையாக வேலையை விட்டோம். பெற்றோருக்கு உதவியாக இருக்க முடிகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள் பல்லவி.
ஆனால், அதே அண்ணனின் திருமண வீட்டில்தான், அவளின் திருமணமும் யாரோ ஒருவனுடன் முடிவாகப் போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
நாளை நடக்கப் போவதை அவள் அறிந்திருந்தால், அண்ணன் காதலுக்கு உதவி இருப்பாளா பல்லவி?
அவன் கல்யாணத்திற்கு இத்தனை முனைப்பை காட்டி இருப்பாளா? செய்திருப்பாள்தான். ஏனென்றால், அண்ணன் சூர்யா மேல் அவள் வைத்திருந்த பாசம் அப்படி.
ஆனால், அதே அண்ணன் தங்கையின் மேல் அவள் அளவுக்குப் பாசம் கொண்டிருந்தானா?
அதே திருமண வீட்டில் நண்பன் தேவா கேட்கப் போகும் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறான் சூர்யா?
திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. பத்திரிக்கை அடித்து வந்தாகி விட்டது. ஆனால், அலைந்து திரிந்து கொடுக்க முடியாமல் மழை, இடையில் நுழைந்து தொல்லை செய்து கொண்டிருந்தது.
பல்லவியின் பிரிய மழை அவளுக்கு என்ன தரக் காத்திருக்கிறதோ?
மழை நனைக்கும்…